"கசடற"

அறிவியல் தொடர்பான எனக்குத் தெரிந்த தகவல்களை, ஒரு மருத்துவன் எனும் பார்வையில் சொல்ல விழைகிறேன். முழுக்க முழுக்க இவை என் கருத்துகள் மட்டுமே! முருகனருள் முன்னிற்கும்!

Saturday, January 27, 2007

"லப்-டப்" 9 -- சாதி உட்பிரிவுகள்

"லப்-டப்" 9 -- சாதியில் உட்பிரிவுகள்!

நாலு வகை பிரிவுகள் ரத்தத்தில் இருக்கிறதென போன பதிவில் சொன்னேன்.

இதற்குள்ளும் உட்பிரிவுகள் இருக்கிறதென அதே "மனு", கார்ல் லேண்ட்ஸ்டைனெர் Carl Landsteiner] 1940-ல், அலெக்ஸாண்டர் வைனெர் [Alexander Weiner] என்பவருடன் சேர்ந்து, கண்டு பிடித்தார்!

இதைப் பற்றிச் சொல்லலாமென நினைத்த போது,

ஏற்கெனவே நம்ம டாக்டர் ராமநாதனும், திருமதி கீதா சாம்பசிவமும் விளக்கமாக சொல்லியிருப்பதை,

"பின்னூட்ட நாயகன்", "பின்னூட்ட ஜாம்பவான்" ,"பின்னூட்ட முன்னோடி", இலவசக் கொத்தனார் என் கவனத்திற்குக் கொண்டு வந்தார்!

இதைவிடச் சிறப்பாகவோ, புதிதாகவோ சொல்ல என்னால் முடியாது என்பதால், அதை உங்கள் பார்வைக்கு முன் வைக்கிறேன்

சுட்டி-1

சுட்டி-2

சுட்டி-3

அதைப் படிக்க நேரம் இல்லாதவர்களுக்காக ஒரு சிறு விளக்கம், சுருக்கமாக!

45 தனித்தனி ஆண்டிஜென்களால் நிர்ணயிக்கப்பட்டு, குரோமோசோம் எண் ஒன்றின்[Chromosome #1] ஜீன்களில் நிலை பெற்றுள்ள ஒரு கணிப்பால், நம் அனைவரின் ரத்த குரூப்புகளும், பாசிடிவ் அல்லது நெகடிவ் [posiyive or negative] என மேலும் உட்பிரிவுகளாய்ப் பிரிக்கப் படுகிறது!

எனவே, நாலு சாதிகளும்[A, B, AB, O] ஏ பாசிடிவ், ஏ நெகடிவ், பி பாசிடிவ், பி நெகடிவ், ஏபி பாசிடிவ், ஏபி நெகடிவ், ஓ பாசிடிவ், ஓ நெகடிவ் என எட்டாகப் பிரிகின்றன!!

இதனை ஆர்ஹெச் பாசிடிவ், நெகடிவ் [Rh positive, Rh Negative] எனச் சொல்வர்.

ஆர்ஹெச் தந்தையும், ஆர்ஹெச் தாயும் ஒரு ஆர்ஹெச் பாசிடிவ் குழந்தையையோ, அல்லது ஆர்ஹெச் நெகடிவ் குழந்தையையோ 50/50 என்ற கணக்கில் உருவாக்க முடியும்.

அப்போது, தாயின் நெகடிவ் செல்கள், இந்த பாசிடிவ் குழந்தையின் [பாசிடிவ்] செல்களை அழிக்கும் அபாயம் நிகழ்கிறது.

பொதுவாக, முதல் குழந்தை இதிலிருந்து தப்பித்து விடுகிறது!

ஆனால், இதனால் ஏற்படும் ஆர்ஹெச் ஆண்டிபாடிகள் அடுத்து வரும் பிறப்புகளுக்கு பெரும் ஆபத்தைக் கொடுக்கின்றன!

இது அறிந்தவுடன், ஏழாம் மாதத்திலும், குழந்தை பிறந்த 72 மணி நேரத்துக்குள்ளும் ஒரு தடுப்பு ஊசி போடுவதின் மூலம், தடுக்க முடியும் என்பது இன்றைய மருத்துவ உலகின் சாதனை!

திருமணத்திற்கு முன்னோ, அல்லது கருத்தரிக்கும் முன்னரோ இதைச் சோதனை செய்து கொள்வது மிகவும் முக்கியம்!

அடுத்த வாரம் மீண்டும் சந்திப்போம்!

Saturday, January 20, 2007

"லப் - டப்" -- 8 "சாதிகள் இருக்குதடி பாப்பா!"

"லப் - டப்" -- 8 "சாதிகள் இருக்குதடி பாப்பா!"

பதினேழாம் நூற்றாண்டு மத்தியில், உலகின் முதல் ரத்த பரிமாற்றம்[Blood Transfusion] நடைபெற்றது.
ஆனால், நோயாளி இறந்து போனார்!
அதன் பிறகு, நோயாளியைக் காப்பாற்ற முயற்சி செய்யும் கடைசி ஆயுதமாகவே ஒரு 150 ஆண்டுகள் கழிந்தன.... பெரும்பாலும் தோல்வியாகவே!

இதைப் பற்றி சிந்தித்த ஒரு மருத்துவர் பெரிதும் முயன்றார். வெற்றியும் பெற்றார் 1900-ல்!
அவர் பெயர் கார்ல் லேண்ட்ஸ்டைனெர்[Karl Landsteiner].

மருத்துவ உலகின் "மனு" இவர்!

ஆமாங்க! ரத்தத்தில் 4 தனித் தனி சாதிகள் இருக்கு எனச் சொன்னவ்ர் இவர்தான்!

