"கசடற"

அறிவியல் தொடர்பான எனக்குத் தெரிந்த தகவல்களை, ஒரு மருத்துவன் எனும் பார்வையில் சொல்ல விழைகிறேன். முழுக்க முழுக்க இவை என் கருத்துகள் மட்டுமே! முருகனருள் முன்னிற்கும்!

Saturday, March 31, 2007

"லப்-டப்" -18 " கவிதை வாங்கி வந்தேன்"

"லப்-டப்" -18 " கவிதை வாங்கி வந்தேன்! "

{இதற்கு முந்தைய பதிவை[17] பக்கத்தில் திறந்து வைத்துக் கொள்ளவும். இது இன்னும் சற்று நன்கு புரியலாம்!}

வீட்டுக்குள் நுழைந்ததும் முதல் வேலையாக தெய்வநாயகி அம்மாள் தன் தம்பி செந்தில்நாதனுக்கு ஒரு ஃபோன் போட்டார்.

"தம்பி! மாமாவுக்கு உடம்பு சரியில்லை. டாக்டர் என்னமோ டெஸ்டுல்லாம்[test] எடுத்துக்கணும்னு சொல்றாரு. நீ உடனே வள்ளியம்மையைக் கூட்டிகிட்டு உடனே புறப்ப்பட்டு வா. நீ கூடமாட இருந்தா எங்களுக்கும் ஒரு தெம்பா இருக்கும்"

சரிக்கா! மாமாவை தெகிரியமா இருக்கச் சொல்லு. நாங்க ஒடனே புறப்படறோம்" என்றார் செந்தில்நாதன்.

சொன்னபடியே மறுநாள் வள்ளியம்மையுடன் வந்து சேர்ந்தார் செந்தில்நாதன்.

"நான் டாக்டருகிட்ட பேசிட்டேன். ஒண்ணும் பயமில்லைன்னு சொல்றாரு. நாளைக்கு போய் பார்ப்போம். எல்லாம் சரியாயிடும். அதான் நான் வந்துட்டேன்ல" என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.

மறுநாள் இருவருமாக [க.சா+செ.நா] டாக்டரைப் போய்ப் பார்த்தனர்.

எடுக்கப்பட வேண்டிய எல்லா டெஸ்டுகளும் எடுக்கப்பட்டன.

எல்லாவற்றையும் கவனமாகப் பார்த்துவிட்டு டாக்டர் சொல்ல ஆரம்பித்தார்.

"இந்த இதய பலவீனம் [Heart Failure] என்பது ஒரு தலைவலி, ஜுரம் மாதிரி டக்குன்னு வர்றதில்லை.
படிப்படியாத்தான் வரும்.
நான் அன்னிக்கு சொன்ன மாதிரி, மூச்சு வாங்குதல்ல ஆரம்பிச்சு, கொஞ்சம் கொஞ்சமா அதிகரிக்கும்.
சில பேரு தள்ளிப் போட்டுருவாங்க சில பேரு, உங்களைப் போல, உடனே டாக்டர்கிட்ட வந்திருவாங்க.
இதுல நாலு நிலை இருக்கு, மருத்துவ ரீதியா.

முதல் நிலை[Stage I]:
இதய பலஹீனம்[Heart Failure] வர்றதுக்கான காரணங்கள்[Risk Factors] அதிகமா இருக்கறவங்களை இதுல வைப்போம்.


ரத்தக்கொதிப்பு[Blood Pressure], நீரிழிவு[Diabetes], கரோனரி நாள நோய்[CAD], மது அதிகமாய் அருந்துபவர்கள், இதற்கு முன், முடக்கு ஜுரம்[Rheumatic Fever] வந்தவர்கள், குடும்பத்தில் எவருக்கேனும் இதய பலவீனம் வந்திருப்பவர்கள் இருந்தால்[Family history of Hear failure] இவர்களுக்கெல்லாம் இந்த நோய் வர அதிகம் சான்ஸ்[chance] இருக்கு.

இவங்க உங்களைப் போல மூச்சு வாங்குது டாக்டர்னு வந்தா, அவங்களை "முதல் நிலை" எனச் சொல்லுவோம்.

இரண்டாம் நிலை[Stage II]:
ஸிஸ்டாலிக் ஹார்ட் ஃபெயிலியர்[Systolic Heart Failure] சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டு, ஆனால், இதய பலவீனத்தீற்கான அறிகுறிகள் இதுவரை வராதவர்கள்[ no symptoms] இதில் அடங்குவர்.

ஈ.எஃப்[EF] 40%க்கு கீழ் இருப்பவர்கள் இவர்கள்.

மூன்றாம் நிலை[Stage III]:
அறிகுறிகள் வெளிப்படையாக[நிர்தர்ஸனமாக] தெரிய வரும் போது அவர்களை இந்த நிலையில் சேர்க்கலாம்.

அதிகமாக மூச்சு வாங்குதல்[Shortness of breath], அசதி[Fatigue] , வேலை செய்ய முடியாமல் போதல்[Excercise intolerance] இதெல்லாம் நன்றாகவே புலப்படும்.

நான்காம் நிலை[Stage IV]:
முறைப்படி கண்டுபிடிக்கப்பட்டு, சிகிச்சையும் தொடங்கப்பட்டு, அது பலனளிக்காமல் போனவர்கள் இருக்கும் நிலை இது!

"அதெல்லாம் சரி டாக்டர்! இப்ப எங்க மாமாவுக்கு எந்த ஸ்டேஜ்? அதைச் சொல்லுங்க. அத்தோட அந்தந்த ஸ்டேஜுக்கு என்ன ட்ரீட்மெண்ட் கொடுப்பீங்க. அதையும் சேர்த்தே சொல்லுங்க" என்றார் செந்தில்நாதன்.

மருத்துவர் தொடர்ந்தார்.

முதல் நிலைல இருக்கறவங்களைப் பத்தி அதிகமா கவலைப்பட வேண்டாம். ஒழுங்கா ரெகுலரா எக்ஸெர்ஸைஸ் பண்ணிகிட்டு, புகை பிடிக்கறதை விட்டுட்டு, மது, மாத்திரை இது மாதிரி பழக்கம் இருந்தா, அதுக்கெல்லாம் ஒரு டாட்டா பெர்மெனன்டா சொல்லிட்டு, ரத்தக்கொதிப்பு, நீரிழிவு நோயை முறையா கட்டுப்படுத்தினா போதும். இவங்க நார்மலுக்கு வந்திடுவாங்க.

இரண்டாம் நிலைக்காரங்களுக்கு, மேலே சொன்ன எல்லாத்துடன் கூட, ஏஸ்-1, பீட்டா ப்ளாக்கர் என்கிற மாத்திரை[ACE-1, Beta Blockers] கூட சேர்த்துக்கணும்.
தேவைப்பட்டா, அறுவைச் சிகிச்சையும் [Caronary artery revascularization, valve repair/ replacement] நடக்கலாம்.

மூன்றாம் நிலை: முதல் இரண்டு நிலைகளில் சொன்னதுடன் கூட, வேறு சில உபரி மாத்திரைகளும் சேர்க்கப்படும்.

அறுவை சிகிச்சையும் நிகழலாம்.
உணவு, எடை இவற்றில் கடுமையாகக் கவனம் செலுத்த வேண்டும்.

நான்காம் நிலையில் இருப்பவர்கள் பாடுதான் கொஞ்சம் கடினம்.

இதய மாற்ற அறுவை சிகிச்சை[Heart transplantation],
வெண்ட்ரிகிளை இயங்க வைக்கும் உபகரணங்கள் பொருத்துதல்[Ventricle assist devices],
வேறு சில அறுவை சிகிச்சைகள்[other surgical options],
ஆய்வுக்காக வந்திருக்கும் புது மாத்திரைகளைப் பரிசோதனைக்காக ஒரு 'கினி பிக்'[Guinea Pig] போல சோதனைக்கு உட்படுதல்[Research Therapirs], இவையெல்லாமும் பலனளிக்காத போது, இருக்கும் கொஞ்ச நாட்களையாவது அதிக கஷ்டம் இல்லாமல் செய்யும் வழிமுறைகள்[End of Life care] இதற்கு ஆளாக வேண்டியிருக்கும்."

"என்னங்க பயமுறுத்தறீங்க, மாமாவுக்கு இப்ப ...." என பதட்டமாகக் கேட்டார் மைத்துனர்!

