"கசடற"

அறிவியல் தொடர்பான எனக்குத் தெரிந்த தகவல்களை, ஒரு மருத்துவன் எனும் பார்வையில் சொல்ல விழைகிறேன். முழுக்க முழுக்க இவை என் கருத்துகள் மட்டுமே! முருகனருள் முன்னிற்கும்!

Tuesday, May 08, 2007

"லப்-டப்" -- 21 "ரத்தம் உறையும் நேரம்"

"லப்-டப்" -- 21 "ரத்தம் உறையும் நேரம்"

"டாக்டர்! என் பையனுக்கு அடிபட்டுதுன்னா ரத்தம் கொட்டிகிட்டே இருக்கு. நிக்கவே மாட்டேங்குது. இது எதனாலே?" என கவலையுடன் கேட்டார் பாஸ்கர்.

இதற்கு விளக்கம் சொல்ல ஆரம்பித்தேன்.

"ஒரு அடி படுது.

ரத்தம் வருது.

இது அப்படியே வந்துகிட்டு இருந்தா என்ன ஆகும்?

எல்லா ரத்தமும் வெளியேறிடும்.

ஆனா, பொதுவா என்ன நடக்குது?

கொஞ்சம் ரத்தம் ஊத்துது.

பிறகு நின்று போகிறது.

இதற்கு ரத்தம் உறைந்து போகுதல்[Hemostasis] எனப் பெயர்.

இது நான்கு நிலைகளில் நிகழ்கிறது.

1. பாதிக்கப்பட்ட ரத்தக்குழாயின் வழியே வரும் ரத்தஓட்டம், நாளம் சுருங்குவதால் குறைகிறது.

2. ப்ளேட்லெட்டுகள்[Platelets] என முன்னம் பார்த்தோமே, அவை "த்ராம்பின்"[Thrombin] என்னுமொரு பொருளால், அடிபட்ட இடத்தில் குவிய ஆரம்பிக்கிறது.


ஒரு தாற்காலிக அடைப்பானாக[Plug] இது செயல்பட்டு ரத்த ஓட்டத்தை இன்னும் கட்டுப்படுத்துகிறது.

இந்தத் அடைப்பான்[Plug] இன்னும் பல ப்ளேட்லெட்டுகளை இந்தக் கட்டுக்குள் நிறுத்தி, இன்னும் இறுக்கமாகிறது.

இவற்றிலிருந்து சுரக்கும் சில புரதப்பொருள்கள் இந்தத் தடுப்பானை ஒரு கெட்டியான அடைப்பானாக மாற்றுகிறது.

3. இது சற்று நேரத்தில், ஒரு தடுப்பானாக[Blood clot]] மாறி ஒரு கட்டிப்பொருளாக ஆகிறது.

4. ரத்த ஓட்டம் இவ்வாறு தடைப்பட்டதின் செயல் முடிந்ததும், இது கரைய வேண்டும்!

இதற்கு ரத்தத்தில் இருக்கும் ப்ளாஸ்மின்[Plasmin] என்னும் ஒரு பொருள் உதவுகிறது.



இது மாதிரியான ரத்தக்கட்டி உருவாக, இரு வகையில் செயல்பாடு நடக்கிறது.

ஒன்று, உள்ளிருந்து உள்வழியாக[Intrinsic Pathway]; அடுத்தது, வெளிவழியாக[Extrinsic Pathway].

தனித்தனியே இவை இரண்டும் நிகழ்ந்தாலும், ஒரு இடத்தில் ஒன்று சேர்கின்றன, ரத்தக்கட்டியாகும் போது!

எதற்காக இப்படி இருவழிகள் என்க் கேட்கிறீர்களா?

இயற்கைக்குத் தெரியும் இது தேவையென!

உள்ளேயே சில சமயங்களில், அடிபடாமலேயே, பல காரணங்களால், [புகை பிடிப்பதால் நாளம் நொறுங்கிப் போய், ரத்த அழுத்தம் அதிகமாகி நாளம் நெளிந்து, இப்படி பல] ரத்த நாளம் உடைந்து உள்ரத்தப் போக்கு[Internal bleeding] நிகழலாம்.

இப்போது, சிவப்பு அணுக்களாலேயே[RBC's] ரத்தக்கட்டி உருவாகி,ரத்தப்போக்கு கட்டுப்படுத்தப்படும்.

இதற்கு "உள்வழி"[Intrinsic pathway] மட்டுமே போதும்.

வெளிக்காயம் மூலம் ஏற்படும் ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்த, "வெளிவழி"[Extrinsic Pathway] உதவும்.

இந்த இருவழிகளும் நிகழ்வதற்கு ரத்தத்தில் இருக்கும் சில புரதப்பொருள்கள்[Protein substances] துணை புரிகின்றன.

இவற்றிற்கு, "உறை காரணங்கள்"[Clotting Factors] எனப் பெயர் சொல்லலாம்.

ஆனால், இவற்றிற்கெல்லாம் ஒரு ஆதிகாரணம் இருக்கிறது!


