"கசடற"

அறிவியல் தொடர்பான எனக்குத் தெரிந்த தகவல்களை, ஒரு மருத்துவன் எனும் பார்வையில் சொல்ல விழைகிறேன். முழுக்க முழுக்க இவை என் கருத்துகள் மட்டுமே! முருகனருள் முன்னிற்கும்!

Thursday, April 03, 2008

"எய்ட்ஸுக்கே உதவியா!! " -- [5]

"எய்ட்ஸுக்கே உதவியா!!" -- [5]தோள் மீது கை போட்டுக் கொண்டே இருவரும் நடந்தோம்.

"இப்படி உட்கார்ந்து பேசலாமா? மறந்துட்டேன்னு நினைக்காதே! இன்னும் சில கேள்விகள் இருக்கு. அண்ணி காதுபடப் பேச கூச்சமா இருந்தது. அதான் வெளியே போகலாமான்னு கேட்டேன்!" என்றான் சுகுமார்.

'எனக்குத் தெரியுண்டா! என்னாலியும் மனம்விட்டு சொல்ல முடியுமேன்னுதான் நானும் சட்டுன்னு கிளம்பிட்டேன். ம்ம்ம்... கேளு!' என்றேன்.

"அப்படீன்னா, இதோ முதல் கேள்வி! பாதுகாப்பு உறை அணிந்து உடலுறவு கொண்டால் இது வரவே வராது எனச் சொல்லலாமா?"

'இல்லை! இதுவும் ஒரு தவறான கருத்து. இது முழுக்க முழுக்க 100% பாதுகாப்பானது எனச் சொல்ல முடியாது. கிழிந்து போதல், கசிவு, சரியான முறையில் பயன்படுத்தாமல் போதல் போன்ற பல காரணங்களால், இது கொடுக்க வேண்டிய பாதுகாப்பைக் கொடுக்காமல் போக வாய்ப்பிருக்கிறது. பொதுவாக 98% பாதுகாப்பை இதை முறையாக, சரியாகப் பயன்படுத்துவதன் மூலம், பெறலாம். உணர்ச்சி வேகத்தில், சில சமயம் இது கிழிந்து போனது கூட தெரியாமல், அல்லது அலட்சியம் காரணமாக, உடலுறவு தொடர்ந்து, இந்த நோயைப் பெற வாய்ப்பிருக்கிறது.

ஆணுறுப்பும், பெண்ணுறுப்பும் இணைந்து செய்கின்ற முறையான உடலுறவை, பாதுகாப்பு சாதனங்கள் துணையுடன், இந்த நோய் இல்லாத இருவர் தங்களுக்குள் மட்டுமே, வேறெந்த முறையற்ற வழிகளின் மூலம் அல்லாது, உடலுறவு கொள்வதே, இந்த நோய் வராமல் தடுக்கக் கூடிய ஒரே வழி என்பதைப் புரிந்து கொள்ளு!
!
பொது இடங்களில் கிடைக்கும் அறிமுகமில்லாதவரிடம் உடலுறவு கொள்வதையும், பாலியல் தொழிலாளரிடம் செல்வதையும் தவிர்க்கவும். அப்படிச் செல்வதாயிருந்தால், கண்டிப்பாக ஆணுறை,அல்லது காண்டம் அணியாமல் உடலுறவு கொள்ளக் கூடாது!

"சரி! ரொம்ப உணர்ச்சிவசப்படாதே! இந்த போதை மருந்துகளை உபயோகப்படுத்தறவங்க பத்தி சில கேள்விகள்!" என ஆரம்பித்தவனை உடனே நிறுத்தி,

'போதை மருந்துக்கு அடிமையானவர்கள், அடுத்தவர் உபயோகித்த ஒரே ஊசியைப் பயன் படுத்தக் கூடாது. இதில் எவருக்கு இந்த நோய் இருக்கிறது எனத் தெரியாத நிலையில்! ஒரு சில போலிகள், ஏற்கெனவே மற்றவர் உபயோகித்த ஊசிகளையே புதிது போல விற்றுவிடுவார்கள். எனவே நம்பிக்கையான கடையில் இருந்து ஊசியைப் பெறுதல் மிகவும் அவசியம். ஒரு முறைக்கு மேல் ஒரு ஊசியை உபயோகிக்க வேண்டாம்! முனையை வளைச்சு தூர எறிஞ்சிடணும்! ' என்றவன் அவன் முகம் ஒரு மாதிரியாய்ப் போவதைப் பார்த்ததும்,

