"கசடற"

அறிவியல் தொடர்பான எனக்குத் தெரிந்த தகவல்களை, ஒரு மருத்துவன் எனும் பார்வையில் சொல்ல விழைகிறேன். முழுக்க முழுக்க இவை என் கருத்துகள் மட்டுமே! முருகனருள் முன்னிற்கும்!

Sunday, December 10, 2006

"லப் - டப்" -- 2

"லப் - டப்" -- 2

"இதயம் இருக்கின்றதே தம்பி!"

முதல் பதிவில், இதயம் என்றால் என்ன என்பதைப் பார்த்தோம்.

இனி, இந்த இதயம் எவ்வாறு இயங்குகிறது எனப் பார்க்கலாம்.

வலது, இடது பக்கங்களில் இரு, இரு அறைகளாக நான்கு அறைகள் கொண்டது இதயம்.

ஒவ்வொரு அறைக்கும் தனித்தனி வேலை இருக்கிறது.
ஒன்று நிகழும் போது அடுத்தது நிகழ்ந்தால் எல்லா ரத்தமும் ஒன்றாகக் கலந்துவிடும் அபாயம் இருக்கிறது.
இதற்காகத்தான் வால்வுகள் ஒரு அறைக்கும் மற்றொரு அறைக்கும் இடையே இருக்கின்றன.
ஒரு அறைக்குள் ஒரு பணி நிகழும்போது, அது மட்டுமே நிகழ இவை உதவுகின்றன.

1. உடலின் எல்லாப் பாகங்களிலும் இருந்தும் அசுத்த ரத்தம் வலது ஆரிக்கிளை [Right auricle] அடைகிறது. இதைக் கொண்டுவரும் இரு ரத்தக் குழாய்களின் பெயர் சுபீரியர், இன்ஃபீரியர் வீன கேவா [Superior & Inferior Vena Cava]


2. இந்த ரத்தம் வலது ஆரிக்கிளில் இருந்து வலது வெண்ட்ரிக்கிளை [Right Ventricle] ட்ரை கஸ்பிட் வால்வைத் [Tricuspid valve] திறந்து கொண்டு அடைகிறது.
வலது வெண்ட்ரிக்கிள் முழுதுமாக நிரம்பியதும், ட்ரை கஸ்பிட் வால்வ் தானாகவே மூடிக் கொள்ளும்.
இதன் மூலம், வலது வெண்ட்ரிக்கிள் அடுத்து இந்த ரத்தத்தை வெளி அனுப்பும் போது, திரும்பவும் மேலே வலது ஆரிக்கிளுக்குச் செல்ல முடியாது.

3. இப்பொது பல்மோனிக் வால்வின் [Pulmonic Valve] வழியே ரத்தம் பல்மோனரி ஆர்ட்டெரிக்கு [Pulmonary Artery] சென்று நுரையீரலை [Lungs] அடைகிறது.

இவையனைத்தும் இதயத்தின் வலது பக்கத்தில் நிகழ்வன.

அசுத்த ரத்தம் நுரையீரலில் சுத்திகரிக்கப் படுகிறது.
[இது எவ்வாறு என்பதைத் தனியே பார்க்கலாம்.]

இனி வருவது இடது பக்க நிகழ்வுகள்.

4. பல்மோனிக் வெயின் [PulmonicVein] எனும் ரத்தக் குழாய் நுரையீரலில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட, பிராணவாயு நிரம்பிய சுத்த ரத்தத்தை இடது ஆரிக்கிளுக்கு[Left Auricle] கொண்டு வந்து நிரப்புகிறது.

5. ஒரு குறிப்பிட்ட அளவு ரத்தம் நிரம்பியதும் இதன் அழுத்தத்தால், இடது ஆரிக்கிளுக்கும், வெண்ட்ரிகிளுக்கும் இடையில் இருக்கும் மைட்ரல் வால்வ் [Mitral Valve] கீழ் நோக்கித் திறக்கிறது.

6. வலது ஆரிக்கிள் சுருங்கி ரத்தத்தை இடது வெண்ட்ரிகிளுக்கு அனுப்புகிறது.

