"கசடற"

அறிவியல் தொடர்பான எனக்குத் தெரிந்த தகவல்களை, ஒரு மருத்துவன் எனும் பார்வையில் சொல்ல விழைகிறேன். முழுக்க முழுக்க இவை என் கருத்துகள் மட்டுமே! முருகனருள் முன்னிற்கும்!

Sunday, March 11, 2007

"லப்-டப்" - 16 "ஆ! நெஞ்சு வலிக்குதே!" [ "நெஞ்சில் ஜில்ஜில்!"-5]

"லப்-டப்" - 16 "ஆ! நெஞ்சு

வலிக்குதே!" [பகுதி-5]

"நெஞ்சில் ஜில்ஜில்!"

[தலைப்பு கொடுத்த ஷைலஜாவுக்கு நன்றி!]

கடந்த 4 பதிவுகளில் நெஞ்சுவலி பற்றி விளக்கமாகப் பார்த்தோம்.
இதயம் பற்றிய இத்தொடருக்குள் ஒரு மினி தொடராக இது அமைந்துவிட்டது!
இன்றைய பதிவில் இதை முடித்து விடலாம்!

மையோகார்டியல் இன்ஃபார்க்ஷன் [Myocardial Infarction, MI] என்றால் என்ன?
அப்படி என்றால் என்ன?
எப்படி நிகழ்கிறது?
எதனால் வருகிறது?
இதன் அறிகுறிகள் என்னென்ன?
என்ன சிகிச்சை இதற்கு?

சிகிச்சைக்குப் பின் என்ன செய்ய வேண்டும்?
எப்படி இதைத் தவிர்க்க முடியும்?

மேலே இருக்கும் இரு கேள்விகளுக்கும் கிட்டத்தட்ட விடை ஒன்றுதான். எனவே தனிதனியாகச் சொல்லாமல் சேர்த்தே சொல்லுகிறேன்.

மூன்று முக்கியமான விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.

ஒரு தாக்குதல்[Heart Attack] நடந்த பிறகு,

1. இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
2. இது வருவதற்கான காரணங்களைத் தவிர்க்க முயல வேண்டும்.
3. மீண்டும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இதற்கு செய்ய வேண்டியன என்னென்ன?

மறுபடியும் 3!

1. மருந்து மாத்திரைகளைத் தவறாமல் ஒழுங்காக எடுத்துக் கொள்ள வேண்டும்.
2. வாழ்க்கை முறையை[Life Style] கொஞ்சம் மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்.
3. மருத்துவர் சொல்படி ஒழுங்காக செக்-அப் [Check-up] செய்து கொள்ள வேண்டும்.ரத்தக்கட்டிகள்[Clots] அதிகம் உருவாகாமல் இருக்கவும், இதயத்தின் வேலைப்பளுவை சீராக வைக்கவும், கொழுப்புச் சத்தை அளவோடு வைத்திருக்கவும், இதயத் துடிப்பை சீராக வைக்கவும், அதிகப்படியான ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், நெஞ்சுவலியைக் குறைக்கவும் மாத்திரைகள் பயன்படும்.

பயப்பட வேண்டாம்!
இவை எல்லாமுமே எல்லாருக்கும் தேவைப்படும் என்றில்லை!
இதில் எது தேவையோ அவற்றை உங்கள் மருத்துவர் உங்களுக்கு எழுதிக் கொடுப்பார்.

எழுதிக்கொடுக்கும் மாத்திரைகளைப் பற்றிய குறைந்த பட்ச விவரங்களாவது உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

மாத்திரையின் பெயர், எதற்கு அது தேவை[Indications], எத்தனை அளவு[Dosage], எப்போது சாப்பிட வேண்டும்[Frequency], இதன் பக்கவிளைவுகள்[Side effects] என்னென்ன என்பதைப் பற்றிமருத்துவரிடம் தயங்காமல் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

இணையத்திலும் இது பற்றிய குறிப்புகள் கிடைக்கும்.

ஆனால், சில சமயம் இதில் தவறான தகவல்கள் வரவும் வாய்ப்பிருக்கிறது!

எனவே மருத்துவரிடம் இது பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிக, மிக முக்கியம்!

வாழ்க்கை முறை மாற்றங்கள்![Life style changes]

கரோனரி நாள நோய்க்கு[Caronary Artery Disease] தீர்வு கிடையாது!

வாழ்க்கை முறை மாற்றங்கள்[Life-style] மூலமே இதனைக் கட்டுப்படுத்த முடியும்!

