"லப் - டப்" -- 7 "வாழ்வே மாயம்!"
"லப் - டப்" -- 7 "வாழ்வே மாயம்!"
இதயத்தைப் பற்றி எழுத ஆரம்பித்து, இத்தொடர் சற்று விரிவடைந்து கொண்டே போகிறது!
ரத்தம், ரத்தக்குழாய்கள், பின் இதயம் இவற்றைத் தாக்கும் நோய்களைப் பற்றி பொதுவாக நாம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களைச் சொல்லலாம்.....சுருக்கமாக....என எண்ணுகிறேன்.
இது பற்றிய உங்கள் கருத்தையும் எதிர்பார்க்கிறேன்.
ரத்தத்தில் இருக்கும் செல்களின் குறைபாட்டால் ஏற்படும் அனீமியாவைப் பற்றி சென்ற பதிவில் பார்த்தோம்.
அதில் ஒன்றாக ரத்தப் புற்றுநோயைப் பற்றியும் சொல்லியிருந்தேன்.
எனவே, இந்த 'ப்ளட் கேன்சர்'[Blood Cancer] என்றால் என்ன என்பதைப் பற்றி இன்று பார்ப்போம்.
அதற்கு முன் ஒரு வார்த்தை!
இதில் சொல்லப்படும் தகவல்கள், நீங்கள் இது பற்றித் தெரிந்துகொள்ள ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த மட்டுமே!
இது பற்றி முழுதும் அறிய உங்கள் மருத்துவரை நாடுவதே ஒரே வழி!
வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை, எலும்பு மஜ்ஜையில் இருந்து இதனை உற்பத்தி செய்யும் மூலச்செல்களாகிய ல்யூகோசைட்ஸ் [Leukocytes] என்பவற்றாலும், நிண நோடுகளாலும் [Lymph Nodes] நிர்ணயிக்கப் படுகிறது.
இந்த செல்கள்தாம், க்ரானுலோசைட்டுகள் [Granulocytes] எனப்படும் வெள்ளை அணுக்களையும், லிம்ஃபோசைட்டுகளையும் [Lymphocytes] உற்பத்தி செய்கின்றன.
முதலில் இளம் செல்களாக இருந்து, படிப்படியாக வளர்ந்து, நியூட்ரோஃபில், இயோஸினோஃபில், பேஸோஃபில், மோனோசைட் [Neutrophil, Eosinophil, Basophil, Monocyte]என்ற வெள்ளை அணுக்களாகவும், லிம்ஃபோசைட் [Lymphocyte]எனும் செல்லாகவும் இவை மாறுகின்றன.
இந்த வளர்ச்சியின் ஆரம்பத்திலோ, இடையிலோ நிகழும் சில குறைபாடு மாற்றங்களால், இந்த செல்கள், முழு வளர்ச்சி அடைய முடியாமல் போகின்றன.
இதில் என்ன ஒரு ஆபத்து என்றால், இந்த அரைகுறை செல்கள் பல மடங்கில் தம்மைத் தாமே பெருக்கிக் கொள்ளும் வல்லமை படைத்தவையாக ஆகின்றன!
உடலின் பல பாகங்களுக்கும் இவை செல்லுகையில், இவை செய்ய வேண்டிய வேலையைச் செய்ய முடியாமல், அந்தந்த பாகங்களின் செயல்திறனையும்[Efficiency and functions] பாதிக்கின்றன.
இந்த பாதிப்பு, உடலின் எதிர்ப்பு சக்தியை வெகுவாகக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், தாமே சில எதிர் விளைவுகளையும் உடலில் நிகழ்த்தி, மேலும் உடலை வலு குன்ற வைக்கிறது.
இந்த செல்களின் அளவை உடனடியாகக் கட்டுப்படுத்த முயற்சிகள் செய்யாவிட்டால்,
அது 'நேரடி'[Acute] புற்றுநோயாக உடலைத் தாக்குகிறது.
