"கசடற"

அறிவியல் தொடர்பான எனக்குத் தெரிந்த தகவல்களை, ஒரு மருத்துவன் எனும் பார்வையில் சொல்ல விழைகிறேன். முழுக்க முழுக்க இவை என் கருத்துகள் மட்டுமே! முருகனருள் முன்னிற்கும்!

Monday, April 21, 2008

"எய்ட்ஸுக்கே உதவியா?!!" -- [9]

"எய்ட்ஸுக்கே உதவியா?!!" -- [9]




8-ம் பதிவு இங்கே

"இந்த தடுப்பு சாதனம், தடுப்பு சாதனம்னு சொல்றியே! அதெல்லாம் என்ன? எப்படி உபயோகிப்பது?ன்னு கொஞ்சம் சொல்றியா?" என்றான் மூர்த்தி.

'உடலுறவு கொள்ளும் போது, ஆணுறுப்பு விரைத்தவுடன், உடனே ஒரு ஆணுறை அணிவது அவசியம். இதை 'லேடெக்ஸ் காண்டம்'னு [Latex Condom] சொல்லுவாங்க.



பெண்ணுறுப்பு, ஆசனவாய், அல்லது வாய்வழி எந்த வழியில் உறவு கொள்ளுவதுன்னாலும் இதை அணிய வேண்டியது மிகவும் அவசியம், இந்த கிருமி பரவாமல் இருக்க வேண்டுமானால்......... அதாவது இது இருக்குமோ என சந்தேகிக்கும் ஒருவரிடம் மட்டுமே!

இந்தக் காண்டம் [ஆணுறை] கிழிந்துவிட்டது எனத் தெரிந்தால் உடனே உடலுறவைத் தொடராமல், புது ஆணுறை [காண்டம்] அணிந்த பின்னரே மீண்டும் இதில் ஈடுபட வேண்டும். இதைக் கவனத்தில் கொள்ளவும்.

விந்து வெளியேறியதும், மேற்கொண்டு தொடராமல், உடனே வெளியில் எடுத்து, சுத்தம் செய்து கொள்ளவும்..... இருவரும்!

ஒரு முறை உபயோகித்த உறையை மீண்டும் உபயோகிக்க வேண்டாம்! '

"ஓரினச் சேர்க்கையாளர்கள்தான்[Homosexuals] இந்த நோயை அதிகம் பெறுகிறார்கள் என்ற கருத்து ரொம்பவே அதிகமா இருக்கே... ... அது பத்தி என்ன சொல்றே நீ?' என்றான் சுகுமார்.

'நானும் படிச்சேன்! அதனாலத்தான் இதைப் பத்தி எழுதணும்னே தோணிச்சு. இப்ப சொல்றதை நல்லாக் கேட்டுக்க!


ஹெச்.ஐ.வி. கிருமி [HIV virus] நீ யாரு என்னன்னு பிரிச்சுப் பார்க்கிறதே இல்லை!

நீ பொண்ணுங்களோட மட்டும்தான் உறவு வைச்சிருக்கியா, இல்லை... ஆண், பெண் இப்படி ரெண்டு பேரோடயும் உறவு வைச்சிருக்கியா, இல்லை நீ ஓரினச் சேர்க்கை மட்டுமே வைச்சிருக்கியான்னு பேதம் பாக்கறதில்லை.

நீ என்ன பண்றேங்கறதை மட்டுமே பாக்குது!

தகாத முறையில் உறவு கொண்டால் இது வந்தே தீரும்.

ஓரினச் சேர்க்கையாளர்கள் இந்த முறையில் சற்று கவனக்குறைவாக இருப்பதால், [ஆசனவழி, வாய்வழி உறவே ஆண்களிடம் அதிகம்; பெண்கள் தவறான சாதனங்களைப் பயன்படுத்துவதால்] இது அவர்களிடம் அதிகமாகக் காணப் படுகிறது என்பது மட்டுமே உண்மை!

ஆனா, இப்பல்லாம் அவங்க கூட இதுல ரொம்ப விழிப்பா இருக்காங்க!

இது வரணும்னு யார் விரும்புவாங்க சொல்லு!

அதனால, இவங்களை மட்டுமே இதுக்கு காரணம்னு குறை சொல்றதை இத்தோட விடு! சரியா?'

"எல்லாம் சரிதாம்ப்பா! எல்லாம் விளக்கமா சொல்லிட்டே! இப்ப சில சந்தேகம் கேக்கப் போறேன்! அதுக்கும் பதில் சொல்லிடு! நான் ஒரு தெளிவோட போயிருவேன்" என்று வெள்ளந்தியாகச் சிரித்தான் சுகுமார்!

'சரி கேளு!' என்றேன்!

"ஒரு ஆளைப் பார்த்தவுடனேயே இவருக்கு எய்ட்ஸ் வந்திருக்குன்னு சொல்ல முடியுமா?"

முடியாது! இந்தக் கிருமியால் தாக்கப்பட்டபின், சோதனை செய்து உறுதிப்படுத்திக்கொள்ளாத, சிகிச்சை எடுக்காத ஒருவருக்குக் கூட இது சில ஆண்டுகள் கழித்தே தெரியவரும். சிகிச்சையை உடனேயே தொடங்கியவர்கள் பல ஆண்டுகளுக்கு இதைத் தள்ளிப் போட முடியும்!

"போதை மருந்து ஊசிகள் மூலம் இது வரும்னு சொல்ல முடியுமா?"

'இல்லை. ஆனால், போதை அளிக்கக் கூடிய எந்த ஒரு விஷயமுமே ஒருவருடைய முடிவெடுக்கும் தன்மையை பாதிப்பதால், இதற்கு அடிமையானவர்கள் பெரும்பாலும் தவறான செயலில் ஈடுபட அதிக வாய்ப்பிருப்பதால், இது அவர்களைத் தாக்கவும் செய்கிறது எனச் சொல்லலாம்!

