"எய்ட்ஸுக்கே உதவியா?!!" [8]
"எய்ட்ஸுக்கே உதவியா?!!" [8]
"என்ன? பேசறதெல்லாம் பேசி முடிச்சாச்சா? இங்க பாருங்க யாரு வந்திருக்காங்கன்னு!" என எங்களை வரவேற்றார் என் மனைவி!
அங்கே மூர்த்தி ! எனது இன்னொரு உயிர் நண்பன்!
""அடடே! வாடா! எப்ப வந்தே! நல்ல வேளை நீ வந்து காப்பாத்தினே! ஒரே கேள்வியா கேட்டு அறுக்கறான் இந்த சுகு! காப்பாத்துறா என்னை" என அலறினேன்!
"என்னவாம்!" என அக்கறையாய் வினவினான் சிரித்த முகத்துடன் மூர்த்தி!
"அது ஒண்ணுமில்லேடா! இந்த எய்ட்ஸ் பத்தி சில கேள்விங்க கேட்டுகிட்டிருந்தேன்! சில வில்லங்கமான கேள்வியும் கேட்டேன்னு வைச்சுக்கோயேன்! அதுக்குத்தான் இப்படி சொல்றான்!" என்று வெள்ளந்தியாகச் சிரித்தான் சுகு!
"அட! இது நல்ல விஷயந்தானே! நீ கேள்றா!" எனத் தூண்டிவிட்டான் மூர்த்தி!
"அடப்பாவி! நீயுமாடா!" என மீண்டும் அலறினேன்!
"சரி! சரி! நீ கேளு சுகு! அப்பப்ப நானும் கேக்கறேன்!" என்றான் மூர்த்தி!
சுகுமார் தொடர்ந்தான்.
"இந்த நோய் வந்திருக்குன்னு எப்ப தெரியும்? உடனேவா?"
"இதுவரைக்கும் சொன்னதை சரியாக் கேட்டேதானே நீ? இந்தக் கிருமி ஒரு எதிர்ப்பு அணுவைப் போய் தாக்கி சிறை பிடிக்குது. அதுலேர்ந்து தன்னை பல மடங்கா பெருக்கி இன்னும் இது மாதிரியான அணுக்களை எல்லாம் தாக்குது. இப்ப இதோட ஆதிக்கம் அதிகமாகிப் போறதால, இது தன்னை வெளிக்காட்டிக்க முடியுது! இதுக்கெல்லாம் ஒரு 3 முதல் 6 மாதம் பிடிக்கும்! இதைத்தான் 'விண்டோ பீரியட்'னு மங்கை சொன்னாங்க! இது வந்திரிச்சோன்னு ஒரு பயம் வந்ததும் போய் சோதனை பண்ணி, இது இல்லைன்னு தெரிஞ்சாலும், உடனே சந்தோஷப்படாமல், ஒரு 3 மாசம் கழிச்சு மறுபடியும் சோதனை செஞ்சுக்கணும். அப்பவும் இல்லேன்னாத்தான் கொஞ்சம் நிம்மதி ஆகலாம். கொஞ்சம்தான்!
சந்தேகத்துக்கு சாம்பார் மாதிரி ஒரு 6 மாசத்துக்கு அப்புறமும் இன்னொரு சோதனை பண்ணிக்கறது நல்லது!
இன்னொண்ணு! இந்த சமயத்துல, வேறெந்த தப்புத்தண்டாவும் பண்ணாமலும் இருக்கனும்! இது ரொம்ப முக்கியம்!"
"சரி! இது வந்திரிச்சுன்னு தெரிஞ்சிருச்சு!தெரிஞ்சதும் முதல்ல என்ன செய்யணும்?" என்றான் மூர்த்தி பதட்டமாக!
"ம்ம்! நீயும் இதுல வந்திட்டியா! சரி கேளு!
உடனடியா இந்த நோயைப் பத்தி நல்லாத் தெரிஞ்ச, இதுலியே சிறப்புத்தகுதி பெற்ற ஒரு மருத்துவரை நாடி இதற்கான சிகிச்சையை மேற்கொள்வது மட்டுமே, 'எய்ட்ஸ்' வருவதைத் தள்ளிப்போட...ஆமாம்... தள்ளிப்போட மட்டுமே... உதவும். இது கொஞ்சம் பயமுறுத்தற மாதிரி இருந்தாலும், முறையான சிகிச்சை, தீய பழக்கங்களை [பலருடனும் முறையற்ற உறவு, புகை பிடித்தல், அதிகமாக மது அருந்துதல், போதை மருந்துகளை எடுத்துக் கொள்ளுதல்] விடுதல் போன்றவை ஒருவரது வாழ்நாளை நீட்டித்து, 'எய்ட்ஸ்' வராமலே வாழ்வை நல்லபடியா முடிக்கவும் வாய்ப்பிருக்கிறது!! எனவே, இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்."