சிகிச்சையின் மூலமாக இவற்றை உடனடியாகக் கட்டுப்படுத்த இயலும் என்பதால், உடனே, 'நோய் நாடி,[Signs and symptoms] நோய் முதல் நாடி,[diagnose] அது தணிக்கும் வாய் நாடி,[Treatment] வாய்ப்பச் செய்வது [efficiently]' மிகவும் அவசியம் என்று......நான் மட்டும் இல்லை... வள்ளுவரும் சொல்லுகிறார்!
சிகிச்சை அளித்த பின்னரும் ஒரு சில முழுவளர்ச்சி அடைந்த செல்கள், இந்நோயின் உட்கருவைத் தனக்குள் தாங்கி இருந்து வந்து, மீண்டும் எப்போதாவது, உடல்நிலை வேறேதும் காரணங்களால் பாதிக்கப்படும் காலங்களில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் நிலை வரலாம். அதற்கு 'நாள்பட்ட[அ] நீடித்த'[Chronic] புற்றுநோய் எனப் பெயர்.
இதன் விளைவுகளும்,சிகிச்சையும் 'நேரடி'[Acute] புற்றுநோய்க்கு செய்வது போலவே தான்!
மேலே சொன்னது, ரத்தப் புற்றுநோய்களைப் பற்றிய ஒரு பொதுவான விளக்கம்!
இப்போது இதன் வகைகளைச் சுருக்கமாகப் பார்ப்போம்.
"லுகீமியா"[Leukemia]
1. 'நேரடி லிம்ஃபோப்ளாஸ்டிக் லுகீமியா' [Acute Lymphoblastic Leukemia, ALL]:
லிம்ஃபோசைட்டுகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிப்பதால் ஏற்படும் புற்றுநோய். அநேகமாக சிறுவயதினரையே தாக்கும் நோய்.
2. 'நேரடி மைலோப்ளாஸ்டிக் லுகீமியா' [Acute Myeloblastic Leukemia, AML]:
க்ரானுலோஸைட்டுகளின்,குறிப்பாக நியூட்ரோஃபில், அதிகரிப்பால் வருவது. இது எல்லா வயதினரையும் தாக்கும். என்றாலும், பெரும்பாலும், 20 வயதுக்கு மேற்பட்டவரிடமே காணப்படுவது.
3.'நேரடி மோனோப்ளாஸ்டிக் லுகீமியா' [Acute Monoblastic Leukemia, AMOL ]:
வெள்ளை அணுக்களில் இருக்கும் மோனோப்ளாஸ்டுகளின் எண்ணிக்கை கூடதலால் ஏற்படுவது.
4. 'நேரடி மைலோ-மோனோப்ளாஸ்டிக் லுகீமியா' [Acute Maelomonoblastic Leukemia, AMMOL ]:
நான்கு வகையான வெள்ளை அணுக்களையும் தாக்கும் அரிதான [Rare] நோய்.
ஒரு எளிய ரத்தப் பரிசோதனையின் மூலம், இந்த 4 வகைப் புற்றுநோய்களையும் உடனே அறியமுடியும்.
பொதுவாக செல்களின் எண்ணிக்கை அதிகரித்தே இருக்கும் என்றாலும், சில சமயங்களில், பொதுவான அளவை விட மிகவும் குறைந்தும் இது இருக்கக்கூடும்.
அனீமியாவுக்குச் சொன்ன அத்தனை அறிகுறிகளும்[Signs and symptoms] இதிலும் இருக்கும். பொதுவாக, ஒரு திடீர் காய்ச்சல் மூலம் இது உடலில் வெளிப்படும். அப்போது செய்யப்படும் ரத்தப் பரிசோதனை இதனைக் காட்டிவிடும்! சிகிச்சையும் உடனே தொடங்கி விடலாம்!
சிகிச்சை அளிக்கப்படாத நிலையில், இந்நோய் 4 முதல் 6 மாதங்களுக்குள் இது உயிரைப் பறித்து விடும். சில சமயங்களில், ஒரு சில நாட்களிலேயே!
