"கசடற"

அறிவியல் தொடர்பான எனக்குத் தெரிந்த தகவல்களை, ஒரு மருத்துவன் எனும் பார்வையில் சொல்ல விழைகிறேன். முழுக்க முழுக்க இவை என் கருத்துகள் மட்டுமே! முருகனருள் முன்னிற்கும்!

Monday, February 26, 2007

"லப்-டப்" 14 --"ஆ! நெஞ்சு வலிக்குதே"[3] "உயிரின் உயிருக்கு ஓம் நம:"

"லப்-டப்" 14 -- "ஆ! நெஞ்சு வலிக்குதே"[3]

"உயிரின் உயிருக்கு ஓம் நம:"

மையோகார்டியல் இன்ஃபார்க்ஷன் [Myocardial Infarction, MI] என்றால் என்ன?

அப்படி என்றால் என்ன?
எப்படி நிகழ்கிறது?
எதனால் வருகிறது?

இதன் அறிகுறிகள் என்னென்ன?
எப்படி இதைத் தவிர்க்க முடியும்?
என்ன சிகிச்சை இதற்கு?
சிகிச்சைக்குப் பின் என்ன செய்ய வேண்டும்?இதயத் தாக்குதலின் அறிகுறிகள் [symptoms] என்னென்ன?

1. 'ஆஞ்ஜைனா'[angina] எனும் நெஞ்சுவலி:
ஒரு விதமான இனம் புரியாத வலி அல்லது வேதனை, மார்பின் நடுப்பகுதியில் இருந்து கிளம்பி,

நெஞ்சழுத்தம்[pressure]
பாரம்[heaviness],
இறுக்கம்[tightness],
வலி[aching],
எரிச்சல்[burning],
மரமரப்பு [numbness] அல்லது
பிசைதல்[squeezing] போன்ற உணர்வு
ஒரு சில நிமிடங்களுக்கு இருந்து, பின்னர் மறையும் அல்லது மீண்டும் வரும்.

அஜீரணம்[indigestion] அல்லது நெஞ்செரிச்சல்[heartburn] என தவறாகக் கருதி அசட்டையாக இருந்து விடுவார்கள் பல நேரம்!

2. இந்த வலி உடலின் பல பாகங்களிலும் உணரப்படும். குறிப்பாக, கைகள், இடது தோள்பட்டை, முதுகு, கழுத்து, தாடை, அல்லது வயிறு போன்ற பாகங்கள் இந்த வலியால்
ணரப்பட்டு ஒரு அஸௌகரியத்தைக் கொடுக்கும்.

3. மூச்சுத் திணறல்[difficulty breathing], மேல்மூச்சு வாங்குதல்[shortness of breath]

4. உடல் வியர்த்துக் கொட்டும், சற்று குளிரும்!

5. வயிறு உப்புசம் [fullness], அஜீரண ஏப்பம்[indigestion], தொண்டை அடைப்பு போன்ற உணர்வு[choking sensation]


6. வாந்தி வருவது போன்ற உணர்வு[nausea], வாந்தி.

7. தலை சுற்றல்[light headedness] கிறு கிறுவென வருதல்[giddiness or dizziness]

8. உடம்பு தளர்ச்சி[weakness], ஒரு பரபரப்பு[anxiety], இதயத் துடிப்பு அதிகமாதல் [அ] சீரில்லாமல் துடித்தல்[rapid or irregular heartbeats]

9. தூக்கம் வருதல் போன்ற ஒரு உணர்வு.


இது எல்லாமே ஒருவருக்கு நிகழும் எனச் சொல்ல முடியாது.
தாக்குதலின் வீரியத்தைப் பொறுத்து இதில் ஒரு சிலவோ, அல்லது எல்லாமுமோ எற்படலாம்.

இவை எதுவுமே நிகழாமல் கூட இந்த தாக்குதல் நிகழும். பெரும்பாலும், நீரிழிவு நோய் உள்ளவர்க்கே இது நிகழும் வாய்ப்பு அதிகம்.

இப்படி நிகழ்வதற்கு, அமைதியான இதயத் தாக்குதல்[Silent MI] எனப் பெயர்.

அப்படியே நிகழ்ந்து, இது சரியாகவும் போயிருக்க, வழக்கமாக மருத்துவரைச் சந்திக்கும் போது, அவரால் கண்டுபிடிக்கப்படும் ஒரு ஈ.ஸி.ஜி.[E.C.G] மூலம்.

