"கசடற"

அறிவியல் தொடர்பான எனக்குத் தெரிந்த தகவல்களை, ஒரு மருத்துவன் எனும் பார்வையில் சொல்ல விழைகிறேன். முழுக்க முழுக்க இவை என் கருத்துகள் மட்டுமே! முருகனருள் முன்னிற்கும்!

Monday, April 21, 2008

"எய்ட்ஸுக்கே உதவியா?!!" -- [9]

"எய்ட்ஸுக்கே உதவியா?!!" -- [9]




8-ம் பதிவு இங்கே

"இந்த தடுப்பு சாதனம், தடுப்பு சாதனம்னு சொல்றியே! அதெல்லாம் என்ன? எப்படி உபயோகிப்பது?ன்னு கொஞ்சம் சொல்றியா?" என்றான் மூர்த்தி.

'உடலுறவு கொள்ளும் போது, ஆணுறுப்பு விரைத்தவுடன், உடனே ஒரு ஆணுறை அணிவது அவசியம். இதை 'லேடெக்ஸ் காண்டம்'னு [Latex Condom] சொல்லுவாங்க.



பெண்ணுறுப்பு, ஆசனவாய், அல்லது வாய்வழி எந்த வழியில் உறவு கொள்ளுவதுன்னாலும் இதை அணிய வேண்டியது மிகவும் அவசியம், இந்த கிருமி பரவாமல் இருக்க வேண்டுமானால்......... அதாவது இது இருக்குமோ என சந்தேகிக்கும் ஒருவரிடம் மட்டுமே!

இந்தக் காண்டம் [ஆணுறை] கிழிந்துவிட்டது எனத் தெரிந்தால் உடனே உடலுறவைத் தொடராமல், புது ஆணுறை [காண்டம்] அணிந்த பின்னரே மீண்டும் இதில் ஈடுபட வேண்டும். இதைக் கவனத்தில் கொள்ளவும்.

விந்து வெளியேறியதும், மேற்கொண்டு தொடராமல், உடனே வெளியில் எடுத்து, சுத்தம் செய்து கொள்ளவும்..... இருவரும்!

ஒரு முறை உபயோகித்த உறையை மீண்டும் உபயோகிக்க வேண்டாம்! '

"ஓரினச் சேர்க்கையாளர்கள்தான்[Homosexuals] இந்த நோயை அதிகம் பெறுகிறார்கள் என்ற கருத்து ரொம்பவே அதிகமா இருக்கே... ... அது பத்தி என்ன சொல்றே நீ?' என்றான் சுகுமார்.

'நானும் படிச்சேன்! அதனாலத்தான் இதைப் பத்தி எழுதணும்னே தோணிச்சு. இப்ப சொல்றதை நல்லாக் கேட்டுக்க!


ஹெச்.ஐ.வி. கிருமி [HIV virus] நீ யாரு என்னன்னு பிரிச்சுப் பார்க்கிறதே இல்லை!

நீ பொண்ணுங்களோட மட்டும்தான் உறவு வைச்சிருக்கியா, இல்லை... ஆண், பெண் இப்படி ரெண்டு பேரோடயும் உறவு வைச்சிருக்கியா, இல்லை நீ ஓரினச் சேர்க்கை மட்டுமே வைச்சிருக்கியான்னு பேதம் பாக்கறதில்லை.

நீ என்ன பண்றேங்கறதை மட்டுமே பாக்குது!

தகாத முறையில் உறவு கொண்டால் இது வந்தே தீரும்.

ஓரினச் சேர்க்கையாளர்கள் இந்த முறையில் சற்று கவனக்குறைவாக இருப்பதால், [ஆசனவழி, வாய்வழி உறவே ஆண்களிடம் அதிகம்; பெண்கள் தவறான சாதனங்களைப் பயன்படுத்துவதால்] இது அவர்களிடம் அதிகமாகக் காணப் படுகிறது என்பது மட்டுமே உண்மை!

ஆனா, இப்பல்லாம் அவங்க கூட இதுல ரொம்ப விழிப்பா இருக்காங்க!

இது வரணும்னு யார் விரும்புவாங்க சொல்லு!

அதனால, இவங்களை மட்டுமே இதுக்கு காரணம்னு குறை சொல்றதை இத்தோட விடு! சரியா?'

"எல்லாம் சரிதாம்ப்பா! எல்லாம் விளக்கமா சொல்லிட்டே! இப்ப சில சந்தேகம் கேக்கப் போறேன்! அதுக்கும் பதில் சொல்லிடு! நான் ஒரு தெளிவோட போயிருவேன்" என்று வெள்ளந்தியாகச் சிரித்தான் சுகுமார்!

'சரி கேளு!' என்றேன்!

"ஒரு ஆளைப் பார்த்தவுடனேயே இவருக்கு எய்ட்ஸ் வந்திருக்குன்னு சொல்ல முடியுமா?"

