"கசடற"

அறிவியல் தொடர்பான எனக்குத் தெரிந்த தகவல்களை, ஒரு மருத்துவன் எனும் பார்வையில் சொல்ல விழைகிறேன். முழுக்க முழுக்க இவை என் கருத்துகள் மட்டுமே! முருகனருள் முன்னிற்கும்!

Saturday, January 06, 2007

"லப் - டப்" -- 6 "அனீமியா"

"லப் - டப்" -- 6 "அனீமியா"

போன பதிவில் நம்ம கொத்தனார் ரத்தம், அதில் இருக்கும் செல்களின் எண்ணிக்கை இதெல்லாம் தெரிந்து என்ன ஆகப்போகிறது என ஒரு கேள்வி கேட்டிருந்தார்!

இதயம் மற்றும் ரத்தம் சம்பந்தமான நோய்களைப் பற்றி எங்கிருந்து ஆரம்பிக்கலாம் என் நினைத்துக் கொண்டிருந்த எனக்கு ஒரு வழியைக் காண்பித்ததற்கு அவருக்கு நன்றி சொல்லி, இதிலிருந்தே தொடங்குகிறேன்!


உலகெங்கும், குறிப்பாக நம் இந்தியாவை மிக வாட்டும் ஒரு நோய் அனீமியா [anemia] என அழைக்கப்படும் "ரத்த சோகை'

இந்த சோகை என்னும் சொல்லிலேயே ஒரு சோகம் ஒளிந்திருப்பதைக் கவனிக்கவும்.
வளம் குறைந்த, நலிந்த சிவப்பு அணுக்கள் தேவையான அளவு பிராணவாயுவை திசுக்களுக்கு கொண்டு செல்ல முடியாத ஒரு சோகமே அனீமியா எனப்படும்.

இதன் அறிகுறிகள் என்னென்ன?

தளர்ச்சி, தோல் வெளுத்துப் போதல், இதயத்துடிப்பு அதிகமாதல், அடிக்கடி மூச்சு வாங்குதல், தலை சுற்றல், தலைவலி, கை,கால் ஜில்லிட்டுப் போதல்.

நோயின் கடுமையைப் பொருத்து மேற்கூறிய அறிகுறிகளின் தாக்கம் அமையும்.

மேற்கூறியவற்றுள் எதேனும், தொடர்ந்து இருந்து வந்தால் டாக்டரை உடனே ஆலோசிப்பது மிகவும் முக்கியம்!

ஒரு எளிய ரத்தப் பரிசோதனை மூலம் இதை உடனே கண்டுபிடித்து சிகிச்சை அளிக்க முடியும்.

ரத்தத்தில் இருக்கும் ப்ளாஸ்மா, சிவப்பு, வெள்ளை அணுக்கள், சத்துப் பொருள்கள், வைட்டமின்கள் பற்றி சென்ற பதிவில் பார்த்தோம்.

சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையோ அல்லது ஹீமோக்ளோபினின் அளவோ குறைவதால் அனீமியா ஏற்படுகிறது.

இவை உற்பத்தியாகும் இடம் எலும்பு மஜ்ஜை.
வலு குறைந்த சிவப்பணுக்கள் மரிக்கையில், மேலும் மேலும் இது போன்ற செல்களையே உடலின் எலும்பு மஜ்ஜை[Bone marrow] உற்பத்தி செய்யும் நிலை ஏற்பட்டு, நோய் கடுமையாகிறது.

[உரமிடாத நிலத்தில் தொடர்ந்து பயிரிடும் போது, அடுத்து வரும் பயிர்கள் வளம் குறைந்து விளைவது போல!]
இவைகளால் அதிக அளவில் பிராணவாயுவைச் சுமக்க முடியாததால், திசுக்கள் வலுவிழந்து சோர்வு ஏற்படுகிறது.

இப்போது அனீமியாவின் வகைகளைப் பார்ப்போம்.

