"கசடற"

அறிவியல் தொடர்பான எனக்குத் தெரிந்த தகவல்களை, ஒரு மருத்துவன் எனும் பார்வையில் சொல்ல விழைகிறேன். முழுக்க முழுக்க இவை என் கருத்துகள் மட்டுமே! முருகனருள் முன்னிற்கும்!

Tuesday, February 20, 2007

"லப்-டப்" -- 12 " ஆ! நெஞ்சு வலிக்குதே!....."

"ஆ! நெஞ்சு வலிக்குதே!"


"உன்கிட்ட எத்தனை தடவை சொல்லி இருக்கேன்! எனக்கும் அவளுக்கும் ஒரு தப்பான உறவும் இல்லை! நானும் அவளும் நல்ல ஃப்ரெண்ட்ஸ்! அதுவும் ஆஃபீஸ்ல மட்டும் தான்! அவ வீட்டு விஷயம்லாமும் என்கிட்ட சொல்லுவா! அதெல்லாம் நான் உன்கிட்ட அன்னன்னிக்கே சொல்லியும் இருக்கேன். நீதான் என்னென்னவோ கற்பனை பண்ணிகிட்டு தெனம் என்னைப் புடுங்கறே! ஒரே நரகமா இருக்கு!"

"இருக்காதா பின்னே! அவ பேசினா இனிக்கும்... சொர்க்கமா இருக்கும். நான் பேசினா நரகமாத்தான் இருக்கும். ஒங்கள சொல்லி குத்தமில்லை! எனக்கு வாய்ச்சது அவ்வளவுதான்!. போங்க! போய் அந்த மேனாமினுக்கி கிட்டயே விளுந்து கிடங்க. நான் போறேன் எங்கம்மா வீட்டுக்கு!"

"போய்த்தொலை! நீ ஒழிஞ்சாத்தான் எனக்கு நிம்மதி!"

கடற்கரை மணலில் கால் போன போக்கில் நடந்து கொண்டே சென்ற மோஹனுக்கு சற்று முன் நடந்த சம்பவம் மனதில் அப்படியே ஆடிக் கொண்டிருந்தது!

"சே! சற்றுகூட நம்பிக்கை இல்லாத மனைவி! என்ன வாழ்க்கை இது! எதுக்கெடுத்தாலும் சந்தேகம்! நெனச்சுப் பார்க்கவே நெஞ்சு துடிக்குது....... "

திடீரென நெஞ்சு நிஜமாகவே வலிப்பது போல் தோன்றியது அவனுக்கு.

முணுக் முணுகென்று இடது பக்கம் மார்பில் ஒரு வலி!

உடல் வியர்க்க ஆரம்பித்தது.

இடது கையில் தோள்பட்டையில் இருந்து கிளம்பி 'ஜிவ்'வென்று ஒரு மின்னல் போல வலி கை முழுதும் பரவியது.

நாக்கு உலர்ந்தது போல ஒரு உணர்வு!

சற்று உட்கார்ந்தால் தேவலை எனத் தோன்றியது.

அப்படியே ஒரு படகின் பக்கம் போய் உட்கார்ந்தான்.

செல்ஃபோன் சிணுங்கியது!

நண்பன் குமார்தான்!

"என்னடா! எப்படி இருக்கே!" என்றான் குமார்.

"குமார், கொஞ்சம் உடனே மெரீனா பீச்சுக்கு வர்றியா? சீக்கிரம் வாயேன்!நெஞ்சு வலிக்கற மாதிரி இருக்கு. டாக்டர்கிட்ட போகலாம்னு நினைக்கறேன். நீயும் வந்தியானா கொஞ்சம் ஹெல்ப்ஃபுல்லா இருக்கும்." .............சொல்லி முடிக்குமுன் குமார் கத்தினான்..."நீ அங்கியே இரு, அஞ்சு நிமிஷத்துல வரேன்."

அடுத்த அரை மணி நேரத்தில் மோஹன் ஒரு தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டான்.

அவன் மனைவிக்கும் தகவல் பறந்தது.

அலறி அடித்துக் கொண்டு அவளும் ஓடிவந்தாள்.

ஸ்கேன், ஈ.சி.ஜி. [scan, E.C.G] எல்லாம் எடுக்கப்பட்டு உடனடியாக கார்டியாக் கதீடரைசேஷன்னுக்கு [Cardiac catheterization] அழைத்துச் செல்லப்பட்டான்.