"உங்களுக்கு சமீபத்துல ஒரு அட்டாக் நிகழ்ந்திருக்கிறது" என அவர் சொல்ல நோயாளிக்கே ஆச்சரியமாகக் [அதிர்ச்சியாகவும்!] கூட இருக்கும் வாய்ப்பு இருக்கிறது.

முதல் முறையாக இதில் ஏதேனும் அறிகுறிகள் தெரிந்தால், முன் சொன்னது போல ஏதோ ஆஜீரணக் கோளாறு என அலட்சியமாக இருந்து விடாதீர்கள்.

சற்று படுத்து எழுந்தால் சரியாகிவிடும் என நீங்களே முடிவு செய்து விடாதீர்கள்!

உடனே ஒரு அருகில் உள்ள மருத்துவரை [அவர் உங்கள் குடும்ப மருத்துவராக இல்லாவிடினும்!] போய்ப் பாருங்கள்!
இது மிகவும் முக்கியம்.


அவர் உங்களைப் பரிசோதித்து, தேவையான சோதனைகளைச் செய்து முறையான மருத்துவ சிகிச்சையைச் செய்வார், அல்லது, அவசர உதவி செய்து உங்களை ஒரு தேர்ந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பார்.

உங்களுக்கு இது முன்னரே ஒரு [அ] ஒருசில முறைகள் நடந்து அதற்கான சிகிச்சை அளித்திருந்து, அடுத்த முறை வலி வரும் போது சாப்பிட என நைட்ரோக்ளிசரின்[Nitroglycerine] மாத்திரையோ [அ] ஸ்ப்ரேயோ[spray] உங்களிடம் இருப்பின், உடனே அதை உபயோகிக்க வேண்டும்.


அருகில் ஒரு நிழலான இடத்தில் அப்படியே அமருங்கள்.

பிறகு அவசர உதவுக்கான எண்ணிற்கு தொலைபேசி, அவர்களை வரவழைக்க வேண்டும்.

'இது சரியாயிரும்; எனக்கு ஒண்ணுமில்லை' எனச் சொல்லி வாளாவிருக்க வேண்டாம்.

ஏனெனில், இதயத் தாக்குதல் நிகழ்ந்த அடுத்த ஒரு மணி நேரம் மிகவும் முக்கியமானது!


பெரும்பாலான தாக்குதல்கள் இந்த ஒரு மணி நேரத்திற்குள் கவனிக்கப்பட்டால், சரியாகும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.

ஒரு அட்டாக் நடந்ததும்,இதயத்தின் திசுக்கள் பாதிப்பு நடந்த இடத்தைச் சுற்றி, செயலிழக்கத் துவங்குகிறது, ஆக்ஸிஜன் கிடைக்காததால்.

நேரமாக, நேரமாக, இந்த இடஅளவு பெரிதாகும் அபாயம் இருக்கிறது.

எனவேதான், உடனே மருத்துவ உதவிக்கு போக வேண்டியதன் முக்கியத்துவம் மேலும் அதிகமாகிறது.


எப்படி இதைத் தவிர்க்க முடியும்?
எதனால் தாமதமாகிறது, சிகிச்சைக்குச் செல்ல?


'எனக்கு என்ன வயசாயிருச்சு இப்ப? 28 வயசுதானே ஆகுது. எனக்கு இதெல்லாம் வராது'

'இந்த அறிகுறி , வலி என்னன்னு தெரியலை, வெறும் அஜீரணமாயிருக்கும். கத்திரிக்காய் கறில கொஞ்சம் எண்ணை அதிகம் இன்னிக்கு!'

'இது ஒண்ணும் அப்பிடி வலி ஜாஸ்தியா தெரியலை! ஒரு மோர் கரைச்சுக் கொடு! சரியாயிரும்!'

'லக்ஷ்மி, ஏதோ லேசா முணுக் முணுக்குன்னு மார் வலிக்குது, என்னவாயிருக்கும்?' 'கத்தாதீங்க, கத்திப் பேசாதீங்கன்னு எத்தினி வாட்டி சொன்னாலும் ஒங்களுக்கு புத்தி வராது. கொஞ்சம் தண்ணி குடிங்க. சரியாப் போயிடும்! காலைல போய் டாக்டரைப் பார்க்கலாம்'

' காலைலேர்ந்தே வயித்தை என்னமோ பண்ணிகிட்டு இருக்கு. இந்த அஜீரண சனியன் என்னிக்குத்தான் என்னை விட்டுப் போகுமோ தெரியலை.'

