"கசடற"

அறிவியல் தொடர்பான எனக்குத் தெரிந்த தகவல்களை, ஒரு மருத்துவன் எனும் பார்வையில் சொல்ல விழைகிறேன். முழுக்க முழுக்க இவை என் கருத்துகள் மட்டுமே! முருகனருள் முன்னிற்கும்!

Tuesday, February 13, 2007

;">"லப்-டப்" -- 11 "ஓடிய கால்களை ஓடவிடாமல் ......!!"


"லப்-டப்" -- 11 "ஓடிய கால்களை ஓடவிடாமல் ......!!"



ரத்தநாளங்களைப் பற்றிச் சொல்லி வரும்போது கால்களைப் பாதிக்கும் நோயைப் பற்றிப் பார்த்தோம்.


இன்னொரு வழி மூலமாகவும் கால்,கை செயலிழக்கக் கூடும்.
அதுதான் மூளையில் ஓடும் ரத்த நாளங்களால் ஏற்படும் 'பக்கவாதம்' என அழைக்கப்படும் மூளைத்தாக்குதல்[Cerebral Stroke] .

இதயத்திற்கு மேல்பகுதிக்கு, குறிப்பாக மூளைக்கு, ரத்தத்தை அனுப்பும் வேலையை கரோடிட்[Carotid vessels] என்னும் நாளம் செய்கிறது.
இது கழுத்தின் இரு பக்கங்கள் மூலமாக வலது, இடது கரோடிட் ஆர்ட்டெரி, வெயின்[Carotid Artery&vein] என சுத்த மற்றும் அசுத்த ரத்தத்தை எடுத்துச் செல்கின்றன.






இவற்றிலும் ஏற்கெனவே சொன்னது போல கொழுப்பு, கொழுப்புச்சத்து, மற்றும் இன்னும் சில கழிவுப்பொருட்களின் தேக்கத்தால் துகளோ[plaque], அல்லது அடைப்போ[clot], நிகழும் வாய்ப்புகள் உண்டு.







இதன் மூலம் மூளைக்குத் தேவையான ரத்தம் தடைப்படும் போது, எந்த குழாய் அடைபட்டதோ, அது ரத்தம் கொடுக்கும் இடங்களால் கட்டுப்படுத்தப்படும் உடலின் பாகங்கள் பாதிக்கப் படுகின்றன.

இதனையே பொதுவாக ஸ்ட்ரோக்[Stroke] எனச் சொல்லுகிறோம்.


இது நான்கு விதங்களால் நிகழக்கூடும்.

1.ரத்தக்குழாய் குறுகலாக ஆதல்.[Narrowing]


2.இந்த அடைப்பில் இருந்து ஒரு சிறு பகுதி பிய்த்துக் கொண்டு ரத்தத்தில் தவழ்ந்து சென்று, இன்னொரு சிறிய குழாயை அடைந்து அதை அடைத்துக் கொள்ளுதல்,[Plaque dislodgement]

3.ரத்தக்கட்டி[clot] உண்டாகி ஏதேனும் ஒரு குழாயை அடைத்துக் கொள்ளுதல்.
[இம்மூன்றும் ரத்தம் மூளையின் சில பகுதிகளுக்குச் செல்வது தடுக்கப்படுகிறது. இவ்வாறு நிகழும் போது, ரத்தம் கொண்டுவரும் பிராணவாயு[O2], குளூக்கோஸ்[சர்க்கரைச் சத்து][Glucose] மூளையில் இருக்கும் செல்களுக்கு போய்ச்சேராமல் இப்பகுதிகள் வெளிறிப் போகின்றன.[Ischemia] இவ்வாறான பாதிப்பு 3 முதல் 6 மணி நேரத்துக்கு மேல் நிகழும்போது, இதனால் ஏற்படும் விளைவுகளும் நிரந்தரமாகிப் போகின்றன.

