"கசடற"

அறிவியல் தொடர்பான எனக்குத் தெரிந்த தகவல்களை, ஒரு மருத்துவன் எனும் பார்வையில் சொல்ல விழைகிறேன். முழுக்க முழுக்க இவை என் கருத்துகள் மட்டுமே! முருகனருள் முன்னிற்கும்!

Thursday, August 31, 2006

"பாலியல் கல்வி -- பெற்றோருக்கு!" [4]

"பாலியல் கல்வி -- பெற்றோருக்கு!" [4]


"3 - வய்துக் குழந்தையின் பெற்றோர் தெரிந்து கொள்ள வேண்டிய பாலியல் கல்வி!"

உங்கள் 3 வயதுக் குழந்தை ஷீலாவும், அடுத்த வீட்டுப் பையன்[3 வயதுதான்!] ராஜாவும் மாடியில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்!
திடீரென, சத்தம் நின்றுவிடுகிறது!
உங்களுக்கு சந்தேகம்!
மாடி ஏறிச் சென்று, மூடியிருக்கும் குழந்தையின் அறைக்கதவைத் தட்டி [நீங்கள்தான் அவரவரின் தனித்துவம் சொல்லி வளர்த்திருக்கிறீர்களே!] 'வரலாமா' எனக் கேட்டு நுழைகிறீர்கள்!
அங்கே......பிறந்த மேனிக்கு ராஜாவும், ஷீலாவும்!
பார்த்தவுடன் புரிகிறது அவர்கள் இருவரும் இந்த வயதுக் குழந்தைகள் இயல்பாக ஆடும் 'டாக்டர் விளையாட்டு' ஆடிக்கொண்டிருக்கிறார்கள் என!

இப்போது நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்!

ஒன்று இப்படி..!

குரலை உயர்த்தி, "என்ன பண்றீங்க ரெண்டு பேரும்?
சீக்கிரமா ட்ரெஸ்ஸைப் போடுங்க!
ஏ ராஜா! கெளம்பு நீ ஒங்க வீட்டுக்கு!
வரேன்! வந்து ஒங்க அப்பாகிட்ட சொல்றேன்!
இன்னொரு தரம் ஒங்க ரெண்டு பேரையும் இப்படி பாத்தேனோ... அப்ப தெரியும் சேதி!"

இதன் மூலம் நீங்கள் சொல்வது அவர்களுக்கு....?
இருவர் செய்ததும் தவறு.
அவர்கள் கெட்டவர்கள்.
ஆடை களைதல் என்பது ஒரு குற்றம்.

இதன் முழுத் தீவிரமும் புரியாத அவர்களுக்கு இது குழப்பத்தையும், அவமானத்தையும், வருத்தத்தையும் உண்டு பண்ணும்.
ஒரு சாதாரண ஆர்வத் தேடலுக்கா[Curiosity] இவ்வளவு? என குறுகிப் போகும் அவை இரண்டும்!

மாறாக இப்படி....!

"நீங்க ரெண்டு பேரும் ஏதோ விளையாட்டு ஆடிக்கிட்டு இருக்கீங்க போல! சரி, எங்கே, ரெண்டு பேரும் சமர்த்தா, அவங்கவங்க ட்ரெஸ்ஸைப் போட்டுக்கிட்டு கீழே வாங்க!
நான் உங்களுக்கு ஒண்ணு காட்டறேன்!"
எனச் சொல்லி அவர்கள் வந்ததும் ஒரு படப்புத்த்கத்தை விரித்து, அவர்களுக்கு, அவர்கள் தெரிந்து கொள்ளக் கூடிய அளவுக்கு ஆண்-பெண் பற்றி விளக்குவது!

இதன் மூலம், ...

'அடுத்தவர் உடல்கூறு பற்றிய ஆர்வம் தவறல்ல.
ஆனால் அதைத் தெரிந்து கொள்ள ஆடை களைய வேண்டிய அவசியம் இல்லை!
உங்களுக்கு உதவ உங்கள் பெற்றோரை எப்போதும் நாடலாம்'
எனப் புரிய வைக்கிறோம்!

இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று,

நீங்கள் ராஜாவின் பெற்றோரிடமும் இது பற்றி தெரிவித்து ஒப்புதல் பெறுதல்!

