"கசடற"

அறிவியல் தொடர்பான எனக்குத் தெரிந்த தகவல்களை, ஒரு மருத்துவன் எனும் பார்வையில் சொல்ல விழைகிறேன். முழுக்க முழுக்க இவை என் கருத்துகள் மட்டுமே! முருகனருள் முன்னிற்கும்!

Tuesday, March 20, 2007

"லப்-டப்" -- 17 "காற்று வாங்கப் போனேன்!"

"லப்-டப்" -- 17 "காற்று வாங்கப் போனேன்!"

"வர வர இப்பல்லாம் முன்ன மாரி வாக்கிங் போக முடியலை! கொஞ்ச தூரம் நடந்தாவே மேல்மூச்சு வாங்குது!" என்று சொன்னவாறே உள்ளே நுழைந்தார் கந்தசாமி.

"நானே சொல்லணும்னு இருந்தேன். அந்த காஸ் ஸிலிண்டரை கொஞ்சம் நகத்தி வையுங்கன்னு சொன்னதுக்கு, உங்களாலே முடியலியே அன்னிக்கு. அநாயசமா இதெல்லாம் பண்ணுவீங்க முன்னெல்லாம். நா சொல்லப்போவ நீங்க எங்கியாவது கோவப்படப் போறீங்களோன்னு விட்டுட்டேன்.எதுக்கும் நாளைக்கு நம்ம டாக்டரைப் போயி பார்த்துருவோம்." என்றார் அவர் மனைவி தெய்வானை.

மறுநாள் டாக்டரைப் போய் பார்த்தார். ஒருசில டெஸ்டுகள் செய்துவிட்டு, கந்தசாமியைப் பார்த்துச் சொன்னார்,
" உங்க இதயம் கொஞ்சம் பலஹீனமா இருக்கு. இனிமே நீங்க கொஞ்சம் உங்களைக் கட்டுப்படுத்திக்கணும். நான் எழுதிக் கொடுக்கற மாத்திரைகளைச் சாப்பிடுங்க. இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு மேலும் சில சோதனைகள் செய்யணும். எவ்வளவு தூரம் பாதிப்பு இருக்குன்னு பார்க்கணும்" என்றார்.

"என்ன டாக்டர்! கல்லுக்குண்டாட்டம் இருக்கேன். எனக்குப் போயி பலஹீனம் அது இதுன்னு சொல்லுறீங்களே! " என்று சிரித்தார் கந்தசாமி.

"இதையெல்லாம் அப்படி சாதாரணமா எடுத்துக்க வேணாங்க. சரியா ட்ரீட்மெண்ட் எடுத்துக்கலேன்னா, உயிருக்கே ஆபத்தாயிடும். " என டாக்டர் சற்று சீரியஸாகவே சொல்ல, கந்தசாமிக்கு பயம் பிடித்துக் கொண்டது.

"இதய பலஹீனம்னா என்னங்க. கொஞ்ச விவரமாச் சொல்லுங்க டாக்டர்" எனப் பரிதாபமாகக் கேட்டார்.

விவரமாகச் சொல்ல ஆரம்பித்தார் டாக்டர்.

"இதயம்தான் நம்ம உடல் முழுக்கவும் ரத்தத்தை அனுப்புற வேலையைச் செய்யுது. ஒரு நிமிஷத்துக்கு குறைஞ்சது ஒரு 72 தடவை சுருங்கி விரிஞ்சு ரத்தம் உடல் பூரா போவுது.
இந்த 'லப்-டப்' சரியான முறையிலே நடக்கலைன்னா, அதாவது, இதயத்தால ஒழுங்கா "பம்ப்" பண்ண முடியலைன்னா இதயம் பழுதாயிருக்குன்னு[Heart Failure] பொருள்.

பழுது ஆனதைச் சரி பண்ணினாத்தான், .....மருந்து, மாத்திரை மூலமாவோ, இல்லை,......
எந்தெந்த பார்ட்ஸெல்லாம் மாத்தணுமோ, அதையெல்லாம் மாத்தினா சரியா ஆயிடும்.
அதுலியும் சரியாகலைன்னா, புதுசாவே இதயம் மாத்துற அளவுக்குக் கூட போயிடலாம்."

