“பாலியல் கல்வி – பெற்றோருக்கு” – 6
“பாலியல் கல்வி – பெற்றோருக்கு” – 6
“நீயா இப்படி பண்ணினே?”
‘ராஜுவோட டீச்சர் உங்க கிட்ட இதக் குடுக்கச் சொன்னாங்களாம்!’
ஒரு பேப்பரை நீட்டுகிறார் உங்கள் மனைவி அலுவலில் இருந்து வந்த உங்களுக்கு,... ஒரு காஃபியும் போட்டு எடுத்துக்கொண்டு.
‘என்னவாம்?’ என்று அலுத்துக் கொண்டே பிரிக்கிறீர்கள்.
முகம் சிவக்கிறது!
உதடு துடிக்க நாக்கை மடித்து, ‘எங்கே அந்த ராஸ்கல்?’ எனக் கோபமாகக் கூவுகிறீர்கள்!
அப்ப்டி என்னதான் அந்த லெட்டரில்?
“உங்கள் மகன் இன்று வகுப்பறையில், இன்னும் சில மாணவர்களுடன் சேர்ந்து பெண்கள் “படம்” போட்ட ஒரு புத்தகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். இது பற்றிப் பேச நாளைக் காலை 9 மணி அளவில் பள்ளிக்கு வந்து என்னை சந்திக்கவும்!”
உங்கள் மனதில் இப்போது ஓடும் எண்ணங்கள் !!
அவமானம்: நம்ம பையன் இப்படி தலை குனிய வெச்சுட்டானே! நாளைக்கு எப்படி நான் போய் டீச்சரைப் பார்ப்பது?
கோபம்: தொலைச்சுடறேன் அவனை. கட்டி வெச்சு நாலு சாத்து சாத்தினாத்தான் வழிக்கு வருவான்.
ஆத்திரம்: எல்லாம் உன்னால வர்றது தான்! நீதான் அவனை செல்லம் குடுத்து குட்டிச்சுவர் ஆக்கிட்டே!
வருத்தம்: என்னவெல்லாம் கதை சொல்லி, எப்படி எல்லாம் கனவு கண்டேன். இப்படி பண்ணிட்டானே ஸ்கூலுக்கு போக ஆரம்பிச்சதும்!
இந்த மனநிலையோடா ராஜுவை எதிர் கொள்ளப் போறீங்க?
நிச்சயமா டிஸாஸ்டர்[Disaster] தான்!
நீங்க கத்த, அம்மா, தடுக்க, அவன் அழ இதைப் பார்த்து சின்னக் குழந்த வீல் வீல்னு கத்த, அந்த இடமே ரணகளமாகப் போவுது, இன்னும் கொஞ்ச நேரத்துல.!!
நீங்கள் என்ன செய்யலாம்?
இப்போ உங்களுக்கு உடனடித் தேவை, இதுலேர்ந்து விடுபட்டு, தனியா ஒரு அரை மணி என்ன ஆச்சு, என்ன பண்ணனும், எப்படி பண்ணலாம், ஏன் பண்ணினான் என்பதை பற்றி சிந்திக்க.
“ சரி, இன்னிக்கு ராத்திரி சாப்பாட்டுக்கு அப்புறம் இதைப் பத்தி பேசலாம்” – இப்படிச் சொல்ல வேண்டும்.
முடியுமா உங்களால்?
உங்களுக்குள் எழும் அத்தனை உணர்வுகளும் சாதாரணமாக எல்லா பெற்றோருக்கும் வருவதுதான்.
என்னென்ன உணர்வுகள் வந்தது என்பது புரிந்தவுடன்,.... இனி ஒரு நொடி ‘ராஜுவுக்கு எப்படி இந்த ஆர்வம் வந்திருக்கக் கூடும்’ என யோசியுங்கள்.
அவனைக்கேட்டால் என்னவென்று தீர்ந்து விடப் போகிறது!ஆனால், அதற்கு முன் உங்களை நீங்கள் தயார் செய்து கொள்ள வேண்டும்.
“இதைப் பார்த்ததும், என்னதான் இருக்கு இதுக்குள்ளே என தெரிஞ்சுக்கற ஆர்வம்..?”[Curiosity]
“ஒருவேளை அவன் நண்பர்களின் நடுவில் தன்னை ஒரு நல்ல பையன் மாதிரி காட்டிக் கொண்டு போகவேண்டாமே என்ற தூண்டுதல்..?”[PeerPressure]
“வேணாம்னு சொல்றதை செய்யணும்கிற துடுக்குத்தனம்..?” [diffidence]
இந்தவயதில், மேற்சொன்ன எதோ ஒரு காரணத்தால், குழந்தைகள் இது போன்ற புத்தகங்களைப் பார்க்க, படிக்க ஆசைப்படுவது இயல்பு!