A, B, AB, O என்ற நாலுவகைப் பிரிவுகள்.
இவற்றை நிர்ணயிக்க உதவும் நால்வகைப் பொருட்கள், நம் உடலிலேயே இருப்பவை,.. கீழே!
A, B, என இரு 'தடுப்பு சக்தியை தூண்டும் என்சைம்கள்'[Immune response enzymes],ஆன் டிஜென்கள்[antigens].
anti-A, anti-B என இவற்றிற்கு மாற்றான விளைவை, எதிர்ப்பை [] உண்டுபண்ணும் ஆன்டிபாடிகள்[antibodies]

ஒரே ஒரு உதாரணம் கொடுக்கிறேன்.

'ஏ' வகை ரத்தம் தனது சிவப்பணுக்களின் மேல்பாகத்தில், 'ஏ' ஆண்டிஜெனைக் [A antigen]கொண்டிருக்கும்.

இதன் மூலம், 'ஆண்டி-ஏ' ஆண்டிபாடிகள் [anti-A antibodies] உருவாகமால் தடுக்கப் படுகிறது.
'ஏ' குரூப் ரத்தம் தானமாக[கொடையாக!] வழங்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப் படுகிறது.

அதே சமயம், 'பி'குரூப் ரத்தம் இவர்களுக்குச் செலுத்தப்படும் போது, நோயாளியின் ரத்தத்தில் இருக்கும் ப்ளாஸ்மாவில் உள்ள ஆண்டி-பி ஆண்டிபாடிகள்[anti-B antibodies] இதனை வேற்றுப் பொருளாகக் கருதி, ரத்தம் உடலில் சேரவிடாமல் முறியடித்து, உயிருக்கே ஆபத்தையும் உண்டு பண்ணுகிறது.

இது போலவே, மற்ற பிரிவுகளுக்கும் நிகழ்கிறது!

இதிலும் ஒரு தனிச் சாதி எல்லாருக்கும் உதவும் ஒரு சாதியாக இருக்கிறது!


'ஓ' குரூப் ரத்தம் ஏபிஓ ஆண்டிஜென்களை[ABO antigens] உருவாக்குவதில்லை.
நோயாளியின் ரத்தத்தில் இருக்கும் ஆண்டிபாடிகளுக்கு இப்போது வேலையில்லாமல் போகிறது.
எனவே, இவ்வகை ரத்தம் மற்ற எல்லாவகை ரத்தத்துடனும்[ஏ, பி, ஓ] தயக்கமின்றி சேரும்!
இவ்வகை ரத்தம் உள்ளவர்கள் "பொதுவான கொடையாளிகள்"[Universal donors] எனப்படுவர்.

ஆனால், இவர்களால் எல்லாருக்கும் கொடுக்கத்தான் முடியுமே தவிர, பெறமுடியாது!
'ஓ'குரூப் ரத்தம் ஒன்றுதான் இவர்களுக்குச் சேரும்.

இப்படி ஒன்று இருந்தால், இவர்களுக்கு ஒரு மாற்று இருக்கவேண்டும் என்பதுதானே நியதி!

ஆம், 'ஏபி' வகை ரத்தப் பிரிவாளர்[AB group] எவரிடமிருந்தும் ரத்தம் பெற முடியும், ஏபிஓ ஆண்டிபாடிகளை[ABO antibodies] உருவாக்காததால்!
இவர்கள் ரத்தம் எவருக்கும் சேராது, தன்வகை குரூப்பைத் தவிர!
ஏனெனில், இவர்கள் ரத்தம் இருவகையான ஆண்டிஜெனையும்[A&B] உண்டுபண்ணுவதால், எந்த ரத்தத்தையும் அந்நியமாகப் பார்ப்பதில்லை!

ஒரு சில சொட்டு ரத்தத்தைப் பரிசோதித்து, இவ்வகைகளை சுலபமாகக் கண்டு பிடித்து விடலாம், ஒரு ஆய்வுக்கூடத்தில்!
உங்கள் வகைப் பிரிவு இன்னது என்பதை ஒவ்வொருவரும் அறிந்து வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
தனது குரூப் இன்னது எனத் தெரியாதவர்கள், இப்பதிவைப் படித்ததும், மறக்காமல் சென்று
, உங்கள் மருத்துவரிடம் சொல்லி, உடனே பரிசோதித்துக் கொள்ளவும்!!

இந்த குரூப் சமாச்சாரம் நமது மரபணுக்களில் [genes] உள்ள ஒரு குரோமோஸோமில் [Chromosome 9] பதிந்திருப்பதால், உங்கள் குரூப் எப்போதும், எந்த நிலையிலும் மாறாத ஒன்று!!
பிறந்தது முதல், மரிக்கும் வரை சாதி மாறாது!

மாற்று வகைப்பிரிவுகள் உள்ள தம்பதியர்க்குப் பிறக்கும் குழந்தைகளின் பிரிவு[Genetic Inheritance] எப்படி நிர்ணயிக்கப்படுகிறது என்பது, இப்பதிவிற்குச் சற்று அதிகம் என்பதால் தவிர்க்கிறேன்.
வேண்டுமென்பவர் கேட்டால், பின்னூட்டத்தில் பார்க்கலாம்.

இன்னொரு முக்கியமான விஷயம்!

ஒரு சில பிரிவுகள், குறிப்பிட்ட சில நோய்களால் அதிகமாகப் பாதிக்கப்பட வாய்ப்புகள் இருக்கிறது!


உதாரணமாக, 'ஏ' குரூப் மக்கள் அம்மை நோய், தொண்டைகுழாய்[Oesophagus],கணையம்[pancreas],வயிறு [Stomach] புற்றுநோய் இவற்றால், மற்ற வகையினரை விட அதிகமாகப் பாதிக்கப்படலாம்.

குடல்[வயிற்றுப்] புண்[Peptic Ulcer]காலரா,[Cholera] ப்ளேக் [Plague], மலேரியா[Malaria] முதலிய நோய்கள் 'ஓ' குரூப்பினரை அதிகமாய்த் தாக்கும்.


