"லப்-டப்" [5] "ரத்தத்தின் ரத்தமே!"
"லப்-டப்" [5] "ரத்தத்தின் ரத்தமே!"
"வாழ்வின் நதி" எனச் சொல்லலாம் இதை!
உடலெங்கும் ஓடி ஒவ்வொரு அவயவமும், அதனதன் வேலையை ஒழுங்காகச் செய்ய உதவிடும் ஓர் அற்புத நதி இது!
இதில் என்னென்ன இருக்கிறது, ஒவ்வொன்றும் என்ன செய்கிறது என்பதைத் தெரிந்து கொள்வது நம்மை நாமே நன்கு அறிந்து கொள்ள உதவும்.
ரத்தம் என்பது செல்களும்,[cells] ப்ளாஸ்மாவும் [plasma] சேர்ந்த ஒரு கலவை.
இதயம் பிராணவாயுவையும்,[oxygen] சத்துப் பொருள்களையும்[Nutrients] ரத்தக் குழாய்கள் மூலம் உடலின் பல பாகங்களுக்கும் அனுப்புகிறது. அங்கிருக்கும் பாகங்கள் இவற்றைப் பெற்றுக்கொண்டு, கழிவுப்பொருள்களைத் திருப்பி அனுப்புகின்றன.
முன்னரே சொன்னபடி, ஒருசாதாரண மனித உடலில் 5 லிட்டர் ரத்தம் ஓடுகிறது.
ப்ளாஸ்மா என்னும் திரவத்தில், சிவப்பு, வெள்ளை அணுக்களும், ப்ளேட்லெட்டுகள் எனும் செல்களும் இருக்கின்றன. கூடவே சத்துப் பொருள்களும்!
சிவப்பு அணுக்கள் பிராணவாயுவை எடுத்துச் செல்லும்.
வெள்ளை அணுக்கள் நோயை எதிர்கொண்டு சண்டை போடும்.
ப்ளேட்லெட்டுகள் ரத்தம் உறைவதற்கு உதவும்.
சிவப்பு அணுக்கள்: [Red Blood Cells]
ரத்தத்திற்கு நாம் காணும் சிவப்பு நிறத்தைக் கொடுப்பவை இவையே! ஒரு க்யூபிக் மில்லிமீட்டருக்கு கிட்டத்தட்ட 5 மில்லியன் [5,200,000]சிவப்பு அணுக்கள் இருக்கின்றன!
பெண்களுக்கு சற்று குறைவாக 4,600,000 அணுக்கள் இருக்கும்.
இதற்குள்தான் நாம் ஹீமோக்ளோபின் [Hemoglobin] என அறியும் புரதப்பொருள் [Protein] இருக்கிறது. இதுதான், பிராணவாயுவை இந்த அணுக்களுக்குள் தக்க வைத்துக் கொள்கிறது.
சுவாசத்தின் மூலம் நாம் இழுக்கும் பிராணவாயு, நுரையீரலில் [Lungs] இருந்து ஹீமோக்ளோபினால் பிணைக்கப்பட்டு, இதயத்தை அடைந்து, ரத்தக் குழாய்கள் மூலம் அனுப்பப்படும் ரத்தத்தில் இருக்கும் இந்த சிவப்பு அணுக்கள் வழியாக உடலின் பல இடங்களையும் செயல்பட வைக்கிறது!
ஸ்ஸ்ஸ்ஸ்....அப்பாடா!
இது மட்டும் அல்ல இந்த சிவப்பு அணுக்கள் செய்வது!
பிராணவாயுவை அளிக்கும் அதே நேரத்தில், கழிவுப்பொருளான கார்பன் டைஆக்சைடையும் [carbon di-oxide] திரும்பப் பெற்றுக்கொண்டு, வெயின்களின்[veins] வழியே நுரையீரலுக்குக் கொண்டு செல்லும் வேலையையும் இவை செய்கின்றன.
வெள்ளை அணுக்கள்: [White Blood Cells]
நம் உடலை நோய்களில் இருந்து பாதுகாப்பவை இவையே! சாதாரணமாக 5,000 முதல் 10,000 வரை ஒரு க்யூபிக் மில்லிமீட்டருக்கு இருக்கும் இவற்றின் எண்ணிக்கை நோய்வாய்ப்பட்டிருக்கையில் அதிகமாகும்.
