"கசடற"

அறிவியல் தொடர்பான எனக்குத் தெரிந்த தகவல்களை, ஒரு மருத்துவன் எனும் பார்வையில் சொல்ல விழைகிறேன். முழுக்க முழுக்க இவை என் கருத்துகள் மட்டுமே! முருகனருள் முன்னிற்கும்!

Sunday, March 11, 2007

"லப்-டப்" - 16 "ஆ! நெஞ்சு வலிக்குதே!"[ "நெஞ்சில் ஜில்ஜில்!"-5]

"லப்-டப்" - 16 "ஆ! நெஞ்சு வலிக்குதே!" [பகுதி-5]


"நெஞ்சில் ஜில்ஜில்!"
[தலைப்பு கொடுத்த ஷைலஜாவுக்கு நன்றி!]

கடந்த 4 பதிவுகளில் நெஞ்சுவலி பற்றி விளக்கமாகப் பார்த்தோம். இதயம் பற்றிய இத்தொடருக்குள் ஒரு மினி தொடராக இது அமைந்துவிட்டது! இன்றைய பதிவில் இதை முடித்து விடலாம்!


மையோகார்டியல் இன்ஃபார்க்ஷன் [Myocardial Infarction, MI] என்றால் என்ன?

அப்படி என்றால் என்ன?
எப்படி நிகழ்கிறது?
எதனால் வருகிறது?
இதன் அறிகுறிகள் என்னென்ன?
என்ன சிகிச்சை இதற்கு?

சிகிச்சைக்குப் பின் என்ன செய்ய வேண்டும்?
எப்படி இதைத் தவிர்க்க முடியும்?

மேலே இருக்கும் இரு கேள்விகளுக்கும் கிட்டத்தட்ட விடை ஒன்றுதான். எனவே தனிதனியாகச் சொல்லாமல் சேர்த்தே சொல்லுகிறேன்.

மூன்று முக்கியமான விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.


ஒரு தாக்குதல்[Heart Attack] நடந்த பிறகு,

1. இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
2. இது வருவதற்கான காரணங்களைத் தவிர்க்க முயல வேண்டும்.
3. மீண்டும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இதற்கு செய்ய வேண்டியன என்னென்ன?

மறுபடியும் 3!

1. மருந்து மாத்திரைகளைத் தவறாமல் ஒழுங்காக எடுத்துக் கொள்ள வேண்டும்.
2. வாழ்க்கை முறையை[Life Style] கொஞ்சம் மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்.
3. மருத்துவர் சொல்படி ஒழுங்காக செக்-அப் [Check-up] செய்து கொள்ள வேண்டும்.

ரத்தக்கட்டிகள்[Clots] அதிகம் உருவாகாமல் இருக்கவும், இதயத்தின் வேலைப்பளுவை சீராக வைக்கவும், கொழுப்புச் சத்தை அளவோடு வைத்திருக்கவும், இதயத் துடிப்பை சீராக வைக்கவும், அதிகப்படியான ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், நெஞ்சுவலியைக் குறைக்கவும் மாத்திரைகள் பயன்படும்.

பயப்பட வேண்டாம்! இவை எல்லாமுமே எல்லாருக்கும் தேவைப்படும் என்றில்லை! இதில் எது தேவையோ அவற்றை உங்கள் மருத்துவர் உங்களுக்கு எழுதிக் கொடுப்பார்.

எழுதிக்கொடுக்கும் மாத்திரைகளைப் பற்றிய குறைந்த பட்ச விவரங்களாவது உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

மாத்திரையின் பெயர், எதற்கு அது தேவை[Indications], எத்தனை அளவு[Dosage], எப்போது சாப்பிட வேண்டும்[Frequency], இதன் பக்கவிளைவுகள்[Side effects] என்னென்ன என்பதைப் பற்றி மருத்துவரிடம் தயங்காமல் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

இணையத்திலும் இது பற்றிய குறிப்புகள் கிடைக்கும். ஆனால், சில சமயம் இதில் தவறான தகவல்கள் வரவும் வாய்ப்பிருக்கிறது! எனவே மருத்துவரிடம் இது பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிக, மிக முக்கியம்!

வாழ்க்கை முறை மாற்றங்கள்![]

கரோனரி நாள நோய்க்கு[Caronary Artery Disease] தீர்வு கிடையாது!
வாழ்க்கை முறை மாற்றங்கள்[Life-style] மூலமே இதனைக் கட்டுப்படுத்த முடியும்!