"நெசமாவா? இது எதுனால எப்படி ஆவுது?" எனக் கவலையுடன் கேட்டார் கந்தசாமி.

"ரத்தத்தை பம்ப் செய்ய முடியாத போது, இதயத்தோட சுவர்கள்[Heart walls], அதாங்க நாலு பக்க சதையும், நீளமாகி[stretch]], தங்கியிருக்கிற ரத்தத்தை வைத்துக் கொள்ள ஆரம்பிக்குது.
அதேசமயம், இந்த சுவர்கள் கொஞ்சம் தடிமனாகி[thickening], இன்னும் கொஞ்சம் அழுத்தமா பம்ப் பண்ண முயற்சிக்குது.
நம்ம உடல்ல இருக்கிற சிறுநீரகம் இப்போ கொஞ்ச அதிகமா நீரையும்[fluids], உப்புச்சத்தையும்[sodium] வைச்சுக்க ஆரம்பிக்குது.
இப்போ நம்ம உடல் இன்னும் அதிகமா ஹார்மோன்களை சுரந்து, இதயத்துக்கு உதவியா அதை பழையபடி பம்ப் செய்ய முயற்சிக்குது.
முதலில், இது நல்ல பலனளித்தாலும், நாளாவட்டத்தில், இதன் வலிமையும் குன்ற ஆரம்பிக்கவே இதயம் பலவீனமாகுது.

இத்தோட இல்லை விஷயம்.

இதயத்துக்கு உதவி செய்யறதுக்காக இப்ப உடம்போட மற்ற பாகங்களான கால், கை, வயிற்றுப்பகுதி[abdomen], ஈரல்[Liver], நுரையீரல்[Lungs] இவையெல்லாம் நீரை இதயத்துக்கு அனுப்பாம, தங்க கிட்டயே வெச்சுகிட்டு, கெட்ட பொருளை[Waste products] மட்டும் அனுப்ப ஆரம்பிக்கின்றன.
இது எல்லாமா சேர்ந்து, உடம்பு கொஞ்சம் கனத்துப் போகுது. [congested]இதை "கனத்துப் போனதால வந்த இதய பலஹீனம்"[Congestive Cardiac[heart]Failure, CCF] அப்படீன்னு சொல்லலாம்."

"இதுக்கு என்ன காரணம்?" மீண்டும் அப்பாவியாய்க் கேட்டார் கந்தசாமி.

"முக்கியமான காரணம் நான் முன்னே சொன்னேனே, அந்த 'ஹார்ட் அட்டாக்'தான்.
கரோனரி நாள நோய்[Caronary Artery Disease] ஒருத்தருக்கு வந்துச்சுன்னா, அதனால இதயத்துக்கு வர்ற ரத்த ஓட்டம் தடைப்படுதுன்னு முன்னே பார்த்தோம்.
இந்த அட்டாக் சரியானாலும் வந்த இடத்துல ஒரு தழும்பை [scar]விட்டுட்டு போகும்.
அந்த இடத்தைச் சுத்தி, இருக்கற சதையெல்லாம் சரியா வேலை செய்யாமப் போயிடுது.
இது ஒரு முக்கிய காரனம்.

இதைத் தவிர, வேற மத்தக் காரணங்களும் இருக்கு.

கார்டியோமையோபதி[Cardiomyopathy] எனச் சொல்லப்படும் ஒரு நிலைமை இதயத்துக்கு வரலாம்.
மது அதிகமா அருந்துபவர்கள்[Excesive drinking], போதை மாத்திரை சாப்பிடுபவர்கள்[Illicit drugs], பிரசவகாலத்தில்[Pregnancy], அல்லது ஏதாவது கிருமிகளால் ஏற்படும் நோய்[Infectious diseases], அல்லது எந்தக் காரணமுமின்றியே இது வரலாம்!
அடுத்து, அதிகமான ரத்த அழுத்தம்[High Blood Pressure, இதய வால்வுகளில் ஏற்படும் குறைபாடுகள்[Cardiac valve defects], தைராய்டு சுரப்பியில் வரும் நோய், சிறுநீரக நோய், நீரிழிவு நோய், மற்றும் பிறவியிலேயே இருக்கும் இதயக் குறைபாடுகள்[Congenital Heart disease] இவற்றாலும் இந்த CCF ஏற்படலாம்."