வெள்ளை அணுக்களில் மொத்தம் 5 வகையான செல்கள் இருக்கின்றன.
நியூட்ரோஃபில்கள்:[Neutrophils]
கிருமிகளால் ஏற்படும் நோய்களைத் தடுக்கிறது.
லிம்ஃபோசைட்டுகள்:[Lymphocytes]
வைரஸ் எனும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகளை எதிர்க்கும். ஒரு சில சாதாரண கிருமிகளையும் கூட!
மானோசைட்டுகள்:[Monocytes]
கடுமையான நோய்களின் போது இவற்றின் தேவை ஏற்படுகிறது.
இயசினோஃபில்கள் மற்றும் பேஸோஃபில்கள்: [Eosinophils and Basophils]
இவை அலர்ஜி சம்பந்தமான நோய்களின் போது உதவிக்கு வருகின்றன.
ப்ளேட்லெட்டுகள்:[Platelets]
த்ராம்போசைட்டுகள் [Thrombocytes] எனவும் அழைக்கப்படும் இந்த செல்கள், ரத்தம் உறைவதற்கு உதவுகின்றன. நமக்கு அடிபட்டதும் பீறிடும் ரத்தம் சில நிமிடங்களில் தானே உறைவது இவற்றினாலே!
இவை குறைவாக ரத்தத்தில் இருக்கையில்,[Thrombocytopenia]] ரத்தப்போக்கு அதிகமாவதும், அதிகமாகையில்,[Thrombocytosis]]சீக்கிரம் உறையாமல் போவதும் நிகழ்கிறது.
150,00 முதல் 400,000 ப்ளெட்லெட்டுகள் ரத்தத்தில் இருக்கும்.
இந்த எல்லா செல்களும் எலும்பு மஜ்ஜையில்[Bone Marrow] இருந்து பிறக்கின்றன. இந்த மஜ்ஜையில் இருந்து உற்பத்தியாகும் ஸ்டெம் செல்கள் [Stem Cells] என இப்போது ஊடகங்களில் அதிகம் அடிபடும் தனித்தன்மை செல்கள்,[Specialized Cells] பலவிதமான ரத்த செல்களாக மாறும் தன்மை உள்ளவை. மேலும், இவை தன்னைத்தானே புதிப்பித்து, இரட்டிப்பாக்கிக் கொள்ளும் [reproduce itself] தன்மையும் உள்ளவை. இவை பற்றி பிறகு பார்ப்போம்!
சத்துப் பொருள்கள்:[Nutrients]
எலெக்ட்ரோலைட்டுகள்,[Electrolytes] கார்போஹைட்ரேட்டுகள்,[Carbohydrates] வைட்டமின்கள் [Vitamins] [நாம் உண்ணும் உணவிலிருந்து கிடைப்பவை]எல்லாம் ப்ளாஸ்மாவில் கலந்து திசுக்களை அடைகின்றன ரத்தத்தின் மூலம்!
****************************************
இதுவரை, இதயம், நுரையீரல், ரத்தக் குழாய்கள், ரத்தம் என இதயம் சம்பந்தமான அனைத்தையும் பற்றி அறிந்தோம்![??:)]
இவற்றால், இவற்றில், ஏற்படக்கூடிய சில [எல்லாம் அல்ல!] நோய்களைப் பற்றி இனி பார்க்கலாம்!
***************************************
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!
எனக்கு தேன்கூடு போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றுத் தந்த, அதில் மகிழ்ந்து பாராட்டிய அனைவருக்கும் எனது நன்றி!
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
26 Comments:
எஸ்.கே சார், உங்களிடம் இருதய நோய் பரம்பரையாக வரக்கூடியதா என்று
கேட்க வருகிறேன்.
நோய்க்குப் பரம்பரை இருக்கும் :-)
நோய் வந்தவர்களுக்கும்
அவர்களுடைய
குழந்தைகளுக்கும் அது தொடருமா?
புத்தாண்டு வாழ்த்துகள்.
இது ஒரு [நுட்பமான] tricky கேள்வி, வல்லியம்மா!!
ஏனென்றால், இதய சம்பந்தமாக வரும் நோயாளிகளிடம் முதலில் கேட்கும் கேள்வியே "இது போல உங்க வீட்டில் யாருக்கும் வந்திருக்கா" என்பதே!