"எல்லா டெஸ்டும் பண்ணியாச்சு. கந்தசாமி சாருக்கு வந்திருப்பது இப்ப இரண்டாம் நிலைன்னு சொல்லலாம். கொஞ்சம் சர்க்கரை நோய் இருக்கு. பி.பி.யும்[] கொஞ்சம் அதிகமாத்தான் இருக்கு.
இதையெல்லாம் கட்டுப்படுத்தணும்.
உப்பு, எண்னை இதையெல்லாம் குறைக்கணும்.
நேரத்துக்கு சாப்பிடணும்.
இந்த நொறுக்குத்தீனியெல்லாம் விட்டுறணும்.
சும்மா டேஸ்டுக்கு வேணுமின்னா சாப்பிடலாம்.
கூடவே மருந்து மாத்திரை சிலது எழுதித் தரேன்.
அதை வேளை தவறாம எடுத்துக்கணும்.
வாக்கிங் ரெகுலரா போயிட்டு வாங்க.
ரொம்ப தூரம் போக வேணாம்.
லேஸா மூச்சு வாங்க ஆர்மிச்சதுன்னா, பக்கத்துல நிழலல ஒரு இடத்துல ரெஸ்டு எடுத்துக்கங்க.
வெயில் வேளையில் நடக்க வேண்டாம்.
3 மாசத்துக்கு ஒரு தடவை செக்-அப்புக்கு வரணும்.

நடுவில் ஏதேனும் நோயின் அறிகுறிகள் அதிகமாகிற மாதிரி இருந்தா, உடனே எனக்கு ஒரு ஃபோன் போடுங்க.
இதெல்லாம் ஒழுங்கா செஞ்சுகிட்டு வந்தா, இதைப் பெருமளவில் கட்டுப்படுத்தலாம்.
பயப்பட வேண்டாம்" என்று சிரித்துக் கொண்டே சொன்னார் மருத்துவர்.

"என்கிட்ட சொல்லிட்டீங்கள்ல! கவலையை விடுங்க! நான் பார்த்துக்கறேன்." என்று சொல்லி செந்தில்நாதன் கந்தசாமியைக் கூட்டிக்கொண்டு வீடு திரும்பினார்.

நுழைந்ததுமே, கையில் ஒரு தட்டு நிறைய முறுக்கு, மசால் வடை, மைசூர்பாக்கு ஐட்டங்களோடு வள்ளியம்மை வரவேற்றார்!

"இதையெல்லாம் உள்ளே கொண்டு போயிடு. இதெல்லாம் மாமா கண்ணுல இனிமே காட்டவே கூடாது! இதெல்லாம் அவருக்கு ஆவாதாம் இனிமே!" என்று கண்டிப்புடன் சொன்னார் செந்தில்நாதன்.

"ஏங்க! என்ன சொன்னாரு டாக்டரு? மாமாவுக்கு ஒண்ணும் இல்லேத்தானே? "எனக் கவலையுடன் கேட்டார் வள்ளியம்மை.

டாக்டர் சொன்ன விஷயங்களை எல்லாம் ஆதியோடு அந்தமாகச் சொல்லி முடித்தார் செந்தில்.

"நாம ஒரு ஒரு மாசம் இங்கே தங்கி எல்லாத்தையும் சரியா ஒழுங்கு பண்ணிட்டுதான் ஊருக்கு போவப் போறோம். மாமாவுக்கு ஒண்ணும் பெருசா வந்துறலை. கவனமா இருந்தா எல்லாம் சரியாயிடும்" எனச் சொன்னதும் பெண்கள் இருவரும் சற்று மன நிம்மதி அடைந்தனர்.

இது தொடர்பான சில மேல்விவரங்களை அடுத்த பதிவில் காணலாம்.


[இங்கு சொல்லப்பட்டவை உங்கள் தகவலுக்காகவே!
மருத்துவரைக் கலந்து ஆலோசிக்கத் தவறாதீர்கள்!]

Tuesday, March 20, 2007

"லப்-டப்" -- 17 "காற்று வாங்கப் போனேன்!"

"லப்-டப்" -- 17 "காற்று வாங்கப் போனேன்!"

"வர வர இப்பல்லாம் முன்ன மாரி வாக்கிங் போக முடியலை! கொஞ்ச தூரம் நடந்தாவே மேல்மூச்சு வாங்குது!" என்று சொன்னவாறே உள்ளே நுழைந்தார் கந்தசாமி.

"நானே சொல்லணும்னு இருந்தேன். அந்த காஸ் ஸிலிண்டரை கொஞ்சம் நகத்தி வையுங்கன்னு சொன்னதுக்கு, உங்களாலே முடியலியே அன்னிக்கு. அநாயசமா இதெல்லாம் பண்ணுவீங்க முன்னெல்லாம். நா சொல்லப்போவ நீங்க எங்கியாவது கோவப்படப் போறீங்களோன்னு விட்டுட்டேன்.எதுக்கும் நாளைக்கு நம்ம டாக்டரைப் போயி பார்த்துருவோம்." என்றார் அவர் மனைவி தெய்வானை.

மறுநாள் டாக்டரைப் போய் பார்த்தார். ஒருசில டெஸ்டுகள் செய்துவிட்டு, கந்தசாமியைப் பார்த்துச் சொன்னார்,
" உங்க இதயம் கொஞ்சம் பலஹீனமா இருக்கு. இனிமே நீங்க கொஞ்சம் உங்களைக் கட்டுப்படுத்திக்கணும். நான் எழுதிக் கொடுக்கற மாத்திரைகளைச் சாப்பிடுங்க. இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு மேலும் சில சோதனைகள் செய்யணும். எவ்வளவு தூரம் பாதிப்பு இருக்குன்னு பார்க்கணும்" என்றார்.

"என்ன டாக்டர்! கல்லுக்குண்டாட்டம் இருக்கேன். எனக்குப் போயி பலஹீனம் அது இதுன்னு சொல்லுறீங்களே! " என்று சிரித்தார் கந்தசாமி.

"இதையெல்லாம் அப்படி சாதாரணமா எடுத்துக்க வேணாங்க. சரியா ட்ரீட்மெண்ட் எடுத்துக்கலேன்னா, உயிருக்கே ஆபத்தாயிடும். " என டாக்டர் சற்று சீரியஸாகவே சொல்ல, கந்தசாமிக்கு பயம் பிடித்துக் கொண்டது.

"இதய பலஹீனம்னா என்னங்க. கொஞ்ச விவரமாச் சொல்லுங்க டாக்டர்" எனப் பரிதாபமாகக் கேட்டார்.

விவரமாகச் சொல்ல ஆரம்பித்தார் டாக்டர்.

"இதயம்தான் நம்ம உடல் முழுக்கவும் ரத்தத்தை அனுப்புற வேலையைச் செய்யுது. ஒரு நிமிஷத்துக்கு குறைஞ்சது ஒரு 72 தடவை சுருங்கி விரிஞ்சு ரத்தம் உடல் பூரா போவுது.
இந்த 'லப்-டப்' சரியான முறையிலே நடக்கலைன்னா, அதாவது, இதயத்தால ஒழுங்கா "பம்ப்" பண்ண முடியலைன்னா இதயம் பழுதாயிருக்குன்னு[Heart Failure] பொருள்.

பழுது ஆனதைச் சரி பண்ணினாத்தான், .....மருந்து, மாத்திரை மூலமாவோ, இல்லை,......
எந்தெந்த பார்ட்ஸெல்லாம் மாத்தணுமோ, அதையெல்லாம் மாத்தினா சரியா ஆயிடும்.
அதுலியும் சரியாகலைன்னா, புதுசாவே இதயம் மாத்துற அளவுக்குக் கூட போயிடலாம்."

"நெசமாவா? இது எதுனால எப்படி ஆவுது?" எனக் கவலையுடன் கேட்டார் கந்தசாமி.

"ரத்தத்தை பம்ப் செய்ய முடியாத போது, இதயத்தோட சுவர்கள்[Heart walls], அதாங்க நாலு பக்க சதையும், நீளமாகி[stretch]], தங்கியிருக்கிற ரத்தத்தை வைத்துக் கொள்ள ஆரம்பிக்குது.
அதேசமயம், இந்த சுவர்கள் கொஞ்சம் தடிமனாகி[thickening], இன்னும் கொஞ்சம் அழுத்தமா பம்ப் பண்ண முயற்சிக்குது.
நம்ம உடல்ல இருக்கிற சிறுநீரகம் இப்போ கொஞ்ச அதிகமா நீரையும்[fluids], உப்புச்சத்தையும்[sodium] வைச்சுக்க ஆரம்பிக்குது.
இப்போ நம்ம உடல் இன்னும் அதிகமா ஹார்மோன்களை சுரந்து, இதயத்துக்கு உதவியா அதை பழையபடி பம்ப் செய்ய முயற்சிக்குது.
முதலில், இது நல்ல பலனளித்தாலும், நாளாவட்டத்தில், இதன் வலிமையும் குன்ற ஆரம்பிக்கவே இதயம் பலவீனமாகுது.

இத்தோட இல்லை விஷயம்.

இதயத்துக்கு உதவி செய்யறதுக்காக இப்ப உடம்போட மற்ற பாகங்களான கால், கை, வயிற்றுப்பகுதி[abdomen], ஈரல்[Liver], நுரையீரல்[Lungs] இவையெல்லாம் நீரை இதயத்துக்கு அனுப்பாம, தங்க கிட்டயே வெச்சுகிட்டு, கெட்ட பொருளை[Waste products] மட்டும் அனுப்ப ஆரம்பிக்கின்றன.
இது எல்லாமா சேர்ந்து, உடம்பு கொஞ்சம் கனத்துப் போகுது. [congested]இதை "கனத்துப் போனதால வந்த இதய பலஹீனம்"[Congestive Cardiac[heart]Failure, CCF] அப்படீன்னு சொல்லலாம்."