முடியாது! இந்தக் கிருமியால் தாக்கப்பட்டபின், சோதனை செய்து உறுதிப்படுத்திக்கொள்ளாத, சிகிச்சை எடுக்காத ஒருவருக்குக் கூட இது சில ஆண்டுகள் கழித்தே தெரியவரும். சிகிச்சையை உடனேயே தொடங்கியவர்கள் பல ஆண்டுகளுக்கு இதைத் தள்ளிப் போட முடியும்!

"போதை மருந்து ஊசிகள் மூலம் இது வரும்னு சொல்ல முடியுமா?"

'இல்லை. ஆனால், போதை அளிக்கக் கூடிய எந்த ஒரு விஷயமுமே ஒருவருடைய முடிவெடுக்கும் தன்மையை பாதிப்பதால், இதற்கு அடிமையானவர்கள் பெரும்பாலும் தவறான செயலில் ஈடுபட அதிக வாய்ப்பிருப்பதால், இது அவர்களைத் தாக்கவும் செய்கிறது எனச் சொல்லலாம்!

"இதுக்குத் தடுப்பு ஊசில்லாம் வந்திருக்காமே?"

'இதுக்கான ஆராய்ச்சி எல்லாம் நடந்துகிட்டு இருக்கு. ஆனல், இது வரைக்கும் இதைத் தடுக்க எந்தவொரு மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. தடுப்பு சாதனங்களை உபயோகிப்பது ஒன்றே இதைத் தடுக்கும் வழி. இதைத் தவிர இன்னும் பல வழிகளிலும் பரிசோதனைகளும், ஆராய்ச்சிகளும் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால், இவை எதுவும் முழுமையான பலன் அளிக்குதுன்னு இன்னும் உறுதியாச் சொல்ல முடியலை என்பதே உண்மை!'


"அப்போ இந்த மருந்து, மாத்திரையெல்லாம் ...... எதுக்காக சாப்பிடணும்? எப்படியும் வரத்தான் போகுதுன்ற! இதைச் சாப்பிடாட்டித்தான் என்ன ஆயிரும்?' கொஞ்சம் விரக்தியாகக் கேட்டான் மூர்த்தி

"இவ்ளோ நேரம் உங்கிட்ட சொன்னது எதுவுமே ஏறலியா உனக்கு! ஓ! நீ இப்பத்தான் வந்தே இல்ல? ஆரம்ப நிலையில் இந்த நோயைக் கண்டுபிடிச்சா, இந்த மருந்து மாத்திரைங்க மூலமா இதைக் கொஞ்சம் தள்ளிப் போட முடியும்னு சங்கர் சொன்னான். சரிதானேடா நான் சொல்றது!' என ஆர்வமாகக் கேட்டான் சுகுமார்!

'ரொம்பச் சரி! இன்னும் என்னல்லாம் தெரிஞ்சுகிட்டே சொல்லு பார்ப்போம்! ' என அவனைத் தூண்டினேன்!

"ரொம்பவே விளக்கமா சொல்லிட்டேப்பா! இனிமே யார் கேட்டாலும் இதைப் பத்தி நானும் உன்னைப் போலவே சொல்ல முடியும்!


முறையில்லாத உறவால இது வருது.

தடுப்பு சாதனங்களை உபயோகிச்சு இதைத் தடுக்க முடியும்.

வந்துருக்கான்னு தெரிஞ்சுக்க, ஒரு ரெண்டு மூணு தடவை சோதனை பண்ணிக்கணும்.

வந்திருச்சுன்னா, முறையா மருந்து மாத்திரை சாப்பிடணும்.

போதை மருந்தால இது வர்றதுக்கான வாய்ப்பு அதிகம்.

ஓரினச் சேர்க்கையாளர்கள்தான் இதுக்குக் காரணங்கிறது ரொம்பத் தப்பு!

ஒன்றுக்கும் மேற்பட்ட உறவு வைச்சுக்கிறதுல கவனமா இருக்கணும்! சரிதானா! இல்லை, எதுனாச்சும் விட்டுட்டேனா? " எனச் சொல்லிவிட்டு, என்னைப் பெருமையாகப் பார்த்தான் சுகுமார்!

'அவ்ளோதான்! இது தெரிஞ்சாலே போதும்!' என அவனைப் பாராட்டினேன்!

'சரி, வீட்டுல இன்னிக்கு என்ன சமையல்? ரொம்பப் பசிக்குது!" என்றான் சுகுமார்!

"சந்திரா! சாப்பாடு ரெடியா! கேள்வியெல்லாம் முடிச்சாச்சு!! என்றேன்!

"எல்லாம் எப்பவோ ரெடி! உபயோகமா பேசிக்கிட்டு இருக்கீங்களேன்னுதான் தொந்தரவு பண்ணலை! வந்து உட்காருங்க மூணு பேரும்." என உள்ளிருந்து குரல் வந்தது!