அடுத்த பதிவில், தாயே தன் கருவை எப்படி, தான் ஒன்றுமே செய்யாமல், அழிக்கிறார்[??!!] என்பதைப் பார்ப்போம்!


[இதில் கூறியிருக்கும் கருத்துகள், முழுக்க, முழுக்க மருத்துவ சம்பந்தமானவையே! மேல்விவரத்திற்கு உங்கள் மருத்துவரை அணுகவும்!]


Monday, January 15, 2007

"லப் - டப்" -- 7 "வாழ்வே மாயம்!"

"லப் - டப்" -- 7 "வாழ்வே மாயம்!"

இதயத்தைப் பற்றி எழுத ஆரம்பித்து, இத்தொடர் சற்று விரிவடைந்து கொண்டே போகிறது!

ரத்தம், ரத்தக்குழாய்கள், பின் இதயம் இவற்றைத் தாக்கும் நோய்களைப் பற்றி பொதுவாக நாம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களைச் சொல்லலாம்.....சுருக்கமாக....என எண்ணுகிறேன்.

இது பற்றிய உங்கள் கருத்தையும் எதிர்பார்க்கிறேன்.


ரத்தத்தில் இருக்கும் செல்களின் குறைபாட்டால் ஏற்படும் அனீமியாவைப் பற்றி சென்ற பதிவில் பார்த்தோம்.
அதில் ஒன்றாக ரத்தப் புற்றுநோயைப் பற்றியும் சொல்லியிருந்தேன்.
எனவே, இந்த 'ப்ளட் கேன்சர்'[Blood Cancer] என்றால் என்ன என்பதைப் பற்றி இன்று பார்ப்போம்.

அதற்கு முன் ஒரு வார்த்தை!

இதில் சொல்லப்படும் தகவல்கள், நீங்கள் இது பற்றித் தெரிந்துகொள்ள ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த மட்டுமே!
இது பற்றி முழுதும் அறிய உங்கள் மருத்துவரை நாடுவதே ஒரே வழி!


வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை, எலும்பு மஜ்ஜையில் இருந்து இதனை உற்பத்தி செய்யும் மூலச்செல்களாகிய ல்யூகோசைட்ஸ் [Leukocytes] என்பவற்றாலும், நிண நோடுகளாலும் [Lymph Nodes] நிர்ணயிக்கப் படுகிறது.

இந்த செல்கள்தாம், க்ரானுலோசைட்டுகள் [Granulocytes] எனப்படும் வெள்ளை அணுக்களையும், லிம்ஃபோசைட்டுகளையும் [Lymphocytes] உற்பத்தி செய்கின்றன.

முதலில் இளம் செல்களாக இருந்து, படிப்படியாக வளர்ந்து, நியூட்ரோஃபில், இயோஸினோஃபில், பேஸோஃபில், மோனோசைட் [Neutrophil, Eosinophil, Basophil, Monocyte]என்ற வெள்ளை அணுக்களாகவும், லிம்ஃபோசைட் [Lymphocyte]எனும் செல்லாகவும் இவை மாறுகின்றன.

இந்த வளர்ச்சியின் ஆரம்பத்திலோ, இடையிலோ நிகழும் சில குறைபாடு மாற்றங்களால், இந்த செல்கள், முழு வளர்ச்சி அடைய முடியாமல் போகின்றன.
இதில் என்ன ஒரு ஆபத்து என்றால், இந்த அரைகுறை செல்கள் பல மடங்கில் தம்மைத் தாமே பெருக்கிக் கொள்ளும் வல்லமை படைத்தவையாக ஆகின்றன!
உடலின் பல பாகங்களுக்கும் இவை செல்லுகையில், இவை செய்ய வேண்டிய வேலையைச் செய்ய முடியாமல், அந்தந்த பாகங்களின் செயல்திறனையும்[Efficiency and functions] பாதிக்கின்றன.

இந்த பாதிப்பு, உடலின் எதிர்ப்பு சக்தியை வெகுவாகக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், தாமே சில எதிர் விளைவுகளையும் உடலில் நிகழ்த்தி, மேலும் உடலை வலு குன்ற வைக்கிறது.

இந்த செல்களின் அளவை உடனடியாகக் கட்டுப்படுத்த முயற்சிகள் செய்யாவிட்டால்,
அது 'நேரடி'[Acute] புற்றுநோயாக உடலைத் தாக்குகிறது.

சிகிச்சையின் மூலமாக இவற்றை உடனடியாகக் கட்டுப்படுத்த இயலும் என்பதால், உடனே, 'நோய் நாடி,[Signs and symptoms] நோய் முதல் நாடி,[diagnose] அது தணிக்கும் வாய் நாடி,[Treatment] வாய்ப்பச் செய்வது [efficiently]' மிகவும் அவசியம் என்று......நான் மட்டும் இல்லை... வள்ளுவரும் சொல்லுகிறார்!

சிகிச்சை அளித்த பின்னரும் ஒரு சில முழுவளர்ச்சி அடைந்த செல்கள், இந்நோயின் உட்கருவைத் தனக்குள் தாங்கி இருந்து வந்து, மீண்டும் எப்போதாவது, உடல்நிலை வேறேதும் காரணங்களால் பாதிக்கப்படும் காலங்களில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் நிலை வரலாம். அதற்கு 'நாள்பட்ட[அ] நீடித்த'[Chronic] புற்றுநோய் எனப் பெயர்.
இதன் விளைவுகளும்,சிகிச்சையும் 'நேரடி'[Acute] புற்றுநோய்க்கு செய்வது போலவே தான்!

மேலே சொன்னது, ரத்தப் புற்றுநோய்களைப் பற்றிய ஒரு பொதுவான விளக்கம்!
இப்போது இதன் வகைகளைச் சுருக்கமாகப் பார்ப்போம்."லுகீமியா"[Leukemia]

1. 'நேரடி லிம்ஃபோப்ளாஸ்டிக் லுகீமியா' [Acute Lymphoblastic Leukemia, ALL]:
லிம்ஃபோசைட்டுகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிப்பதால் ஏற்படும் புற்றுநோய். அநேகமாக சிறுவயதினரையே தாக்கும் நோய்.