"இதுக்கு என்ன காரணம்?" மீண்டும் அப்பாவியாய்க் கேட்டார் கந்தசாமி.

"முக்கியமான காரணம் நான் முன்னே சொன்னேனே, அந்த 'ஹார்ட் அட்டாக்'தான்.
கரோனரி நாள நோய்[Caronary Artery Disease] ஒருத்தருக்கு வந்துச்சுன்னா, அதனால இதயத்துக்கு வர்ற ரத்த ஓட்டம் தடைப்படுதுன்னு முன்னே பார்த்தோம்.
இந்த அட்டாக் சரியானாலும் வந்த இடத்துல ஒரு தழும்பை [scar]விட்டுட்டு போகும்.
அந்த இடத்தைச் சுத்தி, இருக்கற சதையெல்லாம் சரியா வேலை செய்யாமப் போயிடுது.
இது ஒரு முக்கிய காரனம்.

இதைத் தவிர, வேற மத்தக் காரணங்களும் இருக்கு.

கார்டியோமையோபதி[Cardiomyopathy] எனச் சொல்லப்படும் ஒரு நிலைமை இதயத்துக்கு வரலாம்.
மது அதிகமா அருந்துபவர்கள்[Excesive drinking], போதை மாத்திரை சாப்பிடுபவர்கள்[Illicit drugs], பிரசவகாலத்தில்[Pregnancy], அல்லது ஏதாவது கிருமிகளால் ஏற்படும் நோய்[Infectious diseases], அல்லது எந்தக் காரணமுமின்றியே இது வரலாம்!
அடுத்து, அதிகமான ரத்த அழுத்தம்[High Blood Pressure, இதய வால்வுகளில் ஏற்படும் குறைபாடுகள்[Cardiac valve defects], தைராய்டு சுரப்பியில் வரும் நோய், சிறுநீரக நோய், நீரிழிவு நோய், மற்றும் பிறவியிலேயே இருக்கும் இதயக் குறைபாடுகள்[Congenital Heart disease] இவற்றாலும் இந்த CCF ஏற்படலாம்."


"ஒண்ணு விடாம அத்தனையும் சொல்லிட்டிங்களே டாக்டர்! இந்த நோயெல்லாம் இருக்கறவங்க அத்தனை பேருக்கும் இது வந்தே தீருமா?" என்றார்.

"அப்படி நான் சொல்லவில்லையே, கந்தசாமி சார்! இவங்களுக்கெல்லாம் இது வர்றதுக்கு சான்ஸ் அதிகம்னு சொல்ல வரேன். இதெல்லாம் இல்லாமக் கூட வரலாம்னும் சொல்லியிருக்கேனே!" -- என்றார் டாக்டர்!

"இது வந்திருக்கான்னு எப்படித் தெரிஞ்சுக்கறது? இதுக்கான அறிகுறிகள் என்னென்ன?" -- கந்தசாமி.

டாக்டர்: " உங்களுக்கு வந்ததே, அதான் முதல் அறிகுறி! மூச்சு வாங்குதல் [Shortness of breath].
இதுவரைக்கும் சர்வ சாதாரணமா செஞ்சுகிட்டு இருந்த காரியமெல்லாம் இப்ப கொஞ்சம் கொஞ்சமா கடினமானதாத் தெரிய ஆரம்பிக்கும். பழைய படியே செய்ய முயற்சி பண்னினா மூச்சு வாங்கத் துவங்கும்.

நுரையீரலில் நீர் தங்குவதாலும் இது அதிகமாகலாம். அப்போது ஒரு கமறலான இருமலும் கூடவே வரும்.

ரத்த ஓட்டம் தடைப்படுவதால், மூளைக்கு ரத்தம் சரியாகப் போகாமல், தலைச்சுற்றல்[giddiness], மயக்கம்[fainting spell] இவை வரலாம்.

இதே காரணத்தால், உடலின் மற்ற பகுதிகளும் வலுவிழக்க ஆரம்பித்து, அசதி[weakness, tiredness] தோன்றும்.

இதயம் படபடவென[palpitations] அடிக்கத் துவங்கும். [இது அந்த இருபதில் வரும் படபடப்பு இல்லை!:)]

கால்வீக்கம், வயிற்றுப்பகுதி[abdomen] வீக்கம், இதனால் சற்று எடை அதிகரித்தல்.

நடு இரவில் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு விழித்துக் கொள்ளல்.

இவையெல்லாம் ஏற்படலாம்.

இதெல்லாம் மொத்தமா வராது!

படிப்படியாகத்தான் வரும்.

இப்ப நீங்க வந்த மாதிரி, முதல் அறிகுறி தெரிய ஆரம்பிச்ச உடனேயே மருத்துவரைப் போய் பார்த்தா, இதன் கடுமையை ஆரம்பத்திலேயே கண்டுபிடிச்சு, சரி செய்ய, அல்லது கட்டுப்படுத்த முடியும்."


க: " இதை எப்படிக் கண்டுபிடிப்பீங்க டாக்டர்?"

டா: இதற்கான சோதனைகள் கொஞ்சம் பெருசுதான்!
1.வழக்கம் போல உங்களிடமிருந்து உங்க வாயால என்ன நடக்குதுன்னு கேட்டதுக்கப்புறம்[history], ஒரு முழு உடற்பரிசோதனை [full check-up]செய்வோம்.

2. நாடித்துடிப்பு, ரத்த அழுத்தம், பின்னர் ரத்தப் பரிசோதனை, சோடியம், பொட்டாஷியம், குளோரைடு, யூரியா, கொலெஸ்ட்ரால் இன்னும் பல ரசாயனப் பொருள்களின் அளவுகள் ரத்தத்தில் எவ்வளவு என்பதைக் கண்டறிவோம்.

3. BNP என்னும் [B-type Natriuretic Peptide] ஒரு ரஸாயனப்பொருள் வெண்ட்ரிக்கிளில் சுரக்கிறது.
இதய பலவீனம்[CCF] அதிகமாக, அதிகமாக இதன் அளவும் அதிகமாகிறது.
இது ஒரு நல்ல குறியீடு[marker] இதற்கு.
ஏனெனில், CCF கட்டுப்படுத்தப்பட்ட ஒருவருக்குக் கூட, நல்லமுறையில் இதயம் இயங்கும் ஒருவருக்கு இருப்பதை விட அதிகமாகவே இந்த BNP இருக்கும்.

4. மார்பு எக்ஸ்-ரே[Chest X-Ray]: இதயத்தின் அளவையும், இதயம், நுரையீரலைச் சுற்றி இருக்கும் அதிகப்படியான நீரின் அளவையும் இது காட்ட உதவும்.

5. எக்கோ கார்டியோக்ராம்[Echocardiogram or Echo]: இதயம் இயங்குவதையும், அது பம்ப் செய்யும் அளவையும், ஆரிக்கிள், வெண்ட்ரிக்கிள்களின் அளவையும் இயங்கும் போதே அளவிட உதவும் ஒரு சோதனை இது. அல்ட்ரா சவுண்ட்[Ultrasound] மூலம் இது செய்யப்படும்.

6. ஈ.எஃப்.[]: ஒவ்வொரு முறை இதயம் ரத்தத்தை பம்ப் செய்து அனுப்பும் அளவைக் குறிக்கும் சொல் இது. எக்கோ மூலமும், பின்னால் சொல்லப்போகிற கார்டியாக் கதீடெரைசேஷன் மூலமாகவும் இதைக் கணிக்க முடியும்.
சாதாரணமாக ஒருவருக்கு இதன் அளவு 50%க்கு மேலாக இருக்கும். அதாவது குறைந்த பக்ஷம் இருப்பில் பாதிக்கு மேல் இதயத்திலிருந்து வெளியேற்றப் படுகிறது என்பதைக் குறிக்கிறது இது.
இந்த ஈ.எஃப். 405க்கு கீழே போனால், ஸிஸ்டாலிக் ஹார்ட் ஃபெயிலியர்[Systolic Heart Failure] எனக் கொள்ளலாம்.
40%க்கு மேலானால், இது டையஸ்டாலிக் HF[Diastolic Heart Failure] அல்லது வேறு காரணங்களால் வரும்.

க: "ஸிஸ்டாலிக், டையஸ்டாலிக்குன்னா என்ன் டாக்டர்?"

டா: இதயத்தால நல்லா அழுத்தி பம்ப் பண்ணி ரத்தத்தை வெளியே அனுப்ப முடியாத அளவுக்கு அதன் சுவர்கள்[wallas] பலஹீனமா இருந்தா அது ஸிஸ்டாலிக் கோளாறு.
ஆனா, இதயத்தோட சுவர்கள் சாதாரணமா சுருங்கினாலும், வெண்ட்ரிக்கிள்கள் சரியா விரிஞ்சு கொடுக்கலைன்னாகுறைந்த அளவு ரத்தமே மறுபடியும் இதயத்துக்குள்ளே வரமுடியும். அது டையஸ்டாலிக் கோளாறுனால வர்றது.

