"கசடற"

அறிவியல் தொடர்பான எனக்குத் தெரிந்த தகவல்களை, ஒரு மருத்துவன் எனும் பார்வையில் சொல்ல விழைகிறேன். முழுக்க முழுக்க இவை என் கருத்துகள் மட்டுமே! முருகனருள் முன்னிற்கும்!

Sunday, March 04, 2007

"லப்-டப்" -15 "ஆ! நெஞ்சு வலிக்குதே" [4-ம் பகுதி]

"லப்-டப்" -15 "ஆ! நெஞ்சு வலிக்குதே" [4-ம் பகுதி]

"சோதனை மேல் சோதனை போதுமடா சாமி!"

இதயத் தாக்குதல் எவ்வாறு நிகழ்கிறது, அதன் அறிகுறிகள் என்னென்ன என்பதைச் சென்ற பதிவில் பார்த்தோம்.

மையோகார்டியல் இன்ஃபார்க்ஷன் [Myocardial Infarction, MI] என்றால் என்ன?

அப்படி என்றால் என்ன?
எப்படி நிகழ்கிறது?
எதனால் வருகிறது?
இதன் அறிகுறிகள் என்னென்ன?
எப்படி இதைத் தவிர்க்க முடியும்?


என்ன சிகிச்சை இதற்கு?
சிகிச்சைக்குப் பின் என்ன செய்ய வேண்டும்?


இப்படி வருவதை, [அ] வரப்போவதை எப்படிக் கண்டுபிடிப்பது?
இதற்கான சோதனைகள் என்ன?
என்பதை இன்று பார்ப்போம்.

மோஹனுக்கு நெஞ்சுவலி வந்தது; அவன் நண்பன் குமார் உடனே அவனுக்கு உதவி அளிக்க வந்தான் என முதல் பகுதியில் பார்த்தோம்.

என்ன செய்தான் அவன்?

மோஹனிடம் 'இதோ நான் உடனே வருகிறேன்' எனச் சொன்னதும், உடனடியாக அவன் அவசரச் சிகிச்சைப் பிரிவிற்கு தொலபேசினான்.


உடனடியாக ஒரு ஆம்புலன்ஸை[ambulance] மெரீனா கடற்கரைக்கு கண்ணகி சிலை அருகில் வரச் சொல்லிவிட்டு, தன் காரில் விரைந்தான்.

அதற்குள் புத்திசாலித்தனமாக, மோஹனும், அருகில் இருந்த சிலரைக் கூப்பிட்டு, தன்னை கண்ணகி சிலையருகில் கொண்டு செல்லுமாற வேண்ட, அவர்களும் உடனடியாக நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து அப்படியே செய்தார்கள்.

சிறிது நேரத்தில் மருத்துவ ஊர்தி [ஆம்புலன்ஸ்] அங்கு வர, இரண்டு செவிலியர் [நர்ஸ்]அவன் இருக்குமிடம் நோக்கி விரைந்தனர்.
குமாரும் இப்போது வந்துவிட்டான்.

"என்னங்க பண்ணுது உங்களுக்கு?" எனக் கேட்டபடியே ஒருவர் மோஹனின் நாடித்துடிப்பு, ரத்த அழுத்தம், ஈ.ஸி.ஜி. [Pulse, Blood Pressure, E.C.G.] இவற்றைப் பரிசோதிக்க முனைய, அடுத்தவர், இவன் சொன்ன தகவல்களை ஒரு தாளில் குறித்துக் கொண்டே, ஸெல்ஃபோனில் அதை மருத்துவமனைக்கு அனுப்ப ஆரம்பித்தார்.

சிறிது ரத்தமும் எடுக்கப்பட்டு, ரத்தத்தில் இருக்கும் ரசாயன அளவுகள்[Blood chemistry] உடனடியாகப் பரிசோதிக்கப்பட்டு, அவையும் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

இவற்றின் மூலம், மோஹனுக்கு வந்திருப்பது ஒரு இதயத் தாக்குதல் தான்[Heart Attack] என்பது உறுதி செய்யப்பட்டு, மேலும் இரு பணியாளர்கள் ஒரு ஸ்ட்ரெட்ச்சரைக் கொண்டுவர, அதில் ஏற்றப்பட்டு, மருத்துவ ஊர்தியில் உடனடியாக மோஹன் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டான்.

