"கசடற"

அறிவியல் தொடர்பான எனக்குத் தெரிந்த தகவல்களை, ஒரு மருத்துவன் எனும் பார்வையில் சொல்ல விழைகிறேன். முழுக்க முழுக்க இவை என் கருத்துகள் மட்டுமே! முருகனருள் முன்னிற்கும்!

Wednesday, June 06, 2007

"லப்-டப்" -- 24 "நல்லிதயம் கொண்டு நானிலம் வாழ்க"

"லப்-டப்" -- 24 "நல்லிதயம் கொண்டு நானிலம் வாழ்க"

"சென்ற பதிவில்" குழந்தைகளுக்கு பிறப்பிலேயே வரக்கூடிய பலவிதமான இதயக்கோளாறுகள் [Heart defects] பற்றிப் பார்த்தோம்.

இப்படி ஒரு கோளாறு இருக்கிறது என்பது, பிறந்தவுடனேயே, ஒரு சில அறிகுறிகளை [symptoms & signs] வைத்து, மருத்துவர்களால் சில சமயங்களில் கண்டுபிடிக்கப்படும்;

அல்லது,

பெற்றவர்களாலோ, மற்றவர்களாலோ வீட்டில் கண்டுபிடிக்கப்படலாம்.

இவற்றின் அறிகுறிகள் என்னென்ன?

பொதுவாக குறைபாடின் அளவைப் பொருத்தே இதன் அறிகுறிகளும் அமையும்.

சின்னச் சின்ன குறைபாடுகளால் [Small defects] பெரிய அளவிலான அறிகுறிகள் இல்லாமலும் போகலாம்.

சற்று வளர்ந்த பின்னர், எப்போதாவது, வேறு ஏதோ நோய்க்காக, மருத்துவரிடம் எடுத்துச் செல்கையில், தற்செயலாக இவை கண்டுபிடிக்கப் படலாம்!

ஆனால், சில வகையிலான குறைபாடுகள்[ஏ.எஸ்.டி.[ASD], வி.எஸ்.டி.[VSD], ஃபால்லட்'ஸ் டெட்ராலஜி[Fallot's Tetrology] போன்ற சில] சிசு பிறந்து, முதல் மூச்சு விடும் போதே அறிகுறிகளை வெளிப்படுத்தும்.

1. வழக்கத்தை விட வேகமாக மூச்சு விடுதல்: [Rapid Breathing]

பெரியவர்களை விட,[18-20] அதிகமான எண்ணிக்கையில் குழந்தைகள் [24-26] . மூச்சு விடும்.... ஒவ்வொரு நிமிடமும்.
இதையும் விட அதிகமான அளவில் மூச்சு வாங்கும் இக்குழந்தைகளுக்கு.

2. ஸையனோஸிஸ் எனும் நீல நிறம் படர்தல்: [Cyanosis]

குறைபாடின் தீவிரத்தைப் பொறுத்து இது அமையும்.
தோல், உதடுகள், கை,கால் நகங்கள் இவற்றில் ஒரு சிறு வெளிர் நீலம் தொடங்கி, உடல் முழுதுமே நீல நிறமாகும் வரை இது நிகழலாம்..
சுத்த, அசுத்த ரத்தங்கள் கலந்து போவதால் இது நிகழ்கிறது.
பசி, அல்லது மற்ற காரணங்களால் குழந்தை வீறிட்டு அழுகையில், இது மேலும் நன்றாக வெளிப்படும்.

3.களைப்பாதல்:[Fatigue]

குழந்தைகள் என்றாலே, விளையாட்டுதானே!
ஆனால், இக்குழந்தைகள் பொதுவாக சீக்கிரமாகவே களைப்படைந்து விடும், அல்லது, தூங்கிக் கொண்டே இருக்கும்...... தேவையான அளவில் சுத்த ரத்தம் கிடைக்காததால்.

4. ரத்த ஓட்டம் தடைப்படுதல்:[Poor Circulation]

வளர வேண்டிய வயதில், சத்துகளை எடுத்துச் செல்லும் சுத்த ரத்தம் கிடைக்காததால், வளர்ச்சி குன்றி காணப்படும்.