***********************************
[முற்றும்!]



Labels: , ,

Tuesday, April 15, 2008

"எய்ட்ஸுக்கே உதவியா?!!" [8]

"எய்ட்ஸுக்கே உதவியா?!!" [8]



7-ம் பதிவு இங்கே!

"என்ன? பேசறதெல்லாம் பேசி முடிச்சாச்சா? இங்க பாருங்க யாரு வந்திருக்காங்கன்னு!" என எங்களை வரவேற்றார் என் மனைவி!

அங்கே மூர்த்தி ! எனது இன்னொரு உயிர் நண்பன்!

""அடடே! வாடா! எப்ப வந்தே! நல்ல வேளை நீ வந்து காப்பாத்தினே! ஒரே கேள்வியா கேட்டு அறுக்கறான் இந்த சுகு! காப்பாத்துறா என்னை" என அலறினேன்!

"என்னவாம்!" என அக்கறையாய் வினவினான் சிரித்த முகத்துடன் மூர்த்தி!

"அது ஒண்ணுமில்லேடா! இந்த எய்ட்ஸ் பத்தி சில கேள்விங்க கேட்டுகிட்டிருந்தேன்! சில வில்லங்கமான கேள்வியும் கேட்டேன்னு வைச்சுக்கோயேன்! அதுக்குத்தான் இப்படி சொல்றான்!" என்று வெள்ளந்தியாகச் சிரித்தான் சுகு!

"அட! இது நல்ல விஷயந்தானே! நீ கேள்றா!" எனத் தூண்டிவிட்டான் மூர்த்தி!

"அடப்பாவி! நீயுமாடா!" என மீண்டும் அலறினேன்!

"சரி! சரி! நீ கேளு சுகு! அப்பப்ப நானும் கேக்கறேன்!" என்றான் மூர்த்தி!

சுகுமார் தொடர்ந்தான்.

"இந்த நோய் வந்திருக்குன்னு எப்ப தெரியும்? உடனேவா?"

"இதுவரைக்கும் சொன்னதை சரியாக் கேட்டேதானே நீ? இந்தக் கிருமி ஒரு எதிர்ப்பு அணுவைப் போய் தாக்கி சிறை பிடிக்குது. அதுலேர்ந்து தன்னை பல மடங்கா பெருக்கி இன்னும் இது மாதிரியான அணுக்களை எல்லாம் தாக்குது. இப்ப இதோட ஆதிக்கம் அதிகமாகிப் போறதால, இது தன்னை வெளிக்காட்டிக்க முடியுது! இதுக்கெல்லாம் ஒரு 3 முதல் 6 மாதம் பிடிக்கும்! இதைத்தான் 'விண்டோ பீரியட்'னு மங்கை சொன்னாங்க! இது வந்திரிச்சோன்னு ஒரு பயம் வந்ததும் போய் சோதனை பண்ணி, இது இல்லைன்னு தெரிஞ்சாலும், உடனே சந்தோஷப்படாமல், ஒரு 3 மாசம் கழிச்சு மறுபடியும் சோதனை செஞ்சுக்கணும். அப்பவும் இல்லேன்னாத்தான் கொஞ்சம் நிம்மதி ஆகலாம். கொஞ்சம்தான்!

சந்தேகத்துக்கு சாம்பார் மாதிரி ஒரு 6 மாசத்துக்கு அப்புறமும் இன்னொரு சோதனை பண்ணிக்கறது நல்லது!
இன்னொண்ணு! இந்த சமயத்துல, வேறெந்த தப்புத்தண்டாவும் பண்ணாமலும் இருக்கனும்! இது ரொம்ப முக்கியம்!"


"சரி! இது வந்திரிச்சுன்னு தெரிஞ்சிருச்சு!தெரிஞ்சதும் முதல்ல என்ன செய்யணும்?" என்றான் மூர்த்தி பதட்டமாக!

"ம்ம்! நீயும் இதுல வந்திட்டியா! சரி கேளு!
உடனடியா இந்த நோயைப் பத்தி நல்லாத் தெரிஞ்ச, இதுலியே சிறப்புத்தகுதி பெற்ற ஒரு மருத்துவரை நாடி இதற்கான சிகிச்சையை மேற்கொள்வது மட்டுமே, 'எய்ட்ஸ்' வருவதைத் தள்ளிப்போட...ஆமாம்... தள்ளிப்போட மட்டுமே... உதவும். இது கொஞ்சம் பயமுறுத்தற மாதிரி இருந்தாலும், முறையான சிகிச்சை, தீய பழக்கங்களை [பலருடனும் முறையற்ற உறவு, புகை பிடித்தல், அதிகமாக மது அருந்துதல், போதை மருந்துகளை எடுத்துக் கொள்ளுதல்] விடுதல் போன்றவை ஒருவரது வாழ்நாளை நீட்டித்து, 'எய்ட்ஸ்' வராமலே வாழ்வை நல்லபடியா முடிக்கவும் வாய்ப்பிருக்கிறது!! எனவே, இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்."