எனவே, ஏதோ சாதாரண ஜுரம்தான் என அலட்சியமாய் இருந்து விட வேண்டாம். முன்பே சொன்னது போல, கடையில் போய் சில ஜுர மாத்திரைகள் வாங்கி, காலத்தை வீணாக்கவும் வேண்டாம்!!
கீமோதெரபி [Chemotherapy] எனப்படும் புற்றுநோய் சிகிச்சை மருந்துகள் மூலம், இந்நோயைப் பெருமளவில் கட்டுப்படுத்த முடியும்.
இந்த சிகிச்சை முறையில் தேர்ந்த ஒரு மருத்துவரிடம், உங்கள் மருத்துவரே அனுப்பி வைப்பார்.
இதற்கான சிகிச்சை கிட்டத்தட்ட ஒரு 3 ஆண்டுகாலம் நீடிக்கும் என்பதால், இதில் தேர்ந்த ஒரு மருத்துவரிடம் செல்வதே நல்லது!
முழு சிகிச்சையும் முடிந்த பின்னரும், 15 முதல் 20 விழுக்காடு வரை இந்நோய் திரும்பவும் வரக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு.
இதுவே 'நீடித்த லுகீமியா'[Chronic Leukemia] என அழைக்கப்படும்.
இதைப் பற்றி பார்க்கலாம்!
1.'நீடித்த மைலாய்ட் லுகீமியா [Chronic Myeloid Leukemia, CML], 'நீடித்த மைலோஸைடிக் லுகீமியா [Chronic Myelocytic Leukemia, CML], [அ] 'நீடித்த மைலோஜினஸ் லுகீமியா [Chronic Myelogenous Leukemia, CGL]' என அழைக்கப்படும் "நீடித்த க்ரானுலோஸைடிக் லுகீமியா"[Chronic Granulocytic Leukemia [CGL]:
வெள்ளை அணுக்களின் பல்வேறு செல்களின் பல்வேறு வளர்ச்சி நிலைகள் மெடமைலோஸைட், மைலோஸைட், ப்ரீமைலோசைட், மைலோப்ளாஸ்ட்[metamyelocyte, myelocyte, premyelocyte, myeloblast] எனப்படும். இவை அனைத்து நிலைகளும், சாதாரணமாக எலும்பு மஜ்ஜைக்குள் மட்டுமே காணப்படும்.
இந்தவகையான 'நீடித்த' நோயில் இவை அனைத்தும், ரத்தம் மூலம் உடலின் எல்லாப் பாகங்களிலும் சென்று செயல்திறனைக் குறைக்கிறது.
இதையும் தாங்கிக் கொண்டும், இப்பாகங்கள் தம் வேலையை கொஞ்சநஞ்சம் இருக்கும் முழு வளர்ச்சி அடைந்த செல்களின் மூலம் நிகழ்த்தி வரும்.
ஏதாவது வேறு சில நோய்களால், உடல்நலம் பாதிக்கப்படும் போது, இவற்றின் சுயரூபம் தெரிய வந்து, இதுவே 'நேரடி' நோய் போல உடலைப் பாதிக்கும்.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நெடுநாட்கள், மருந்துகளின் மூலம், இந்நோயின் அளவைக் கட்டுப்படுத்தவென, சிகிச்சையைத் தொடர்ந்து செய்து கொண்டிருப்பது அவசியமாகிப் போகிறது.
'நேரடி' நோய் போலல்லாமல், இது பெரும் விளைவுகளை பொதுவாக நிகழ்த்தாது எனினும், உடல் சோர்வு, எதிர்ப்புத் திறன் குறைவு போன்றவைகள் இவர்களுக்குத் தொடர்ந்து இருந்து வரும். எனவே, இவர்கள் தங்கள் உடல்நலத்தை சரியான முறையில் பேணி வருதல் மிகவும் முக்கியம்.
