"கசடற"

அறிவியல் தொடர்பான எனக்குத் தெரிந்த தகவல்களை, ஒரு மருத்துவன் எனும் பார்வையில் சொல்ல விழைகிறேன். முழுக்க முழுக்க இவை என் கருத்துகள் மட்டுமே! முருகனருள் முன்னிற்கும்!

Monday, July 21, 2008

"பாலியல் கேள்விகளுக்கு "கசடற"வின் பதில்கள்!" - 3

"பாலியல் கேள்விகளுக்கு "கசடற"வின் பதில்கள்!" - 3

முந்தையப் பதிவு

வேந்தன் அரசு :

கேள்வி:
ஐயா கசடு அற,

குழாயை துண்டித்து விட்டால் விதையில் பிறக்கும் தலைபிரட்டைகளின கதி என்ன?

கசடற: இவை மீண்டும் ரத்தத்தில்[நேரடியாக அல்ல!] கலக்கின்றன. செயலிழந்த நிலையில்.

நன்றி... கேள்விக்கு!

கேள்வி: வேந்தன் அரசு
நன்றி

அறுபடாத குழாய் உள்ளவர்கள் பல நாள் வடிக்காமல் இருந்தால் இதே விளைவு உண்டா?

கசடற: இது குறித்து இன்னும் சில விளக்கங்கள்.

நம் உடலில் சுரக்கும் உமிழ்நீர், சிறுநீர் போல எப்போதுமே இந்த விந்து சுரப்பதில்லை.

இந்தச் சுரப்பியை உணர்வு பெற்று எழச் செய்யும் போது மட்டுமே, இந்த நாளங்கள் உந்தப்பட்டு, மற்ற சில கலவைகளோடு, விந்தணுவும் சேர்ந்து விந்து வெளிப்படுகிறது.

உடலுறவின் இறுதியிலோ, அல்லது சுய இன்பம் போன்ற செயல்பாடுகளாலோ, இந்த விந்து வெளிப்படுகிறது.

இந்த அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு, விந்தணு சுரப்பதில் ஒரு தடையும் இருப்பதில்லை.

விந்தோடு கலக்க உதவும், குழாய் துண்டிக்கப்படுவதால், இதன் கலப்பு தடுக்கப்பட்டு, விந்தணு இல்லாத விந்து வெளியேறுகிறது.

வெளியேற முடியாத விந்தணு ரத்தத்தோடு கலக்கிறது.

---------------------------

கேள்வி: ஆண்களுக்கு வரும் பால்வினை நோய் எதனால் வருகிறது என்று விளக்கமுடியுமா? அப்படியே அதை எப்படித் தவிர்க்கலாம் என்றும் விளக்குங்களேன்.

கசடற: ஆண்களுக்கு, பெண்களுக்கு எனப் பொதுவாக இல்லை எனினும், முக்கிய நோய்கள் அனைத்துமே இருபாலருக்கும் வரக்கூடும் என்றாலும், இந்தக் கேள்வியை மையமாகக் கொண்டு ஒரு சில முக்கியமான பால்வினை நோய்களை விளக்க முற்படுகிறேன்.

ஒரு டஃஜனும் மேற்பட்ட பால்வினை நோய்கள் இருக்கின்றன. இதில், குறிப்பாக ஒரு ஆறு நோய்கள் ஆண்களை வருத்தும். அவைகள் என்னவென்று பார்ப்போம்.

ஸிஃபிலிஸ் என்னும் மேகநோய்:
எய்ட்ஸ்/ ஹெச்.ஐ.வி
கொனோரியா என்னும் வெட்டைநோய்
க்ளமிடியா
ஹ்யூமன் பபில்லோ வைரஸ்
ஜெனிடல் ஹெர்பிஸ்

இதில் இந்த எய்ட்ஸ்/ ஹெச்.ஐ.வி பற்றி விவரமான பதிவு ஏற்கெனவே போட்டிருக்கிறேன்.

மற்ற நோய்களைப் பற்றி ஒரு சுருக்கமான வரைவு.