நான் எப்போதும் என்னிடம் வருபவர்க்குச் சொல்லுவேன்!
"உங்களுக்காக, நீங்க எதை அனுப்பினாலும், என்ன செஞ்சாலும் மறுக்காம ஏத்துகிட்டு, எல்லாத்துக்கும் கூட நின்னிருக்கு உங்க உடம்பு! அது இப்போ கொஞ்சம் உங்களை மாத்திக்கிட்டு, நீங்க வாழறதுக்கு நான் உதவ எனக்கு உதவ முடியுமான்னு[:))] அது கேக்குது! நீங்கதான் முடிவு பண்ணனும்"

என்ன மாற்றங்கள் செய்யணும்!

புகை பிடிப்பதை அறவே நிறுத்தணும்.
இதுல காம்ப்ரொமைஸே கிடையாது.
ஒரு தாக்குதலுக்கு அப்புறம் நீங்க பிடிக்கற ஒவ்வொரு ஸிகரெட்டும், அடுத்த தாக்குதல்ல் நிகழ ஒரு ஆயுதம்! மறக்காதீங்க!

கொழுப்பைக் குறைக்கணும்!
குறைந்த அளவே கொழுப்புச் சத்து உள்ள உணவுமுறையைக் கைகொள்ள வேண்டும்.
இதிலும் பயன் இல்லையென்றால், மாத்திரைகளின் உதவியை நாட வேண்டும்.

ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தணும்.
உப்பைக் குறைத்து, முறையாக உடற்பயிற்சி[] செய்து, உணவில் அளவோடு இருந்து ரத்த அழுத்தத்தை குறிப்பிட்ட அளவிற்குள் வைத்துக் கொள்ளணும். இல்லையேல், மருந்து, மாத்திரைகளாலும் பயன் இருக்காது.

சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு இந்நோய் அதிக அளவில் பாதிக்கும் என்பதால், இவர்கள் கட்டுப்பாடோடு இருப்பது மிகவும் முக்கியம்.

முறையான உடற்பயிற்சிகள்[Exercise] மருத்துவரின் ஆலோசனையோடு செய்யப் பழகணும். இதன் மஹிமை அளவிட முடியாதது! சர்க்கரை நோய்[Diabetes], ரத்த அழுத்தம்[High blood pressure], எடை[Weight], மன அயர்வு[Stress] இவை எல்லாவற்றிற்கும் இதுவே கைகண்ட மருந்து!

உடல் எடையை [Body weight] சரியான அளவில் வைத்திருக்கணும்!
உயரத்திற்கும், வயதுக்கும் தகுந்த எடையை வைத்துக் கொள்வது அவசிய்யம்.

மன அயர்வையும்[Stress] கோபத்தையும்[Anger] தவிர்க்கணும்.
கோபப்படுவது, உணர்ச்சிவசப்படுவது அதிகமாய் வருத்தப்படுவ்வது இவையெல்லாம் இதயத்தை மேலும் பாதிக்கும் விஷயங்கள்.
இவற்றைக் கட்டுப்படுத்த தனி வகுப்புகள் இருக்கின்றன. அவற்றில் சேர்ந்து முறையாகப் பயிற்சி செய்தால் இவை குறையும் வாய்ப்பிருக்கிறது.
யோகா ஒரு நல்ல பயிற்சி இதற்கு!

இதய மறுமலர்ச்சி வகுப்பில்[Cardiac Rehabilitation] சேர்ந்து மருத்துவரின் உதவியுடன் முறையாக இதயத்தை வலுப்படுத்தும் முறையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

மருத்துவரை முறையாக அவர் சொல்லும் கால அளவில் பார்த்து சோதனைகள் செய்து கொள்ளுவது மிகவும் முக்கியமானது.
இதற்கு இடையில், உங்கள் உடல்நிலையில் ஏதேனும் மாற்றங்கள் தெரிந்தால், அல்லது உணர்ந்தால், உடனே மருத்துவ உதவியை நாடுவது மிகவும் முக்கியம்!


*** சரி, ஒருவருக்கு நெஞ்சுவலி [Angina] வந்தால் அவர் என்ன செய்ய வேண்டும்!? ***

நெஞ்சுவலியின் அறிகுறிகளான, வலி, அயர்வு, வியர்த்துக் கொட்டல், இதயப்பகுதியில் ஒரு அழுத்தம் ஏற்படுதல், கை, தோள்பட்டை, முதுகு போன்ற இடங்களில் வலி பரவுதல், போன்றவை தோன்றுமாயின்[இது ஒருவருக்கொருவர் மாறுபடும்]
செய்ய வேண்டியது என்ன?