இதயத்தில் ஒரு நாளத்தில் அடைப்பு இருப்பதாகவும், உடனடியாக அறுவைச் சிகிச்சை மூலம் அதனை அகற்றாவிட்டால் உயிருக்கே ஆபத்து என்றும் மருத்துவர் சொல்ல, அதன்படியே நடந்து, இப்போது ரீ-ஹேப்பில் இருக்கிறான் மோஹன்.

சரியான நேரத்தில் கொண்டுவரப்பட்டதால்தான் மோஹனின் உயிரைக் காப்பாற்ற முடிந்தது என குமாரைப் புகழ்ந்தார் டாக்டர்.

"எனக்குத் தாலி பாக்கியம் கொடுத்தீங்க குமார்! உங்களை மறக்கவே மாட்டேன்!" என மோஹனின் மனைவி ராதா நன்றி சொன்னாள்.

கொஞ்ச நாளைக்கு அவருக்கு அதிர்ச்சி தரும் வகையில் எதுவும் பேச வேண்டாம். முழு ஓய்வு வேணும் அவருக்கு என மருத்துவர் அறிவுறுத்தினார்.

அப்படி ஒன்றும் வயதாகவில்லை மோஹனுக்கு.

34 தான் ஆகிறது!

மோஹனுக்கு அப்படி என்னதான் நிகழ்ந்தது?

டாக்டர் சொன்னார் அவனுக்கு வந்தது மையோகார்டியல் இன்ஃபார்க்ஷன் [Myocardial infarction] என்று.

அப்படி என்றால் என்ன?

எப்படி நிகழ்கிறது?

எதனால் வருகிறது?

எப்படி இதைத் தவிர்க்க முடியும்?

இதன் அறிகுறிகள் என்னென்ன?

என்ன சிகிச்சை இதற்கு?

சிகிச்சைக்குப் பின் என்ன செய்ய வேண்டும்?

அடுத்த சில பதிவுகளில் பார்க்கலாம்!

19 Comments:

At 6:44 PM, Blogger மங்கை said...

SK ஐயா..

ஹ்ம்ம்ம்..இப்படி ஒரே காரணம் தான் இருக்குதா..எத்தனையோ காரணங்கள் இருக்கும் போது மனைவியினால் வரும் மன உளைச்சலை தான் உதாரணம் காட்ட வேண்டுமா?... இப்படிபட்ட மனைவிமார்கள் இல்லாமல் இல்லை..ஆனா இப்ப தமிழ்மண ஹாட் டாபிக்ல ஒன்றை பத்தி காரசாரமா விவாதம் நடந்துட்டு இருக்கப்போ..ம்ம்ம்...

(சும்மா தான், தப்பாக நினைக்க வேண்டாம்)

 
At 6:51 PM, Blogger VSK said...

எத்தனையோ காரணங்கள் சொல்லலாம் மங்கை.

ஏதாவது ஒன்று சொல்ல வேண்டுமே என்றுதான்.

அதிக அன்பு, சந்தேகம், பொறாமை, கோபம், மன உளைச்சல், நம்பிக்கையின்மை என பல இதில் பொதிந்திருக்கிறது.

எனவேதான்.

தமிழ்மணத்தில் நடப்பதற்கும் இதற்கும் முடிச்சு போடாதீர்கள்.

இங்கு வருபவர்கள் அதிகம் இல்லை!
:)

(சும்மா தான், தப்பாக நினைக்க வேண்டாம்)

 
At 7:00 PM, Blogger இலவசக்கொத்தனார் said...

ஆஹா! இப்போ எல்லாம் இந்த Myocardial Infarction பத்தி அதிகம் கேள்விப்படறேன். நானே உங்களை தகுந்த சமயத்தில் கேட்கணமுன்னு இருந்தேன். இதற்கான அறிகுறிகள் என்ன, வந்தா என்ன செய்யணும், வராதிருக்க என்ன செய்ய என்று விபரமாகவே எழுதுங்கள்.

இதற்கும் மாரடைப்புக்கும் என்ன வித்தியாசம் என்பதையும் சொல்லுங்கள். (முன்னமே சொல்லி இருக்கீங்க, ஆனா புரியலையே)

 
At 7:08 PM, Blogger VSK said...

