"கசடற"

அறிவியல் தொடர்பான எனக்குத் தெரிந்த தகவல்களை, ஒரு மருத்துவன் எனும் பார்வையில் சொல்ல விழைகிறேன். முழுக்க முழுக்க இவை என் கருத்துகள் மட்டுமே! முருகனருள் முன்னிற்கும்!

Monday, September 04, 2006

"பாலியல் கல்வி -- பெற்றோருக்கு" [5]

"பாலியல் கல்வி -- பெற்றோருக்கு" [5]

இதுவரை வீட்டில் பொத்திப் பொத்தி வளர்த்த உங்கள் அருமை மகன்/ள் ஒரு சில மணி நேரம் உங்களை விட்டுப் பிரிந்து போக வேண்டிய அந்த நேரம் வந்து விட்டது!

ஆம்! பள்ளிக்கு அனுப்ப வேண்டும்!

இதுவரை ஏதோ கேட்டதற்கு பதில் சொல்லி, அல்லது, தன் கருத்துகளைப் புகட்டி, பாங்குற வளர்த்த காலம் இதோடு முடிவடைகிறது!

இனி, வெளியுலக நன்மை, தீமைகளை எதிர் கொள்ளப் போகும் நேரம் அவர்களுக்கு!

இப்போதுதான் கொஞ்சம் தீவிரமாகவே, நீங்கள் பாலியல் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய தருணம்!

சரி, பாலியல், பாலியல் என்கிறீர்களே, பாலியல் கல்வி என்றால் என்ன நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தகவல்களைத் தெரிந்து கொண்டு,[Information] பாலியல் பற்றியதான ஒரு வரைமுறைகளையும்,[attitudes] நம்பிக்கைகளையும்,[beliefs] பாலியல் அறிமுகத்தையும்[Sexual identity], உறவுகளின் மேம்பாட்டையும்,[relationships] நெருக்கத்தையும்[intimacy] "நீங்கள்" தெரிந்து கொள்ள வேண்டிய நேரம்!

என்னடா இவன்! இதெல்லாம் எனக்குத் தெரியமலா பிள்ளைகளைப் பெற்றிருக்கிறேன் எனக் கோவியார் [ஏன்? நீங்களும்தான்!] கேட்பது காதில் விழுகிறது!

நீங்கள் அறிந்து பழகியது வேறு!
இப்போது நீங்கள் எதிர் கொள்ளப் போவது வேறு!

பட்டும் படாமலோ, அல்லது முயலாமலோ, நம் பெரியவர்கள் செய்யாததை, செய்ய வேண்டாம் என விட்டதை, செய்யத் தவறியதை, நாம் செய்ய வேண்டிய நேரம்!

மாறிக் கொண்டே இருக்கும் உலக நியதியின் கட்டாயம்!

சம்மதத்துடன்[Informed Choices] செய்து கொள்ள வேண்டிய சில முடிவுகளை அவர்கள் தெரிந்து கொள்ள , தனது நம்பிக்கையையும்,[Self confidence] சுய மரியாதையையும்[Self-respet] காப்பற்றிக் கொள்ள வேண்டியதின் அவசியத்தையும்,

இதன் மூலமே அவர்கள் தவறான தூண்டுதல்களை[abuse] , துஷ்பிரயோகம் செய்தலைத் தவிர்த்தலை,[exploitation] விரும்பத்தகாத உறவுகளை[Unintended practices] ஒடுக்க, நாம் சொல்லிக் கொடுக்க வேண்டிய நேரம்.

தருணமிதைத் தவற விடுவாயோ?

5 முதல் 7 வயது வரைக் குழந்தைகள் தனது பாலியல்[] பற்றி தெரிந்து கொண்டு இருப்பார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

சிறுவர்கள் தன் வயதொத்த சிறுவர்களுடனும்,...
சிறுமியரும் அதே போலவும்,...
நட்பு பழக முற்படுவார்கள்.

"சீ போ! நீ பொம்பளை! எங்கிட்ட வராதே!
" போடா! உங்கூட யார் வந்தா? வெக்கமில்லை ஒனக்கு!"
என்ற வசனங்களை இப்போது அதிகம் பார்க்கலாம்.

குழந்தைகள் எப்படி வருகின்றன என்ற முந்தையக் கேள்வி இப்போது அதிகம் வலுப் பெற்று, சற்றுத் தீவிரமாகவே கேட்கப்படும்!!

இப்போது அதை எப்படிக் கையாள்வது எனப் பார்ப்போம்!

" நான் எப்படிம்மா ஒன் வயத்துக்குள்ளே வந்தேன்"

" எப்படி வந்திருப்பேன்னு நீ நினைக்கிறே?"

இப்படிக் கேட்பதின் மூலம், அது என்ன நினைக்கிறது என்று அறிந்து கொள்ள ஒரு உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது.