* என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும், அப்படியே அதை விட்டுவிட்டு, உடனடியாக ஓய்வு எடுக்க வேண்டும். [Take complete rest]


* நைட்ரோக்ளிஸரின்[Nitroglycerin] மாத்திரை உங்களுக்கு எழுதிக் கொடுக்கப்பட்டு, கைவசம் இருந்தால் உடனே ஒரு மாத்திரையை எடுத்து, நாக்கின் அடியில் வைத்துக் கொள்ளவும்.


* அடுத்த ஐந்து நிமிடங்களில் வலி குறையாவிடில், இன்னொரு மாத்திரை எடுத்துக் கொள்ளவும்.

* இது போல 3 முறை செய்யலாம்.

* இப்படி செய்தும்,15 நிமிடங்களில் வலி குறையவில்லையெனில், உடனடியாக அவசர மருத்துவ உதவியை நாடவும்.

* ஆஸ்பிரின்[Aspirin] மாத்திரையும் ஏற்கெனவே எழுதிக் கொடுக்கப் பட்டிருந்தால் அதுவும் ஒன்று எடுத்துக் கொள்ளலாம். [ரத்தம் கட்டிதட்டிப் போவதை இது தவிர்க்கும்.

* மோஹன் செய்தது போல, உடனடியாக உங்கள் உதவிக்கு வரக்கூடியவரை உடனே அழைக்கவும். நானே போய்விடுவேன் என ஸ்கூட்டரை உதைக்க வேண்டாம்! அல்லது, காரை ஸ்டார்ட் செய்ய வேண்டாம்! இதுவே உங்களுக்கு எமனாக அமையக்கூடும்!

* நைட்ரோக்ளிஸரின் மாத்திரை நாள் கடந்ததா[Expiry date] எனக் கவனிக்கவும். ஒருமுறை மருந்து பாட்டில் திறக்கப் பட்டிருந்தால், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மருந்துச் சீட்டைப் புதுப்பித்து புது மாத்திரைகள் வாங்கிக் கொள்ளவும்!

அவ்வளவுதாங்க!
நிறையப் பேசியாச்சு!
ஐந்து பதிவுகளையும் மீண்டும் ஒருமுறை தொடர்ச்சியாக நேரம் கிடைக்கும் போது படித்து, நீங்கள் அனைவரும் வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல முருகப்பெருமான் உங்களுக்கு உறுதுணையாய் இருக்க வேண்டி,, இந்த மினி தொடரை நிறைவு செய்கிறேன்.

அடுத்து, 'இதயம்' பற்றி இன்னும் சில விஷயங்களைப் பார்க்கலாம்.
கூடவே இருந்து உதவிய மோஹன் - ராதா தம்பதியினர்க்கும், குமாருக்கும் எனது நன்றிகள்!


[இதில் கூறப்பட்டவை அனைத்தும் ஒரு தகவலுக்கு மட்டுமே!
உங்கள் மருத்துவர்தன் முறையான சிகிச்சை அளிக்க முடியும்!]

14 Comments:

At 8:48 PM, Blogger VSK said...

பதிவு தமிழ்மண முகப்பில் வர மறுக்கிறது!
எனவே இந்தக் கயமைப் பின்னூட்டம்!
மன்னிக்கவும்!
:))

 
At 9:16 PM, Blogger கோவி.கண்ணன் said...

முன்னெச்சரிக்கை, பின்னெச்சரிக்கை கவனமாக எடுத்துச் சொல்லி இருக்கிங்க

இந்த தொடரில் உற்ற துணைசெய்தவர்களுக்கும், துணையுற்றவர்களுக்கும்,
நன்றி மற்றும் பாராட்டுக்கள்.
:)

 
At 9:30 PM, Blogger VSK said...

இது இந்த மினி தொடருக்குத்தான் கோவியாரே!
லப்-டப் தொடரும்!
:))

 
At 10:24 PM, Blogger வடுவூர் குமார் said...

"அட்டாக்"- வருவதற்கு முன்பே பல எச்சரிக்கைகளை கொடுத்ததற்கு மிக்க நன்றி ஐயா.
ஞாபகத்தில் வைத்துக்கொள்கிறோம்.

 
At 8:11 AM, Blogger மங்கை said...