4. அழுத்தம் அதிகமாகியோ, அல்லது வேறு சில காரணங்களாலோ,ரத்தக்குழாய் உடைந்து போகும் போது, மூளைத்திசுக்களில் ரத்தக்கசிவு ஏற்பட்டு, மூளையின் செல்கள் தாக்கப்படுவது இன்னொரு வகை. இதனை Hemorrhagic Stroke எனச் சொல்லுவார்கள்.

இந்த ஸ்ட்ரோக் நிகழ என்ன காரணங்கள்?

1. பரம்பரை வரலாறு.[Family History]: குடும்பத்தில் இது போல முன்னர் எவருக்கேனும் நிகழ்ந்திருந்தால், மற்றவர்க்கும் நிகழ வாய்ப்புகள் அதிகம்.
2. வயது.: 75 வயதுக்கு முன், பெண்களை விட ஆண்களுக்கும், 75-க்குப் பின், பெண்களுக்கும் வாய்ப்பு அதிகம்.
3. அதிகமாக புகை பிடித்தல்.
4. ரத்த அழுத்த நோய்[Hypertension]
5. கட்டுப்படுத்தாத நீரிழிவு நோய்[Uncontrolled Diabetes]
6. உடல் பரும்ன் அதிகமாதல்[Obesity]
7. அளவு மீறி மது அருந்துதல்
8. கெட்ட கொழுப்ப்புச்சத்து என அழைக்கப்படும் ஹை-லோ லைப்போ புரோட்டின்[High-Low Proteins] எனப்படும் கொழுப்புச்சத்து.

இப்போது இதன் அறிகுறிகளைப் [signs&symptoms] பார்ப்போம்.

1. உடலின் ஒரு பகுதி, குறிப்பாக ஒரு பக்க கை, கால் மரத்துப் போதல், அல்லது உணர்விழத்தல்.
2. திடீரென ஒன்று [அ] இரு கண்களிலும் பார்வை மங்கிப் போதல், [அ] அற்றுப்போதல்.
3. வாய் பேச முடியாமல் போதல், [அ] குழறுதல்.
4. பிறர் சொல்வது புரியாமல் போதல் [அ] தன் கருத்தை சரியான முறையில் வெளிப்படுத்த முடியாமல் போதல்.
[இதை இங்கே ரொம்ப பேர் பண்றாங்களென்னு ஒரு பி.ஊ. போட கொத்தனார் கை பரபரப்பது எனக்குத் தெரிகிறது!:))]
5.மூளை நினைப்பதை உடனே செய்யமுடியாமல் ஒரு குழப்பநிலை தோன்றுதல்[confusion]
6. விழுங்குவதில் சிரமம்.
7. மயங்கி விழுதல்.
8. நினைவு திரும்பாமல் போதல்.
9. மரணம்.

இறுதியில் கூறிய [7,8&9] மூன்றும் மிகப் பெரிய அளவிலான ஸ்ட்ரோக் [அ] தாக்குதல் நிகழும்போது மட்டுமே நடக்கக்கூடியவை.
இதன் அறிகுறிகள் தோன்றிய உடனேயே[1,2&3] ஒரு மருத்துவரிடம் சென்று, தேவையான பரிசோதனைகளைச் செய்து, சிகிச்சையை மேற்கொண்டால், ஒரு 50% அளவில் இதனைத் தடுக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த ஆரம்ப நிலையை தாற்காலிகத் தாக்குதல்[Transient Ischemic Attack] எனச் சொல்லுவார்கள்.

இதை உடனே கவனிக்காவிட்டால் ஒரு பெரிய தாக்குதலில் [Cerebral attack] போய் முடியும் அபாயம் இருக்கிறது.

ஏதோ சாதாரண மயக்கம், தலைசுற்றல், வாந்திதானே என நீங்களாகவே ஒரு மாத்திரையைச் சாப்பிட்டு, ஓய்வு எடுத்தால் சரியாகிவிடும் என அசட்டையாக இருந்துவிடாதீர்கள். முறையான சோதனைகளுக்குப் பிறகு உங்கள் மருத்துவர் அதைச் சொல்லட்டும்.