செல்லும் வழியிலேயே ஒரு ஆஸ்பிரின் மாத்திரயும், ரத்தக்கட்டியைக் கரைக்க உதவும் [Thrombolytics, clot-busters] ஒரு ஊசியும் போடப்பட்டது.


அங்கு அவசரச் சிகிச்சைப் பிரிவில் உடனடியாக அனுமதிக்கப்பட்டு, மீண்டும் ஒரு முறை, முறையான் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

முதலில் சொன்ன சோதனைகள் மீண்டும் செய்யப்பட்டு,இதயத்தாக்குதல்தான் என்பது உறுதி செய்யப்பட்டதும், கீழ்க்கண்ட சோதனைகள் ஆரம்பிக்கப் பட்டன.

எக்கோகார்டியோக்ராம் [Echo cardiogram] : இதயம் எப்படி ரத்தத்தை 'பம்ப்' [pump] செய்து அனுப்புகிறது, எந்தெந்த இடங்களில் இது முறைப்படி நிகழவில்லை, எந்த இடங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றன என்பதைக் கண்டுபிடிக்க உதவும் சோதனை இது.

கார்டியாக் கதீட்ரைஸேஷன்[Cardiac Catheterization] : அவசர சிகிச்சை பலனளிக்கவில்லை, வலி இன்னும் குறையவில்லை எனும் நிலையில், அடுத்து உடனடியாகச் செய்யப்படும் சோதனை இது. நேரடியாக காலில் இருக்கும் ஒரு பெரிய நாளம் வழியாக ஒரு கம்பி மூலம்[ இது வெறும் இரும்புக்கம்பி அல்ல! இதயம், இதயக்குழாய்களின் உள்ளே நிகழ்வதைப் பார்க்கவும், தேவைப்பட்டால், அடைப்பை நீக்கவும் இது உதவும்] இதயத்திற்குள் நிகழ்வதைப் பார்க்க உதவும் ஒரு சோதனை.

இதன் மூலம், அடுத்து என்ன செய்ய வேண்டும், வெறும் அடைப்பை நீக்கினால் மட்டும் போதுமா [PTCA], இல்லை, அடைப்பு இருக்கும் இடத்தில் ஒரு விரிப்பான்[stent] போடணுமா, இல்லை முழுதுமாகவே பழுதுபட்ட ரத்தக்குழாயை மாற்றணுமா[CABG] எனபதை முடிவு செய்யவும் இது தேவையானதாகிறது.

மோஹனுக்கும் இவையெல்லாமும் நிகழ்ந்தன!

இரண்டு இதயக் குழாய்களில்[Coronari arteries] அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, 'பை-பாஸ் ஸர்ஜரி'[By-pass surgery, CABG] செய்ய முடிவெடுத்து, அவனது காலில் இருக்கும் ஸஃபேனஸ் நாளத்தில் [Saphenous Vein] இருந்து சிறு துண்டுகள் வெட்டப்பட்டு, அவை இதயத்திற்கு ரத்தமளிக்கும்,.... ஆனால், இப்போது பழுதுபட்ட,..... குழாய்களுக்கு மாற்றாகப் பொருத்தப் பட்டன.


[இதய பலஹீனமானவர்கள் பார்க்க வேண்டாம்!]


[கொத்தனாருக்கு நன்றி!]

பிறகு, அங்கிருந்து, 'அதிதீவிர சிகிச்சை வார்டுக்கு'[Intensive Care Unit] மோஹன் கொண்டு செல்லப்பட்டு, முறையாகக் கவனிக்கப்பட்டு, 3 நாட்களுக்குப் பின், வீடு திரும்பினான்!

இனித்தான் இருக்கிறது இன்னும் சில சோதனைகள் !

அறுவை சிகிச்சை முடிந்து ஒரு இரண்டு மாதங்கள் ஆகும், உங்கள் இதயமும், மற்ற இடங்களும் முழுதும் குணமாக!

முதல் ஒரு வாரத்திற்கு, மிகவும் அசதியாகவும் சோர்வாகவும் இருக்கும்.

