"லப்-டப்" -- 23 "பொன்ஸை விரும்பும் பூமியிலே!"
"லப்-டப்" -- 23 "பொன்ஸை விரும்பும் பூமியிலே!"
எனது இனிய நண்பர் பொன்ஸ் சொன்னதைத் தொடர்ந்து இந்த "லப்-டப்" தொடரை ஆரம்பித்து, அநேகமாக முடியும் இடத்திற்கு வந்திருக்கிறது!
எனக்குத் தெரிந்த அளவில் சாதாரணமாக நமக்கு வரக்கூடிய இதய நோய்களைப் பற்றி, இதுவரை ஓரளவு சொல்லியிருக்கிறேன்.
இன்னும் ஒன்றே ஒன்று மீதமிருக்கிறது.
குழந்தைகளுக்கு வரக்கூடிய இதய நோய்களைப் பற்றி, சுருக்கமாகச் சொல்லி, இந்தத் தொடரை முடிக்க எண்ணுகிறேன்.
குழந்தைகளுக்கு வரும் இதயநோய், இருவகைப்படும்.
பிறப்பிலேயே வருவது[congenital]; பின்னர் வருவது[acquired] என.
எனவே, இதனை ஒன்றொன்றாகப் பார்ப்போம்.
பிறப்பிலேயே வருவன:[congenital]
எதெது எப்படி நிகழ வேண்டும் என்ற ஒழுங்கில்லாமல், அதது, அல்லது, ஒரு சிலது மாறுபடுவதால் ஏற்படுவன இவை!
இதயத்தின் ரத்த ஓட்டம் எப்படி நிகழ வேண்டுமோ, அப்படி நிகழாமல், கருவில் குழந்தை வளருகையில் ஏற்படும் குறைபாடுகளால் சில கோளாறுகள் நிகழ்கின்றன.
ஒரு சிறு ஓட்டையில் தொடங்கி, மொத்த இதய அமைப்பே மாறுபடும் வரை இது நிகழலாம்.
இதை இரு வகையாகப் பிரிக்கலாம்.
1. ஓட்டைகள்: [holes]
இதயத்தின் வலது, இடது பக்கங்களைப் பிரிக்கும் தடுப்புச் சுவரில் உண்டாகும் குறைபாடால், ஒரு ஓட்டை ஏற்பட்டு, சுத்த, அசுத்த ரத்தங்கள் கலக்கும் அபாயம் நிகழ்கிறது.
ஏ.எஸ்.டி.[Atrial Septal Defect]
வலது, இடது ஆரிக்கிள்களுக்கிடையே உண்டாகும் ஓட்டை இது.
பிராணவாயு[Oxygen] நிரம்பிய வலது ஆரிக்கிள், இது குறைந்த இடது ஆரிக்கிளுடன் கலக்கிறது.
பாதிக்கும்[50%] மேற்பட்ட இந்தவகை ஓட்டைகள் தானே மூடிக் கொளுகின்றன; சிகிச்சை ஏதும் இல்லாமலேயே, ஓட்டையின் அளவு சிறிதாக இருக்கையில்!
பெரிய ஓட்டைகள் அறுவை சிகிச்சையின் மூலம் சரி செய்யப்படும்.
வி.எஸ்.டி.[Ventricular Septal Defect]
வலது, இடது வெண்ட்ரிக்கிளுக்கிடையில் உண்டாகும் ஓட்டை இது.
மேலே சொன்னதற்கு எதிர்மாறாய், சுத்த ரத்தம் இப்போது இடத்திலிருந்து, வலதுக்குச் செல்லுகிறது.
சிறிய ஓட்டைகள் பெரிதான விளைவுகளை ஏற்படுத்துவதில்லை.
ஆனால், பெரிய ஓட்டையால், இரு பகுதி ரத்தங்களும் கலப்பதால், ரத்த அழுத்தம் அதிகமாகி, நுரையீரலும் இதனால் பாதிக்கப்பட்டு, மோசமான விளைவுகள் ஏற்படுகின்றன.
2. வால்வுகளினால் ஏற்படும் பாதிப்புகள்: [Valvular disease]
ஆரிக்கிளில் இருந்து வெண்ட்ரிக்கிளுக்குச் செல்லும் வழியில் இருக்கும் வால்வுகளில் ஏற்படும் குறைபாடுகளால், நிகழ்வன.
ஸ்டினோஸிஸ்:[Stenosis] முழு அடைப்பு:
முழுதுமாக திறக்காமல் போதல். வழக்கத்தை விடவும் அதிக வேகத்துடன் இதயம் செயல்பட்டு இந்த வால்வைத் திறக்க செயல்படுகிறது.
அட்ரீஸியா[Atresia] குறையான வால்வ் :
பிறப்புக் குறைபாடால்[Birth defects], வால்வின் அளவு குறைந்து உருவாகிறது.
ரத்தம் செல்ல வழியில்லை இப்போது!
ரீகர்ஜிடேஷன்:[Regurgitation] மேலும், கீழும் செல்லுதல்:
வால்வ் சரியாகச் செயல்படாமல், ரத்தம் இருவழியாகவும், மேலும், கீழுமாக,இருபக்கமும் செல்லுகிறது.
இது எல்லா வால்வுகளும் நிகழலாமென்றாலும், பல்மோனரி வால்வில்[] நிகழுகையில், விளைவுகள் அதிகமாயிருக்கும்.
இப்போது மிகவும் அதிகமாய் நிகழும் ஒரு குறைபாடைப் பார்க்கலாம்.
டெட்ராலஜி ஆஃப் ஃபால்லட்[Tetrology of Fallot]
4 வித குறைபாடுகள் இதில் நிகழ்கின்றன.
பல்மோனரி வால்வ் அடைப்பு[Pulmonary valve Stenosis ]
அளவில் பெரிய வி.எஸ்.டி.[VSD]
இடது பக்கமே இருக்க வேண்டிய அயோர்ட்டா எனும் மஹாதமனி, வலது, இடது வெண்ட்ரிக்கிளின் மேல் அமைவது.[Over riding of the Aorta]
வலது வெண்ட்ரிக்கிள் வீக்கம்[Right Ventricular Hypertrophy]
இவற்றால், தேவையான அளவு ரத்தம், நுரையீரலில் இருந்து பிராணவாயுவை எடுக்க முடியாமல் போகிறது; இதனால் சக்தி குறைந்த ரத்தம் தொடர்ந்து உடலின் பல பாகங்களுக்கும் அனுப்பப்படுகிறது.
குழந்தை நீல நிறமாகிறது!
நீலக்குழந்தை[Blue Baby Syndrome] என்பது இதுவே!
இது உடனடியாக அறுவைசிகிச்சை மூலம் சரி செய்யப்பட வேண்டிய ஒன்று.
நிலைமையின் தீவிரத்தைப் பொருத்து, பிறந்த உடனேயேவோ, அல்லது சிறிது நாட்கள் கழித்தோ இது செய்யப்படாவிடில், உயிருக்கு ஆபத்து ஏற்படும்.
அறுவை சிகிச்சைக்குப் பின்னும், வாழ்நாள் முழுதும் மருந்து, மாத்திரைகள் சாப்பிடவும் வேண்டும்.
பெற்றோர்கள் இதற்கு தாமே பொறுப்பு என மனக்கவலை அடையக்கூடும்!
இவர்கள் செய்ய வேண்டியதென்ன?
இதை எப்படி கண்டு பிடிக்கலாம்?
இறுதிப் பதிவில் பார்க்கலாம்.