2. 'நேரடி மைலோப்ளாஸ்டிக் லுகீமியா' [Acute Myeloblastic Leukemia, AML]:
க்ரானுலோஸைட்டுகளின்,குறிப்பாக நியூட்ரோஃபில், அதிகரிப்பால் வருவது. இது எல்லா வயதினரையும் தாக்கும். என்றாலும், பெரும்பாலும், 20 வயதுக்கு மேற்பட்டவரிடமே காணப்படுவது.

3.'நேரடி மோனோப்ளாஸ்டிக் லுகீமியா' [Acute Monoblastic Leukemia, AMOL ]:
வெள்ளை அணுக்களில் இருக்கும் மோனோப்ளாஸ்டுகளின் எண்ணிக்கை கூடதலால் ஏற்படுவது.

4. 'நேரடி மைலோ-மோனோப்ளாஸ்டிக் லுகீமியா' [Acute Maelomonoblastic Leukemia, AMMOL ]:
நான்கு வகையான வெள்ளை அணுக்களையும் தாக்கும் அரிதான [Rare] நோய்.

ஒரு எளிய ரத்தப் பரிசோதனையின் மூலம், இந்த 4 வகைப் புற்றுநோய்களையும் உடனே அறியமுடியும்.
பொதுவாக செல்களின் எண்ணிக்கை அதிகரித்தே இருக்கும் என்றாலும், சில சமயங்களில், பொதுவான அளவை விட மிகவும் குறைந்தும் இது இருக்கக்கூடும்.

அனீமியாவுக்குச் சொன்ன அத்தனை அறிகுறிகளும்[Signs and symptoms] இதிலும் இருக்கும். பொதுவாக, ஒரு திடீர் காய்ச்சல் மூலம் இது உடலில் வெளிப்படும். அப்போது செய்யப்படும் ரத்தப் பரிசோதனை இதனைக் காட்டிவிடும்! சிகிச்சையும் உடனே தொடங்கி விடலாம்!

சிகிச்சை அளிக்கப்படாத நிலையில், இந்நோய் 4 முதல் 6 மாதங்களுக்குள் இது உயிரைப் பறித்து விடும். சில சமயங்களில், ஒரு சில நாட்களிலேயே!

எனவே, ஏதோ சாதாரண ஜுரம்தான் என அலட்சியமாய் இருந்து விட வேண்டாம். முன்பே சொன்னது போல, கடையில் போய் சில ஜுர மாத்திரைகள் வாங்கி, காலத்தை வீணாக்கவும் வேண்டாம்!!

கீமோதெரபி [Chemotherapy] எனப்படும் புற்றுநோய் சிகிச்சை மருந்துகள் மூலம், இந்நோயைப் பெருமளவில் கட்டுப்படுத்த முடியும்.
இந்த சிகிச்சை முறையில் தேர்ந்த ஒரு மருத்துவரிடம், உங்கள் மருத்துவரே அனுப்பி வைப்பார்.
இதற்கான சிகிச்சை கிட்டத்தட்ட ஒரு 3 ஆண்டுகாலம் நீடிக்கும் என்பதால், இதில் தேர்ந்த ஒரு மருத்துவரிடம் செல்வதே நல்லது!

முழு சிகிச்சையும் முடிந்த பின்னரும், 15 முதல் 20 விழுக்காடு வரை இந்நோய் திரும்பவும் வரக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு.
இதுவே 'நீடித்த லுகீமியா'[Chronic Leukemia] என அழைக்கப்படும்.
இதைப் பற்றி பார்க்கலாம்!

1.'நீடித்த மைலாய்ட் லுகீமியா [Chronic Myeloid Leukemia, CML], 'நீடித்த மைலோஸைடிக் லுகீமியா [Chronic Myelocytic Leukemia, CML], [அ] 'நீடித்த மைலோஜினஸ் லுகீமியா [Chronic Myelogenous Leukemia, CGL]' என அழைக்கப்படும் "நீடித்த க்ரானுலோஸைடிக் லுகீமியா"[Chronic Granulocytic Leukemia [CGL]:
வெள்ளை அணுக்களின் பல்வேறு செல்களின் பல்வேறு வளர்ச்சி நிலைகள் மெடமைலோஸைட், மைலோஸைட், ப்ரீமைலோசைட், மைலோப்ளாஸ்ட்[metamyelocyte, myelocyte, premyelocyte, myeloblast] எனப்படும். இவை அனைத்து நிலைகளும், சாதாரணமாக எலும்பு மஜ்ஜைக்குள் மட்டுமே காணப்படும்.
இந்தவகையான 'நீடித்த' நோயில் இவை அனைத்தும், ரத்தம் மூலம் உடலின் எல்லாப் பாகங்களிலும் சென்று செயல்திறனைக் குறைக்கிறது.
இதையும் தாங்கிக் கொண்டும், இப்பாகங்கள் தம் வேலையை கொஞ்சநஞ்சம் இருக்கும் முழு வளர்ச்சி அடைந்த செல்களின் மூலம் நிகழ்த்தி வரும்.
ஏதாவது வேறு சில நோய்களால், உடல்நலம் பாதிக்கப்படும் போது, இவற்றின் சுயரூபம் தெரிய வந்து, இதுவே 'நேரடி' நோய் போல உடலைப் பாதிக்கும்.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நெடுநாட்கள், மருந்துகளின் மூலம், இந்நோயின் அளவைக் கட்டுப்படுத்தவென, சிகிச்சையைத் தொடர்ந்து செய்து கொண்டிருப்பது அவசியமாகிப் போகிறது.