'டேய்! என்னடா அப்படிப் பாக்கறே! என்னடா இவன் போதை மருந்து கொள்வதை ஊக்குவிக்கிறானோன்னு நினைக்காதே! இந்தப் பதிலின் நோக்கமெல்லாம், அப்படிப்பட்ட பழக்கத்திற்கு அடிமையானவர் இந்நோய் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மட்டுமே! உனக்கு அப்படி ஒண்ணும் பிரச்சினை எல்லாம் இல்லைதானே! இருந்தா சொல்லிடுப்பா! எதுனாச்சும் செஞ்சுறலாம்!' என நக்கல் அடித்தேன்!

"அடப்பாவி! நீ ஒரு டாக்டராச்சே! உங்கிட்ட கேட்டா ஒழுங்கான பதில் கிடைக்குமேன்னு இதையெல்லாம் கேட்டுகிட்டு இருக்கேன்! உடனே என்னை சந்தேகப் படறியே! நான் வரேம்ப்பா!" எனத் திரும்பிக்கொண்டான் சுகுமார்!

'தெரியுண்டா! ச்சும்மா உன்னைக் கலாய்ச்சா உடனே கோவிச்சுக்கிறியே! என்னோட நண்பன் நீ! நீ தப்பா நடப்பியா! நீ கேக்கறது சுவையாத்தான் இருக்கு! கேளு! கேளு ராசா!' என்றவுடன் சிரித்துக் கொண்டே திரும்பவும் என் தோள் மீது கை போட்டான் சுகுமார்!

"அப்படீன்னா, இந்த போதை மருந்துகளை பயன்படுத்தறவங்களைப் பத்தி உன் கருத்துதான் என்ன?" என்றான்.

'போதை மருந்துப் பழக்கம் கொடியதொரு ஆட்கொல்லி, உடனடியாக இப்பழக்கத்திலிருந்து வெளியேற வேண்டியது அவசியம் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை! இப்பல்லாம் ரொம்பப் பேர் இதுல விழறதைப் பத்தி படிக்கிறேன். ரொம்பவே வேதனையான விஷயம் இது. உடனடியா, இதுலேருந்து வெளிவருவதற்கான பாதுகாப்பு மையங்களை அணுகி, வேண்டிய உதவி பெறணும் என்பதே என் ஆசை! உன்னோட நண்பர்கள் யாராவது இதுல ஈடுபட்டிருக்காங்கன்னு தெரிஞ்சா, நீயே அவங்களை அங்கே கூட்டிகிட்டுப் போகணும்! இதை எல்லாருக்கும் சொல்லு!' என மௌனமானேன்! '

[தொடரும்]

7 Comments:

At 7:59 PM, Blogger இலவசக்கொத்தனார் said...

உள்ளேன் ஐயா!

 
At 6:15 AM, Blogger Unknown said...

படித்தேன் அறிந்தேன் நன்றி.
பதிவு 3ல் நான் கேட்ட கேள்வியின் பதில் இதிலில்லை

 
At 8:17 PM, Blogger VSK said...

திரு. சுல்தான்,

ஒரு முறையான காண்டம் இந்த நுண்கிருமியை வெளிச்செலுத்தாது.

எந்தவகையிலாவது அதில் ஓட்டைக்க்ள் இருந்தால் ஒழிய!

இதைத்தான் வலியுறுத்தி இருக்கிறேன்.

அதே சமயம் இதுவும் கூட 100% பாதுகாப்பானது எனவும் சொல்ல முடியாது.... பல்வேறு காரணங்களால்!
இதையும் சொல்லி இருக்கிறேன்.

