"கசடற"

அறிவியல் தொடர்பான எனக்குத் தெரிந்த தகவல்களை, ஒரு மருத்துவன் எனும் பார்வையில் சொல்ல விழைகிறேன். முழுக்க முழுக்க இவை என் கருத்துகள் மட்டுமே! முருகனருள் முன்னிற்கும்!

Monday, September 18, 2006

"பாலியல் கல்வி -- பெற்றோருக்கு" -- 9

"பாலியல் கல்வி -- பெற்றோருக்கு" -- 9

"என்ன கொடுமை இது சரவணன்!"

இதுவரை 3 வயது முதல் 12 - 14 வயதுப் பிள்ளைகளைப் பற்றிய, பாலியலைப் பற்றிய, பெற்றோரின் கருத்து, செயல், ஆக்கம் எவ்வண்ணம் இருக்க வேண்டும் எனப் பார்த்தோம்.

இனி அடுத்தது, ஒரு முக்கியமான பருவம்!
ஆம்! பருவம் அடையும் பருவம்!

இதுவரை நீங்கள் சந்தித்த, பழகிய, புரிந்த, பிள்ளைகள் வேறு!
இனி நீங்கள் பார்க்கப் போகும் பிள்ளைகள் வேறு!

அந்த நிலைக்குப் போகும் முன்.......

இது வரை நாம் சந்தித்த இந்த 12- 14 வரையிலான குழந்தைகள் சந்திக்கும், சந்திக்கக் கூடிய ஒரு நிகழ்வைச் சொல்லாமல், அடுத்த பருவத்திற்குச் செல்ல என் மனம் துணியவில்லை!

இந்த வயதில், பெற்றோர்கள் இருவரும் கொஞ்சம் தனித்தனியே விலகி, குழந்தைகளோடு கூட, ஒருவரை ஒருவரும், மற்றவரையும் எடை போட வேண்டிய ஒரு அவலத்தைப் பற்றி, கொடுமையைப் பற்றி இந்தப் பதிவில் சொல்லப் போகிறேன்.

இதை இங்கு சொல்லாமல் நான் மேலே செல்ல முடியாது!

பீடிகை எல்லாம் பலமாய் இருக்கிறதே என அஞ்ச வேண்டாம்!

இது ஒரு விவாதத்திற்குரிய பதிவு.
சர்ச்சைக்கு அல்ல!

இதைக் கண்டு சிலர் துணுக்குறக் கூடும்;

முகம் சுளிக்கக் கூடும், இது தேவையா என!

மனம் நோகக் கூடும், இது போலும் நிகழ்கிறதா என!

..................... திருந்தக் கூடும் சிலர்!

அவர்களுக்காக இது!

நேரடியாக நிகழ்வுக்கு வருகிறேன்!

ஒரு நான்கு "உண்மை" நிகழ்வுகளை உங்கள் முன் வைக்கப் போகிறேன்!

அதற்கு முன், ஒரு வேண்டுகோள்!

தயவு செய்து, தயவு செய்து, இதைக் கொச்சைப் படுத்தி யாரும் பின்னூட்டம் இட வேண்டாம்!

அப்படி வருமாயின், நிச்சயம் அது உங்கள் பார்வைக்கு வராது எனினும், என்னை அது வருத்தும் என்பதால்!

1. கண்ணிலிருந்து தாரை தாரையாய் நீர் வழிய, அந்தத் தாய் என்னிடம் வந்தார் ஒரு நாள்!

"டாக்டர்! எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை! அப்படியே செத்துப் போயிடலாமான்னு இருக்கு!"

அவரை ஆசுவாசப்படுத்தி, உட்கார வைத்த பின் என்னவெனக் கேட்டேன்.

"என்னன்னு சொல்றதுங்க!
இந்தப் படுபாவி எம் பொண்ணை அதட்டி, உருட்டீ, மிரட்டி, அவளை பலாத்காரம் பண்ணிப்புட்டான்!"

"யார்? என்ன பண்ணினான்னு கொஞ்சம் விவரமா சொன்னீங்கன்னா தேவலை!" என்றேன் நான்.

"வேற யாரு! எம் புருசந்தான்!
ராத்திரில குடிச்சுட்டு வரும் நெதம்!
சரி, நம்ம தலைவிதி அம்புட்டுத்தான்னு, மனசைத் தேத்திக்கிட்டு, அவனுக்கு சோத்தைப் போட்டு, நான் தூங்கிட்டேன் சாமி!
திடீர்னெ முளிச்சுப் பாத்தா, இவன் என் மூத்த பொண்ணு மேல மேஞ்சுக்கிட்டு இருக்கான்!
இதுவோ, வெலவெலத்துக் கிடக்கு!
என்ன பண்றதுன்னு தெரியாம, கைக்கு அகப்பட்ட ஒரு வெளக்குமாத்த எடுத்து அவனை நாலு சாத்து சாத்தி வெளிய தள்ளி கதவைச் சாத்திட்டு, ஏண்டி, மவளே, என் சக்காளத்தின்னு அவளையும் நாலு சாத்தினேன்!

அது கதறிக்கிட்டே, எனக்கு ஒண்ணும் தெரியாதும்மா!
என்னை இப்படித்தான் அப்பன் வாராவாரம் பல தடவை பண்ணுது!
திமிறினா அடிக்குது!
எனக்கு ஒண்ணும் புரியலம்மா.
பேசாம படுத்திருவேன்"அப்படீன்னு அவ சொன்னதும்,

எனக்கு பத்திகிட்டு வந்திருச்சி!

'ஏண்டி, எங்கிட்ட சொல்லலை?'ன் னா,
அம்மாகிட்ட எதனாச்சும் சொன்னேயின்னா, ஒங்க ரெண்டு பேரயும் போட்டுத்தள்ளிட்டு நா செயிலுக்குப் போயிருவேன்னு மெரட்டிச்சும்மா! அதுக்காவத்தான் ஒங்கிட்ட சொல்லலை" அப்பிடீன்னு சொல்லுது!
இத்தக் கொஞ்சம் டெஸ்டு பண்ணுங்க டாக்டர்! எதுனாச்சும் ஆயிருச்சான்னு" என அந்த மாதரசி கலங்கியது, எனக்கு வலித்தது.

2. " இவளை நான் சின்னப் பொண்ணுன்னு நெனச்சேன், டாக்டர்!
இவ என்ன காரியம் பண்ணிண்டு வந்து நிக்காறா தெரியுமா" என வந்தவுடனே ஆரம்பித்தார் அந்தத் தாய்!

கூடவே மலங்க மலங்கப் பார்த்தபடி ஒரு 13 வயதுப் பெண்!!

என்னம்மா, என்னன்னு சொல்லுங்க என்றேன்.

அதற்கு அவர், " படு பாவி! படுபாவி, ஊமை மாரி இருந்துண்டு, என்ன அழுத்தம் பாருங்கோ, டாக்டர்!
லீவுக்கு என் நாத்தனார் அவா குடும்பத்தோட ஒரு 10 நாள் இங்க வந்திருந்தா!
அங்க இங்க அவாளைக் கூட்டிண்டு போறதுக்கே நேரம் சரியா இருந்தது. நாத்தனாரைக் கூட்டிண்டு நான் ரங்கனாதன் தெருவுக்கு ஷாப்பிங் போனேன்.
ஆம்பளைங்க ரெண்டு பேரும் ஏதோ கச்சேரிக்கு போறோம்னு கிளம்பிப் போயிட்டா!
ஸ்ரீதர் [ நாத்தனார் பையன்] சைக்கிளை எடுத்துண்டு எங்கியோ சுத்தப் போயிருந்தான்.
எம்பொண்ணுகிட்ட, "ஆத்தை பத்திரம பாத்துக்கோடி, நாங்க சீக்கிரமா வந்துர்றோம்"னு சொல்லிட்டு கெளம்பிப் போயிட்டோம்!
ஷாப்பிங்லாம் முடிச்சுட்டு திரும்பி வந்தா,
.....இந்தக் கடங்காரியும், அந்தக் கட்டைல போறவனும், "ஒண்ணுமில்லாம" ! அவ பெட்ல படுத்துண்டுருக்கா!
நாங்க வந்ததக் கூடக் கவனிக்காம!
அவன் இவளை தடவிண்டு இருக்கான்.
இவளும் சும்மா இருந்துண்டு இருக்கா!
எனக்கு வந்த ஆத்திரத்துல, ரெண்டு பேரையும் நாலு சாத்து சாத்தினேன்.
மறுநாளே அவாள்ளாம் கிளம்பிப் போயிட்டா!
நா நேரா உங்க கிட்ட தான் ஓடி வர்றேன்!
எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல!
இந்தக் காலத்துல எல்லாரும் சீக்கிறமே வளந்துர்றா!"என்றவரிடம்,

"அப்படியில்லை மாமி, எல்லாக் காலத்திலும், எல்லாப் பெத்தவங்களும் சொல்ற வார்த்தை தான் இது. மேற்கொண்டு என்ன பண்ணலாம்னு பார்க்கலாம், சரியா! " என்றேன்.