"ஒண்ணு விடாம அத்தனையும் சொல்லிட்டிங்களே டாக்டர்! இந்த நோயெல்லாம் இருக்கறவங்க அத்தனை பேருக்கும் இது வந்தே தீருமா?" என்றார்.

"அப்படி நான் சொல்லவில்லையே, கந்தசாமி சார்! இவங்களுக்கெல்லாம் இது வர்றதுக்கு சான்ஸ் அதிகம்னு சொல்ல வரேன். இதெல்லாம் இல்லாமக் கூட வரலாம்னும் சொல்லியிருக்கேனே!" -- என்றார் டாக்டர்!

"இது வந்திருக்கான்னு எப்படித் தெரிஞ்சுக்கறது? இதுக்கான அறிகுறிகள் என்னென்ன?" -- கந்தசாமி.

டாக்டர்: " உங்களுக்கு வந்ததே, அதான் முதல் அறிகுறி! மூச்சு வாங்குதல் [Shortness of breath].
இதுவரைக்கும் சர்வ சாதாரணமா செஞ்சுகிட்டு இருந்த காரியமெல்லாம் இப்ப கொஞ்சம் கொஞ்சமா கடினமானதாத் தெரிய ஆரம்பிக்கும். பழைய படியே செய்ய முயற்சி பண்னினா மூச்சு வாங்கத் துவங்கும்.

நுரையீரலில் நீர் தங்குவதாலும் இது அதிகமாகலாம். அப்போது ஒரு கமறலான இருமலும் கூடவே வரும்.

ரத்த ஓட்டம் தடைப்படுவதால், மூளைக்கு ரத்தம் சரியாகப் போகாமல், தலைச்சுற்றல்[giddiness], மயக்கம்[fainting spell] இவை வரலாம்.

இதே காரணத்தால், உடலின் மற்ற பகுதிகளும் வலுவிழக்க ஆரம்பித்து, அசதி[weakness, tiredness] தோன்றும்.

இதயம் படபடவென[palpitations] அடிக்கத் துவங்கும். [இது அந்த இருபதில் வரும் படபடப்பு இல்லை!:)]

கால்வீக்கம், வயிற்றுப்பகுதி[abdomen] வீக்கம், இதனால் சற்று எடை அதிகரித்தல்.

நடு இரவில் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு விழித்துக் கொள்ளல்.

இவையெல்லாம் ஏற்படலாம்.

இதெல்லாம் மொத்தமா வராது!

படிப்படியாகத்தான் வரும்.

இப்ப நீங்க வந்த மாதிரி, முதல் அறிகுறி தெரிய ஆரம்பிச்ச உடனேயே மருத்துவரைப் போய் பார்த்தா, இதன் கடுமையை ஆரம்பத்திலேயே கண்டுபிடிச்சு, சரி செய்ய, அல்லது கட்டுப்படுத்த முடியும்."


க: " இதை எப்படிக் கண்டுபிடிப்பீங்க டாக்டர்?"

டா: இதற்கான சோதனைகள் கொஞ்சம் பெருசுதான்!
1.வழக்கம் போல உங்களிடமிருந்து உங்க வாயால என்ன நடக்குதுன்னு கேட்டதுக்கப்புறம்[history], ஒரு முழு உடற்பரிசோதனை [full check-up]செய்வோம்.

2. நாடித்துடிப்பு, ரத்த அழுத்தம், பின்னர் ரத்தப் பரிசோதனை, சோடியம், பொட்டாஷியம், குளோரைடு, யூரியா, கொலெஸ்ட்ரால் இன்னும் பல ரசாயனப் பொருள்களின் அளவுகள் ரத்தத்தில் எவ்வளவு என்பதைக் கண்டறிவோம்.