'நேரடி' நோய் போலல்லாமல், இது பெரும் விளைவுகளை பொதுவாக நிகழ்த்தாது எனினும், உடல் சோர்வு, எதிர்ப்புத் திறன் குறைவு போன்றவைகள் இவர்களுக்குத் தொடர்ந்து இருந்து வரும். எனவே, இவர்கள் தங்கள் உடல்நலத்தை சரியான முறையில் பேணி வருதல் மிகவும் முக்கியம்.

தொடர்ந்து எதிர்ப்புத் திறன் உடலில் குறைந்து இருப்பதால், 3-4 ஆண்டுகளுக்குள் மரணம் நிகழலாம். சிகிச்சையின் மூலம் இதை சில வருடங்கள் மட்டுமே நீட்ட முடியும்.

ஒரு மருத்துவரின் தொடர்ந்த கண்காணிப்பில் இருந்து வருவதும் தவிர்க்க முடியாத ஒன்று!

2. 'நீடித்த லிம்ஃபோஸைடிக் [அ] நீடித்த லிம்ஃபாடிக் லுகிமியா" [Chronic Lymphocytic or Chronic lymphatic Leukemia, CLL]
'ப்ளேட்லெட்டுகள்' [Platelets] என அழைக்கப்படும் லிம்ஃபோசைட்டுகளின் எண்ணிக்கை இதில் கூடியும், குறைந்தும் பல விளைவுகளை நம் உடலில் செய்து, உடலின் எதிர்ப்பு சக்தியை வெகுவாகக் குறைத்து, பாதிக்கிறது. நோயின் அறிகுறிகள் மெதுவாகவே தோன்றும்..... மெதுவாகவே உடலையும் பாதிக்கும்.

லிம்ஃபோமா[Lymphoma]:


நிண நாளங்களை[Lumphatic system] மட்டும் தனியாக தாக்கும் இவ்வகை நோய் 15 முதல் 35 வயது வரையிலான மக்களைப் பாதிக்கும்.
'நிண நோடுகள்'[Lymph nOdes] இதில் வீங்கிக் காணப்படும். சாதாரண நெறி கட்டலுக்கும் இதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. இதை ஒரு மருத்துவரே முறையாகக் கண்டுபிடிக்க முடியும் என்பதால், 'ஏதோ பல் வலி என்பதால் நெறி கட்டியிருக்கிறது கழுத்தில், காலில் அடி என்பதால் தொடையில் நெறி' என அலட்சியமாக ஒதுக்க வேண்டாம்.
இது ஒரு மெதுவாகக் கொல்லும் நோய்....காதலைப் போல! :)

இதில் ஹாட்ஜ்கின்'ஸ்,[Hodgkin's] நான்ஹாட்ஜ்கின்'ஸ் [Non-Hodgkin's], பர்கிட்'ஸ்[Burkitt's] என மூன்று வகைகள் உண்டு. இவை ரத்தப் பரிசோதனைகளின் மூலம் முடிவு செய்யப்படும்.

மல்டிபிள் மைலோமா [Multiple Myeloma]:


'ப்ளாஸ்மா செல்கள்'[Plasma cells] எனப்படும் ஒருவகை செல்கள் எலும்பு மஜ்ஜையில் இருந்து நம் உடலுக்கு பாதுகாப்பை அளிக்கும் வேலையைச் செய்கிறது.
இந்த 'ப்ளாஸ்மா செல்லே' குறைபட்டுப் போகும் போது அதனால் ஏற்படும் நோய்க்கு இப்பெயர்.
இம்யூனோக்ளோபுலின்[Immunoglobulin, Ig ] எனப்படும் இப்பாதுகாப்பு உடலில் குறையும் போது, எதிர்ப்பு சக்தி வெகுவாகக் குறையும்.
இது ஒரு மிகக் கடுமையான நோய். சிகிச்சையின் தீவிரமும் மிகக் கடுமையாக இருக்கும்.
ஆனால், ஓரளவு கட்டுப்படுத்தக் கூடிய நோயே.... விரைவிலேயே கண்டுபிடிக்கப் பட்டு, சிகிச்சையும் தொடங்கப் படுமானால்!
3-5 ஆண்டுகள் தள்ளிப் போட முடியும்!

பொங்கல் நாளும் அதுவுமாய் பயமுறுத்தியது போதும்!

அனைவருக்கும் என் இனிய "நலங்கனிந்த" பொங்கல் நல்வாழ்த்துகள்!

[சரி! தலைப்புக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா? அட அது நம்ம கமல் படத்தோட பேருங்க! அதுல அவருக்கு 'ப்ளட் கேன்ஸர்! :)]

**இதில் சொல்லப்படும் தகவல்கள், நீங்கள் இது பற்றித் தெரிந்துகொள்ள ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த மட்டுமே!
இது பற்றி முழுதும் அறிய உங்கள் மருத்துவரை நாடுவதே ஒரே வழி!**

[Above is for information purposes only! Please consult your doctor for further details!!]

Saturday, January 06, 2007

"லப் - டப்" -- 6 "அனீமியா"

"லப் - டப்" -- 6 "அனீமியா"

போன பதிவில் நம்ம கொத்தனார் ரத்தம், அதில் இருக்கும் செல்களின் எண்ணிக்கை இதெல்லாம் தெரிந்து என்ன ஆகப்போகிறது என ஒரு கேள்வி கேட்டிருந்தார்!

இதயம் மற்றும் ரத்தம் சம்பந்தமான நோய்களைப் பற்றி எங்கிருந்து ஆரம்பிக்கலாம் என் நினைத்துக் கொண்டிருந்த எனக்கு ஒரு வழியைக் காண்பித்ததற்கு அவருக்கு நன்றி சொல்லி, இதிலிருந்தே தொடங்குகிறேன்!


உலகெங்கும், குறிப்பாக நம் இந்தியாவை மிக வாட்டும் ஒரு நோய் அனீமியா [anemia] என அழைக்கப்படும் "ரத்த சோகை'

இந்த சோகை என்னும் சொல்லிலேயே ஒரு சோகம் ஒளிந்திருப்பதைக் கவனிக்கவும்.
வளம் குறைந்த, நலிந்த சிவப்பு அணுக்கள் தேவையான அளவு பிராணவாயுவை திசுக்களுக்கு கொண்டு செல்ல முடியாத ஒரு சோகமே அனீமியா எனப்படும்.