கொஞ்சம் நிதானமா யோசிச்சீங்கனா, நீங்க பண்ணாத ஒண்ணு இல்லை இதுன்னு புரியும்.
இருந்தாலும் இப்ப, நீங்க ஒரு கௌரவமான ‘தந்தை’ ஆயிற்றே!
நான் கூட செய்யலாம்; என் பையன் செய்யலாமா? என்கிறமனோபாவம்தான் பெற்றோர்களுக்கு வருகிறது.
கோவத்துல போட்டு, அவனை அடிச்சி, திட்டி, வேற தண்டனை எல்லாம் கொடுத்து, என் பையனை நான் கண்டிச்சு வளக்கிறவன்’னு நீங்க பெருமைப் பட்டுக்கலாம்.
ஆனா, இது மூலமா, நீங்க செய்தியைக் கேட்டு அனுபவிச்ச உணர்வுகளை அப்படியே அவனுக்குள்ளெ அனுப்பற பெரிய தவறைச் செய்றீங்கன்னு நினைவு வெச்சுக்கணும்.
அப்பத்தான், ‘சரி, இனிமே வீட்டில கேக்கக் கூடாது இதைப் பத்தி’ அப்படீன்னு பையன் ஒரு தெளிவாயிடறான்!
மனித உடல் அமைப்பைப் பற்றிய ஆர்வம் அதிகம் வளரும் நேரம் இது!
"எனக்குஇருக்கற மாதிரி ஏன் அவங்களுக்கு மார்ல இல்லை?"
"எனக்குஏன் இன்னும் மீசை வளரலை?"
இதுபோல பல கேள்விகள் மனதில்!
எனவே, ராஜு அப்படி ஒரு புத்தகத்தை பார்த்ததை தப்பா நினைக்காதீங்க!
இதுக்குன்னே சில நல்ல கல்விப் புத்தகங்கள் கிடைக்கின்றன.
அவற்றில் ஏதாவது ஒன்றை வாங்கி ராஜுவுடன் பேச வேண்டிய நேரம் இது!
பல்வேறு வளர்ச்சிக் காலங்களில், மனித உடல் எப்படி எல்லாம் மாறுபடுகிறது, வளர்கிறது என்பதைப் பற்றி விளக்கணும் இப்ப!
ஆணுக்கும், பெண்ணுக்கும் உள்ள உடல் ரீதியான வேறுபாடுகள், அவை செயல்படும் விதம், பருவ மாற்றம் என்றால் என்ன இதெல்லாம் தெரிய வைக்கணும்.
அப்போதுதான், இன்னும் சில ஆண்டுகளில் தன்னிடமோ. அல்லது தன் வயதொத்த சிறுமியரிடமோ ஏற்படும் மாறுதல்களை அவனால் புரிந்து கொள்ளமுடியும்.
இதை நீங்க செய்யாலேன்னா, வேற யாரு?
அதை விட்டு, இது மாதிரி பேச்சு வந்தாலே, கோவமா பார்க்கிறது, ஏதோ வேண்டத்தகாத ஒண்ணைப் பத்தி பேசற மாதிரி முகத்தை வெச்சுக்கிறது, இதெல்லாம் அவனுக்குத் தாழ்வு மனப்பான்மையையோ , இல்லை, எதிர்ப்பு உணர்வையோதான் வளர்க்கும்.
அதுக்காக எதையும் போட்டுத் திணிக்க வேண்டாம்.
அப்புறம் நம்ம சிபியார் சொன்ன மாதிரி, அப்ளிகேஷன்ல போடறதுக்காக, ‘ஸெக்ஸுன்னா’ என்னம்மான்னு கேட்ட பையன்டபோய், விலாவாரியா சொல்லி சூடுபட்ட அம்மா கதை ஆயிடும்!
[முழுக்கதை வேண்டுவோர், போன பதிவின் பின்னூட்டம் பார்க்க!!:)]
இந்த வயதுக் குழந்தைகள் கேட்கக்கூடிய கேள்விகளும் அதற்கான பதில்களும்!
"எனக்கு எத்தனை வயசு ஆகணும், நான் குழந்தை பெத்துக்க?"
"தீட்டு அல்லது மாதவிடாய் உனக்கு வர ஆரம்பிச்சதும் நீ குழந்தை பெத்துக்க ரெடி ஆகறே! சாதாரணமா, ஒரு 11 வயசுக்கு மேல இது வரும்.ஆனா, பெத்துக்க முடியுமே அப்படீங்கறதுக்காக நீ அம்மா ஆயிடக் கூடாது. ஏன்னா, அதுல இன்னும் நிறைய பொறுப்பெல்லாம் இருக்கு."