அறுவை சிகிச்சை முடிந்த அடுத்த இரு வாரங்களில் மோஹன் என்ன செய்யணும்?

படுக்கையிலேயே விழுந்து கிடக்காமல், தனக்குத் தேவையான காரியங்களை அடுத்தவர் உதவியின்றி தானே செய்து கொள்ளத் துவங்கினான்.

ஒரே நேரத்தில் அடுத்தடுத்து எல்லாவற்றையும் செய்ய முற்படாமல், விட்டு விட்டு, செய்தான். காலையில் பல்தேய்த்து விட்டு, ஒரு அரை கப் டீ சாப்பிட்டு விட்டு, சற்று நேரம் பேப்பர் படித்துவிட்டு, பிறகு கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டு, பின்னர், ஷேவிங்...... இப்படி படிப்படியாக செய்து வந்தான்.

மாடிப்படி ஏறக் கூடாது என மருத்துவர் தடை விதிக்காததால், மெதுவாக ஒருநாளைக்கு ஒரு முறை மாடிப்படிகளில் மெதுவாக ஏறி, சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு, பின்னர் கீழே இறங்கி படுக்கையில் படுத்துக் கொள்வான்.

எவ்வளவு நேரம் ஒரு நாளைக்கு நடக்கலாம் என மருத்துவர் சொல்லியபடி, இதையும் ஒரே நேரத்தில் செய்யாமல், விட்டுவிட்டு நடை பழகினான் [intermittent walking]!

கொஞ்சம் தெம்பு வர ஆரம்பித்ததும், வீட்டுவேலைகளில், ராதாவிற்கு உதவியாக சில சில வேலைகள்... துணி மடித்து வைத்தல், காய்கறி நறுக்கிக் கொடுத்தல், செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சுதல்.... செய்யத் தொடங்கினான்.

பளு தூக்கவோ, பெரிய சாமான்களை இழுக்கவோ முயற்சிக்கவில்லை.

இரு வாரங்களுக்குப் பிறகு, மருத்துவரைப் போய்ப் பார்த்தான்.

அவர் மீண்டும் ஒரு முறை, நாடி, ரத்த அழுத்தம், ஈ.ஸி.ஜி. போன்ற சோதனைகளைச் செய்து, தேறிவருகிறான் என்பதை உறுதிப் படுத்தி, மேலும் சில கடினமான வேலைகள் செய்ய இவனை அனுமதித்தார்.

அப்போது, ராதா, டாக்டரைப் பார்த்து சொன்னாள்," டாக்டர், இப்பவெல்லாம் இவருக்கு கொஞ்சம் கோபம் அதிகமாவே வருது. கூடவே பிரமை பிடிச்ச மாதிரி மோட்டுவளையைப் பார்த்துகிட்டு உக்கார்ந்திருக்காரு. என்னங்கன்னு கேட்டா, எரிஞ்சு விழறாரு. திடீர்னு, ராத்திரில எழுந்து என்னைக் கட்டிபிடிச்சுகிட்டு, 'நான் உங்களையெல்லாம் விட்டுட்டு சீக்கிரமா போயிருவேனா'ன்னு குழந்தை மாதிரி அழறாரு. இதல்லாம் ஏன் வருது? நான் எவ்வளவோ மாறிட்டேன். அந்தப் பொண்ணு கூடவும் பேசிட்டேன். அது என் கையைப் பிடிச்சுகிட்டு 'அவர் எனக்கு ஒரு அண்ணா மாதிரி. வேற ஒண்ணும் தப்பா எங்களுக்குள்ளே ஒண்ணுமில்லை'ன்னு சொல்லி அழுதிச்சு. எனக்கும் எல்லாம் புரிஞ்சு போச்சு. இனிமே அப்படி ஒண்ணு எங்க வாழ்க்கையில நடக்காது. இப்ப இவருக்கு எப்படி நான் ஆறுதல் சொல்றது?" எனக் கண்ணீர் விட்டாள்.

டாக்டர் அவளைப் பார்த்துச் சொன்னார்.