இப்பதிவில் வேறு எதை மறந்தாலும், இதனை மட்டும் மறந்து விடாதீர்கள் என வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

இது ஒரு தவிர்க்கப்படக்கூடிய நோயே அன்றி, ஏதோ தீராத வியாதி அல்ல!

அறிகுறிகள் தென்பட்டதுமே சிகிச்சை அளித்தால், பெரும்பாலும் ஆரம்பநிலையிலேயே இதனைக் கட்டுப்படுத்த முடியும்.

இதைக் கண்டுபிடிக்கும் சோதனைகள், சென்ற பதிவில், PAD க்கு சொன்னது போல அல்ட்ராசவுண்ட்[Ultrasound], கரோடிட் ஆஞ்சியோக்ராஃபி[Carotid Angiography], CT ஸ்கேன்[CT Scan] போன்ற எளிதான சிலவே!

பாதிக்கப்பட்ட, பாதிக்கப்படப்போகும் மூளையின் பகுதிகளை இதன் மூலம் கண்டுபிடிக்க முடியும்.

இதற்கான சிகிச்சைமுறை வெறும் மருத்துவர் செய்வது மட்டும் அல்ல.


[Carotid Stent]

உடனடிக் காரணத்தை அடைப்பை நீக்கும் அறுவைச்சிகிச்சை[Carotid Stenting ] மூலமாகவும் ரத்தக்கசிவை சில மாத்திரைகள், தேவைப்பட்டால் அறுவைச்சிகிச்சை [Aneurysm Repair] மூலமாகவும் மருத்துவர் செய்தாலும், முக்கியமாகச் செய்ய வேண்டியவர் நீங்கள்தான்!

1. புகையிலை, புகைபிடித்தல் இவற்றை அறவே விடணும்
2. ரத்த அழுத்தம், நீரிழிவு இவற்ரை அளவோடு வைக்க வேண்டும்.
3. முறையான மருத்துவப்பரிசோதனை ஒழுங்காக செய்து கொள்ளணும்.
4. கொழுப்புச்சத்தை கட்டுப்பட்டுத்தணும்.
5. உணவில் மிகவும் கட்டுப்பாடுடன் இருக்கணும். உப்ப்பைக் குறைத்து, கொழுப்புச்சத்து உள்ள பொருட்களை அளவோடு பயன்படுத்தி, கொலெஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தணும்.
6. உடல் பருமனை வயது, உயரத்திற்குத் தக்க அளவில் வைக்கணும்.
7. தினசரி உடற்பயிற்சி, மருத்துவரின் ஆலோசனையுடன் செய்ய வேண்டும்.
8. மது அருந்துவதை நிறுத்தினால் நல்லது. முடியாவிட்டால்[!!] மிகுந்த கட்டுப்பாட்டுடன் இருக்கவாவது கத்துகோங்க.
9. மருத்துவர் எழுதிக் கொடுத்த மருந்து மாத்திரைகளை தவறாமல் சாப்பிடணும். [இதில் சில மருந்துகள் நீங்கள் ஆயுட்காலம் முழுதும் சாப்பிடும் படியாக இருக்கும்! அப்படிச் சாப்பிடும் போது, அதற்காக சில ரத்தப்பரிசோதனைகள் செய்யும் படியாகவும் இருக்கும். அதையும் தவறாமல் செய்து கொள்ளணும்.]
10. தடாலடியாக, உடலை வருத்தி அதிக வேலை செய்து ஆயாசப்பட வேண்டாம்.
11. கோபத்தைக் குறையுங்கள்.

இப்பதிவின் முக்கியத்துவம் உணர்ந்து ஒரு சிலராவது தங்கள் வாழ்க்கைமுறையை மாற்றி அமைத்துக் கொண்டால் பெரிதும் மகிழ்வேன்!

நன்றி. வணக்கம்.
அடுத்த வாரம் மீண்டும் சந்திக்கலாம்.