கொனோரியா என்னும் வெட்டைநோய்:

சிறுநீர் வழியே ஒரு வெள்ளை நிற திரவம் வடிவது, சிறுநீர் கழிக்கும் போது வரும் எரிச்சலும் இந்நோயின் அறிகுறிகள்.
இது ஆண்மை இழப்புக்கும் வழி வகுக்கும்... சரியான சிகிச்சை எடுக்காவிட்டால்.
இந்நோய் இருப்பவருடன் உடலுறவு கொள்வதால் இது வருகிறது.

உடலின் பல பாகங்களை இது பாதிக்கும்.
எலும்பு நோய்[], கண்பார்வை பாதிப்பு போல பல மோசமான விளைவுகளை இது ஏற்படுத்தும் என்பதால் இந்த நோயின் அறிகுறி கண்டவுடனேயே சிகிச்சை எடுப்பது நல்லது.
ஒரு சில எளிய மருந்துகள் மூலம் இதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும். கவனம்!

"க்ளமைடியா"

இந்த நோய் வந்ததின் அறிகுறிகளே தெரியாமல் இருப்பதுதான் இதன் சிறப்பு !
தனக்கு இது வந்ததே தெரியாமல் மற்றவருக்கும் பரப்பப்படும் நோய் இது.
எரிச்சல், விரை வீங்குதல் போன்ற அறிகுறிகள் இதற்கு.

ஹெர்பிஸ் சிம்ப்லெக்ஸ் வைரஸ்[2]:

ஆணுறுப்பில் சில புண்களை உண்டாக்கும் இந்த நோய் கிட்டத்தட்ட ஸிஃபிலிஸ் என்னும் மேகநோய் பொன்ற தோற்றத்தை அளிக்கும்.
மருந்துகள் மூலம் குணமாக்கலாம் இதனை.

ஹ்யூமன் பாபில்லோ வைரஸ்:

ஆணுறுப்பு, ஆசன வாய், இன்னும் சில இடங்களில் ஒரு சில தழும்புகளை இது ஏற்படுத்தும். ஆண், பெண் இருவருக்கும் இது ஒருவர் மூலம் ஒருவருக்குத் தொற்றும்.
11 முதல் 12 வயதுக்குள் போட்டுக்கொள்ளும் ஊசியினால் இதைத் தவிர்க்க முடியும்.

ஸிஃபிலிஸ்:

தவிர்க்க முடியாது என்றாலும் குணப்படுத்த்க் கூடிய நோய்தான் இந்தக் கொடிய நோய். இது வந்தவருடன் கலப்பதால் இது வருகிறது.
ஆனால், சரியான சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால், இது ஆளையே இறுதிவரை துன்பப் படுத்தும் என்பதை மனதில் கொண்டு முறைய்யன சிகிச்சை மேஷ்ற்கொள்ள வேண்டும்.
ஆணுறுப்பில் ஒரே ஒரு புண் மட்டும் வந்து சில நாட்களில் மறைந்துவிடும்.
ஆனால், இந்தக் கிருமி உள்ளேயே இருந்துகொண்டு, பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
இதை மனதில் கொள்ளுங்கள்.

உரிய காலத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.
அசட்டையாய் இருந்து விடாதீர்கள்.

கேள்வி: இதை எப்படி தவிர்ப்பது?

கசடற: 1. கட்டியவருக்கு உண்மையாய் இருங்கள்! 2. உங்கள் உறவைத் தவிர, மற்றவருடான உடலுறவைத் தவிருங்கள். 3. ஆணுறை உபயோகிங்கள்.
இந்த மூன்று செய்திகளை ஒரு மந்திரமாகப் பயன்படுத்துங்கள்!
உங்கள் வாழ்வு சிறக்கட்டும்.
வாழ்த்துகள்!

Labels: , ,

Saturday, July 12, 2008

"பாலியல் கேள்விகளுக்கு "கசடற"வின் பதில்கள்!" - 2

"பாலியல் கேள்விகளுக்கு "கசடற"வின் பதில்கள்!" - 2

"குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை" [Vasectomy]

சென்ற பதிவில் குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை பற்றி சொல்வதாகச் சொல்லியிருந்தேன்.