"தண்ணி அடிக்கலை. புகை பிடிக்கலை. போதை மருந்தே சாப்பிட்டதில்லை. ஓரினச்சேர்க்கை இல்லாம பொண்ணுங்களோட மட்டுமே உடலுறவு, இது மாதிரி ஆளுக்கு இந்த நோய் வராதுதானே!" என்றான் சுகுமார்.
"எல்லாம் சரிதான் சாமி! ஆனா, ஒரு விஷயம் மட்டும் உதைக்குதே! ஒரே பொண்ணோட மட்டுமில்லாம பல பொண்ணுங்களோட உறவு வைச்ச மாதிரி இருக்கே இந்த கேஸ்! இதுல எவருக்காவது இந்த நோய் இருந்தால் இது வர வாய்ப்பு இருக்கிறது. இன்னொண்ணும் சொல்றேன். ஒரே பொண்ணு அல்லது ஆண் கூட மட்டுமே ஒருத்தர் உறவு வைச்சிருந்தாலும் அந்த அடுத்த ஆளு சுத்தமா இல்லேன்னா, அவருக்கு இந்த நோய் வேறு எவர் மூலமாவது வந்திருந்தால், மற்றவருக்கும் இது வரக் கூடும்! ஹெச்.ஐ.வி. இதில் பாரபட்சமே காட்டுவதில்லை! இதுதான் உண்மை!!
"ரத்ததானம் மூலமா இது பரவும்தானே! ரத்தமும் ரத்தமும் கலக்குதே" என அப்பாவியாகக் கேட்டான் மூர்த்தி!
"நீ கேக்கறது சரிதான்! முன்னெல்லாம் இது இப்படியும் வந்ததா நிகழ்வெல்லாம் இருக்கு! ஆனா, இப்ப இது பற்றிய விழிப்புணர்ச்சி வந்திருப்பதாலும், ஒவ்வொரு முறை ரத்தம் எடுக்கும் போதும், ரத்தம் கொடுக்கும் போதும் சுத்திகரிக்கப்பட்ட ஊசிகளையே பயன்படுத்துவதாலும், இந்த நோய் வர வாய்ப்பே இல்லை! மேலும், இப்போதெல்லாம், இந்த நோய் இருக்கிறதா என முறையாகப் பரிசோதிக்கப்பட்ட பின்னரே ஒருவரின் ரத்தம் மற்றவருக்கு அளிக்கப்படுவதாலும், இது பெரும்பாலும் தவிர்க்கப்படுகிறது!
"கருத்தடை மாத்திரைகளை உபயோகிப்பதின் மூலம் இதைத் தவிர்க்கலாம் என ஒரு கருத்து இருக்கே!"
"தவறான கருத்து! கருத்தரிப்பதை மட்டுமே இது தவிர்க்கும்! திரும்பத் திரும்ப இதையே சொல்ல போரடிக்குது! பச்சப்புள்ள வேற திட்றாரு! இருந்தாலும் மீண்டும் ஒருமுறை சொல்றேன்! இந்த நோய் வராமல் தடுக்க, முறையற்ற உடலுறவைத் தவிர்ப்பது, இந்த நோயால் தாக்கப்படாத ஒருவருடன் மட்டுமே உறவு கொள்வது, ஊசிகளைப் பரிமாறிக் கொள்ளாமல் இருப்பது, இவை மட்டுமே! முறையான தடுப்பு சாதனங்கள் உபயோகித்து இதைத் தவிர்க்க முடியும்! அதில் இந்த கருத்தடை மாத்திரைகள் அடங்காது!:))" என்றேன்!
[தொடரும்!]
6 Comments:
நல்லா விளக்கமா போட்டு இருக்கீங்க.. நன்றி...
நீங்க ஒருத்தராவது வந்து சொன்னதற்கு நன்றி, மங்கை அவர்களே!!
இவ்வளவு சிறப்பாக டாக்டர் உடல் நலம் பத்தி சொல்றார். எல்வாம் படிச்சிட்டு ஓடிறாங்களே.
சிறப்பான விளக்கப் பதிவுகள் டாக்டர்.
டாக்டர் சங்கர்சார்,
என்னுடைய ஹெல்த்கேர் இதழில்
தங்களது படைப்புகள் எல்லாம்
வெளியிட வேண்டும் என்ற எண்ணம் கூடிய விரைவில் நிறைவேற அந்த முருகன் அருள் முன் நிற்கட்டும்.
ராஜா
தங்களது முயற்சி நிறைவேற மகிழ்வுடன் சம்மதித்து, நானும் முருகனருளை வேண்டுகிறேன், திரு. ராஜா. நன்றி.
வெளியிடும்போது எனக்கும் தெரிவியுங்கள்.
Dr VSK,
I am single and going to get married, i am confused about anal and oral sex.
Am also unclear if they are safe. Please guide me so i could learn to pursue or not to ..
Regards,
Cute
Post a Comment
<< Home