[நண்பர் கல்யாண் அவர்களின் அகால மரணத்தினால், இப்பதிவு வருவதில் ஓரிரு நாட்கள் தாமதமானதற்கு மன்னிக்க வேண்டுகிறேன்.
அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல முருகப்பெருமானை வேண்டுகிறேன்.
அவரது குடும்பத்தினர்க்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.]

19 Comments:

At 3:17 PM, Blogger VSK said...

இதை அனைவரையும் படிக்க வையுங்கள்!
:))

 
At 3:50 PM, Blogger பத்மா அர்விந்த் said...

எஸ்கே
நான் ஸ்டொரோக் பற்றி ஒரு கையேடு தயாரிக்க நினைத்திருந்தேன். உங்களுடைய இந்த பதிவை பயன் படுத்திக்கொள்ளலாமா?

நானும் உடற்பயிற்சி, ஸ்டெரெஸ் போக்குவது குறித்து தொடராக எழுத இருக்கிறேன்.

காலில் உள்ள தசைகள் வலுவிழந்து போனாலும் இரத்த ஓட்டம் பாதிக்கப்படும்தானே. இங்கே restless leg syndrome என்று சொல்வது, அது பற்றி நீங்கள் எழுதிவிட்டீர்களா?
இன்றூதான் நேரம் இருந்து உங்கள் பதிவுகளை படித்து வருகிறேன். மனைவி உடல் நலம பரவாயில்லையா? கடவுள் எல்லா நலன்களைய்ம் அளிக்கட்டும்

 
At 5:03 PM, Blogger இலவசக்கொத்தனார் said...

//4. பிறர் சொல்வது புரியாமல் போதல் [அ] தன் கருத்தை சரியான முறையில் வெளிப்படுத்த முடியாமல் போதல்.
[இதை இங்கே ரொம்ப பேர் பண்றாங்களென்னு ஒரு பி.ஊ. போட கொத்தனார் கை பரபரப்பது எனக்குத் தெரிகிறது!:))]//

இல்லைங்க. அது சொல்ல மாட்டேன். அப்பப்போ சில பேர்தான் இந்த மாதிரி குழப்படியா எழுதறாங்க. மத்தபடி கவுஜ பதிவு எல்லாம் எனக்குத்தான் புரியறது இல்லை. ;)

ஆனா சில பதிவுகள் படிச்சு புரியறதுனாலதான் கஷ்டமே. படிச்சவங்க எல்லாம் இந்த மாதிரி எழுதறாங்களே, ஏன் இப்படி அப்படின்னு ஒரு கோபம் வருது பாருங்க. அந்த பதிவுகளைத்தான் சொல்லறேன். :)

 
At 5:05 PM, Blogger இலவசக்கொத்தனார் said...

செய்ய வேண்டிய விஷயங்களில் 1 மற்றும் 8 படித்தால் நீங்க செய்யும் விஷயம் என்ன, செய்யாத விஷயம் என்னன்னு தெரியுதே. சரிதானே?!! :))

 
At 5:11 PM, Blogger வடுவூர் குமார் said...

எனக்கு கையெல்லாம் பரபரக்கவில்லை.:-))
பொதுவான விஷயங்கள் தெரிந்திருந்தாலும் படம் போட்டு விளக்கியது மேலும் தெளிவடைய உதவியது.

 
At 5:13 PM, Blogger இலவசக்கொத்தனார் said...

1. புகையிலை, புகைபிடித்தல் இவற்றை அறவே விடணும்

விட்டாச்சு!

2. ரத்த அழுத்தம், நீரிழிவு இவற்ரை அளவோடு வைக்க வேண்டும்.

இது வரை குழப்பமில்லை!

3. முறையான மருத்துவப்பரிசோதனை ஒழுங்காக செய்து கொள்ளணும்.

அப்பப்போ செய்துக்கிறதுதானே.

4. கொழுப்புச்சத்தை கட்டுப்பட்டுத்தணும்.

முயற்சி செய்யறேன். ஆனா கஷ்டமா இருக்கே!!

5. உணவில் மிகவும் கட்டுப்பாடுடன் இருக்கணும். உப்ப்பைக் குறைத்து, கொழுப்புச்சத்து உள்ள பொருட்களை அளவோடு பயன்படுத்தி, கொலெஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தணும்.