7..வெண்ட்ரிகிள் நிரம்பியதும், மைட்ரல் வால்வ் தானாக மேல்நோக்கி மூடிக் கொள்ளுகிறது . [இதுவும் வெண்ட்ரிகிள் சுருங்குகையில், ரத்தம் மேலே செல்லாமல் இருக்க ஒரு தற்காப்பு ஏற்பாடே.]

8. இப்போது, அயொர்டிக் வால்வ்[Aortic Valve] திறந்து வெண்ட்ரிக்கிள் சுருங்கி ரத்தம் அயோர்டா[Aorta] எனும் மஹா தமனியின் வழியே உடலின் எல்லாப் பாகங்களுக்கும் சுத்த ரத்தத்தை எடுத்துச் செல்லுகிறது.

என்ன! தலை சுற்றுகிறதா?!

இந்த நிகழ்வுகள் தொடர்சியாக உடல், இதயம், நுரையீரல், இதயம், மீண்டும் உடல் என்று விடாமல் நடந்து கொண்டிருக்கிறது!

நிமிடத்திற்கு 72 முறை என்னும் அளவில், ........வால்வுகளின், மற்றும் ரத்த அழுத்தத்தின் துணை கொண்டு!

நுரையீரலில் நடப்பது என்ன?

பல்மோனரி ஆர்டெரி[Pulmonary Artery] வழியே நுரையீரலை [Lungs] அடைந்த அசுத்த ரத்தம், காப்பிலரி வெஸ்ஸெல்கள்[Capillary Vessels] எனப்படும் சிறு சுத்த ரத்தக் குழாய்கள் வழியே கரியமில வாயுவை [Carbo dioxide] நுரையீரலின் காற்றுப் பைகளுக்குக் கொடுத்து, அங்கிருந்து நாம் சுவாசிக்கும் காற்றின் வழியே நிரம்பிக்கிடக்கும் பிராணவாயுவை[Oxygen] பெற்றுக் கொள்கிறது. இந்தக் கரியமில வாயுதான் நமது சுவாசத்தின் வழியே வெளியேறுகிறது.

உடலில் என்னதான் நடக்கிறது?

நம் உடலில் சுத்த, அசுத்த ரத்தத்தை எடுத்துச் செல்ல தனிதனி ரத்தக் குழாய்கள் இருக்கின்றன.

ஆர்டெரி[Artery] எனப்படும் குழாய்கள் சுத்த ரத்தத்தையும், வெயின்[Vein] எனப்படும் குழாய்கள் அசுத்தரத்தத்தையும் உடல் முழுதும் கொண்டு செல்லுகின்றன.

இவை இரண்டுமே மேலும் சிறு சிறு குழாய்களாகப் பிரிந்து உடலின் பல இடங்களையும் அடைகின்றன.
உடலுக்குத் தேவையான பிராணவாயு, மற்ற ஊட்டச் சத்துகளை ஆர்டெரிகளும்,
கழிவுப் பொருட்களை, பிராணவாயு குறைந்த ரத்தத்தை வெயின்களும் சுமந்து செல்லுகின்றன.

இவை இரண்டும் தனித்தனியே ஓடினாலும், 'காபில்லரிகள்'[Capillaries] எனும் மிகச் சிறிய ரத்தக் குழாய்கள் மூலம் இணைக்கப்படுகின்றன.

நம் உடலில் ஓடும் இந்த ரத்தக் குழாய்களின் மொத்த நீளம் சுமார் 60,000 மைல்கள்.

இவற்றில் ரத்தம் தொடர்ந்து ஓடிக் கொண்டே இருக்கிறது.

இதயமும் தன் வேலையைச் செய்து கொண்டே இருக்கிறது!

அடுத்த வாரம் இதயம் எவ்வாறு துடிக்கிறது என்பதைப் பார்க்கலாம்.


42 Comments:

At 2:19 PM, Blogger SP.VR. SUBBIAH said...