பெரியவர்களுக்கு வரும் நெஞ்சுவலி போன்றவை வருவதில்லை, பொதுவாக. இதனால்!

5. லர்ர்ர்ர்ப்- டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ப்!![Irregular Heart Sounds]

ரத்த ஓட்டம் தடைப்படுவதாலும், இதயக் குறைபாடாலும், இதயம் எழுப்பும் 'லப்-டப்' ஒலி மாறுபடுகிறது. பொதுவாக மருத்துவர்களால் கண்டுபிடிக்கப்படும் இது.

குறைபாடே இல்லாத குழந்தைகளுக்கும் கூட இந்த ஒலி வேறுபாடு நிகழலாம் என்பதால், இதை மட்டும் வைத்தே, சொல்லமுடியாது.

எதனால் வருகிறது?:

இப்படி ஒரு குறைபாடு இருக்கு எனச் சொன்னதும், உடனே தன்னை நொந்து கொள்வது, பெரும்பாலும் தாய்மார்களே!

ஆனால், இது உண்மையல்ல!!!

பெரும்பாலான குறைபாடுகளுக்குக் காரணமே இல்லாமல்தான் இன்னமும் மருத்துவ உலகம் விழிக்கிறது என்பதே உண்மை!

பரம்பரை[hereditory], மரபணுக் [ஜெனெடிக்] குறைபாடுகள்[Genetic defects] போன்றவை முக்கியக் காரணங்களாகக் கருதப்படுகின்றன.

இதற்கான ஆராய்ச்சிகள் இன்னமும் நடந்துகொண்டிருக்கின்றன.

கருத்தரித்த முதல் மூன்று மாதங்களில் வருகின்ற ஒரு சில நோய்களால், கருவில் குறைபாடு உண்டாக வாய்ப்புள்ளது.
எனவே, தாய்மார்கள், இக்காலத்தில் முறையாக ஒரு மருத்துவரைக் காண்பது மிக, மிக முக்கியம்!


எப்படிக் கண்டுபிடிக்கப்படுகின்றன?:

ஒருசில மோசமான குறைபாடுகள்,[Complex defects] கருவிலேயே கண்டுபிடிக்கப்படுகின்றன,...... இப்போதிருக்கும் மருத்துவ வசதிகளால்!
அல்லது, பிறந்த சில மணி நேரங்களிலேயே!

சாதாரணக் குறைபாடுகள்,[Minor defects] பொதுவாக, ஏதேனும் அறிகுறிகள் தென்படும்போதோ அல்லது தற்செயலாகவோ கண்டுபிடிக்கப்படுகின்றன.
மருத்துவப்பரிசோதனை[medical exam], எக்கோகார்டியோகிராம்[Echo], ஈ.ஸி.ஜி.[ECG]. கார்டியாக் கதீட்டெரைஸேஷன்[Cardiac Catheterization], மார்பு எக்ஸ்-ரே[], கைவிரல் நுனியிலிருந்து ஒரு சொட்டு ரத்தத்தை எடுத்து அதில் இருக்கும் பிராணவாயுவின் அளவை நிர்ணயிக்கும் பல்ஸ் ஆக்ஸிமெட்ரி[pulse oxymetry], போன்ற சோதனைகள் செய்யப்படும்.
[தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு இதெல்லாம் ஏற்கெனவே படித்தவைதான்! முந்தையப் பதிவுகளில் இது பற்றி இருக்கு!]

என்ன சிகிச்சை?:

சிறிய, சாதாரண குறைபாடுகளுக்கு சிகிச்சை அநேகமாகத் தேவைப்படுவதில்லை.

மற்ற குறைபாடுகள், அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்யப்படுகின்றன.

தொடையில் இருக்கும் நாளம் வழியாக ஒரு குழாயைச்[Catheter] செலுத்தி, இதயத்திற்குள் நுழைந்து சிலவற்றை [ஏ.எஸ்.டி., பல்மோனரி வால்வ் ஸ்டினோஸிஸ், [ASD, Pulmonary Valve]] சரிசெய்யலாம்.

