"கசடற"

அறிவியல் தொடர்பான எனக்குத் தெரிந்த தகவல்களை, ஒரு மருத்துவன் எனும் பார்வையில் சொல்ல விழைகிறேன். முழுக்க முழுக்க இவை என் கருத்துகள் மட்டுமே! முருகனருள் முன்னிற்கும்!

Tuesday, April 08, 2008

"எய்ட்ஸுக்கே உதவியா!! " -- [7]

"எய்ட்ஸுக்கே உதவியா!! " -- [7]


"இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரைத் தொடுவதாலோ, அவருடன் கை குலுக்குவதாலோ, அவர் உபயோகிக்கும் கழிப்பறையைத் தானும் பயன்படுத்துவதாலோ, அவர் எச்சில் பண்ணி குடித்த கோப்பையை உபயோகிப்பதாலோ, அவரது தும்மல், இருமல் நம் மீது படுவதாலோ இது வரலாம் தானே! சரிதானே நான் சொல்றது!" என்றான் சுகுமார்!

'முற்றிலும் தவறு! ரொம்ப ரொம்ப தப்பு நீ சொல்றது! நீ சொல்லியிருக்கும் எந்த முறையாலும் ஹெச்.ஐ.வி பரவாது! காற்று மூலமாகவோ, உணவின் மூலமாகவோ பரவும் நோயல்ல இது. இது போன்ற சந்தர்ப்பங்களில், அவரது ரத்தம், உனது ரத்தத்தோடு எந்த வகையிலாவது கலந்தால் மட்டுமே இது தொற்றிக் கொள்ளும்! என்னடா, திருப்பித் திருப்பி இதையே சொல்கிறேனே என எண்ண வேண்டாம். இதை நன்றாக மனதில் உள் வாங்கிக் கொள்ளு!'

திடீரென சுகுமார் முகத்தில் ஒரு ஒளி தெரிந்தது!

" இவ்ளோ நேரம் நீ சொன்னதெல்லாம் சரி! இப்ப உன்னை மடக்கறேன் பாரு! கொசு ஒண்ணு இந்த நோய் இருக்கற ஆளைக் கடிக்குது. அப்பிடியே பறந்து போயி இன்னொரு ஆளைக் கடிக்குது. அவனுக்கு இந்த நோய் இல்லை! இப்ப ரத்தமும் ரத்தமும் கலக்குது! இந்த ஆளு ஒடம்புலியும் அது துளை போடுது. இவனுக்கும் அந்த நோய் வரும்தானே!" எனக் கேட்டு காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு சிரித்தான்.

" ரொம்பவே புத்திசாலித்தனமான கேள்விதான் கேட்டிருக்கே! அதுக்காக உன்னைப் பாராட்டியே ஆகணும் சுகு! ஆனால் நான் சொல்லப் போறது உனக்கு அதிர்ச்சியாத்தான் .... இல்லை இல்லை!... மகிழ்ச்சியாத்தான் இருக்கும்!
கொசு கடிக்கறதால ஹெச்.ஐ.வி. வராது!

நீ சொல்ற மாதிரி, இந்த நோய் இருக்கற ஆளை ஒரு கடிச்சு, அந்தக் கிருமியை தன்னோட ரத்தத்துல எடுத்துக்குதுன்னு வைச்சுப்போம். ஹெச்.ஐ.வி. கிருமி ரொம்ப நேரம் உயிரோட இருக்கறதில்லை இங்கே! முன்னேயே சொன்ன மாதிரி ஒரு 20 நிமிஷம்தான்!

அத்தோட, கொசு உன்னைக் கடிக்கறப்ப, தன்னோட ரத்தத்தை அனுப்புறதில்லை! வாயில் இருந்து தன்னுடைய எச்சிலைத்தான் கடிக்கற இடத்துல துப்பி, ரத்தம் உறிஞ்ச ஒரு தோதான இடத்தை அமைக்குது! இதுல ஏற்கெனவே ரத்தத்தில் இருக்கிற கிருமி வர வாய்ப்பில்லை.