இருதய நோய் என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்பதைச் சொன்னால், ஓரளவு தகுந்த விடை கொடுக்க இயலும்.
ஏனெனில், எல்லாம் பரம்பரையாகத் தொடரும் என்று சொல்லமுடியாது; ஆனால், பல நோய்களுக்க்கு பரம்பரை மரபணுக்கள் [genes] ஒரு முக்கிய காரணம்.
இனிவரும் பதிவுகளில் சில இதய நோய்களைப் பற்றிச் சொல்லும்போது, எவையெல்லாம் பரம்பரையாக யாருக்கெல்லாம் வரக்கூடும் என்பதையும் சொல்ல முயலுகிறேன்.
5 லிட்டர் ரத்தம் உடலில் இருப்பதாகச் சொன்னீர்கள். அது உடம்பில் ஓடும் வேகம் என்ன?
எப்படிங்க இப்படியெல்லாம் வில்லங்கமா கேள்வி கேக்க முடியுது கொத்ஸ்! :))
ரத்தத்தின் வேகம் [Velocity] பல காரணங்களால் நிகழ்கிறது.
முக்கியமாக, இதயம் அழுத்தி வெளிப்படுத்தும் வேகம்,[Rate of work]] ரத்தக் குழாய்களில் ஏற்படும் அழுத்தம்,[Blood pressure] ரத்தக் குழாய்களின் சுருங்கி விரியும் தன்மை,[Elasticity] இதன் எதிர் உராய்வு [counter dissipation] இவையெல்லாம் சேர்ந்துதான் ரத்த ஓட்டத்தின் வேகம் நிர்ணயிக்கப் படுகிறது.
இது ஒருவருக்கொருவர் வேறுபடும், அவரவர் பழக்கவழக்கங்களினால்!
போதுமா?
:))
இன்னொன்று!
இந்த வேகமொவ்வொரு பாகத்தில் ஒவ்வொரு விதமாகவும், ஒவ்வொரு ரத்தக் குழாய்களில் ஒவ்வொரு விதமாகவும் இருக்கும்.
ஆர்டெரிகளில் [சுத்தரத்தக் குழாய்] சற்று வேகம் அதிகமாகவும்,வெயின்களில் சற்றுக் குறைவாகவும், காபில்லரிகளில் மந்தமாகவும் இருக்கும்.
அதனால்தான் இதை ஒரு நதியுடன் ஒப்பிட்டேன் முதல் வரியில்!!
:))
//ரத்தத்திற்கு நாம் காணும் சிவப்பு நிறத்தைக் கொடுப்பவை இவையே! ஒரு க்யூபிக் மில்லிமீட்டருக்கு கிட்டத்தட்ட 5 மில்லியன் [5,200,000]சிவப்பு அணுக்கள் இருக்கின்றன!
பெண்களுக்கு சற்று குறைவாக 4,600,000 அணுக்கள் இருக்கும்.//
எஸ்கே ஐயா,
அரிய தகவல் ! அறிந்து கொண்டேன்
நன்றி !
சுவையான தகவல்கள் தொடர்ந்து எழுதுங்கள் !
ஆஹா கேள்வி கேட்டா வில்லங்கமா? அப்போ இன்னொண்ணும் கேட்கறேன்.
கிட்டத்தட்ட 30,000 மைல் தூரம் இந்த 5 லிட்டர் ரத்த ஓடணமுன்னா, அதை பம்ப் செய்யும் இருதயம் எவ்வளவு சக்தியோட இருக்கணும்? ஒரு பேச்சுக்கு இதை இயந்திரங்களோட ஒப்பிட்டா, நம்ம இருதயத்தின் குதிரை சக்தி என்னவா இருக்கும்?
//நான் வில்லங்கம்னு சொன்னது ரொம்ப சரியாப் போச்சு.கொத்ஸ்!:)
பதிவின் எல்லையைத் தாண்டிய விஷயம்.
இது பற்றி மேலும் அறிய ஒரு ஃபிஸியாலஜிஸ்டை[physiologist] அணுகினால் ஈக்வேஷனோடு உங்களுக்கு விளக்குவார்!
இது ஒரு புரிதலுக்காக மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படிப்பின் போது படித்தது.