"தண்ணி அடிக்கலை. புகை பிடிக்கலை. போதை மருந்தே சாப்பிட்டதில்லை. ஓரினச்சேர்க்கை இல்லாம பொண்ணுங்களோட மட்டுமே உடலுறவு, இது மாதிரி ஆளுக்கு இந்த நோய் வராதுதானே!" என்றான் சுகுமார்.

"எல்லாம் சரிதான் சாமி! ஆனா, ஒரு விஷயம் மட்டும் உதைக்குதே! ஒரே பொண்ணோட மட்டுமில்லாம பல பொண்ணுங்களோட உறவு வைச்ச மாதிரி இருக்கே இந்த கேஸ்! இதுல எவருக்காவது இந்த நோய் இருந்தால் இது வர வாய்ப்பு இருக்கிறது. இன்னொண்ணும் சொல்றேன். ஒரே பொண்ணு அல்லது ஆண் கூட மட்டுமே ஒருத்தர் உறவு வைச்சிருந்தாலும் அந்த அடுத்த ஆளு சுத்தமா இல்லேன்னா, அவருக்கு இந்த நோய் வேறு எவர் மூலமாவது வந்திருந்தால், மற்றவருக்கும் இது வரக் கூடும்! ஹெச்.ஐ.வி. இதில் பாரபட்சமே காட்டுவதில்லை! இதுதான் உண்மை!!

"ரத்ததானம் மூலமா இது பரவும்தானே! ரத்தமும் ரத்தமும் கலக்குதே" என அப்பாவியாகக் கேட்டான் மூர்த்தி!

"நீ கேக்கறது சரிதான்! முன்னெல்லாம் இது இப்படியும் வந்ததா நிகழ்வெல்லாம் இருக்கு! ஆனா, இப்ப இது பற்றிய விழிப்புணர்ச்சி வந்திருப்பதாலும், ஒவ்வொரு முறை ரத்தம் எடுக்கும் போதும், ரத்தம் கொடுக்கும் போதும் சுத்திகரிக்கப்பட்ட ஊசிகளையே பயன்படுத்துவதாலும், இந்த நோய் வர வாய்ப்பே இல்லை! மேலும், இப்போதெல்லாம், இந்த நோய் இருக்கிறதா என முறையாகப் பரிசோதிக்கப்பட்ட பின்னரே ஒருவரின் ரத்தம் மற்றவருக்கு அளிக்கப்படுவதாலும், இது பெரும்பாலும் தவிர்க்கப்படுகிறது!

"கருத்தடை மாத்திரைகளை உபயோகிப்பதின் மூலம் இதைத் தவிர்க்கலாம் என ஒரு கருத்து இருக்கே!"

"தவறான கருத்து! கருத்தரிப்பதை மட்டுமே இது தவிர்க்கும்! திரும்பத் திரும்ப இதையே சொல்ல போரடிக்குது! பச்சப்புள்ள வேற திட்றாரு! இருந்தாலும் மீண்டும் ஒருமுறை சொல்றேன்! இந்த நோய் வராமல் தடுக்க, முறையற்ற உடலுறவைத் தவிர்ப்பது, இந்த நோயால் தாக்கப்படாத ஒருவருடன் மட்டுமே உறவு கொள்வது, ஊசிகளைப் பரிமாறிக் கொள்ளாமல் இருப்பது, இவை மட்டுமே! முறையான தடுப்பு சாதனங்கள் உபயோகித்து இதைத் தவிர்க்க முடியும்! அதில் இந்த கருத்தடை மாத்திரைகள் அடங்காது!:))" என்றேன்!

"என்ன கோல் போட்டாலும் தடுக்கிறியேடா!" எனச் சொல்லிச் சிரித்தான் சுகுமார்!



[தொடரும்!]



Labels: , ,

Tuesday, April 08, 2008

"எய்ட்ஸுக்கே உதவியா!! " -- [7]

"எய்ட்ஸுக்கே உதவியா!! " -- [7]


"இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரைத் தொடுவதாலோ, அவருடன் கை குலுக்குவதாலோ, அவர் உபயோகிக்கும் கழிப்பறையைத் தானும் பயன்படுத்துவதாலோ, அவர் எச்சில் பண்ணி குடித்த கோப்பையை உபயோகிப்பதாலோ, அவரது தும்மல், இருமல் நம் மீது படுவதாலோ இது வரலாம் தானே! சரிதானே நான் சொல்றது!" என்றான் சுகுமார்!

'முற்றிலும் தவறு! ரொம்ப ரொம்ப தப்பு நீ சொல்றது! நீ சொல்லியிருக்கும் எந்த முறையாலும் ஹெச்.ஐ.வி பரவாது! காற்று மூலமாகவோ, உணவின் மூலமாகவோ பரவும் நோயல்ல இது. இது போன்ற சந்தர்ப்பங்களில், அவரது ரத்தம், உனது ரத்தத்தோடு எந்த வகையிலாவது கலந்தால் மட்டுமே இது தொற்றிக் கொள்ளும்! என்னடா, திருப்பித் திருப்பி இதையே சொல்கிறேனே என எண்ண வேண்டாம். இதை நன்றாக மனதில் உள் வாங்கிக் கொள்ளு!'