//மன அயர்வையும்[Stress] கோபத்தையும்[Anger]///

ஹ்ம்ம்...சரிங்கோவ்...நம்மள நாம தானுங் பாத்துக்கோனும்...

 
At 8:25 AM, Blogger VSK said...

தொடந்து படித்து கருத்து சொல்லிப் பாராட்டுதற்கு மிக்க நன்றி, திரு.குமார்!

 
At 8:28 AM, Blogger VSK said...

//ஹ்ம்ம்...சரிங்கோவ்...நம்மள நாம தானுங் பாத்துக்கோனும்... //


நம்மளை நாமே பார்த்துக்கறதுல்லாம், இது வர்றதுக்கு முன்னாடிதான் அம்மணி!

வந்திட்டா, நாமளே பார்த்துக்கலாம்னு கெளம்பிறக் கூடாது!
:))

ஆரையாச்சும் இட்டுகினுதான் போவோணும்!

சரிதானுங்களே அம்மணி!

 
At 10:48 AM, Blogger ஷைலஜா said...

என்ன எஸ்கே, ராமாயணத்துல அனுமார் சேவையாய் நீங்க மருத்துவகட்டுரைகளை ஆழ்ந்து அழகாய்
விளக்கமாய் எழுதறீங்க நான் ஏதோஅணில் மாதிரி சின்ன தலைப்பு கொடுத்ததுக்குப்போய் நன்றி
சொல்லணுமா?

 
At 12:24 PM, Blogger VSK said...

அப்படில்லாம் ஒண்ணும் இல்லீங்க!

ஒரே சோகமாவே தலைப்பு வைக்கும்படியா இருக்கேன்னு நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், அப்படியே 'ஜில்லுன்னு' ஒரு தலைப்பு உங்ககிட்டேர்ந்து வந்ததற்கு மீண்டும் நன்றி!

[இப்ப 2 வாட்டி சொல்ல வெச்சுட்டீங்க! :)]

 
At 12:24 PM, Blogger VSK said...

அப்படில்லாம் ஒண்ணும் இல்லீங்க!

ஒரே சோகமாவே தலைப்பு வைக்கும்படியா இருக்கேன்னு நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், அப்படியே 'ஜில்லுன்னு' ஒரு தலைப்பு உங்ககிட்டேர்ந்து வந்ததற்கு மீண்டும் நன்றி!

[இப்ப 2 வாட்டி சொல்ல வெச்சுட்டீங்க! :)]

 
At 2:06 PM, Blogger சேதுக்கரசி said...

ஆஸ்துமாவினாலும் மாரடைப்பு வர வாய்ப்புண்டா? நெருங்கிய உறவினர் ஒருவருக்கு 41 வயது தான் இருக்கும், ஆஸ்துமாவில் சிரமப்பட்டுக்கொண்டு இருக்கும்போது மிகவும் திடீரென்று மருத்துவமனை சென்றடையுமுன் இறந்துவிட்டார். மாரடைப்பு என்றறியப்பட்டது. அதற்கு முன் இருதய நோய்க்கான அறிகுறிகள் இருந்ததில்லை.

கொழுப்பைக் குறைக்க: சமீபத்தில் தெரிந்துகொண்டது: soya products மற்றும் flaxseed உதவுமாம். அதிலும் Flaxseed (கூகுளில் தேடினால் கொண்டுவந்து கொட்டுகிறது) கெட்ட கொழுப்பை (LDL) குறைக்க மிகவும் சிறந்த ஒன்றாம்.

 
At 4:38 AM, Blogger பொன்ஸ்~~Poorna said...

மெகா தொடருக்குள் மினி தொடர்.. :))

இப்படியே ராதா மோகன் மாதிரி புது புது காரக்டர்களோடவே வாங்களேன் எஸ்கே?!.. எங்களை மாதிரி பாட்டி கதை கேட்டு வளர்ந்தவங்களுக்கு இன்னும் சுலபமா இருக்குமே! ;)

 
At 5:22 AM, Blogger VSK said...

தேவையான இடங்களில் அப்படி புது காரக்டர்களுடன் வர முயற்சிக்கிறேன், பொன்ஸ்!

நன்றி!

 
At 5:33 AM, Blogger VSK said...

அப்புறம், இன்னொரு விஷயம்!
அந்த மினி தொடருக்கு காரணமே நீங்கள்தான், பொன்ஸ்!
:))

 

Post a Comment

<< Home