அப்படிக் கேட்காமல், அதி புத்திசாலித்தனமாக ஏதோ சொல்லப் போய் ஏடாகூடமாக வாய்ப்பிருக்கிறது!

மேலும், என்ன, எவ்வளவு சொல்லலாம் என்று உங்களை நிதானித்துக் கொள்ள ஒரு வாய்ப்பும் கிடைக்கிறது!

அதற்கு எவ்வளவு தெரியும் இதுவரை என அறியவும் முடியும்!

ஒரு கோழிமுட்டையை எடுத்துக் காட்டி,
"இதுலேர்ந்துதான் ஒரு கோழி வருதுன்னு தெரியுமில்லை உனக்கு! அது மாதிரி நீ என் வயத்துக்குள்ளே ஒரு சின்ன முட்டையா இருந்தே! அப்படியே பெருசாகி அப்புறம் நீ பொறந்தே!"
எனச் சொன்னால் அதுவே அக்குழந்தைக்கு சமாதானமாகிவிடும்!

தனக்குத் தெரிந்த ஒன்றைக் காட்டியே அம்மா சொன்னாள் என்று தன் புத்திசாலித்தனத்தை மெச்சியபடி, 'பெருந்தன்மையாய்' உங்களை 'மன்னித்து' விட்டுவிடும்!

'தன்னால் எதுவும் செய்ய முடியும்' என்ற உணர்வை சொல்லிக் கொடுப்பதே இவ்வயதுக் குழந்தைகளுக்கு நாம் செய்யும் பேருதவியாகும்!

இப்படிச் சொல்கிறேன் எனத் திகைக்க வேண்டாம்.

தன் அளவு தெரிந்த எந்தக் குழந்தையும் அதைத் தாண்டிச் செல்லாது.
இதுதான் உண்மை!

அளவு[Limitations] தெரியாத குழந்தைகள் தான் ஆழம் தெரியாமல் காலை விடுகின்றன.

ஆண் என்றால் இது, பெண் என்றால் இத்தனை என அளவுகோள்களை நிர்ணயிக்காமல், உனக்கென்று ஒரு தனித்துவம் இருக்கிறது; அதை வளர்க்க, செயல்படுத்த, நான் உறுதுணையாய் இருப்பேன் என்னும் உணர்வை இவ்வயதில் விளைப்பது அவர்களது தன்னம்பிக்கையையும், உங்கள் மேல் உள்ள பாசத்தையும், மதிப்பையும் மேம்படுத்தும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

இந்த வயதில்தான் தனது பிறப்பு உறுப்புகளைப் பற்றிய கவனம் தெரிய வருகிறது.

சாதாரணமாகக் கேட்கப்படும் கேள்விகள்!!

[இது போல 'நான்' கேட்கவில்லையே என மறுக்காதீர்கள்! காலம் மாறிவிட்டது! இதற்குள், உங்கள் குழந்தை, நீங்கள் அதன் வயதில் இருந்த போது பார்த்திராத பல காட்சிகளை டெலிவிஷன் மூலமோ, அல்லது இன்ன பிற வகையிலோ அறிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளவும்!!]

"எனக்கு ஏன் ராஜுக்கு இருக்கற மாதிரி ஒண்ணுக்கு போற இடம் இல்லை?"

"நான் எங்கேர்ந்து வந்தேன்னு நீ காட்டுறியா?"

"ராஜு ஏன் நின்னுகிட்டே ஒண்ணுக்கு போறான்? நான் ஏன் ஒக்காந்துகிட்டு போவணும்?"

"என்னாலேயும் கொழந்தை பெத்துக்க முடியுமா?"[ஆண் குழந்தை கேட்பது]


இதற்கு நம் பதில் என்னவாக இருக்கலாம்?

1. உனக்கு எப்பவுமே அது இல்லை. ஏன்னா நீ ஒரு பொண்ணு. பொண் குழந்தைகளுக்கு ஆம்பளைப் பசங்க மாதிரி நீட்டா கிடையாது. சரியா? அதான் ஒன்னோட ஸ்பெஷாலிடி![Speciality]

"2. நீ என்னோட ரெண்டு காலுக்கும் நடுவுல இருக்கற ஒரு இடத்து வழியா வந்தே! அதை உனக்கு நான் காட்ட முடியாது! ஏன்னா, அது என்னோட தனிப்பட்ட, மறைக்கப்பட்ட[private] இடம்! இப்ப நான் உனக்கு ஒரு புக்[Book] காட்டறேன், அதுல இது மாதிரி இருக்கும், அப்போ உனக்குப் புரியும், சரியா?