க: ஆக மொத்தம் எப்படியும் ஏதோ ஒரு விதத்துல பலஹீனம் வருது இல்லையா டாக்டர்? எதுவா இருந்தா என்ன?

டா: ஆமாம். ஆனால், இதைக் கண்டுபிடிக்கறது எதுக்குன்னா, சரியான சிகிச்சை கொடுக்கறதுக்காகத்தான்!

மேலே கேளுங்க!
7. அடுத்த டெஸ்ட் ஈ.ஸி.ஜி. [E.C.G or Electrocardiogram] இதை ஈ.கே.ஜி.ன்னும் சொல்லுவாங்க. இதயத்துக்கு மின்சார அதிர்வுகள்[Electrical Impulses] இருக்குன்னு முன்னே சொன்னேனே, நினைவு இருக்கா? அந்த மின்சார அதிர்வுகளை ஒரு க்ராஃப்பேப்பர்ல[Graph Paper] கோடு போட்டுக் காட்டற சோதனை இது. உடம்புல சில மின்சார இணைப்புகள் மூலமா [ஷாக்கெல்லாம் அடிக்காதுங்க!] இது செய்யப்படும்.


"இதெல்லாம் எப்பங்க செய்யப் போறீங்க இவருக்கு? சீக்கிரமா கண்டுபிடிச்சு எந்த அளவுல இவரோட நோய் இருக்குன்னு சொல்லுங்க டாக்டர்" என இவ்வளவு நேரம் எல்லாவற்றையும் கூட இருந்து கேட்டுக்கொண்டிருந்த தெய்வானை வாய் திறந்தார்.

"செய்யத்தானே போறோம். கொஞ்சம் பொறுங்க. இன்னும் ரெண்டு, மூணு நாள்ல இதையெல்லாம் செய்திடலாம்.
ஒரு விஷயம் உங்க ரெண்டு பேரையும் நான் பாராட்டணும். நீங்களும் கூட இவரோட வந்தீங்க பாருங்க. அது ரொம்ப சிறப்பான விஷயம். உங்க துணைக்கும் இது தெரியணும் என்பது மிகவும் முக்கியம். அப்போதான் சிகிச்சையை சரியா கண்காணிக்க முடியும்.

சரிங்க, நிறைய நேரம் பேசிட்டோம் இன்னிக்கு. மீதியை டெஸ்டெல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறமா பர்க்கலாம்.
இன்னும் உங்களுக்கு சிகிச்சை ஆரம்பிக்கப்படலை. அதனால, அதுவரைக்கும், இன்னும் ரெண்டு, மூணு நாளைக்கு நல்லா ரெஸ்ட் எடுங்க. அதிகமா அலட்டிக்கதீங்க. நடுவுல எதுனாச்சும் சிராமமா இருந்தா உடனே ஒரு தகவல் கொடுங்க. தைரியமா இருங்க" என்றபடி விடை கொடுத்தார் டாக்டர்.

நாமும், கந்தசாமி-தெய்வானை தம்பதிகளை கொஞ்சம் ஓய்வெடுக்க விடுவோம்!!
அது வரைக்கும் சென்ற பதிவுகளை அப்பப்போ மறுபடியும் படிங்க!

[இங்கு கூறியிருப்பவை ஒரு தகவலுக்கு மட்டுமே!
உங்கள் மருத்துவரைக் கலந்து ஆலோசிப்பது அவசியம்!!]

Sunday, March 11, 2007

"லப்-டப்" - 16 "ஆ! நெஞ்சு வலிக்குதே!" [ "நெஞ்சில் ஜில்ஜில்!"-5]

"லப்-டப்" - 16 "ஆ! நெஞ்சு

வலிக்குதே!" [பகுதி-5]

"நெஞ்சில் ஜில்ஜில்!"

[தலைப்பு கொடுத்த ஷைலஜாவுக்கு நன்றி!]

கடந்த 4 பதிவுகளில் நெஞ்சுவலி பற்றி விளக்கமாகப் பார்த்தோம்.
இதயம் பற்றிய இத்தொடருக்குள் ஒரு மினி தொடராக இது அமைந்துவிட்டது!
இன்றைய பதிவில் இதை முடித்து விடலாம்!

மையோகார்டியல் இன்ஃபார்க்ஷன் [Myocardial Infarction, MI] என்றால் என்ன?
அப்படி என்றால் என்ன?
எப்படி நிகழ்கிறது?
எதனால் வருகிறது?
இதன் அறிகுறிகள் என்னென்ன?
என்ன சிகிச்சை இதற்கு?

சிகிச்சைக்குப் பின் என்ன செய்ய வேண்டும்?
எப்படி இதைத் தவிர்க்க முடியும்?

மேலே இருக்கும் இரு கேள்விகளுக்கும் கிட்டத்தட்ட விடை ஒன்றுதான். எனவே தனிதனியாகச் சொல்லாமல் சேர்த்தே சொல்லுகிறேன்.

மூன்று முக்கியமான விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.

ஒரு தாக்குதல்[Heart Attack] நடந்த பிறகு,

1. இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
2. இது வருவதற்கான காரணங்களைத் தவிர்க்க முயல வேண்டும்.
3. மீண்டும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இதற்கு செய்ய வேண்டியன என்னென்ன?

மறுபடியும் 3!

1. மருந்து மாத்திரைகளைத் தவறாமல் ஒழுங்காக எடுத்துக் கொள்ள வேண்டும்.
2. வாழ்க்கை முறையை[Life Style] கொஞ்சம் மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்.
3. மருத்துவர் சொல்படி ஒழுங்காக செக்-அப் [Check-up] செய்து கொள்ள வேண்டும்.ரத்தக்கட்டிகள்[Clots] அதிகம் உருவாகாமல் இருக்கவும், இதயத்தின் வேலைப்பளுவை சீராக வைக்கவும், கொழுப்புச் சத்தை அளவோடு வைத்திருக்கவும், இதயத் துடிப்பை சீராக வைக்கவும், அதிகப்படியான ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், நெஞ்சுவலியைக் குறைக்கவும் மாத்திரைகள் பயன்படும்.

பயப்பட வேண்டாம்!
இவை எல்லாமுமே எல்லாருக்கும் தேவைப்படும் என்றில்லை!
இதில் எது தேவையோ அவற்றை உங்கள் மருத்துவர் உங்களுக்கு எழுதிக் கொடுப்பார்.

எழுதிக்கொடுக்கும் மாத்திரைகளைப் பற்றிய குறைந்த பட்ச விவரங்களாவது உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

மாத்திரையின் பெயர், எதற்கு அது தேவை[Indications], எத்தனை அளவு[Dosage], எப்போது சாப்பிட வேண்டும்[Frequency], இதன் பக்கவிளைவுகள்[Side effects] என்னென்ன என்பதைப் பற்றிமருத்துவரிடம் தயங்காமல் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

இணையத்திலும் இது பற்றிய குறிப்புகள் கிடைக்கும்.

ஆனால், சில சமயம் இதில் தவறான தகவல்கள் வரவும் வாய்ப்பிருக்கிறது!

எனவே மருத்துவரிடம் இது பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிக, மிக முக்கியம்!

வாழ்க்கை முறை மாற்றங்கள்![Life style changes]

கரோனரி நாள நோய்க்கு[Caronary Artery Disease] தீர்வு கிடையாது!

வாழ்க்கை முறை மாற்றங்கள்[Life-style] மூலமே இதனைக் கட்டுப்படுத்த முடியும்!

நான் எப்போதும் என்னிடம் வருபவர்க்குச் சொல்லுவேன்!
"உங்களுக்காக, நீங்க எதை அனுப்பினாலும், என்ன செஞ்சாலும் மறுக்காம ஏத்துகிட்டு, எல்லாத்துக்கும் கூட நின்னிருக்கு உங்க உடம்பு! அது இப்போ கொஞ்சம் உங்களை மாத்திக்கிட்டு, நீங்க வாழறதுக்கு நான் உதவ எனக்கு உதவ முடியுமான்னு[:))] அது கேக்குது! நீங்கதான் முடிவு பண்ணனும்"

என்ன மாற்றங்கள் செய்யணும்!

புகை பிடிப்பதை அறவே நிறுத்தணும்.
இதுல காம்ப்ரொமைஸே கிடையாது.ஒரு தாக்குதலுக்கு அப்புறம் நீங்க பிடிக்கற ஒவ்வொரு ஸிகரெட்டும், அடுத்த தாக்குதல்ல் நிகழ ஒரு ஆயுதம்! மறக்காதீங்க!