3. BNP என்னும் [B-type Natriuretic Peptide] ஒரு ரஸாயனப்பொருள் வெண்ட்ரிக்கிளில் சுரக்கிறது.
இதய பலவீனம்[CCF] அதிகமாக, அதிகமாக இதன் அளவும் அதிகமாகிறது.
இது ஒரு நல்ல குறியீடு[marker] இதற்கு.
ஏனெனில், CCF கட்டுப்படுத்தப்பட்ட ஒருவருக்குக் கூட, நல்லமுறையில் இதயம் இயங்கும் ஒருவருக்கு இருப்பதை விட அதிகமாகவே இந்த BNP இருக்கும்.

4. மார்பு எக்ஸ்-ரே[Chest X-Ray]: இதயத்தின் அளவையும், இதயம், நுரையீரலைச் சுற்றி இருக்கும் அதிகப்படியான நீரின் அளவையும் இது காட்ட உதவும்.

5. எக்கோ கார்டியோக்ராம்[Echocardiogram or Echo]: இதயம் இயங்குவதையும், அது பம்ப் செய்யும் அளவையும், ஆரிக்கிள், வெண்ட்ரிக்கிள்களின் அளவையும் இயங்கும் போதே அளவிட உதவும் ஒரு சோதனை இது. அல்ட்ரா சவுண்ட்[Ultrasound] மூலம் இது செய்யப்படும்.

6. ஈ.எஃப்.[]: ஒவ்வொரு முறை இதயம் ரத்தத்தை பம்ப் செய்து அனுப்பும் அளவைக் குறிக்கும் சொல் இது. எக்கோ மூலமும், பின்னால் சொல்லப்போகிற கார்டியாக் கதீடெரைசேஷன் மூலமாகவும் இதைக் கணிக்க முடியும்.
சாதாரணமாக ஒருவருக்கு இதன் அளவு 50%க்கு மேலாக இருக்கும். அதாவது குறைந்த பக்ஷம் இருப்பில் பாதிக்கு மேல் இதயத்திலிருந்து வெளியேற்றப் படுகிறது என்பதைக் குறிக்கிறது இது.
இந்த ஈ.எஃப். 405க்கு கீழே போனால், ஸிஸ்டாலிக் ஹார்ட் ஃபெயிலியர்[Systolic Heart Failure] எனக் கொள்ளலாம்.
40%க்கு மேலானால், இது டையஸ்டாலிக் HF[Diastolic Heart Failure] அல்லது வேறு காரணங்களால் வரும்.

க: "ஸிஸ்டாலிக், டையஸ்டாலிக்குன்னா என்ன் டாக்டர்?"

டா: இதயத்தால நல்லா அழுத்தி பம்ப் பண்ணி ரத்தத்தை வெளியே அனுப்ப முடியாத அளவுக்கு அதன் சுவர்கள்[wallas] பலஹீனமா இருந்தா அது ஸிஸ்டாலிக் கோளாறு.
ஆனா, இதயத்தோட சுவர்கள் சாதாரணமா சுருங்கினாலும், வெண்ட்ரிக்கிள்கள் சரியா விரிஞ்சு கொடுக்கலைன்னாகுறைந்த அளவு ரத்தமே மறுபடியும் இதயத்துக்குள்ளே வரமுடியும். அது டையஸ்டாலிக் கோளாறுனால வர்றது.

க: ஆக மொத்தம் எப்படியும் ஏதோ ஒரு விதத்துல பலஹீனம் வருது இல்லையா டாக்டர்? எதுவா இருந்தா என்ன?

டா: ஆமாம். ஆனால், இதைக் கண்டுபிடிக்கறது எதுக்குன்னா, சரியான சிகிச்சை கொடுக்கறதுக்காகத்தான்!