3. " இவளுக்கு என்னமோ பேய் புடிச்சிடுத்தோ, இல்லை புத்தி கித்திதான் சுவாதீனம் இல்லாம போய்விட்டதான்னு தெரியலை டாக்டர்" என்றவாறு, ஒரு தாய்!
என்னவென விசாரித்தேன்.
" இத்தன நாளா கல கலன்னுதான் சிரிச்சிண்டுதான் இருக்கும் இது!
இப்ப ஒரு ஆறு மாசமா, எத்தையோ பறி கொடுத்தவா கணக்கா இருக்கா!! கொஞ்சம் டெஸ்ட் பண்ணுங்க டாக்ட!" என்றார்".
நீங்க கொஞ்ச நேரம் வெளில இருங்க" என்று அவரை அனுப்பிவிட்டு, அப்பெண்ணிடம்[ [12 வயது] விசாரித்தேன்.

முதலில் 'அதெல்லாம் ஒண்ணுமில்லை' யென மறுத்தாலும், கடைசியில் சொல்லியது அந்தக் குழந்தை.
அவர்களின் நெருங்கிய குடும்ப நண்பர் ஒருவர்,
பல வகையிலும் அக்குடும்பத்திற்கு வேண்டியதை எல்லாம் செய்யும் ஒருவர்,
சின்ன வயது முதலே குடும்பத்தில் ஒருவர் போல பழகிய ஒருவர்,
சில மாதங்களாய் இவளை இழுத்துத் அணைப்பது, கண்ட இடங்களிலும் தொடுவது என்று படிப்படியாக அவரது, இவளது பிறப்பு உறுப்புகளை, தொடுவது, சுவைப்பது வரை போயிருக்கிறான் அந்த காமுகன்.

ஒவ்வொரு தடவையும், வேண்டியதெல்லாம் வாங்கிக் கொடுத்து, சரிக்கட்டி, இதுல ஒண்ணும் தப்பில்லை என அவளை நம்ப வைத்திருக்கிறான்.

சொல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் அச்சிறுமி தத்தளித்து, வேண்டா வெறுப்பாய் அவையெல்லாம் செய்ததில்,
படிப்பில் நாட்டம் போனது,
பெற்றவரிடம் சொல்ல அச்சப் பட்டுக்கொண்டு, தனக்குள் தானே மருகி, கடைசியில் மனோநிலை பாதிக்கும் அளவிற்குப் போய் விட்டது.

4. கிட்டத்தட்ட இதே கதை ஒரு ஆண்பையனிடம் நடந்து, அவனை புணர்ச்சி செய்து, அவன் படிப்பு, விளையாடும் திறன் உற்சாகம், எல்லாவற்றையும் தொலைத்த கதையும் உண்டு.
விவரிக்க மனம் வரவில்லை.... பதிவின் நாகரீகம் நோக்கம் கருதி.

5. இன்னொரு பையனுக்கு மன நிலை குன்றிய காரணம், அவன் தன் தாயை, அப்பா அல்லாத வேறொருவருடன், தனியே படுக்கையறையில் அவர்களுக்குத் தெரியாமல் பார்த்ததனால் வந்தது!

இதெல்லாம் என்ன?

இதற்கு என்ன பெயர்?

ஆங்கிலத்தில் இது போன்ற நிகழ்வினை INCEST என்பார்கள்.

தமிழில், "உறவுமுறைப் பாலியல் கொடுமை" என்னலாம்.

பெரும்பாலும் பருவமடையா, பருவத்திற்கு சமீபமான குழந்தைகளே, அதிக விழுக்காடு இதற்கு ஆளாகின்றனராம்.

தெரிந்தவர், பழகியவர், உறவுக்காரர், பெற்றவர் என ஒரு நெருங்கிய வட்டத்துக்குள் இருக்கும் ஒரு சில பெரியவர்களால் இந்த வயதுக் குழந்தைகளுக்கு நிகழ்வதே இதுகாறும் நான் மேற்கோள் காட்டிச் சொன்னது எல்லாம்!

கொஞ்சம் விழிப்புணர்ச்சி வேண்டும் பெற்றோருக்கு!

குழந்தை வளர்ப்போடு நின்று விடாமல், அதன் நலனையும் காக்க வேண்டிய பொறுப்பு நமக்கெல்லாம் இருக்கிறது என்பதை மறந்து விட வேண்டாம்.

அதற்காக, யாரையும் சந்தேகப் பட வேண்டாம்!

இதுவரை முந்தைய பதிவுகளில் சொன்ன வண்ணம் நீங்கள் நடந்திருந்தால், இந்நிலை வராது, அனேகமாய்!

தான் யார், தன் மதிப்பு என்ன; தன் தனித்துவம் என்ன, எப்போதும் என் பெற்றோரை அணுகலாம் என்பவைகள் இதுவரை விதைக்கப் பட்டிருந்தால், 90% இதைத் தவிர்க்க முடியும்.

மீதி அந்த 10% ஆட்கள் என்ன செய்யணும்?

தவறு செய்தவரை மன்னிக்க முற்படாதீர்கள்;
அது கணவனே, மனைவியே, உறவினர், தெரிந்தவர், வேண்டியவரே ஆனாலும் சரி!

உரிய நடவடிக்கை எடுக்த் தயங்காதீர்கள்!

'கூறாமல் சந்நியாசம்" கொள்ள வேண்டாம்.

"கூரை மீதேறிக் கூவி, " இவர்களின் பலவீனத்தை வெளிப்படுத்த வேண்டும், உங்கள் பிள்ளைகள் நலன் கருதி.

குற்றமிழைத்த உங்கள் துணையை எப்படி எதிர் கொள்ளப் போகிறீர்கள் என்பது இப்பதிவின் நோக்கமல்ல என்பதால், இங்கு அதனைச் சொல்லாமல் தவிர்க்கிறேன்.

அது போலவே அவர்களுக்கு நான் என்ன மாதிரியான பதில் சொன்னேன் என்பதனையும் தவிர்க்கிறேன்.

இந்த மாதிரியான கயவர்களைக் கண்டு கொள்ள வேண்டும்!

பெற்றவர்கள்.குழந்தைகளுக்கு [இதுவரை சொலாதிருந்தால்],
அவசியமின்றி யாரும் எவரும் தன்னை ஏதும் செய்ய இணங்கக் கூடாது என்பதை இவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்;

தங்களிடம் எப்போதும், எதையும் சொல்லலாம், காலம் தாழ்த்தாமல், என்பதை அவர்கள் மனதில் பதியச் செய்ய வேண்டும்.

"கூடாது, எனக்கு சம்மதமில்லை. மீறிச் செய்தால், நான் புகார் செய்வேன்" {NO! I am not for it! I will complain!] என்று சொல்ல, கற்றுக் கொடுத்தல் மிகவும் அவசியம்.

செய்வீர்களா?

--------------------------------------------------------

அடுத்த வாரம் முழுதும் நான் டொரோன்டோவில் இருப்பேன். [23 - 30]

இது ஒரு சிந்திக்கத் தூண்டும் பதிவு என்பதால், நிறைய விவாதங்கள் வரும் என எதிர் பார்க்கிறேன்.

