"கசடற"

அறிவியல் தொடர்பான எனக்குத் தெரிந்த தகவல்களை, ஒரு மருத்துவன் எனும் பார்வையில் சொல்ல விழைகிறேன். முழுக்க முழுக்க இவை என் கருத்துகள் மட்டுமே! முருகனருள் முன்னிற்கும்!

Wednesday, March 26, 2008

"எய்ட்ஸுக்கே உதவியா-2."

"எய்ட்ஸுக்கே உதவியா-2."
அவ்ளோதானா? ரத்தம், இல்லாட்டி உடலுறவு, இப்படித்தான் இது பரவுமா? என்றான் சுகுமார்.

பொதுவா, இதுதான் சரின்னாலும், ரத்தம், விந்து[sperm], பெண்வழியில் சுரக்கும் நீர்[vaginal fluids], மார்பில் சுரக்கும் பால், மற்றைய உடலில் இருந்து ரத்தத்துடன் கலந்த நீர்[bodily fluids] இவற்றின் வழியே இந்த நோய் பரவலாம்.

"சரி! இந்த -ஹெச்.ஐ.வி. எப்படி 'எய்ட்ஸ்' ஆக மாறுகிறது? "

'இந்த வைரஸ் நம் உடலில் ஒரு தடுப்புச் சக்தியாக இருந்து, வரும் நோய்களை எதிர்க்கும் CD4 என்கின்ற 'உதவி செய்யும் செல்களை [Helper Cells] நேரடியாகத் தாக்கத் தொடங்குகிறது! இந்த செல்களின் அளவு குறைந்து வருவதை வைத்து, இந்த எய்ட்ஸ் என்னும் நோய் வந்து கொண்டிருக்கிறது என நாம் அறிய முடியும்.
இந்த வைரஸ் உடலில் கலந்து, பல ஆண்டுகளுக்குப் பின்னே இது நிகழத் தொடங்குகிறது. எனவே, இந்த வைரஸ்களின் அளவைக் குறைப்பதன் மூலம், எய்ட்ஸ் வருவதை தள்ளிப் போட முடியும்... அதற்குத்தான் மருந்துகள் உதவுகின்றன!

"இந்த ஹெச்.ஐ.வி எப்போத்தான் ஆரம்பிச்சுதுன்னு சொல்லுங்களேன்! அதை விட்டுட்டு.....!!" உள்ளிருந்து ஒரு குரல் ஓங்கி ஒலித்தது

'சொல்றேன், சொல்றேன்! நீ ஏன் கத்தறே!' என ஒரு பம்மிய குரலில் சொல்லிவிட்டு, சுகுமாரைப் பார்த்து, 'எப்போ வந்துது, எப்படி வந்துதுன்னு யாருக்கும் தெரியாது! ஆனா, 1959ல காங்கோ நாட்டுல கின்ஷாஸா நகரில் கொடுக்கப்பட்ட ஒரு ரத்தத்தில் இந்த வைரஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை இன்னும் பரிசோதித்த போது, இந்த வைரஸ் 1950-களில் தொடங்கியிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.
இருப்பினும், 1979-1981-ல் அமெரிக்காவில் ஒரு சில நோயாளிகள் எந்தவொரு காரணமுமில்லாமல், எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும் செல்களின் அளவுகள் குறைந்திருப்பதைக் கண்டபோது, இதை ஆராயத் தொடங்கியதின் விளைவாக இந்த எய்ட்ஸ் என்னும் நோய் இருப்பது ஒப்புக் கொள்ளப் பட்டது!

1983-ல் தான் ஹெச்.ஐ.வி. வைரஸுக்கும் எய்ட்ஸ் என்னும் நோய்க்கும் இருக்கும் தொடர்பு உறுதிப்படுத்தப் பட்டது.


"அப்படீன்னா, ஹெச்.ஐ.வி. வந்தா நிச்சயம் எய்ட்ஸ் வந்தேதான் தீருமா? " சற்று பயந்த குரலில் கேட்டான் சுகுமார்!
'இல்லை! இந்த வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்டவர்களில் பாதிப் பேர்தான் இந்த நிலைக்குச் செல்கிறார்கள். அதற்கும் ஒரு 10 வருஷம் பிடிக்கும். வாழ்க்கை முறைகள், உடல்நலக் கோளாறுகள் இந்த கால அளவைக் கூட்டவோ குறைக்கவோ செய்யும்.
இன்று இருக்கும் மருத்துவக் கண்டுபிடிப்புகளால், இதன் தீவிரத்தை வெகுவாகக் குறைக்க முடியும் என்பது ஒரு நல்ல சேதி.'

"சரி! இது எனக்கு இருக்கா இல்லியான்னு எப்படி தெரிஞ்சுக்கறதுன்னு சொல்லேன்!"

'என்னடா! இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போடறே! அதான் முதல்லியே கேட்டேன்ல! சொல்லக்கூடாது!' என நான் அலற,
உள்ளிருந்து வெளிவந்த என் மனைவி,

"ஏங்க! உங்களுக்கு எதுனாச்சும் இருக்கா! அவர்தான் ஆரம்பத்துலியே எனக்கு இல்லை, ஒரு தகவலுக்காகத்தான் கேக்கறேன்னு சொல்லித்தானே இதை ஆரம்பிச்சீங்க! பேசாம அவர் கேக்கற கேள்விக்கு மளமளன்னு பதில் சொல்லுங்க!' என அதட்டினார்!
'ஒரு எளிய ரத்தப் பரிசோதனை மூலம் மட்டுமே இதை உறுதிப் படுத்த முடியும்! ஒரு சில அறிகுறிகள் இந்த நோய்க்கென இருந்தாலும், அவற்றை மட்டும் வைத்தே இதுதான்னு சொல்ல முடியாது. அப்படி என்ன அறிகுறிகள்னு தானே கேக்கறே!