"நடந்திருக்கிறதுஒரு பெரிய அறுவை சிகிச்சை. அதுவும் இதயத்துல! எந்த மனுஷனுக்கும் கலக்கம் வர்றது சஹஜம்தான். இதை நீங்க புரிஞ்சுக்கணும். நான் ஸொல்ற விஷயங்களைக் கவனமா செயல்படுத்துங்க. கொஞ்ச நாள்ல இது சரியாயிடும். எனச் சொல்லி கீழ்க்கண்டவற்றைச் சொன்னார்.

1. தினம் ஒழுங்கா நேரத்துக்கு எழுந்து, நீட்டா ட்ரெஸ் பண்ணிக்கணும்.

2. படுக்கையிலேயே விழுந்து கிடக்கக் கூடாது.

3. தினசரி ரெகுலரா நடக்கணும் [walking]

4. எதையும் மனசுல போட்டு குழப்பிக்காம உங்க கிட்ட வந்து ஸொல்றாரு இல்லியா, அப்ப ஆறுதலா நாலு வார்த்தை பேசுங்க.

5. டயத்துக்கு தூங்கப் போகணும். சரியாத் தூங்கலேன்னாலும், எரிச்சல், அசதில்லாம் வரும்.
வேனும்னா நான் ஒரு மைல்ட் தூக்க மாத்திரை தரேன்.

6. நெருங்கின நண்பர்களைத் தவிர அதிகம் பேரோட பேச வேண்டாம், இன்னும் கொஞ்ச நாளைக்கு.

7. கார்டியாக் ரீ-ஹேப் ப்ரொக்ராம்ல சேரணும்.

8. டி.வி., கம்ப்யூட்டர்ல அதிர்ச்சி அளிக்கும் நிகழ்ச்சிகளையோ, பதிவுகளையோ பார்க்கவேண்டாம்.

9. முக்கியமா, உடலையும், மனஸையும் சந்தோஷமா வெச்சுக்கணும்.

இதுல எதனாச்சும் குறைவா இருக்கற மாதிரி தெரிந்தாலோ, அல்லது, மனச்சோர்வு குறையாமலிருந்தாலோ, உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை கேளுங்கள். இதைக் குறைக்க மாத்திரைகளும், மனநல ஆலோசனைகளும்[Counselling] கிடைக்கும்!:))

"அப்போ என்னென்ன அவர் சாப்பிடலாம் டாக்டர்!" என்று தொடர்ந்தாள் ராதா.

'நிறைய காய்கறிகள், பழம், சத்துப் பொருள்கள் எனச் சொல்லப்படும் Whole Grains சேர்த்துக்கணும்.

கலோரி அளவைக் கவனமாப் பார்த்துக்கணும்.

சரியான விகிதத்தில் புரதச் சத்தைத் தெரிந்தெடுத்து சேர்த்துக்கணும்.

சர்க்கரைச் சத்து எனச் சொல்லப்படும் கார்போஹைட்ரேட்ஸில் [Carbohydrates] இருவகைகள் உண்டு. உடனடியாக [simple], [அ] சற்றுத் தாமதித்து[complex] சக்தி கொடுப்பன எனப்படும். இவற்றுள் பிந்தைய வகையை [Complex] சற்று அதிகமாகவும், மற்றதை [simple] சற்று அளவோடும் உபயோகிக்கணும். :)

கொழுப்புச்சத்துள்ள பொருள்களை [Cholestrol] அளவோடு சேர்த்துக்கணும்.

உப்பைக் [Sodium] குறைக்கணும்; கால்ஸியம், பொட்டஷியம், மங்கனீஸ் Calcium, potassium, manganese] போன்ற தாதுப்பொருட்கள் இருக்கும் உணவுவகைகளைச் சேர்த்துக்கணும்.'

"அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் டாக்டர். எப்படிச் சொல்றதுன்னு தெரியலை....." என தரையைப் பார்த்துக் கொண்டே சொன்னாள் ராதா.