படித்துவிட்டு, ஒன்றும் சொல்லாமல் சென்ற எல்லாரும்,

இதுவரை பின்னூட்டமிட்ட அனைவரும் வந்து சிறப்பிக்குமாறு தாழ்மையுடன் வேண்டிக் கொண்டு,

கூடியவரை தூய தமிழில் எழுதிய இந்தப் பதிவினை, திரு. இராம. கி. ஐயா அவர்கள் முழுக் குணம் அடைய வேண்டி அவருக்கு சமர்ப்பிக்கிறேன்.

நன்றி!

38 Comments:

At 9:41 PM, Blogger மங்கை said...

முதல் சம்பவம் மனச பிசஞ்சுடுச்சு சார்..

அந்த தாயின் வேதனையை, மன நிலலையை நினச்சு கூட பார்க்க முடியல

இத தான் " How to say 'NO'" என்று life Skills education ல ஒரு பகுதி, முக்கியமான பகுதி இருக்கு. கூடவே assertiveness பத்தியும் சொல்லவேண்டியிருக்கு

என்ன தான் வகுப்பறையில இது போல பயிற்சிகள கொடுத்தாலும் அந்த மாதிரி ஒரு சூழ்நிலையில, வளரிளம் பருவத்தில இருக்கிறவங்க தங்கள காப்பாற்றிக்கொள்ள முடியிதா என்பது கேள்விகுறி தான்...

இருந்தாலும் இது போல சூழ்நிலைகள் ஏற்படலாம், அப்ப அவங்க எப்படி அவங்கள காபாற்றிக்கொள்ளலாம் என்பதை சொல்வது நமது கடமை...

ரொம்ப நல்லா வந்துட்டு இருக்கு சார்

நன்றி

மங்கை

 
At 9:52 PM, Blogger கோவி.கண்ணன் [GK] said...

//தவறு செய்தவரை மன்னிக்க முற்படாதீர்கள்;
அது கணவனே, மனைவியே, உறவினர், தெரிந்தவர், வேண்டியவரே ஆனாலும் சரி!

உரிய நடவடிக்கை எடுக்த் தயங்காதீர்கள்!
//

உறவுமுறைக்குள் பாலியல் பலாத்காரம் நடைபெறுவது கேள்விப் பட்டிருக்கிறேன்.

எண் 1ல் நீங்கள் சொல்லியிருப்பது காமவெறி இவர்களை தண்டிக்க வேண்டும். இது 99.9% நடைபெறாது. பொறுப்பற்றவர்களின் காமவெறி செயல் அது, அதைப் பாலியிலில் சொல்லத் தேவையில்லை, பொறுப்புடன் இந்த பதிவை படிக்க வருபவர்களுக்கு சொல்ல வேண்டிய விசயம் இதுவல்ல என்று கருதுகிறேன்.

கட்டுரையின் மற்றவை எச்சரிக்கைகாக எழுத்தப்பட்டிருக்கிறது என்று தெரிகிறது. குற்றம் செய்தவர்களுக்கு தண்டனைக் கொடுப்பது பற்றி கூறியது நல்ல அறிவுறுத்தல் !

பாராட்டுக்கள் !

 
At 9:59 PM, Blogger நாமக்கல் சிபி said...

இது போன்ற விபரீத அணுகுமுறைகள் ஏற்படும்போது ஆரம்பத்திலேயே பெற்றோரிடம் சொல்லக்கூடிய பக்குவத்தை பெற்றோர்கள் குழந்தைகளுக்கு ஆரம்பத்திலிருந்தே ஏற்படுத்த வேண்டும்.

இல்லையெனில் இப்படித்தான்

முதலில் "சரியா? தவறா?" என்ற குழப்பம் ஒரு பக்கம், பயம், அச்சம் இன்னொரு பக்கம், தனக்கு என்ன நிகழ்கிறது என்று என்று தெரியாத மனக்குழப்பம் ஒரு பக்கம் என்ற ஒரு நிம்மதியற்ற சூழ்நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

 
At 3:36 AM, Blogger Unknown said...

இந்தத் தொடர்களைப் படிக்கிறேன். சிறப்பாக இருக்கிறது. நன்றி.
எப்படி பெற்றோர்கள் நடந்து கொள்ள வேண்டுமென அறிகிறேன். எனக்கு 6, 8, 13 வயதுக் குழந்தைகள் இருப்பதால் எல்லாம் மிக அவசியமெனப் புரிகிறது. பிள்ளைகளை விட்டு மிகத்தள்ளி இருப்பதால் என் குடும்பத்தலைவிக்கு சொல்லித்தரணும்.
இதில் விவாதிக்கின்ற அளவுக்கு எனக்கு விபரமில்லை.

 
At 5:52 AM, Blogger இராம்/Raam said...

ஐயா ,

முழுவதும் படித்துவிட்டேன். ஆனால் சொல்ல ஒரு கருத்துக் கூட தோணவில்லை. அது ஏனென்றும்கூட தெரியவில்லை. தயவுச் செய்து மன்னிக்கவும்....

(Silent Accept)

 
At 5:53 AM, Blogger Hariharan # 03985177737685368452 said...

எஸ்கே சார்,

பெண் குழந்தைகளுக்குத் தாயைத் தவிர வேறெவரும் அவர்கள் உடலில்எங்கு தொட்டால் "good touch" எங்கு தொட்டால் "bad touch" என்று சொல்லித் தரவேண்டும்.

பள்ளிக்கூடத்தில், ட்யூஷன் படிக்கச் செல்லும்போது, உறவினர்களிடத்தில் என இந்த "good touch" , "bad touch" முறையை கண்காணிப்பதற்குப் பயன்படுத்தலாம்.

அன்புடன்,

ஹரிஹரன்

 
At 6:25 AM, Blogger VSK said...

வேண்டுகோளுக்கு இணங்கி, தங்களது அனுபவமுத்துக்களைச் சேர்த்ததற்கு மிக்க நன்றி, மங்கை.

ஒரு ஆர்வத்தில் ஆரம்பித்து விட்டாலும், எப்படி வரப் போகிறதோ எனப் பயந்தேன்.

நன்றாக வருகிறது எனப் பாராட்டியதற்கு நன்றி.

முதல் பதிவில் சொன்ன அந்த மூன்று 'I'களை மனதில் கொண்டு நடந்தால், பெரும்பாலும் இப்பிரச்சினையைத் தவிர்க்கலாம் எனக் கருதுகிறேன்.

கொத்தனார் வந்து 'நன்றி'களை எண்ணி திட்ட வருவதற்கு முன் போய்விடுகிறேன்!

 
At 6:25 AM, Blogger உங்கள் நண்பன்(சரா) said...

அன்பர் திரு.SK அவர்களுக்கு!

டிஸ்கி: இந்தப் பின்னூட்த்திற்க்கும் பதிவிற்க்கும் சம்பந்தமில்லை!

எனது அலுவலகத்தில் எனக்கும் எனது பங்குதாரர்க்கும் இடையே சிறிது பிரச்சனை இருப்பதால் அதை எப்படி சரி செய்வது என்ற யோசனையில் ,பல நல்ல பதிவுகளை என்னால் படிக்கவும் முடியவில்லை பின்னூட்டமிடவும் முடியவில்லை!

சரியானதும் விரிவாக நான் சந்தித்த பிரச்சனைகள் பற்றி பதிவிட்டு அனைவரிடமும் மன்னிப்புக் கோருவேன்!

எதற்க்காக இந்தப் பின்னூட்டமெனில் நாங்கள் தொடர் எழுதும் போது வாழ்த்தி வரவேற்றவர்களின் நானும் ஒருவன், ஆனால் ஒரு பதிவையும் படித்துப் பின்னூட்டவில்லை என்ற குற்ற உணர்ச்சியில் இதை பின்னூட்டுகின்றேன்.
நிச்சயம் நான் திரும்பி வருவேன்! அப்பொழுது அனைத்தையும் படித்து பின்னூட்டுவேன்!
எனக்கு உங்களைப் போன்ற பெரியவர்களின் ஆசியும் அப்பன் முருகக் கடவுளின் அருளும் முன் நிற்க்கும் என்ற நம்பிக்கையில்!