ஒரு சில குறைபாடுகளை இதயத்தை நேரடியாகத் திறந்துதான் சரிசெய்ய முடியும்.
[பொன்ஸ் குறிப்பிட்டிருந்த "நீலக் குழந்தை"[Blue Baby Syndrome] போல]
உள்ளிருக்கும் ஓட்டைகள்[holes], வால்வுகள்[Valves], ஃபால்லட்ஸ் டெட்ராலஜி[நீலக் குழந்தை].

இன்னும் சில குறைபாடுகள் சரிசெய்யப்படமுடியாத அளவில் இருக்க்கும்.
இவற்றுக்கு மாற்று இதயம் [Heart Transplant] தான் வழி!


சரி செய்யப்பட்டபின் என்ன செய்ய வேண்டும்?

பெரியவர்களுக்குச் சொன்னது போலவே, இக்குழந்தைகளுக்கும், வாழ்வு முறை மாற்றங்கள் [Life Style Changes] தேவைப்படுகிறது.

முறையான செக்-அப், உணவுக்கட்டுப்பாடு, மருத்துவ ஆலோசனைக்குப் பிறகே ஈடுபடக்கூடிய பயிற்சிகள் எல்லாமே இவர்களும் செய்துகொள்ள வேண்டும்.

இவர்கள் குழந்தைகள் என்பதால், நிலைமையின் தீவிரம்[Seriousness] தெரியாமல் போக அதிக வாய்ப்பிருக்கிறது.
[அடப் போங்கப்பா! பெரியவங்களுக்கே இது கிடையாது என கொத்ஸ் முணுமுணுப்பது காதில் விழுகிறது! :))]

எனவே, இதில் பெற்றவர்களின் பங்கு அதிகம்!

எல்லா வசதிகளும் இருக்கும் இக்காலகட்டத்தில், முறையான தகவல் இவர்களுக்குப் பெற்றோரிடமிருந்து கிட்டாவிட்டால், இணையம், நட்பு போன்ற இடங்களிருந்து தவறான தகவல் பெறப்பட்டு, நிலைமை மோசமாகலாம்.
கவனமாக இருக்கவும்.

அதற்காக, ரொம்பவும் பயமுறுத்த வேண்டாம்!!

உங்கள் மருத்துவரின் உதவியை நாடவும்.
[உங்க ஃபீஸைக் கறக்குறதுல குறியா இருங்க எனக் கோவியார் கிண்டலடிக்கிறார்! :)) ]

முறையாகச் செய்தால், மற்றவர்கள் செய்யக்கூடிய எதையும் இவர்களும் செய்யலாம்.
எவ்வளவு செய்யலாம் என்பதில்தான் கவனமாக இருக்கணும்.

எனவே பயப்படத் தேவையில்லை.

பிறப்பிலேயே வரும் குறைபாடுகளைப் பற்றி இதுவரை பார்த்தோம்.

இவை தவிர, பெரியவர்களுக்குச் சொன்ன இன்னபிற குறைபாடுகளும் நோய்களும் இவர்களுக்கும் வரலாம்..... அவர்களுக்குச் சொன்ன அதே காரணங்களால்!

இதில் முக்கியமானவை,

ருமாடிக் இதய நோய் [Rheumatic heart disease]
கார்டியோமையோபதி [Cardiomyopathy]
சிக்கிள் ஸெல் நோய் [Sickle Cell Disease]
ரத்த அழுத்த நோய் [Hypertensive heart disease]

மற்ற உறுப்புகளில்[Kidney. Liver, Brain, Lungs] ஏற்படும் கோளாறுகளால் இவை வருவதால், சிறு குழந்தைகளுக்கும் இக்கோளாறுகள் உண்டானால் இவை வரலாம்.

அறிகுறிகளும், சிகிச்சை
முறைகளும் பெரியவர்களுக்குச் சொன்னது போலத்தான்.