திடீரென சுகுமார் முகத்தில் ஒரு ஒளி தெரிந்தது!

" இவ்ளோ நேரம் நீ சொன்னதெல்லாம் சரி! இப்ப உன்னை மடக்கறேன் பாரு! கொசு ஒண்ணு இந்த நோய் இருக்கற ஆளைக் கடிக்குது. அப்பிடியே பறந்து போயி இன்னொரு ஆளைக் கடிக்குது. அவனுக்கு இந்த நோய் இல்லை! இப்ப ரத்தமும் ரத்தமும் கலக்குது! இந்த ஆளு ஒடம்புலியும் அது துளை போடுது. இவனுக்கும் அந்த நோய் வரும்தானே!" எனக் கேட்டு காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு சிரித்தான்.

" ரொம்பவே புத்திசாலித்தனமான கேள்விதான் கேட்டிருக்கே! அதுக்காக உன்னைப் பாராட்டியே ஆகணும் சுகு! ஆனால் நான் சொல்லப் போறது உனக்கு அதிர்ச்சியாத்தான் .... இல்லை இல்லை!... மகிழ்ச்சியாத்தான் இருக்கும்!
கொசு கடிக்கறதால ஹெச்.ஐ.வி. வராது!

நீ சொல்ற மாதிரி, இந்த நோய் இருக்கற ஆளை ஒரு கடிச்சு, அந்தக் கிருமியை தன்னோட ரத்தத்துல எடுத்துக்குதுன்னு வைச்சுப்போம். ஹெச்.ஐ.வி. கிருமி ரொம்ப நேரம் உயிரோட இருக்கறதில்லை இங்கே! முன்னேயே சொன்ன மாதிரி ஒரு 20 நிமிஷம்தான்!

அத்தோட, கொசு உன்னைக் கடிக்கறப்ப, தன்னோட ரத்தத்தை அனுப்புறதில்லை! வாயில் இருந்து தன்னுடைய எச்சிலைத்தான் கடிக்கற இடத்துல துப்பி, ரத்தம் உறிஞ்ச ஒரு தோதான இடத்தை அமைக்குது! இதுல ஏற்கெனவே ரத்தத்தில் இருக்கிற கிருமி வர வாய்ப்பில்லை.

இன்னும் சொல்லப் போனா, ஹெச்.ஐ.வி. கிருமி, பூச்சிகளோட உடம்புல தன்னைப் பெருக்கிக் கொள்வதுமில்லை. அதிக நேரம் உயிர் வாழ்வதும் இல்லை! இதுக்கெல்லாம் மேல ஒரு பெரிய காரணம், ஒருத்தரைக் கடிச்சதும் கொசு உடனே அடுத்த ஆளை நோக்கிப் போறதில்லை! கொஞ்ச நேரம் ஒரு இடத்துல போய் உட்கார்ந்து, குடிச்ச ரத்தத்தை ஜீரணம் பண்ணிட்டு, அப்புறமாத்தான் அடுத்த ஆள்கிட்ட போகும். இதுக்கு கொஞ்ச நேரம் பிடிக்கும். அதுவரைக்கும் ஒரு கொசுவோட ரத்தத்தில் இந்தக் கிருமி உயிர் வாழாது! எனவே பயம் வேண்டாம்.... ஹெச். ஐ.வி. வருமோ என! ஆனா, மலேரியா,[MALARIA] மஞ்சள் ஜுரம்[JAUNDICE] போன்ற நோய்கள் பரவலாம்! ஏனெனில் இவை எச்சிலின் மூலம் வரும் நோய்கள்!

"சரிப்பா! ரொம்பவே சொல்லிட்டே! இப்ப இது வந்திருக்கா இல்லியான்னு எங்கே போய் தெரிஞ்சுக்க முடியும்!?"

'உன் குடும்ப டாக்டர்கிட்ட.... [அதான் என்கிட்ட!]... போய் கேளு! அவரே சொல்லுவார்! அவர்கிட்டேயே இதை டெஸ்ட் பண்ற வசதியும் இருக்கலாம். இல்லேன்னா எங்கே போய் பரிசோதிக்க முடியும்னு அவர் சொல்லுவார். அவர் கிட்ட போக வெக்கமா இருந்தா, எந்த ஒரு அரசு மருத்துவ மனையிலும் போய் டெஸ்ட் பண்ணிக்கலாம். ரொம்ப அவசரம்னா ஒரு 30 நிமிஷத்துலியே தெரிஞ்சுக்கலாம். நிச்சயமா தெரிஞ்சுக்கணும்னா முறையான சோதனை முடிவு தெரிய 1-2 வாரம் பிடிக்கும். "எலிசா"[ELISA], வெஸ்டெர்ன் ப்ளாட்"[WESTERN BLOT] என்கிற இரண்டு ரத்தப் பரிசோதனைகள் மூலம் இதை உறுதிப் படுத்த முடியும். இவை இரண்டையும் செய்த பின்னரே இந்த நோய் வந்திருக்கிறது எனச் சொல்ல முடியும்.