தொடர்ந்து எதிர்ப்புத் திறன் உடலில் குறைந்து இருப்பதால், 3-4 ஆண்டுகளுக்குள் மரணம் நிகழலாம். சிகிச்சையின் மூலம் இதை சில வருடங்கள் மட்டுமே நீட்ட முடியும்.
ஒரு மருத்துவரின் தொடர்ந்த கண்காணிப்பில் இருந்து வருவதும் தவிர்க்க முடியாத ஒன்று!
2. 'நீடித்த லிம்ஃபோஸைடிக் [அ] நீடித்த லிம்ஃபாடிக் லுகிமியா" [Chronic Lymphocytic or Chronic lymphatic Leukemia, CLL]
'ப்ளேட்லெட்டுகள்' [Platelets] என அழைக்கப்படும் லிம்ஃபோசைட்டுகளின் எண்ணிக்கை இதில் கூடியும், குறைந்தும் பல விளைவுகளை நம் உடலில் செய்து, உடலின் எதிர்ப்பு சக்தியை வெகுவாகக் குறைத்து, பாதிக்கிறது. நோயின் அறிகுறிகள் மெதுவாகவே தோன்றும்..... மெதுவாகவே உடலையும் பாதிக்கும்.
லிம்ஃபோமா[Lymphoma]:
நிண நாளங்களை[Lumphatic system] மட்டும் தனியாக தாக்கும் இவ்வகை நோய் 15 முதல் 35 வயது வரையிலான மக்களைப் பாதிக்கும்.
'நிண நோடுகள்'[Lymph nOdes] இதில் வீங்கிக் காணப்படும். சாதாரண நெறி கட்டலுக்கும் இதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. இதை ஒரு மருத்துவரே முறையாகக் கண்டுபிடிக்க முடியும் என்பதால், 'ஏதோ பல் வலி என்பதால் நெறி கட்டியிருக்கிறது கழுத்தில், காலில் அடி என்பதால் தொடையில் நெறி' என அலட்சியமாக ஒதுக்க வேண்டாம்.
இது ஒரு மெதுவாகக் கொல்லும் நோய்....காதலைப் போல! :)
இதில் ஹாட்ஜ்கின்'ஸ்,[Hodgkin's] நான்ஹாட்ஜ்கின்'ஸ் [Non-Hodgkin's], பர்கிட்'ஸ்[Burkitt's] என மூன்று வகைகள் உண்டு. இவை ரத்தப் பரிசோதனைகளின் மூலம் முடிவு செய்யப்படும்.
மல்டிபிள் மைலோமா [Multiple Myeloma]:
'ப்ளாஸ்மா செல்கள்'[Plasma cells] எனப்படும் ஒருவகை செல்கள் எலும்பு மஜ்ஜையில் இருந்து நம் உடலுக்கு பாதுகாப்பை அளிக்கும் வேலையைச் செய்கிறது.
இந்த 'ப்ளாஸ்மா செல்லே' குறைபட்டுப் போகும் போது அதனால் ஏற்படும் நோய்க்கு இப்பெயர்.
இம்யூனோக்ளோபுலின்[Immunoglobulin, Ig ] எனப்படும் இப்பாதுகாப்பு உடலில் குறையும் போது, எதிர்ப்பு சக்தி வெகுவாகக் குறையும்.
இது ஒரு மிகக் கடுமையான நோய். சிகிச்சையின் தீவிரமும் மிகக் கடுமையாக இருக்கும்.
ஆனால், ஓரளவு கட்டுப்படுத்தக் கூடிய நோயே.... விரைவிலேயே கண்டுபிடிக்கப் பட்டு, சிகிச்சையும் தொடங்கப் படுமானால்!
3-5 ஆண்டுகள் தள்ளிப் போட முடியும்!
பொங்கல் நாளும் அதுவுமாய் பயமுறுத்தியது போதும்!