"அப்போ பசங்களுக்கு? அவங்க எப்போ அப்பா ஆக முடியும்?"
"பொண்ணுங்களுக்கு மாதவிடாய் மாதிரி ஆண்களுக்கு விந்துன்னு ஒண்ணு 13/14 வயசுல சுரக்கும். அப்போ அவங்க அப்பா ஆக முடியும். அவங்களுக்கும் உனக்கு சொன்னதெ தான். படிச்சு முடிச்சு, ஒரு வேலை பார்த்து, ஒரு குடும்பத்தை தானே காப்பாத்த முடியும்ஙற நேரம் வரைக்கும் இதை தள்ளிப் போடணும் , சரியா?"
"என் மாரு எப்போ வளரும் இன்னும் நல்லா..உன்னை மாதிரி? "
"அதுக்கு இன்னும் கொஞ்சம் நாளு போகணும். ஓவ்வொருத்தருக்கு ஒவ்வொரு நேரத்துல வளரும். பருவம் வந்ததுக்கு அப்புறம்தான் இது பெருசா வளர ஆரம்பிக்கும். இப்ப நீ சின்னப் பொண்னுதான். இன்னும் கொஞ்சம் வருஷம் போவட்டும்"
[இது போன்றே பதில் ஆண்பிள்ளைகளின் கேள்விக்கும் மாற்றிச் சொல்லலாம்]
“பக்கத்து வீட்டு அக்காவுக்கு இன்னும் கல்யாணமே ஆகலியே! எப்படி அவங்களுக்கு குழந்தை பொறக்கப் போவுதுன்னு சொல்றாங்க?”
"கல்யாணம் ஆனாலும், ஆவாட்டியும், ஒரு ஆணும், ஒரு பெண்ணும் உடல் ரீதியா ஒண்ணா சேர்ந்துபடுத்தாங்கன்னா, குழந்தை பொறக்க வாய்ப்பு இருக்கு. ஆனா, நான் வந்து கல்யாணம் கட்டிக்கிட்டதுக்கு அப்புறம்தான் குழந்தை பெத்துக்கிட்டேன். அதான் நல்லது! ஆனா, மத்தவங்க வேற விதமா நினைக்கலாம் இல்லியா?"
"சில வார்த்தையெல்லாம் [சொல்லிக்காட்டி] கெட்ட வார்த்தைன்னு சொல்றாங்களே! ஏம்மா?"
"மனுஷங்க உறவை பழிக்கிற மாதிரி சொல்றது கெட்ட வார்த்தை தானே! அதனால இதெல்லாம் சொல்லாம இருக்கறது நல்லது! கோபத்துலதான் சாதாரணமா வரும்! ஆனா, அப்பக்கூட சொல்ல வேணாமே! என்ன?!"
திரும்பத் திரும்ப சொல்கிறேன் என கோவியார் அலுத்துக்கலாம்! ஆனாலும் சொல்லிவிடுகிறேன்.
இந்தகேள்விகளை எல்லாம் நீங்கள் ஒதுக்கினாலும், குழந்தைகள் எப்படியும் தெரிந்து கொள்ளவே முயற்சிக்கும்!
சொல்லிப்புட்டேன்!
சொல்லிப்புட்டேன்!
பார்த்து நடந்துக்கோங்க!
அடுத்து, "பருவம் வருவதற்கு சற்று முன்னால் என்ன தெரியணும்?" என்பது பற்றிப் பார்க்கலாம்!!
11 Comments:
இங்க பாருங்க!இதெப்படியிருக்கு என?
ரெண்டுங்கெட்டான் வயது அப்போது நாகப்பட்டிணத்திலிருந்து பம்பாயுக்கு போயிருந்தோம்.
பெரியவங்க எல்லாம் ஏதோ ஒரு கடையில் ஏதோ வாங்கிக்கொண்டிருக்க நான் கடையின் கண்ணாடிக்கு பின்னால் "நேப்கினை"பார்த்தேன்.அதை அதற்கு முன் பார்த்ததில்லை என்பதால் பக்கத்தில் உள்ள மாமாவிடம் இது என்ன? என்று கேட்டேன்.இது பெரியவர்களின் காதிலும் விழுந்ததால் அவர்கள் "குசு குசு" என்ற பேச ஆரம்பித்து முடிவில் அது ஒன்றும் இல்லை "குழந்தை ஆய் போனால் எடுத்து தூக்கிப்போட" என்றார்.
அவர்கள் அவ்வாறு "குசு குசு" என்று பேசாமல் சொல்லியிருந்தால் நானும் நம்பியிருப்பேன் ஆனால் ஊருக்கு திரும்ப வந்தவுடன் எனக்கு பெரிய நண்பனிடம் கேட்டு தெரிந்துகொண்டேன்.