"தனக்கு இந்த நோய் இருக்கா இல்லியான்னு எத்தனை நாளுக்குள்ள இதை ஒரு ஆளு தெரிஞ்சுக்க முடியும்?"

'சாதாரணமா இந்தக் கிருமி ஒரு ஆளுக்குள்ள வந்தால், உடம்பு அதை எதிர்த்து போராட ஆரம்பிக்கும். இது பொதுவா எல்லா நோய்க்கு எதிராகவும் நடக்கறதுதான்!

ஹெச்.ஐ.வி.க்கு எதிரான தடுப்புசக்தி ஒன்று முதல் ஆறு மாதத்துக்குள்ள தெரிய ஆரம்பிக்கும். இந்த சமயத்துல இதை வைச்சு இந்த நோய் வந்திருக்கா இல்லையான்னு கண்டுபிடிக்க முடியும்.' என்றேன்

[தொடரும்]

Labels: ,

Sunday, April 06, 2008

"எய்ட்ஸுக்கே உதவியா!! " -- [6]

"எய்ட்ஸுக்கே உதவியா!! " -- [6]

"சரி! வெளியே வந்தது தப்புன்னு நினைக்கிறேன்! வா! திரும்பி நடப்போம்!" எனச் சொல்லித் திரும்பினான் சுகுமார்.

"இன்னும் எதுனாச்சும் கேக்கணும்னா கேளு!' எனத் தூண்டினேன்!

"ஒரே ஒரு கேள்விதான்! ரத்தம் மூலமா, விந்து மூலமா இது பரவுதுன்னு சொன்னே!"

'ஆமாம்!'

"எவ்ளோ ரத்தம் அல்லது விந்து இன்னொருத்தர் உடல்ல கலக்கணும், இந்த நோய் வர்றதுக்கு? அப்படிக் கலந்தது எவ்ளோ நேரம் இது உயிரோட இருக்கும் ஒரு நோயா ஆகறதுக்கு! இதான் என் கேள்வி!"

'இந்த ஹெச்-ஐ.வி. நுண்கிருமி ஒரு துளி ரத்தத்தில் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன! இவை ரத்தத்தில் கலக்க ஒரு சில நொடிகளே போதும்! அப்படிக் கலந்த இந்தக் கிருமி ஒரு எதிர்ப்புகளைத் தடுக்கும் 'செல்'லை உடனே சென்றடையுது! அந்த நொடியில் இருந்தே இது தன்னைப் பல மடங்காக்கும் ஒரு தொழிற்சாலையாக இந்த 'செல்'லை மாற்ற ஆரம்பிக்கிறது. இதைத்தவிர, இன்னொரு பயமுறுத்தும் செய்தையையும் சொல்லிடறேன்! இந்தக் நுண்கிருமி 20 நிமிடங்களுக்கு மட்டுமே உயிரோடிருக்கும்! அதறகுள், இது அடுத்தவர் ரத்தத்துடன் கலக்க வேண்டும்! 20 நிமிடம் என்பது அதிக நேரம்... அதே சமயம் குறைந்த நேரமும் கூட!'

"என்னடா! கதி கலங்க வைக்கறே! அதே சமயம் ஒரு நல்ல சேதியும் சொல்றே! இன்னும் கொஞ்சம் விளக்கமாச் சொல்லேன்" எனக் கெஞ்சினான் சுகுமார்!

" பயப்பட ஒண்ணும் தேவையே இல்லை, உன் உடம்புல ஒரு கீறலும் இல்லேன்னா! ஒரு நோயாலியின் ரத்தம் உன் உடம்பில் பட்டுவிட்டதென்றால், உன் உடலில் ஒரு கீறலோடும் அது சம்பந்தப் படவில்லை என்றால், உடனே கழுவி விட்டால்.... ஒரு 20 நிமிடத்துக்குள் ... உனக்கு இந்த நோய் வரவே வராது! ஆனால், இதையே விந்து பற்றிச் சொல்ல முடியாது..... பாதுகாப்புச் சாதனக்கள் உபயோகிக்க வில்லைன்னா! அதனால, முறையான தடுப்பு சாதனங்கள் உபயோகிக்கலைன்னா, இதைத் த்டுப்பது ரொம்பவே கஷ்டம்னு மீண்டும் சொல்லிக்கறேன்! இதைப் புரிஞ்சு நடந்துகிட்டா எல்லாருக்கும் நல்லது! சரி வா! வீட்டுக்குப் போகலாம்' என்றேன்.