இதயத்தைப் பற்றி, அதில் ஏற்படக்கூடிய கோளாறுகள், குறைபாடுகள், நோய்கள் பற்றியும், அவற்றை எப்படி எதிர்கொள்ளலாம் என்பதைப் பற்றியும், எனக்குத் தெரிந்த அளவில் சொல்ல முயன்றிருக்கிறேன்.

எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன் எனச் சொல்ல முடியாது.
[குறிப்பாக, மனவியல் ரீதியாக இதயத்தில் ஏற்படும் கோளாறுகள்!! அதற்கு டாக்டர் மாத்ருபூதம் நிறையச் சொல்லியிருக்காருங்கோ என வடுவூர் குமார் சிங்கையிலிருந்து கூவுகிறார்! :)) ]

இன்னும் எத்தனையோ நுட்பமான தகவல்கள் சொல்லாமல் விடப்பட்டிருக்கின்றன.

ஆனால், பொதுவாக எல்லாருக்கும் தேவையான தகவல்களைச் சொல்லியிருக்கிறேன் எனவே நம்புகிறேன்.

குணமிருந்தால் கொண்டு, குற்றமிருந்தால் தள்ள வேண்டுகிறேன்.

இது குறித்து, ஏதேனும் மேலும் அறிய வேண்டுமெனில், உங்கள் மருத்துவரை நாடுங்கள். [கோவியார் அகெய்ன்!!]

வேண்டுமெனில், எனக்குத் தனிமடலிட்டுக் கேட்கவும்.
தெரிந்தவரையில் சொல்ல முயல்கிறேன்.

பொறுமையாக இதனைப் படித்து, பின்னூட்டமிட்டு, கேள்விகள் கேட்டு, ஊக்கமளித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதனை எழுத என்னைத் தூண்டிய பொன்ஸுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக்கொண்டு,

எல்லாரும் எல்லா நலனும் பெற்று, நல்லிதயம் கொண்டோராய் வாழ,

"எல்லாம் வல்ல முருகனருள் முன்னிற்கும்"!!

எனக்கூறி, இந்த "லப்-டப்" தொடரை நிறைவு செய்கிறேன்.

வணக்கம்! வாழ்க!

23 Comments:

At 5:28 PM, Blogger கோவி.கண்ணன் said...

நகல் எடுத்து படிக்க வேண்டும். வாரம் ஒரு முறை படிப்பதால் படிப்பது எல்லாம் மறந்து போகிறது.

மொத்ததில் இதயத்திற்கு இதமான தொடர்.

இதயத்தை தொட்ட தொடர். எழுத்து நடையும், விளக்கமும் எளிதில் புரியும் படி உள்ளது.

பாராட்டுக்கள் எஸ்கே ஐயா.

 
At 6:44 PM, Blogger வடுவூர் குமார் said...

பெரும்பாலான குறைபாடுகளுக்குக் காரணமே இல்லாமல்தான் இன்னமும் மருத்துவ உலகம் விழிக்கிறது என்பதே உண்மை!
உண்மையை சொல்லி முடித்திருக்கிறீர்கள்.
பல அரிய விஷயங்கள் ஒரு மருத்துவர் பக்கத்தில் இருந்து கேட்டு தெரிந்துகொண்ட மாதிரி இருந்தது,
இருந்தாலும் எல்லோரும் நலமாக இருக்க அந்த "முருகன் அருள்" முன்னிற்கட்டும்.

 
At 6:44 PM, Blogger இலவசக்கொத்தனார் said...

மிக மிக அருமையான தொடர் பதிவு. பயன் தரக்கூடிய (பயம் தரக்கூடிய?!!) பல தகவல்களைத் தந்துள்ளீர்கள்.

அதற்காக எங்கள் நன்றிகள். எல்லா கேள்விகளுக்கும் அசராமல், கோபப்படாமல் பதில் சொன்னதுக்கு ஒரு தனி நன்றி.

அடுத்த அங்கம் என்னவோ? :))

 
At 7:19 PM, Blogger Unknown said...