"புரியுதும்மா, புரியுது! நீங்க என்ன கேக்க வறீங்கன்னு புரியுது. தாம்பத்திய உறவு [Sexual activity] வெச்சுக்கலாமா இப்ப என்பதுதானே உங்க கேள்வி? தாராளமா வெச்சுக்கலாம். ஒருமுறை உடலுறவு கொள்வது என்பது, ஒரு முறை இரண்டு மாடி எறி இறங்கும் அளவுக்கோ [Two flight of stairs] அல்லது அரை மைல் [0.8km] தூரம் சீராக நடக்கும் அளவிற்கோதான் சக்தி தேவைப்படுகிறது. எனவே, மோஹனுக்கு இது போன்ற பயிற்சிகள் போது நெஞ்சுவலி வரவில்லை என்றல், இதற்கும் வராது. ஆனால், அதே சமயம், நெஞ்சுவலிக்கான அறிகுறிகளோ, மூச்சு வாங்குதலோ, அல்லது அளவிற்கும் மீறி அசதி ஏற்பட்டாலோ உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது மிக முக்கியம்" என்றார் மருத்துவர்.


இதில் கவனத்தில் கொள்ள வேண்டியவை:

1. இருவரும் திறந்த மனத்துடன் இதை அணுகவேண்டும்.[Open minded approach]

2. நல்ல ஓய்வுக்குப் பின்னரே இதில் ஈடுபடணும்.

3. சற்று கவனத்துடனும், அன்புடனும் செயல்படணும்.

4. ஒரு சில மருந்து மாத்திரகளின் விளைவாக, ஆரம்ப கட்டத்தில் சற்று தாமதம் ஏற்படலாம். பயப்படத் தேவையில்லை. சரியான புரிதல், மற்றும் சில முன்விளையாட்டுகள்[foreplay] மூலம் இதை சரி செய்துவிடலாம்.

இதயத்தாக்குதல் மீண்டும் நிகழாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த மினி தொடரின் இறுதிப் பகுதியில் பார்க்கலாம்.

[இதில் சொல்லப்பட்டிருப்பவை ஒரு தகவலுக்கு மட்டுமே! உங்கள் மருத்துவர் முறையான வழிகளைச் சொல்லுவார்.]


28 Comments:

At 3:12 PM, Blogger இலவசக்கொத்தனார் said...

நல்லவே 'ஸொல்லறீங்க'!!

எனக்கு ஒரு சந்தேகம். இந்த பைப்பாஸ் ஆப்பரேஷனுக்கு காலில் இருக்கும் நாளத்தில் இருந்து துண்டுகளை வெட்டினால் அங்கு என்ன ஆகும்? அப்படி காலில் இருக்கும் நரம்பு (இதுவும் நாளமும் ஒண்ணுதானே?) எப்படி மத்த இடத்தில் பொருந்துது? இதைப் பற்றி கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்களேன்.

 
At 3:47 PM, Blogger VSK said...

//நல்லவே//

எ.பி!!

 
At 3:49 PM, Blogger VSK said...

//(இதுவும் நாளமும் ஒண்ணுதானே?//

முன்பு ஒரு பதிவில் ஸொல்லியிருக்கிறேன், நாளத்தைத் தான் தவறாக நரம்பு என நம்மூரில் அழைக்கிறோம் என.

நரம்பு என்றால் nerve.
நாளம் என்பது blood vessel

 
At 3:51 PM, Blogger VSK said...

இது பற்றி பொதுவில் சொல்ல வேண்டாமென நினைக்கிறேன், கொத்தனாரே!

உடலில் இருக்கும் எல்லா நாளங்களும் ஒரே மாதிரியானவைதான்.

இதுபோல பல்லாயிரம் ஆண்டுகள் கழித்து இப்படி சில அறுவை சிகிச்சைகள் வரும் எனத்தெரிந்து ஆண்டவன் அன்றே படைத்திருக்கிறான் இது போல!

இருப்பதிலேயே சற்று நீளமான குழாய் என்பதாலும், இதன் சிறு அளவு நாளங்கள் எடுத்தால் காலுக்கு ஒன்றும் ஆகாது என்பதாலும், இதயத்திற்குத் தேவையானது மிகச் சிறிய அளவிலான நாளங்கள் என்பதாலும், இத்தகைய சிறுநாளங்கள் இந்தக் குழாயில் இருக்கின்றன எனபதாலும், இது சாத்தியமாகிறது.