நான் எப்போதும் என்னிடம் வருபவர்க்குச் சொல்லுவேன்!
"உங்களுக்காக, நீங்க எதை அனுப்பினாலும், என்ன செஞ்சாலும் மறுக்காம ஏத்துகிட்டு, எல்லாத்துக்கும் கூட நின்னிருக்கு உங்க உடம்பு! அது இப்போ கொஞ்சம் உங்களை மாத்திக்கிட்டு, நீங்க வாழறதுக்கு நான் உதவ எனக்கு உதவ முடியுமான்னு[:))] அது கேக்குது! நீங்கதான் முடிவு பண்ணனும்"

என்ன மாற்றங்கள் செய்யணும்!

புகை பிடிப்பதை அறவே நிறுத்தணும்.
இதுல காம்ப்ரொமைஸே கிடையாது.ஒரு தாக்குதலுக்கு அப்புறம் நீங்க பிடிக்கற ஒவ்வொரு ஸிகரெட்டும், அடுத்த தாக்குதல்ல் நிகழ ஒரு ஆயுதம்! மறக்காதீங்க!

கொழுப்பைக் குறைக்கணும்!
குறைந்த அளவே கொழுப்புச் சத்து உள்ள உணவுமுறையைக் கைகொள்ள வேண்டும்.இதிலும் பயன் இல்லையென்றால், மாத்திரைகளின் உதவியை நாட வேண்டும்.

ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தணும்.
உப்பைக் குறைத்து, முறையாக உடற்பயிற்சி[] செய்து, உணவில் அளவோடு இருந்து ரத்த அழுத்தத்தை குறிப்பிட்ட அளவிற்குள் வைத்துக் கொள்ளணும். இல்லையேல், மருந்து, மாத்திரைகளாலும் பயன் இருக்காது.

சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு இந்நோய் அதிக அளவில் பாதிக்கும் என்பதால், இவர்கள் கட்டுப்பாடோடு இருப்பது மிகவும் முக்கியம்.

முறையான உடற்பயிற்சிகள்[Exercise] மருத்துவரின் ஆலோசனையோடு செய்யப் பழகணும். இதன் மஹிமை அளவிட முடியாதது! சர்க்கரை நோய்[Diabetes], ரத்த அழுத்தம்[High blood pressure], எடை[Weight], மன அயர்வு[Stress] இவை எல்லாவற்றிற்கும் இதுவே கைகண்ட மருந்து!

உடல் எடையை [Body weight] சரியான அளவில் வைத்திருக்கணும்!உயரத்திற்கும், வயதுக்கும் தகுந்த எடையை வைத்துக் கொள்வது அவசியம்.

மன அயர்வையும்[Stress] கோபத்தையும்[Anger] தவிர்க்கணும்.
கோபப்படுவது, உணர்ச்சிவசப்படுவது அதிகமாய் வருத்தப்படுவது இவையெல்லாம் இதயத்தை மேலும் பாதிக்கும் விஷயங்கள்.இவற்றைக் கட்டுப்படுத்த தனி வகுப்புகள் இருக்கின்றன. அவற்றில் சேர்ந்து முறையாகப் பயிற்சி செய்தால் இவை குறையும் வாய்ப்பிருக்கிறது.யோகா ஒரு நல்ல பயிற்சி இதற்கு!

இதய மறுமலர்ச்சி வகுப்பில்[Cardiac Rehabilitation] சேர்ந்து மருத்துவரின் உதவியுடன் முறையாக இதயத்தை வலுப்படுத்தும் முறையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

மருத்துவரை முறையாக அவர் சொல்லும் கால அளவில் பார்த்து சோதனைகள் செய்து கொள்ளுவது மிகவும் முக்கியமானது.

இதற்கு இடையில், உங்கள் உடல்நிலையில் ஏதேனும் மாற்றங்கள் தெரிந்தால், அல்லது உணர்ந்தால், உடனே மருத்துவ உதவியை நாடுவது மிகவும் முக்கியம்!

*** சரி, ஒருவருக்கு நெஞ்சுவலி [Angina] வந்தால் அவர் என்ன செய்ய வேண்டும்!? ***

நெஞ்சுவலியின் அறிகுறிகளான, வலி, அயர்வு, வியர்த்துக் கொட்டல், இதயப்பகுதியில் ஒரு அழுத்தம் ஏற்படுதல், கை, தோள்பட்டை, முதுகு போன்ற இடங்களில் வலி பரவுதல், போன்றவை தோன்றுமாயின்[இது ஒருவருக்கொருவர் மாறுபடும்]செய்ய வேண்டியது என்ன?