அன்புடன்...
சரவணன்.

 
At 6:31 AM, Blogger VSK said...

//பாலியிலில் சொல்லத் தேவையில்லை, பொறுப்புடன் இந்த பதிவை படிக்க வருபவர்களுக்கு சொல்ல வேண்டிய விசயம் இதுவல்ல என்று கருதுகிறேன்.//

நான் 90% என்றேன்.

நீங்கள் 99.9% என்கிறீர்கள்.

உங்கள் கனவு வருங்காலத்திலாவது மெய்ப்படட்டும், கோவியாரே!

இது அதிகரித்து வருகிறது, அல்லது அதிகமாய்த் தெரிய வருகிறது என்பதே நடைமுறை உண்மை!

இப்பதிவின் ஆரம்பத்தில் சொன்னது போல, இதைச் சொல்லாமல் அடுத்த பருவத்திற்குச் செல்ல என் மனம் துணியவில்லை.

மேலும், இது யார் யாருக்கு என்று வேறு சொல்லியிருக்கிறேனே!

இங்கு இருப்பவர்கள் பொறுப்பற்றவர்கள் என நான் கருதவில்லை.

மற்றவர்களுக்குச் சொல்ல இது உதவட்டுமே!

என்ன, நான் சொல்றது!

:)

 
At 6:33 AM, Blogger VSK said...

//ஆரம்பத்திலேயே பெற்றோரிடம் சொல்லக்கூடிய பக்குவத்தை பெற்றோர்கள் குழந்தைகளுக்கு ஆரம்பத்திலிருந்தே ஏற்படுத்த வேண்டும்.//

இதைத்தான் முதல் பதிவிலிருந்தே வலியுறுத்தி வருகிறேன், சிபியாரே!

தற்கொலை முயற்சி வரை போன சோகங்கள் எல்லாம் நிகழ்ந்திருக்கிறது.

:(

 
At 6:38 AM, Blogger VSK said...

//மேலே நீங்கள் குறிப்பிட்டவர்களுக்கு நீங்கள் கூறிய பதிலை ......தயவு செய்து குறிப்பிடுங்கள். பலருக்குப் பயன்தரும்.//


"இங்கு தவிர்க்கிறேன்" என்றுதான் சொன்னேன்!

பதிவின் நீளம், நோக்கம் கருதி!

நிச்சயம் அதையும் சொல்வேன்...அடுத்த பதிவில், வைசா!

தொடக்கத்திலிருந்தே ஒரு நேசபாவத்தை வளர்த்து வருவது மிக முக்கியம்.

 
At 6:40 AM, Blogger VSK said...

உங்கள் துணைவியாரை, இதனைப் படிக்கச் சொல்லுங்கள்.

மிக்க நன்றி, திரு. சுல்தான்.

 
At 6:42 AM, Blogger VSK said...

என்னங்க ராம், மன்னிப்புன்னுல்லாம் பெரிய வார்த்தை சொல்றீங்க.

இப்போ சும்ம படிச்சு மனசுல ஒரு மூலைல போட்டு வையுங்க.

பின்னாடி உதவும்!

 
At 6:44 AM, Blogger VSK said...

இந்த ஊரில் [USA] கிண்டெர்கார்டென்[KG] முதல் நாளெ அதைச் சொல்லிக் கொடுக்கிறார்கள்.

இது சில சமயங்களில், தவறாகப் புரிந்து கொள்ளப்படும் சோகமும் உண்டு!

மிக்க நன்றி, ஹரிஹரன்!,

 
At 6:52 AM, Blogger VSK said...

வாங்க சரவணன்! மெதுவா வாங்க!

உங்க பிரச்சினை எல்லாம் விரைவில் சுமுகமாகத் தீர முருகனருள் முன்னிற்கட்டும்!

 
At 7:02 AM, Blogger Sivabalan said...

SK அய்யா,

நல்லா எழுதியுள்ளீர்கள். பல விசயங்களை உங்கள் எழுத்தால் படம் பிடித்து காட்டியுள்ளீர்கள்.

நிச்சயம் ஒவ்வொரு பெற்றோரும் படிக்க வேண்டிய பதிவுகள்...

தொடரட்டும் இந்த மேலான பணி...

நன்றி.

 
At 7:02 AM, Blogger இராம்/Raam said...

//என்னங்க ராம், மன்னிப்புன்னுல்லாம் பெரிய வார்த்தை சொல்றீங்க//


ஐயா,

கொஞ்சநாளைக்கி முன்னாடி நானும் இதைதான் உங்ககிட்டே கேட்டேன்...... :-))))

 
At 7:10 AM, Blogger VSK said...

பாராட்டணும்னா உங்களை நீங்களேதான் பாராட்டிக்கணும், சிபா!

இத்தொடர் எழுதக் காரணமானவர்களில் உங்களுக்கு பெரும் பங்கு உண்டு!

 
At 7:19 AM, Blogger Sivabalan said...

SK அய்யா

// அடுத்த வாரம் முழுதும் நான் டொரோன்டோவில் இருப்பேன். [23 - 30] //

பயனம் சிறக்க வாழ்த்துக்கள்..

 
At 7:26 AM, Blogger சிறில் அலெக்ஸ் said...

SK,
இந்த விஷயம் தமிழில்ல் அதிகம் பேசப் படாததுன்னு நினைக்கிறேன். கவனத்துடன் அழகாய் சொல்லியிருக்கிறீர்கள். நீங்கள் வலியுறுத்திவரும் சுமூகமான, வெளிப்படையான பெற்றோர் பிள்ளைகள் உறவின் மூலம் இந்தமாதிரி செயல்களை தவிர்க்கலாம்.

தொடருங்கள்..

 
At 7:30 AM, Blogger VSK said...

நன்றி, சிபா, சிறில்!

 
At 7:45 AM, Blogger Thekkikattan|தெகா said...

This comment has been removed by a blog administrator.

 
At 8:00 AM, Blogger கார்மேகராஜா said...

இப்பொழுதுதான் முதல்முறை உங்களது பதிவை பார்க்கிறேன். பொழுதுபோக்கிற்க்காக எழுதாமல் மக்களின் நலனுக்கு வலைபதிவை பயன்படுத்துவதை கண்டு மனம் நெகிழ்ந்து உங்களை வாழ்த்துகிறேன். உங்கள் திருப்பணி தொடரவேண்டும்.

 
At 10:39 AM, Blogger G.Ragavan said...

எஸ்.கே. கிட்டத்தட்ட இதையே குறித்து மே 26, 2005ல் நான் இட்ட பதிவு.

http://gragavan.blogspot.com/2005/05/blog-post_26.html

பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் நிச்சயமாக எச்சரிக்கை உணர்வு தேவையே!

 
At 11:14 AM, Blogger VSK said...

'திருப்பணி' ரேஞ்சுக்கு சொன்னதற்கு மிக்க நன்றி, திரு. கார்மேகராஜா!

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.

அருணகிரிநாதர் சொல்லி, நம்ம ஜி.ரா.வும் ஒரு பதிவு போட்டிருக்கிறாரே, அதில் வருவது போல,

"யாம் ஓதிய கல்வியும் எம் அறிவும்
தாமே பெற வேலவர் தந்ததனால்"

அதை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்பி,

"நா மேல் நடக்கிறேன்"! அவ்வளவே!

 
At 11:17 AM, Blogger VSK said...

அட, இப்பத்தான் உங்களைப் பற்றிச் சொன்னேன்!
சொன்னதும் நீங்களே வந்து நிற்கிறீர்கள், ஜி. ரா.!!
எல்லாம் முருகனருள்!

உங்கள் பதிவைப் படித்தேன்.
இது எத்தனையோ விதமாகப் பாதிக்கப் படுகிறார்கள், நாம் காட்டும் அலட்சியத்தால்.