"இதுக்குத் தடுப்பு ஊசில்லாம் வந்திருக்காமே?"

'இதுக்கான ஆராய்ச்சி எல்லாம் நடந்துகிட்டு இருக்கு. ஆனல், இது வரைக்கும் இதைத் தடுக்க எந்தவொரு மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. தடுப்பு சாதனங்களை உபயோகிப்பது ஒன்றே இதைத் தடுக்கும் வழி. இதைத் தவிர இன்னும் பல வழிகளிலும் பரிசோதனைகளும், ஆராய்ச்சிகளும் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால், இவை எதுவும் முழுமையான பலன் அளிக்குதுன்னு இன்னும் உறுதியாச் சொல்ல முடியலை என்பதே உண்மை!'


"அப்போ இந்த மருந்து, மாத்திரையெல்லாம் ...... எதுக்காக சாப்பிடணும்? எப்படியும் வரத்தான் போகுதுன்ற! இதைச் சாப்பிடாட்டித்தான் என்ன ஆயிரும்?' கொஞ்சம் விரக்தியாகக் கேட்டான் மூர்த்தி

"இவ்ளோ நேரம் உங்கிட்ட சொன்னது எதுவுமே ஏறலியா உனக்கு! ஓ! நீ இப்பத்தான் வந்தே இல்ல? ஆரம்ப நிலையில் இந்த நோயைக் கண்டுபிடிச்சா, இந்த மருந்து மாத்திரைங்க மூலமா இதைக் கொஞ்சம் தள்ளிப் போட முடியும்னு சங்கர் சொன்னான். சரிதானேடா நான் சொல்றது!' என ஆர்வமாகக் கேட்டான் சுகுமார்!

'ரொம்பச் சரி! இன்னும் என்னல்லாம் தெரிஞ்சுகிட்டே சொல்லு பார்ப்போம்! ' என அவனைத் தூண்டினேன்!

"ரொம்பவே விளக்கமா சொல்லிட்டேப்பா! இனிமே யார் கேட்டாலும் இதைப் பத்தி நானும் உன்னைப் போலவே சொல்ல முடியும்!


முறையில்லாத உறவால இது வருது.

தடுப்பு சாதனங்களை உபயோகிச்சு இதைத் தடுக்க முடியும்.

வந்துருக்கான்னு தெரிஞ்சுக்க, ஒரு ரெண்டு மூணு தடவை சோதனை பண்ணிக்கணும்.

வந்திருச்சுன்னா, முறையா மருந்து மாத்திரை சாப்பிடணும்.

போதை மருந்தால இது வர்றதுக்கான வாய்ப்பு அதிகம்.

ஓரினச் சேர்க்கையாளர்கள்தான் இதுக்குக் காரணங்கிறது ரொம்பத் தப்பு!

ஒன்றுக்கும் மேற்பட்ட உறவு வைச்சுக்கிறதுல கவனமா இருக்கணும்! சரிதானா! இல்லை, எதுனாச்சும் விட்டுட்டேனா? " எனச் சொல்லிவிட்டு, என்னைப் பெருமையாகப் பார்த்தான் சுகுமார்!

'அவ்ளோதான்! இது தெரிஞ்சாலே போதும்!' என அவனைப் பாராட்டினேன்!

'சரி, வீட்டுல இன்னிக்கு என்ன சமையல்? ரொம்பப் பசிக்குது!" என்றான் சுகுமார்!

"சந்திரா! சாப்பாடு ரெடியா! கேள்வியெல்லாம் முடிச்சாச்சு!! என்றேன்!

"எல்லாம் எப்பவோ ரெடி! உபயோகமா பேசிக்கிட்டு இருக்கீங்களேன்னுதான் தொந்தரவு பண்ணலை! வந்து உட்காருங்க மூணு பேரும்." என உள்ளிருந்து குரல் வந்தது!

***********************************
[முற்றும்!]



Labels: , ,

Tuesday, April 15, 2008

"எய்ட்ஸுக்கே உதவியா?!!" [8]

"எய்ட்ஸுக்கே உதவியா?!!" [8]



7-ம் பதிவு இங்கே!

"என்ன? பேசறதெல்லாம் பேசி முடிச்சாச்சா? இங்க பாருங்க யாரு வந்திருக்காங்கன்னு!" என எங்களை வரவேற்றார் என் மனைவி!

அங்கே மூர்த்தி ! எனது இன்னொரு உயிர் நண்பன்!

""அடடே! வாடா! எப்ப வந்தே! நல்ல வேளை நீ வந்து காப்பாத்தினே! ஒரே கேள்வியா கேட்டு அறுக்கறான் இந்த சுகு! காப்பாத்துறா என்னை" என அலறினேன்!

"என்னவாம்!" என அக்கறையாய் வினவினான் சிரித்த முகத்துடன் மூர்த்தி!

"அது ஒண்ணுமில்லேடா! இந்த எய்ட்ஸ் பத்தி சில கேள்விங்க கேட்டுகிட்டிருந்தேன்! சில வில்லங்கமான கேள்வியும் கேட்டேன்னு வைச்சுக்கோயேன்! அதுக்குத்தான் இப்படி சொல்றான்!" என்று வெள்ளந்தியாகச் சிரித்தான் சுகு!

"அட! இது நல்ல விஷயந்தானே! நீ கேள்றா!" எனத் தூண்டிவிட்டான் மூர்த்தி!

"அடப்பாவி! நீயுமாடா!" என மீண்டும் அலறினேன்!

"சரி! சரி! நீ கேளு சுகு! அப்பப்ப நானும் கேக்கறேன்!" என்றான் மூர்த்தி!

