"பாலியல் கல்வி -- பெற்றோருக்கு" -- 12
"பாலியல் கல்வி -- பெற்றோருக்கு" -- 12
"பருவமே புதிய பாடல் பாடு" [தொடர்ச்சி]
[பத்து கட்டளைகள்]
சில ஆண்டுகளுக்கு முன் நடந்த உண்மைச் சம்பவம்.
மருத்துவன் என்ற முறையில், பல குடும்பங்களுக்கு ஒரு நண்பன், வேண்டியவன் என்று மதிக்கப் பட்டதால்,அவர்கள் குடும்ப நிகழ்வுகளில் நான் விரும்பியோ, விரும்பாமலோ ஈடுபட வேண்டிய அவசியம் பல முறை நிகழ்ந்திருக்கிறது.
மாமியார் கொடுமை முதல், குழந்தையின் காதுகுத்து வரை, சம்பந்தமே இல்லாமல், முக்கிய மனிதனாகக் கருதப்பட்டு, ஆலோசனைகளும், பஞ்சாயத்து செய்வதும் சற்றே பழகிப்போன விஷய்ங்கள்!
அந்த முறையில் என்னிடம் வந்த ஒரு நிகழ்வு இது.
சற்று வசதியான குடும்பம்.
பெண்ணை கான்வென்டில் சேர்த்துப் படிக்க வைத்திருந்தார்கள்.
ஒரு 13 - 14 வயது இருக்கும்.
சென்ற வருடம்தான் வயதுக்கு வந்த சிறுமி.
என் க்ளினிக்கிற்கு வந்த ஒரு மூன்றாம் நபர் என்னிடம் ஒரு தகவல் சொன்னார்.
அந்தப் பெண்ணும், இன்னொரு இளவயசுப் பையனும் அடிக்கடி சேர்ந்து சுற்றுவதாக.சொன்னவரிடம் யார் அந்தப் பையன் என்று விசாரித்து,உறுதி செய்து கொண்டு, அவருக்கு நன்றி சொல்லி விட்டு, இரவு வீட்டிற்குச் செல்லுகையில், அவர்கள் வீட்டிற்குச் சென்றேன்.
பழகியவன் என்பதால், எப்போதும் போல் சாதாரணமாக வந்திருப்பதாய் நினைத்து வரவேற்று, ஒரு ஹார்லிக்ஸ் போட்டுக் கொடுத்துவிட்டு[அது வாடிக்கை அந்த வீட்டில் எனக்கு!]ஊர்க்கதை பேச ஆரம்பித்தார் அந்தத் தந்தை.அவரிடம், நான் உங்களிடம் ஒரு செய்தி சொல்லணும். இது போல, விஷயம் என மெதுவாகச் சொன்னேன்.
முகம் சிவந்து, பல்லை நற நறவெனக் கடித்து, மனைவியை நோக்கி உறும ஆரம்பித்தார் அவர்.
"எல்லாம் இவளால வந்த வினை டாக்டர். எனக்கும் கூட நேற்றுத்தான் இந்த விஷயம் தெரிய வந்தது. இவ கொடுக்கற செல்லத்துல தான் அவ இப்படி ஆடறா" எனப் பொரிந்து தள்ளினார்.
இது நான் ஓரளவு எதிர்பார்த்த வினைதான் என்றாலும், இந்த நேரத்திற்கு இது ஆகற கதை இல்லை என்பதால், அவரை மரித்து," இது நேரம் இல்லை பழியை யார் மேல போடறதுங்கறதுக்கு. இப்ப நீங்க என்ன செய்யப் போறீங்க என்று தெரிந்து கொள்ளவே நான் இங்கு வந்தது" என்றேன்.
"என்ன செய்யணும்ஙறீங்க? ஸ்கூலை மாத்த வேண்டியதுதான். அவ பின்னாடி கூடமாட போக வேண்டியதுதான் இனிமேல. வேர என்ன பண்னணும்னு சொல்லுங்க" என்றதும் எனக்கு வருத்தமாய் போய் விட்டது.