நடந்துகொண்டே பேசிக்கொண்டேயும் போனோம்!

"பச்சை குத்திக்கறதால கூட ஹெச்.ஐ.வி. வருமாடா" ?

'ஊசி மருந்துக்குச் சொன்ன அதே பதில்தான் இதுக்கும்! சரியாக சுத்திகரிக்கப்படாத, அல்லது முந்தைய ரத்தத்தில் தோய்க்கப்பட்ட உச்சிமுனைகளால் பச்சை குத்திக் கொண்டால், அப்படிப்பட்ட ஊசி இந்த நோய் இருந்த எவருக்காவது உபயோகப்படப்பட்டிருந்தால், ஹெச்.ஐ.வி. பரவ வாய்ப்பு இருக்கிறது. இதில் கவனமாயிருந்தால், பயப்படத் தேவையில்லை!'

"அப்படீன்னா, இது போன்ற எந்த தீய பழக்கங்களும் இல்லாமலே, மருத்துவத்துறையில் வேலை செய்யற சிலருக்கு இந்த நோய் வருகிறதே! என்ன காரணம்?"

'கவனக்குறைவுதான்! இங்கு அடிக்கடி வலியுறுத்தி வரும் ஒரே கருத்து இதுதான்! ஹெச்.ஐ.வி கிருமி பாதிக்கப்பட்டவரிடமிருந்து, ரத்தம், ஊசி, உடலில் சுரக்கும் நீர் இவற்றின் வழியாக மட்டுமே பரவும்..... எவராயிருந்தாலும்! சுத்திகரிக்கப்படாத இந்த முறைகளை ஒரு சிலர் அஜாக்கிரதையாக மருத்துவ மனைகளிலும் பயன்படுத்தும் போது, இவர்களுக்கு வரும் ஆபத்து இருக்கிறது. ஆனால், மற்றவர்களை விட, இவர்களுக்கு இது பற்றிய அறிவும், தடுப்பு முறைகளும் அதிகமாகவே இருப்பதால், இப்படி வரும் வாய்ப்பு மிகவும் அரிதே!'

"ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டு விளையாடும் கபடி, கூடைப்பந்து போன்ற விளையாட்டில் ஈடுபடுபவர்களுக்கு?"

'பொதுவாக இதன் மூலம் ஹெச்-ஐ.வி- வர வாய்ப்பே இல்லை! எவருக்கவது அடிபட்டு, ரத்தம் வெளியாகும் நிலை இருந்தால், அவர் உடனடியாக அகற்றப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு, ரத்தப்போக்கு நின்றவுடன் மீண்டும் விளையாட்டில் கலந்து கொள்ளலாம். அவருக்கு ரத்தம் வருவதோடு கூட, கூட விளையாடுபவருக்கும் ஏதெனும் வெளிக்காயங்கள் இருந்து, அந்த ரத்தம் இதன் வழியே கலந்தால் மட்டுமே இது பரவலாம்! அப்படி இல்லேன்னா பயப்படத் தேவையில்லை!'
[தொடரும்]

Labels: ,

Thursday, April 03, 2008

"எய்ட்ஸுக்கே உதவியா!! " -- [5]

"எய்ட்ஸுக்கே உதவியா!!" -- [5]



தோள் மீது கை போட்டுக் கொண்டே இருவரும் நடந்தோம்.

"இப்படி உட்கார்ந்து பேசலாமா? மறந்துட்டேன்னு நினைக்காதே! இன்னும் சில கேள்விகள் இருக்கு. அண்ணி காதுபடப் பேச கூச்சமா இருந்தது. அதான் வெளியே போகலாமான்னு கேட்டேன்!" என்றான் சுகுமார்.

'எனக்குத் தெரியுண்டா! என்னாலியும் மனம்விட்டு சொல்ல முடியுமேன்னுதான் நானும் சட்டுன்னு கிளம்பிட்டேன். ம்ம்ம்... கேளு!' என்றேன்.

"அப்படீன்னா, இதோ முதல் கேள்வி! பாதுகாப்பு உறை அணிந்து உடலுறவு கொண்டால் இது வரவே வராது எனச் சொல்லலாமா?"

'இல்லை! இதுவும் ஒரு தவறான கருத்து. இது முழுக்க முழுக்க 100% பாதுகாப்பானது எனச் சொல்ல முடியாது. கிழிந்து போதல், கசிவு, சரியான முறையில் பயன்படுத்தாமல் போதல் போன்ற பல காரணங்களால், இது கொடுக்க வேண்டிய பாதுகாப்பைக் கொடுக்காமல் போக வாய்ப்பிருக்கிறது. பொதுவாக 98% பாதுகாப்பை இதை முறையாக, சரியாகப் பயன்படுத்துவதன் மூலம், பெறலாம். உணர்ச்சி வேகத்தில், சில சமயம் இது கிழிந்து போனது கூட தெரியாமல், அல்லது அலட்சியம் காரணமாக, உடலுறவு தொடர்ந்து, இந்த நோயைப் பெற வாய்ப்பிருக்கிறது.