அனைவருக்கும் என் இனிய "நலங்கனிந்த" பொங்கல் நல்வாழ்த்துகள்!
[சரி! தலைப்புக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா? அட அது நம்ம கமல் படத்தோட பேருங்க! அதுல அவருக்கு 'ப்ளட் கேன்ஸர்! :)]
**இதில் சொல்லப்படும் தகவல்கள், நீங்கள் இது பற்றித் தெரிந்துகொள்ள ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த மட்டுமே!
இது பற்றி முழுதும் அறிய உங்கள் மருத்துவரை நாடுவதே ஒரே வழி!**
[Above is for information purposes only! Please consult your doctor for further details!!]
11 Comments:
என்னங்க வைசா!
இப்படி சொல்லிட்டீங்க!
நான் சொன்னது கண்ட கண்ட மாத்திரையை வாங்கிச் சாப்பிட்டு, ஜுரம்தானே என அலட்சியப் படுத்தாதீர்கள் என்றுதான்!
ரத்தப் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்றல்ல!
அதை உங்கள் மருத்துவர் முடிவு செய்வார்!
//அதற்கு முன் ஒரு வார்த்தை!
இதில் சொல்லப்படும் தகவல்கள், நீங்கள் இது பற்றித் தெரிந்துகொள்ள ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த மட்டுமே!
இது பற்றி முழுதும் அறிய உங்கள் மருத்துவரை நாடுவதே ஒரே வழி!
//
எஸ்கே ஐயா,
நேயாளியும் பிழைக்கனும்... அவரை வைத்து மருத்துவரும் பிழைக்கனும் என்று நயமுடன் சொல்வதற்கு உங்களைவிட்டால் யார் சொல்ல முடியும் ?
கட்டுரையை முழுதும் படிக்கவில்லை, இன்னொருமுறை வரும் என் பின்னூட்டம் !
:)
கவியரசர் கண்ணதாசன் சொல்வார்:
"இறைவன் இரண்டு இடங்களில் சிரிப்பாராம். ஒன்று ஒரு சாதனையாளன் இந்த சாதனையை நான் செய்தேன் என்று சொல்லும்போது. இரண்டாவது ஒரு மருத்துவர், கவலை வேண்டாம் இந்த உயிரை நான் காப்பாற்றிவிடுகிறேன் என்று சொல்லும்போது"
இறைவன் அருள் இன்றி யாரும் எந்தச் சாதனையையும் செய்யமுடியாது. அதுபோல ஒரு மருத்துவர் கடுமையான சிறந்த சிகிச்சையை வேண்டுமென்றால்
கொடுக்க முடியுமே தவிர உயிரைக் காப்பாற்றுவது அவர் கையில் இல்லை!
அதைத்தான் வாழ்வே மாயம்.அதாவது அந்த மாயவனாம் இறைவன் கையில் உள்ளது!
ஒரு மருத்துவராகிய நீங்கள் அந்தத் தலைப்பில் ஒரு பதிவை இட்டது உங்கள் பெரிய மனதையும், அதன் பெருந்தன்மையையும் காட்டுகிறது அய்யா!
நன்றி!
படிக்கவே பயங்கரமாகவும் பயமாகவும் இருக்கே. இது போன்ற நோய்கள் வராமல் தடுக்க வழியே இல்லையா?
எதாவது ஒரு குறிப்பிட்ட குழுவினரை இது தாக்கக் கூடிய வாய்ப்புக்கள் அதிகமா? (Is there are group of people who are more susceptible than others?)
குடும்பத்தில் யாருக்கேனும் இந்நோய் வந்திருந்தால் மற்றவருக்கும் வர வாய்ப்புக்கள் இருக்கிறதா? (தொற்று நோய் இல்லை என நினைக்கிறேன். நான் கேட்டது, இது பரம்பரை நோயா?)
வாசிக்கேக்கை பயமும் கூடவே வருகுதையா.
நல்ல தகவல்களுக்கு நன்றி
நோயாளி பிழைக்கணும் என்பதே முக்கியம்!