அடுத்தவர் மீது பழி போடலும், மகளைத் தண்டித்தலும் இரண்டுமே எனக்கு சரியாகப் படவில்லை.
அவரைப் பார்த்து,
"இது சரியானதாகத் தோன்றவில்லை. உங்க குடும்பத்துல ஒருத்தன் மாதிரி என்னை நடத்துவதால் நான் சொல்றதை நீங்க கேக்கணும். கோபப்படாம நிங்க உங்க பெண்ணொட பேசணும். என்னன்னு விசாரிக்கணும். அவங்க ரெண்டு பேரும் ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஸாக் [Just friends]கூட இருக்கலாம். அப்படித்தான் அது சொல்லும். அதை நீங்க நம்பணும். அட் லீஸ்ட் [at least] நம்பற மாதிரியாவது நடிக்கணும். பிறகு, பொறுமையா, ஆத்திரப்படாம, அவ கிட்ட, இது எப்படியெல்லாம் அவளையும், நம்ம குடும்பத்தையும் பாதிக்கும், இதுல என்னவெல்லாம் கவனமா இருக்க வேண்டிய விஷயம் இருக்குங்கறதை தெளிவா புரியும்படி சொல்லணும். பருவ காலத்துல இது மாதிரியான சில விஷயங்கள் நடக்கரது சகஜம்தான். இதைப் பெரிசு படுத்தி, அது அவமானப் படற மாதிரியோ, இல்லை மனசு பாதிக்கற மாதிரியோ நடந்துகிட்டீங்கன்னா, அப்புறம் உங்க பொண்ணு எப்பவும் உங்களை மன்னிக்காது. எனக்கும் அந்தப் பையனோட வீட்டைத் தெரியும். நான் அவங்க கிட்ட பக்குவமா இதைப் பத்தி சொல்லி அங்கேயும் பேசச் சொல்றேன். ஆனா, நிதானமும் பொறுமையும் மிக மிக அவசியம் இதுல" என்றேன்.
அது போலவே நடந்து எல்லாம் சரியானது தனிக்கதை.
இங்கு வேண்டாம்.
இதுதாங்க விஷயம்.
பருவம் ஆரம்பிக்கற நேரத்துல, ஒரு சில மாற்றங்கள் உடல் ரீதியாகவும், உணர்ச்சிகள் ரீதியாகவும் நடக்குது.
இதுல பெற்றோர்களின் பங்கு என்ன, எப்படி நடந்துக்கணும் அவங்க என்பதைப் பார்ப்போம்.
ரொம்ப பெருசா பதிவு இருந்தா, நிறையப் பேரு படிக்க மாட்டாங்கன்னு எனக்கு ஒரு சக பதிவர் எச்சரித்ததால் கொஞ்சம் சுருக்கமா சொல்றேன்.
பத்து கட்டளைகள்
1. இந்தப் பதிவைப் படிக்கறவங்களுக்கு பல்வேறு வயதுகளில் குழந்தைகள் இருக்கலாம்.அதனால, சில பேர் இப்பத்தான் இதைப் பத்தி தெரிஞ்சுக்கற நிலையிலும் இருக்கலாம்.அவங்க எல்லாருக்கும் ஒரு வார்த்தை.இதுதான் கடைசி நிலை.இப்ப விட்டீங்கன்னா, அவங்களை நீங்க பிடிக்கவே முடியாது. என் பெண், பையன் தப்பு பண்ண மாட்டான் என்கிற மனோபாவத்தைத் தூக்கி எறியுங்க.
2. உடல் உறவு சம்பந்தமா உங்க குடும்ப வழக்கங்களைத் தெளிவாக பையன் பிள்ளைகளுக்கு, இதுவரை சொன்னது இல்லைன்னா, இப்பவாவது சொல்லியே ஆகணும். உடல் உறவு என்பது ஒரு இனிமையான அனுபவம்தான் என்றாலும், சற்று மன முதிர்ச்சி அடைந்த பின்னர் இதில் ஈடுபடுவதுதான் உடலுக்கும், உள்ளத்திற்கும் நல்லது என்பதை அழுத்தமாகப் பதிய வைக்க வேண்டும்.