வீண் மனத்தாங்கல்களை தவிர்க்க இது உதவும்!
இல்லையெனில் அவனை அனுப்பிவிட்டு ஷீலாவுக்கு மட்டும் இதைச் சொல்லலாம்.

இங்கு அவ்வாறு சொல்லாமல் மறுத்தல், தனிமையைத் தேட வைக்கும் குழந்தைகளை!
ஒரு கண் அவர்கள் மேல் வைத்து இருப்பது அவசியம்தான்!
குறுக்கீடு கூடாது!
இதைத்தான் வலியுறுத்த விரும்புகிறேன்!

மேலும், இன்னொரு முக்கியமான விஷயம்!

மேலே சொன்னது வெறும் ஒத்த வயதுக் குழந்தைகள் சம்பந்தப்பட்ட வரையிலும் தான்!

மற்றவர்கள், ...அவர்கள் பெரியவர்களோ, அல்லது, சற்று வயது வித்தியாசம் உள்ளவர்களோ, இந்தப் பிஞ்சு வயதினரோடு இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது தெரிந்தால், உடனே அதற்கு முற்றுப்புள்ளி வைக்கத் தயங்க வேண்டாம்!

நான் சொன்னது புரியவில்லை எனின், பின்னூட்டத்தில் கேளுங்கள், சொல்கிறேன் !

இந்த வயதில் அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள், நிகழ்வுகள் என்ன?

"நீ தனித்துவமானவன்/ள்! [Special]! எனவே உன்னை நேசிக்கக் கற்றுக்கொள்!"

"அதே போல, மற்றவர்களும் அப்படியே! அவர்களை மதி! அன்பு செலுத்து!"

"உனது இந்த தனித்தன்மையை [Individuality] பாதிக்கும், எந்த ஒரு நிகழ்வுக்கும் உன்னை ஆட்படுத்த "எவருக்கும்" உரிமை இல்லை!"

"ஆபத்தான நிகழ்வுகளில் இருந்து காத்துக் கொள்ள வேண்டியது உன் பொறுப்பு !"

"உன் உடலில் மறைக்கப்பட்ட உறுப்புகள்[hidden parts] மற்றவர்களுக்குக் காட்ட இல்லை!"

"உன் தாய் தந்தையிடம் எதையும் நீ கேட்க முடியும்!"

"அவர்கள் என் மீது அன்பு செலுத்த வந்திருப்பவர்கள்!"


போதனை எல்லாம் நல்லாத்தான் இருக்கு! இதை எப்படி செயல்முறையில் காட்டுவது என, கோவியார் முணுமுணுப்பது எனக்குக் கேட்கிறது!

"உவ்வாவைத் தொடாதே!" எனச் சொல்ல வேண்டாம்!
"நீர்[ஒண்ணுக்கு] போகும் இடம்" எனச் சொல்லிக் கொடுங்கள்!
பின்னால் அதன் பெயர் உங்களால்/பள்ளியில் அவனுக்கு/அவளுக்கு சொல்லிக் கொடுக்கப் படும் வரை!

குளிக்கும் போது, ஆர்வமிகுதியில் அதன் கை உங்கள் உறுப்புகளின் மீது பட்டால், பட்டென அடிக்க வேண்டாம்!
இது வெகு இயல்பாக நிகழும் ஒரு நிகழ்ச்சி தான்!

"நான் சொல்லியிருக்கேன்ல! இது என்னோடது! அதனால நீ தொடக் கூடாது! இது மாதிரி மத்தவங்களுதைத் தொட்டா அவங்க தப்பா நினைச்சுப்பாங்க!" என அன்புடன் சொல்லுங்கள்!
அடுத்த முறை அது நிகழாது!
ஒரு நேசமும், மரியாதையும் வளர்வதைப் பார்ப்பீர்கள்!

இது போன்ற தருணங்களை உங்களுக்குக் கிடைத்த வாய்ப்பாக எண்ணி, இது தொடர்பாக மேலும் சொல்லத் துவங்குங்கள்!"


தனக்குத் தேவையானதை எடுத்துக் கொண்டு, மற்றவற்றை ஒதுக்கும் இயல்பு குழந்தைகளுக்கு கிடைத்த வரம்!