காரணமில்லாத திடீர் எடைக் குறைவு
வறட்டு இருமல்
அடிக்கடி வரும் காய்ச்சலும், இரவில் வரும் அதிகப்படியான வியர்வையும்
அதீதமான உடல் சோர்வு
அக்குள், தொடை, கழுத்து இவைகளில் நெறி கட்டுதல்,
தொடர்ந்து ஒரு வாரத்துக்கும் மேல் இருக்கும் வயிற்றுப்போக்கு
வாய், நாக்கு, தொண்டை போன்ற இடங்களில் வரும் வெள்ளைத் திட்டுகள்
ந்யுமோனியா போன்ற நுரையீரல் காய்ச்சல்
உடலின் பல இடங்களில் திடீரெனத் தெரியும் சிவப்பு, பழுப்பு திட்டுகள்
நினைவாற்றல் குறைவு, மனவழுத்தம், மற்றும் சில நரம்பு சம்பந்தமான நோய்கள்.

ஆனால், முன்னரே சொன்னது போல, இவற்றில் ஏதாவது இருந்தாலே, தனக்கு இந்த நோய் என எவரும் பயப்படத் தேவையில்லை. ரத்தப் பரிசோதனை ஒன்று மட்டுமே இதை உறுதிப்படுத்தும் ஒரே வழி!
இந்த அறிகுறிகள் வர வேறு பல மருத்துவக் காரணங்கள் இருக்கின்றன.' என்றேன்.

ஒரு தட்டில் சூடான பக்கோடாவும், இரண்டு கோப்பைகளில் தேநீரும் கொண்டுவந்து வைத்தார் என் மனைவி!

'இதைச் சாப்பிட்டுகிட்டே பேசுங்க' என்று சிரித்தார்.


[தொடரும்]

Labels: ,

8 Comments:

At 7:07 PM, Blogger கோவி.கண்ணன் said...

உமிழ்நீர் மற்றும் வியர்வை வழி ஹெச்ஐவி வைரஸ் பரவாது என்கிறார்களே ?

இது உறுதியான தகவலா ?

 
At 7:08 PM, Blogger இலவசக்கொத்தனார் said...

இப்பவும் உள்ளேன் ஐயா சொல்லிக்கிறேன்.

 
At 9:05 PM, Blogger VSK said...

அடுத்து வரும் பதிவுகளில் இது பற்றி சொல்லவிருக்கிறேன் கோவியாரே!

அநேகமாக எல்லாக் கேள்விகளுக்கும் விடை இருக்கும் என்ன் நம்புகிறேன்.

நன்றி.

 
At 9:05 PM, Blogger VSK said...

மீண்டும் உள்ளிருக்கும் உங்களுக்கு நன்றி, கொத்ஸ்!

 
At 10:08 PM, Blogger வடுவூர் குமார் said...

முதல் கேள்வியில் உள்ள “சு” வை எடுத்துட்டு...குமார் என்று மாற்றிக்கொள்ளுங்கள்.
நான் கேட்க நினைத்தது இந்த கேள்வி தான்.
ஏன்? இதில் மட்டும்? என்ற கேள்வியும் இப்போது தொக்கி நிற்கிறது.

 
At 6:02 AM, Blogger Unknown said...

நல்ல தகவல்கள் டாக்டர்.

HIV பாசிட்டிவ் உள்ள ஆள் எய்ட்ஸ் நிலைமைக்கு போகுமுன்னே குணப்படுத்த வழி இருக்கிறதா?

மறந்திடாமல் பின்னால் பதில் வரணும் என்று :)))) கேள்வி

 
At 7:17 AM, Blogger VSK said...

//முதல் கேள்வியில் உள்ள “சு” வை எடுத்துட்டு...குமார் என்று மாற்றிக்கொள்ளுங்கள்.
நான் கேட்க நினைத்தது இந்த கேள்வி தான்.
ஏன்? இதில் மட்டும்? என்ற கேள்வியும் இப்போது தொக்கி நிற்கிறது.
//
இவ்வளவு நாட்களுக்குப் பின்னரும், இன்னமும் இது பற்றிய பல தவறான கருத்துகள் இணையத்தில் வருவதைப் பார்த்ததின் விளைவே இத்தொடர், திரு. குமார்!
[நானும் ஒரு குமார் தான்!:))]

 
At 7:17 AM, Blogger VSK said...

//மறந்திடாமல் பின்னால் பதில் வரணும் என்று :)))) கேள்வி//

முழுப் பதிவையும் படியுங்கள் நண்பரே! நிச்சயம் பதில் வரும். இப்படிப்பட்ட கேள்விகளை தவறாமல் கேட்கவும். எனக்கும் இதைப் பற்ரி சொல்லியிருக்கிறேனா எனச் சரி பார்த்துக் கொள்ள உதவும். நன்றி.:))

 

Post a Comment

<< Home