4க்கு சொன்னதுதான்!

6. உடல் பருமனை வயது, உயரத்திற்குத் தக்க அளவில் வைக்கணும்.

4க்கு சொன்னதுதான்!

7. தினசரி உடற்பயிற்சி, மருத்துவரின் ஆலோசனையுடன் செய்ய வேண்டும்.

செய்யணமுன்னு ஆசைதான். ஆனா அப்பப்போ ப்ரேக் போட்டுடறேனே. :(

8. மது அருந்துவதை நிறுத்தினால் நல்லது. முடியாவிட்டால்[!!] மிகுந்த கட்டுப்பாட்டுடன் இருக்கவாவது கத்துகோங்க.

கத்துக்கறேன் தலைவா!

9. மருத்துவர் எழுதிக் கொடுத்த மருந்து மாத்திரைகளை தவறாமல் சாப்பிடணும்.

இது பண்ணலாம். கஷ்டமில்லை.


10. தடாலடியாக, உடலை வருத்தி அதிக வேலை செய்து ஆயாசப்பட வேண்டாம்.

இதை வந்து கொஞ்சம் தங்கமணிக்கிட்ட சொல்லிட்டு போங்க! ஹிஹி.

11. கோபத்தைக் குறையுங்கள்.

என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்க. நானும் பொறுமையா பதில் சொல்லிக்கிட்டு இருக்கேன், இதுதான் சாக்குன்னு மேல மேல சொல்லிக்கிட்டு இருக்கீங்களே. இது எல்லாம் உங்களுக்கே ரொம்ப டூ மச்சா தெரியலை? நானும் போகட்டும் போகட்டும் அப்படின்னு விட்டா முடிவில்லாம பேசிக்கிட்டே இருக்கீங்க. இதோட நிறுத்திக்கிட்டீங்கன்னா உங்களுக்கும் நல்லது, எனக்கும் நல்லது. ஆமா!

என்ன சொன்னீங்க? கோபமா? நமக்குக் கோபமே வராதே சார். :-D

 
At 5:46 PM, Blogger VSK said...

வாங்க பத்மா!

தாராளமா பயன்படுத்திக்கங்க!

நான்தான் எல்லாரையும் படிக்க வையுங்கன்னு சொல்லியிருக்கேனே!

இப்பதிவின் ஆரம்பத்திலேயே போன பதிவின் இணைப்பைக் கொடுத்திருந்தேனே.

அதில் நீங்க கேட்ட கேள்விக்கு விடை இருக்கலாம்!

 
At 5:47 PM, Blogger VSK said...

//சில பேர்தான் இந்த மாதிரி குழப்படியா எழுதறாங்க//

என்னைத்தானே சொல்றீங்க, கொத்ஸ்!
:))!

 
At 5:49 PM, Blogger VSK said...

கை பரபரக்காத வரையில் மகிழ்ச்சியே திரு. குமார்!

 
At 5:50 PM, Blogger VSK said...

//இதோட நிறுத்திக்கிட்டீங்கன்னா உங்களுக்கும் நல்லது, எனக்கும் நல்லது. ஆமா!

என்ன சொன்னீங்க? கோபமா? நமக்குக் கோபமே வராதே சார். :-D//

கொத்ஸ் டச் இருந்தாத்தான் நம்ம பதிவு ருசிக்குது!
:))

 
At 10:02 PM, Blogger SP.VR. SUBBIAH said...

அய்யா, நல்ல பதிவு!

என் சகோதரியின் கணவருக்கு
Cerebral Stroke/damage ஏற்பட்டு
6 ஆண்டுகள் சிகிச்சை அளித்தும்
(சென்னையில் மிகப் பெரிய மருத்துவர் - மைலையில் இருக்கிறார்) பலனின்றி
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அதில் கொடுமை என்னவென்றால். உடலின் ஒவ்வொரு பகுதியாக செயல்பாட்டினை நிறுத்த நிறுத்தக் கடைசியில் இறந்தார்.