1. இரும்புச் சத்து குறைவால் வரும் ரத்த சோகை: [Iron-Deficiency Anemia]
ஐந்தில் ஒருவர் என்ற கணக்கில் பெண்களை வாட்டுவது இது. எலும்பு மஜ்ஜை ஹீமொக்ளோபினை உற்பத்தி செய்ய இரும்புச் சத்து மிகவும் தேவையான ஒன்று.சிவப்பு அணுக்கள் இறக்கும் போது [ஒரு ஆரோக்கியமான சிவப்பணு சுமார் 90-120 நாட்களுக்கு உயிர் வாழும், நம் உடம்பில்!]அதில் இருக்கும் இரும்புச் சத்து [iron]மீண்டும் புதிய செல்களுக்கு பயன்படுகிறது.
மாதவிலக்கு அதிகமாகப் போகும் பெண்கள், குடல் புண் எனச் சொல்லப்படும் அல்ஸர் நோய்[Peptic ulcer], குடல் புற்று நோய் [colon cancer] போன்ற நோய்களால் ரத்தம் உடலில் இருந்து வீணாகும் பொது இந்த வகை ரத்த சோகை ஏற்படும். இரும்புச் சத்து குறைந்த உணவாலும் ரத்தச் சோகை ஏற்படும்.
கர்ப்பமுற்ற காலத்தில் வளரும் கருவும் தாயின் ரத்தத்தில் இருந்து இரும்புச் சத்தை எடுத்துக் கொள்வதாலும் இது வரும்.

2. வைட்டமின் குறைவால் வரும் அனீமியா: [Vitamin deficiency anemia]
ஃபோலேட்,[Folate] B12 வைட்டமின்கள் வலுவான சிவப்பு அணுக்கள் உருவாகத் தேவையானவை. உணவின் மூலமே இவை நமக்குக் கிடைக்கின்றன. சிறுகுடலில் உறிஞ்சப்படும் இந்த வைட்டமின்கள், குடல் நோயால் அவ்வாறு நிகழாமல், இவ்வகை அனீமியா வருகிறது.


3. நீண்டகால நோய்களால் வரும் அனீமியா: [Anemia of chronic diseases]
புற்றுநோய் [Cancer], ருமடாய்ட் ஆர்த்ரைடிஸ் என்னும் எலும்பு முடக்கு நோய் [Rheumatoid arthritis], க்ரோன்ஸ் நோய் எனப்படும் குடல் சுணக்கம் [Crohn's disease], காசநோய் [T.B.] இன்னும் பல நீண்டகால நோய்கள், சிவப்பு அணுக்கள் உற்பத்தியை பாதிக்கின்றன. இந்த நோய்களுக்காக கொடுக்கப்படும் மருந்துகளின் வீரியத்தாலும், இது நிகழும்!

4. ஏப்ளாஸ்டிக் அனீமியா; [Aplastic anemia]
எலும்பு மஜ்ஜை [Bone Marrow] தன் சக்தியை இழப்பதால் ஏற்படும் இவ்வகை சோகை உயிருக்கே உலை வைக்கும் மிகக் கொடிய நோய்! இது ஒரு வகையான ஆட்டோ இம்யூன் நோய் [Auto-Immune disease]. அதாவது உடலே தனக்குதானே ஒரு எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக் கொள்ளும். சிலவகையான மருந்து வகைகளும் இதனை உண்டாக்கலாம். முக்கியமாக புற்று நோய் மருந்துகள்.
இது எல்லாவகையான ரத்தசெல்களையும் பாதிக்கும்.

5. எலும்பு மஜ்ஜை நோயால் வரும் அனீமியா: [Anemias associated with bone marrow diseases]
லுகீமியா[Leukemia], மைலோ டிஸ்ப்ளேசியா[Myelodysplasia], மல்டிபில் மைலோமா[Multiple Meyloma], லிம்ஃபோமா[Lymphoma]போன்ற நோய்கள் எலும்பு மஜ்ஜையைத் தாக்கி ரத்த உற்பத்தியைத் தடுக்கும். இவையெல்லாம் புற்றுநோய் வகையைச் சார்ந்தவை. நம் திரைப்படங்களில் அடிக்கடி பயன்படுத்தப்படும் 'ப்ளட் கேன்ஸர்"[Blood cancer] என்பது இதுதான்!


6. ஹீமோலைடிக் அனீமியா: [Hemolytic anemia]
எலும்பு மஜ்ஜை உற்பத்தி செய்யும் அளவை விட அதிக அளவில் சிவப்பு அணுக்கள் மரிக்கும் போது, தேவையான வேகத்தில் இவைகளை அனுப்ப முடியாமல் போகும் நிகழ்வுக்கு இப்பெயர். ஆட்டொ இம்ம்யூன் நோய்களும், பல மருந்து வகைகளும் இதற்குக் காரணங்கள். இந்நிலையில் உடல் மஞ்சள் நிறமாக மாறி மஞ்சள் காமாலை [Jaundice]
ஏற்படுகிறது.

