"கசடற"

அறிவியல் தொடர்பான எனக்குத் தெரிந்த தகவல்களை, ஒரு மருத்துவன் எனும் பார்வையில் சொல்ல விழைகிறேன். முழுக்க முழுக்க இவை என் கருத்துகள் மட்டுமே! முருகனருள் முன்னிற்கும்!

Thursday, February 22, 2007

"லப்-டப்" -- 13 "ஆ! நெஞ்சு வலிக்குதே!"[2]"நடந்தது என்ன?"


"லப்-டப்" -- 13 "ஆ! நெஞ்சு வலிக்குதே!"[2] "நடந்தது என்ன?"


இந்தத் தொடரை நான் ஆரம்பிப்பதற்கு, பொன்ஸின் இந்தப் பதிவுதான் தூண்டுகோலாய் இருந்தது!

அவர் சொன்னதைத் தொடர்ந்து ,சற்று விவரமாக இந்த 'ஹார்ட் அட்டாக்' பற்றி எழுதலாம் என ஆரம்பித்தது இன்று ஒரு டஜன் பதிவுகளைத் தாண்டி போய்க்கொண்டிருக்கிறது.

இதற்கு பொன்ஸுக்குதான் நன்றி சொல்ல வேண்டும்!
சென்ற பதிவில் ஒரு நிகழ்சியைப் பார்த்து, சில கேள்விகளையும் பார்த்தோம்!

சரி! இனி மேலே பார்க்கலாம்!

மையோகார்டியல் இன்ஃபார்க்ஷன் [Myocardial Infarction] என்றால் என்ன?
அப்படி என்றால் என்ன?
எப்படி நிகழ்கிறது?
எதனால் வருகிறது?
எப்படி இதைத் தவிர்க்க முடியும்?
இதன் அறிகுறிகள் என்னென்ன?
என்ன சிகிச்சை இதற்கு?
சிகிச்சைக்குப் பின் என்ன செய்ய வேண்டும்?

'மையோ' என்றால் சதை [muscle]; 'கார்டியல்' [cardial]என்றால் இதயத்தைக் குறிக்கும்; 'இன்ஃபார்க்ஷன்'[Infaction] என்பது ரத்த ஓட்டம் இல்லாமல் இறந்த திசு எனப் பொருள்.

எல்லா திசுக்களைப் போலவே, இதயமும் திசுக்களால் மட்டுமே ஆன ஒரு உறுப்பு.

அதற்கும் மற்ற உறுப்புகளைப் போலவே, தொடர்ந்த ரத்த ஓட்டம் மூலம் சத்துப் பொருள்களும், ஆக்ஸிஜனும் தேவை!

முன்பே சொல்லியிருப்பது போல், கரோனரி நாளங்கள்[Caronary arteries] மூலமே இது நிகழ்கிறது.

இதில் எதேனும் அடைப்பு[block], தடை[obstruction], குறுகல்[narrowing], இறுகல்[hardening], ரத்தக்கட்டி[bloodclot] எவையேனும் நிகழும் போது அதற்கு கரோனரி நாள நோய்[Caronary Artery Disease] எனப் பெயர்.
மேற்சொன்ன எல்லாமும் ரத்தஓட்டத்தை தடைப்படுத்தி, இதயத்திசுக்களின் சில பாகங்களை மரிக்கச் செய்கிறது.
இப்போது அந்தப் பகுதி, மற்ற திசுக்களோடு இழைந்து இயங்க முடியாமல் போகிறது.

ஒரு வலி மூலம் இது உணரப்படுகிறது.
இதற்கு ஆஞ்சைனா[angina]] எனப் பெயர்.

ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட கரோனரி நாளங்களில் இது போல 'அடைப்பு'[block] ஏற்படுகையில் 'ஹார்ட் அட்டாக்'[heart attack] [அ] மாரடைப்பு நிகழ்கிறது!

"எப்படி நிகழ்கிறது?"

கொழுப்புச்சத்து ரத்த நாளங்களின் உள்ளே அதிகமாகும் போது, நாளங்களின் உட்சுவற்றில் சிறிய காயம்[injury] ஏற்படுகிறது

இதை ஆற்றுவதற்கென நாளச்சுவர்கள்[vessel walls] ஒருவிதமான ரசாயனப் பொருட்களை[chemicals] சுரக்கின்றன

இதனால், சீரான ரத்த ஓட்டம் தடைப்பட்டு, சற்று தேக்கம்[slowing] ஏற்படுகிறது

இப்போது, ரத்தத்தில் மிதக்கும் புரதம், கால்சியம், மற்றும் இன்னும் சில கழிவுப் பொருட்கள் [போன பதிவுகளில் படிக்கவும் இவையெல்லாம் என்னென்னவென!] இந்த நாளச்சுவர்களில் ஒட்டிக் கொள்கின்றன

இவையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்ந்து, உருண்டு, திரண்டு [!!] ஒரு துகள்[Plaque] என ஆகிறது.