மைக்ரோ ஓட்டைகள் என நீங்கள் சொல்லி இருப்பது பொதுவாக ஒரு காண்டமில் கிடையாது.
குறைபாடுகள் இருந்தால் மட்டுமே வரும்!

 
At 6:48 AM, Blogger Unknown said...

//மைக்ரோ ஓட்டைகள் என நீங்கள் சொல்லி இருப்பது பொதுவாக ஒரு காண்டமில் கிடையாது.//
இதை கொஞ்சம் பாருங்களேன் டாக்டர்.
http://www.dianedew.com/condom.htm

 
At 7:23 AM, Blogger VSK said...

இதைத்தான் நானும் சொல்லியிருக்கிறேன் நண்பரே!
முறையான காண்டமில் இது நிகழாது.
ஆனால், தயாரிப்பாளர் தவறு [] எனச் சொல்வார்களே, அந்த வகையில், சில தரம் குறைந்த காண்டம்களில் இது போன்ற ஓட்டைகள் இருக்கக் கூடும்; அல்லது விரைவிலேயே கிழியவும் கூடும்!
தரமான தயாரிப்புகள் இப்போது நிறைய வந்திருக்கின்றன.
இவற்றால், இதைத் தவிர்க்கலாம்.... அதுவும் கூட 98% தான்!
சுட்டிக்கு நன்றி.

 
At 7:41 AM, Blogger மங்கை said...

ஐயா..நல்லதொரு தொடரை ஆரம்பிச்சிட்டீங்க..

இன்னைக்கு தான் இந்த பதிவை பார்த்தேன்...

ஆணுறை உபயோகப் படுத்தும் முறையைப் பற்றிய போதிய அறிவு மக்களிடையே இல்லை என்று சொல்லலாம் ... விழிப்புணர்வு கூட்டங்களில் கேட்கப்படும் கேள்விகள் இதை உறுதி செய்கின்றன..

கோவையில் இருந்த வரைக்கும் நாங்கள் செல்லும் இடத்தில் எல்லாம் ஆணுறை உபயோப்படுத்தும் முறையை நாங்களே கூட சொல்லி இருக்கோம்..
ஆனால் இங்கு வடக்கில் விழிப்புணர்வு கூட்டங்களில் இதை ஒரு 'மாடல்' கொண்டு டெமான்ஸ்ட்ரேட் செய்ய ஆண்களே தயங்குகிறார்கள்... ஆணுறையை சரியான முறையில் உபயோகப் படுத்துவதை எடுத்துக் கூறினால் தான் நம் குறிக்கோள் பூர்த்தி அடையும்...

போதையில் உறவு கொள்ளும் போதும் ஆணுறை சரியாக உபயோகப்படுத்தாமல் போவதற்கு வாய்ப்புகள் அதிகம்...

(ரொம்ப எழுதீட்டனோ..:-))

 
At 8:21 AM, Blogger VSK said...

வழக்கம் போல நல்ல பல கருத்துகளைச் சொல்லி இருக்கீங்க திருமதி.மங்கை!

ஆணுறை பற்றிய தேவையான அறிவும், புரிதலும் நம்மிடையே மிகக் குறைவு என்பதை நானும் ஒப்புக் கொள்கிறேன்.
இதை ஒரு ஆண்மக்கு குறைவான செயல் எனவும் கூட நினைத்து ஒதுக்குகிறார்கள்.
இதற்கு சொல்லும் காரணங்கள் வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கின்றன.

குடும்பக் கட்டுப்பாட்டுக்கும், இது போன்ற நோய்கள் வராமல் தடுக்கவும் இந்த ஆணுறை உபயோகம் எவ்வளவு இன்றியமையாதது என்பதை விளக்க ஒரு எழுச்சியே நடைபெற வேண்டும்.

அதற்கு நீங்கள் எல்லாம் ஆற்றும் பணி மிகப் பெரியது.

இன்னும் நிறைய கருத்துகளை முன் வையுங்கள்.
நன்றி.

போதை சமயங்களில் இதைப் பற்றிய சிந்தனையே இருப்பதில்லை இவர்களுக்கு!

 

Post a Comment

<< Home