//நம் உடலில் ஓடும் இந்த ரத்தக் குழாய்களின் மொத்த நீளம் சுமார் 60,000 மைல்கள்.//

யோசித்துப் பார்க்கும்போது திகைப்பாக இருக்கிறது.

இறைவனின் படைப்பில் மிகவும் அதிசயமானது மனிதனின் உடல் அமைப்பு என்றால் அது மிகையல்ல!

ந்ல்ல பதிவு அய்யா!
உங்களுக்கு நன்றி உரித்தாகுக!

அன்புடன்,
SP.VR.Subbiah

 
At 2:40 PM, Blogger VSK said...

முதலில் வந்து கணக்கைத் துவக்கி வைத்த ஆசானுக்கு எனது நன்றி.

ஆம் ஐயா!
இறைவன் படைப்பின் அதிசயங்களின் முன்னர் நாம் பிதற்றுவதெல்லாம் துச்சமே!

சரியாகச் சொன்னீர்கள்!

 
At 2:57 PM, Blogger SP.VR. SUBBIAH said...

உங்களின் level of education & knowledge எங்கே - இந்த எளியவன் எங்கே?

என்னை நீங்கள் ஆசான் என்று சொல்வது - எனக்குக் கேட்கக் கூச்சமாக இருக்கிறது!

Anbudan
SP.VR.Subbiah

 
At 3:35 PM, Blogger மங்கை said...

தானாக, இவ்வளவு நேர்த்தியா இயங்குற இதயத்தை மனுசன் வேண்டாத பழக்க வழக்கத்தால கஷ்டப்பட்டு பழுதாக்ககிறான் ஐயா...

 
At 4:24 PM, Blogger வடுவூர் குமார் said...

சில சமயம் தொலைக்காட்சியில் காட்டும் போது எம்பி எம்பி குதிக்கும் அழகே தனி தான்.நேராக பார்க்கனும் ஆசை.
நமது உடம்பே ஒரு அதிசியம் தான் அதில் இன்னும் புரியாத புதிர்கள் நிறைய.

 
At 5:17 PM, Blogger இலவசக்கொத்தனார் said...

நல்ல விளக்கம். இவ்வளவு complicated வேலையை 60 /70 வருடங்களுக்கு எந்த விதமான தடங்கலுமின்றி நடப்பதை நினைத்தால் வியக்கத்தான் முடிகிறது. அந்த 60,000 மைல்கள் விஷயமும்தான்.

இந்த தொடரின் முதல் பதிவுக்கு சுட்டி தராதது ஏனோ?

 
At 5:38 PM, Blogger Kannabiran, Ravi Shankar (KRS) said...

SK ஐயா

படங்களுடன் கூடிய அருமையான பதிவு! பொறுமையாக ஒரு முறைக்கு இரு முறை படித்தேன்; இது பள்ளியில் பயாலஜியில் படித்த போதும், ரெக்கார்ட் நோட்டில் படம் வரைந்த போதும் புரியாதது, இப்போ கொஞ்சம் புரியற மாதிரி இருக்குது!

 
At 5:39 PM, Blogger Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஒரு கேள்வி ஐயா,
அசட்டுத்தனமாக இருந்தால் மன்னிக்கவும்!

ஆமாம் ஒவ்வொரு முறையும் அசுத்த இரத்தம், கரியமில வாயுவைக் கொடுத்து விட்டு,ஆக்சிஜனை வெளியில் இருந்து வாங்கிக் கொள்கிறது!

சில சமயம் மூச்சுப் பயிற்சி, நீச்சல் போன்றவற்றில் சிறிது நேரம் அடைப்படும் சுவாசத்தால், என்ன ஆகும்? ஆக்சிஜன் கிடைக்காததால், அசுத்த இரத்தம் அப்படியே "மீண்டும் உள்ளே ஒடி விடுமா"?

 
At 5:45 PM, Blogger VSK said...

அதை நினைத்தால்தான் கஷ்டமாயிருக்கிறது, மங்கை!

ஆனால், இதுவும் அவன் விளையாட்டே!

வந்தவரெல்லாம் தங்கி விட்டால் இந்த
மண்ணில் நமக்கே இடமேது?
:))

 
At 5:47 PM, Blogger VSK said...