நாளாக, நாளாக, இந்த துகள்கள் பல்வேறு அளவுகளில் உருவாகி ரத்தநாளங்களுக்குள் சும்மா அலம்பலா இங்குமங்குமாய் ஓடிக்கொண்டிருக்கின்றன.
உள்ளே சாதுவாகவும்[soft], வெளியே திடமாகவும்[hard] இருக்கும் இந்தத் துகள்கள்[plaques] எப்போதாவது உடையும் போது, இந்த மென்பொருள்[soft fatty inside]] வெளியே வர, உடனே ப்ளேட்லெட்டுகள்[platelets] இதனை அடைக்க வர, ரத்தக்கட்டி[clot] உருவாகுகிறது!!

இப்படி உருவான ரத்தக்கட்டி, ஏதேனும் ஒரு சிறிய ரத்தக்குழாயில் சென்று அடைத்துக் கொள்ளும் போது, அந்தக் குழாயில், நாளத்தில், அடைப்பு ஏற்பட்டு, அடைப்புக்குக் கீழே [below the block]செல்லும் நாளத்தில், ரத்தம் செல்வது தடைப்படுகிறது.
பிரணவாயு கிடைக்காமல் வெகு விரைவில், இந்தப் பகுதி உணர்விழக்கிறது[starved].
இதற்கு 'உடனடி கரோனரி சிண்ட்ரோம்'[Acute Caronary Syndrome] எனப் பெயர்.

இது மூன்று வித விளைவுகளை நிகழ்த்தலாம்.

1.இது உடனடியாக ரத்த ஓட்டத்தின் வேகத்தின் மூலமாகவே அகற்றப் படுகையில், இது தானாகவே சரி செய்யப்பட்டு சகஜ நிலை மீண்டும் திரும்புகிறது.

இதற்கு அன்ஸ்டேபிள் ஆஞ்சைனா[Unstable Angina] எனப் பெயர்.
2.அகற்றப்படாமலும், உடையாமலும், அடைப்பு அங்கேயே [பெரிய அளவில்] நிற்கையில், மாரடைப்பு[Heart attack] என்பது நிகழ்கிறது.
3.இதன் மூலம் இந்த ரத்தக்குழாய் அடைப்பு தாங்காமல் உடைபட்டு, இதய நிறுத்தம் [Cardiac arrest] நிகழும்.


"எதனால் வருகிறது?
எப்படி இதைத் தவிர்க்க முடியும்?
இதன் அறிகுறிகள் என்னென்ன?
என்ன சிகிச்சை இதற்கு?
சிகிச்சைக்குப் பின் என்ன செய்ய வேண்டும்?"

அடுத்த பதிவில் பார்க்கலாம்!
[இந்தப் பதிவில் சொல்லியிருப்பது எல்லாம் உங்gaள் தகவலுக்காகவே!
உங்கள் மருத்துவரை ஆலோசிப்பதே நல்லது!]

Labels:

16 Comments:

At 3:00 PM, Blogger VSK said...

பதிவு தமிழ்மணத்தில் சேரவில்லை!
யாராவது உதவவும்!

ஆ! நெஞ்சு வலிக்குதே!

:))

 
At 3:15 PM, Blogger இலவசக்கொத்தனார் said...

கவலை வேண்டாம். தமிழ்மணத்தில் சேர்ந்துவிட்டது. வகைப்படுத்தாதவை என இருக்கிறது. அதனை மாற்ற முடியவில்லை.

இப்போ கேள்வி - இந்த பதிவுக்குப் பின்னும் மாரடைப்புக்கும் இருதய நிறுத்தத்த்திற்கும் உள்ள வேறுபாடு பிடிபடவில்லையே! :(

இருதயத்திற்குச் இரத்தம் கொண்டு செல்லும் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு அதனால் இருதயதிற்கு தேவையான பிராண வாயு கிடைக்காமல் பழுதடைந்தால் அது மாரடைப்பு. சரியாகப் புரிந்து கொண்டேனா?

if my understanding is correct, a heart attack could be varying in effect from weakening the heart to stopping it based on its severity. is this correct?