சுகுமார் தொடர்ந்தான்.

"இந்த நோய் வந்திருக்குன்னு எப்ப தெரியும்? உடனேவா?"

"இதுவரைக்கும் சொன்னதை சரியாக் கேட்டேதானே நீ? இந்தக் கிருமி ஒரு எதிர்ப்பு அணுவைப் போய் தாக்கி சிறை பிடிக்குது. அதுலேர்ந்து தன்னை பல மடங்கா பெருக்கி இன்னும் இது மாதிரியான அணுக்களை எல்லாம் தாக்குது. இப்ப இதோட ஆதிக்கம் அதிகமாகிப் போறதால, இது தன்னை வெளிக்காட்டிக்க முடியுது! இதுக்கெல்லாம் ஒரு 3 முதல் 6 மாதம் பிடிக்கும்! இதைத்தான் 'விண்டோ பீரியட்'னு மங்கை சொன்னாங்க! இது வந்திரிச்சோன்னு ஒரு பயம் வந்ததும் போய் சோதனை பண்ணி, இது இல்லைன்னு தெரிஞ்சாலும், உடனே சந்தோஷப்படாமல், ஒரு 3 மாசம் கழிச்சு மறுபடியும் சோதனை செஞ்சுக்கணும். அப்பவும் இல்லேன்னாத்தான் கொஞ்சம் நிம்மதி ஆகலாம். கொஞ்சம்தான்!

சந்தேகத்துக்கு சாம்பார் மாதிரி ஒரு 6 மாசத்துக்கு அப்புறமும் இன்னொரு சோதனை பண்ணிக்கறது நல்லது!
இன்னொண்ணு! இந்த சமயத்துல, வேறெந்த தப்புத்தண்டாவும் பண்ணாமலும் இருக்கனும்! இது ரொம்ப முக்கியம்!"


"சரி! இது வந்திரிச்சுன்னு தெரிஞ்சிருச்சு!தெரிஞ்சதும் முதல்ல என்ன செய்யணும்?" என்றான் மூர்த்தி பதட்டமாக!

"ம்ம்! நீயும் இதுல வந்திட்டியா! சரி கேளு!
உடனடியா இந்த நோயைப் பத்தி நல்லாத் தெரிஞ்ச, இதுலியே சிறப்புத்தகுதி பெற்ற ஒரு மருத்துவரை நாடி இதற்கான சிகிச்சையை மேற்கொள்வது மட்டுமே, 'எய்ட்ஸ்' வருவதைத் தள்ளிப்போட...ஆமாம்... தள்ளிப்போட மட்டுமே... உதவும். இது கொஞ்சம் பயமுறுத்தற மாதிரி இருந்தாலும், முறையான சிகிச்சை, தீய பழக்கங்களை [பலருடனும் முறையற்ற உறவு, புகை பிடித்தல், அதிகமாக மது அருந்துதல், போதை மருந்துகளை எடுத்துக் கொள்ளுதல்] விடுதல் போன்றவை ஒருவரது வாழ்நாளை நீட்டித்து, 'எய்ட்ஸ்' வராமலே வாழ்வை நல்லபடியா முடிக்கவும் வாய்ப்பிருக்கிறது!! எனவே, இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்."

"தண்ணி அடிக்கலை. புகை பிடிக்கலை. போதை மருந்தே சாப்பிட்டதில்லை. ஓரினச்சேர்க்கை இல்லாம பொண்ணுங்களோட மட்டுமே உடலுறவு, இது மாதிரி ஆளுக்கு இந்த நோய் வராதுதானே!" என்றான் சுகுமார்.

"எல்லாம் சரிதான் சாமி! ஆனா, ஒரு விஷயம் மட்டும் உதைக்குதே! ஒரே பொண்ணோட மட்டுமில்லாம பல பொண்ணுங்களோட உறவு வைச்ச மாதிரி இருக்கே இந்த கேஸ்! இதுல எவருக்காவது இந்த நோய் இருந்தால் இது வர வாய்ப்பு இருக்கிறது. இன்னொண்ணும் சொல்றேன். ஒரே பொண்ணு அல்லது ஆண் கூட மட்டுமே ஒருத்தர் உறவு வைச்சிருந்தாலும் அந்த அடுத்த ஆளு சுத்தமா இல்லேன்னா, அவருக்கு இந்த நோய் வேறு எவர் மூலமாவது வந்திருந்தால், மற்றவருக்கும் இது வரக் கூடும்! ஹெச்.ஐ.வி. இதில் பாரபட்சமே காட்டுவதில்லை! இதுதான் உண்மை!!

"ரத்ததானம் மூலமா இது பரவும்தானே! ரத்தமும் ரத்தமும் கலக்குதே" என அப்பாவியாகக் கேட்டான் மூர்த்தி!

"நீ கேக்கறது சரிதான்! முன்னெல்லாம் இது இப்படியும் வந்ததா நிகழ்வெல்லாம் இருக்கு! ஆனா, இப்ப இது பற்றிய விழிப்புணர்ச்சி வந்திருப்பதாலும், ஒவ்வொரு முறை ரத்தம் எடுக்கும் போதும், ரத்தம் கொடுக்கும் போதும் சுத்திகரிக்கப்பட்ட ஊசிகளையே பயன்படுத்துவதாலும், இந்த நோய் வர வாய்ப்பே இல்லை! மேலும், இப்போதெல்லாம், இந்த நோய் இருக்கிறதா என முறையாகப் பரிசோதிக்கப்பட்ட பின்னரே ஒருவரின் ரத்தம் மற்றவருக்கு அளிக்கப்படுவதாலும், இது பெரும்பாலும் தவிர்க்கப்படுகிறது!