நடைமுறை மருத்துவத்திற்குத் தேவையில்லாததால் சரியாக நினைவில் கொள்ளவில்லை.
இதை எதற்காகத் தெரிந்து கொள்ள விரும்புகிறீர்கள் "இப்பதிவில்" என சொல்ல முடியுமா?
ரத்தக்குழாய்கள் ஒன்றும் பிரம்மாண்டமான உருளைகள் அல்ல. ஒவ்வொரு குழாயும் சில செண்டிமீட்டர் குறுக்களவே உள்ள மெல்லிய குழாய்கள்.
இதற்குள் பாய்ச்ச வேண்டிய வேகத்திற்கு மேலே சொன்ன காரணங்களால் ரத்தம் தேஏவையான வேகத்திற்குப் பாய முடியும், உடலின் பல பாகங்களுக்கும்!
இது புரிந்தால் இப்போதைக்குப் போதும்!!
:))
//இதை எதற்காகத் தெரிந்து கொள்ள விரும்புகிறீர்கள் "இப்பதிவில்" என சொல்ல முடியுமா?//
நரம்புகளின் நீளம் 30000 மைல்கள், ஒரு க்யூபிக் மில்லிமீட்டருக்கு கிட்டத்தட்ட 5 மில்லியன் சிவப்பு அணுக்கள் இருக்கின்றன, 150,00 முதல் 400,000 ப்ளெட்லெட்டுகள் ரத்தத்தில் இருக்கும் - இதெல்லாம் தெரிஞ்சிக்கிட்டு மட்டும் என்ன பண்ணப் போறேன்? எல்லாம் ஒரு தெரிஞ்சிக்கிற ஆசைதான்.
//நரம்புகளின் நீளம் 30000 மைல்கள், ஒரு க்யூபிக் மில்லிமீட்டருக்கு கிட்டத்தட்ட 5 மில்லியன் சிவப்பு அணுக்கள் இருக்கின்றன, 150,00 முதல் 400,000 ப்ளெட்லெட்டுகள் ரத்தத்தில் இருக்கும் - இதெல்லாம் தெரிஞ்சிக்கிட்டு மட்டும் என்ன பண்ணப் போறேன்? எல்லாம் ஒரு தெரிஞ்சிக்கிற ஆசைதான்.//
விட மாட்டீங்க போல இருக்கு!
மேலே நான் சொன்னதாக நீங்கள் சொல்லி இருக்கும் விஷயங்கள் எல்லாம் தேவையான ஒன்று.
அனீமியா, ப்ளட் கென்ஸர், எய்ட்ஸ் என நான் நாளை சொல்லும் போது இதன் தேவை புரியும்.
ஆனால், நீங்கள் கேட்டிருப்பதோ, நீங்களே சொன்னது போல,"எல்லாம் ஒரு தெரிஞ்சிக்கிற ஆசைதான்" ரகம்.
ரத்தத்தின் வேகம் ஒரே சீரானது அல்ல.
எனவே அதற்கென ஒரு நிரந்தர அளவை கிடையாது.
சாதாரண மனித உடலிலேயே பல இடங்களில் பல வித வேகத்தில் ரத்தம் ஓடும்.
ரத்தக்குழாய்களின் குறுக்களவும் இதற்கு ஒரு காரணம்.
நாம் வைத்திருக்கும் பழக்க வழக்கங்களும், அதனால் சம்பாதித்த சிலபல நோய்களும் இதை கட்டுப்படுத்தும்.
இது நீங்கள் அறிந்து கொள்ள விரும்பினால் போக வேண்டிய இடத்தையும் காட்டி இருக்கிறேன்.
இவ்வளவுதான் என்னால் இப்பதிவில் சொல்ல முடியும்.
உங்கள் ஆர்வத்தை, குறுகுறுப்பை[curiosity] பாராட்டுகிறேன்.
:))
I feel that this is beyond the scope of this topic I am aiming to write.
If you need further information, please send me a mail and I can send you a few links.
Thanks!
:)
சிரிப்பான் போட்டால் கோவம் இல்லை எனத்தனே பொருள், கொத்ஸ்!
//தொடர்ந்து எழுதுங்கள் ! //
தொடரும் பாராட்டுகளுக்கு நன்றி, கோவியாரே!