* என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும், அப்படியே அதை விட்டுவிட்டு, உடனடியாக ஓய்வு எடுக்க வேண்டும். [Take complete rest]

* நைட்ரோக்ளிஸரின்[Nitroglycerin] மாத்திரை உங்களுக்கு எழுதிக் கொடுக்கப்பட்டு, கைவசம் இருந்தால் உடனே ஒரு மாத்திரையை எடுத்து, நாக்கின் அடியில் வைத்துக் கொள்ளவும்.

* அடுத்த ஐந்து நிமிடங்களில் வலி குறையாவிடில், இன்னொரு மாத்திரை எடுத்துக் கொள்ளவும்.

* இது போல 3 முறை செய்யலாம்.

* இப்படி செய்தும்,15 நிமிடங்களில் வலி குறையவில்லையெனில், உடனடியாக அவசர மருத்துவ உதவியை நாடவும்.

* ஆஸ்பிரின்[Aspirin] மாத்திரையும் ஏற்கெனவே எழுதிக் கொடுக்கப் பட்டிருந்தால் அதுவும் ஒன்று எடுத்துக் கொள்ளலாம். [ரத்தம் கட்டிதட்டிப் போவதை இது தவிர்க்கும்.

* மோஹன் செய்தது போல, உடனடியாக உங்கள் உதவிக்கு வரக்கூடியவரை உடனே அழைக்கவும். நானே போய்விடுவேன் என ஸ்கூட்டரை உதைக்க வேண்டாம்! அல்லது, காரை ஸ்டார்ட் செய்ய வேண்டாம்! இதுவே உங்களுக்கு எமனாக அமையக்கூடும்!

* நைட்ரோக்ளிஸரின் மாத்திரை நாள் கடந்ததா[Expiry date] எனக் கவனிக்கவும். ஒருமுறை மருந்து பாட்டில் திறக்கப் பட்டிருந்தால், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மருந்துச் சீட்டைப் புதுப்பித்து புது மாத்திரைகள் வாங்கிக் கொள்ளவும்!

அவ்வளவுதாங்க!
நிறையப் பேசியாச்சு!
ஐந்து பதிவுகளையும் மீண்டும் ஒருமுறை தொடர்ச்சியாக நேரம் கிடைக்கும் போது படித்து, நீங்கள் அனைவரும் வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல முருகப்பெருமான் உங்களுக்கு உறுதுணையாய் இருக்க வேண்டி, இந்த மினி தொடரை நிறைவு செய்கிறேன்.

அடுத்து, 'இதயம்' பற்றி இன்னும் சில விஷயங்களைப் பார்க்கலாம்.

கூடவே இருந்து உதவிய மோஹன் - ராதா தம்பதியினர்க்கும், குமாருக்கும் எனது நன்றிகள்!

[இதில் கூறப்பட்டவை அனைத்தும் ஒரு தகவலுக்கு மட்டுமே!
உங்கள் மருத்துவர்தான் முறையான சிகிச்சை அளிக்க முடியும்!]

14 Comments:

At 2:49 AM, Blogger VSK said...

கோவி.கண்ணன் has left a new comment on your post ";">"லட்-டப்" - 16 "ஆ! நெஞ்சு வலிக்குதே!"[ "நெஞ்சில...":

முன்னெச்சரிக்கை, பின்னெச்சரிக்கை கவனமாக எடுத்துச் சொல்லி இருக்கிங்க

இந்த தொடரில் உற்ற துணைசெய்தவர்களுக்கும், துணையுற்றவர்களுக்கும்,
நன்றி மற்றும் பாராட்டுக்கள்.
:)

 
At 2:50 AM, Blogger VSK said...

இலவசக்கொத்தனார் has left a new comment on your post ";">"லட்-டப்" - 16 "ஆ! நெஞ்சு வலிக்குதே!"[ "நெஞ்சில...":

//பதிவு தமிழ்மண முகப்பில் வர மறுக்கிறது!
எனவே இந்தக் கயமைப் பின்னூட்டம்!//

எனக்கும் இந்த பிரச்சினைதான். நினைக்கையில் நெஞ்சு வலிக்குதே!!!

 
At 2:52 AM, Blogger VSK said...

தமிழ்மணத்தில் ஏற்றுக்கொண்ட பதிவு உடனே முகப்பில் தெரியாததால், மீண்டும் ஒருமுறை இந்தப்பதிவு வெளியிடப்படுகிறது.[[எ.பி. திருத்தி]

அதற்குள் அன்போடு வந்து பின்னூட்டமிட்ட கோவியாருக்கும், இலவச கொத்தனாருக்கும் எனது நன்றி!

அவர்கள் பின்னூட்டங்கள் இங்கே!

 
At 3:57 PM, Blogger SKM said...