ஆணுறுப்பும், பெண்ணுறுப்பும் இணைந்து செய்கின்ற முறையான உடலுறவை, பாதுகாப்பு சாதனங்கள் துணையுடன், இந்த நோய் இல்லாத இருவர் தங்களுக்குள் மட்டுமே, வேறெந்த முறையற்ற வழிகளின் மூலம் அல்லாது, உடலுறவு கொள்வதே, இந்த நோய் வராமல் தடுக்கக் கூடிய ஒரே வழி என்பதைப் புரிந்து கொள்ளு!
!
பொது இடங்களில் கிடைக்கும் அறிமுகமில்லாதவரிடம் உடலுறவு கொள்வதையும், பாலியல் தொழிலாளரிடம் செல்வதையும் தவிர்க்கவும். அப்படிச் செல்வதாயிருந்தால், கண்டிப்பாக ஆணுறை,அல்லது காண்டம் அணியாமல் உடலுறவு கொள்ளக் கூடாது!

"சரி! ரொம்ப உணர்ச்சிவசப்படாதே! இந்த போதை மருந்துகளை உபயோகப்படுத்தறவங்க பத்தி சில கேள்விகள்!" என ஆரம்பித்தவனை உடனே நிறுத்தி,

'போதை மருந்துக்கு அடிமையானவர்கள், அடுத்தவர் உபயோகித்த ஒரே ஊசியைப் பயன் படுத்தக் கூடாது. இதில் எவருக்கு இந்த நோய் இருக்கிறது எனத் தெரியாத நிலையில்! ஒரு சில போலிகள், ஏற்கெனவே மற்றவர் உபயோகித்த ஊசிகளையே புதிது போல விற்றுவிடுவார்கள். எனவே நம்பிக்கையான கடையில் இருந்து ஊசியைப் பெறுதல் மிகவும் அவசியம். ஒரு முறைக்கு மேல் ஒரு ஊசியை உபயோகிக்க வேண்டாம்! முனையை வளைச்சு தூர எறிஞ்சிடணும்! ' என்றவன் அவன் முகம் ஒரு மாதிரியாய்ப் போவதைப் பார்த்ததும்,

'டேய்! என்னடா அப்படிப் பாக்கறே! என்னடா இவன் போதை மருந்து கொள்வதை ஊக்குவிக்கிறானோன்னு நினைக்காதே! இந்தப் பதிலின் நோக்கமெல்லாம், அப்படிப்பட்ட பழக்கத்திற்கு அடிமையானவர் இந்நோய் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மட்டுமே! உனக்கு அப்படி ஒண்ணும் பிரச்சினை எல்லாம் இல்லைதானே! இருந்தா சொல்லிடுப்பா! எதுனாச்சும் செஞ்சுறலாம்!' என நக்கல் அடித்தேன்!

"அடப்பாவி! நீ ஒரு டாக்டராச்சே! உங்கிட்ட கேட்டா ஒழுங்கான பதில் கிடைக்குமேன்னு இதையெல்லாம் கேட்டுகிட்டு இருக்கேன்! உடனே என்னை சந்தேகப் படறியே! நான் வரேம்ப்பா!" எனத் திரும்பிக்கொண்டான் சுகுமார்!

'தெரியுண்டா! ச்சும்மா உன்னைக் கலாய்ச்சா உடனே கோவிச்சுக்கிறியே! என்னோட நண்பன் நீ! நீ தப்பா நடப்பியா! நீ கேக்கறது சுவையாத்தான் இருக்கு! கேளு! கேளு ராசா!' என்றவுடன் சிரித்துக் கொண்டே திரும்பவும் என் தோள் மீது கை போட்டான் சுகுமார்!

"அப்படீன்னா, இந்த போதை மருந்துகளை பயன்படுத்தறவங்களைப் பத்தி உன் கருத்துதான் என்ன?" என்றான்.

'போதை மருந்துப் பழக்கம் கொடியதொரு ஆட்கொல்லி, உடனடியாக இப்பழக்கத்திலிருந்து வெளியேற வேண்டியது அவசியம் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை! இப்பல்லாம் ரொம்பப் பேர் இதுல விழறதைப் பத்தி படிக்கிறேன். ரொம்பவே வேதனையான விஷயம் இது. உடனடியா, இதுலேருந்து வெளிவருவதற்கான பாதுகாப்பு மையங்களை அணுகி, வேண்டிய உதவி பெறணும் என்பதே என் ஆசை! உன்னோட நண்பர்கள் யாராவது இதுல ஈடுபட்டிருக்காங்கன்னு தெரிஞ்சா, நீயே அவங்களை அங்கே கூட்டிகிட்டுப் போகணும்! இதை எல்லாருக்கும் சொல்லு!' என மௌனமானேன்! '

[தொடரும்]