கொழுப்பைக் குறைக்கணும்!
குறைந்த அளவே கொழுப்புச் சத்து உள்ள உணவுமுறையைக் கைகொள்ள வேண்டும்.இதிலும் பயன் இல்லையென்றால், மாத்திரைகளின் உதவியை நாட வேண்டும்.

ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தணும்.
உப்பைக் குறைத்து, முறையாக உடற்பயிற்சி[] செய்து, உணவில் அளவோடு இருந்து ரத்த அழுத்தத்தை குறிப்பிட்ட அளவிற்குள் வைத்துக் கொள்ளணும். இல்லையேல், மருந்து, மாத்திரைகளாலும் பயன் இருக்காது.

சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு இந்நோய் அதிக அளவில் பாதிக்கும் என்பதால், இவர்கள் கட்டுப்பாடோடு இருப்பது மிகவும் முக்கியம்.

முறையான உடற்பயிற்சிகள்[Exercise] மருத்துவரின் ஆலோசனையோடு செய்யப் பழகணும். இதன் மஹிமை அளவிட முடியாதது! சர்க்கரை நோய்[Diabetes], ரத்த அழுத்தம்[High blood pressure], எடை[Weight], மன அயர்வு[Stress] இவை எல்லாவற்றிற்கும் இதுவே கைகண்ட மருந்து!

உடல் எடையை [Body weight] சரியான அளவில் வைத்திருக்கணும்!உயரத்திற்கும், வயதுக்கும் தகுந்த எடையை வைத்துக் கொள்வது அவசியம்.

மன அயர்வையும்[Stress] கோபத்தையும்[Anger] தவிர்க்கணும்.
கோபப்படுவது, உணர்ச்சிவசப்படுவது அதிகமாய் வருத்தப்படுவது இவையெல்லாம் இதயத்தை மேலும் பாதிக்கும் விஷயங்கள்.இவற்றைக் கட்டுப்படுத்த தனி வகுப்புகள் இருக்கின்றன. அவற்றில் சேர்ந்து முறையாகப் பயிற்சி செய்தால் இவை குறையும் வாய்ப்பிருக்கிறது.யோகா ஒரு நல்ல பயிற்சி இதற்கு!

இதய மறுமலர்ச்சி வகுப்பில்[Cardiac Rehabilitation] சேர்ந்து மருத்துவரின் உதவியுடன் முறையாக இதயத்தை வலுப்படுத்தும் முறையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

மருத்துவரை முறையாக அவர் சொல்லும் கால அளவில் பார்த்து சோதனைகள் செய்து கொள்ளுவது மிகவும் முக்கியமானது.

இதற்கு இடையில், உங்கள் உடல்நிலையில் ஏதேனும் மாற்றங்கள் தெரிந்தால், அல்லது உணர்ந்தால், உடனே மருத்துவ உதவியை நாடுவது மிகவும் முக்கியம்!

*** சரி, ஒருவருக்கு நெஞ்சுவலி [Angina] வந்தால் அவர் என்ன செய்ய வேண்டும்!? ***

நெஞ்சுவலியின் அறிகுறிகளான, வலி, அயர்வு, வியர்த்துக் கொட்டல், இதயப்பகுதியில் ஒரு அழுத்தம் ஏற்படுதல், கை, தோள்பட்டை, முதுகு போன்ற இடங்களில் வலி பரவுதல், போன்றவை தோன்றுமாயின்[இது ஒருவருக்கொருவர் மாறுபடும்]செய்ய வேண்டியது என்ன?

* என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும், அப்படியே அதை விட்டுவிட்டு, உடனடியாக ஓய்வு எடுக்க வேண்டும். [Take complete rest]

* நைட்ரோக்ளிஸரின்[Nitroglycerin] மாத்திரை உங்களுக்கு எழுதிக் கொடுக்கப்பட்டு, கைவசம் இருந்தால் உடனே ஒரு மாத்திரையை எடுத்து, நாக்கின் அடியில் வைத்துக் கொள்ளவும்.

* அடுத்த ஐந்து நிமிடங்களில் வலி குறையாவிடில், இன்னொரு மாத்திரை எடுத்துக் கொள்ளவும்.

* இது போல 3 முறை செய்யலாம்.

* இப்படி செய்தும்,15 நிமிடங்களில் வலி குறையவில்லையெனில், உடனடியாக அவசர மருத்துவ உதவியை நாடவும்.

* ஆஸ்பிரின்[Aspirin] மாத்திரையும் ஏற்கெனவே எழுதிக் கொடுக்கப் பட்டிருந்தால் அதுவும் ஒன்று எடுத்துக் கொள்ளலாம். [ரத்தம் கட்டிதட்டிப் போவதை இது தவிர்க்கும்.

* மோஹன் செய்தது போல, உடனடியாக உங்கள் உதவிக்கு வரக்கூடியவரை உடனே அழைக்கவும். நானே போய்விடுவேன் என ஸ்கூட்டரை உதைக்க வேண்டாம்! அல்லது, காரை ஸ்டார்ட் செய்ய வேண்டாம்! இதுவே உங்களுக்கு எமனாக அமையக்கூடும்!

* நைட்ரோக்ளிஸரின் மாத்திரை நாள் கடந்ததா[Expiry date] எனக் கவனிக்கவும். ஒருமுறை மருந்து பாட்டில் திறக்கப் பட்டிருந்தால், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மருந்துச் சீட்டைப் புதுப்பித்து புது மாத்திரைகள் வாங்கிக் கொள்ளவும்!

அவ்வளவுதாங்க!
நிறையப் பேசியாச்சு!
ஐந்து பதிவுகளையும் மீண்டும் ஒருமுறை தொடர்ச்சியாக நேரம் கிடைக்கும் போது படித்து, நீங்கள் அனைவரும் வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல முருகப்பெருமான் உங்களுக்கு உறுதுணையாய் இருக்க வேண்டி, இந்த மினி தொடரை நிறைவு செய்கிறேன்.

அடுத்து, 'இதயம்' பற்றி இன்னும் சில விஷயங்களைப் பார்க்கலாம்.

கூடவே இருந்து உதவிய மோஹன் - ராதா தம்பதியினர்க்கும், குமாருக்கும் எனது நன்றிகள்!

[இதில் கூறப்பட்டவை அனைத்தும் ஒரு தகவலுக்கு மட்டுமே!
உங்கள் மருத்துவர்தான் முறையான சிகிச்சை அளிக்க முடியும்!]

"லப்-டப்" - 16 "ஆ! நெஞ்சு வலிக்குதே!"[ "நெஞ்சில் ஜில்ஜில்!"-5]

"லப்-டப்" - 16 "ஆ! நெஞ்சு வலிக்குதே!" [பகுதி-5]


"நெஞ்சில் ஜில்ஜில்!"
[தலைப்பு கொடுத்த ஷைலஜாவுக்கு நன்றி!]

கடந்த 4 பதிவுகளில் நெஞ்சுவலி பற்றி விளக்கமாகப் பார்த்தோம். இதயம் பற்றிய இத்தொடருக்குள் ஒரு மினி தொடராக இது அமைந்துவிட்டது! இன்றைய பதிவில் இதை முடித்து விடலாம்!


மையோகார்டியல் இன்ஃபார்க்ஷன் [Myocardial Infarction, MI] என்றால் என்ன?

அப்படி என்றால் என்ன?
எப்படி நிகழ்கிறது?
எதனால் வருகிறது?
இதன் அறிகுறிகள் என்னென்ன?
என்ன சிகிச்சை இதற்கு?

சிகிச்சைக்குப் பின் என்ன செய்ய வேண்டும்?
எப்படி இதைத் தவிர்க்க முடியும்?

மேலே இருக்கும் இரு கேள்விகளுக்கும் கிட்டத்தட்ட விடை ஒன்றுதான். எனவே தனிதனியாகச் சொல்லாமல் சேர்த்தே சொல்லுகிறேன்.

மூன்று முக்கியமான விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.


ஒரு தாக்குதல்[Heart Attack] நடந்த பிறகு,

1. இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
2. இது வருவதற்கான காரணங்களைத் தவிர்க்க முயல வேண்டும்.
3. மீண்டும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இதற்கு செய்ய வேண்டியன என்னென்ன?

மறுபடியும் 3!

1. மருந்து மாத்திரைகளைத் தவறாமல் ஒழுங்காக எடுத்துக் கொள்ள வேண்டும்.
2. வாழ்க்கை முறையை[Life Style] கொஞ்சம் மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்.
3. மருத்துவர் சொல்படி ஒழுங்காக செக்-அப் [Check-up] செய்து கொள்ள வேண்டும்.

ரத்தக்கட்டிகள்[Clots] அதிகம் உருவாகாமல் இருக்கவும், இதயத்தின் வேலைப்பளுவை சீராக வைக்கவும், கொழுப்புச் சத்தை அளவோடு வைத்திருக்கவும், இதயத் துடிப்பை சீராக வைக்கவும், அதிகப்படியான ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், நெஞ்சுவலியைக் குறைக்கவும் மாத்திரைகள் பயன்படும்.