Your site is like a medical reference book. thanks a lot for your efforts Doc.

 
At 4:51 PM, Blogger சேதுக்கரசி said...

வெளியூர் போனேன், வந்தேன், ரொம்ப பிசி.. நல்லவேளை அந்த இடைவெளியில் நீங்க 3 பதிவு தான் போட்ருக்கீங்க :-) வாசிச்சு catch-up பண்ணிடுவோம்ல :-)))

 
At 9:02 PM, Blogger VSK said...

"அன்புடன்" கவிதைப் போட்டி எல்லாம் நல்லபடி முடிந்ததா?

தங்கள் வருகைக்கு நன்றி, சேதுக்கரசி.

 
At 11:55 PM, Blogger சேதுக்கரசி said...

//"அன்புடன்" கவிதைப் போட்டி எல்லாம் நல்லபடி முடிந்ததா?//

நன்றி.. நல்லபடியாக முடிந்தது. முடிவுகள் இன்னும் சுமார் 20 நாட்களில்... :-)

 
At 4:00 AM, Anonymous Anonymous said...

வணக்கம்,
உங்களுடைய பதிவுகள் எல்லாம் நல்லம். ஆங்கிலத்தில் அதற்குறிய பெயர்களைக் குறிப்பிடுகிறீர்கள். அப்பொழுது அது எங்கே இருக்கிறது என காட்டினால் இன்னும் நல்லாயிருக்கும்.

நன்றி

 
At 8:35 AM, Blogger தருமி said...

உடல் பயிற்சி பற்றி சொல்லியுள்ளீர்கள். நடையே மிகச் சிறந்தது என்று எல்லோருமே சொல்கிறார்கள். அதோடு -

- யோகா எப்படி?
- நடையை விட, அல்லது நடைக்குப் பதிலாக யோகா உதவுமா?
- வீட்டுக்குள்ளேயே cycling செய்வது நல்லதா?

(காலைத் தூக்கத்தைத் தியாகம் செய்து நடக்க முடியாததால் இந்தக் கேள்விகள்)

 
At 8:39 AM, Blogger தருமி said...

என் case history இங்கே...

 
At 9:13 AM, Blogger VSK said...

தாமதமாக பதிலிடுவதற்கு மன்னிக்கவும், "வளவை" அவர்களே!

முந்தையப் பதிவுகளில் அந்நெகமாக எல்லாப் படங்களும் இட்டு பெயரும் சொல்லியிருப்பதாலும், எனக்கு கணினி அரிவு கம்மி என்பதாலும் ஒவ்வொரு பதிவிலும் அதிகமாகப் படங்கள் இடவில்லை.

நன்றி.

 
At 9:17 AM, Blogger VSK said...

வாங்க தருமி அவர்களே!

நடை, யோகா இரண்டுமே வெவ்வேறு அளவைகளில் பயன் தரக் கூடியவை.

வெளியில் சென்று நடக்க முடியாவிடின்,வீட்டிலேயே எக்ஸெர்ஸைஸ் பைக், அல்லது ட்ரெட்மில்லில் செய்யலாம்.

அதே பலன் கிடைக்கும்.

யோகா என்பதில் இரண்டு வகை உண்டு.
பயிற்சி யோகா, தியான யோகா என.

இதில் பயிற்சி யோகா முறைப்படி செய்யின், நடைக்கு ஈடான பலன் கிடைக்கும்.

இதய அளவையை[Heart rate] அதிகரிப்பதுதன் இதன் நோக்கம்.

நன்றி.

 
At 7:36 AM, Blogger தருமி said...

case history வந்துதா? பார்த்தீர்களா?

 
At 5:57 PM, Blogger VSK said...

தருமி ஐயா,

மிகச் சிறப்பாக நேரில் பார்ப்பது போல, நீங்கள் பார்த்தவைகளை எழுதியிருக்கிறீர்கள்.

ஒரே இடத்தில் மட்டும் சற்று புரியவில்லை.

3/4 பைபாஸ் முதலில் நடந்தது என்றீர்கள்.

3 நாட்களுக்குப் பிறகு மீண்டும் பைபாஸ் என்றீர்கள்.

ஆனால், முதல் முறையில், கால் காஅயங்களைப் பற்றிய குறிப்பு எதுவும் காணோம்.

முதலில் நடந்தது PTCA , பின்னர் அது சரிய்யக வராமல், பைபாஸாக மாற்றப்பட்டதா/

இல்லை, நான்தான் சரியாகப் புரிந்து கொள்ள வில்லையா?

இப்போதைய நிலை என்ன?

அறியக் காத்திருக்கிறேன்.

நன்றி.

 

Post a Comment

<< Home