இதயம் பற்றி எழுதிய டாக்டர் திரு இதயக்கனி வாழ்க, வாழ்க

 
At 7:22 PM, Blogger VSK said...

இதிலும் முதலாக வந்து பாராட்டியமைக்கு நன்றி, கோவியாரே!

:))

 
At 7:24 PM, Blogger VSK said...

ஒவ்வொரு பதிவிற்கும் தவறாமல் வந்து ஊக்கமளித்துப் பாராட்டியமைக்கு நன்றி, திரு.குமார்!

 
At 7:25 PM, Blogger VSK said...

ஆஹா!

முதல் முறையாக ஊட்டமளிக்கும் ஒரு பின்னூட்டம்!

உங்க கேள்விகள் பதிவுக்கு மேலும் சுவையூட்டின எனபதும் ஒரு உண்மைதான், கொத்ஸ்!

மிக்க நன்றி.

 
At 7:29 PM, Blogger VSK said...

இதுல உள்குத்து ஒண்னும் இல்லையே, செல்வன்!

:))

ஏனென்றால், என் "திரு" இதயக்கனி என் மனைவிதான்!

அவங்கதான் எழுதினாங்கன்னு சொல்ல வர்றீங்களா!!

நெசமா, நான்தாங்க எழுதினேன்!
நம்புங்க!
:))))))

பாராட்டுக்கு நன்றி!

 
At 8:07 PM, Blogger தென்றல் said...

மிகவும் பயனுள்ள தொடர்!

நன்றி, ஐயா! [எங்க வீட்டு அம்மணியும் சொல்ல சொன்னாங்க!]

அடுத்த தொடர் என்னவென்று தெரிஞ்சிக்கலாமா? டிரைலர் போடுவீங்களா??

 
At 8:09 PM, Blogger இலவசக்கொத்தனார் said...

//ஏனென்றால், என் "திரு" இதயக்கனி என் மனைவிதான்!//

கல் போன்ற இதயத்தைக் கனிய வைத்ததால் அவர்கள் உங்கள் இதயக்கனியானார்களோ!! :))

 
At 8:10 PM, Blogger இலவசக்கொத்தனார் said...

//முதல் முறையாக ஊட்டமளிக்கும் ஒரு பின்னூட்டம்!//

இதெல்லாம் தேவையா? எல்லா பின்னூட்டமுமே ஊட்டமளிக்கத்தான் என்ற பொழுது இந்த மாதிரி எதுக்கு வம்புக்கு அலையணும்? :))

நான் எதாவது சொல்லலைன்னா தூக்கம் வராதே!!

 
At 9:49 PM, Blogger வெட்டிப்பயல் said...

அருமையான தொடர்.. இதை போல் மேலும் பல தொடர்களை எழுத வாழ்த்துக்கள்!!!

 
At 4:44 AM, Blogger VSK said...

தென்றல் வீசியதே இதம்!
கூடவே பூந்தென்றலும் வீசுவதால் இன்னும் இதம்!
மிக்க நன்றி.

அடுத்த தலைப்பு பற்றி இன்னமும் முடிவு செய்யவில்லை, ஐயா!

:))

 
At 4:48 AM, Blogger VSK said...

நான் வம்புக்கு வரலை சாமி!

என் மகிழ்வைச் சொல்வது கூட தவறா?

:))

 
At 4:49 AM, Blogger VSK said...

சந்தடி சாக்குல எனக்கு இதயம் கல்லுன்னு சொல்லி சந்தோஷப்பட்டுக்கோங்க, கொத்ஸ்!

 
At 4:51 AM, Blogger VSK said...

//வெட்டிப்பயல் said...
அருமையான தொடர்.. இதை போல் மேலும் பல தொடர்களை எழுத வாழ்த்துக்கள்!!//

மக்கா! சாச்சுப்புட்டாங்க மக்கா!

அடுத்த தொடரையாவது படியுங்க பாலாஜி!

:))

 
At 6:01 AM, Blogger பொன்ஸ்~~Poorna said...