அதான் சொல்லியிருக்கேனே கொத்ஸ்!

அடுத்த சில பதிவுகள் இதைப் பத்திதான்!

விவரமா எல்லாத்தையும் அலசலாம்!

 
At 7:25 PM, Blogger வடுவூர் குமார் said...

எனக்கு ஒரு சந்தேகம்.
ஏன் கோபம்/சந்தோஷம் இரண்டும் இதயத்தில் தலையிடுகிறது.?
கோமா போன ஆளுங்களுக்கு மூச்சு மாத்திரம் ஓடிக்கொண்டிருப்பது போல உணர்வுகளை தனியாக ஓட வைக்கமுடியுதா?
அப்படியானால் இவ்விரண்டையும் எது இணைத்திருக்கிறது?

 
At 7:37 PM, Blogger VSK said...

நல்ல கேள்வி, திரு. குமார்.

கோமாவில் இருப்பவனிடம் உணர்வு இருப்பதில்லை.

ஆனால், நினைவோடு இருப்பவர் அனைவருக்கும் இது உண்டு!

ஆனால், இது இதயத்தை நேரடியாகப் பாதிப்பதில்லை.

ரத்த ஓட்டமே இதனை நிர்ணயிக்கிறது.

அதனால்தான், ரத்தம், ரத்த நாளங்கள் பற்றி சற்று விரிவாகக் கூறி வந்தேன் இதுவரை!

ரத்த ஓட்டத்தாலும், ரத்தத்தில் மிதக்கும் சில, பல பொருட்களாலும் இதைக் கொள்ளும் இதயம்பாதிப்பதே இங்கு நிகழ்கிறது.

அடுத்து இதனை விரிவாகப் பார்க்கலாம்!

 
At 10:16 PM, Blogger மணியன் said...

இப்ப எங்க ஊர்ல சாயிஃப் அலிகானிற்கு 34 வயதிலேயே இந்நோய் வந்து மருத்துவமனையில் படுத்திருக்கிறாரே :(
அவர் தந்தையின் வழக்கில் சாட்சியைக் கலைக்க அவர் எடுத்த முயற்சிகள் காரணமாயிருக்குமோ ?

//இங்கு வருபவர்கள் அதிகம் இல்லை!
:)//
என்னைப் போன்ற மௌன பதிவர்களின் வரவை கணக்கில் எடுத்திருக்கிறீர்களா?
இனிமையான சொற்களையும் பயனுள்ள கருத்துக்களையும் கொண்டு தமிழ்மணத்தில் ஒரு பாலைவனச் சோலையல்லவா ?
கசடில்லாத பதிவுகள்தான்.

 
At 5:55 AM, Blogger மங்கை said...

அய்யோ!!!..SK ஐயா.. முடிச்செல்லாம் போடலை..போடவும் தெரியாது...

இவ்வளவு எளிமையான நடையில இலவசமா இத்தன தகவல்கள் எங்கும் கிடைக்காது..

 
At 6:35 AM, Blogger VSK said...

அதைத்தாங்க சொல்ல வந்தேன்.

இப்பதிவின் ஆரம்பத்தில் நிகழ்வது போல பல காரணங்களாலும், எல்லா வயதினருக்கும் இது நிகழும் வாய்ப்பு உண்டு எனவே சொல்ல வந்தேன்!

மௌனப்புரட்சிக்கு மிக்க நன்றி, திரு. மணியன்!

எவ்விதக் கசடும் இந்தப் பூவில் வந்துவிடக்கூடாது என்பதே என் கருத்தும்.

 
At 6:37 AM, Blogger VSK said...

நானும் விளையாட்டாகத்தான் அதைச் சொன்னேன், மங்கை அவர்களே!


//ஹ்ம்ம்ம்.. ..ம்ம்ம்...//

இது இரண்டும் தான் கொஞ்சம் குழப்பி விட்டது!

:))

 
At 7:13 AM, Blogger ஓகை said...

தீவிர மன உளைச்சலைக் கொடுப்பதில் துரோகம் முதலிடம் பெறும். அதிலும் அது தாம்பத்ய ஐயமாக இருக்கும்போது விஸ்வரூபமெடுத்துவிடும். நல்ல உதாரணம்.