பயப்பட வேண்டாம்! இவை எல்லாமுமே எல்லாருக்கும் தேவைப்படும் என்றில்லை! இதில் எது தேவையோ அவற்றை உங்கள் மருத்துவர் உங்களுக்கு எழுதிக் கொடுப்பார்.

எழுதிக்கொடுக்கும் மாத்திரைகளைப் பற்றிய குறைந்த பட்ச விவரங்களாவது உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

மாத்திரையின் பெயர், எதற்கு அது தேவை[Indications], எத்தனை அளவு[Dosage], எப்போது சாப்பிட வேண்டும்[Frequency], இதன் பக்கவிளைவுகள்[Side effects] என்னென்ன என்பதைப் பற்றி மருத்துவரிடம் தயங்காமல் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

இணையத்திலும் இது பற்றிய குறிப்புகள் கிடைக்கும். ஆனால், சில சமயம் இதில் தவறான தகவல்கள் வரவும் வாய்ப்பிருக்கிறது! எனவே மருத்துவரிடம் இது பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிக, மிக முக்கியம்!

வாழ்க்கை முறை மாற்றங்கள்![]

கரோனரி நாள நோய்க்கு[Caronary Artery Disease] தீர்வு கிடையாது!
வாழ்க்கை முறை மாற்றங்கள்[Life-style] மூலமே இதனைக் கட்டுப்படுத்த முடியும்!

நான் எப்போதும் என்னிடம் வருபவர்க்குச் சொல்லுவேன்!
"உங்களுக்காக, நீங்க எதை அனுப்பினாலும், என்ன செஞ்சாலும் மறுக்காம ஏத்துகிட்டு, எல்லாத்துக்கும் கூட நின்னிருக்கு உங்க உடம்பு! அது இப்போ கொஞ்சம் உங்களை மாத்திக்கிட்டு, நீங்க வாழறதுக்கு நான் உதவ எனக்கு உதவ முடியுமான்னு[:))] அது கேக்குது! நீங்கதான் முடிவு பண்ணனும்"

என்ன மாற்றங்கள் செய்யணும்!

புகை பிடிப்பதை அறவே நிறுத்தணும்.
இதுல காம்ப்ரொமைஸே கிடையாது.
ஒரு தாக்குதலுக்கு அப்புறம் நீங்க பிடிக்கற ஒவ்வொரு ஸிகரெட்டும், அடுத்த தாக்குதல்ல் நிகழ ஒரு ஆயுதம்! மறக்காதீங்க!

கொழுப்பைக் குறைக்கணும்!
குறைந்த அளவே கொழுப்புச் சத்து உள்ள உணவுமுறையைக் கைகொள்ள வேண்டும்.
இதிலும் பயன் இல்லையென்றால், மாத்திரைகளின் உதவியை நாட வேண்டும்.

ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தணும்.
உப்பைக் குறைத்து, முறையாக உடற்பயிற்சி[] செய்து, உணவில் அளவோடு இருந்து ரத்த அழுத்தத்தை குறிப்பிட்ட அளவிற்குள் வைத்துக் கொள்ளணும். இல்லையேல், மருந்து, மாத்திரைகளாலும் பயன் இருக்காது.

சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு இந்நோய் அதிக அளவில் பாதிக்கும் என்பதால், இவர்கள் கட்டுப்பாடோடு இருப்பது மிகவும் முக்கியம்.

முறையான உடற்பயிற்சிகள்[Exercise] மருத்துவரின் ஆலோசனையோடு செய்யப் பழகணும். இதன் மஹிமை அளவிட முடியாதது! சர்க்கரை நோய்[Diabetes], ரத்த அழுத்தம்[High blood pressure], எடை[Weight], மன அயர்வு[Stress] இவை எல்லாவற்றிற்கும் இதுவே கைகண்ட மருந்து!

உடல் எடையை [Body weight] சரியான அளவில் வைத்திருக்கணும்!
உயரத்திற்கும், வயதுக்கும் தகுந்த எடையை வைத்துக் கொள்வது அவசிய்யம்.

மன அயர்வையும்[Stress] கோபத்தையும்[Anger] தவிர்க்கணும்.
கோபப்படுவது, உணர்ச்சிவசப்படுவது அதிகமாய் வருத்தப்படுவ்வது இவையெல்லாம் இதயத்தை மேலும் பாதிக்கும் விஷயங்கள்.
இவற்றைக் கட்டுப்படுத்த தனி வகுப்புகள் இருக்கின்றன. அவற்றில் சேர்ந்து முறையாகப் பயிற்சி செய்தால் இவை குறையும் வாய்ப்பிருக்கிறது.
யோகா ஒரு நல்ல பயிற்சி இதற்கு!

இதய மறுமலர்ச்சி வகுப்பில்[Cardiac Rehabilitation] சேர்ந்து மருத்துவரின் உதவியுடன் முறையாக இதயத்தை வலுப்படுத்தும் முறையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

மருத்துவரை முறையாக அவர் சொல்லும் கால அளவில் பார்த்து சோதனைகள் செய்து கொள்ளுவது மிகவும் முக்கியமானது.
இதற்கு இடையில், உங்கள் உடல்நிலையில் ஏதேனும் மாற்றங்கள் தெரிந்தால், அல்லது உணர்ந்தால், உடனே மருத்துவ உதவியை நாடுவது மிகவும் முக்கியம்!


*** சரி, ஒருவருக்கு நெஞ்சுவலி [Angina] வந்தால் அவர் என்ன செய்ய வேண்டும்!? ***

நெஞ்சுவலியின் அறிகுறிகளான, வலி, அயர்வு, வியர்த்துக் கொட்டல், இதயப்பகுதியில் ஒரு அழுத்தம் ஏற்படுதல், கை, தோள்பட்டை, முதுகு போன்ற இடங்களில் வலி பரவுதல், போன்றவை தோன்றுமாயின்[இது ஒருவருக்கொருவர் மாறுபடும்]
செய்ய வேண்டியது என்ன?

* என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும், அப்படியே அதை விட்டுவிட்டு, உடனடியாக ஓய்வு எடுக்க வேண்டும். [Take complete rest]


* நைட்ரோக்ளிஸரின்[Nitroglycerin] மாத்திரை உங்களுக்கு எழுதிக் கொடுக்கப்பட்டு, கைவசம் இருந்தால் உடனே ஒரு மாத்திரையை எடுத்து, நாக்கின் அடியில் வைத்துக் கொள்ளவும்.


* அடுத்த ஐந்து நிமிடங்களில் வலி குறையாவிடில், இன்னொரு மாத்திரை எடுத்துக் கொள்ளவும்.

* இது போல 3 முறை செய்யலாம்.

* இப்படி செய்தும்,15 நிமிடங்களில் வலி குறையவில்லையெனில், உடனடியாக அவசர மருத்துவ உதவியை நாடவும்.

* ஆஸ்பிரின்[Aspirin] மாத்திரையும் ஏற்கெனவே எழுதிக் கொடுக்கப் பட்டிருந்தால் அதுவும் ஒன்று எடுத்துக் கொள்ளலாம். [ரத்தம் கட்டிதட்டிப் போவதை இது தவிர்க்கும்.

* மோஹன் செய்தது போல, உடனடியாக உங்கள் உதவிக்கு வரக்கூடியவரை உடனே அழைக்கவும். நானே போய்விடுவேன் என ஸ்கூட்டரை உதைக்க வேண்டாம்! அல்லது, காரை ஸ்டார்ட் செய்ய வேண்டாம்! இதுவே உங்களுக்கு எமனாக அமையக்கூடும்!

* நைட்ரோக்ளிஸரின் மாத்திரை நாள் கடந்ததா[Expiry date] எனக் கவனிக்கவும். ஒருமுறை மருந்து பாட்டில் திறக்கப் பட்டிருந்தால், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மருந்துச் சீட்டைப் புதுப்பித்து புது மாத்திரைகள் வாங்கிக் கொள்ளவும்!

அவ்வளவுதாங்க!
நிறையப் பேசியாச்சு!
ஐந்து பதிவுகளையும் மீண்டும் ஒருமுறை தொடர்ச்சியாக நேரம் கிடைக்கும் போது படித்து, நீங்கள் அனைவரும் வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல முருகப்பெருமான் உங்களுக்கு உறுதுணையாய் இருக்க வேண்டி,, இந்த மினி தொடரை நிறைவு செய்கிறேன்.

அடுத்து, 'இதயம்' பற்றி இன்னும் சில விஷயங்களைப் பார்க்கலாம்.
கூடவே இருந்து உதவிய மோஹன் - ராதா தம்பதியினர்க்கும், குமாருக்கும் எனது நன்றிகள்!


[இதில் கூறப்பட்டவை அனைத்தும் ஒரு தகவலுக்கு மட்டுமே!
உங்கள் மருத்துவர்தன் முறையான சிகிச்சை அளிக்க முடியும்!]