'போப்பா! போரடிக்குது!' என்றோ,
ஒண்ணூம் புரியாம மலங்க மலங்கப் பார்த்துக் கொண்டோ,
தனக்கு அதில் தொடர விருப்பமில்லாததை சட்டென்று காட்டிவிடும்!

இதில் தாய், தந்தை இருவருக்கும் சம பொறுப்பு உண்டு!

"போதும், போதும்! கண்டத்தையும் சொல்லி குழந்தையைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கிறீங்க! "என அடுத்தவரைக் குறை கூற வேண்டாம்!
இருவரும் ஒருவருக்கொருவர் இந்த விஷங்களில், ஒரு பொதுவான நிலைப்பாடு கொள்ளல் மிகவும் தேவையான ஒன்று!
ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளுங்கள்!
எது சொல்லலாம், எது இப்போது வேண்டாம் என்பதை!

அடுத்து, ...குழந்தைகள் திடீரென ஒரு கேள்வியை உங்கள் மீது வீசும் போது, தயாராக இருப்பதற்கும், இந்த முன் - கலந்துரையாடல் உதவும்!
ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்து முழிக்கிறதோ, இல்லைன்னோ குழந்தையைக் கடிந்து கொள்வதோ தவிர்க்கபடும் இதனால்!

"இப்ப நீ ஒண்ணும் இதெல்லாம் தெரிஞ்சுகிட்டு கிழிக்க வேணாம்",
"வாயை மூடு! அதிகப்பிரசங்கி!" போன்ற பதில்கள் குழந்தைகளை உங்களிடமிருந்து அந்நியமாக்கும் என்பதை மனதில் கொண்டு,
ஒரு எசகுபிசகான நேரத்தில் கேட்டால் கூட,
"இப்ப வேணாம் கண்ணு! ராத்திரி, சாப்டவொடனே ஒனக்கு கதை சொல்லுவேன் பாரு! அப்ப சொல்லுவேன், சரியா!" எனச் சொல்லி,... சொன்ன வாக்கைக் காப்பாற்றுங்கள்!

எளிமையான, நேர்மையான பதில்களையே கூறுங்கள்! அது பின்னால் ஒரு தேடலை உங்களிடம் வளர்க்கும்!

"ஏய்! அன்னிக்கு கேட்டியே! நீ எப்படி பொறந்தேன்னு? இப்ப அம்மா உன்னை ஒரு ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கிட்டுப் போவேனாம்! அங்க உன் உஷாசித்திக்கு இன்னும் கொஞ்ச நாள்ல கொழந்தை பொறக்கப் போவுது! நீயும் வா!" எனக் கூட்டிப் போங்கள்!
அதை பார்த்துவிட்டு வந்ததும் இருக்கிறது உங்களுக்கு ஒரு ஆயிரம் கேள்விகள்!

பெரிய பெண் தாவணி போடும் நேரம்,
அண்ணன் அரை டிரௌசரில் இருந்து பேண்ட் போடும் காலம்,
அவனுக்கு மீசை அரும்பும் காலம்
இவையெல்லம் கூட உங்கள் 3 வயதுக் குழந்தைக்கு பாலியலின் முக்கியத்துவத்தைச் சொல்லிக் காட்டக் கூடிய நேரங்கள்தான்!

எவ்வளவு அதிகம் இந்த சிறுவயதில் சொல்கிறோம் [Too much too soon] என்பது முக்கியமில்லை!
ஐயோ! அப்பவே சொல்லாமப் போனோமே [Too little too late] என பின்னால் வருந்துவதற்கு இது எவ்வளவோ மேல்!
இது அறிவியாளர் கருத்து!

மேலும், இதன் மூலம், தன் தாய்-தந்தையரை நான் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்ற முக்கியமான, தேவையான பண்பை அவர்கள் மனதில் விதைக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளவும்!

இதோ, அடுத்த ஆண்டு, அதன் கையைப் பிடித்துக் கொண்டு, நீங்களே போய், ஒரு பள்ளியில் சேர்க்கப் போகிறீர்கள்!
அது பல்வேறு தகவல்களைத் தெரிந்து கொள்ளக் கூடிய வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுக்கப் போகிறீர்கள் ...நீங்கள்தான்!
எனவே, கிடைத்தற்கரிய இவ்வாய்ப்பைத் தவற விடாமல், நான் மேலே கூறிய கருத்துகளை கவனத்தில் கொண்டு, செயல்படுங்கள்!