இன்னும் சிலரும் இது பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், அடுத்த பதிவில் இதைச் சொல்லுகிறேன்.

நீங்கள் அனுப்பிய வீடியோவிற்கு மிக்க நன்றி!

அதையும் சேர்த்திருக்கிறேன்.

 
At 3:53 PM, Blogger சேதுக்கரசி said...

//அடைப்பு இருக்கும் இடத்தில் ஒரு விரிப்பான்[] போடணுமா, இல்லை முழுதுமாகவே பழுதுபட்ட ரத்தக்குழாயை மாற்றணுமா[]//

சூப்பர் பதிவு! ஆமாம், இந்த அடைப்புக்குறிகளில் என்ன வரணும்? stint-ஓ என்னவோ சொல்வாங்களே.. அது முதல் அடைப்புக்குறியில்னு நினைக்கிறேன்...

 
At 4:01 PM, Blogger VSK said...

போட்டுட்டேங்க!

பார்த்துப் பார்த்து பதிஞ்சாலும் எதாவது ஒண்ணு விட்டுப் போயிடுது!

குட்டியதற்கும், சுட்டியதற்கும்,பாராட்டுக்கும் நன்றி, சேதுக்கரசி அவர்களே!!

 
At 4:17 PM, Blogger இலவசக்கொத்தனார் said...

அட அங்க Stent என்ற வார்த்தை வந்திருக்கணுமா? நான் அது அந்த விரிப்பான் எப்படி இருக்கும் அப்படின்னு சொன்னீங்கன்னு நினைச்சேன்!

அது இல்லைன்னு சொல்லிட்டிங்க. கூகிளாண்டவர் உதவியில் தேடிப் பார்த்தேன். கிடைத்த பல படங்களில் இதோ ஒன்று.

 
At 5:28 PM, Blogger தென்றல் said...

"பாலியல் கல்வி -- பெற்றோருக்கு" தொடர் முழுவதும் படித்தேன். மிகவும் பயனுள்ள கட்டுரை.
ரொம்ப நன்றி.

இன்னும் இந்த டரை முவதுமாக படிக்க வில்லை. படித்து விட்டு வருகிரைன்.

பல பயனுள்ள கட்டுரை டர வாழ்த்துகள்.

 
At 6:47 PM, Blogger VSK said...

விரிப்பான் படம் ஏற்கெனவே முந்தைய ஒரு பதிவில் போட்டிருக்கிறேன்.

மீண்டும் கொடுத்தமைக்கு நன்றி, கொத்தனாரே!

 
At 6:49 PM, Blogger VSK said...

"பாலியல் கல்வி- பெற்றோருக்கு" தொடரைப் பாராட்டியமைக்கு மிக்க நன்றி, திரு.[மதி??] வஸந்தம்!

இதையும் படித்தபின் வந்து சொல்லுங்கள்!

 
At 7:41 PM, Blogger வடுவூர் குமார் said...

நான் கேட்கவிருந்த கேள்விக்கு பதில் பின்னூட்டத்தில் கிடைத்துவிட்டது.
நன்றி

 
At 8:03 PM, Blogger SP.VR. SUBBIAH said...

எஸ்.கே சார்!
உங்கள் பொறுமைக்கு ஒரு Hats Off:!

நீண்டதொரு கட்டுரையைத் தட்டச்சிட்டு - சொற்பிழை பார்த்து
பதிவதில் உள்ள சிரமம் தெரிந்ததுதான்
என்றாலும், உங்களைப் போன்ற ஒரு மருத்துவர்,கிடைக்கும் கொஞ்சம் ஓய்வு நேரத்தில் அதைச் செய்வதென்றால்....!
பாராட்ட வார்த்தையில்லை!

உங்களுடைய லப் -டப் பதிவுகள் அததனையுமே சிறப்பானவை!

நன்றி!

 
At 8:25 PM, Blogger VSK said...

எப்படியோ உங்களுக்கு விடை கிடைத்ததில் மகிழ்ச்சி, திரு.குமார்!

 
At 8:26 PM, Blogger VSK said...

மனமாரப் பாராட்டும் பாங்கிற்குத் தலை வணங்குகிறேன், ஆசானே!