புதிரா?
புனிதமா?
:))
நன்றி, திரு. வடுவூர் குமார்!

ரவி கவனிக்கவும்!!

 
At 5:50 PM, Blogger VSK said...

மறந்து போனேன், கொத்ஸ்!

4 படங்களைப் பதித்த உற்சாகத்தில் [பொன்ஸ் கவனிக்கவும்!!] அதாஇ மறந்து விட்டேன்!

இப்போது இரண்டிலும் சரி செய்து விட்டேன்!

நினைவு படுத்தியதற்கு மிக்க நன்றி!

உங்கள் கேள்விகளுக்கு முடிந்த வரை பதிலளிக்க முயன்றிருக்கிறேன்.

சரியாக இருக்கிறதா என நீங்கள்தான் சொல்ல வேண்டும்!
:)

 
At 5:58 PM, Blogger VSK said...

முதல் பின்னூட்டத்திற்கு ஒரு நன்றி!

இரண்டாவது கேள்வி மிக நல்ல கேள்வி!

சுவாசத்திற்கும், ரத்த ஓட்டத்திற்கும் சம்பந்தம் உண்டு, ஓர் அளவு வரை.

சுவாசம் என்பது தனி இயக்கம்.
ரத்தஓட்டம் ஒரு தனி இயக்கம்.

நீங்கள் சொல்வது போன்ற நிகழ்வுகளின் போது, நுரையீரலும், ரத்தக் குழாய்களும் சற்று விரிந்து பொறுமையாகச் செயல்படும்.

அதுவும் ஓரளவிற்கே!

எல்லை மீறினால் எதுவும் ஆபத்தே!

மேல் விளக்கம் வேண்டுமெனில் கேட்கவும்!

 
At 5:59 PM, Blogger இலவசக்கொத்தனார் said...

//சில சமயம் மூச்சுப் பயிற்சி, நீச்சல் போன்றவற்றில் சிறிது நேரம் அடைப்படும் சுவாசத்தால், என்ன ஆகும்? ஆக்சிஜன் கிடைக்காததால், அசுத்த இரத்தம் அப்படியே "மீண்டும் உள்ளே ஒடி விடுமா"?//

நான் சொல்லட்டுமா? நாம் மூச்சைப் அடக்கிக் கொள்ளும் பொழுது எடுத்துக் கொள்ளும் காற்றின் ஸ்டாக்கில் இருப்பதால் இந்த இயக்கத்தினைத் தொடர்ந்து நடத்த ஏதுவாகிறது.

இதயத்தின் துடிப்பிற்கும் நம் நுரையீரல் சுருங்கி விரிந்து காற்றை சுவாசிப்பதற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அதனால்தான் சிறிது நேரத்திற்கு மேல் மூச்சை அடக்க முடிவதில்லை. அசுத்த ரத்தம் மீண்டும் உடலுக்குள் சென்றால் அப்புறம் பரமபதம்தான்.

சரியா டாக்டர்?

 
At 6:12 PM, Blogger VSK said...

நான் சொல்லியிருக்கும் பதிலையும் படிக்கவும், கொத்ஸ்!

நீங்கள் சொல்லியிருப்பதின் லாஜிக் சரிதான்!

//அசுத்த ரத்தம் மீண்டும் உடலுக்குள் சென்றால் அப்புறம் பரமபதம்தான்.//

இத்தான் கொஞ்சம் இடிக்கிறது!

உடலுக்குள்தான் அசுத்த ரத்தமும் ஓடிக் கொண்டிருக்கிறது.

அவை அவ்வப்போது சுத்திகரிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது.

ஆனால், அதன் அளவு உடலில் அதிகரிக்கும் போது தவறான விளைவுகள் ஏற்படுகிறது.

இதைப் பற்றி இன்னும் வரும் பதிவுகளில் காணலாம்.

கொஞ்சம் பொறுமை.
:))

 
At 6:24 PM, Blogger இலவசக்கொத்தனார் said...