இதோ அதன் விரிவு.

இதுவும் கேள்வி-பதில் வடிவிலேயே!

கேள்வி: 'வாஸெக்டமி' என்றால் என்ன? இது எப்படி செய்யப்படுகிறது?

கசடற: பொதுவாக 'குடும்பக் கட்டுப்பாடு ஆப்பரேஷன்' என வழங்கப்படும் இதன் நேரடி மொழிபெயர்ப்பு 'குழாய் அறுப்பு' என்பதே!

விதைப்பைக்குள்[scrotum] இருக்கும் விதைகளில்[testicle] இருந்து சுரக்கும் விந்தணு[sperm] ஒரு குழாய்[vas deferans] மூலமாக.... ஒவ்வொரு விதை[விரை][testicle]யிலிருந்தும் ஒரு குழாய்... இதை எடுத்துச் செல்ல உதவும் விந்துவுடன் கலந்து உடலுறவின் இறுதியில் பெண்ணின் உறுப்புக்குள் பாய்கிறது.

இந்தக் குழாய்கள் துண்டிக்கப்படும் அறுவைச் சிகிச்சையே இந்த 'வாஸெக்டமி'.

இதன் மூலம் ஒரு ஆண் கருத்தரிக்கச் செய்யும் சக்தியை மட்டும் இழக்கிறான்...... தன் ஆண்மையை அல்ல!

இது ஒரு எளிய அதிகம் செலவில்லாத சிகிச்சை.

இனிமேல் ஒரு பெண்ணைக் கருத்தரிக்கச் செய்யமுடியாது என்ற ஒன்றைத் தவிர, ஒரு ஆணின் செயல்பாட்டில் வேறு எந்தக் குறைபாடும் வருவதில்லை என்பதை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்.

உடலுறவில் எந்தவொரு சிரமமும் இல்லாமல் செயல்பட முடியும்... விந்துவும் வெளியேறும்... பெண் கர்ப்பமாவதில்லை... அவ்வளவுதான்!

இது பற்றிய சரியான, முறையான அறிவு இல்லாமல், பெண்களைக் குடும்பக் கட்டுப்பாடு செய்யச் சொல்லி அவர்களைக் கஷ்டப்படுத்தும் கொடுமை அதிகமாவதை நாமெல்லாம் தவிர்க்கலாமே.

இது ஒரு 30- 45 நிமிஷ வேலை!
விரைப்பையின் ஒரு பக்கத்தில் முதலில் மரத்துப்போகும் ஊசி போடப்பட்டு, ஒரு சிறிய துளை மூலம், இந்தக் குழாய் துண்டிக்கப்படுகிறது. துண்டிக்கப்பட்ட இருமுனைகளும் தைக்கப்பட்டு, விரைப்பையின் துளையும் தைக்கப்படுகிறது.

இதேபோல், இப்போது, அடுத்த பக்கத்திலும் இது செய்யப்படுகிறது.

இதை கத்தியில்லாமல் செய்யும் முறைகளும் இப்போது புழக்கத்தில் வந்துவிட்டது.

இதைச் செய்யும்போது ஒரு வலியும் இருக்காது. அடுத்து சில நாட்களுக்கு அந்த இடத்தில் சற்று லேஸான வலி இருக்கலாம்.

கேள்வி: இதனால், எந்தத் தொந்தரவுமே இருக்காதா?

கசடற: இல்லை எனச் சொல்ல முடியாது! எந்த ஒரு அறுவை சிகிச்சையிலும் வரக்கூடிய கோளாறுகள்[infection] இதிலும் வரலாம்..... கவனமில்லாமல் இருந்தால். சீழ் பிடித்தல், ஜுரம், ரத்தப்போக்கு போன்றவை ஒருசிலருக்கு வரலாம். ஆனால், இதன் சாத்தியக்கூறு இப்போதெல்லாம் அநேகமாக இல்லை என்றே சொல்லலாம்.