"3. ஆம்பளைக்கும், பொம்பளைக்கும் இயற்கையிலேயே தனித்தனியா இடம் இருக்கு ஒண்ணுக்கு.-- அது பேர் சிறுநீர்-- போறதுக்கு. இப்ப இந்த ஹோஸ் பைப் வழியா தண்ணி எப்படி சொய்ய்ங்ன்னு விழுது! அது மாதிரி ஆம்பளைங்களுக்கு இருக்கு. அதனால், அவங்களால நின்னுக்கிட்டு போக முடியுது. உன்னால முடியாது. ஏன்னா உனக்கு அப்படி இல்லை.

"4. பொம்பளைங்கதான் குழந்தை பெத்துக்க முடியும். ஏன்னா, அவங்களுக்குத்தான் யுடிரஸ்,[Uterus] கர்ப்பப்பைன்னு ஒண்ணு இருக்கு. ஆம்பளைங்களுக்குக் கிடையாது. ஆனா, உன் அப்பாதான் குழந்தை வர்றதுக்கு எனக்கு ஹெல்ப் பண்ணினாரு! நீயும் பெரியவனான உடனே,.. வேணுமின்னா அப்பாவாகலாம்!"

இதெல்லாம் ஒரு சில உதாரணங்களே!
நீங்கள் இதை எப்படி வேண்டுமானாலும், உங்கள் கருத்திற்கேற்ப மாற்றி வடிவமைத்துச் சொல்லலாம்.

....இன்னும் இந்த முக்கியமான வயதைப் பற்றிச் சொல்ல வேண்டியிருப்பதால்......

இன்னும் வரும்!

13 Comments:

At 3:55 PM, Blogger Unknown said...

பதிவின் தலைப்பு பகுதியை சரியாக செட்டிங்க்ஸ் செய்யவில்லை என நினைக்கிறேன்.இடுகைகளுக்கு தலைப்பு இல்லாமல் வருகிறது.செட்டிங்க்ஸில் சென்றால் சரி செய்யலாம்

 
At 4:20 PM, Blogger VSK said...

நீங்கள் சொல்வது புரியவில்லை, செல்வன்!

என்ன செய்ய வேண்டும் எனத் தெரிவித்தால் நலமாயிருக்கும்!!

 
At 4:42 PM, Blogger Unknown said...

நான் சரியாக பார்க்காமல் விட்டுவிட்டேன் தலை.

தலைப்பு சரியாகத்தான் இருக்கு:))))

 
At 4:59 PM, Blogger இலவசக்கொத்தனார் said...

ரொம்ப ஹெவியா போகுதோ? விஷயத்தைச் சொல்லற ஆர்வத்துல கொஞ்சம் நகைச்சுவையா எளிமையா கொண்டு போக வேண்டுன் என்ற என் கோரிக்கையை மறந்துடாதீங்க.

இந்த பதிவை இன்னும் ஒரு முறை படிக்கணும். படிச்சிட்டு வரேன்.

 
At 5:54 PM, Blogger VSK said...

அதில்லீங்க!
ஒரு பதிவு கொஞ்சம் விவரமா, ஒரு பதிவு [உங்களுக்கெல்லாம்] ஜாலியா போற மாதிரி மனசுல வெச்சிருக்கேன்!

மேலும், இது சின்னக் குழந்தைங்க பத்தின சமாச்சாரம் இல்லியா, சொல்ல வந்தது சிரிப்பில மறை-ஞ்சிடக் கூடாதேன்னு ஒரு கவலை வேற!,
கவலைப் படாதீங்க!
உங்க வயசு சமாச்சாரம்லாம் வரும்போது, கிளு கிளுப்பாக்கிடலாம்!!
சரிதானே கொத்தனாரே!
டைசி நாலு கேள்வி கொஞ்சம் அதுமாதிரிதானே!
:))

 
At 6:37 PM, Blogger Kannabiran, Ravi Shankar (KRS) said...

//தனக்குத் தெரிந்த ஒன்றைக் காட்டியே அம்மா சொன்னாள் என்று தன் புத்திசாலித்தனத்தை மெச்சியபடி, 'பெருந்தன்மையாய்' உங்களை 'மன்னித்து' விட்டுவிடும்!//

மிகவும் உண்மை SK! குழந்தைகள் சரியான விடைகளை எதிர்பார்க்கும் வாத்தியார்கள் இல்லை! அதற்கு நிறைவு தரும் பதில்களே அதற்குத் தேவை.

கடவுள் பற்றிய பெரிய விஷயங்களையே குழந்தைகளுக்கு நாம் சொல்லிக் கொடுத்து விடும் போது, இதுவும் சற்று எளிது தான்.

குட்டிக் கதைகள் மூலம் சொல்ல முடியுமா என்ற கோணத்திலும் உஙகள் பதிவுகளில் அலச வேண்டுகிறேன்.