3. நெருங்கிப் பழகவும், அன்பைக் காட்டவும், உடல் உறவைத் தவிர பல வழிகள் உண்டென்பதைச் சொல்லிக் கொடுக்கணும்.
4. வயது, இருவரின் உடன்பாடு,[consensus] தடுப்பு முறைகள்,[contraception] அன்பு, [love], காதல்,[love for a particular person], நெருக்கம் [intimcy] அதனால் ஏற்படும் விளைவுகள் இவை பற்றி எல்லாம் ஒரு தெளிவான புரிதலை அவர்களுக்குக் கொடுப்பது மிகவும் தேவையான ஒன்று.
5. 'வேண்டாம்'[NO] 'கூடாது' [DON'T] என்ற சொற்களின் முக்கியத்துவத்தை ஆழமாக்ப் பதிய வைக்க வேண்டும்.
6. இது உன் உடல், உள்ளம். உன் சம்மதமின்றி எவருக்கும் இதில் ஆளுகை புரிய அதிகாரமில்லை. இதற்கான முடிவெடுக்கும் திறமையும், அதிகாரமும், உனக்கு மட்டுமே உள்ளது என்பதையும் அந்த உறுதி வளரும் வரை, பெற்றவர் துணையை நாடி இருப்பதின் அவசியத்தையும் வேரூன்றச் செய்ய வேண்டும்.
7. எதையும் அடுத்தவரிடம் சொல்லுதற்குப் பதிலாக, பெற்றவரிடம் வந்து சொல்லலாம் என்ற நம்பிக்கையை அவர்கள் மனதில் பதிப்பதில் உங்களுக்குப் பெரிய பொறுப்பு இருக்கிறது. குடும்பச் சூழலை அப்படி அமைத்துக் கொள்வதில், அப்பா, அம்மா இருவருக்குமே சம பங்கு இருக்கிறது. குழந்தைகள் உங்களைப் பார்த்து பயப்படும்படி செய்வதில் இனிமேல் ஒரு பெருமையும் இல்லை. மாறாகக் கேடுகளே விளயும். ஒரு நண்பனாக, தோழியாக உங்களைக் கருதுமாறு, அதே சமயம் உங்கள் மரியாதை குறையா வண்னம் நடந்து கொள்வதில் தான் உங்கள் திறமை இருக்கிறது.
8. தவறுதலாகவோ, தெரியமலோ அப்படி ஏதாவது அசம்பாவிதமாக நடந்து விட்டாலும், அதை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்பதில், உங்கள் குடும்ப மரபின் படி தீர்மானமாக இருப்பது நன்மை பயக்கும். கருத்தடையோ,[contraceptives], சிதைவோ[abortion], வளர்ப்போ,[parenting] தத்து கொடுத்தலோ,[adoption] இவையெல்லாம் கூட சற்று முன்கூட்டியே இருவரும் கலந்து பேசி ஒரு முடிவு செய்து வைத்துக் கொண்டால் கூட தவறில்லை. எதற்குச் சொல்கிறேன் என்றால், இதில் ஒரு தெளிவு இல்லையெனில், பிரச்சினை என்று வரும் பொது, இதன் மூலம் பலவித சங்கடமான விளைவுகள் வரலாம். இது நிகழும், நிகழ வேண்டும் என்ரு சொல்லவில்லை. ஆனால் ஒரு நிலைப்பாடு இருப்பது நல்லதல்லவா?
9. எப்படியெல்லம் ஒரு சிலரால் உடலுக்கும், மனதுக்கும் கேடு[abuse] விளவிக்க முடியும், அதற்கு எப்படி நாம் கவனமாக இருக்க வேண்டும் என்பதை TV பார்க்கும் போதோ, அல்லது இது போன்ற நிகழ்வு ஒன்று அக்கம்பக்கத்தில் நடந்தாலோ, அந்த சந்தர்ப்பங்களைப் பயன் படுத்திக் கொண்டு, ஒரு ஆரோக்கியமான விவாதம் நடப்பது இவர்களுக்குப் பெரிதும் உதவும் .