இதன் மூலம் ஒரு சிலருக்காவது விழிப்புணர்ச்சி வந்தால் அதுவே நான் பெறும் பேறு!

மிக்க நன்றி!

 
At 11:53 AM, Blogger Thekkikattan|தெகா said...

எஸ்.கே,

இது போன்ற "உறவுமுறை பாலியல்" வன்முறை இந்தியாவில் காலம் தொட்டே நடைபெறுவதாக சில நம்பந்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றனவே.

இது போன்ற செயல்கள் முன்பும், இப்பொழுதும் கூடத்தான் எல்லா தட்டுக்களிலும் நடைபெறுவதாக உள்ளது. அப்படி நடைபெற்று வெளிவரும் பொருட்டும் குடும்ப கட்டமைப்பு, சமூதாய அங்கீகாரம் மற்றும் ஏனைய புற விசயங்களை கருத்தில் கொண்டு, குழந்தைகளின் முறையீடு புறம் தள்ளப்பட்டு வருகிறது.

சரி, இதில் குழந்தைகள் திருமணம் (இப்பொழுதும் 14 லிருந்து 17 வயது மட்டுமே நிரம்பிய பெண்களை), பிறகு மிக நெருங்கிய சொந்தங்களுக்கு கூடாகவே திருமணம் செய்து கொள்ளுவது இவையனைத்தும் அடங்குமா?

எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணிக்கு, குழந்தை பருவம் தொட்டே இவ் வன்முறை நடந்தேறியதால், ஆண்களின் மீதே ஒரு வித வெறுப்பும், சற்றே மன அழுத்தாத்தாலும் அவ்வப் பொழுது பீடிக்கப்பட்டும் வருகிறார்.

இது போன்ற வன்முறைகள் நடப்பின் குழந்தைகளுக்கு சரியான படி அணுகாத(சிகிச்சை) பட்சத்தில் பிற்காலத்தில் பெரிய பிரட்சினையாக விசுவரூபமெடுக்கிறது என்பதனை யாவரும் அறிய வேண்டும்.

அவசியமான பதிவு!!!

 
At 11:58 AM, Blogger VSK said...

சரியாகச் சொன்னீர்கள், தெ. கா.!

இதெல்லாம் காலம் காலமாய் நடக்கின்ற கொடுமைதான் இது.

இப்போது விழிப்புணர்வு அதிகமாகி இருப்பதால், ஊடகங்களும் இதில் அக்கறை காட்டுவதால், வெளியில் தெரிகிறது.

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இளவயது மணம் பெரும்பாலும் பருவம் அடைந்தபின்னரே நிகழ்வதால் அங்கு சொல்லலாம் என இருக்கிறேன்.

நன்றி.

 
At 12:37 PM, Blogger Kannabiran, Ravi Shankar (KRS) said...

SK
//இதை இங்கு சொல்லாமல் நான் மேலே செல்ல முடியாது!
நான் 90% என்றேன்.
நீங்கள் 99.9% என்கிறீர்கள்.
//

உண்மை தான்! இந்த மாதிரி நிகழ்வுகள் 90%ஆ அல்லது
99%ஆ என்பதல்ல பிரச்னை.
"கூடாது, எனக்கு சம்மதமில்லை. மீறிச் செய்தால், நான் புகார் செய்வேன்" என்ற attitude of response தான் முக்கியம்.

இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் (atleast நடுத்தர மக்கள்) பொறுத்துக் கொள்ளும் மனப்பான்மை உடையவர்கள். அதனால் எதைப் பொறுப்பது, எதை எதிர்கொள்வது, அதுவும் எப்படி எதிர்கொள்வது (வன்முறை இன்றி) என்பதை கட்டாயம் நம் பிள்ளைகளுக்கு மேலோட்டமாகவேனும் சொல்ல கடமைப்பட்டு இருக்கிறோம்.

அதை ஏதோ வகுப்பு போல் சொல்லி எல்லாருமே அப்படித் தான் என்ற எண்ணம் வராமல் casual ஆக பகிர்வதில் தான் வெற்றி உள்ளது.

SK, நீங்கள் குறிப்பிட்ட முதல் சம்பவம் சற்று "வேட்டையாடு விளையாடு" டோஸில் இருந்ததால் GK அப்படி feel பண்ணியிருக்கலாம். மற்றபடி சரியான அலசலே!

 
At 2:19 PM, Blogger பத்மா அர்விந்த் said...

SK, கீழே நான் இது தொடர்பாக எழுதியதில் சில:

http://reallogic.org/thenthuli/?p=179
http://reallogic.org/thenthuli/?p=175
http://reallogic.org/thenthuli/?p=13
சகஜமாக நிறைய குழந்தைகள் பாதிக்கப்படுவதும் பொறுத்து போவதும் நடக்கிறது

 
At 4:31 PM, Blogger VSK said...

உங்கள் தேன் துளிகளை இங்கும் சுவைக்க உதவியதற்கு மிக்க நன்றி, பத்மா.

பதிவைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே!!:))

 
At 6:19 PM, Blogger பத்மா அர்விந்த் said...

பதிவு சொல்லும் கருத்துகள் பலர் நம்ப மறூக்கும் ஆனால் உண்மையான ஒன்றூ. மருத்துவராக நீங்கள் பார்ப்பதை எழுதும் போது நம்பகத்தன்மையை தருகிறது. தொடர்ந்து எழுதுங்கள்.

 
At 6:43 PM, Blogger Machi said...

நீங்கள் சொன்ன பல அவலங்களை முன்பே படித்திருக்கிறேன்.

இதற்கு காரணம் எந்த சமயத்தில் குரலை உயர்த்தவேண்டும் என்பது தெரியாதது தான். மேலும் பெரியவர்களை எதிர்த்துப்பேசக்கூடாது என்று நமக்கு சொல்லியுள்ளார்கள். அது சில சமயம் வினையாக போய்விடுகிறது.

/"கூரை மீதேறிக் கூவி, " இவர்களின் பலவீனத்தை வெளிப்படுத்த வேண்டும், உங்கள் பிள்ளைகள் நலன் கருதி.
/

இது நமது குமுதாயத்தில் எவ்வளவு தூரம் சாத்தியம்? கூரை மீதேறிக் கூவினால் நம் பிள்ளையின் வாழ்வல்லவோ பாதிக்கப்படும்? பத்திரிக்கைகளில் பெயரும் படமும் வருமே? ( நம்ம ஊர் பத்திரிக்கைகளுக்கு சமூக பொறுப்பு என்பது தான் கிடையாதே )
நீதி மன்றத்தில் நீதி கிடைக்க பல ஆண்டுகள் ஆகுமே?
நம் சட்டத்தில் இம்மாதிரி கொடூரர்களுக்கு சரியான தண்டனை கிடையாதே.


ஜம்முவில் பலவந்தமாக/ஏமாற்றப்பட்டு நீலபடத்தில் நடிக்க வைக்கப்பட்ட சிறுமியின்/இளம்பெண்ணின் வழக்கு ஒரு உதாரணம்.

 
At 3:29 PM, Blogger ஜெயஸ்ரீ said...

இந்தக் கதையைப் படித்துப் பாருங்கள். இப்ப்டிப் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்

http://udaru.blogdrive.com/archive/202.html

 
At 4:32 PM, Blogger VSK said...

இதைப் படித்ததும் மனம் அதிர்ந்து போய் விட்டது.
எத்தனை பேர் இந்த லிங்கைத் தொட்டு இதைப் படிப்பார்கள் எனத் தெரியவில்லை.
ஆகவே, உங்கள் அனுமதியுடன் இதனை இஙேயெ முழு அளவில் பிரசுரிக்கிறேன்.
பிரச்சினையின் தீவிரம் புரியும்.
நன்றி ஜெயஸ்ரீ. [still c&p]

- ஜெயந்தி சங்கர் (சிங்கப்பூர்)

"அக்கா"

"எவ்வளவோ 'ட்ரை' பண்ணிட்டேன் மாமா. ஆனா, ஒங்க பொண்ணு கொஞ்சம் கூட தன்னை மாத்திக்க மாட்டேங்கறா. ஒரே பிடிவாதம்", நீண்ட நேரம் பேசியதன் முடிவுரையாக அப்பாவிடம் சொன்னார் அத்திம்பேர். இருவரும் எலியட்ஸ் பீச் வரை நடந்துவிட்டு வந்ததிலிருந்து,அப்பா ஏதோ அறியக் கூடாததை அறிந்து கொண்டதைப்போலவும், பதில் பேச என்ன இருக்கிறது என்பது போலவும் தன்மாப்பிள்ளையின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். காலையில் கிளம்பும்போது இருந்த அப்பாவின் முகத்தை நினைவில் கொணர முயன்றேன், அவர் முகத்தையே பார்த்தபடி.