//உடலுக்குள்தான் அசுத்த ரத்தமும் ஓடிக் கொண்டிருக்கிறது.//

ஐயா, அதான் ஆர்ட்டரி, வெயின் அப்படின்னு சொல்லி குடுத்துட்டீங்களே. நான் சொல்வது அது பற்றி இல்லை. ஒரு எடுத்துக்காட்டோடு பேசுவோம்.

ஒரு மனிதன் சுவாசிக்கும் காற்றில் ஏதேனும் ஒரு காரணத்தால் ஆக்ஸிஜன் இல்லாது போகிறது. அப்பொழுது அவன் நுரையீரலுக்கு வரும் ரத்தமானது சுத்திகரிக்கப்படாமலேயே நல்ல ரத்தம் செல்ல வேண்டிய ஆர்ட்டரிக்குள் அனுப்பப் படுகிறது. இப்படி ஆகும் பொழுது தேவையான பிராண வாயு கிடைக்காததினால் மரணம் ஏற்படும் வாய்ப்பு உண்டாகிறது அல்லவா? அதைத்தான் சொன்னேன்.

 
At 6:34 PM, Blogger VSK said...

//ஒரு மனிதன் சுவாசிக்கும் காற்றில் ஏதேனும் ஒரு காரணத்தால் ஆக்ஸிஜன் இல்லாது போகிறது. அப்பொழுது அவன் நுரையீரலுக்கு வரும் ரத்தமானது சுத்திகரிக்கப்படாமலேயே நல்ல ரத்தம் செல்ல வேண்டிய ஆர்ட்டரிக்குள் அனுப்பப் படுகிறது. இப்படி ஆகும் பொழுது தேவையான பிராண வாயு கிடைக்காததினால் மரணம் ஏற்படும் வாய்ப்பு உண்டாகிறது அல்லவா? அதைத்தான் சொன்னேன். //

நீங்கள் சொல்வது ஒருவகையில் சரியே!

அப்படி எவ்வளவு நேரம் இவ்வாறு பிராணவாயு இல்லாத காற்று ஒருவனால் சுவாசிக்கப் படுகிறது என்பதைப் பொறுத்து சில விளைவுகள் நிகழ்கின்றன.

ஓரளவு வரை இதயமும், நுரையீரலும், உடலும் தாங்கிக் கொள்ள முடியும்.

இப்படி பிராணவாயு இல்லாத ரத்தம் இல்லாததால், மூளை, ஈரல். சிறுநீரகம் போன்ற முக்கியமான அவயவங்கள் பாதிக்கப் படுவதால் சில விரும்பத் தகாத விளைவுகள் நிகழும்.
அவற்றால் ஏற்படும் விளைவுகளைப் பொறுத்து மரணம் நிகழலாம்.

மரணம் என்பது கடைசி பட்சம்தான்!

 
At 6:39 PM, Blogger இலவசக்கொத்தனார் said...

//இப்படி பிராணவாயு இல்லாத ரத்தம் இல்லாததால், மூளை, ஈரல். சிறுநீரகம் போன்ற முக்கியமான அவயவங்கள் பாதிக்கப் படுவதால் சில விரும்பத் தகாத விளைவுகள் நிகழும்.
அவற்றால் ஏற்படும் விளைவுகளைப் பொறுத்து மரணம் நிகழலாம்.//

இதுதாங்க நான் சொல்ல வந்தது. சில சமயங்களில் மூளைக்கு தேவையான பிராணவாயு கிடைக்காமல் கோமாவில் செல்வதும், அல்லது ஒரு ஸ்ட்ரோக் வருவதும் கூட நடக்கிறது.

இதுவே ஒரு தீவிபத்து சமயமாக இருந்தால் அங்கு வெளிப்படும் நச்சு வாயுக்கள் ரத்தத்தில் கலந்து உடலெங்கும் செல்வதால் மரணிக்கும் வாய்ப்புகள் அதிகமாகின்றது. சமீபத்தில் மழைக்காலத்தில் காருக்குள் உயிரிழந்தவர்களின் கதையும் இது போலத்தான் இல்லையா?

 
At 6:39 PM, Blogger நாமக்கல் சிபி said...