10. பருவம் என்றதுமே, உடனே அது உடல் உறவு, திருமணம் பிள்ளை பெற்றுக் கொள்ளல், குடும்பம் நடத்துதல் என்றுதான் இல்லாமல், இது தவிர ஒரு சிலர், தனித்தும் இருக்க , இதிலெல்லாம் ஆர்வம் இல்லாமல் இருக்கவும் கூட வாய்ப்புண்டு என்பதையும் சொல்லித் தர வேண்டும். இல்லையென்றால், நாம் ஏதோ சமூகத்தில் சேராத பிறவி என்ற தாழ்வு மனப்பான்மை வராமல் தடுக்க இது பயன்படும்.
அன்பும்,[love], பாசமும், [affection], குடும்ப நிலைகளும் [family values] காட்டி, பொறுமையுடனும், நிதானமாகவும் செய்தால் ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தையை நல்ல வழியில் கொண்டு செல்ல முடியும், ஒரு அளவு வரை..... அவர்கள் தாங்கள் யார், தனக்கு என்ன வேண்டும், தன்னால் என்ன முடியும் என்ற தன்னம்பிக்கை அவர்களுக்குள் வரும் வரை.
அதன் பிறகு.....?
அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்!
கவலைப் படாதீர்கள்.
உங்கள் கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் நிலை அடுத்தது!
பெற்றவர்கள் அஞ்சும் அந்தப் பதினெட்டு!
அதை அடுத்த பதிவில் பார்ப்போம்!
16 Comments:
என்ஙே யாரையும் இன்னும் கணோமே என நினைத்த வேளையில் உங்கள் மறுமொழி வ_ன்தது, வைசா!
மிக்க நன்றி.
நான் முதல் கட்டளையில் சொன்னது போல, இப்போதுதான் இதைப் பற்றித் தெரிந்து கொள்பவர்கள், அல்லது இவ்வயதில் குழந்தை இருப்பவர்கள் கவனிக்க் வேண்டிய நிகழ்வு இவையெல்லாம்.
மற்றபடி, இந்தத் தொடர் 3 வயதிலிருந்தே ஆரம்பித்திருக்கிறது, இது போன விஷயங்களை நான் ஒவ்வொரு பதிவிலும் வலியுறுத்தி வந்திருகிறேன் என்பதும் நீங்கள் அறிந்ததே.
எஸ்கே சார்,
பத்துக் கட்டளைகள் மிக நேராகச் சிரத்த்தையோடு சொல்லப்பட்டிருக்கிற உண்மைகள். உண்மை கசக்கத்தான் செய்யும்.
Emotional catastrope சமாளிக்க Disaster preparation என்ற அளவில் அறிந்திருக்க வேண்டியது பெற்றோருக்கு அவசியமாகிறது.
பொதுவாக taboo என்றெண்ணித் தொடத் தயங்கும் சப்ஜெக்ட் இது. சிறப்பாகத் தருவதற்கு வாழ்த்துக்கள் மீண்டும்.
அன்புடன்,
ஹரிஹரன்
உள்ளேன் ஐயா,
எஸ்கே ஐயா...! இந்த தொடர் பதிவு சிறப்பாக இருக்க்கிறது ! பாராட்ட மனம் திறக்க நினைத்தேன்....
பாரப்பா மருத்துவரின் பாலியில் பதிவு,
பத்துக்குள் முத்தாக அடக்கி சொல்கிறார் !
கேளப்பா அறிவுரைகள் பெற்றவரானான நீ
பிள்ளைகள் மனநலம் அறிந்து நடப்பதற்கே !