அவர்களது பேச்சின் தலையோ காலோ புரியாமல் தம்பியும் நானும் அங்கேயே ஹாலில் இருப்பதா இல்லை,நழுவி விடுவதா என்றறியாமல் உட்கார்ந்திருந்தோம்.அம்மாவின் டிபனை மறுத்துவிட்டு, "இதெல்லாம் இப்ப எங்கம்மாக்குத் தெரியாம இருக்கணுமேன்றது தான் என் ஒரேகவலை", என்று சொல்லிவிட்டுப் போனார் கிளம்பினார் ஆதம்பாக்கத்திலிருந்த தன் வீட்டுக்கு.

அதற்குப் பிறகு, அடிக்கடி கண்ணைக் கசக்கிக்கொண்டு வந்தாள் அக்கா. மணமாகி, சில மாதங்கள் கூட சகஜமாக இருந்தாளா என்பதுதான் சந்தேகம். ஒரு வருடம் முன்பு தான், தெரிந்தவர்க ளிடமெல்லாம் கைமாத்தாகவும் கடனாகவும் வாங்கி ஒரே பெண் என்று சொல்லிக்கொண்டே கிட்டத்தட்ட தடபுடலாகச் செய்து வைத்த திருமணம். நீடிக்குமா, பிளவு படுமா என்ற நிலையில் இருந்தது. அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கவலை அரித்தது. அரசல் புரசலாக எனக்கு விஷயம் தெரியவந்தது. "சைக்கியாடிரிஸ்ட்டு கிட்ட கூட்டிண்டு போவேங்கறார்", என்று அதை ஒரு குற்றச்சாட்டாக அக்கா சொன்னாளே தவிர, உதவ நினைத்த அத்திம் பேரின் அக்கறையை உணர மறுத்தாள்.

சீக்கிரமே அக்காவின் மாமியாருக்கு விஷயம் தெரியத்தான் வந்தது. பிள்ளையின் வாயுக்குக் கட்டுப்பட்டு எங்கள் வீட்டிற்கு வந்து கலாட்டா செய்யாமலிருந்தார் அவர் என்று அம்மா சொல்லிக்கொண்டிருந்தாள். இவற்றின் நீட்சியாக அம்மாவுக்கும் அப்பாவுக்குமிடையே அடிக்கடி சண்டை வந்தது. அம்மாவிற்கு ஏதும் சந்தேகம் வரவில்லையோ. இல்லை, நிச்சயம் வந்திருக்கவேண்டும். ஏன், வாயைத்திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை.

பதினோரு வருடங்களுக்கு முன்பு கௌஹாதியிலிருந்து ரிலீ·ப் செய்யப்பட்டு சாமான்களையும் குடும்பத்தையும் அழைத்துக் கொண்டு சென்னை வந்தபிறகுதான் அப்பாவுக்குத் தெரிந்தது, அவர் அமரவேண்டிய இடத்திலிருந்த பொறியாளர் இன்னமும் ரிலீ·ப் ஆகவில்லை என்று. வட மாநிலத்துக்குப் போகமாட்டேனென்று அடம் பிடித்துக்கொண்டு இரண்டு மாதம் லீவு போட்டுவிட்டுப் போயிருந்தார் அந்த மனிதர். சுந்தர் நகரிலிருந்து அப்பா மாங்கு மாங்கென்று தினமும் சாஸ்திரி நகர் போய் பார்க்க வேண்டியவர்களைப் பார்த்துப் பேசிவிட்டு வந்தார். அவரின் முயற்சிகளுக்கு ஒரு பலனுமில்லாமலேயே போனது மூன்று வாரங்களுக்கு மேல்.

சித்தப்பா வீட்டில் நாங்கள் நால்வரும் சௌகரியமாத் தான் இருப்போம் என்று ஒரு நம்பிக்கை காலையில் போய் இரவில் வீடு திரும்பும் அப்பாவுக்கு. தன்னைப்போலத் தான் தன் தம்பியும் இருப்பான் என்ற ஒரு பெரும்போக்கான எண்ணம். " கிச்சனுக்குப் போகாதபடி பூட்டிட்டுப் போயிடறா. இதுகளுக்கு ரெண்டாம் தரத்துக்கு ஒரு உப்புமாவாவது கிளறிக்கொடுக்கணும்னாலும் வழியில்ல. ராத்திரி வரைக்கும் பசியோடயே இருக்குகள். வரபோது பண்ணிண்டு வந்த பட்க்ஷணமெல்லாத்தையும் அந்தாத்துக்குக் கொண்டு போயிட்டா போல்ருக்கு", என்று எப்போதாவது தப்பித் தவறி அம்மா ஏதும் சொன்னாலும், "இங்க பாரும்மா வேற வழியில்ல, அட்ஜஸ்ட் பண்ணிக்கோ. வாழப்பழமோ, பிஸ்கட்டோ வாங்கிக்குடு. இதையெல்லாம் பெரிசு படுத்தாத. எனக்கே ஆயிரம் கவல. இன்னும் ரெண்டு மாசச் சம்பளமும் கிடைக்காது போலத்தான் இருக்கு. அப்பறம் தான் சேர்த்து தருவான்னு நெனக்கறேன். அதுக்காப்புறமாதான் சுப்புணிக்கே இப்ப அவன் நமக்குப் பண்ற செலவுக்குக் கொடுக்கும் படியிருக்கும். நம்மால பாவம் அவனுக்கு தான் கஷ்டம். எதானாலும் நீ தாராகிட்ட கேளேன்," என்று தன் தம்பியைப் பற்றிய கவலையும், தம்பி மனைவிமேல் கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையும் சேர்த்து வார்த்தைகளாய்ப் பேசினார்.

ஒருநாள், 'எல்லாரும் சாப்ட ஒக்காந்துண்டாச்சா', குளித்துவிட்டு இடுப்பில் கட்டிக்கொண்ட துண்டோடும் பெரிய மனிதத் தோரணையோடும் சாப்பாட்டறை வாசலில் நிலையில் தன்இரு கைகளை ஊன்றிக்கொண்டு நின்றுகேட்டான் அஜய்.

அதைக்கேட்டதும் அம்மாவின் முகத்திலும் அக்காவின் முகத்திலும் தெரிந்த வாட்டம் சில நிமிடங்களுக்குள் ஓராயிரம் வார்த்தைகளைப் பேசின. அம்மா கொஞ்ச நேரத்திலேயே சமாளித்துக்கொண்டு, "வாடா கண்ணா, உனக்கும் சாதம் போடறேன்", என்றாள். "இல்ல பெரீம்மா, எனக்கு இப்ப பசிக்கல்ல. நா டிபன்ஸ் காலனிக்குப் போயி சாப்டுக்கறேன்", என்று சொல்லிவிட்டான். எப்படிப்பசிக்கும்? காலையில் ஆபீஸ¤க்கு கிளம்புமுன்பே அரைப்படி பாலில் நாலைந்து ஸ்பூன் பூஸ்டைப் போட்டுக்கலக்கிக் குடிக்க வைத்திருப்பாள் சித்தி. தீபா எழுந்ததுமே குடிக்கவென்று ·ப்ளாஸ்கில் ஊற்றி வைத்து விட்டும் போயிருந்தாள்.