//ஒவ்வொரு குழாயும் சில செண்டிமீட்டர் குறுக்களவே உள்ள மெல்லிய குழாய்கள்.//
மில்லிமீட்டர் என்று சொல்லவருகிறீர்கள் என்று நினைக்கிறேன் :-)
இரத்தத்தைப் பற்றிய அறிமுகத்துக்கு நன்றி. அனீமியா பதிவுக்குக் காத்துக்கொண்டிருக்கிறேன் :-) நம் ஆசிய மக்களைப் பிடித்திருக்கும் ஒரு கேடு இதுவல்லவா?
கொத்ஸ் கேட்ட கேள்வியின் தொடர்பாக இட்ட பதில் அது.
எனவே "இருப்பதிலேயே பெரிய ரத்தக்குழாயான" அயோர்டாவை மனதில் கொண்டு செண்டிமீட்டர் எனச் சொன்னேன்!
அயோர்டாவின் குறுக்களவு சுமார் 3 செ.மீ.!!
மற்றதெல்லாம் இதை விடச் சிறியவையே!
நீங்கள் சொன்னது போல மில்லிமீட்டர், மைக்ரோ மி.மீ. குறுக்களவுள்ள ரத்தக்குழாய்களெல்லாம் உடலெங்கும் பரவிக் கிடக்கின்றன!
அனீமியாவை விரைவில் சந்திப்போம்!
நன்றி. சேதுக்கரசி அவர்களே!
//அயோர்டாவின் குறுக்களவு சுமார் 3 செ.மீ.!!//
பிரம்மிப்பாயிருக்கிறது!
நம் உடலே ஒரு பிரமிப்புதான்!
:))
வாழ்வின் நதி பற்றி விவரமா சொன்னதற்கு நன்றி எஸ்.கே. வில்லங்கமா நானும் ஏதாவது கேக்கவா? :-)
இதயம் சத்துப் பொருட்களையும் குருதியிலே சேர்த்து அனுப்புதுன்னு சொல்லியிருக்கீங்களே. நான் இதுவரை உயிர் வளியை மட்டுமே அது இரத்தத்தில் கலக்கிறது என்று நினைத்திருந்தேன். என்ன சத்துப் பொருட்கள்ன்னு கொஞ்சம் சொல்லுங்க.
ஹீமோக்ளோபீன் குறைந்தால் உடல் பாகங்களுக்குச் செல்லும் உயிர் வளியின் அளவு குறையும் என்பதால் தான் நிறைய இரும்புச் சத்து இருக்கும் உணவுகள் உண்ணச் சொல்கிறார்களா? கருவுற்றிருக்கும் போது இதன் அளவு குறையக் கூடாது என்கிறார்களே. குறைந்தால் என்ன ஆகும்? ஆண்களுக்கு இரும்புச்சத்து கூடுதலாக இருக்கக் கூடாது என்கிறார்களே. ஏன்? தொடர்பில்லாத கேள்விகளாக இருந்தால் வேறு எங்காவது பதில் சொல்லுங்கள்.
கடைசியா சத்துப் பொருட்கள் பட்டியல் தந்திருக்கீங்க. இவையெல்லாம் உண்ட உணவிலிருந்து வருபவை தானே. இதயம் குருதியில் கலப்பவை இல்லையே. சரிதானா?
hematocrit பற்றி நீங்கள் குறிப்பிட்டதாக நினைவில்லை. அனீமியா இருக்கும்போது இதன் அளவையும் பார்க்கிறார்களே?
//வில்லங்கமா நானும் ஏதாவது கேக்கவா? :-)//
கேக்கறதுன்னு முடிவு பண்ணிட்டீங்க! இதுல வில்லங்கமாக் கேட்டா என்ன?.....!
:)
//இதயம் சத்துப் பொருட்களையும் குருதியிலே சேர்த்து அனுப்புதுன்னு சொல்லியிருக்கீங்களே. நான் இதுவரை உயிர் வளியை மட்டுமே அது இரத்தத்தில் கலக்கிறது என்று நினைத்திருந்தேன். என்ன சத்துப் பொருட்கள்ன்னு கொஞ்சம் சொல்லுங்க.//
மூன்றாம் பகுதியைப் பார்க்கவும்!