 
At 1:48 AM, Blogger கார்த்திக் பிரபு said...

sir can u pls post abt prostate desease?

 
At 10:14 AM, Blogger VSK said...

இந்த இதயம் பற்றிய 'லப்-டப்' தொடர் முடிந்ததும் அதைப் பற்றிச் சொல்லுகிறேன், திரு. கா. பிரபு.

வருகைக்கு நன்றி.

 
At 4:35 PM, Blogger ஷைலஜா said...

நிறைய விவரங்கள்...படிக்கப்படிக்க பிரமிப்பாஇருக்கு எஸ்கே. இந்தப்பதிவுக்கு டைட்டில் நெஞ்ஜில் ஜில்ஜில்..அப்டீன்னு கொடுத்ருக்கலாமோ:)(நடை தளர்ந்தது நாளமல்லவா மாதிரி)
ஷைலஜா

 
At 4:43 PM, Blogger கோவி.கண்ணன் said...

மருத்துவர் எஸ்கே ஐயா,

இதய நோய் பற்றியும், சிகிச்சைப் பற்றியும், சிகிச்சைக்குப் பின் நடந்து கொள்ள வேண்டிய செய்திகளை மிகுந்த கவனம் எடுத்து எழுதி இருக்கிறீர்கள் !

யாவருக்கும் பயனுள்ள தகவல் !

 
At 5:33 PM, Blogger VSK said...

அட! இறுதிப் பகுதிக்கு நல்ல தலைப்பா இருக்கே!

இதையே வைத்துவிடலாம்!

மிக்க நன்றி, ஷைலஜா!

[இது உங்களது இரண்டாவது உதவி!:))]

 
At 5:35 PM, Blogger VSK said...

நிறைய சோதனைகள்லாம் செய்தபின், அறுவை சிகிச்சைக்குப் பின்னும் சில சோதனைகள் தொடருவதால், அப்படிப் பெயர் சூட்டினேன், ஷைலஜா!

 
At 5:37 PM, Blogger VSK said...

அடடே! கோவைப்பயணக் கட்டுரைக்கு நடுவில் இதையும் படித்து கருத்து ஸொன்னதற்கு மிக்க நன்றி, கோவியாரே! :))

 
At 6:08 PM, Blogger சிவபாலன் said...

Sir,

Excellent Post!!

 
At 6:20 PM, Blogger VSK said...

Thank you, Sibaa!

 
At 9:03 PM, Blogger கோவி.கண்ணன் said...

எஸ்கே ஐயா,

அசைவு படக்காட்சி (வீடியோ) இணைத்து சொல்லுக்கு மேலும் பொருள் சேர்த்திருக்கிறிர்கள். உதவிய கொத்தானாருக்கும், உங்களுக்கும் மற்றும் உங்களை பின்னால் இருந்து இயக்கும் அம்மாவுக்கும் பாராட்டுக்கள்.

 
At 11:15 PM, Blogger கவிதா | Kavitha said...

//இதய பலஹீனமானவர்கள் பார்க்க வேண்டாம்//

இது புரியல.. எதை வைத்து பலஹீனம் என்று சொல்வது..?!!

 
At 10:14 AM, Blogger VSK said...

அனைஇத்துக்கும், அனைவர்க்கும் நன்றி சொன்ன கோவியாருக்கு என் நன்றி!

 
At 10:15 AM, Blogger VSK said...

அது ஒரு வழக்கமான டிஸ்கிங்க, கவிதா!

ஆனால், நீங்க கேட்டதுலியும் ஒரு கருத்து இருக்கு.
:))
அதுதான் நெஞ்சுவலி பற்றிய பதிவு முடிந்ததும், அடுத்து வரப் போகும் பதிவு!!

 
At 4:05 AM, Anonymous Anonymous said...

வணக்கம்,
உங்களுடைய பதிவுகள் எல்லாம் நல்லம். ஆங்கிலத்தில் அதற்குறிய பெயர்களைக் குறிப்பிடுகிறீர்கள். அப்பொழுது அது எங்கே இருக்கிறது என காட்டினால் இன்னும் நல்லாயிருக்கும்.

நன்றி

 

Post a Comment

<< Home