கேள்வி: இதைச் செய்த எத்தனை நாள் கழித்து ஒருவர் உடலுறவில் ஈடுபடலாம்?

கசடற: 4 வாரங்களுக்குப் பிறகு உடலுறவில் ஈடுபடமுடியும் என்றாலும், 8 முதல் 10 வாரம் அல்லது 15 முதல் 20 முறை விந்து வெளிப்படும் வரை, விந்தணு விந்துவில் இருக்கக்கூடிய சாத்தியக் கூறு இருப்பதால், மருத்துவ சோதனைகள் மூலம் இது இல்லை என உறுதிப்படுத்திய பின்னரே இதன் பயனை உணரமுடியும். அதுவரையில் "தன் செயலாகவோ" [masturbation]அல்லது ஆணுறை[condom] உபயோகித்தோ இதில் ஈடுபடுவது நல்லது.

கேள்வி: எனது செயல்பாட்டில் ஏதேனும் மாற்றம் இருக்குமா?

கசடற: குறி விறைப்பு, [erection]செயல்பாடு, [performance]விந்து வெளியேற்றம்[ejaculation] இந்த எதிலும் ஒரு மாற்றமும் இருக்க வாய்ப்பே இல்லை. அப்படி ஏதாவது வந்தால், நண்பர் சுல்தான் சொன்னது போல, செய்துகொண்டவரின் [அறியாமையால் வரும்] மனநிலை மாறுபாடு மட்டுமே இதற்குக் காரணம்.
பொதுவாக, இனி கரு உண்டாகாது என்னும் உணர்வு, ஒரு புதுவித உற்சாகத்தைக் கொடுத்து, பயமில்லாமல், உடலுறவில் ஈடுபட வழி வகுக்கிறது என்றே ஆய்வுகள் சொல்லுகின்றன.

விந்தணு இல்லாமல் செய்கிறது இந்த சிகிச்சை! ஆண்மை இழக்கச் செய்வதில்லை!

ஆண்மைத்தன்மையைக் காட்டுகின்ற தாடி மீசை போன்றவற்றுக்குக் காரணமான சுரப்பிகளும் இந்த விதை[ரை]யில்தான் சுரக்கின்றன. அவற்றுக்கு ஒரு பாதிப்பும் ஏற்படுவதில்லை. விந்துவின் அளவிலும் இதனால் பெரிய மாற்றம் ஏற்படுவதில்லை... விந்தணுக்களின் சதவிகிதம் 2 முதல் 5 வரையே, மொத்த விந்துவில்!


கேள்வி: இப்படிச் செய்துகொண்டபின் இதை திரும்பவும் பழையபடி மாற்றமுடியுமா?

கசடற: முடியும்! இப்போது இது அதிக அளவிலேயே செய்யமுடிகிறது! ஆனால், இதைச் செய்துகொள்வதால் விந்தணு மீண்டும் வரத் துவங்கும் என்ற உத்திரவாதம் இல்லை! மேலும், இதைச் செய்ய அதிகப் பணம் செலவாகும். கவனம்! கவனம்!

Labels: , ,

Saturday, July 05, 2008

"பாலியல் கேள்விகளுக்கு "கசடற"வின் பதில்கள்!"

"பாலியல் கேள்விகளுக்கு "கசடற"வின் பதில்கள்!"

என் இனிய நண்பர் கோவி. கண்ணன் பாலியல் பற்றிய கேள்விகளுக்கு நான் பதில் அளிக்க வேண்டுமெனக் கேட்டிருக்கிறார். அவரது வேண்டுகோளை ஏற்று, என்னால் முடிந்த அளவில் இங்கு பதிலிறுக்க முயற்சிக்கிறேன். அவருக்கு எனது நன்றி.