அடுத்தது.... "பள்ளி செல்லும் சிறு குழந்தைகளுடைய பெற்றோரின் கடமை, தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?" என்பதைப் பார்ப்போம்! "!

18 Comments:

At 9:54 PM, Blogger Unknown said...

நல்ல பதிவு,

பின்னூட்டங்கள் திரட்டப்படுவதில்லை என நினைக்கிறேன்.தமிழ்மண வலைதளத்தில் புகார் ஒன்றை போட்டுவிடுங்கள்.விரைவில் சரி செய்வார்கள்

www.thamizmanam.blogspot.com

 
At 6:42 AM, Blogger VSK said...

கவனத்துக்கு கொண்டு வந்ததற்கு நன்றி, செல்வன்!

மயில் அனுப்பியிருக்கிறேன்!

ஆத்திகத்திலும் பதிந்திருக்கிறேன் இதை!

 
At 5:27 PM, Blogger VSK said...

7 Comments:
குமரன் (Kumaran) said...
படித்தேன் எஸ்.கே. விரிவான பின்னூட்டங்களுக்குப் பின்னர் வருகிறேன்.




8:26 AM
நாமக்கல் சிபி @15516963 said...
//உங்களுக்கு உதவ உங்கள் பெற்றோரை எப்போதும் நாடலாம்'
எனப் புரிய வைக்கிறோம்//

இப்படிச் செய்வதன் மூலமே பெற்றோர்களும் உங்கள் நண்பர்களே. எவ்வித சந்தேகங்களையும் தயங்காமல் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையை குழந்தைகளிடம் ஏற்படுத்த முடியும்.

இத்தகைய நம்பிக்கை குழந்தையின் மனதில் தோன்றி விட்டால் பெரியவனான பிறகு சேர்க்கை சரியின்றி பாதை தவறிப் போய்விடுவார்களோ என்று அச்சப்படத் தேவை இல்லை.




9:53 AM
Boston Bala said...
சிறப்பான, பயனுள்ள தொடர்.

(நேரம் கிடைக்கும்போது, இந்தப் பதிவுகளை தனியே தொகுத்து, இன்னொரு வலைப்பதிவில் மொத்தமாக சேர்த்து வைக்கவும். பலரையும் எளிதாக சென்றடைய உதவலாம். நன்றி.)




9:56 AM
நாமக்கல் சிபி @15516963 said...
சரி இன்னொரு விஷயம், சிறு பெண் குழந்தைகளைக் கூட அக்குழந்தையின் தாய்மார்கள் அப்பெண்ணின் அண்ணனிடமோ, ஏன் தந்தையிடமோ கூட அதிகம் பழக விடாமல் பார்த்துக் கொள்வது ஏன்?

இது அப்பெண்ணின் (குழந்தை) மனதில் ஏதேனும் வித்தியாசத்தை தோற்றுவிக்கும் அல்லவா?




10:06 AM
இலவசக்கொத்தனார் said...
நானும் முதல் ரவுண்டு படிச்சாச்சு. பிறகு வருகிறேன்.

(ஆமா, இப்படிச் சொன்னா, இது பின்னூட்டக் கயமைத்தனமா?)




10:10 AM
கோவி.கண்ணன் [GK] said...
எஸ்கே ஐயா !

பதிவு படித்ததும் சில விசயம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். இந்தியாவில் வளரும் குழந்தைகள் பெரும்பாலும் பெற்றோர்கள் குளிப்பாட்டிவிடுவார்கள். பெற்றோர்களுடன் சேர்ந்து குளிப்பது 90% கிடையாது என்றுதான் நினைக்கிறேன்.

எனக்கு தெரிந்தவரை சிங்கையில் சீனர்கள் குழந்தைகளுடன் சேர்ந்துதான் குளிப்பார்கள். இதை நீச்சல் குளங்களில் உடைமாற்றும் அரைகளில் பார்த்திருக்கிறேன். நம் இந்திய பெற்றோர்கள் குறிப்பாக இந்தியாவில் இருக்கும் பெற்றோர்களுக்கு அந்த அளவுக்கு மனம் தயாராக இருக்காது. அப்படி குளித்தாலும் தாயும் மகளும் குளிப்பார்கள், அப்பாவும் மகனும் குளிப்பார்கள். இது மகளும் தந்தையும் சேர்ந்து குளிப்பது என்பது கிடையாது. நான் 6 வயதுக்குள் உள்ள குழந்தைகளைப் பற்றித்தான் சொல்கிறேன். அதன் பிறகு பெற்றோர்கள் குளிப்பாட்டிவிடும் அவசியம் அதிகம் இல்லை.