சேரப்பா குழந்தகைகள் மனது அறிந்தேயதில்,
யாதுமொரு துன்பமெதும் வந்திடாது புரிந்துகொண்டால் !
சொல்லப்பா எல்லோருக்கும் நற்செய்தி தன்னை
அனைவரும் அறிந்திட குடும்பவுறவு நலம்பெறுமே !
அன்புடன்
கோவியார்
தொடர்ந்து வந்து, நல்ல கருத்துகளையும், ஊக்கத்தையும் கொடுப்பதற்கு மிக்க நறி, ஹரிஹரன்.
நமக்கு நடக்காது என்று மெத்தனமாய் இருந்துவிட்டு, பின்னர் நிகழும் போது பல நிலைகளைல் உடைந்து போவதே பெரும்பான்மையான பெற்றோர்களின் நிலையாய் இருக்கிறது.
ஒருவருக்காவது இது உதவுமெனின், மகிழ்வுறுவேன்.
மீண்டும் நன்றி.
வருகை குறிக்கப்பட்டது, மகிழ்வுடன், ராம்!
வாழ்த்துப்பா பாடிடவே
ஓடி வந்த கண்ணப்பா
குளிர்ந்ததப்பா என் உள்ளம்
மகிழ்வாய் இருக்குதப்பா
ஏனப்பா வரவில்லை
இரண்டாம் முறை நீயப்பா
சொல்லப்பா சொன்ன சொல்லை
காப்பாற வேண்டமாப்பா
சரியப்பா இம்முறையாகிலும்
மீண்டும் ஒருமுறை வந்திடப்பா
சொல்வேனப்பா மறுபடியும்
உனக்கெந்தன் நன்றியப்பா!
:))
:))
S.K. sir,
/எதையும் அடுத்தவரிடம் சொல்லுதற்குப் பதிலாக, பெற்றவரிடம் வந்து சொல்லலாம் என்ற நம்பிக்கையை அவர்கள் மனதில் பதிப்பதில் உங்களுக்குப் பெரிய பொறுப்பு இருக்கிறது/
நீங்கள் சொல்வதில் மாற்றுக் கருத்து இல்லை.. உங்கள் தொடரைப் படிக்கும் பல பெற்றோர்கள் இனியாவது இதைச் செயல்படுத்த முயல்வார்கள்..
எனக்கு ஒரே ஒரு சந்தேகம்.. நம் குழந்தைகளுக்கு, நீங்கள் சொல்வது போல் அந்த வயதில் எல்லாம் தெரிந்து விடுகின்றன.
//இது உன் உடல், உள்ளம். உன் சம்மதமின்றி எவருக்கும் இதில் ஆளுகை புரிய அதிகாரமில்லை.//
இதுவும் கூட புரிந்திருக்கலாம்..
இந்த எச்சரிக்கை சாதாரண மற்ற சமயங்களில் அறிவுக்கு தெளிவாக உறைக்கிறது.. ஆனால் எதிர்பாலினத்தவர் நெருக்கமாக பேசும் சமயத்தில், அந்த எச்சரிக்கையை விட, தொடுவதினாலோ அல்லது சற்று எல்லை மீறும்போதோ அதில் கிடைக்கும் சின்னச்சின்ன சந்தோஷங்கள் (கிளர்ச்சி என்று சொல்லலாமா?), சுகமாக இருப்பதால் எச்சரிக்கை அந்த நிமிடங்களில் எங்கோ போய்விடுகிறதே..
அதற்குப் பின்னால் நிதானமாக யோசிக்கும் போது, எச்சரிக்கை எல்லாம் நன்றாக நினைவில் வருகிறது.. அந்த சமயத்தில் மட்டும்.. அதுதான் பிரச்னை..செக்ஸ் உணர்வு என்பது மற்ற எல்லாவற்றையும் ஓரங்கட்டக் கூடிய வல்லமை பெற்றதா?..
எல்லோருக்கும் மனக்கட்டுப்பாடு அந்த இடத்தில் தோல்வியடைந்து விடுமா.. இல்லை, சரியாக வளர்க்காததே குறையா?.