உள்ளேன் ஐயா!

மிக நல்ல பதிவு! இன்னொரு முறை நிதானமாகப் படிக்கிறேன்!

இதயத்தின் செயல்பாடு பற்றி படங்களுடன் நன்றாக விளக்கியுள்ளீர்கள். நன்றி!

 
At 6:39 PM, Blogger நாமக்கல் சிபி said...

//இறைவன் படைப்பின் அதிசயங்களின் முன்னர் நாம் பிதற்றுவதெல்லாம் துச்சமே!
//

:))

 
At 6:40 PM, Blogger இலவசக்கொத்தனார் said...

எவ்வளவுதான் படுத்தினாலும் சலிப்பில்லாம சொல்லிக் குடுக்குறீங்களே. உண்மையிலையே உங்களுக்கு ரொம்ப நன்றி எஸ்.கே.

(இது வெறும் பி.க. மட்டுமில்லைங்க, உண்மையான நன்றியும் கூட!)

 
At 6:45 PM, Blogger வடுவூர் குமார் said...

அந்த இதயப்படங்கள் ஃபிளாஸில் இருந்தால் இன்னும் உயிரோட்டமாக இருந்திருக்கும்.

 
At 6:48 PM, Blogger VSK said...

அதே! அதே!
ரொம்ப நல்லா புரிஞ்சுகிட்டீங்க கொத்ஸ்!

நீங்க ரொம்ப அட்வான்ஸ்டா போயிட்டு இருக்கீங்க!

இப்ப நான் சொன்னது, ஒரு சாதாரண இதயம் எப்படி இயங்குவது என்பதே

இவை மாறுவதால் ஏற்படும் கோளாறுகளால் விளையும் குறைபாடுகளைப் பற்றி அடுத்து வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

 
At 6:49 PM, Blogger VSK said...

வருகைக்கு நன்றி, சிபியாரே!

உங்கள் கருத்துகளுடன் மீண்டும் வருவீர்கள் என நம்புகிறேன்.

 
At 6:53 PM, Blogger VSK said...

எனக்குக் கிடைத்த படங்களைப் பதித்திருக்கிறேன் திரு.குமார்.

நீங்கள் சொன்னது போல இருக்கிறதா எனத் தேடிப் பார்க்கிறேன்.

இதுவே என் சக்திக்கு மீறிய செயல், முதல் முயற்சி என்பதை அனைவரும் உணர்வர்!!
:))

இதுவே அதிகம் என நினைத்தேன்!!

 
At 7:24 PM, Blogger கோவி.கண்ணன் [GK] said...

எஸ்கே ஐயா,

இதயத்தை தொடும், தொட்ட மற்றொரு தொடர் சிறப்பாக வழங்கி இருக்கிறீர்கள்.

இதயம் போல நல்லவற்றை பிரித்துப் பார்த்து அனைவரும் வாழ்வை பயனுள்ளதாக்கி கொள்ளவேண்டும் என்று ஆன்மிக செய்தியாக இதயத்தின் பயனை நான் நினைத்துப் பார்க்கிறேன்.

மேலும் இதயம் பற்றி அறிந்து கொள்ளவேண்டிய அறியவிசயங்கள் நிறைந்துள்ள இந்த பதிவை பலரும் பொக்கிசமாக பிரதி எடுத்துப் பயன்படுத்திக் கொள்வார்கள் என நினைக்கிறேன்.

இந்த நற்செயலில் உறுதுணைபுரிந்த உங்கள் நற்துணைக்கும் வாழ்த்துக்கள் !

நன்றி !

 
At 7:34 PM, Blogger VSK said...

சென்ற பதிவில் திரு. ரவி சொன்னதை மீண்டும் ஒருமுறை நீங்களும் உணர்ந்து சொல்லியிருப்பது இதமாயிருக்கிறது!

இதயம் நமக்களிக்கும் நல்ல செய்திகள் பல.

இதுபோல, தொடர்ந்து ஆன்மீகத்தையும் இணைத்து தொடர்ந்து பின்னூட்டம் இடுங்கள், கோவியாரே!