நல்லவேலை, பால் மாற்றிச் சொன்னீர்கள். ஆணாதிக்கவாதி ஆவதிலிருந்து தப்பித்தீர்கள்.

 
At 7:24 AM, Blogger VSK said...

அப்படி ஒண்ணும் தப்பிச்ச மாதிரி தெரியலியே, ஓகையாரே!

மேலே பாருங்க, மங்கையம்மா வந்து என்ன சொல்லிட்டுப் போயிருக்காங்கன்னு.

திரைப்படத்தில், முக்கியமான காட்சி வரும் முன் ஒரு பாடல் காட்சி வருவது போல, சீரியாஸா போயிட்டிருக்கிற இத்தொடரில், ஹார்ட் அட்டாக் பற்றிச் சொல்லும் முன் ஒரு சின்ன கதை சொல்லலாம்னு பார்த்தேன்!
:((

 
At 8:11 AM, Blogger ஷைலஜா said...

எஸ்கே! வளமான நடையில் உங்கள் எழுத்தின் ஓட்டம் ஒரு நிமிஷம் என் ரத்த ஓட்டத்தையே நிறுத்திவிட்டது. ஒரு டாக்டர் எழுத்தாளராயிருப்பது எத்தனை வசதி? வார்த்தைகள் லப்டப் னு ஸாரி டக்டக்குனு வந்து விழுகிறதே! இப்படி என்மாதிரி சராசரிப் பெண்ணுக்கெல்லாம் புரிகிற மாதிரி மருத்துவத் தகவல் தரும் உங்களுக்கு'நன்றி' என்பதெல்லாம் சாதாரண வார்த்தை.
ஷைலஜா

 
At 8:12 AM, Blogger ஓகை said...

இப்போது ஒரே ஒரு மங்கை மட்டும் லேசாக தொட்டுக்காட்டினார். பால் மாற்றியிருந்தீர்களோ அவ்வளவுதான், ஆண்களும் பெண்களுமாக வந்து அமர்க்களப் படுத்தியிருப்பார்கள்.

 
At 8:45 AM, Blogger VSK said...

நீங்கள் இப்படிப் புகழும் அளவுக்கு இதை ரசித்ததுதான் எனக்கு மகிழ்ச்சி.

மிக்க நன்றி, ஷைலஜா அவர்களே!

அப்புறம் இன்னொண்ணு! ஒரு நிமிஷத்துக்கெல்லாம் ரத்த ஓட்டத்தை நிறுத்தாதீங்க! ஒரு சில விநாடிகள் வேணா பரவாயில்லை!
:)))

 
At 12:02 PM, Blogger சேதுக்கரசி said...

கதைச்சுருக்கத்துல வர்ற கதையே பலமா இருக்கு.. அடுத்தடுத்த பகுதிகளில் என்னாகுமோ! ம்.. நடத்துங்க :-) சரி, சம்பந்தா சம்பந்தமில்லாம ஒரு கேள்வி.. சுமார் எத்தனை பகுதிகள் வரும்னு நினைக்கிறீங்க? தெரிஞ்சுக்கலாமேன்னு தான்.. வேறொண்ணுமில்ல.

 
At 8:17 AM, Blogger VSK said...

இதுவரைக்கும் 19 வந்திருக்கு.
இன்னும் 5 [அ] 6 பதிவுகளில் முடிக்க எண்ணம்!

நன்றி, சேதுக்கரசி அவர்களே!

 
At 10:15 PM, Anonymous Anonymous said...

அருமையான கதையுடன் கூடிய பதிவு. அடுத்த பதிவை தேடிச்செல்லுமுன் இங்கே ஒரு பின்னூட்டத்தை பதிவு செய்து நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்...

(முன்பெல்லாம் கமெண்ட் போட முடியாத நிலைமை - அதர் ஆப்ஷன் இல்லையில்லையா...)

நன்றி...!!

 
At 12:22 PM, Blogger VSK said...

கதைக்கு உள்ளே ஒரு கருத்தும் இருக்கிறது, செந்தழலாரே!

நீங்க சொல்லித்தான் அதைத் [anony option] திறந்தேன்!

உங்களுக்குத் தான் நான் நன்றி சொல்லவேண்டும்.!

 

Post a Comment

<< Home