நீங்கள் சொன்ன கவனமின்மை மற்ற விஷயங்களிலும் நடக்கிறது.
இதில் சற்று அதிகமாகவே நடக்கிறது.
அவசரத்தில், ஆத்திரத்தில் ஒன்றைச் செய்வது என்பது மனித இயல்பு.
அதே சமயம் அதன் பின் விளைவுகள் என்னவெனத் தெரிந்தவர் அதனை யோசித்தே செயல்படுவர், பெரும்பாலும்.
இந்த வயதில், சோதனை செய்து பார்த்தல் [Experimentation] என்னும் உணர்வு சற்று தூக்கலாகவே இவர்களுக்கு அமைந்து விடுகிறது.
அதனால் யோசிக்காமல், அல்லது இன்னும் கொஞ்சம் , இன்னும் கொஞ்சம் தள்ளிப் பார்க்கலாமே [pushing the envelope] என எண்ணி எங்காவது மாட்டிக் கொள்கின்றனர்.
அந்த காட்டாற்று வெள்ளத்தை சரியான முறையில், சரியான வழியில் திசை திருப்பி அவர்களைச் சாதனையாளர்களாக மாற்றுவதில்தான் பெற்றொரின் பங்கு அமைகிறது.... மற்றெல்லாரையும் விட.
அதற்குத்தான் இப்பயிற்சி சிறு வயது முதலே ஆரம்பித்தாக வேண்டும் என சொல்லி வருகிறேன்.
சரிதானே!
விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி, திரு. கடல் கணேசன்.
மொத்தத்தில் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையேயான உறவு தொடர்ந்தும் ஒளிவு மறைவு இன்றியும் இருக்க வேண்டும்.
அதே ! அதே ! ஜி.ரா.!
/நீங்கள் சொன்ன கவனமின்மை மற்ற விஷயங்களிலும் நடக்கிறது/
ஆமாம்.. அதுவும் உண்மை.. நீங்கள் எழுதியபின்பு அதை உணர்கிறேன். நன்றி ஸார்.
ஜெயஸ்ரீ அவர்கள் ஒரு அருமையான கதையை, இப்பதிவுகளுக்கு மிகவும் தொடர்புள்ள ஒரு கதையை கொடுத்திருக்கிறார், பாலியல் கல்வி 9-வது பதிவில்.
http://kasadara.blogspot.com/2006/09/9.html
அனைவரும் அதனைத் தவறாது படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
கதையினை எழுதிய ஜெயந்தி சங்கருக்கும், தந்தமைக்கு ஜெயஸ்ரீக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
எஸ்.கே அய்யா.
அருமையான தொடர்.இன்றுதான் கன்னில் பட்டது.
மீதி 11 பதிவுகளையும் இனிமேல் தான் படிக்க வேண்டும். கலியானம் செய்துகொள்ளவே எனக்கு பத்து வருடம் ஆகும் என்பதால் கொஞ்சம் மெதுவாகவே படிக்கலாம் என்று நினைக்கிறேன். :)
சொல்ல மறந்துவிட்டேன்.
எல்லா பாகங்களையும் எழுதிவிட்டு இந்த தொடரை மின்நூலாக நீங்கள் வெளியிட வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்.
இப்போதாவது பட்டதே, சம்த்ரா!
:))
பரவாயில்லை. இன்னும் நிறைய நேரம் இருக்கிறது.
முழுதும் படித்து ஒவ்வொரு பாகத்துக்கும் உங்கள் கருத்தை எழுதுங்கள்.
மீண்டும் அவை தமிழ்மண முகப்பில் வர உதவும்.
உங்களைப் போல இன்னும் வேறு யார் கண்ணிலாவது படட்டும்.
உங்கள் ஆலோசனைக்கு நன்றி.
நண்பர்கள் உதவியால் மின்நூலாக்க முயற்சிக்கிறேன்.
மிக்க நன்றி.
Post a Comment
<< Home