திரை மறைவிலிருந்து, எனக்குத் துணை புரியும், புரிந்து கொண்டிருக்கின்ற என் நற்றுணையையும் நினைவு கூர்ந்து நன்றி சொல்லியதற்கு, எங்கள் இருவர் சார்பிலும் நன்றி சொல்லிக் கொள்கிறேன்!

 
At 8:15 PM, Blogger நாமக்கல் சிபி said...

//இறைவன் படைப்பின் அதிசயங்களின் முன்னர் நாம் பிதற்றுவதெல்லாம் துச்சமே!
//

:))

 
At 6:04 AM, Blogger கப்பி | Kappi said...

பயனுள்ள அருமையான தொடர்!

மறந்துவிட்டிருந்த உயிரியல் பாடங்களெல்லாம் நினைவுக்கு வருகிறது :)

நன்றி எஸ்.கே ஐயா!

 
At 7:23 AM, Blogger VSK said...

வாங்க திரு.க.ப!
ரொம்ப நாளாச்சு !

இப்பத்தான் உங்க சினிமா விமரிசனங்களைப் படித்ததும் நினைத்துக் கொண்டேன்; நீங்களே வந்து விட்டீர்கள்!

பாராட்டுக்கு மிக்க நன்றி!

 
At 12:14 PM, Blogger சேதுக்கரசி said...

Aorta-வை Central Aorta என்றும் சொல்வார்களா?

நமக்கே ஒரு நிமிடத்துக்கு சுமார் 72 முறை நடக்கிறதே.. குழந்தைகளுக்கும் இன்னும் அதிகமாகவும், வயிற்றுக்குள் இருக்கும் சிசுவுக்கு சுமார் 140-150 முறையும் நடக்குமல்லவா? பிரமிப்பாய் இருக்கிறது!

 
At 12:56 PM, Blogger VSK said...

ஆமாம், சேதுக்கரசி அவர்களே!

மாகாதமனி எனப்படும் அயோர்டா, இதயத்திலிருந்து வெளிப்படுகையில் எனவும், வயிற்றுப் பகுதியில் எனவும், அழைக்கப் படுகிறது.
பின்னர் இரண்டாகப் பிரிந்து வலது இடது காமன் இலியாக் ஆர்டெரிகளாகவும்,
பின்னர் இன்டெர்னல் இலியக், ஃபெமொரல் ஆர்டெரிகளாகவும் பிரிந்து செல்கின்றன, ஒவ்வொரு பக்கத்திலும்.
இவையே நமது உடலின் கீழ் பாகங்களுக்கு சுத்த ரத்தத்தை எடுத்துச் செல்கின்றன.

இதற்கு இணையாக ஒரு எதிர் ஓட்டம் வெயின்கள் மூலம் நிகழ்கிறது!
இதுதான் இரு வீன காவா மூலம் இதயத்தை அடைகிறது, அசுத்த ரத்தத்தை எடுத்துக் கொண்டு!

ரத்தக் குழாய்களைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தால், பதிவு நீண்டு விடும் என்பதால் சொல்லவில்லை!

வேண்டுமெனில் சொல்லுங்கள். இவைகளைப் பற்றி அடுத்த பதிவில் விரிவாகக் காணலாம்.

 
At 10:03 PM, Blogger ஓகை said...

//மரணம் என்பது கடைசி பட்சம்தான்!//

நீங்கள் யதார்த்தமாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் எனக்கு PKS படத்தில் கிரேசி 'கேட்டால்தான் காது இல்லாட்டா செவிடு' என்று சொல்லுவது நினைவுக்கு வந்து குபீர் சிரிப்பு வந்து விட்டது. - கடைசியாக வருவதால்தானே அது மரணம்!. மன்னியுங்கள்.

என்னுடைய இந்த பதிவில் கார்பன் மானக்சைடுக்கும் இரத்த சிவப்பணுக்களுக்குமுள்ள ஈர்ப்பை சொல்லியிருக்கிறேன்.