இதன் அறிகுறிகள் என்னென்ன?

தளர்ச்சி, தோல் வெளுத்துப் போதல், இதயத்துடிப்பு அதிகமாதல், அடிக்கடி மூச்சு வாங்குதல், தலை சுற்றல், தலைவலி, கை,கால் ஜில்லிட்டுப் போதல்.

நோயின் கடுமையைப் பொருத்து மேற்கூறிய அறிகுறிகளின் தாக்கம் அமையும்.

மேற்கூறியவற்றுள் எதேனும், தொடர்ந்து இருந்து வந்தால் டாக்டரை உடனே ஆலோசிப்பது மிகவும் முக்கியம்!

ஒரு எளிய ரத்தப் பரிசோதனை மூலம் இதை உடனே கண்டுபிடித்து சிகிச்சை அளிக்க முடியும்.

ரத்தத்தில் இருக்கும் ப்ளாஸ்மா, சிவப்பு, வெள்ளை அணுக்கள், சத்துப் பொருள்கள், வைட்டமின்கள் பற்றி சென்ற பதிவில் பார்த்தோம்.

சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையோ அல்லது ஹீமோக்ளோபினின் அளவோ குறைவதால் அனீமியா ஏற்படுகிறது.

இவை உற்பத்தியாகும் இடம் எலும்பு மஜ்ஜை.
வலு குறைந்த சிவப்பணுக்கள் மரிக்கையில், மேலும் மேலும் இது போன்ற செல்களையே உடலின் எலும்பு மஜ்ஜை[Bone marrow] உற்பத்தி செய்யும் நிலை ஏற்பட்டு, நோய் கடுமையாகிறது.

[உரமிடாத நிலத்தில் தொடர்ந்து பயிரிடும் போது, அடுத்து வரும் பயிர்கள் வளம் குறைந்து விளைவது போல!]
இவைகளால் அதிக அளவில் பிராணவாயுவைச் சுமக்க முடியாததால், திசுக்கள் வலுவிழந்து சோர்வு ஏற்படுகிறது.

இப்போது அனீமியாவின் வகைகளைப் பார்ப்போம்.

1. இரும்புச் சத்து குறைவால் வரும் ரத்த சோகை: [Iron-Deficiency Anemia]
ஐந்தில் ஒருவர் என்ற கணக்கில் பெண்களை வாட்டுவது இது. எலும்பு மஜ்ஜை ஹீமொக்ளோபினை உற்பத்தி செய்ய இரும்புச் சத்து மிகவும் தேவையான ஒன்று.சிவப்பு அணுக்கள் இறக்கும் போது [ஒரு ஆரோக்கியமான சிவப்பணு சுமார் 90-120 நாட்களுக்கு உயிர் வாழும், நம் உடம்பில்!]அதில் இருக்கும் இரும்புச் சத்து [iron]மீண்டும் புதிய செல்களுக்கு பயன்படுகிறது.
மாதவிலக்கு அதிகமாகப் போகும் பெண்கள், குடல் புண் எனச் சொல்லப்படும் அல்ஸர் நோய்[Peptic ulcer], குடல் புற்று நோய் [colon cancer] போன்ற நோய்களால் ரத்தம் உடலில் இருந்து வீணாகும் பொது இந்த வகை ரத்த சோகை ஏற்படும். இரும்புச் சத்து குறைந்த உணவாலும் ரத்தச் சோகை ஏற்படும்.
கர்ப்பமுற்ற காலத்தில் வளரும் கருவும் தாயின் ரத்தத்தில் இருந்து இரும்புச் சத்தை எடுத்துக் கொள்வதாலும் இது வரும்.

2. வைட்டமின் குறைவால் வரும் அனீமியா: [Vitamin deficiency anemia]
ஃபோலேட்,[Folate] B12 வைட்டமின்கள் வலுவான சிவப்பு அணுக்கள் உருவாகத் தேவையானவை. உணவின் மூலமே இவை நமக்குக் கிடைக்கின்றன. சிறுகுடலில் உறிஞ்சப்படும் இந்த வைட்டமின்கள், குடல் நோயால் அவ்வாறு நிகழாமல், இவ்வகை அனீமியா வருகிறது.


3. நீண்டகால நோய்களால் வரும் அனீமியா: [Anemia of chronic diseases]
புற்றுநோய் [Cancer], ருமடாய்ட் ஆர்த்ரைடிஸ் என்னும் எலும்பு முடக்கு நோய் [Rheumatoid arthritis], க்ரோன்ஸ் நோய் எனப்படும் குடல் சுணக்கம் [Crohn's disease], காசநோய் [T.B.] இன்னும் பல நீண்டகால நோய்கள், சிவப்பு அணுக்கள் உற்பத்தியை பாதிக்கின்றன. இந்த நோய்களுக்காக கொடுக்கப்படும் மருந்துகளின் வீரியத்தாலும், இது நிகழும்!

4. ஏப்ளாஸ்டிக் அனீமியா; [Aplastic anemia]
எலும்பு மஜ்ஜை [Bone Marrow] தன் சக்தியை இழப்பதால் ஏற்படும் இவ்வகை சோகை உயிருக்கே உலை வைக்கும் மிகக் கொடிய நோய்! இது ஒரு வகையான ஆட்டோ இம்யூன் நோய் [Auto-Immune disease]. அதாவது உடலே தனக்குதானே ஒரு எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக் கொள்ளும். சிலவகையான மருந்து வகைகளும் இதனை உண்டாக்கலாம். முக்கியமாக புற்று நோய் மருந்துகள்.
இது எல்லாவகையான ரத்தசெல்களையும் பாதிக்கும்.