மேலே கேளுங்க!
7. அடுத்த டெஸ்ட் ஈ.ஸி.ஜி. [E.C.G or Electrocardiogram] இதை ஈ.கே.ஜி.ன்னும் சொல்லுவாங்க. இதயத்துக்கு மின்சார அதிர்வுகள்[Electrical Impulses] இருக்குன்னு முன்னே சொன்னேனே, நினைவு இருக்கா? அந்த மின்சார அதிர்வுகளை ஒரு க்ராஃப்பேப்பர்ல[Graph Paper] கோடு போட்டுக் காட்டற சோதனை இது. உடம்புல சில மின்சார இணைப்புகள் மூலமா [ஷாக்கெல்லாம் அடிக்காதுங்க!] இது செய்யப்படும்.


"இதெல்லாம் எப்பங்க செய்யப் போறீங்க இவருக்கு? சீக்கிரமா கண்டுபிடிச்சு எந்த அளவுல இவரோட நோய் இருக்குன்னு சொல்லுங்க டாக்டர்" என இவ்வளவு நேரம் எல்லாவற்றையும் கூட இருந்து கேட்டுக்கொண்டிருந்த தெய்வானை வாய் திறந்தார்.

"செய்யத்தானே போறோம். கொஞ்சம் பொறுங்க. இன்னும் ரெண்டு, மூணு நாள்ல இதையெல்லாம் செய்திடலாம்.
ஒரு விஷயம் உங்க ரெண்டு பேரையும் நான் பாராட்டணும். நீங்களும் கூட இவரோட வந்தீங்க பாருங்க. அது ரொம்ப சிறப்பான விஷயம். உங்க துணைக்கும் இது தெரியணும் என்பது மிகவும் முக்கியம். அப்போதான் சிகிச்சையை சரியா கண்காணிக்க முடியும்.

சரிங்க, நிறைய நேரம் பேசிட்டோம் இன்னிக்கு. மீதியை டெஸ்டெல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறமா பர்க்கலாம்.
இன்னும் உங்களுக்கு சிகிச்சை ஆரம்பிக்கப்படலை. அதனால, அதுவரைக்கும், இன்னும் ரெண்டு, மூணு நாளைக்கு நல்லா ரெஸ்ட் எடுங்க. அதிகமா அலட்டிக்கதீங்க. நடுவுல எதுனாச்சும் சிராமமா இருந்தா உடனே ஒரு தகவல் கொடுங்க. தைரியமா இருங்க" என்றபடி விடை கொடுத்தார் டாக்டர்.

நாமும், கந்தசாமி-தெய்வானை தம்பதிகளை கொஞ்சம் ஓய்வெடுக்க விடுவோம்!!
அது வரைக்கும் சென்ற பதிவுகளை அப்பப்போ மறுபடியும் படிங்க!

[இங்கு கூறியிருப்பவை ஒரு தகவலுக்கு மட்டுமே!
உங்கள் மருத்துவரைக் கலந்து ஆலோசிப்பது அவசியம்!!]

20 Comments:

At 9:33 PM, Blogger கோவி.கண்ணன் [GK] said...

எஸ்கே ஐயா,
அருமையான பதிவு, ஆழ்ந்த கருத்துக்கள். எனக்கு தெரிந்த செந்தில்நாதன் வள்ளி தம்பதிகளை அடுத்து உங்களிடம் அனுப்புகிறேன்.

 
At 9:42 PM, Blogger VSK said...

எவர் வந்தாலும் மறுக்காமல் பார்ப்பவன்தானே உண்மையான மருத்துவன்!

தாராளமாக அனுப்புங்கள், கோவியாரே!

மு.பி.ஊ.க்கு நன்றி!

 
At 9:57 PM, Blogger வடுவூர் குமார் said...

என்ன ஸ்டோர்க் "பதிவு" செய்துவிட்டு போகுமா??
ஹூம் இன்னும் என்னனென்ன இருக்கோ!!

 
At 10:01 PM, Blogger Subbiah Veerappan said...

///மு.பி.ஊ.க்கு நன்றி!////

அய்யா! இதில் மட்டும் என்னால் ஒன்றையும் கணிக்க முடியவில்லை!