பதிவுக்கு தொடர்பில்லாது:

இதயம் பேசுமா?
தேவையான சில நேரங்களில்
அது பேசியே விடுகிறது.
கேட்கும் இதயங்கள்
பயனடைகின்றன.
இதயம் மனிதம்.

 
At 8:37 AM, Blogger VSK said...

கடைசியாக வருவதுதான் மரணம் ஓகையாரே!

நான் சொல்ல வந்தது, மரணத்தைத் தவிர்த்து, மற்ற பொல்லா விளைவுகளும் வரும் என்பதே
:))
உங்கள் நகைச்சுவையை நானும் ரசித்தேன்!

கூடவே அந்தக் கவிதையையும்!!

மிக்க நன்றி!

 
At 11:54 AM, Blogger Unknown said...

மிகவும் பயனுள்ள விளக்கமான பதிவு..
சில வினாக்கள் :

//நம் உடலில் ஓடும் இந்த ரத்தக் குழாய்களின் மொத்த நீளம் சுமார் 60,000 மைல்கள்//

ரத்த குழாய்கள் எங்கு ஆரம்பிக்கின்றன.?

உடல் முழுவதும் பயணிக்கும் இரத்த அணுக்களின் life time எத்தனை காலம்?

சிவப்பணுக்கள்,வெள்ளையணுக்களை பற்றியும் அறிந்து கொள்ள ஆவலா உள்ளேன்..

 
At 1:37 PM, Blogger VSK said...

//சிவப்பணுக்கள்,வெள்ளையணுக்களை பற்றியும் அறிந்து கொள்ள ஆவலா உள்ளேன்..//

நான் கச்சேரிக்கு தயார் பண்ணி வெச்சதை விட துண்டுச்சீட்டு [நேயர் விருப்பம்]அதிகமாவே வருது!
:))

எல்லாத்தையும் பாடணும்னா கொஞ்சம் நேரம் ஆகும்.

பரவாயில்லையா?

வருகைக்கு நன்றி திரு மணி ப்ரகாஷ்!

 
At 9:52 PM, Blogger சேதுக்கரசி said...

//சிவப்பணுக்கள்,வெள்ளையணுக்களை பற்றியும் அறிந்து கொள்ள ஆவலா உள்ளேன்..//

அதைப் பத்திப் பேசினா, அனீமியா பத்தியும் கொஞ்சம் எழுதுங்க (இதயத்தோட தொடர்பு இருந்தா) நன்றி

 
At 5:19 AM, Blogger இராம்/Raam said...

ஐயா,

வாய்ப்பே இல்லே... வேறே எங்காவது இவ்வளவு அழகான விளக்கங்கள் அதுவும் தமிழில் கிடைக்குமா என்று தெரியவில்லை... :-)

பதிவிற்கு நன்றி

 
At 7:40 AM, Blogger VSK said...

THANKS, RAM!

 
At 1:29 PM, Anonymous Anonymous said...

//எல்லாத்தையும் பாடணும்னா கொஞ்சம் நேரம் ஆகும்.

பரவாயில்லையா?
//

காத்து இருக்கிறோம்.. SK sar கச்சேரினா காத்து இருக்கறதுல என்ன கஷ்டம்?

 
At 8:27 PM, Blogger VSK said...

//கச்சேரினா காத்து இருக்கறதுல என்ன கஷ்டம்?//

அப்புறம் கச்சேரி காத்து வாங்கிடக் கூடாதே!
:))

 
At 2:49 PM, Blogger குமரன் (Kumaran) said...

கச்சேரி ரொம்ப நல்லா போகுது எஸ்.கே.

நான் துண்டு சீட்டு அனுப்பாத நல்ல ஒரு இரசிகன். :-) நீங்கள் கச்சேரியை நடத்துங்கள். கடைசி வரிசையில் அமர்ந்து கேட்கிறேன் (படிக்கிறேன்).

 
At 2:54 PM, Blogger VSK said...

இப்படி சொல்லியே போயிடலாம்னு பாக்கறீங்களா, குமரன்!

4 பதிவு போட்டாச்சு!

இப்பதான் இங்கே வர்றீங்களா!
:)

 

Post a Comment

<< Home