"கருத்தடை மாத்திரைகளை உபயோகிப்பதின் மூலம் இதைத் தவிர்க்கலாம் என ஒரு கருத்து இருக்கே!"

"தவறான கருத்து! கருத்தரிப்பதை மட்டுமே இது தவிர்க்கும்! திரும்பத் திரும்ப இதையே சொல்ல போரடிக்குது! பச்சப்புள்ள வேற திட்றாரு! இருந்தாலும் மீண்டும் ஒருமுறை சொல்றேன்! இந்த நோய் வராமல் தடுக்க, முறையற்ற உடலுறவைத் தவிர்ப்பது, இந்த நோயால் தாக்கப்படாத ஒருவருடன் மட்டுமே உறவு கொள்வது, ஊசிகளைப் பரிமாறிக் கொள்ளாமல் இருப்பது, இவை மட்டுமே! முறையான தடுப்பு சாதனங்கள் உபயோகித்து இதைத் தவிர்க்க முடியும்! அதில் இந்த கருத்தடை மாத்திரைகள் அடங்காது!:))" என்றேன்!

"என்ன கோல் போட்டாலும் தடுக்கிறியேடா!" எனச் சொல்லிச் சிரித்தான் சுகுமார்!



[தொடரும்!]



Labels: , ,

Tuesday, April 08, 2008

"எய்ட்ஸுக்கே உதவியா!! " -- [7]

"எய்ட்ஸுக்கே உதவியா!! " -- [7]


"இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரைத் தொடுவதாலோ, அவருடன் கை குலுக்குவதாலோ, அவர் உபயோகிக்கும் கழிப்பறையைத் தானும் பயன்படுத்துவதாலோ, அவர் எச்சில் பண்ணி குடித்த கோப்பையை உபயோகிப்பதாலோ, அவரது தும்மல், இருமல் நம் மீது படுவதாலோ இது வரலாம் தானே! சரிதானே நான் சொல்றது!" என்றான் சுகுமார்!

'முற்றிலும் தவறு! ரொம்ப ரொம்ப தப்பு நீ சொல்றது! நீ சொல்லியிருக்கும் எந்த முறையாலும் ஹெச்.ஐ.வி பரவாது! காற்று மூலமாகவோ, உணவின் மூலமாகவோ பரவும் நோயல்ல இது. இது போன்ற சந்தர்ப்பங்களில், அவரது ரத்தம், உனது ரத்தத்தோடு எந்த வகையிலாவது கலந்தால் மட்டுமே இது தொற்றிக் கொள்ளும்! என்னடா, திருப்பித் திருப்பி இதையே சொல்கிறேனே என எண்ண வேண்டாம். இதை நன்றாக மனதில் உள் வாங்கிக் கொள்ளு!'

திடீரென சுகுமார் முகத்தில் ஒரு ஒளி தெரிந்தது!

" இவ்ளோ நேரம் நீ சொன்னதெல்லாம் சரி! இப்ப உன்னை மடக்கறேன் பாரு! கொசு ஒண்ணு இந்த நோய் இருக்கற ஆளைக் கடிக்குது. அப்பிடியே பறந்து போயி இன்னொரு ஆளைக் கடிக்குது. அவனுக்கு இந்த நோய் இல்லை! இப்ப ரத்தமும் ரத்தமும் கலக்குது! இந்த ஆளு ஒடம்புலியும் அது துளை போடுது. இவனுக்கும் அந்த நோய் வரும்தானே!" எனக் கேட்டு காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு சிரித்தான்.

" ரொம்பவே புத்திசாலித்தனமான கேள்விதான் கேட்டிருக்கே! அதுக்காக உன்னைப் பாராட்டியே ஆகணும் சுகு! ஆனால் நான் சொல்லப் போறது உனக்கு அதிர்ச்சியாத்தான் .... இல்லை இல்லை!... மகிழ்ச்சியாத்தான் இருக்கும்!
கொசு கடிக்கறதால ஹெச்.ஐ.வி. வராது!

நீ சொல்ற மாதிரி, இந்த நோய் இருக்கற ஆளை ஒரு கடிச்சு, அந்தக் கிருமியை தன்னோட ரத்தத்துல எடுத்துக்குதுன்னு வைச்சுப்போம். ஹெச்.ஐ.வி. கிருமி ரொம்ப நேரம் உயிரோட இருக்கறதில்லை இங்கே! முன்னேயே சொன்ன மாதிரி ஒரு 20 நிமிஷம்தான்!

அத்தோட, கொசு உன்னைக் கடிக்கறப்ப, தன்னோட ரத்தத்தை அனுப்புறதில்லை! வாயில் இருந்து தன்னுடைய எச்சிலைத்தான் கடிக்கற இடத்துல துப்பி, ரத்தம் உறிஞ்ச ஒரு தோதான இடத்தை அமைக்குது! இதுல ஏற்கெனவே ரத்தத்தில் இருக்கிற கிருமி வர வாய்ப்பில்லை.

இன்னும் சொல்லப் போனா, ஹெச்.ஐ.வி. கிருமி, பூச்சிகளோட உடம்புல தன்னைப் பெருக்கிக் கொள்வதுமில்லை. அதிக நேரம் உயிர் வாழ்வதும் இல்லை! இதுக்கெல்லாம் மேல ஒரு பெரிய காரணம், ஒருத்தரைக் கடிச்சதும் கொசு உடனே அடுத்த ஆளை நோக்கிப் போறதில்லை! கொஞ்ச நேரம் ஒரு இடத்துல போய் உட்கார்ந்து, குடிச்ச ரத்தத்தை ஜீரணம் பண்ணிட்டு, அப்புறமாத்தான் அடுத்த ஆள்கிட்ட போகும். இதுக்கு கொஞ்ச நேரம் பிடிக்கும். அதுவரைக்கும் ஒரு கொசுவோட ரத்தத்தில் இந்தக் கிருமி உயிர் வாழாது! எனவே பயம் வேண்டாம்.... ஹெச். ஐ.வி. வருமோ என! ஆனா, மலேரியா,[MALARIA] மஞ்சள் ஜுரம்[JAUNDICE] போன்ற நோய்கள் பரவலாம்! ஏனெனில் இவை எச்சிலின் மூலம் வரும் நோய்கள்!