மற்றதை முன்னதே கவனித்துக் கொள்ளும்!
நன்றி, கோவியாரே!
மறுபடியும் வரவில்லையே இன்னும்!
:)
தலைப்பின் தத்துவத்தை விளக்கி, பாராட்டிய ஆசானுக்கு நன்றி!
கோவியார் இதைப் படிப்பாரா?
:))
அவர் கேள்விக்கும் இதில் விடை இருக்கிறது!
துரதிர்ஷ்டவசமாக, இவை வராமல் தடுக்க வழிகள் இல்லையென்றே சொல்லவேண்டும், கொத்ஸ்!
பொதுவாக எதிர்ப்பு சக்தியை குறைய வைக்கும் எந்த ஒரு நோயும், இவ்வழியில் சென்று, புற்றுநோயாக ரத்தத்தைப் பாதிக்கும் அபாயம் இருக்கிறது.
இது பரம்பரை நோயும் அல்ல; தொற்றுநோயும் அல்ல.
ஆனால், இது வரக் காரணமாக இருந்த 'ஆதி நோய்'[எதனால் ரத்தம் தன் எதிர்ப்பு சக்தியை இழந்ததோ, அது!] ஒரு குடும்பத்தில் இருக்கும் மற்றவர்க்கும் வர வாய்ப்புகள் இருக்கிறது.
அதன் மூலம், மற்றவரும் பாதிக்கப் படலாம்!
பயப்படத் தேவையில்லை, 'செல்லி'!
அதற்குத்தான், வள்ளுவரை துணைக்கழைத்துச் சொல்லியிருக்கிறேன்...."நோய் நாடி.".... என!
எஸ்கே,
பயனுள்ள தொடர். இப்போதுதான் கவனித்தேன். நீங்கள் ஒரு மருத்துவர் என்பதையும் சமீபமாக எதோ ஒரு பின்னூட்டம் மூலம்தான் அறிந்தேன். மருத்துவம் சம்பந்தமான, நோய் விழிப்புணர்வு, குழந்தைகளுக்கான நோய்சாத்தியக்கூறுகள், அவற்றைத் தவிர்க்கக் கடைப்பிடிக்கவேண்டிய வழிமுறைகள் பற்றி நிறைய எழுத ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். இங்கே குளிர்காலத்தில் தாக்கும் Flu காய்ச்சல், அதற்கான தடுப்பு மருந்துகளைக் குழந்தைகளுக்கு மட்டுமின்றிப் பெரியவர்களும் போட்டுக்கொள்வது அவசியமானதா என்றெல்லாம் எழுதினால் என்போன்றவர்களுக்குப் பயனுள்ளதாக அமையும். இங்கே புதிதாகக் குழந்தைகளுடன் வந்துசேரும் நம் இந்திய அம்மாக்களுக்கு நிறையக் குழப்பங்கள் வருகின்றன இதுபற்றியெல்லாம். என்னிடம் கேட்கும் சிலருக்கு உங்களிடம் எழுதக்கேட்டு அதை அச்சுநகல் எடுத்து வினியோகித்துவிடும் யோசனையில் இருக்கிறேன்:)) சாதரண சளி பற்றியே என் சந்தேகங்கள் பல உண்டு. நேரமிருக்கும்போது தீர்த்து வைப்பீர்களா? நன்றி.
நீங்கா சொல்லியிருக்கும் தலைப்புகள் மெய்யாலுமே பயனுள்ள தலைப்புகள்தான், செல்வநாயகி.
இந்த "லப்-டப்" தொடர் முடிந்ததும், அது பற்றி எழுதலாமா?
இதற்கிடையே, ஏதேனும் உங்களுக்குக் கேள்விகள் வருமாயின், தவறாது அனுப்பி வையுங்கள்.
தனிப்பதிவு போட்டு அதனைச் சொல்ல முயல்கிறேன்!
நன்றி.
Post a Comment
<< Home