மறைக்க மறைக்க தெரிந்துகொள்ள ஏதோ ஒரு தூண்டுதல் ஏற்படுகிறது.
SK அய்யா,
தொடரை நன்றாக எடுத்து செல்கிறீர்கள்..
நன்றி.
பாடப்பாடத்தான் ராகம்
மூடமூடத்தான் ரோகம்னு சொல்வாங்க. அது இங்கயும் பொருந்தும். சரிதானா எஸ்.கே?
ஆனா இந்த விஷயத்துல பெரும்பாலான தமிழர்கள் நீங்க சொல்ற மாதிரி நடந்துக்கிறதில்லை. பாலியல் பத்திப் பேசுறதே பாவம்னு நெனைக்கிறாங்க. அதுனாலதான் நாட்டுல பல பிரச்சனைகள்.
சின்ன வயசுல ஏதோ ஒரு ராஜேஷ்குமார் நாவல் படிச்சேன். அதுல கதாநாயகன் முன்னால் 32-23-32 வந்து நின்றதுன்னு ஒரு வரி. அது என்னன்னு எனக்குப் புரியலை. வீட்டுல கூட இருந்த மச்சான் கிட்ட கேட்டேன். அவரு என்ன சொல்றதுன்னு தெரியாம மாமாகிட்ட கேளுன்னாரு. நான் மாமாகிட்ட கேட்டேன். உடனே அவரு பொறுமையா பேப்பரை எடுத்து அவுட்லைன் மாதிரி படம் போட்டு கொஞ்சம் கூட விரசமில்லாம விளக்குனாரு. அவரு செஞ்சது நீங்க சொல்ற மாதிரிதான்னு நெனைக்கிறேன்.
சரியான பாயிண்டைப் பிடித்துச் சொல்லியிருக்கிறீர்கள், திரு. குமர்!
மூட மூட ரோகம்தான் வளரும்!
கருத்துக்கு நன்றி1
பாராட்டுக்கு நன்றி, சிபா!
அப்புறம் மறுபடியும் வருவீங்கதானே!
நிறைய விஷங்கள் நாம் மரைப்பதாலேயே , மருப்பதாலேயே, வளர்கிறது!
நல்ல மாமா உங்களுக்குக் கிடைத்தார்!
கொஞ்சம் புரிதல் தேவைப் படுகிறது!
நன்றி, ஜி.ரா.!
எஸ்.கே இந்த கலக்கல் தொடரை முதலிலிருந்து படித்து வருகிறேன்.
ரெம்ப அழகா இத எடுத்துச் சொல்றீங்க, வாழ்த்துக்கள்.
உருப்படியான தமிழ் பதிவுகளில் ஒன்றாக இது அமைந்திருப்பது மகிழ்ச்சி.
ரொம்ப நன்றிங்க, சிறில்!
அடுத்ததும் போட்டாச்சு!
அதையும் படிச்சிட்டு சொல்லுங்க!
எஸ்கே ஐயா..!
நீங்கள் சொல்லும் பருவகால கட்டத்தில், அதாவது நான்
பத்தாம் கிளாஸ் படிக்கும் போதுதான் கணவன் - மனைவு உறவுகொள்வதன் மூலம் தான் குழந்தை பிறக்கும் என்று அறிவியல் ஆசிரியர் சொல்லக் கேட்டு அதிர்ந்தேன்.
பெற்றோர்கள் மீது அருவருப்பும் வெறுப்பும் வந்தது. பின்பு ஒருவருடம் சென்று உடல்ரீதியான பருவநிலை மாற்றங்கள் எனக்கு வந்தபோது என்மீதே எனக்கு வெறுப்பு வந்தது.
என்னை கட்டாயப்படுத்தி குழந்தை பருவம் /மனநிலை வலுக்ககட்டாயமாக பிடுங்கப்பட்டதாக உணர்ந்தேன். அதன் பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமாக பாலியல் பற்றி கொஞ்சம் தெரியவந்தது.
2 பகுதி படிக்கலாம்னு உட்கார்ந்து இன்னிக்கு இரவு 6 பகுதி படிச்சிட்டேன்!
பிடிஎப்-இல் தான் படிக்கிறேன், ஆனால் பதிவிலுள்ள பின்னூட்டங்களும் பார்க்கிறேன். பின்னூட்டங்களும் உதவியாயிருக்கின்றன... சிலசமயம் கொஞ்சம் மேலதிக தகவல்களுடன்!
மிக்க நன்றி சேதுக்கரசி அவர்களே!
பின்னூட்டங்களில் பலர் பல நல்ல கருத்துகள் சொல்லி இருக்கிறார்கள்!
Post a Comment
<< Home