7. சிக்கில் செல் அனீமியா: [Sickle cell anemia]
ஹீமோக்ளோபினில் ஏற்படும் ஒரு மாறுதலால் வரும் இந்நோய் ஆப்பிரிக்க, அரேபிய இன மக்களிடம் அதிகமாகக் காணப்படுகிறது. கம்யூனிஸ்டு கொடியில் இருக்கும் 'வளைந்த அருவாள்' வடிவில் சிவப்பு அணுக்கள் உருமாறி, அதிகம் பிராணவாயுவை எடுத்துச் செல்ல முடியாமல் போய் உடலைப் பாதிக்கும். சில சமயம் உயிருக்கே ஆபத்தாயும் முடியும்.

8. இன்னும் பல வகையான அனீமியாக்கள் இருக்கின்றன. அவை மிகவும் அரிதானதால்,[rare types of anemia] இங்கு சொல்லாமல் விடுகிறேன்.

பொதுவாக, சத்து குறைந்த உணவு, குடல் நோய்கள், மாத விடாய், கர்ப்பம், நீண்ட கால நோய்கள் இவையே சோகை வருவதற்குக் காரணம்.
இது பரம்பரை நோய் அல்ல! ஒரு சில அனீமியாக்களைத் தவிர!
சிக்கில் செல் அனீமியா, போன்ற சில வகைகள் பரம்பரையாக வரும்.

நோயின் தன்மையைப் பொருத்து சிகிச்சை அமையுமாதலால், அதனை இங்கு சொல்லாமல் விடுகிறேன். உங்கள் மருத்துவர் இதனை உங்களுக்குத் தெளிவாகச் சொல்லுவார்.

இதனைத் தடுக்கும் வழிகளை இப்போது சொல்கிறேன்!
பெரும்பாலான அனீமியாக்கள் வராமல் நம்மால் தடுத்துக் கொள்ள முடியாது!
ஆனால், மிகவும் பரவலாகக் காணப்படும், முதல் இரண்டு வகை அனீமியாக்களை [1&2] இரும்புச் சத்து, வைட்டமின்கள் அடங்கிய உணவு மற்றும் மாத்திரைகள் மூலம் தவிர்க்கலாம்.

பீன்ஸ், பருப்பு வகைகள், கீரை வகைகள், உலர்ந்த பழங்கள் [பேரீச்சை, திராட்சை] முந்திரி, பாதாம் பருப்பு, ஒரு சில விதைகள் [Sun flower seeds, Pumpkin seeds etc] இரும்புச் சத்து மிகுந்தவை.
பழங்கள், பழச்சாறு, கீரை வகைகள் இவற்றில் தேவையான வைட்டமின்கள் கிடைக்கும்.
மேலே சொன்ன வைட்டமின்களைத் தவிர, C வைட்டமினும் இரும்புச் சத்து உடலில் கலக்க உதவும் என்பதால் இதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த மூன்றையும் தேர்ந்த மருத்துவர் மூலம் மாத்திரைகளாகவும் வாங்கி சாப்பிடலாம்!
தேவைக்கு அதிகமாக இரும்புச் சத்து மாத்திரைகளை சாப்பிடுவது ஆபத்தானது! கவனம்!!
சும்மாவாவது, உடல் அசதியாய் இருக்கிறது என்று, நீங்களே மருந்துக் கடைக்குச் சென்று மாத்திரை வாங்கி சாப்பிட வேண்டாம்.

முறையான உடற்பயிற்சி[Exercice], நல்ல காற்றோட்டமான சூழ்நிலை, உடலையும், மனதையும் மகிழ்ச்சியாய் வைத்திருத்தல் போன்றவை வளமான செல்கள் உருவாக உதவும்!

இதையெல்லாம் படித்ததும், நம் நாட்டில் இவை கிடைக்காத ஏழைக் குழந்தைகளை ஒரு நிமிடம் நினையுங்கள்! முடிந்தால் அவர்களுக்கு இது கிடைக்கத் தொண்டாற்றி வரும் முறையான அறக்கட்டளைகள் மூலம் உங்களாலான உதவி செய்யுங்கள்!
உங்கள் மனம் மகிழ அது உதவும்!! புது ரத்தம் பாயும்!
****************************************************************

என் அருமை நண்பர் திரு. கோவி.கண்ணனின் உதவியால், எனது முந்தையத் தொடரான "பாலியல் கல்வி- பெற்றோருக்கு" PDF வடிவாகி இருக்கிறது.