ஒரு நாளில் தமிழ்மணத்தில் வரும்
பதிவுகளில் (சராசரி 140) 25% பதிவுகளில் சிங்கைக்காரரின் பின்னூட்டம்தான் முதல் பின்னூட்டமாக இருக்கிறது

அதற்கு - அதாவது அப்படிச் சுறுசுறுப்பாக இருப்பதற்கு அவர் என்ன
ஊக்க மருந்து சாப்பிடுகிறார் - என்பதை மட்டும் எங்களுக்கும் சொல்லுங்கள்.

அவரிடம் கேட்டேன் - புன்னகை மட்டும் பதிலாக வந்தது!

(பதிவு வழக்கம்போல பயனுள்ளதாக இருக்கிறது! பாராட்டுக்கள். நனறி!

 
At 7:37 AM, Blogger VSK said...

ஆமாங்க, திரு.குமார்.
இதை ஈ.ஸி.ஜி.யே காட்டிடும்.
அதை வைத்தே இதுக்கு முன் மாரடைப்பு வந்திருக்கிறதா எனச் சொல்ல முடியும்.
நன்றி.

 
At 7:39 AM, Blogger VSK said...

பதிவின் கருத்தை விட்டு, மற்றதற்கு பின்னூட்டமிடும் கலைக்கு நீங்களுமா துணை போனீர்கள், ஆசானே!
:))
பதிவுக்கு அடைப்புக் குறிகளுக்குள் ஒரு வரி.

கோவியார் புகழ் பாட 5 வரிகள்!

ம்ம்... செய்யுங்க!
:))

 
At 11:24 AM, Blogger சேதுக்கரசி said...

உள்ளேன் ஐயா.

//சென்ற பதிவுகளை அப்பப்போ மறுபடியும் படிங்க!//

எதுக்குங்க.. என்னை மாதிரி குழம்பிப்போனவங்களோட குழப்பம் மீண்டும் தீர்றதுக்கா? :) இந்தப் பதிவையே மறுபடியும் படிக்கணுமே ஐயா.. தெரியாத விசயம்லாம் அவ்ளோ சொல்லிப்புட்டீக.

 
At 12:16 PM, Blogger VSK said...

"அன்புடன்" போட்டிக்கு நடுவிலும் இங்கு வந்து சிறப்பித்த சேதுக்கரசி அவர்களுக்கு நன்றி.

இப்பல்லாம் படிக்க எங்கெங்க நேரம் இருக்கப் போகுது உங்களுக்கு?
அதனாலதான், "அப்பப்போ" படிங்கன்னு சொல்லி வைத்தேன்!
:))

 
At 4:57 PM, Blogger சேதுக்கரசி said...

//இப்பல்லாம் படிக்க எங்கெங்க நேரம் இருக்கப் போகுது உங்களுக்கு?//

ஆகா.. புரிஞ்சிக்கிட்டீங்க.. நன்றி. நீங்க அன்புடன் கவிதைப் போட்டியில் பங்கேற்கிறீங்க அவசியம். சொல்லிட்டேன்.

 
At 6:54 PM, Blogger VSK said...

:))!!!

 
At 8:17 PM, Blogger இலவசக்கொத்தனார் said...

கந்தசாமிக்கும் செந்தில்நாதனுக்கும் மருத்துவம் பாக்கிற அளவு வந்தாச்சா!! நடக்கட்டும் நடக்கட்டும். :))

ஆனா உம்மை மாதிரி ஒரு ஊ.கு. ஸ்பெஷலிஸ்ட் பார்த்ததே இல்லை ஐயா. அப்படி இருந்தாத்தானே இன்னைக்குப் பெரிய மனுஷங்களுக்கு எல்லாம் வைத்தியம் பார்க்க முடியும்.

தப்பா படிச்சு திட்ட வரதுக்கு முன்னாடி ஒரு விளக்கம். நான் சொன்னது வலிக்காம ஊசி குத்தறது. வேறொன்றுமில்லை. :)))

 
At 8:25 PM, Blogger இலவசக்கொத்தனார் said...