"சரிப்பா! ரொம்பவே சொல்லிட்டே! இப்ப இது வந்திருக்கா இல்லியான்னு எங்கே போய் தெரிஞ்சுக்க முடியும்!?"

'உன் குடும்ப டாக்டர்கிட்ட.... [அதான் என்கிட்ட!]... போய் கேளு! அவரே சொல்லுவார்! அவர்கிட்டேயே இதை டெஸ்ட் பண்ற வசதியும் இருக்கலாம். இல்லேன்னா எங்கே போய் பரிசோதிக்க முடியும்னு அவர் சொல்லுவார். அவர் கிட்ட போக வெக்கமா இருந்தா, எந்த ஒரு அரசு மருத்துவ மனையிலும் போய் டெஸ்ட் பண்ணிக்கலாம். ரொம்ப அவசரம்னா ஒரு 30 நிமிஷத்துலியே தெரிஞ்சுக்கலாம். நிச்சயமா தெரிஞ்சுக்கணும்னா முறையான சோதனை முடிவு தெரிய 1-2 வாரம் பிடிக்கும். "எலிசா"[ELISA], வெஸ்டெர்ன் ப்ளாட்"[WESTERN BLOT] என்கிற இரண்டு ரத்தப் பரிசோதனைகள் மூலம் இதை உறுதிப் படுத்த முடியும். இவை இரண்டையும் செய்த பின்னரே இந்த நோய் வந்திருக்கிறது எனச் சொல்ல முடியும்.

"தனக்கு இந்த நோய் இருக்கா இல்லியான்னு எத்தனை நாளுக்குள்ள இதை ஒரு ஆளு தெரிஞ்சுக்க முடியும்?"

'சாதாரணமா இந்தக் கிருமி ஒரு ஆளுக்குள்ள வந்தால், உடம்பு அதை எதிர்த்து போராட ஆரம்பிக்கும். இது பொதுவா எல்லா நோய்க்கு எதிராகவும் நடக்கறதுதான்!

ஹெச்.ஐ.வி.க்கு எதிரான தடுப்புசக்தி ஒன்று முதல் ஆறு மாதத்துக்குள்ள தெரிய ஆரம்பிக்கும். இந்த சமயத்துல இதை வைச்சு இந்த நோய் வந்திருக்கா இல்லையான்னு கண்டுபிடிக்க முடியும்.' என்றேன்

[தொடரும்]

Labels: ,

Friday, March 28, 2008

"எய்ட்ஸுக்கே உதவியா!!" - [3]

"எய்ட்ஸுக்கே உதவியா!!" - [3]


"அப்போ, இந்த [AIDS} எப்படித்தான் ஒருத்தருக்கு வருதுன்னு சொல்லலாமில்ல?" பக்கோடாவை மென்றுகொண்டே கேட்டான் சுகுமார்.

"அப்படிக்கேளு!

முறைப்படி பாதுகாப்பில்லாத உடலுறவின் மூலமே இது பெரிதும் பரவுகிறது.
அடுத்து, ஒரே ஊசியை பலர் உபயோகிப்பதின் மூலம்[இதில் எவருக்காவது முன்னமேயே இந்த நோய் இருந்தால் மட்டுமே],
அல்லது நோய்க்கிருமி உள்ள ரத்தப் பரிமாற்றத்தால்[HIV infected blood transfusion] இது நிகழலாம்.
இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஒரு தாய் கருவிலிருக்கும் தன் குழந்தைக்கோ, அல்லது தாய்ப்பால் மூலமாகவோ இந்த நோயைக் கொடுக்க முடியும். மற்றபடி, சாதாரணமாக அடுத்தவருடன் பழகுவதின் மூலம் இந்த நோய் பரவ வாய்ப்பில்லை!

"அப்போ,...... முத்தம் கொடுத்தா எய்ட்ஸ் வராதா?"

ஒரு எய்ட்ஸ் நோயாளி உன்னைக் கன்னத்தில் முத்தமிடுவதால் உனக்கு எய்ட்ஸ் வராது.... உன் கன்னத்தில் ஏதும் வெளிக்காயங்கள் இல்லாத பட்சத்தில்! அவருடன் கை குலுக்குவதாலோ, உன்னைக் கட்டிப் பிடிப்பதாலோ இது வரவே வராது! தாராளமா இதெல்லாம் நீ அவரோட செய்யலாம்!

"வாய்க்கும் வாய்க்குமான முத்தம்... அதுவும் ஆழ்ந்த முத்தம்[deep kiss] ... இந்த, நாக்கெல்லாம் ஒட்டிகிட்டு செய்வாங்களே அதுமாரி கொடுத்தா..??"

ரொம்பத்தான் விவரமா கேக்கறே!
பொதுவாக இதன் மூலமும் பரவாது என்றாலும், இது போன்ற முத்தங்களில், உதடுகளோ, அல்லது வாயின் உட்பகுதியோ சற்று காயப்படும் வாய்ப்புகள் இருப்பதால், கிருமிகள் கலக்கும் வாய்ப்பு இருப்பதால், இதைத் தவிர்ப்பது நலம்..... அவரோடு மட்டும்!!

