"கசடற"

அறிவியல் தொடர்பான எனக்குத் தெரிந்த தகவல்களை, ஒரு மருத்துவன் எனும் பார்வையில் சொல்ல விழைகிறேன். முழுக்க முழுக்க இவை என் கருத்துகள் மட்டுமே! முருகனருள் முன்னிற்கும்!

Saturday, July 12, 2008

"பாலியல் கேள்விகளுக்கு "கசடற"வின் பதில்கள்!" - 2

"பாலியல் கேள்விகளுக்கு "கசடற"வின் பதில்கள்!" - 2

"குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை" [Vasectomy]

சென்ற பதிவில் குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை பற்றி சொல்வதாகச் சொல்லியிருந்தேன்.

இதோ அதன் விரிவு.

இதுவும் கேள்வி-பதில் வடிவிலேயே!

கேள்வி: 'வாஸெக்டமி' என்றால் என்ன? இது எப்படி செய்யப்படுகிறது?

கசடற: பொதுவாக 'குடும்பக் கட்டுப்பாடு ஆப்பரேஷன்' என வழங்கப்படும் இதன் நேரடி மொழிபெயர்ப்பு 'குழாய் அறுப்பு' என்பதே!

விதைப்பைக்குள்[scrotum] இருக்கும் விதைகளில்[testicle] இருந்து சுரக்கும் விந்தணு[sperm] ஒரு குழாய்[vas deferans] மூலமாக.... ஒவ்வொரு விதை[விரை][testicle]யிலிருந்தும் ஒரு குழாய்... இதை எடுத்துச் செல்ல உதவும் விந்துவுடன் கலந்து உடலுறவின் இறுதியில் பெண்ணின் உறுப்புக்குள் பாய்கிறது.

இந்தக் குழாய்கள் துண்டிக்கப்படும் அறுவைச் சிகிச்சையே இந்த 'வாஸெக்டமி'.

இதன் மூலம் ஒரு ஆண் கருத்தரிக்கச் செய்யும் சக்தியை மட்டும் இழக்கிறான்...... தன் ஆண்மையை அல்ல!

இது ஒரு எளிய அதிகம் செலவில்லாத சிகிச்சை.

இனிமேல் ஒரு பெண்ணைக் கருத்தரிக்கச் செய்யமுடியாது என்ற ஒன்றைத் தவிர, ஒரு ஆணின் செயல்பாட்டில் வேறு எந்தக் குறைபாடும் வருவதில்லை என்பதை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்.

உடலுறவில் எந்தவொரு சிரமமும் இல்லாமல் செயல்பட முடியும்... விந்துவும் வெளியேறும்... பெண் கர்ப்பமாவதில்லை... அவ்வளவுதான்!

இது பற்றிய சரியான, முறையான அறிவு இல்லாமல், பெண்களைக் குடும்பக் கட்டுப்பாடு செய்யச் சொல்லி அவர்களைக் கஷ்டப்படுத்தும் கொடுமை அதிகமாவதை நாமெல்லாம் தவிர்க்கலாமே.

இது ஒரு 30- 45 நிமிஷ வேலை!
விரைப்பையின் ஒரு பக்கத்தில் முதலில் மரத்துப்போகும் ஊசி போடப்பட்டு, ஒரு சிறிய துளை மூலம், இந்தக் குழாய் துண்டிக்கப்படுகிறது. துண்டிக்கப்பட்ட இருமுனைகளும் தைக்கப்பட்டு, விரைப்பையின் துளையும் தைக்கப்படுகிறது.

இதேபோல், இப்போது, அடுத்த பக்கத்திலும் இது செய்யப்படுகிறது.

இதை கத்தியில்லாமல் செய்யும் முறைகளும் இப்போது புழக்கத்தில் வந்துவிட்டது.

இதைச் செய்யும்போது ஒரு வலியும் இருக்காது. அடுத்து சில நாட்களுக்கு அந்த இடத்தில் சற்று லேஸான வலி இருக்கலாம்.

கேள்வி: இதனால், எந்தத் தொந்தரவுமே இருக்காதா?

கசடற: இல்லை எனச் சொல்ல முடியாது! எந்த ஒரு அறுவை சிகிச்சையிலும் வரக்கூடிய கோளாறுகள்[infection] இதிலும் வரலாம்..... கவனமில்லாமல் இருந்தால். சீழ் பிடித்தல், ஜுரம், ரத்தப்போக்கு போன்றவை ஒருசிலருக்கு வரலாம். ஆனால், இதன் சாத்தியக்கூறு இப்போதெல்லாம் அநேகமாக இல்லை என்றே சொல்லலாம்.

கேள்வி: இதைச் செய்த எத்தனை நாள் கழித்து ஒருவர் உடலுறவில் ஈடுபடலாம்?

கசடற: 4 வாரங்களுக்குப் பிறகு உடலுறவில் ஈடுபடமுடியும் என்றாலும், 8 முதல் 10 வாரம் அல்லது 15 முதல் 20 முறை விந்து வெளிப்படும் வரை, விந்தணு விந்துவில் இருக்கக்கூடிய சாத்தியக் கூறு இருப்பதால், மருத்துவ சோதனைகள் மூலம் இது இல்லை என உறுதிப்படுத்திய பின்னரே இதன் பயனை உணரமுடியும். அதுவரையில் "தன் செயலாகவோ" [masturbation]அல்லது ஆணுறை[condom] உபயோகித்தோ இதில் ஈடுபடுவது நல்லது.