அது பற்றியும், இந்த "உறை காரணங்களைப்" பற்றியும்......

அடுத்த பதிவில்!!



இங்கு சொல்லியிருப்பதெல்லாம் ஒரு தகவலுக்காகவே!
உங்கள் மருத்துவரைக் கலந்து ஆலோசிப்பதே சிறப்பான வழி!

9 Comments:

At 8:59 PM, Blogger கோவி.கண்ணன் [GK] said...

பார்த்ததுமே எனக்கு இரத்தம் உறைஞ்சிடுச்சுங்கிறாங்களே...அதுவும் இப்படித்தானா ?

:)

//இங்கு சொல்லியிருப்பதெல்லாம் ஒரு தகவலுக்காகவே!
உங்கள் மருத்துவரைக் கலந்து ஆலோசிப்பதே சிறப்பான வழி! //

மருத்துவரும் பாதிக்கக் கூடாது அப்பறம் இரத்தம் கட்டுவது மாதிரி வயிற்றில் ஈரத்துணியைக் கட்டிக்க வேண்டும் என்று மறைமுகமாக சொல்லுறிங்க.
:))

 
At 5:41 AM, Blogger VSK said...

கொத்ஸ் ஜுரம் உங்களையும் தொற்றிக்கொண்டதா, கோவியாரே!

பயத்தால், ரத்தநாளங்கள் சுருங்கி, ரத்தம் உறையவும் வாய்ப்பிருக்கிறது.

மருத்துவர் ஈரத்துணி கட்டுவது இருக்கட்டும்.

முறையாக அவரைக் கலந்து ஆலோசிக்கவில்லையென்றால், நோயாளிக்குத்தான் சீக்கிரமே தலைக்கட்டு போட நேரிடும்!

முதல் வருகைக்கு நன்றி.

[இந்த மாதிரிப் பதிவுக்கெல்லாம் யார் வருவாங்க என கேட்பது காதில் விழுகிறது!]
:))

 
At 6:03 AM, Blogger வடுவூர் குமார் said...

இந்த இருவழிகளும் நிகழ்வதற்கு ரத்தத்தில் இருக்கும் சில புரதப்பொருள்கள்[Protein substances] துணை புரிகின்றன.
ஆச்சரியமாக இருக்கு.
ரத்தம் உறைய ஒரு வழி அது கரைய இன்னொரு வழி...
இயற்கையின் அதிசியங்கள் நம்மிடம் கணக்கில்லாமல் இருக்கு போல.

 
At 6:36 AM, Blogger கோவி.கண்ணன் said...

//[இந்த மாதிரிப் பதிவுக்கெல்லாம் யார் வருவாங்க என கேட்பது காதில் விழுகிறது!]
:))
//

வரவர உங்களுக்கு கற்பனை வளம் கூடிக் கொண்டே போகிறது.

:)))

 
At 8:49 AM, Blogger VSK said...

இந்த ஆச்சரியங்களை உணரும் அதே நேரம் இதனைப் போற்றவும் கற்றுக்கொள்ள வேண்டும் நாம்!

நன்றி, திரு. குமார்!

 
At 8:50 AM, Blogger VSK said...

//வரவர உங்களுக்கு கற்பனை வளம் கூடிக் கொண்டே போகிறது.//


பாராட்டுக்கு நன்றி,


:)))

 
At 9:05 AM, Blogger ஷைலஜா said...

எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் ரத்தத்தின் நிறம் சிவப்பேதானா? எல்லார்க்கும் எப்போதும்? உடம்பு சரி இல்லாதபோது உடலின் தோல் சிலசமயம் நிறம் மாறுவதுபோல மாறுமா என்ன? மற்றபடி கட்டுரை மிகவும் யூஸ்ஃபுல்!

 
At 10:30 AM, Blogger VSK said...

முன்பே சொன்னது போல, சிவப்புஅணுக்கள்தாம் ரத்தத்திற்கு இந்த நிறத்தைக் கொடுக்கின்றன.

இவை நிறம் மாறுவதில்லை .... அநேகமாக!

எனவே ரத்தத்தின் நிறம் பொதுவாக எப்போதும் சிவப்பே.

தேவையான பிராணவயுவைத் தக்க வைத்துக் கொள்ளும் திறனை இந்த சிவப்பணுக்கள் ஒரு சில காரணங்களா இழக்கையில், சற்றே நீல நிறமாக ரத்தம் மாறக்கூடும்.

இது பற்றி இனிவரும் பதிவொன்றில் சொல்லலாம் என இருக்கிறேன்.

நன்றி ஷைலஜா.

 
At 2:33 PM, Blogger சேதுக்கரசி said...

//[இந்த மாதிரிப் பதிவுக்கெல்லாம் யார் வருவாங்க என கேட்பது காதில் விழுகிறது!]//

நான் வருவேன்.. தாமதமானாலும் :-) விட்டுப்போனதையெல்லாம் இனிமேத்தான் படிக்கணும்...

 

Post a Comment

<< Home