"கேக்கறேனேன்னு தப்பா நினைச்சுக்காகாதே! இந்த வாய் வழி உறவு[oral sex] பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா? இதன் மூலம் இந்த நோய் வர வாய்ப்பிருக்கிறதா?" என்று தயங்கியபடியே கேட்டான் சுகுமார்!

கண்டிப்பாக! இவ்ளோ கேட்டுட்டே! இதைக் கேக்கலைன்னா எப்படி! சொல்றேன் கேளு!
எப்படி வருதுன்னு தெரியலைன்னாலும், வாய் வழி உறவு மூலமா, ஹெச்.ஐ.வி. நோய் பரவ முடியும்னு ஆதாரபூர்வமா சொல்லலாம். வாய்க்குள் இருக்கும் மெல்லிய ஜவ்வுத் தோல் வழியே ஹெச்.ஐ.வி. கிருமிகள் ரத்தத்தில் பரவும் அபாயம் இருக்கிறது. இதையும் மீறி இதைச் செய்துதான் ஆகணும்னா, தடுப்பு முறைகளைக் கையாளுவது நலம். காண்டம், ஆணுறை போன்றவற்றை உபயோகித்து இதைச் செய்யலாம். தவிர்ப்பது மிகவும் நல்லது!

"அப்போ, நேர்வழி உறவு.. அதாவது, வழக்கமான முறையில் உடலுறவு கொள்வதால் என்ன ஆகும்?"

என்ன ஆகும்? நிச்சயமா இந்த நோய் வரும்... அதாவது.....இப்படி உறவு கொள்ளும் இருவரில் எவர் ஒருவருக்காவது இந்த நோய் இருந்தால்! சொல்லப்போனால், இந்த நோய் வருவதற்கு இதுதான் முதன்மையான காரணம் எனச் சொல்லலாம். பாதுகாப்பில்லாத உறவு இவர்களோடு கொண்டால், இந்தக் கிருமிகள் அடுத்தவருக்கு வந்தே தீரும்! ஆணுறை, காண்டம் இல்லாமல் இவர்கள், அல்லது, இவர்களுடன் உறவு கொள்ளவே கூடாது.

"இந்தக் கிருமி, கிருமின்னு சொல்லியே பயமுறுத்திறியே, படவா! இது எவ்ளோ நேரம் உயிரோட இருக்கும்னு சொல்லுடா!" என்றான் சுகுமார்!
இவ்ளோ நேரம் இதைக் கேக்கலியேன்னு நினைச்சேன்! கேட்டுட்டே! இதுவரைக்கும் சொன்ன எது மூலமா வெளியே வந்தாலும், இந்த நுண்கிருமி [வைரஸ்] ஒரு 20 நிமிஷத்துக்குத்தான் உயிரோட இருக்கும்! அதுக்குள்ள இது அடுத்தவரோட ரத்தத்துல கலக்கலைன்னா, செத்திரும்! உன்னோட கையில ஒரு கீறலும் இல்லைன்னா உள்ளங்கையில இதை 20 நிமிஷம் வைச்சுக்கிட்டு இருந்தேன்னாக்கூட ஒண்ணும் ஆகாது! கிருமி செத்துப் போயிரும்! புரிஞ்சுதா!" என்றேன் நான்!

"சும்மா பயமுறுத்தாம, விஷயத்தை மட்டும் சொல்லுங்க!" என்று சொல்லியபடியே, கரண்டியுடன் வெளிவந்து ஒரு முறை முறைத்தார் என் மனைவி!

"சரி, சரி! நீ போய் சமையலைக் கவனி!" எனச் சமாளித்தேன்!


[தொடரும்]

Labels: ,

Wednesday, March 26, 2008

"எய்ட்ஸுக்கே உதவியா-2."

"எய்ட்ஸுக்கே உதவியா-2."
அவ்ளோதானா? ரத்தம், இல்லாட்டி உடலுறவு, இப்படித்தான் இது பரவுமா? என்றான் சுகுமார்.

பொதுவா, இதுதான் சரின்னாலும், ரத்தம், விந்து[sperm], பெண்வழியில் சுரக்கும் நீர்[vaginal fluids], மார்பில் சுரக்கும் பால், மற்றைய உடலில் இருந்து ரத்தத்துடன் கலந்த நீர்[bodily fluids] இவற்றின் வழியே இந்த நோய் பரவலாம்.

"சரி! இந்த -ஹெச்.ஐ.வி. எப்படி 'எய்ட்ஸ்' ஆக மாறுகிறது? "

'இந்த வைரஸ் நம் உடலில் ஒரு தடுப்புச் சக்தியாக இருந்து, வரும் நோய்களை எதிர்க்கும் CD4 என்கின்ற 'உதவி செய்யும் செல்களை [Helper Cells] நேரடியாகத் தாக்கத் தொடங்குகிறது! இந்த செல்களின் அளவு குறைந்து வருவதை வைத்து, இந்த எய்ட்ஸ் என்னும் நோய் வந்து கொண்டிருக்கிறது என நாம் அறிய முடியும்.
இந்த வைரஸ் உடலில் கலந்து, பல ஆண்டுகளுக்குப் பின்னே இது நிகழத் தொடங்குகிறது. எனவே, இந்த வைரஸ்களின் அளவைக் குறைப்பதன் மூலம், எய்ட்ஸ் வருவதை தள்ளிப் போட முடியும்... அதற்குத்தான் மருந்துகள் உதவுகின்றன!