இப்படி குழந்தகளுடன் சேர்ந்து குளிப்பதனால், குழந்தைகளுக்கு பிறப்பு உறுப்பைப் பற்றி அருவருப்பாக நினைக்கும் கற்பனை வளராமல் இருக்கும் என்று நினைக்கிறேன். அதே சமயத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தங்கள் உறுப்புக்களை மற்றவர்கள் தொட அனுமதிக்க கூடாது / தொடவும் கூடாது என்பதை அவர்கள் மனதில் படியும்படி அழுத்தமாக சொல்லித்தர வேண்டும். இதைப்பற்றி நன்றாக சொல்லியிருக்கிறீர்கள்




10:39 AM
Sivabalan said...
SK அய்யா,

மிகவும் உபயோகமாக இருக்கிறது..

சரி, எங்க குழந்தை இப்படி கேட்கிறது.. தனது சக நன்பர்களை பார்த்துவிட்டு .. என்னிடம்

Boys ஏன் நின்றுகொண்டு Bathroom போறாங்க.. நான் ஏன் உட்கார்ந்து போக வேண்டும்?

இதற்கு சரியான பதில் எனக்கு சொல்ல தெரிவில்லை..

நான் என்ன பதில் சொல்லியிருக்க வேண்டும்..

இந்த சந்தர்பத்தை நான் எவ்வாறு பயன் படுத்தியிருக்கலாம்...

 
At 8:55 PM, Blogger VSK said...

மிக்க நன்றி, குமரன்!
இ.கொ. என்னமோ சொல்லியிருக்காரு பார்த்தீங்களா?
:))

 
At 8:56 PM, Blogger VSK said...

அதுதாங்க, சிபியாரே!

ஒரு புரிதலை, நம்பிக்கையை ஊட்டுவதுதான் இந்த வயதுக் குழந்தைகளுக்கு நாம் செய்யும் உதவி!

 
At 9:00 PM, Blogger VSK said...

முதன்முதலாக வந்து வாழ்த்தியதர்கு நன்றி, பாபா!

அதற்காகத்தான் இதையே ஒரு தனிப்பதிவு [கசடற] துவக்கி இட்டிருக்கிறேன்1

கோவியாருக்கும், முத்து[தமிழினி]க்கும் என் நன்றிகள்!

அடிக்கடி வந்து இப்படி சொல்லிச் சென்றால் மகிழ்வாய் இருக்கும்!

 
At 9:15 PM, Blogger VSK said...

This comment has been removed by a blog administrator.

 
At 9:19 PM, Blogger VSK said...

நல்ல கேள்வி, சிபியாரே1!

தாய்மார்கள் எப்போதுமே சற்று அதிகமாகவே கவனம் செலுத்தி, பொத்திப் பொத்தி பெண் குழந்தைகளை வளர்க்கிறார்கள் என்பது உண்மையே!

இதற்கு வழி வழியாக ஒரு காரணமோ, கருத்தோ அவர்கள் பால் ஊட்டப் பட்டிருக்க வேண்டும் என்பது என் ஊகம்!

அதனால் தான் பதிவின் தொடக்கத்தில் கூறிய நிகழ்வில், சம வயதுக் குழந்தைகளோடு விளையாடுவது தவறல்ல எனச் சொலியிருக்கிறேன்.

ஒவ்வொரு வயதில் ஒவ்வொரு உணர்வுகள் வரும்!

சிறு வயதில் தேடல்
சற்று வளர்ந்த பின், சோதனை செய்தல்!
வாலிப வயதில், ஈடுபடல்!
அதற்கு மேல் துணிதல்!
என இது தொடர்ந்து கொண்டே வரும்!

வேறுபட்ட வயதுகளில் முறை தவற வாய்ப்புகள் அதிகம்.
பெரியவர்கள் இதில் கவனமாயிருத்தல், அதிலும் தாய்மார்கள் இவ்வறு இருத்தல் தவறென்று கொள்ள முடியது!