//ஹீமோக்ளோபீன் குறைந்தால் ...... ஏன்? தொடர்பில்லாத கேள்விகளாக இருந்தால் வேறு எங்காவது பதில் சொல்லுங்கள்.//
இதுபற்றி அடுத்த பதிவில் கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்!
//கடைசியா சத்துப் பொருட்கள் பட்டியல் தந்திருக்கீங்க. இவையெல்லாம் உண்ட உணவிலிருந்து வருபவை தானே. இதயம் குருதியில் கலப்பவை இல்லையே. சரிதானா?//
முதலும், மூன்றாவதும் தொடர்புடையாதாக இருப்பதால் இரண்டிற்கும் பதில் இங்கே சொல்கிறேன்.
இரத்தம் ஒரு நதியாக ஓடுகிறது எனச் சொன்னேன்! அதன் வேலை நல்லதையும் கெட்டதையும் உடலின் பல பாகங்களுக்கும், அவற்றில் இருந்தும் கொண்டு, எடுத்துச் செல்வதே!
நாம் உண்ணும் உணவை நன்கு ஜீரணித்து, அவற்றை "கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்புப் பொருளாக" [Carbohydrates, protein, fat] மாற்றும் வேலை மட்டுமே நமது இரைப்பை, குடல் இவற்றினுடையது.
எளிதாக ரத்தத்தால் உறிஞ்சப்படும் கடைநிலைப் பொருளாக நாம் உண்ணும் உணவு மாற்றப்படுகிறது, இங்கே!
எல்லா உணவும் மேலே சொன்ன இந்த மூன்றில் ஒன்றாக மாற்றப்பட்டு, அவை ரத்தத்தால் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
இதற்கு, இரைப்பையிலும், குடலிலும் சுரக்கும் சில அமிலங்களும், உண்ணும் உணவில் இருக்கும் 'பி' வைட்டமின்களும் உதவி புரிகின்றன.
நாம் உண்ணும் உணவு அப்படியே உடம்பில் நேரடியாக சேருவதில்லை. ரத்தத்தின் மூலமே இது நிகழ்கிறது.
ஜீரண மண்டலத்திலிருந்து உறிஞ்சப்படும் இச்சத்துப்பொருள்கள் இதயத்திற்கு ரத்தக் குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு, பின் அயோர்டா மூலம் உடலின் பல பாகங்களுக்கும் அனுப்பப்பட்டு, தேவையான சத்துகளை அந்தந்த பாகங்கள் எடுத்துக் கொள்கின்றன.
கொஞ்சமாவது புரிகிற மாதிரி சொல்லி இருக்கிறேனா?
:))
//இவை சரிதானா, எஸ்கே சார்?//
வாங்க திரு.வைசா!
இந்தத் தொடருக்கு இதுதான் முதல் பின்னூட்டம் என நினைக்கிறேன்!
சரிதானா வைசா சார்!
நீங்க சொன்ன தகவல்கள் எல்லாம் சரியே!
புள்ளிவிவரங்கள் பற்றி எனக்கு சொல்லத் தெரியாது!
ஆளுக்காள், வேலைக்கு வேலை மட்டுமல்ல, நிற்கும் போதும், உட்கார்ந்திருக்கும் போதும், படுத்திருக்கும் போதும் கூட, காய்ச்சல், உடற்பயிற்சி, நோய், துக்கம், மகிழ்ச்சி, அதிர்ச்சி போன்ற பலவிதங்களாலும் கூட மாறக்கூடும்.
ரத்த அழுத்தம் தவிர வேறு பல காரணங்கள் கூட இருக்கு!
அனீமியா பற்றி அடுத்த பதிவில் சொல்லும் போது Hematocrit பற்றிப் பார்க்கலாம், சேதுக்கரசி அவர்களே!
ரொம்ப அறிவுபூர்வமா யோசிச்சு மண்டய கொடஞ்சு ஒரு கேள்வி:
எல்லா இயந்திரங்களுக்கும் ஒரு life expectancy இருக்கு. உதாரணத்துக்கு கார் எடுத்துக்கிட்டா, 100000 மைல் வரைக்கும் ஓடும்.
ஒரு கார் வாங்கி 100000 மைல், 10 வருஷத்துலயும் ஓட்டலாம், ஒரே வருஷத்துலயும் ஓட்டலாம்.
so, உபயோகத்தைப் பொறுத்து அந்த கார் எவ்வளவு வருஷம் வாழும் என்பது தீர்மானிக்கப்படுது.