'என்ன இந்த மூட்டு வலி இன்னிக்கு கொஞ்சம் ஜாஸ்தியாவே படுத்துதே. லக்ஷ்மி, அந்த மூட்டுவலி மாத்திரையக் கொண்டா!'

'இன்னிக்கு என்னமோ நெஞ்சு வலி ஜாஸ்தியா இருக்கு. சரியாப் போயிடும்னு நினைக்கிறேன். கமலாதான் என்ன பண்ணுவா பாவம்! அவ ஒருத்தி சம்பளத்துலதான் எங்க எல்லாரையும் பார்த்துக்கறா. இப்ப இதை வேற சொன்னா டாக்டர் செலவுதான் எக்ஸ்ட்ராவாகும். இந்த பணம் இருந்தா நாளைக்கு ராஜு ஸ்கூல் ஃபீஸ் கட்ட ஒதவும். கொஞ்சம் படுத்தா சரியாயிடும்'

இப்படிப் பல்வேறு காரணங்களால் இந்த நெஞ்சுவலி புறக்கணிக்கப்படும் அபாயம் நிகழலாம்!

ஆனால், இவையே உங்கள் உயிருக்கு எமனாகக் கூடிய சாத்தியம் உண்டு!


தாமதம் செய்யாதீர்கள் என்ற எச்சரிக்கையுடன் இப்பதிவை முடித்து கடைசி இரு கேள்விகளுக்கான விடையை அடுத்த பதிவில் பார்க்கலாம்!

[இங்கு சொல்லியிருப்பதெல்லாம் உங்கள் தகவலுக்காகவே!
உங்கள் மருத்துவரே இதை முறையாக பரிசோதித்து சிகிச்சை அளிக்க முடியும்.]

17 Comments:

At 8:29 PM, Blogger இலவசக்கொத்தனார் said...

நீங்க சொன்ன அறிகுறிகள் சிலவையாவது நமக்கு அடிக்கடி வருவதுதானே. அது சாதாரணமாக வருவதா மாரடைப்பா என எப்படி அறிவது? ஒவ்வொரு முறையும் மருத்துவரிடம் செல்வது நடைமுறையில் சாத்தியமா?

 
At 8:43 PM, Blogger SP.VR. SUBBIAH said...

செலவாகுமே என்ற ஒரே காரணத்திற்காக
பரிசோதனை சிகிச்சைக்குப் போகாமல் இருந்து விடுபவர்கள்
அதிகம்.

அமெரிக்காபோல இங்கே Health Insurance கட்டாயமாக்கப் படாததுதான் அதற்குக காரணம்

 
At 8:45 PM, Blogger சேதுக்கரசி said...

நன்றி. தற்போது என் வீட்டில் ஆஸ்பிரின் (aspirin) இல்லை. வாங்கிவைத்துக் கொள்ளவேண்டுமோ என்று சிலசமயம் தோன்றும். நிச்சயம் மருத்துவ personnel சொல்லாவிட்டால் உண்ணப்போவதில்லை, ஆனால் உதாரணத்துக்கு எமர்ஜன்சி எண்ணுக்குத் தொலைபேசும்போது, அவர்கள், ஒரு ஆஸ்பிரினைப் போடுங்கள், ஆம்புலன்ஸ் இதோ வந்துகொண்டிருக்கிறது என்று சொன்னால், கையில் ஆஸ்பிரின் இருக்கவேண்டுமே? அனைவரும் கைவசம் ஆஸ்பிரின் வைத்திருக்கவேண்டுமா? இந்தக் குழப்பத்தைத் தீர்த்துவையுங்கள் :-)

ஆஸ்பிரின் என்பது ஒரு blood thinner அல்லவா? அப்படியானால் ஒரு அடைப்பு/clot இருக்கக்கூடும் என்று சந்தேகப்படுத் தான் ஆஸ்பிரின் சாப்பிடச் சொல்கிறார்களா? நம்மூரில் "நாக்குக்கு அடியில் வைத்துக்கொள்ளும் மாத்திரை" என்பார்களே, அது ஆஸ்பிரின் தானா?

 
At 8:53 PM, Blogger VSK said...

உங்கள் கேள்விக்கு ஆசான் ஒரு பதில் கொடுத்திருக்கிறார் பாருங்கள், கொத்ஸ்!

சாத்தியப்படுத்திக் கொள்ளப் பழக வேண்டும்.