"இந்த ஹெச்.ஐ.வி எப்போத்தான் ஆரம்பிச்சுதுன்னு சொல்லுங்களேன்! அதை விட்டுட்டு.....!!" உள்ளிருந்து ஒரு குரல் ஓங்கி ஒலித்தது

'சொல்றேன், சொல்றேன்! நீ ஏன் கத்தறே!' என ஒரு பம்மிய குரலில் சொல்லிவிட்டு, சுகுமாரைப் பார்த்து, 'எப்போ வந்துது, எப்படி வந்துதுன்னு யாருக்கும் தெரியாது! ஆனா, 1959ல காங்கோ நாட்டுல கின்ஷாஸா நகரில் கொடுக்கப்பட்ட ஒரு ரத்தத்தில் இந்த வைரஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை இன்னும் பரிசோதித்த போது, இந்த வைரஸ் 1950-களில் தொடங்கியிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.
இருப்பினும், 1979-1981-ல் அமெரிக்காவில் ஒரு சில நோயாளிகள் எந்தவொரு காரணமுமில்லாமல், எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும் செல்களின் அளவுகள் குறைந்திருப்பதைக் கண்டபோது, இதை ஆராயத் தொடங்கியதின் விளைவாக இந்த எய்ட்ஸ் என்னும் நோய் இருப்பது ஒப்புக் கொள்ளப் பட்டது!

1983-ல் தான் ஹெச்.ஐ.வி. வைரஸுக்கும் எய்ட்ஸ் என்னும் நோய்க்கும் இருக்கும் தொடர்பு உறுதிப்படுத்தப் பட்டது.


"அப்படீன்னா, ஹெச்.ஐ.வி. வந்தா நிச்சயம் எய்ட்ஸ் வந்தேதான் தீருமா? " சற்று பயந்த குரலில் கேட்டான் சுகுமார்!
'இல்லை! இந்த வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்டவர்களில் பாதிப் பேர்தான் இந்த நிலைக்குச் செல்கிறார்கள். அதற்கும் ஒரு 10 வருஷம் பிடிக்கும். வாழ்க்கை முறைகள், உடல்நலக் கோளாறுகள் இந்த கால அளவைக் கூட்டவோ குறைக்கவோ செய்யும்.
இன்று இருக்கும் மருத்துவக் கண்டுபிடிப்புகளால், இதன் தீவிரத்தை வெகுவாகக் குறைக்க முடியும் என்பது ஒரு நல்ல சேதி.'

"சரி! இது எனக்கு இருக்கா இல்லியான்னு எப்படி தெரிஞ்சுக்கறதுன்னு சொல்லேன்!"

'என்னடா! இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போடறே! அதான் முதல்லியே கேட்டேன்ல! சொல்லக்கூடாது!' என நான் அலற,
உள்ளிருந்து வெளிவந்த என் மனைவி,

"ஏங்க! உங்களுக்கு எதுனாச்சும் இருக்கா! அவர்தான் ஆரம்பத்துலியே எனக்கு இல்லை, ஒரு தகவலுக்காகத்தான் கேக்கறேன்னு சொல்லித்தானே இதை ஆரம்பிச்சீங்க! பேசாம அவர் கேக்கற கேள்விக்கு மளமளன்னு பதில் சொல்லுங்க!' என அதட்டினார்!
'ஒரு எளிய ரத்தப் பரிசோதனை மூலம் மட்டுமே இதை உறுதிப் படுத்த முடியும்! ஒரு சில அறிகுறிகள் இந்த நோய்க்கென இருந்தாலும், அவற்றை மட்டும் வைத்தே இதுதான்னு சொல்ல முடியாது. அப்படி என்ன அறிகுறிகள்னு தானே கேக்கறே!

காரணமில்லாத திடீர் எடைக் குறைவு
வறட்டு இருமல்
அடிக்கடி வரும் காய்ச்சலும், இரவில் வரும் அதிகப்படியான வியர்வையும்
அதீதமான உடல் சோர்வு
அக்குள், தொடை, கழுத்து இவைகளில் நெறி கட்டுதல்,
தொடர்ந்து ஒரு வாரத்துக்கும் மேல் இருக்கும் வயிற்றுப்போக்கு
வாய், நாக்கு, தொண்டை போன்ற இடங்களில் வரும் வெள்ளைத் திட்டுகள்
ந்யுமோனியா போன்ற நுரையீரல் காய்ச்சல்
உடலின் பல இடங்களில் திடீரெனத் தெரியும் சிவப்பு, பழுப்பு திட்டுகள்
நினைவாற்றல் குறைவு, மனவழுத்தம், மற்றும் சில நரம்பு சம்பந்தமான நோய்கள்.

ஆனால், முன்னரே சொன்னது போல, இவற்றில் ஏதாவது இருந்தாலே, தனக்கு இந்த நோய் என எவரும் பயப்படத் தேவையில்லை. ரத்தப் பரிசோதனை ஒன்று மட்டுமே இதை உறுதிப்படுத்தும் ஒரே வழி!
இந்த அறிகுறிகள் வர வேறு பல மருத்துவக் காரணங்கள் இருக்கின்றன.' என்றேன்.

ஒரு தட்டில் சூடான பக்கோடாவும், இரண்டு கோப்பைகளில் தேநீரும் கொண்டுவந்து வைத்தார் என் மனைவி!

'இதைச் சாப்பிட்டுகிட்டே பேசுங்க' என்று சிரித்தார்.


[தொடரும்]

Labels: ,

Monday, March 24, 2008

" எய்ட்ஸுக்கே உதவியா"? [1]



" எய்ட்ஸுக்கே உதவியா"? [1]

அன்று 'வலென்ட்டைன்' தினம்! அதாங்க! காதலர் தினம்னு அவங்கவங்க சொல்லிகிட்டு இருக்காங்களே... அதேதாங்க... !

எனது ஒரு சில பதிவுகளில் நான் எழுதிய என் கவிதைகளையும்[???] கருத்துகளையும் படித்த என் மனைவி என்னிடம் சொன்னார்!