இங்கு சொல்லப்படுபவை எல்லாமும், மருத்துவக் குறிப்புகளும், ஆய்வுகளும் சொல்வதை வைத்தே நான் இடுகிறேன் என்பதையும், உங்கள் மருத்துவரைக் கலந்து ஆலோசிப்பது மிகவும் முக்கியம் என்பதையும் மனதில் கொள்ளவும். இவையெல்லாம் ஒரு தகவலுக்கு மட்டுமே! முடிந்தவரையில், உண்மைக்கு மாறாக எதையும் சொல்லவில்லை என்பதையும் வலியுறுத்துகிறேன்.கேள்வி -1

டிபிசிடி கேட்ட, விஎஸ்கே ஐயாவிற்கு கேள்வி :

குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை செய்தப் பிறகு தேவைப்பட்டால் பின்னாளில் மீள்பெற வழியுண்டா..(இருபாலர்க்கும்)...?

கசடற: இது ஒரு சிக்கலான கேள்வி!
ஏனென்றால் ஆண்களுக்கு செய்யப்படும் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கும், பெண்களுக்கு செய்யப்படுவதற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது.

ஆண்களுக்குச் செய்யப்படும் அறுவை சிகிச்சை,[vasectomy] விந்தணு [sperm] வரும் குழாயை மட்டும் துண்டிப்பதால் நிகழ்கிறது. இதை அநேகமாக திருத்தி அமைக்க முடியும். ஏனென்றல், இது விரைப்பைக்குள்[scrotum] இருப்பதாலும், இந்தாக் குழாய் நீளம் அதிகம் இல்லாமல் இருப்பதாலும். நூற்றுக்கு தொண்ணூறு பேருக்கு இதை வெற்றிகரமாக திருத்தக் கூடிய முறைகள் இருக்கின்றன.

பெண்கள் விஷயத்தில் இது சற்று சிக்கலானது. கருமுட்டை[ovum] சினையிலையில்[ovaries] உருவாகி, ஒரு குழாய்[fallopian tubes] மூலம் சினைப்பைக்கு[uterus] வருகிறது. இந்தக் குழாய் இருபுறமிருந்தும் [வலது, இடது] வருகிறது. இவை சற்று நீளமான குழாய்கள் என்பதால், அறுவை சிகிச்சை முடிந்தபின், இவை சுருங்கி விடுவதால், மீண்டும் சேர்ப்பது கடினமாகிப் போகிறது. இங்கு 100க்கு 40 சதவிகிதமே பலனளிக்கிறது. அதுவும் உடனே செய்யப்படுபவர்க்கே!

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்!
அறுத்துக் கொள்வதைவிட, மீண்டும் இணைப்பதற்கு அதிகச் செலவாகும்..... இரு முறைகளிலும்!

கேள்வி-2
குடும்பக் கட்டுப்பாடு செய்வதன் மூலம் உடலுறவில் ஏதேனும் வித்தியாசம் வர வாய்புள்ளதா..?

கசடற: இங்கு ஆண்களைப் பற்றியே கேட்பதாக நினைக்கிறேன்.
இருந்தாலும், இருபாலர்க்கும் பொதுவாகவே சொல்லுகிறேன்.
குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்வதால், எந்த விதத்திலும்...... ஆமாம்..... எந்த விதத்திலும் உடலுறவு கொள்வதில் வேறுபாடே இருக்க வாய்ப்பில்லை.
ஆனாலும், இதைச் செய்து கொண்டவரின் மனநிலையைப் பொறுத்து இதில் சில வேறுபாடுகள் நிகழ்வதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இனி தன்னால், ஒரு பெண்ணைக் கருவாக்க முடியாது என்பதால், சிலரது மனநிலை தளர்ந்துபோய், குறி விரைப்பிலிருந்து [erection], முழு உறவு கொள்வது வரைக்கும், பல ஆண்கள் ஒரு தாழ்வு மனப்பான்மைக்கு உள்ளாகி, உடலுறவில் ஒரு உற்சாகமின்மையைக் கொள்ளுகிறார்களாம்!