Sunday, March 04, 2007

"லப்-டப்" -15 "ஆ! நெஞ்சு வலிக்குதே" [4-ம் பகுதி]

"லப்-டப்" -15 "ஆ! நெஞ்சு வலிக்குதே" [4-ம் பகுதி]

"சோதனை மேல் சோதனை போதுமடா சாமி!"

இதயத் தாக்குதல் எவ்வாறு நிகழ்கிறது, அதன் அறிகுறிகள் என்னென்ன என்பதைச் சென்ற பதிவில் பார்த்தோம்.

மையோகார்டியல் இன்ஃபார்க்ஷன் [Myocardial Infarction, MI] என்றால் என்ன?

அப்படி என்றால் என்ன?
எப்படி நிகழ்கிறது?
எதனால் வருகிறது?
இதன் அறிகுறிகள் என்னென்ன?
எப்படி இதைத் தவிர்க்க முடியும்?


என்ன சிகிச்சை இதற்கு?
சிகிச்சைக்குப் பின் என்ன செய்ய வேண்டும்?


இப்படி வருவதை, [அ] வரப்போவதை எப்படிக் கண்டுபிடிப்பது?
இதற்கான சோதனைகள் என்ன?
என்பதை இன்று பார்ப்போம்.

மோஹனுக்கு நெஞ்சுவலி வந்தது; அவன் நண்பன் குமார் உடனே அவனுக்கு உதவி அளிக்க வந்தான் என முதல் பகுதியில் பார்த்தோம்.

என்ன செய்தான் அவன்?

மோஹனிடம் 'இதோ நான் உடனே வருகிறேன்' எனச் சொன்னதும், உடனடியாக அவன் அவசரச் சிகிச்சைப் பிரிவிற்கு தொலபேசினான்.


உடனடியாக ஒரு ஆம்புலன்ஸை[ambulance] மெரீனா கடற்கரைக்கு கண்ணகி சிலை அருகில் வரச் சொல்லிவிட்டு, தன் காரில் விரைந்தான்.

அதற்குள் புத்திசாலித்தனமாக, மோஹனும், அருகில் இருந்த சிலரைக் கூப்பிட்டு, தன்னை கண்ணகி சிலையருகில் கொண்டு செல்லுமாற வேண்ட, அவர்களும் உடனடியாக நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து அப்படியே செய்தார்கள்.

சிறிது நேரத்தில் மருத்துவ ஊர்தி [ஆம்புலன்ஸ்] அங்கு வர, இரண்டு செவிலியர் [நர்ஸ்]அவன் இருக்குமிடம் நோக்கி விரைந்தனர்.
குமாரும் இப்போது வந்துவிட்டான்.

"என்னங்க பண்ணுது உங்களுக்கு?" எனக் கேட்டபடியே ஒருவர் மோஹனின் நாடித்துடிப்பு, ரத்த அழுத்தம், ஈ.ஸி.ஜி. [Pulse, Blood Pressure, E.C.G.] இவற்றைப் பரிசோதிக்க முனைய, அடுத்தவர், இவன் சொன்ன தகவல்களை ஒரு தாளில் குறித்துக் கொண்டே, ஸெல்ஃபோனில் அதை மருத்துவமனைக்கு அனுப்ப ஆரம்பித்தார்.

சிறிது ரத்தமும் எடுக்கப்பட்டு, ரத்தத்தில் இருக்கும் ரசாயன அளவுகள்[Blood chemistry] உடனடியாகப் பரிசோதிக்கப்பட்டு, அவையும் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

இவற்றின் மூலம், மோஹனுக்கு வந்திருப்பது ஒரு இதயத் தாக்குதல் தான்[Heart Attack] என்பது உறுதி செய்யப்பட்டு, மேலும் இரு பணியாளர்கள் ஒரு ஸ்ட்ரெட்ச்சரைக் கொண்டுவர, அதில் ஏற்றப்பட்டு, மருத்துவ ஊர்தியில் உடனடியாக மோஹன் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டான்.

செல்லும் வழியிலேயே ஒரு ஆஸ்பிரின் மாத்திரயும், ரத்தக்கட்டியைக் கரைக்க உதவும் [Thrombolytics, clot-busters] ஒரு ஊசியும் போடப்பட்டது.


அங்கு அவசரச் சிகிச்சைப் பிரிவில் உடனடியாக அனுமதிக்கப்பட்டு, மீண்டும் ஒரு முறை, முறையான் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

முதலில் சொன்ன சோதனைகள் மீண்டும் செய்யப்பட்டு,இதயத்தாக்குதல்தான் என்பது உறுதி செய்யப்பட்டதும், கீழ்க்கண்ட சோதனைகள் ஆரம்பிக்கப் பட்டன.

எக்கோகார்டியோக்ராம் [Echo cardiogram] : இதயம் எப்படி ரத்தத்தை 'பம்ப்' [pump] செய்து அனுப்புகிறது, எந்தெந்த இடங்களில் இது முறைப்படி நிகழவில்லை, எந்த இடங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றன என்பதைக் கண்டுபிடிக்க உதவும் சோதனை இது.

கார்டியாக் கதீட்ரைஸேஷன்[Cardiac Catheterization] : அவசர சிகிச்சை பலனளிக்கவில்லை, வலி இன்னும் குறையவில்லை எனும் நிலையில், அடுத்து உடனடியாகச் செய்யப்படும் சோதனை இது. நேரடியாக காலில் இருக்கும் ஒரு பெரிய நாளம் வழியாக ஒரு கம்பி மூலம்[ இது வெறும் இரும்புக்கம்பி அல்ல! இதயம், இதயக்குழாய்களின் உள்ளே நிகழ்வதைப் பார்க்கவும், தேவைப்பட்டால், அடைப்பை நீக்கவும் இது உதவும்] இதயத்திற்குள் நிகழ்வதைப் பார்க்க உதவும் ஒரு சோதனை.

இதன் மூலம், அடுத்து என்ன செய்ய வேண்டும், வெறும் அடைப்பை நீக்கினால் மட்டும் போதுமா [PTCA], இல்லை, அடைப்பு இருக்கும் இடத்தில் ஒரு விரிப்பான்[stent] போடணுமா, இல்லை முழுதுமாகவே பழுதுபட்ட ரத்தக்குழாயை மாற்றணுமா[CABG] எனபதை முடிவு செய்யவும் இது தேவையானதாகிறது.

மோஹனுக்கும் இவையெல்லாமும் நிகழ்ந்தன!

இரண்டு இதயக் குழாய்களில்[Coronari arteries] அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, 'பை-பாஸ் ஸர்ஜரி'[By-pass surgery, CABG] செய்ய முடிவெடுத்து, அவனது காலில் இருக்கும் ஸஃபேனஸ் நாளத்தில் [Saphenous Vein] இருந்து சிறு துண்டுகள் வெட்டப்பட்டு, அவை இதயத்திற்கு ரத்தமளிக்கும்,.... ஆனால், இப்போது பழுதுபட்ட,..... குழாய்களுக்கு மாற்றாகப் பொருத்தப் பட்டன.


[இதய பலஹீனமானவர்கள் பார்க்க வேண்டாம்!]


[கொத்தனாருக்கு நன்றி!]

பிறகு, அங்கிருந்து, 'அதிதீவிர சிகிச்சை வார்டுக்கு'[Intensive Care Unit] மோஹன் கொண்டு செல்லப்பட்டு, முறையாகக் கவனிக்கப்பட்டு, 3 நாட்களுக்குப் பின், வீடு திரும்பினான்!

இனித்தான் இருக்கிறது இன்னும் சில சோதனைகள் !

அறுவை சிகிச்சை முடிந்து ஒரு இரண்டு மாதங்கள் ஆகும், உங்கள் இதயமும், மற்ற இடங்களும் முழுதும் குணமாக!

முதல் ஒரு வாரத்திற்கு, மிகவும் அசதியாகவும் சோர்வாகவும் இருக்கும்.

அறுவை சிகிச்சை முடிந்த அடுத்த இரு வாரங்களில் மோஹன் என்ன செய்யணும்?

படுக்கையிலேயே விழுந்து கிடக்காமல், தனக்குத் தேவையான காரியங்களை அடுத்தவர் உதவியின்றி தானே செய்து கொள்ளத் துவங்கினான்.

ஒரே நேரத்தில் அடுத்தடுத்து எல்லாவற்றையும் செய்ய முற்படாமல், விட்டு விட்டு, செய்தான். காலையில் பல்தேய்த்து விட்டு, ஒரு அரை கப் டீ சாப்பிட்டு விட்டு, சற்று நேரம் பேப்பர் படித்துவிட்டு, பிறகு கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டு, பின்னர், ஷேவிங்...... இப்படி படிப்படியாக செய்து வந்தான்.

மாடிப்படி ஏறக் கூடாது என மருத்துவர் தடை விதிக்காததால், மெதுவாக ஒருநாளைக்கு ஒரு முறை மாடிப்படிகளில் மெதுவாக ஏறி, சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு, பின்னர் கீழே இறங்கி படுக்கையில் படுத்துக் கொள்வான்.