5. எலும்பு மஜ்ஜை நோயால் வரும் அனீமியா: [Anemias associated with bone marrow diseases]
லுகீமியா[Leukemia], மைலோ டிஸ்ப்ளேசியா[Myelodysplasia], மல்டிபில் மைலோமா[Multiple Meyloma], லிம்ஃபோமா[Lymphoma]போன்ற நோய்கள் எலும்பு மஜ்ஜையைத் தாக்கி ரத்த உற்பத்தியைத் தடுக்கும். இவையெல்லாம் புற்றுநோய் வகையைச் சார்ந்தவை. நம் திரைப்படங்களில் அடிக்கடி பயன்படுத்தப்படும் 'ப்ளட் கேன்ஸர்"[Blood cancer] என்பது இதுதான்!


6. ஹீமோலைடிக் அனீமியா: [Hemolytic anemia]
எலும்பு மஜ்ஜை உற்பத்தி செய்யும் அளவை விட அதிக அளவில் சிவப்பு அணுக்கள் மரிக்கும் போது, தேவையான வேகத்தில் இவைகளை அனுப்ப முடியாமல் போகும் நிகழ்வுக்கு இப்பெயர். ஆட்டொ இம்ம்யூன் நோய்களும், பல மருந்து வகைகளும் இதற்குக் காரணங்கள். இந்நிலையில் உடல் மஞ்சள் நிறமாக மாறி மஞ்சள் காமாலை [Jaundice]
ஏற்படுகிறது.

7. சிக்கில் செல் அனீமியா: [Sickle cell anemia]
ஹீமோக்ளோபினில் ஏற்படும் ஒரு மாறுதலால் வரும் இந்நோய் ஆப்பிரிக்க, அரேபிய இன மக்களிடம் அதிகமாகக் காணப்படுகிறது. கம்யூனிஸ்டு கொடியில் இருக்கும் 'வளைந்த அருவாள்' வடிவில் சிவப்பு அணுக்கள் உருமாறி, அதிகம் பிராணவாயுவை எடுத்துச் செல்ல முடியாமல் போய் உடலைப் பாதிக்கும். சில சமயம் உயிருக்கே ஆபத்தாயும் முடியும்.

8. இன்னும் பல வகையான அனீமியாக்கள் இருக்கின்றன. அவை மிகவும் அரிதானதால்,[rare types of anemia] இங்கு சொல்லாமல் விடுகிறேன்.

பொதுவாக, சத்து குறைந்த உணவு, குடல் நோய்கள், மாத விடாய், கர்ப்பம், நீண்ட கால நோய்கள் இவையே சோகை வருவதற்குக் காரணம்.
இது பரம்பரை நோய் அல்ல! ஒரு சில அனீமியாக்களைத் தவிர!
சிக்கில் செல் அனீமியா, போன்ற சில வகைகள் பரம்பரையாக வரும்.

நோயின் தன்மையைப் பொருத்து சிகிச்சை அமையுமாதலால், அதனை இங்கு சொல்லாமல் விடுகிறேன். உங்கள் மருத்துவர் இதனை உங்களுக்குத் தெளிவாகச் சொல்லுவார்.

இதனைத் தடுக்கும் வழிகளை இப்போது சொல்கிறேன்!
பெரும்பாலான அனீமியாக்கள் வராமல் நம்மால் தடுத்துக் கொள்ள முடியாது!
ஆனால், மிகவும் பரவலாகக் காணப்படும், முதல் இரண்டு வகை அனீமியாக்களை [1&2] இரும்புச் சத்து, வைட்டமின்கள் அடங்கிய உணவு மற்றும் மாத்திரைகள் மூலம் தவிர்க்கலாம்.

பீன்ஸ், பருப்பு வகைகள், கீரை வகைகள், உலர்ந்த பழங்கள் [பேரீச்சை, திராட்சை] முந்திரி, பாதாம் பருப்பு, ஒரு சில விதைகள் [Sun flower seeds, Pumpkin seeds etc] இரும்புச் சத்து மிகுந்தவை.
பழங்கள், பழச்சாறு, கீரை வகைகள் இவற்றில் தேவையான வைட்டமின்கள் கிடைக்கும்.
மேலே சொன்ன வைட்டமின்களைத் தவிர, C வைட்டமினும் இரும்புச் சத்து உடலில் கலக்க உதவும் என்பதால் இதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த மூன்றையும் தேர்ந்த மருத்துவர் மூலம் மாத்திரைகளாகவும் வாங்கி சாப்பிடலாம்!
தேவைக்கு அதிகமாக இரும்புச் சத்து மாத்திரைகளை சாப்பிடுவது ஆபத்தானது! கவனம்!!
சும்மாவாவது, உடல் அசதியாய் இருக்கிறது என்று, நீங்களே மருந்துக் கடைக்குச் சென்று மாத்திரை வாங்கி சாப்பிட வேண்டாம்.

முறையான உடற்பயிற்சி[Exercice], நல்ல காற்றோட்டமான சூழ்நிலை, உடலையும், மனதையும் மகிழ்ச்சியாய் வைத்திருத்தல் போன்றவை வளமான செல்கள் உருவாக உதவும்!

இதையெல்லாம் படித்ததும், நம் நாட்டில் இவை கிடைக்காத ஏழைக் குழந்தைகளை ஒரு நிமிடம் நினையுங்கள்! முடிந்தால் அவர்களுக்கு இது கிடைக்கத் தொண்டாற்றி வரும் முறையான அறக்கட்டளைகள் மூலம் உங்களாலான உதவி செய்யுங்கள்!
உங்கள் மனம் மகிழ அது உதவும்!! புது ரத்தம் பாயும்!
****************************************************************

என் அருமை நண்பர் திரு. கோவி.கண்ணனின் உதவியால், எனது முந்தையத் தொடரான "பாலியல் கல்வி- பெற்றோருக்கு" PDF வடிவாகி இருக்கிறது.