நோய் என்றால் - அது எந்த நோயாக
இருந்தாலும் கொடுமைதான் அய்யா!

 
At 5:50 AM, Blogger VSK said...

எல்லா நோய்களும் ஒவ்வொரு விதத்தில் கொடுமையானவைதான்.

அதனால்தானே வள்ளலாரும், 'நோயற்ற வாழ்வு நான் வாழ வேண்டும்' எனும் கோரிக்கையை வைத்தார் !

நன்றி, ஆசானே!

 
At 10:54 AM, Blogger சேதுக்கரசி said...

ஸ்ட்ரோக் பற்றிய பதிவுக்கு மிக்க நன்றி. மாரடைப்பு பற்றிய பதிவு இனிமேல் தான் வரும் என்று நினைக்கிறேன்.. சரியா? அப்போ நிறைய கேள்விகள் இருக்கும் :-) (பிடிஎப் கோப்பு கேட்டு என் மின்னஞ்சல் கிடைத்ததா?)

 
At 1:26 PM, Blogger VSK said...

ஆமாங்க, சேதுக்கரசி! இது ஸெரிப்ரல் ஸ்ட்ரோக் பற்றிய பதிவே.

இன்னும் இதயத்துக்குள்ளே போகலை.

வெளியில் தான் சுத்திகிட்டு இருக்கோம்!:)

மின் கோப்பு அனுப்பிவைக்கிறேன்.

தாமதத்திற்கு மன்னிக்கவும்.

 
At 1:27 PM, Blogger VSK said...

மற்றவர்க்குப் பலனளிக்கும் நிகழ்ச்சி பற்றிய தகவலுக்கு மிக்க நன்றி.

பார்த்துவிட்டுச் சொல்லுகிறேன்.

 
At 4:33 PM, Blogger david santos said...

This is very good work. I taste of all the writing in INDIAN. I know som INDU, but I do not have keiboard to write.
Tank you.

 
At 6:37 PM, Blogger மங்கை said...

கோவையில் இந்த மாரடைப்பு நோய் அதிகம் என்று தோனுகிறது... அதுவும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திரடம்...
அதே சமுதாயத்தை சேர்ந்தவளாதலால் நீங்கள் கூறிய அனைத்து risk factorsம் இவர்களுக்கு இருப்பதென்னமோ உண்மை

SK சார்...
யார் இந்த David Santos... பரவாயில்லை.. Portugal ல இருந்து தமிழ் தெரியாதவங்க எல்லாம் நம்ம எழுதறத படிக்கிறத பார்த்தா ஒரே அளுவாச்சி அளுவாச்சியா வருது.. எனக்கும் இதே கமென்ட் வந்துச்சு...

 
At 6:37 PM, Blogger மங்கை said...

கோவையில் இந்த மாரடைப்பு நோய் அதிகம் என்று தோனுகிறது... அதுவும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திரடம்...
அதே சமுதாயத்தை சேர்ந்தவளாதலால் நீங்கள் கூறிய அனைத்து risk factorsம் இவர்களுக்கு இருப்பதென்னமோ உண்மை

SK ஐயா...
யார் இந்த David Santos... பரவாயில்லை.. Portugal ல இருந்து தமிழ் தெரியாதவங்க எல்லாம் நம்ம எழுதறத படிக்கிறத பார்த்தா ஒரே அளுவாச்சி அளுவாச்சியா வருது.. எனக்கும் இதே கமென்ட் வந்துச்சு...

 
At 6:55 PM, Blogger VSK said...

இது மாரடைப்பு பற்றிய பதிவு இல்லைங்க!

அடுத்தாப்பலதான் அது!

அதுவும் ஆரம்பிச்சாச்சு!

இந்த ஸாண்டோஸ் யாருன்னு தெரியாது!

சும்மா பதிவு முகப்புக்கு வர உதவியிருக்காரேன்னுதான் போட்டேன்!
:)
பதிலெல்லாம் சொல்லலை!

 

Post a Comment

<< Home