குறைந்த பக்ஷம், அவரைக் கூப்பிடவாவது[ஆசானை அல்ல, மருத்துவரை!:)] செய்ய வேண்டும்.
அறிகுறிகளைச் சொன்னால், அவர் ஆலோசனை கூறுவார்.

 
At 8:54 PM, Blogger VSK said...

கொத்தனாருக்கும் சேர்த்து பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி, ஆஸானே!

 
At 8:58 PM, Blogger VSK said...

னைட்ரோக்ளிசரின் தான் நாக்குக்கு அடியில் வைத்துக் கொள்ளும் மாத்திரை.
ரத்த நாளங்களைச் சற்று விரிவாக்கி, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச்செய்து, கட்டியையும் சற்று நகர்த்த இது உதவும்.

ஆஸ்பிரின் நீங்கள் சொன்னது போல ரத்தம் கட்டி தட்டாமல், இள்கச் செய்யும் மாத்திரை.
இதை மருத்துவர் உங்களை உபயோகப் படுத்தச் சொல்லியிருந்தால், அப்போது தான்,நீங்கள் சொன்னது போல, இதையும் ஒரு மாத்திரை போட்டுக் கொள்ள வேண்டும்.

ஒரு சில மருத்துவக் காரணங்களால், இதைச் சொல்லாமல் தவிர்த்தேன்.
இதைப் பற்றியும் கேட்டதற்கு மிக்க நன்றி, ஸேதுக்கரசி அவர்களே!

 
At 9:17 PM, Blogger SP.VR. SUBBIAH said...

இங்கே (இந்தியாவில்) வாகனங்களுக்கு இன்சூரன்ஸ்
கட்டாயம். ஆனால் மனிதர்களுக்கு இல்லை!

வாகனங்களை விட மனித உயிர்கள் பெரிதாகத்
தோன்றவில்லையோ என்னமோ? :-))))

 
At 10:10 PM, Blogger வடுவூர் குமார் said...

இதில் சில இப்போது இருக்கும் இடத்தில் ஒருவரிடம் பார்த்துக்கொண்டிருக்கேன்.
மெதுவாக கதவை கட்டினாலே பதறி எழுந்திருப்பதும்,பயமும் என்று அவர் வாழ்நாளை கழித்துவருகிறார்.
கொஞ்சம் வெளியே உள்ள கேள்வி
பழுதான இதயத்துக்கு அந்த ஸ்பேஸ் மேக்கர்(வார்த்தை சரியா?) வைக்கிறார்களே அதை முதல் ஸ்டிரோக் வந்த உடனே வைக்கமுடியாதா?கூடாதா?

 
At 5:32 AM, Blogger VSK said...

இங்கும் இன்ஷூரன்ஸ் இல்லாதவர்கள் இருக்கிறார்கள் ஐயா!

ஆனால், மருத்துவ வசதி அளிப்பதில் நாம் இன்னும் பின் தங்கித்தான் இருக்கிறோம் என்பது உண்மைதான்.

பேஸ் மேக்கர் என்பது பழுதுபட்ட இதயத்திற்கு வைப்பது திரு. குமார்.
முதல் சில பதிவுகளில் எஸ்.ஏ. நோட் என்பது குறித்து சொல்லியிருக்கிறேன். அது சரியாக இயங்காவிட்டால்தான் பேஸ் மேக்கர் வைத்து உதவலாம்.

புதிதாகப் படம் ஒன்று சேர்த்திருக்கிறேன். பாருங்கள்!

நெஞ்சுவலி, இதயத்திற்கு ரத்தம் கொண்டுவரும் நாளங்களில் ஏற்படும் குறைபாடுகளால் வருவது.

இதற்கான சிகிச்சை முறைகள் இதனைப் பழுது பார்ப்பதே.

அடுத்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

நன்றி.

[எல்லாம் 30 செய்யும் வேலை!:))]

 
At 7:07 AM, Blogger ஷைலஜா said...