வேண்டுமென்போருக்கு அனுப்பி வைக்கிறேன்!

கோவியாருக்கு என் மனமார்ந்த நன்றி!
*****************************************************************

13 Comments:

At 12:13 AM, Blogger இலவசக்கொத்தனார் said...

நாரதர் கலகம் நன்மையில்தான் முடியும். அதே மாதிரி என் 'வில்லங்கமான' கேள்விகளிலும் ஒரு நன்மை இருந்தது பார்த்தீர்களா!

( நன்றி வேற சொல்லிட்டீங்க. இதையே சாக்கா வெச்சு மேல மேல வில்லங்கமான கேள்விகளைக் கேட்க வேண்டியதுதான்! )

 
At 8:35 AM, Blogger VSK said...

நன்றி சொல்லியாச்சுன்னா அத்தோட விட்டுறணும்!

வில்லங்கமா கேக்கக்கூடாது!

வெவரமாக் கேக்கணும்!
வெவகாரமா இல்லை!

:))

 
At 6:25 PM, Blogger இலவசக்கொத்தனார் said...

சரி ஒரு கேள்வி கேட்கறேன். அது விவகாரமா, விவரமா, வில்லங்கமான்னு நீங்களே வகைப்படுத்திக்கோங்க.

அனீமியாவால் எலும்பு மஜ்ஜை தரம் குறைந்த செல்களையே தயாரிக்கும் எனக் கூறி இருக்கிறீர்களே. இவை சிவப்பணுக்களை மட்டும் பாதிக்கிறதா அல்லது வெள்ளை அணுக்கள், லிம்போசைட், மோனோசைட், நியூட்ரோபில் என மற்ற வகை ரத்த செல்களையும் தரம் குறையச் செய்கிறதா?

 
At 6:51 PM, Blogger இலவசக்கொத்தனார் said...

சரி ஒரு கேள்வி கேட்கறேன். அது விவகாரமா, விவரமா, வில்லங்கமான்னு நீங்களே வகைப்படுத்திக்கோங்க.

அனீமியாவால் எலும்பு மஜ்ஜை தரம் குறைந்த செல்களையே தயாரிக்கும் எனக் கூறி இருக்கிறீர்களே. இவை சிவப்பணுக்களை மட்டும் பாதிக்கிறதா அல்லது வெள்ளை அணுக்கள் என மற்ற வகை ரத்த செல்களையும் தரம் குறையச் செய்கிறதா?

 
At 7:01 PM, Blogger VSK said...

இது விவரமான கேள்விதான் கொத்ஸ்!

:)

முந்தைய பதிவிலும், இப்பதிவிலும் சொல்லியபடி எலும்பு மஜ்ஜையிலிருந்து எல்லா ரத்த அணுக்களும் பிறக்கின்றன.

8 வகைக்கும் மேலான அனீமியாக்களைப் பற்றி சொல்லி இருக்கிறேன்.
அவற்றில் சிலவகைகள் சிவப்பு அணுக்களை மட்டுமே பாதிக்கும் [1&2].

சிலவகைகள் எலும்பு மஜ்ஜையையே தாக்குபவை. இவற்றில் எல்ல வகை செல்களின் உற்பத்தியும் பாதிக்கப்படும்.[3,4,&5 மற்றும் சில 'அரிதான' வகை அனீமியாக்கள்]

வலு குறைந்த சிவப்பு அணுக்களில் குறைவான இரும்புச் சத்தே இருக்கும்.
இவை 90-120 நாட்களில் மரிக்கையில், இவற்றில் இருக்கும் இரும்பு சத்தையே அடுத்த தலைமுறை செல்களுக்கு பயன்படுத்தும் நிலையில், மேலும் வலுவிழந்த சிவப்பணுக்களே பிறக்கும்.

சரியா?
:)

 
At 6:27 AM, Blogger கோவி.கண்ணன் [GK] said...

//
இதையெல்லாம் படித்ததும், நம் நாட்டில் இவை கிடைக்காத ஏழைக் குழந்தைகளை ஒரு நிமிடம் நினையுங்கள்! முடிந்தால் அவர்களுக்கு இது கிடைக்கத் தொண்டாற்றி வரும் முறையான அறக்கட்டளைகள் மூலம் உங்களாலான உதவி செய்யுங்கள்!
உங்கள் மனம் மகிழ அது உதவும்!! புது ரத்தம் பாயும்!
//
அரிய தகவல்கள் நிறைந்த பகுதியாக அமைந்திருக்கிறது எஸ்கே ஐயா,

மேலும் நீங்கள் வைத்த வேண்டுகோலில் உங்கள் பொது நல உள்ளம் தெரிகிறது. மிகவும் மகிழ்வாக இருக்கிறது.