இன்னும் சொல்லப் போனா, ஹெச்.ஐ.வி. கிருமி, பூச்சிகளோட உடம்புல தன்னைப் பெருக்கிக் கொள்வதுமில்லை. அதிக நேரம் உயிர் வாழ்வதும் இல்லை! இதுக்கெல்லாம் மேல ஒரு பெரிய காரணம், ஒருத்தரைக் கடிச்சதும் கொசு உடனே அடுத்த ஆளை நோக்கிப் போறதில்லை! கொஞ்ச நேரம் ஒரு இடத்துல போய் உட்கார்ந்து, குடிச்ச ரத்தத்தை ஜீரணம் பண்ணிட்டு, அப்புறமாத்தான் அடுத்த ஆள்கிட்ட போகும். இதுக்கு கொஞ்ச நேரம் பிடிக்கும். அதுவரைக்கும் ஒரு கொசுவோட ரத்தத்தில் இந்தக் கிருமி உயிர் வாழாது! எனவே பயம் வேண்டாம்.... ஹெச். ஐ.வி. வருமோ என! ஆனா, மலேரியா,[MALARIA] மஞ்சள் ஜுரம்[JAUNDICE] போன்ற நோய்கள் பரவலாம்! ஏனெனில் இவை எச்சிலின் மூலம் வரும் நோய்கள்!

"சரிப்பா! ரொம்பவே சொல்லிட்டே! இப்ப இது வந்திருக்கா இல்லியான்னு எங்கே போய் தெரிஞ்சுக்க முடியும்!?"

'உன் குடும்ப டாக்டர்கிட்ட.... [அதான் என்கிட்ட!]... போய் கேளு! அவரே சொல்லுவார்! அவர்கிட்டேயே இதை டெஸ்ட் பண்ற வசதியும் இருக்கலாம். இல்லேன்னா எங்கே போய் பரிசோதிக்க முடியும்னு அவர் சொல்லுவார். அவர் கிட்ட போக வெக்கமா இருந்தா, எந்த ஒரு அரசு மருத்துவ மனையிலும் போய் டெஸ்ட் பண்ணிக்கலாம். ரொம்ப அவசரம்னா ஒரு 30 நிமிஷத்துலியே தெரிஞ்சுக்கலாம். நிச்சயமா தெரிஞ்சுக்கணும்னா முறையான சோதனை முடிவு தெரிய 1-2 வாரம் பிடிக்கும். "எலிசா"[ELISA], வெஸ்டெர்ன் ப்ளாட்"[WESTERN BLOT] என்கிற இரண்டு ரத்தப் பரிசோதனைகள் மூலம் இதை உறுதிப் படுத்த முடியும். இவை இரண்டையும் செய்த பின்னரே இந்த நோய் வந்திருக்கிறது எனச் சொல்ல முடியும்.

"தனக்கு இந்த நோய் இருக்கா இல்லியான்னு எத்தனை நாளுக்குள்ள இதை ஒரு ஆளு தெரிஞ்சுக்க முடியும்?"

'சாதாரணமா இந்தக் கிருமி ஒரு ஆளுக்குள்ள வந்தால், உடம்பு அதை எதிர்த்து போராட ஆரம்பிக்கும். இது பொதுவா எல்லா நோய்க்கு எதிராகவும் நடக்கறதுதான்!

ஹெச்.ஐ.வி.க்கு எதிரான தடுப்புசக்தி ஒன்று முதல் ஆறு மாதத்துக்குள்ள தெரிய ஆரம்பிக்கும். இந்த சமயத்துல இதை வைச்சு இந்த நோய் வந்திருக்கா இல்லையான்னு கண்டுபிடிக்க முடியும்.' என்றேன்

[தொடரும்]

Labels: ,

6 Comments:

At 9:12 PM, Blogger வடுவூர் குமார் said...

மேல் விபரங்கள் - எலிசா & வெச்டர்ன் பிளட் பற்றி தெரியவைத்தற்கு நன்றி.

 
At 9:34 PM, Blogger VSK said...

தவறாமல் வந்து தெரிந்து சொன்னதற்கு நன்றி, திரு.குமார்!

 
At 9:41 PM, Blogger VSK said...

இந்த இரண்டு பரிசோதனைகளைப் பற்றிய மேல்விவரங்களும் இப்போது இணைக்கப் பட்டிருக்கின்றன, திரு. குமார்!

சுட்டியதற்கு நன்றி!

 
At 6:23 AM, Blogger Unknown said...

உள்ளேன் ஐயா

 
At 9:42 AM, Blogger மங்கை said...

Window Period பற்றியும் சொல்லுங்களேன்.. ஏன்னா இந்த விண்டோ பீரியட்ல டெஸ்ட் பண்ணி தங்களுக்கு எச் ஐ வி இல்லைனு நினச்சுட்டு போன கதைகளும் உண்டு... ம்உதல் டெஸ்ட் செய்து மூன்று மாதம் கழித்து மற்றொரு டெஸ்ட் செய்வது நலம்

ஒரு வேளை அடுத்த பதிவுல வருதோ..

 
At 10:13 AM, Blogger VSK said...

//Window Period பற்றியும் சொல்லுங்களேன்.. //

இனி வரும் பதிவுகளில் வரும்.

 

Post a Comment

<< Home