தெரிந்தோ தெரியாமலோ பலசமயங்களில் தன் ஒன்பது வயதிற்கு அதிகமாகத் தான் பேசிவிடுவான் அஜய். தன் அம்மாவும் அப்பாவும் எங்களிடம் பேசும் தொனியை உள்வாங்கிக் கொண்டு, அவர்களில்லாத நேரங்களில் மிக இயல்பாகவே வெளிப்படுத்தினான். அப்போது அவன் என்னைவிட ஒரே வயது இளையவன். என் தம்பியைவிட ஒன்றரை வயது மூத்தவனாக இருக்கலாம். அவனின் தங்கை தீபா என் தம்பியை விட ஓரு சில மாதங்களே இளையவள் .

அம்மா கமகமவென்று சமைத்திருந்த அன்றைய வெங்காய சாம்பாரைப் பாதிக்கு மேல் தூக்கில் கொட்டி, ஆபீஸ¤க்குப் போகும் வழியில் தன் பிறந்தவீட்டுக்குக் கொண்டு போய் விட்டிருந்தாள் சித்தி, இரண்டு வாரங்களாக செய்து வந்ததைப்போலவே. இரண்டு நாட்களுக்கு ஒரு முறை," எங்க அஜய்க்கு அரைச்சுவிட்ட முள்ளங்கி சாம்பார்னா உயிர். நீங்க சூப்பரா பண்ணுவேளா மன்னி", என்று தனக்குத் தோன்றியதையெல்லாம் சமைக்கச்சொன்னாள். மொத்ததில் வேலை வாங்க நன்றாகவே தெரிந்தது. நாங்கள் வந்த அன்று மட்டும் அரைத் தம்ளர் பால் குடித்ததாய் நினைவு. அடுத்த இரண்டே நாளில் வேலைக்காரி நிறுத்தப்பட்டாள். அதான் வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் செய்ய அம்மாவும் அக்காவும் இருந்தார்களே.

மூட்டைகட்டி லாரியில் ஏற்றிவிடப்பட்டிருந்த வீட்டுச் சாமான்கள் எல்லாம் வந்தால் என்ன செய்யவென்ற கவலை ஒருபுறமும், மூன்று குழந்தைகளின் படிப்பு தடைபடுமா, இல்லை ஏதாவது ஒரு பள்ளிக்கூடத்தில் தற்காலிகமாக இடம் கிடைக்குமா என்ற கவலை மறுபுறமுமாக அப்போதெல்லாம் அப்பாவின் முகத்தைப் பார்க்கவே முடியவில்லை. அவ்வப்போது பேருந்து இலக்கங்களை கேட்டறிந்து கொண்டு அக்கா மட்டுமோ, அக்காவோடு நானுமோ சேர்ந்து, அப்பாவுக்கு குவார்டர்ஸ் பெஸண்ட் நகரில் கிடைக்கப்போகிறதா, இல்லை கேகேநகரிலா என்றே தெரியாததால், இரண்டு இடங்களிலும் சுற்றுவட்டாரத்தில் உள்ள பள்ளிகளுக்க்கெல்லாம் சென்று வந்தோம். வகுப்புகள் மூன்று, ஐந்து மற்றும் எட்டில் இடம் வேண்டியிருந்தது.

இதற்கிடையில் லாரியில் சாமான்கள் வருவதற்கு ஒரு வாரத்திற்குமுன்பு, தனக்கு ஒதுக்கப்பட்ட குவாட்டர்ஸை, ஆபீஸ¤க்கு அருகில் தானிருந்த வாடகை வீட்டிலிருந்து மாற விருப்பமில்லாத ஓர் அதிகாரி அப்பாவை எடுத்துக் கொள்ளச்சொன்னார். அது பெஸண்ட் நகர் பேருந்து நிறுத்ததிற்கு அருகில் இருந்தது. அப்பாவுக்கு சின்ன ஒரு நிம்மதி. அங்கே போய் பார்த்தபின்னர்தான் தெரிந்தது, வீடு வசிக்குந்தரத்தை இழந்து பல வருடங்களாகி விட்டிருந்தது. அதிலும் சமையலறையில் என்னதான் செய்தார்களோ, அப்படியரு ஆபாசமான அழுக்கும், கரியும். அக்காவும் அம்மாவும் மாறி மாறி பலமுறை சோப்பைப் போட்டுத் தேய்த்துக் கழுவிக் களைத்தார்கள். அப்பாவும் நானும் இடையிடையே உதவிக்கரம் நீட்டினோம். ஆனால், மேடையும் தரையும் அதன் சுயரூபத்தை அடையவேயில்லை. மாலையில் ஸ்கூட்டரில் வந்த சித்தப்பாவும் சித்தியும் மேற்பார்வையிடும் தோரணையோடு, "என்ன கிளீனிங்க் எல்லாம் எந்த மட்டுல இருக்கு?", என்று கேட்டனர். "நேத்திக்கி பார்த்ததுக்கு இன்னிக்கி க்ளீனாயிடுத்து இல்ல தாரா?" என்று அம்மா கேட்டதற்கு சித்தி,"எங்களோட ஸ்டாண்டடுக்குன்னா இல்லன்னுதான் சொல்லணும். ஒங்களுக்கென்ன மன்னி, அட்ஜஸ்ட் பண்ணிப்பேள்", என்றாள், தன்னை உயர்த்தி அம்மாவைத் தாழ்த்தக் கிடைத்த அரிய வாய்ப்பை நழுவவிடாமல். சித்தப்பா சித்தியை எங்களுக்கு உதவச்சொன்னதும், "ம், அதுக்கென்ன, புடைவை டிரைக்கிளீனிங் பில்ல மட்டும் ஒங்களுக்கு அனுப்பிடறேன் அண்ணா", என்று ஜோக்கடித்து தன் அந்தஸ்தை மேலும் உறுதியாக நிலைநாட்டினாள்.

ஹாலில் ஒரு ·பேன் ரிப்பேர். ஆகவே, சித்தப்பா மிகவும் அன்பாக," அஜயும் தீபாவும் அந்தாத்துலயே படுத்துண்டுட்டா. பத்மினி, நீ வேணா இங்க வாயேன்," என்று அக்காவைக்கூப்பிட்டவுடன் போய்ப் படுத்துக்கொண்டாள் அக்கா. கட்டிலிலிருந்து விழுந்துவிடுவாள் என்று அம்மா சொன்னதற்கு," அதுக்கென்ன மன்னி, ரெண்டு பேருக்கும் நடுவுல படுத்துக்கட்டும்", என்று சொன்னார் பெரியப்பா.

நடு ராத்திரியில், அக்கா ஹாலுக்கு ஓடிவந்து, ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்த அம்மாவின் தோளைப்பிடித்து உலுக்கினாள். என்னடி என்றபடி சலித்துக்கொண்டே எழுந்த அம்மாவிடம், "அம்மா,.பயமா இருக்கும்மா,.."என்றாள். "என்னடி பயம்? பாத்ரூம் போணுமா? வரட்டா?", என்று கேட்டாள். புரண்டு புரண்டு படுத்து, தூக்கத்தை வலுவில் வரவழைக்கும் முயற்சியில் இருட்டுக்குப் பழகிவிட்டிருந்த என் கண்களுக்கு அக்காவின் தவிப்பும் உணர்ச்சிப்பெருக்கும் தெள்ளெனத் தெரிந்தது. நான் முழித்துக் கொண்டு விட்டிருந்தேன் என்று இருவருக்கும் தெரிந்திருக்கவில்லை.

"இல்லம்மா,.. யாரோ மாரைப்போட்டு மாவுபிசையறமாதிரி பிசஞ்சாப்ல இருந்துது. யோசிச்சுண்டே, திரும்பிப் படுத்துண்டு தூங்கிட்டேம்மா. மொதல்ல, ஒண்ணும் புரியல்ல. மறுபடியும் அதே மாதிரி வலிச்சுது. சட்டுன்னு முழிப்பு வந்துடுத்து. டக்குன்னு அந்தக் கையப்பிடிச்சேன். சொரசொரன்னு சித்தப்பாவோட கை. எனக்கு தூக்கிவாரிப் போட்டுது. இருட்டுல சித்தப்பா கண்ணுல பளீர்னு மின்னலா ஒரு பயம். எங்கைய உதறிட்டு செவுத்தப்பார்த்துத் திரும்பிப் படுத்துண்டுட்டா. நா எறங்கி இங்க ஓடி வந்துட்டேன் ", அக்கா விசும்பிக்கொண்டே அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். அந்த வயதுக்குப் புரியக்கூடிய அளவே புரிந்த எனக்கு, அக்காவின் மீது பரிதாபம் மட்டுமே பிறந்தது. கட்டிலின் மறுபுறம் படுத்திருந்த சித்திக்கு நடந்தது தெரியாமல் போனது பெரும்புதிர்தான். ஆழ்ந்த உறக்கம் போலும்.