பாராட்டுக்கள் ஐயா !

 
At 2:48 PM, Blogger சேதுக்கரசி said...

அனீமியாக்களை அடுக்கிவிட்டீர்களே! :-)

ஆமாம், கீரையை விட, broccoli, asparagus ஆகியவற்றிலுள்ள இரும்புச்சத்தை நம் உடல் இன்னும் அதிகமாக absorb செய்துகொள்ளும் என்று கேள்விப்பட்டேன். உண்மையா? (எனக்குக் கீரை பிடிக்காது ஆனால் பிராக்கலியும் அஸ்பாரகஸும் பிடிக்கும், அதனால் தான் கேட்கிறேன் :-))

//சிக்கில் செல் அனீமியா: [Sickle cell anemia] - ஹீமோக்ளோபினில் ஏற்படும் ஒரு மாறுதலால் வரும் இந்நோய் ஆப்பிரிக்க, அரேபிய இன மக்களிடம் அதிகமாகக் காணப்படுகிறது.//

சிக்கில் செல், பீட்டா தலஸ்ஸீமியா traits சம்பந்தப்பட்ட குறைபாடுகளால் அனீமியா தொடர்ந்து இருக்கிறதா என்று நம் இந்திய மக்களையும் சிலசமயம் பரிசோதித்துப் பார்க்கிறார்கள் அமெர்க்க மருத்துவர்கள்.

 
At 4:13 PM, Blogger VSK said...

நான் இந்தியாவை மனதில் கொண்டு இப்பதிவை எழுதினேன், சேதுக்க்கரசி!

நீங்க சொல்றதுலியும் நிறைய அயர்ன் இருக்கு!

ஆனா, அது இந்தியாவுல ஜாஸ்தியா ஏழை மாக்களுக்குக் கிடைக்கற மாதிரி இருக்கான்னு தெரியலியே!

யாராவது விசார்ரிச்சூ சொல்லுங்க சாமி!

சிக்கில் செல் அனீமியா, தலஸ்ஸீமியாவெல்லாம் அதிகமா காணப்படும் மக்களைச் சொன்னேன்.
நம் நாட்டிலும் இதெல்லாம் இருக்குதான்!

நானே சிக்கில் செல் அனீமீயா கேஸைப் பார்த்திருக்கேன், தமிழகத்தில்.

கருத்துக்கு மிக்க நன்றி!

 
At 4:14 PM, Blogger VSK said...

அந்த வேண்டுகோளை சரியாகக் கண்டு சொன்னதற்கு மிக்க நன்றி, கோவியாரே!

 
At 5:21 PM, Blogger வடுவூர் குமார் said...

விவகாரமான கேள்வியை வைத்து "விவரமான" பதிவை போட்டுட்டீங்க.
இதையும் PDF ஆக மாற்றிவைத்துக்கொள்ளவேண்டும்.
பாலியல் கல்வி- கொஞ்சம் அனுப்பிவைங்க ஐயா,நன்றி.

 
At 5:30 PM, Blogger VSK said...

விரைவில் அனுப்பி வைக்கிறேன் திரு. குமர்!

மிக்க நன்றி!

 
At 5:35 PM, Blogger இலவசக்கொத்தனார் said...

//சரியா?
:)//

நான் என்ன டெஸ்டா வைக்கிறேன். சரியான்னு கேட்டுக்கிட்டு. தெரிஞ்சா நாங்க ஏன் இங்க வரோம், தனியா பதிவு போட மாட்டோம். :))

 
At 7:41 PM, Blogger சேதுக்கரசி said...

பாலியல் கல்வி - பெற்றோருக்கு - பி.டி.எப் கோப்பு அனுப்பிவையுங்கள். ஆனால் என் மின்னஞ்சல் முகவரி உங்களுக்குத் தெரியாது, உங்களுடைய மின்னஞ்சல் முகவரியும் உங்கள் ப்ரோஃபைலில் இல்லை, என்ன செய்வது? வழி சொல்லுங்கள் :-)

 

Post a Comment

<< Home