அப்போ இருதய நிறுத்தம் (இதை வேணா இருதய செயலிழப்பு அப்படின்னு வெச்சுக்கலாமா?) Is cardiac arrest always fatal?

 
At 3:37 PM, Blogger VSK said...

எல்லாம் ஒரே நிகழ்வுதாங்க!

அடைப்பு பெருசாகி நாளம் வெடிக்கும் போது இதய நிறுத்தம்.

அடைப்பே இதயத்தைச் செயலிழக்கச் செய்யுகையில் மாரடைப்பு.

இதில் எது வேண்டுமானாலும் முதலில் நிகழலாம்.

அடைப்பின் அளவைப் பொறுத்து!

இதய நிறுத்தம் என்பது கடைசி நிகழ்வு....அநேகமாக எப்போதும் மரணத்தில் முடிவடைவது.

 
At 4:19 PM, Blogger வடுவூர் குமார் said...

சே! என்ன நம்ம தலைவர் இந்த மாதிரி பண்ணிவிட்டார்.
கண்,கை,கால்... இன்னும் பிற போல் 2 இதயத்தை வைத்திருக்கலாம் அல்லவா?
படைப்பில் Bug?

 
At 4:37 PM, Blogger இலவசக்கொத்தனார் said...

அப்புறம் இந்த ஸ்லீப் அப்னியான்னு சொல்லறாங்களே, அதைப் பத்தியும் கொஞ்சம் சொல்லுங்களேன்.

 
At 6:05 PM, Blogger VSK said...

தலைவர் ஒண்ணு வெச்சதுக்கே இந்த ஆட்டம் போடறோம்.
ரெண்டு, மூணு ல்லாம் இருந்தா.....
:))
போதுங்க!
இருக்கறதே போதும், குமார்!

 
At 6:09 PM, Blogger VSK said...

அது ரெஸ்பிரேஷ்ஹன்/ந்யூரோ சம்பந்தப்பட்டதுங்க!

நீங்க நினைக்கற ஆப்னியா வேறன்னு நினைக்கிறேன், கொத்ஸ்.

இந்த கடைசில, சாகும் முன் ஒரு கேவல் இழுப்பு வருமே.. அதையா கேட்கிறீர்கள்?

 
At 6:26 PM, Blogger இலவசக்கொத்தனார் said...

இல்லைங்க. அப்படி வர கேவலுக்குப் பெயர் இருக்குன்னு கூட தெரியாது. இந்த குறட்டை விடறவங்களுக்கு ஸ்லீப் ஆப்னியா இருக்கான்னு பார்க்கணமுன்னு சொல்லி கேட்டு இருக்கேன். அது என்னான்னு தெரிஞ்சுக்கலாமேன்னுதான். இருதயம் பத்தி சொல்லி முடிச்ச பின்னாடி இதுக்கும் ஒரு பதிவு போட்டீங்கன்னா தெரிஞ்சுப்போமே.

 
At 6:36 PM, Blogger ஷைலஜா said...

//கொழுப்புச்சத்து ரத்த நாளங்களின் உள்ளே அதிகமாகும் போது, நாளங்களின் உட்சுவற்றில் சிறிய காயம்[injury] ஏற்படுகிறது


இதை ஆற்றுவதற்கென நாளச்சுவர்கள்[vessel walls] ஒருவிதமான ரசாயனப் பொருட்களை[chemicals] சுரக்கின்றன


இதனால், சீரான ரத்த ஓட்டம் தடைப்பட்டு, சற்று தேக்கம்[slowing] ஏற்படுகிறது //

அப்டீன்னா மிஸ்டர் கொழுப்புதான் எல்லாத்துக்கும்
காரணமா எஸ்கே? வம்சவழி காரணம் அப்டீன்னு ஏதும் உண்டா? அப்பாக்குவந்தா மகனுக்கு/மகளுக்கு என்று?
ஷைலஜா

 
At 6:41 PM, Blogger மங்கை said...

SK ஐயா

அண்ணாக்கு போன வருடம் ஹார்ட் அட்டாக் வந்துச்சு ( வயது 40, Newyork)

அப்ப சொன்னாங்க spasms இருக்கு அது தான் பிரச்சனைனு..போன பதிவுல சொல்லி இருந்தீங்கன்னு நினைக்குறேன்...புரியலை..