அது அவர்கள் கடமை1

புரிந்திருக்கும் என நம்புகிறேன்.

 
At 9:48 PM, Blogger VSK said...

அப்பாவின் தொப்பைக்கு அடியில் நின்று, எட்டு வயது வரை, குளிக்கும் போது விழுந்த நீர்வீழ்ச்சி உணர்வை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி, கோவியாரே1

சரியான தகவலைத்தான் சொல்லி இருக்கிறீர்கள் நீங்கள்!

சேர்ந்து குளிக்கும் காலங்களில் இது போன்ற தகவலகளை, குழந்தைகள் கேட்கும் போது, மழுப்பாமல் சொல்ல வேண்டும் என்று தான் நான் சொல்லி இருக்கிறேன்.

நன்றி!

 
At 9:59 PM, Blogger VSK said...

//Boys ஏன் நின்றுகொண்டு Bathroom போறாங்க.. நான் ஏன் உட்கார்ந்து போக வேண்டும்?

இதற்கு சரியான பதில் எனக்கு சொல்ல தெரிவில்லை..

நான் என்ன பதில் சொல்லியிருக்க வேண்டும்..

இந்த சந்தர்பத்தை நான் எவ்வாறு பயன் படுத்தியிருக்கலாம்... //

வெளிப்படையாகாக் கேட்டதற்கு நன்றி, சிபா!

அமெரிக்காவில் இருக்கிறீர்கள் நீங்கள்!

லான்[Lawn] இருக்கும் உங்கள் வீட்டு எதிரில்1

குழந்தையை அழைத்துக் கொண்டு போய், அந்த ஹோஸ் பைப்பை[hose pipe] திருகி விட்டு, தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் போது, அதைக் காட்டி, இது போன்ற அமைப்பு ஆண்களூக்கு படைப்பில் இருப்பதால் அவர்களால் இப்படிச் செய்ய முடிகிறது. இது போன்ற அமைப்பு பெண்களுக்கு இல்லாததால், முடியவில்லை என உண்மையைக் காட்டுங்கள்.... தயங்காமல்!

முடிந்தால், ஒரு படப் புத்தகத்தின் மூலம் விளக்க முற்படுங்கள்.

"அது அப்படித்தான்! இதெல்லாம் உனக்கு அப்புறமாத் தெரிய வரும்!" எனச் சொன்னால், அது போய் வேறு இடத்தில் தெரிந்து கொள்ள முனையும்!

நீங்களா, வேறு எவரோவா?

முடிவு செய்யுங்கள்!

நம்பிக்கையை ஊட்டி, நம்பிக்கையை வளர்ப்பதுதான் நமது கடமை!

மேல் விவரம் வேண்டுமெனில் கேட்கவும்!

 
At 6:45 AM, Blogger Sivabalan said...

SK அய்யா,

நன்றாக விளக்கியுள்ளீர்கள். நீங்கள் சொன்ன முறைப் படி என் மகளுக்கு விளக்குகிறேன்.

//அது அப்படித்தான்! இதெல்லாம் உனக்கு அப்புறமாத் தெரிய வரும்!" எனச் சொன்னால், அது போய் வேறு இடத்தில் தெரிந்து கொள்ள முனையும் //

நல்லா சொன்னீங்க..

உங்கள் விலையுர்ந்த நேரத்தை எங்களுக்காக ஒதுக்கி பதில் கூறுவது மிக மகிழ்ச்சியளிக்கிறது. நிச்சயம் கடமைப் பட்டுள்ளோம்.

தொடரட்டும் இந்த மேலான பணி...

 
At 10:22 PM, Blogger VSK said...

////தன் மரபு அளவுகோள்களை [hereditory values] அதன் மீது திணித்து, அதற்கு ஒரு தாழ்வு மனப்பானமையையோ, அல்லது ஒரு மெத்தனத்தையோதான் பெற்றோர்கள் "பெரும்பாலும்" கொடுத்து வளர்க்கிறார்கள்!
//

எஸ்கே !

இதை ஒப்புக் கொள்ள முடியவில்லை. பரம்பரை குணமும், பெற்றோர்களுடைய குணமும் ஓரளவிற்கு இருக்கும் என்பது உண்மை.