கேள்வி: எனது செயல்பாட்டில் ஏதேனும் மாற்றம் இருக்குமா?

கசடற: குறி விறைப்பு, [erection]செயல்பாடு, [performance]விந்து வெளியேற்றம்[ejaculation] இந்த எதிலும் ஒரு மாற்றமும் இருக்க வாய்ப்பே இல்லை. அப்படி ஏதாவது வந்தால், நண்பர் சுல்தான் சொன்னது போல, செய்துகொண்டவரின் [அறியாமையால் வரும்] மனநிலை மாறுபாடு மட்டுமே இதற்குக் காரணம்.
பொதுவாக, இனி கரு உண்டாகாது என்னும் உணர்வு, ஒரு புதுவித உற்சாகத்தைக் கொடுத்து, பயமில்லாமல், உடலுறவில் ஈடுபட வழி வகுக்கிறது என்றே ஆய்வுகள் சொல்லுகின்றன.

விந்தணு இல்லாமல் செய்கிறது இந்த சிகிச்சை! ஆண்மை இழக்கச் செய்வதில்லை!

ஆண்மைத்தன்மையைக் காட்டுகின்ற தாடி மீசை போன்றவற்றுக்குக் காரணமான சுரப்பிகளும் இந்த விதை[ரை]யில்தான் சுரக்கின்றன. அவற்றுக்கு ஒரு பாதிப்பும் ஏற்படுவதில்லை. விந்துவின் அளவிலும் இதனால் பெரிய மாற்றம் ஏற்படுவதில்லை... விந்தணுக்களின் சதவிகிதம் 2 முதல் 5 வரையே, மொத்த விந்துவில்!


கேள்வி: இப்படிச் செய்துகொண்டபின் இதை திரும்பவும் பழையபடி மாற்றமுடியுமா?

கசடற: முடியும்! இப்போது இது அதிக அளவிலேயே செய்யமுடிகிறது! ஆனால், இதைச் செய்துகொள்வதால் விந்தணு மீண்டும் வரத் துவங்கும் என்ற உத்திரவாதம் இல்லை! மேலும், இதைச் செய்ய அதிகப் பணம் செலவாகும். கவனம்! கவனம்!

Labels: , ,

6 Comments:

At 7:27 PM, Blogger கோவி.கண்ணன் said...

காளை மாட்டுக்கு காயடிப்பது என்றால் என்ன ? அது ஆண்மை நீக்கம் தானே ?

 
At 7:30 PM, Blogger கோவி.கண்ணன் said...

//துண்டிக்கப்பட்ட இருமுனைகளும் தைக்கப்பட்டு, விரைப்பையின் துளையும் தைக்கப்படுகிறது.//

தைக்கப்படுவது பிரிந்துவிட்டால் எது ம் ஆபத்து இல்லையா ? வெட்டிய இருமுனைகளும் தன்னாலேயே சேர்வதற்கு வாய்ப்பு இல்லை என்றாலூம் தையல் திறந்து கொண்டால் எதும் ஆபத்து உண்டா ?

 
At 7:51 PM, Blogger VSK said...

//காளை மாட்டுக்கு காயடிப்பது என்றால் என்ன ? அது ஆண்மை நீக்கம் தானே //

தவறான இடத்தில் கேட்கப்பட்ட தவறான கேள்வி, கோவியாரே!
என்னிடம் இதற்கு பதில் இல்லை.

 
At 7:55 PM, Blogger VSK said...

//தைக்கப்படுவது பிரிந்துவிட்டால் எது ம் ஆபத்து இல்லையா ? வெட்டிய இருமுனைகளும் தன்னாலேயே சேர்வதற்கு வாய்ப்பு இல்லை என்றாலூம் தையல் திறந்து கொண்டால் எதும் ஆபத்து உண்டா ?//

சரியான கேள்வி கோவியாரே!

இப்படி நிகழ்வது வெகு அபூர்வமாக நடக்கலாம்.
இப்போது கண்டுபிடிக்கப்பட்ட புதுவித அறுவை சிகிச்சை முறையில் இது பெரும்பாலும் தவிர்க்கப் படுகிறது.

குழாயை அறுத்த தையல் உடனே திறந்துகொண்டால், இது நிகழலாம்.

வெளித் தையலால் ஒன்றும் நிகழ்வதில்லை.

 
At 12:43 PM, Anonymous Anonymous said...

ஆணுறை பாவித்தால், பெண் கற்பம் ஆகும் சாத்தியம் உண்டா?

 
At 5:04 AM, Blogger VSK said...

//ஆணுறை பாவித்தால், பெண் கற்பம் ஆகும் சாத்தியம் உண்டா?//


முறையாகப் பயன்படுத்தினால், 99% உத்திரவாதம் உண்டு ! அதில் நமக்குத் தெரியாத கிழிசல் இருந்தாலோ, வெளியில் எடுக்கும்போது, ஏதேனும் சிந்தினாலோ, அதன் மூலம் கருத்தரிக்க வாய்ப்பிருக்கிறது!

 

Post a Comment

<< Home