38 வயது வரை புகை பிடிக்கிற பழக்கம் இல்லை..2 வருடமா அதிகமா புகை பிடிக்க ஆரம்பிச்சுட்டார்.. எல்லா ரிஸ்க் factors ம் இருக்கு.. அப்பாவும் அம்மா வழி தாத்தாவும் ஹார்ட் அட்டாக்ல தான் இறந்து போனாங்க... அண்ணா குண்டு Bud Spencer maathiri தான் இருப்பார்.. :-)))..

(பி-கு திருமணம் ஆகவில்லை)
அய்யோ ஒரு ஸ்மைலி போட்டுறேன் ..அப்புறம் மங்கை அம்மாவ பாருங்கனு யாராவது ஆரம்பிச்சர போறாங்க :-))))

 
At 6:52 PM, Blogger VSK said...

இந்தக் கடைசிக் கேவலுக்குதான் ஆப்னியான்னு பேரு.

ஸ்லீப் ஆப்னியா பற்றி இதெல்ல்லாம் முடிந்தவுடன், ....முடிந்தால் சொல்லுகிறேன்!

 
At 7:05 PM, Blogger VSK said...

தொண்டைக்குழாய் தசையின் நரம்பு [Myenteric plexus of the esophagus] வலுவிழப்பதால் எற்பாடும் நிலைக்கு 'கார்டியோ ஸ்பாஸம்'[Cardio spasm] எனச் சொல்லுவார்கள்.

ஆனால், இதற்கும் இதயத்திற்கும் சம்பந்தமில்லை, மங்கை.

இருந்தாலும், கவனமா இருக்க ஆரம்பிச்சாலே பெருமளவில் இதைக் கட்டுப்படுத்தலாமே!

கொஞ்சம் சொல்லுங்க உங்க அண்ணாகிட்ட!

 
At 8:03 PM, Blogger VSK said...

அது போலவே கரோனரி நாளத்திலும், நரம்புத் துடிப்பால் இந்த ஸ்பாசம் நிகழும்.

இதற்கு கரோனரி ஸ்பாசம்[caronary spasm] எனப் பெயர்.

இது நிகழ்கையில், ஏற்கெனவே ஏதாவது க்ளாட்[clot] இருந்தால் அது நகர்ந்து வேறிடத்திற்குச் செல்ல வாய்ப்பு உண்டு.

இது ஒரு பெரிய நாளத்தில் கலந்து தப்பிச் செல்லவோ, அல்லது, வேறொரு சின்ன நாளத்தில் சென்று சிக்கிக் கொண்டுஅபாயம் விளைவிக்கவோ கூடும்.

 
At 10:20 AM, Blogger சேதுக்கரசி said...

இத்தனை நாள் மாரடைப்பும் இதய நிறுத்தமும் ஒண்ணு தான்னு நினைச்சிட்டிருந்தேன்.. நுணுக்கமான வித்தியாசத்தை இந்தப் பதிவு மூலமாவும் கொத்தனாரின் கேள்விக்கு உங்க பதில் மூலமாவும் தான் புரிஞ்சது. நன்றி.

ஸ்லீப் அப்னியா - சில குழந்தைகளுக்கு வரும்னு சொல்வாங்க, குறிப்பா premature குழந்தைகள், பிறந்து சில மாதங்களுக்கு... பாமர மொழியில சொல்லப்போனா மூச்சு விட மறக்கிறது மாதிரின்னு நினைக்கிறேன்..

 
At 10:24 AM, Blogger சேதுக்கரசி said...

http://www.pbs.org/wgbh/takeonestep
இந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் plaque பத்தி ரொம்ப நல்லா விவரிச்சிருந்தாங்க. அதைப் பார்த்து நிறைய விசயங்கள் மண்டையில் ஏறிச்சு :-)

அந்த வீடியோவை இங்கே பார்க்கலாம்:
http://www.pbs.org/wgbh/takeonestep/heart/video-ch_01.html

 
At 8:00 PM, Blogger VSK said...

இது தெரிஞ்சுக்கற வரைக்கும் விடாம கேள்வி கேட்ட கொத்ஸுக்குத்தான் நாமெல்லாம் நன்றி சொல்லணும், சேதுக்கரசி அவர்களே!

நீங்க அப்பப்ப இது மாதிரி கொடுக்கும் வீடியோ இணைப்புகள் மிகவும் உதவியாயிருக்கும், எல்லாருக்கும்!

மிக்க நன்றி!

உங்க கோப்பு நாளைக்கு வந்து வீடும்!

தாமதத்திற்கு மன்னிக்கவும்!

 

Post a Comment

<< Home