எவ்வளவு நேரம் ஒரு நாளைக்கு நடக்கலாம் என மருத்துவர் சொல்லியபடி, இதையும் ஒரே நேரத்தில் செய்யாமல், விட்டுவிட்டு நடை பழகினான் [intermittent walking]!

கொஞ்சம் தெம்பு வர ஆரம்பித்ததும், வீட்டுவேலைகளில், ராதாவிற்கு உதவியாக சில சில வேலைகள்... துணி மடித்து வைத்தல், காய்கறி நறுக்கிக் கொடுத்தல், செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சுதல்.... செய்யத் தொடங்கினான்.

பளு தூக்கவோ, பெரிய சாமான்களை இழுக்கவோ முயற்சிக்கவில்லை.

இரு வாரங்களுக்குப் பிறகு, மருத்துவரைப் போய்ப் பார்த்தான்.

அவர் மீண்டும் ஒரு முறை, நாடி, ரத்த அழுத்தம், ஈ.ஸி.ஜி. போன்ற சோதனைகளைச் செய்து, தேறிவருகிறான் என்பதை உறுதிப் படுத்தி, மேலும் சில கடினமான வேலைகள் செய்ய இவனை அனுமதித்தார்.

அப்போது, ராதா, டாக்டரைப் பார்த்து சொன்னாள்," டாக்டர், இப்பவெல்லாம் இவருக்கு கொஞ்சம் கோபம் அதிகமாவே வருது. கூடவே பிரமை பிடிச்ச மாதிரி மோட்டுவளையைப் பார்த்துகிட்டு உக்கார்ந்திருக்காரு. என்னங்கன்னு கேட்டா, எரிஞ்சு விழறாரு. திடீர்னு, ராத்திரில எழுந்து என்னைக் கட்டிபிடிச்சுகிட்டு, 'நான் உங்களையெல்லாம் விட்டுட்டு சீக்கிரமா போயிருவேனா'ன்னு குழந்தை மாதிரி அழறாரு. இதல்லாம் ஏன் வருது? நான் எவ்வளவோ மாறிட்டேன். அந்தப் பொண்ணு கூடவும் பேசிட்டேன். அது என் கையைப் பிடிச்சுகிட்டு 'அவர் எனக்கு ஒரு அண்ணா மாதிரி. வேற ஒண்ணும் தப்பா எங்களுக்குள்ளே ஒண்ணுமில்லை'ன்னு சொல்லி அழுதிச்சு. எனக்கும் எல்லாம் புரிஞ்சு போச்சு. இனிமே அப்படி ஒண்ணு எங்க வாழ்க்கையில நடக்காது. இப்ப இவருக்கு எப்படி நான் ஆறுதல் சொல்றது?" எனக் கண்ணீர் விட்டாள்.

டாக்டர் அவளைப் பார்த்துச் சொன்னார்.


"நடந்திருக்கிறதுஒரு பெரிய அறுவை சிகிச்சை. அதுவும் இதயத்துல! எந்த மனுஷனுக்கும் கலக்கம் வர்றது சஹஜம்தான். இதை நீங்க புரிஞ்சுக்கணும். நான் ஸொல்ற விஷயங்களைக் கவனமா செயல்படுத்துங்க. கொஞ்ச நாள்ல இது சரியாயிடும். எனச் சொல்லி கீழ்க்கண்டவற்றைச் சொன்னார்.

1. தினம் ஒழுங்கா நேரத்துக்கு எழுந்து, நீட்டா ட்ரெஸ் பண்ணிக்கணும்.

2. படுக்கையிலேயே விழுந்து கிடக்கக் கூடாது.

3. தினசரி ரெகுலரா நடக்கணும் [walking]

4. எதையும் மனசுல போட்டு குழப்பிக்காம உங்க கிட்ட வந்து ஸொல்றாரு இல்லியா, அப்ப ஆறுதலா நாலு வார்த்தை பேசுங்க.

5. டயத்துக்கு தூங்கப் போகணும். சரியாத் தூங்கலேன்னாலும், எரிச்சல், அசதில்லாம் வரும்.
வேனும்னா நான் ஒரு மைல்ட் தூக்க மாத்திரை தரேன்.

6. நெருங்கின நண்பர்களைத் தவிர அதிகம் பேரோட பேச வேண்டாம், இன்னும் கொஞ்ச நாளைக்கு.

7. கார்டியாக் ரீ-ஹேப் ப்ரொக்ராம்ல சேரணும்.

8. டி.வி., கம்ப்யூட்டர்ல அதிர்ச்சி அளிக்கும் நிகழ்ச்சிகளையோ, பதிவுகளையோ பார்க்கவேண்டாம்.

9. முக்கியமா, உடலையும், மனஸையும் சந்தோஷமா வெச்சுக்கணும்.

இதுல எதனாச்சும் குறைவா இருக்கற மாதிரி தெரிந்தாலோ, அல்லது, மனச்சோர்வு குறையாமலிருந்தாலோ, உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை கேளுங்கள். இதைக் குறைக்க மாத்திரைகளும், மனநல ஆலோசனைகளும்[Counselling] கிடைக்கும்!:))

"அப்போ என்னென்ன அவர் சாப்பிடலாம் டாக்டர்!" என்று தொடர்ந்தாள் ராதா.

'நிறைய காய்கறிகள், பழம், சத்துப் பொருள்கள் எனச் சொல்லப்படும் Whole Grains சேர்த்துக்கணும்.

கலோரி அளவைக் கவனமாப் பார்த்துக்கணும்.

சரியான விகிதத்தில் புரதச் சத்தைத் தெரிந்தெடுத்து சேர்த்துக்கணும்.

சர்க்கரைச் சத்து எனச் சொல்லப்படும் கார்போஹைட்ரேட்ஸில் [Carbohydrates] இருவகைகள் உண்டு. உடனடியாக [simple], [அ] சற்றுத் தாமதித்து[complex] சக்தி கொடுப்பன எனப்படும். இவற்றுள் பிந்தைய வகையை [Complex] சற்று அதிகமாகவும், மற்றதை [simple] சற்று அளவோடும் உபயோகிக்கணும். :)

கொழுப்புச்சத்துள்ள பொருள்களை [Cholestrol] அளவோடு சேர்த்துக்கணும்.

உப்பைக் [Sodium] குறைக்கணும்; கால்ஸியம், பொட்டஷியம், மங்கனீஸ் Calcium, potassium, manganese] போன்ற தாதுப்பொருட்கள் இருக்கும் உணவுவகைகளைச் சேர்த்துக்கணும்.'

"அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் டாக்டர். எப்படிச் சொல்றதுன்னு தெரியலை....." என தரையைப் பார்த்துக் கொண்டே சொன்னாள் ராதா.

"புரியுதும்மா, புரியுது! நீங்க என்ன கேக்க வறீங்கன்னு புரியுது. தாம்பத்திய உறவு [Sexual activity] வெச்சுக்கலாமா இப்ப என்பதுதானே உங்க கேள்வி? தாராளமா வெச்சுக்கலாம். ஒருமுறை உடலுறவு கொள்வது என்பது, ஒரு முறை இரண்டு மாடி எறி இறங்கும் அளவுக்கோ [Two flight of stairs] அல்லது அரை மைல் [0.8km] தூரம் சீராக நடக்கும் அளவிற்கோதான் சக்தி தேவைப்படுகிறது. எனவே, மோஹனுக்கு இது போன்ற பயிற்சிகள் போது நெஞ்சுவலி வரவில்லை என்றல், இதற்கும் வராது. ஆனால், அதே சமயம், நெஞ்சுவலிக்கான அறிகுறிகளோ, மூச்சு வாங்குதலோ, அல்லது அளவிற்கும் மீறி அசதி ஏற்பட்டாலோ உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது மிக முக்கியம்" என்றார் மருத்துவர்.


இதில் கவனத்தில் கொள்ள வேண்டியவை:

1. இருவரும் திறந்த மனத்துடன் இதை அணுகவேண்டும்.[Open minded approach]

2. நல்ல ஓய்வுக்குப் பின்னரே இதில் ஈடுபடணும்.

3. சற்று கவனத்துடனும், அன்புடனும் செயல்படணும்.

4. ஒரு சில மருந்து மாத்திரகளின் விளைவாக, ஆரம்ப கட்டத்தில் சற்று தாமதம் ஏற்படலாம். பயப்படத் தேவையில்லை. சரியான புரிதல், மற்றும் சில முன்விளையாட்டுகள்[foreplay] மூலம் இதை சரி செய்துவிடலாம்.

இதயத்தாக்குதல் மீண்டும் நிகழாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த மினி தொடரின் இறுதிப் பகுதியில் பார்க்கலாம்.

[இதில் சொல்லப்பட்டிருப்பவை ஒரு தகவலுக்கு மட்டுமே! உங்கள் மருத்துவர் முறையான வழிகளைச் சொல்லுவார்.]