உங்களை மாதிரி டாக்டர்கள் பலர் எத்தனை தடவை சொல்லி என்ன எஸ்கே, இன்னமும் கிராமப்
புறங்களில்பலர் இதயத்தாக்குதல்வலி பற்றிய விழிப்புணர்வே இல்லாமல் தான் இருக்கிறார்கள்.சட்டென கைமருந்து வீட்டுவைத்தியம் என்று செய்வதிலும் இதன் ஆபத்தினை சரிவர புரிந்துகொள்ளாமல் இருந்து கடைசி நிமிஷத்தில் ஆஸ்பித்திரிக்கு ஓடிவந்து அலறுவதுமாகத்தான் இருக்கிறார்கள்.
சமீபத்தில் என் அப்பாவுக்கு தலை சுற்றல் வந்தபோது சென்னையில் அவரும்கூட 'எனக்கு ஒண்ணூமில்ல பிபி இல்ல ஷுகர் இல்ல..எனக்கென்ன வந்துடும்?' என்று பிடிவதமாய் இருந்தார். காரில் திணித்துப் போட்டுக்
கொண்டு டாக்டரிடம் போனால் அவர் என் தம்பிக்கு அர்ச்சனை செய்துவிட்டார் அட்டாக் வந்து ஐந்து மணிநேரம்கழித்து அழைத்துவந்ததற்கு!.நல்லவேளை கடவுள் புண்ணியத்தில் ஒருவாரத்தில் நலமாகி வீடுவந்து சேர்ந்தார் அப்பா.

 
At 10:55 AM, Blogger VSK said...

நீங்களே சுட்டிக்காட்டியிருப்பது போல, கிராமம், சென்னை என்றெல்லாம் வேறுபாடு இல்லை, ஷைலஜா, மெத்தனம் காட்டுவதில்!

உங்கள் தந்தை நலமாகி வந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி.

கார்டியாக் ரீ-ஹேப்[Cardiac re-hab] போகிறாரா?

 
At 11:51 AM, Blogger வைசா said...

ஆஞ்ஜைனா அறிகுறிகள் இருந்தால், மருத்துவர்கள் என்ன என்ன சோதனைகள் மூலம், இதுதான் என்று முடிவு செய்கிறார்கள்?

ஒருவருக்கு ஆஞ்ஜைனா அறிகுறிகள் இருக்கின்றன. ஆனால், இரத்த அழுத்தம், ECG, கொலஸ்ட்ரல் போன்றவை சரியாக இருக்கிறதென்றால் என்ன அர்த்தம்?

(இலவசக்கொத்தனார் எடக்கு மடக்காகக் கேட்காததால் இது :-)))).

ஸீரியஸாகத் தான் கேட்கிறேன்.

வைசா

 
At 12:01 PM, Blogger VSK said...

//ஆஞ்ஜைனா அறிகுறிகள் இருந்தால், மருத்துவர்கள் என்ன என்ன சோதனைகள் மூலம், இதுதான் என்று முடிவு செய்கிறார்கள்?

ஒருவருக்கு ஆஞ்ஜைனா அறிகுறிகள் இருக்கின்றன. ஆனால், இரத்த அழுத்தம், ECG, கொலஸ்ட்ரல் போன்றவை சரியாக இருக்கிறதென்றால் என்ன அர்த்தம்?

(இலவசக்கொத்தனார் எடக்கு மடக்காகக் கேட்காததால் இது :-)))).

ஸீரியஸாகத் தான் கேட்கிறேன்.

வைசா //""தாமதம் செய்யாதீர்கள் என்ற எச்சரிக்கையுடன் இப்பதிவை முடித்து கடைசி இரு கேள்விகளுக்கான விடையை அடுத்த பதிவில் பார்க்கலாம்!""
[""என்ன சிகிச்சை இதற்கு?
சிகிச்சைக்குப் பின் என்ன செய்ய வேண்டும்?""]

:))

 
At 12:45 AM, Blogger கோவி.கண்ணன் said...

எஸ்கே ஐயா,
எந்த நோயும் இல்லாதவருக்கு, எதிர்பாராத நிகழ்வுகளால் கோபம் வரும் போது அதன் மூலம் குறுதி அழுத்தமும், இதய அடைப்பும் வருவதற்கு வாய்ப்பு உள்ளதா ?

 
At 10:21 PM, Anonymous Anonymous said...

அருமையான பதிவு...!!!!!

மென் நூலாக்கும் வசதி ஏதேனும் பிரச்சினையா ? "மென் நூலாக்கும் வசதி இல்லை" என்ற தகவல் வருகிறது...

 
At 12:19 PM, Blogger VSK said...

கண்டிப்பாக வரும் கோவியாரே!

ஆனால், எப்போது என்பதைச் சொல்ல முடியாது!

 
At 12:20 PM, Blogger VSK said...

கவனிக்கவில்லை இதுவரையில், செந்தழலாரே!

இப்போதே என்ன பிரச்சினை எனப் பார்க்கிறேன்.

கவனத்திற்குக் கொண்டு வந்தமைக்கு நன்றி!

 

Post a Comment

<< Home