நல்லா பயமுறுத்தறீங்க போங்க. படிக்கப் படிக்க எல்லாமே நமக்கு இருக்கற மாதிரி இருக்குங்க. :((

 
At 9:52 AM, Blogger A Simple Man said...

நம்ம மணிகண்டன் உங்களுக்கு ஒரு பந்து வீசியிருக்கிறார்.. ஒரு 4 இல்ல 6 அடிங்க..
http://wcup2007.blogspot.com/2007/03/weird.html

 
At 10:09 AM, Blogger VSK said...

//நல்லா பயமுறுத்தறீங்க போங்க. படிக்கப் படிக்க எல்லாமே நமக்கு இருக்கற மாதிரி இருக்குங்க. :(( //

முன்பெல்லாம் விவரணையா வந்து கேள்வியெல்லாம் கேப்பீங்க!
இப்ப என்ன ஆச்சு கொத்ஸ்?

ரொம்ப பயந்திட்டீங்களா?

ரொம்ப ஸிம்பிள்!

மூச்சு வங்க ஆரம்பிச்சதுமே என்கிட்ட வந்துருங்க!

சரி பண்ணிறலாம்!

:))

//கந்தசாமிக்கும் செந்தில்நாதனுக்கும் மருத்துவம் பாக்கிற அளவு வந்தாச்சா!! நடக்கட்டும் நடக்கட்டும். :))//

நம்ம கிட்ட வர்றவங்க என்ன பேருன்னுல்லாம் பாத்து வைத்தியம் பண்ண மாட்டேங்க!

நமக்கு எல்லாரும் ஒண்ணுதான்!

:))

 
At 10:12 AM, Blogger VSK said...

அபுல், அந்த பந்துல நான் பௌல்டே ஆயிட்டேங்க!

ஏன்னா, 4 அடிக்கலாம்,; 6 கிளப்பலாம்; இவரு அஞ்சுல்ல அடிக்கச் சொல்றாரு!

எப்பிடீங்க முடியும்?

அடுத்த மேட்சுல பார்ப்போம்!

:))

 
At 6:23 PM, Blogger Arun's Thoughts said...

வணக்கம் எஸ் கே அய்யா,

உங்களுக்கு weird கேள்வி சுற்றை அனுப்பியிருக்கிறேன். பதில் அளிக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்

நன்றி

அன்புத்தோழி

 
At 9:17 AM, Blogger குமரன் (Kumaran) said...

கொத்ஸ் சொன்ன மாதிரி எனக்கும் பயமாத் தான் இருக்கு எஸ்.கே. உடற்பயிற்சி செய்ய சோம்பல் படக்கூடாதுன்னு தோணுது இப்போ. உடற்பயிற்சி செஞ்சு நாலு நாளாச்சு. இன்னைக்கே மறுபடியும் செய்ய வேண்டியது தான்.

 
At 9:53 AM, Blogger VSK said...

முறையான, அளவான உடற்பயிற்சி மூலம் பல நோய்களைத் தடுக்கலாம், குமரன்.

வேலைகள் வந்து கொண்டுதான் இருக்கும்.

நடுவில், இதற்கென ஒரு 15 நிமிடங்கள் தினமும் ஒதுக்கத் தவறாதீர்கள்!

 
At 4:38 AM, Anonymous Anonymous said...

அய்யா வணக்கம்....
என்னை மாதிரி 16 மணிநேரம் கணினி முன்னால் வேலை செய்யும் மென்பொருள் காரர்களுக்கு வரும் முன் காக்க என்ன செய்யலாம் என்று ஒரு பதிவு போட்டால் நன்றியுடையவர்களாக இருப்போம்!

அன்புடன்

ஓசை செல்லா, கோவை

 
At 1:14 PM, Blogger VSK said...

கூடிய விரைவில் இது பற்ரி எனக்குத் தெரிந்ததைச் சொல்ல முயல்கிறேன், திரு. செல்லா அவர்களே!

முதல் முதலா வந்திருக்கீங்க!

மிக்க நன்றி.

 

Post a Comment

<< Home