'ஏங்க! உங்களுக்கு வேற வேலை இல்லியா? நீங்க ஒரு டாக்டர்தானே! அது சம்பந்தமா எதுனாச்சும் எழுதக் கூடாதா?'

'என்ன? இப்ப பாலியல் கல்வி - பெற்றோருக்கு' ன்னு ஒண்ணு எழுதினேனே! போறாதா?' என அப்பாவியாய்க் கேட்டேன்!

'ம்க்கும்! நீங்கதான் மெச்சிக்கணும்!அதை எழுதி கிட்டத்தட்ட ஒன்பது மாசம் ஆகப் போகுது! "நான் தான் அதைப் பெத்தாச்சே, எதுக்குப் படிக்கணும்"னு யாரும் அங்கே வர்றதில்லை! நீங்க வேற ஏதாவது எழுதுங்க! இந்த 'ஹோமோஸெக்ஷுவாலிடி'.. ஓ.. இங்கே தமிழ்ல தான் பேசணும்ல!... ஓரினச் சேர்க்கையாலத்தான் எய்ட்ஸ் அதிகமா பரவுதுன்னு சொல்றாங்களே! அதைப் பத்தி எழுதுங்க. புரிஞ்சுக்கறவங்க புரிஞ்சுக்கட்டும்!"

என் ஞானக்கண்[!!!] திறந்தது!

இதோ, உங்களை எல்லாம் அடுத்த சில நாட்களுக்கு தொல்லை பண்ண முடிவு செய்து................எப்படி இதைத் தொடங்கலாம் என !யோசித்துக் கொண்டிருந்தேன்!

அப்பத்தான் வந்தான் என் நண்பன் சுகுமார்!

"டேய்! எய்ட்ஸுன்னா என்ன? எப்படி வருது? இதுக்கு என்ன அறிகுறிங்க? எப்படி கண்டுபிடிப்பது? இதுக்கு என்ன சிகிச்சை செய்வது? இதுனால என்ன ஆகும்? இதைப் பத்தி ஆளாளுக்கு என்னமோ சொல்றாங்களே அதெல்லாம் உண்மையா பொய்யா? நீதான் டாக்டராச்சே! எனக்கு இப்ப இந்த உண்மை தெரிஞ்சாகணும்" என ஓடி வந்தான்!

"ஏண்டா! எதுனாச்சும் ஏடாகூடமா செஞ்சுட்டியா? சொல்லுடா" என அதட்டினேன்!

"அதெல்லாம் இல்லைடா! இதையெல்லாம் பத்தி தெரிஞ்சுக்கணும்னு ரொம்ப நாளா ஆசை. தப்புத்தண்டா பண்ணாம இருக்கறதுக்காகத்தான்! அதான் கேட்டேன்," என சிரித்தான்!

"சரி! அப்போ, நீ கேள்விகளாக் கேளு. நான் சொல்றேன்" என்றேன், ஒரு வழி கிடைத்த நிம்மதியுடன்!!

இதோ! அவன் கேள்விகளும், என் பதிலும்!

"எய்ட்ஸ்"ன்னா என்ன?

அக்வைர்ட் இம்யோனோ டிஃபிஷியென்ஸி ஸிண்ட்ரோம் [Acquired Immuno Deficiciency Syndrome]] இதுதாங்க எய்ட்ஸ்[AIDS] அப்பிடீன்னு சொல்லப் படுவது! அதாவது, 'தானே வரவழைத்துக் கொண்ட தன்னெதிர்ப்புக் குறைவை விளைவிக்கும் அறிகுறிகளைக் கொண்ட ஒரு நோய்' என தமிழில் விளக்கலாம்!
இந்தப் பெயர், ஒரு மருத்துவரால் ஒரு சில அறிகுறிகளாலுமோ, அல்லது சில பரிசோதனைகள் மூலமோ
அறியப்படுவதுன்னு மட்டும் இப்போதைக்குப் புரிஞ்சுக்கோ!


'இது எப்படித்தான் வருது?'

ஹெச்.ஐ.வி. வைரஸ்[HIV Virus], அதாவது, ஹ்யூமோஇம்யூனோ டிஃபிஷியென்ஸி வைரஸ் [Human Immuno Deficiency Virus] என்னும் ஒன்றால் இந்த நோய் வருகிறது.

'வாங்க சுகுமார்! வீட்ல எல்லாரும் நலமா?" எனச் சொல்லியபடி தேநீருடன் சுகுமாரை வரவேற்றவர், என்னருகில் வந்து, 'ஐயோ! இது எல்லாருக்கும் தெரியுங்க! இது எப்படி பரவுகிறதுன்னு சொல்லுங்க சாமி!' என முறைத்தார்!

'சொல்லத்தானே போறேன்! அதுக்குள்ள ஏன் இப்படி தொணதொணக்கற? சுகுமார் இன்னும் கொஞ்ச நேரம் இங்கதான் இருப்பான்.நீ போய் சமையலைக் கவனி' என அவரை ஒருமாதிரியா சமாளிச்சேன்!

"நீ கேளு சுகுமார்! இதனால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த நோயை, ரத்தமும் ரத்தமும் கலப்பதின் மூலமாகவோ, அல்லது பாலியல் மூலமாகவோ.... அதாவது, உடலுறவின் மூலமாகவோதான் பெறுகிறார்கள்! ஒரு தாய் தனது குழந்தைக்கும் இதைத் தர முடியும்.... கருவுற்றிருக்கும் போதோ அல்லது தாய்ப்பாலைத் தரும்போதோ! இந்த நோயைப் பெற்றவர்கள் சிறிது காலத்தில் எய்ட்ஸ் என்னு நிலையை அடைகிறார்கள் என்பதே நடப்பு!' என்றேன்.

[தொடரும்]
*************************************

Labels: ,