பெண்கள் இந்த விஷயத்தில் இன்னமும் அதிகமாகப் பாதிக்கப் படுகிறார்கள் என ஆய்வு சொல்லுகிறது!தன்னிடமிருந்து ஒரு பெரிய துருப்புச் சீட்டு.... கருத்தரிப்பு என்ற ஒன்று.... பறிபோனதாகக் குமைந்து அதிகமான மன உளைச்சலுக்கு ஆளாகி, உடலுறவில் ஈடுபாடில்லாமல் போகிறார்கள் என்பது மிகவும் வருந்தத் தக்கது.

இருபாலரும் ஒன்றை நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

இனிக் கருத்தரிக்க உதவமுடியாது என்ற ஒன்றைத் தவிர, வேறு எந்த விதத்திலும் இதனால் குறையே இல்லை.

விரும்பிச் செய்து கொண்ட பின்னர், இப்படி மன வருத்தம் கொள்ளாமல், உடலுறவை மகிழ்வோடு, பயமில்லாமல் அனுபவிக்க இருவரும் புரிந்து கொள்ள வேண்டும்!

கேள்வி - 3

கிரி :

கோவி.கண்ணன் கூறியபடி பார்த்தால், அவரருடைய நண்பர் விலைமாதிடம் சென்றதால் தான் ஆண்மை குறைவு ஏற்பட்டதா?


கசடற: முழுக்க முழுக்க தவறான கருத்து இது! விலைமாதிடம் செல்வதால், ஆண்மைக்குறைவு ஏற்பட வாய்ப்பே இல்லை. பாலியல்நோய் வரவே நிறைய வாய்ப்பிருக்கிறது!கேள்வி -4
ஆமாம் என்றால். விலைமாதிடம் போவதற்கும் அவருக்கு ஆண்மை குறைவு ஏற்பட்டதிற்கும் என்ன சம்பந்தம்?

கசடற: ஒரு சம்பந்தமும் இல்லை!கேள்வி -5
இல்லை அவருக்கு முன்பே ஆண்மை குறைவு இருந்ததா?


கசடற: எனக்குத் தெரியாது! அப்படி இருந்திருந்தால், எப்படி அடிக்கடி அவரால் அங்கு செல்ல முடிந்தது?!!

கேள்வி -6

அனானி : மருத்துவர் வீஎஸ்கே ஐயா,

கோவி.கண்ணன் பதிவில், யரோ ஒரு நண்பர் 'ஆண்கள் குடும்பக்கட்டுபாடு அறுவை சிகிச்சைக்கு பின் உறவில் ஈடுபடும் ஆண்களுக்கு காற்றுதான் வரும் என்று சொன்னதாகவும், அதைக் கேட்டு சிரித்ததாகவும் சொல்லி இருக்கிறார். அதற்கு பதிலை அவர் சொல்லவில்லை. தாங்கள் ஆண்களுக்கான குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை பற்றி விளக்க முடியுமா ?

கசடற: சுருக்கமாகச் சொல்லுகிறேன் இங்கு. ஏனென்றால், இதைப் பற்றி விரிவாக எனது அடுத்த பதிவு வரும்.

ஆண்களுக்குச் செய்யப்படும் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மூலம், கருத்தரிக்கச் செய்யும் விந்தணுக்கள்[sperms] உற்பத்தி ஆகும் குழாய்[vas deferans].... இது விரைப்பைக்குள் இருக்கும் விரைவிதைகளில்[testicles in the scrotum] இருந்து துவங்குகிகிறது....... மட்டும் துண்டிக்கப்பட்டு, உடலுறவின் இறுதியில் வெளியாகும் விந்துவுடன் கலக்காமல் இருக்கச் செய்யப் படுகிறது.

இதன் மூலம், விந்தணு கலக்காத விந்து நீர்[semen] மட்டுமே இறுதியில் பாய்கிறது.
எனவே, காற்று மட்டுமே வரும் என்பதெல்லாம் யாரோ விட்ட புருடா! நம்பாதீங்க!

ஆண்களுக்கான குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை எப்படி செய்யப் படுகிறது என்பதை விரிவாக விளக்கி பதிவிடுகிறேன்.

Labels: , , ,