அதே மாதிரி, இருதயத்துக்கு life-time expectancy இல்லியா?
for eg., 36500000 தடவை ஒரு வருஷத்துக்கு அடிக்குமாமே? so, 100 வருஷம் வாழ 3650000000 தடவை அடிக்கோணும்.
ஒரு மனுஷன் சதா ஓடிக்கினே இருந்தா, இருதயம் வேகமா அடிச்சு, 100 வருஷம் வாழ வேண்டியவன் 50 வருஷத்துலயே புட்டுக்குவானா?
இது வேற ஏதாவது உருப்புக்கும் பொறுந்துமா?
(ஸ்ஸ்ஸ் . ஒரு டீ சொல்லுபா! :) )
என்ன கொத்ஸ்! திருப்திதானே இப்ப!
அங்கே சிரிக்கறது எங்க ஊர்ல கேக்குது!
நீங்க ஆரம்பிச்சு வெச்ச வில்லங்கம் இப்ப அறிவுபூர்வமா வளர்ந்து விஸ்வரூபம் எடுத்து ஆடுது!
சரி விடுங்க, நின்ங்அ சொல்லுங்க சர்வேசன்!
நீங்க மண்டையைக் குடைஞ்சிகிட்டு கேட்ட கேள்வியிலியே பதிலும் இருக்கு!
எதுவுமே அளவுக்கு அதிகமா உபயோகிச்சா வம்புலதான் முடியும்!
அது உடலின் பாகங்களுக்கும் பொருந்தும்.
அது எப்படீங்க, ஒரு மனுஷன் சதா ஓடிக்கிட்டே இருக்கறதா "அறிவுபூர்வமா" சிந்திக்க முடிஞ்சுது உங்களால!
:))
அசந்துட்டேங்க!
(ஸ்ஸ்ஸ் .எனக்கும் சேர்த்து ஒரு டீ சொல்லுபா! :) )
எஸ்.கே சார், அருமையான தொடர்.
நன்றிகள் பல.
பாராட்டுக்கு மிக்க நன்றி, திரு. 'நன்மனம்'!
SK சாருக்கு புத்தாண்டு வாழ்த்துகள்..
எல்லாரும் கேள்வி கேட்டு பின்னி பெடல் எடுக்குறாங்க.. ம்ம் குட் கொஸ்டின்ஸ், குட் அன்சர்ஸ்..
நமக்கும் ஒரு கேள்வி.
//வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை நோய்வாய்ப்பட்டிருக்கையில் அதிகமாகும்//
இது எவ்வாறு சாத்தியமாகிறது..
நமது உணவு பழக்கம் வெள்ளை அணுக்கள் , சிவப்பணுக்கள் உற்பத்தியினை பாதிக்கிறதா..
உதாரணாமாய் முள்ளங்கி சாப்பிட்டால் வெள்ளை அணுக்கள் உற்பத்தி அதிகரிக்கும் னு முன்னோரு காலத்தில் முத்தாரத்தில் படித்தேன்.. இது உண்மையா?
அப்புறம் ஒரு விடயத்த பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்..
நான் லாஸ்வேகாஸ் போயிருந்த போது
அங்கு "பாடிஸ்"னு ஒரு எக்ஸிபிசன் போயிருந்தேன்..
அங்க நம்ம உடம்ப அக்குவேறா ஆணிவேறா பிரிச்சு வைச்சு விளக்கியிருந்தாங்க...
நான் இந்த பதிவ படிக்கும் போது அங்க பார்த்தது தான் நியாபகம் வந்தது..
அனைவருக்கும்:
---------------
லாஸ்வேகாஸ்ல எவ்ள இடம் பார்க்கவேண்டியது இருந்தாலும் இந்த இடத்த கண்டிப்பா போய் பாருங்க..
:))) கொத்ஸ் தொடங்கிவச்சு வரிசையா ஒவ்வொருத்தரா கேட்ட கேள்விக்கும் விழுந்து விழுந்து சிரிச்சிகிட்டிருந்தேன் எஸ்கே.. படங்கள் என்னாச்சு?
Post a Comment
<< Home