//எப்படி வந்திருப்பேன்னு நீ நினைக்கிறே?"//
open question, closed question என்பார்கள். நிறைய சமயங்களில் எதிர் கேள்வி மூலம் குழந்தை ஏற்கனவே ஏதாவது அறிந்துள்ளதா, நம்மிடம் confirm செய்வதற்காக கேட்கிறதா என்றும் தெரிந்து கொள்ளலாம்.

பதிவு சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது! வாழ்த்துக்கள்!

 
At 7:23 PM, Blogger நாமக்கல் சிபி said...

//அப்படிக் கேட்காமல், அதி புத்திசாலித்தனமாக ஏதோ சொல்லப் போய் ஏடாகூடமாக வாய்ப்பிருக்கிறது!
//

இதைப் படித்ததும் ஒரு நகைச்சுவையான கதை நினைவுக்கு வருகிறது எஸ்.கே அவர்களே!

ஒரு சீறுவன் தனது தாயிடம் "அம்மா செக்ஸ்னா என்னம்மா?" என்று கேட்க

திகைத்துப் போன அந்த அம்மா "சரி நாம் சொல்லாவிடினும், பையன் வேறு எங்காவது போய் கேட்டு தெரிந்து கொள்ளப்போகிறான், நாமே சொல்லிவிடலாம்" என்று எண்ணி விலாவாரியாக அனைத்தும் சொல்ல,

பொறுமையாய்க் கேட்டுக்கொண்டிருந்த அச்சிறுவன் கடைசியில்
"அட போம்மா, நீ இவ்வளவு சொல்கிறாய், ஆனா இதையெல்லாம் எழுத முடியாது, பள்ளிக் கூட விண்ணப்பத்துல ஒரே ஒரு கட்டம் மட்டும்தான் கொடுத்திருக்காங்க" என்பான்.

:)

 
At 7:35 PM, Blogger VSK said...

சொல்லத்தான் முனைகிறேன், ரவி,
ஆனல், விளையாட்டாகப் போகக்கூடாதே என அஞ்சுகிறேன்!

மேலும், கொத்தனாருக்குச் சொன்ன மாதிரி, மாறி, மாறிப் போடலாமோ எனவும் நினைத்தேன்!

எல்லாத்தரப்பினரும் படிக்கிறார்கள் இல்லையா?

மிக்க நன்றி!
கீழே பாருங்கள், சிபியார் வந்து கலக்கியிருக்கிறார்!

 
At 7:37 PM, Blogger VSK said...

வாங்க, வாங்க சிபியாரே!

கொத்தனார் வேறு திட்டியிருக்கிறார், ஜாலியாக இல்லையே என்று!

நீங்களாவது இப்படி ஒரு பின்னூட்டம் போட்டு என் மானத்தைக் காப்பற்றியதற்கு நன்றி!

சுவையான கதை!

 
At 7:39 PM, Blogger VSK said...

நான் சொன்ன மாதிரி, உனக்கு என்ன தெரியும், அல்லது, நீ என்னான்னு நினைக்கிறே என்று அந்தத் தாய் கேட்டிருந்தால், இதைத் தவிர்த்திருக்கலாம் இல்லையா, சிபியாரே!

 
At 9:04 PM, Blogger கார்திக்வேலு said...

மிகவும் உபயோகமான ,தேவையான ஒரு விஷயத்தைப் பற்றிய
தொடர் இது .
பாராட்டுக்கள் SK.

 
At 7:36 AM, Blogger Sivabalan said...

SK அய்யா,

//இதுலேர்ந்துதான் ஒரு கோழி வருதுன்னு தெரியுமில்லை உனக்கு! அது மாதிரி நீ என் வயத்துக்குள்ளே ஒரு சின்ன முட்டையா இருந்தே! அப்படியே பெருசாகி அப்புறம் நீ பொறந்தே!" //


நல்லா எளிமையாக சொல்லியுள்ளீர்கள். மிக்க நன்றி.

தொடரட்டும் இந்த மேலான பணி.

 
At 8:19 AM, Blogger G.Ragavan said...

SK, பதிவு மிகச் சரியான பாதையில் சொல்கிறது. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் விடைகளில் தாழ்வுணர்ச்சியை உண்டாக்கும் விடைகளோ, பயவுணர்ச்சியைத் தூண்டும் விதங்களோ, அருவெறுப்பைக் கொடுக்கும் முறைகளோ இல்லை என்பதைக் கவனித்துப் பாராட்ட வேண்டும். ஆக...எதையும் சொல்கிற முறையில் சொல்ல வேண்டும். அவ்வளவுதான். இல்லையா. குழந்தைக்குத் தண்ணீர் வேண்டும். வாயை அருவியிலயும் காட்டக் கூடாது. குடுக்காமலோ கண்டதைக் குடுக்கவோ கூடாது. சின்னக் கிண்ணத்தில் அளவாகக் கொடுக்க வேண்டும்.

 

Post a Comment

<< Home