அழகா எழுதி முடிச்சிட்டீங்க எஸ் கே.. ஆனா, நான் கேட்டபடி கதைகள் தான் கொஞ்சம் குறைவா இருந்துச்சோன்னு ஒரு எண்ணம்..

அடுத்த தொடருக்கு இன்னும் யாரும் எதுவும் பரிந்துரைக்கலைன்னா, நீங்க ஏன் மூளையைப் பத்தி எழுதக் கூடாதுன்னு ஒரு கோரிக்கை வச்சிக்கிறேன்.. [ கொத்ஸ் சொல்வதற்கு முன்னால், நானே சொல்லிடுறேன் : தனக்கு இல்லாத விசயத்தைப் பத்தித் தானே கேட்டுத் தெரிஞ்சிக்க முடியும் ;) ]

மனித மூளை, அதன் செயல்கள், மூளைக்கு வரக் கூடிய நோய்கள், இப்படி எழுதினால் நல்லா இருக்கும் இல்லையா...

 
At 6:50 AM, Blogger VSK said...

கதைகள் மூலம் சொல்லலாம் என இனைத்தேன்.

ஆனால், சொல்ல வேண்டிய தகவல்களின் முக்கியத்துவம் குறைந்து போய்விடுமோ என்ற அச்சத்தால், விடுபட்டுப் போயிற்று.

முக்கிய நிகழ்வான ஹார்ட் அட்டாக், ஹார்ட் ஃபெயிலியர் இரண்டையும் கதை காட்டித்தானே சொன்னேன்.

மூளை பற்றியா?

ரொம்பவே பெரிய விஷயம்.

நிறைய இருக்கு அதுக்குள்ளே!

யோசிக்கிறேன்!!
:)))

நன்றி, பொன்ஸ்!

 
At 7:53 AM, Blogger ஜெயஸ்ரீ said...

மிக நல்ல தொடர் VSK. இதயத்தின் செயல்பாடு நன்றாகப் புரிகிறது.

முழுவதையும் printout எடுத்து வைத்திருக்கிறேன், மறந்துபோனால் திருப்பிப்படிக்க ))

மிக்க நன்றி ஒரு பயனுள்ள தொடருக்கு!

 
At 8:47 AM, Blogger VSK said...

படித்தது மட்டுமல்லாமல், பாராட்டும் தெரிவித்தது மிகவும் மகிழ்வாய் இருக்கிறது.

நன்றி, ஜெயஸ்ரீ!

 
At 8:00 PM, Blogger இலவசக்கொத்தனார் said...

//என கொத்ஸ் முணுமுணுப்பது காதில் விழுகிறது! // - எஸ்.கே.

//கொத்ஸ் சொல்வதற்கு முன்னால்,// - பொன்ஸ்

ஏங்க இப்படி எல்லாரும் சேர்ந்து என்னையே கும்மறது எல்லாம் கொஞ்சம் ஓவராத் தெரியலை? :))

 
At 8:12 PM, Blogger VSK said...

நீங்க சொன்னதுக்கு அப்புறம்தான் கவனிச்சேன், கொத்ஸ்!

கொஞ்சம் இல்லை ரொம்பவே கம்மியா இருக்கு!

நீங்க தொடர்ந்து இத்தொடருக்கு காட்டி வந்த[!!] ஆதரவைக் குறிக்கும் வகையாகவே உங்களைச் சொல்லியிருக்கேன்!
:)))

 
At 2:49 PM, Blogger சேதுக்கரசி said...

நான் பதிவுகள் படிக்காத சமயம் பார்த்து விறுவிறுன்னு கடைசி நாலு பதிவைப் போட்டு முடிச்சிட்டீங்க :-) உங்க தொடர் ஒரு பெட்டகம். உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். நன்றி.. நன்றி.. அடுத்த தொடர் அடுத்த தொடர்னு நேயர் விருப்பம் வருதே.. எதுக்கும் கொஞ்ச நாள் ஓய்வெடுத்துக்கங்க.. போனா போகுதுன்னு கொஞ்ச நாள் லீவு தர்றோம் ;-)

 

Post a Comment

<< Home