"என்ன வக்ரம், என்ன தைரியம், அண்ணன் மகள், தன் மகள் என்று உலகத்துல எல்லாரும் நம்பறதால, வெளியில சொன்னா, யாரும் நம்புவாளா? அந்தத் தைரியம் தானோ. தனக்கும் ஒரு பொண் இருக்கறதே மறந்து போச்சோ", என்றெல்லாம் ஏதேதோ படபடவென்று பொரிந்து கொட்டிய அம்மா இறுதியில், சற்று தள்ளிப் படுத்துக்கொண்டு அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த அப்பாவைப் பார்த்தபடி,"இத யார்கிட்டயும் சொல்லாதடி. அப்பாவுக்குத் தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படுவா", என்றபோதுதான் நான் துணுக்குற்றேன். அந்த வயதிலேயே அம்மாவின் செயலில் இருந்த முட்டாள்தனம் புரிந்தது. அக்காவின் அண்ணனாகப் பிறக்காமல் போனேனே என்று முதல் முறையாகத் தோன்றியது.

அடுத்தநாளே அம்மா பிடிவாதமாக பெஸண்ட் நகர் குவாட்டர்ஸ¤க்குக் கிளம்பிவிட்டாள். அன்று முதல் அம்மாவைத் தவிர குடும்பத்தின் மற்றமூவரிடமும் முன்போல நெருங்கிப் பழகுவதை நிறுத்திவிட்டாள். வீடுமாறிப்போனதிலிருந்து சித்தப்பா குடும்பத்தினர் யாரும் வருவதில்லை.

வருடங்கள் உருண்டன. அக்கா தனக்கு நடந்ததை மறந்திருப்பாள் என்று நினைத்திருந்த அம்மாவுக்கு அக்காவினுள் ஆழமாய் ஏற்படுத்தியிருந்த சிறுவயது நிகழ்ச்சியின் பாதிப்பு நீங்கியிருக்கவில்லை என்ற உண்மை ஏற்றுக் கொள்ளும்படியிருக்க வில்லை என்றே தோன்றியது. கவலை அவளை ஒரு நோயாளியாக்கியது. எல்லோரும் முயன்றபோதிலும் அவளின் திருமணம் விவாகரத்தில் தான் முடிந்தது. அப்பா போய்ச் சேர்ந்தார் அந்தக் கவலையிலேயே.

துக்கம் கேட்க வந்த சித்தப்பாவும், தன் பங்குக்கு எல்லோருடனும் சேர்ந்து அப்பாவின் இறப்புக்கு அக்காவைக் காரணம் காட்டிப்பேசிவிட்டுப்போனார். அப்போதுகூட ஏன் அம்மாவால் முகத்துக்கே நேராகக் கேட்கமுடியவில்லை என்றுதான் எனக்குக் கடைசிவரை விளங்கவேயில்லை. தன் பிரச்சனையை உளவியல் கண்ணோட்டத்தோடு பார்க்கமாட்டேன்று அக்கா ஏன் பிடிவாதமாக இருந்தாளோ என்று சற்று எரிச்சலாகவும் இருந்தது.

அம்மாவின் மேல் கோபமாய் வந்தது. எல்லாப்பெண்களும் இப்படித்தானா இல்லை, அம்மாமட்டும் இப்படியா? குட்டக்குட்டக் குனிந்து பழகி, குட்டாமலே குனிந்துபிறகு, நிமிரத்தெரியாமல் போன அடிமைத்தனம் எல்லாப் பெண்களின் மரபணுக்களிலும் பச்சென்று படிந்திருந்ததுதான் காரணமோ. திணிக்கப்பட்டதை அப்படியே எற்று ஏற்று மரத்துப்போனபோக்கோ. அக்கா மற்றும் அம்மாவின் அந்தரங்கத்தை மதித்து சித்தப்பாவிடம் பட்டென்று உடைத்துக் கேட்டுவிடத் துடித்த என் நாவைக் கட்டுப்படித்துக்கொண்டது சரிதானா?

வங்கித் தேர்வுகளையெல்லாம் எழுதித் தேறினாள் அக்கா. சொகுசாய் காரில் வேலைக்குப் போய் வந்தாள் வங்கி அதிகாரியாக.

அக்காவின் முகத்தில் ஒரு தெளிவு இருந்தாற்போலிருந்தது. ஓரிரு வருடங்களில் பல முறை அம்மா கல்யாணப் பேச்சை எடுத்துவிட்டாள். பிடிகொடுக்காமலே இருந்த அக்கா ஒரு நாள் தாங்கமுடியாத எரிச்சலிலும் கோபத்திலும் "யாரும் என்னத் தொடக்கூடாதும்மா. அப்படியாராவது இருந்தாப் பாரு. உனக்காகப் பண்ணிக்கறேன்", என்று அம்மா முகத்தைப் பார்த்துக் கத்தினாள். அறையில் இருந்த எங்களிருவரையும் திரும்பிப்பார்த்த அவள் கண்களில் கண்ணீர் நிறைந்து விட்டிருந்தது.

 
At 4:36 PM, Blogger VSK said...

எவ்வளவு பதட்டத்துடன் இதை பதிந்திருப்பீர்கள் என்பது 6 முறை இதனைப் பதித்ததில் இருந்து தெரிந்து கொண்டேன்,ஜெயஸ்ரீ .

எழுந்திரு! விழித்திரு! அன்பாயிரு!

 
At 7:02 AM, Blogger ஜெயஸ்ரீ said...

ஜெயந்தி சங்கர் எழுதிய அற்புதமான கதை. அவருக்குதான் நன்றி சொல்ல வேண்டும்.

இப்படிப் பாதிக்கப்பட்டவர்கள் பலர் இருக்கிறர்கள். பாதிப்பின் தீவிரம் மட்டும் மாறுபடுவதுண்டு. இளம் வயதில் நிகழும் இத்தகைய நிகழ்வுகள் ஆழ்மனத்தில் பல நிரந்தரப் பாதிப்புகளை, வடுக்களை ஏற்படுத்தி விடுகின்றன.

இந்தக் கதையில் பாதிப்பு வெளிப்படையாக உள்ளது. சிறுவயதில் நிகழ்ந்த நிகழ்வுக்கும் பாதிப்புக்கும் எளிதில் தொடர்புபடுத்திக்கொள்ள முடிகிறது.

பல சமயங்களில் இது அவ்வளவு எளிதாக இருப்பதில்லை. சிறுவயதில் ஏற்படும் இத்தகைய நிகழ்வுகளின் பாதிப்பு மன அழுத்தம், தன்னம்பிக்கை மற்றும் சுயமரியாதை இன்மை , சிடுசிடுப்பு போன்ற பல விதங்களில் வெளிப்படுகிறது. ஒரு முழுமையான வாழ்க்கை வாழ முடியாமல் தான் செய்யாத தவறுக்காக வாழ்க்கை முழுவதும் தண்டனை அனுபவிக்கின்றனர்.

இப்படி ஒரு மனதைக் கொல்வது மிகக் கொடிய குற்றம் என்பதை நாம் உணர வேண்டும்.

 
At 8:29 AM, Blogger VSK said...

அருமையான உங்கள் கருத்துகளை முழுதுமாய் ஒத்துக் கொள்கிறேன்.

நல்லதொரு கதையைப் பகிர்ந்ததற்கு மீண்டும் நன்றி. ஜெயஸ்ரீ

 

Post a Comment

<< Home