ஆனால் ஒரே பெற்றோருக்கு பிறந்த பிள்ளைகளில் ஒருவர் அதிபுத்திசாலியாகவும், ஒருவர் படிப்பறிவை வெறுப்பவராகவும் பார்த்திருக்கிறேன். பெற்றோர்கள் எல்லோரையும் ஒன்று போல் தானே போற்றி வளர்க்கின்றனர் ! பிறகு இவ்வாறு நிகழ்வது எங்ஙனம் ? ////

நான் இன்னும் விளக்கமாகச் சொல்லவில்லையோ என்னவோ, மாறான பொருளில் அமைந்திருக்கிறது இக்கேள்வி, கோவியாரே!

நான் சொல்ல நினைத்தது, தங்கள் தங்கள் மரபு வழக்கங்களை பெற்றொர்கள், தங்கள் குழந்தைகளுக்கு ஊட்டி வளர்ப்பதில் அதிகம் முயலுகிறார்கள் என்பதையே!

ஏழை, பணக்காரன், சாதி, அந்தஸ்து போன்ற தங்கள் கருத்துகளை குழந்தைகளிடம் திணிக்க முனைகின்றனர் பெற்றோர்.

குழந்தையாகப் பார்த்து, அல்லது, மரபணுக்களின் மூலம் வருவது வேறு; இவர்களால் ஊட்டப்படுவது வேறு.

பாலியல் பற்றிய கருத்துகளில் இது கொஞ்சம் அதிகமாகவே நடக்கிறது என்பது என் கருத்து.

இதை விடுத்து, கால ஓட்டத்திற்குத் தக்கவாறு பெற்றோர்கள் புரிந்து செயல்பட வேண்டும் என விரும்புகிறேன்.

விளக்க வாய்ப்பளித்தமைக்கு நன்றி!

 
At 11:23 PM, Blogger VSK said...

Thank you very much, Mr. Mouls.

Please feel free to share your comments.

 
At 9:17 AM, Blogger கோவி.கண்ணன் [GK] said...

//Mouls said...
SK & Others,

I'm new to the Tamil blog, I try to use ekalappai, but few letters are not reaching me....Is there any other software that you are all using?.
//
mr mouls,

Please visit below website

http://www.islamkalvi.com/web/Romanised2Unicode.htm

type there in Tamil and cut/paste where ever you want !

 
At 9:09 PM, Blogger பொன்ஸ்~~Poorna said...

இந்தப் பதிவும் விளக்கமும், ரொம்ப நல்லா இருக்கு எஸ்.கே.. சிவபாலனுக்கான பின்னூட்ட விளக்கமும்...

(நல்லா இருக்கு என்று தோன்றும் ஒவ்வொரு பதிவுக்கும் பின்னூட்டமிடுவதாக முடிவு :))

 
At 10:44 PM, Blogger VSK said...

கடைசியாக வந்து, இப்ப்டி பின்னூட்டமிட்டு, பதிவுகளை மீண்டும் வெளிக்கொணர்வதற்கு, மிக்க நன்றி, பொன்ஸ்!

 
At 9:59 PM, Blogger சேதுக்கரசி said...

//"உவ்வாவைத் தொடாதே!" எனச் சொல்ல வேண்டாம்!//

இது முக்கியமானதுன்னு நினைக்கிறேன். நாம வளர்ந்தப்ப.. சீச்சீ அதைத் தொடாதே.. இந்த ரேஞ்சுல தான் சொல்லி வளர்த்திருக்காங்க :-) அமெரிக்கா வந்து தான் தெரிஞ்சிக்கிட்டேன் இப்படி சொல்றது ஆரோக்கியமானதில்லைன்னு.

 
At 10:44 PM, Blogger VSK said...

நம்மில் பலர் இதைப் பற்றிப் பேசுவதே தவறென்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

நாம் சொல்லா விட்டாலும் இவர்களுக்கு தெரியத்தான் போகிறது!

தப்பும், தவறுமாய்த் த்ரிவதை நம்மால்தான் தவிர்க்க முடியும்.

தாமதமாக வந்தாலும் இப்பதிவை மீண்டும் பலரும் பார்க்க வைத்தமைக்கும், நல்ல கருத்தினைக் கூறியமைக்கும் மிக்க நன்றி, சேதுக்கரசி அவர்களே!

 

Post a Comment

<< Home