வேண்டுமென்போருக்கு அனுப்பி வைக்கிறேன்!

கோவியாருக்கு என் மனமார்ந்த நன்றி!
*****************************************************************

Monday, January 01, 2007

"லப்-டப்" [5] "ரத்தத்தின் ரத்தமே!"

"லப்-டப்" [5] "ரத்தத்தின் ரத்தமே!"

"வாழ்வின் நதி" எனச் சொல்லலாம் இதை!

உடலெங்கும் ஓடி ஒவ்வொரு அவயவமும், அதனதன் வேலையை ஒழுங்காகச் செய்ய உதவிடும் ஓர் அற்புத நதி இது!

இதில் என்னென்ன இருக்கிறது, ஒவ்வொன்றும் என்ன செய்கிறது என்பதைத் தெரிந்து கொள்வது நம்மை நாமே நன்கு அறிந்து கொள்ள உதவும்.


ரத்தம் என்பது செல்களும்,[cells] ப்ளாஸ்மாவும் [plasma] சேர்ந்த ஒரு கலவை.

இதயம் பிராணவாயுவையும்,[oxygen] சத்துப் பொருள்களையும்[Nutrients] ரத்தக் குழாய்கள் மூலம் உடலின் பல பாகங்களுக்கும் அனுப்புகிறது. அங்கிருக்கும் பாகங்கள் இவற்றைப் பெற்றுக்கொண்டு, கழிவுப்பொருள்களைத் திருப்பி அனுப்புகின்றன.

முன்னரே சொன்னபடி, ஒருசாதாரண மனித உடலில் 5 லிட்டர் ரத்தம் ஓடுகிறது.

ப்ளாஸ்மா என்னும் திரவத்தில், சிவப்பு, வெள்ளை அணுக்களும், ப்ளேட்லெட்டுகள் எனும் செல்களும் இருக்கின்றன. கூடவே சத்துப் பொருள்களும்!

சிவப்பு அணுக்கள் பிராணவாயுவை எடுத்துச் செல்லும்.
வெள்ளை அணுக்கள் நோயை எதிர்கொண்டு சண்டை போடும்.
ப்ளேட்லெட்டுகள் ரத்தம் உறைவதற்கு உதவும்.


சிவப்பு அணுக்கள்: [Red Blood Cells]


ரத்தத்திற்கு நாம் காணும் சிவப்பு நிறத்தைக் கொடுப்பவை இவையே! ஒரு க்யூபிக் மில்லிமீட்டருக்கு கிட்டத்தட்ட 5 மில்லியன் [5,200,000]சிவப்பு அணுக்கள் இருக்கின்றன!
பெண்களுக்கு சற்று குறைவாக 4,600,000 அணுக்கள் இருக்கும்.
இதற்குள்தான் நாம் ஹீமோக்ளோபின் [Hemoglobin] என அறியும் புரதப்பொருள் [Protein] இருக்கிறது. இதுதான், பிராணவாயுவை இந்த அணுக்களுக்குள் தக்க வைத்துக் கொள்கிறது.

சுவாசத்தின் மூலம் நாம் இழுக்கும் பிராணவாயு, நுரையீரலில் [Lungs] இருந்து ஹீமோக்ளோபினால் பிணைக்கப்பட்டு, இதயத்தை அடைந்து, ரத்தக் குழாய்கள் மூலம் அனுப்பப்படும் ரத்தத்தில் இருக்கும் இந்த சிவப்பு அணுக்கள் வழியாக உடலின் பல இடங்களையும் செயல்பட வைக்கிறது!

ஸ்ஸ்ஸ்ஸ்....அப்பாடா!

இது மட்டும் அல்ல இந்த சிவப்பு அணுக்கள் செய்வது!

பிராணவாயுவை அளிக்கும் அதே நேரத்தில், கழிவுப்பொருளான கார்பன் டைஆக்சைடையும் [carbon di-oxide] திரும்பப் பெற்றுக்கொண்டு, வெயின்களின்[veins] வழியே நுரையீரலுக்குக் கொண்டு செல்லும் வேலையையும் இவை செய்கின்றன.

வெள்ளை அணுக்கள்: [White Blood Cells]

நம் உடலை நோய்களில் இருந்து பாதுகாப்பவை இவையே! சாதாரணமாக 5,000 முதல் 10,000 வரை ஒரு க்யூபிக் மில்லிமீட்டருக்கு இருக்கும் இவற்றின் எண்ணிக்கை நோய்வாய்ப்பட்டிருக்கையில் அதிகமாகும்.
வெள்ளை அணுக்களில் மொத்தம் 5 வகையான செல்கள் இருக்கின்றன.

நியூட்ரோஃபில்கள்:[Neutrophils]
கிருமிகளால் ஏற்படும் நோய்களைத் தடுக்கிறது.
லிம்ஃபோசைட்டுகள்:[Lymphocytes]
வைரஸ் எனும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகளை எதிர்க்கும். ஒரு சில சாதாரண கிருமிகளையும் கூட!
மானோசைட்டுகள்:[Monocytes]
கடுமையான நோய்களின் போது இவற்றின் தேவை ஏற்படுகிறது.
இயசினோஃபில்கள் மற்றும் பேஸோஃபில்கள்: [Eosinophils and Basophils]
இவை அலர்ஜி சம்பந்தமான நோய்களின் போது உதவிக்கு வருகின்றன.

ப்ளேட்லெட்டுகள்:[Platelets]

த்ராம்போசைட்டுகள் [Thrombocytes] எனவும் அழைக்கப்படும் இந்த செல்கள், ரத்தம் உறைவதற்கு உதவுகின்றன. நமக்கு அடிபட்டதும் பீறிடும் ரத்தம் சில நிமிடங்களில் தானே உறைவது இவற்றினாலே!
இவை குறைவாக ரத்தத்தில் இருக்கையில்,[Thrombocytopenia]] ரத்தப்போக்கு அதிகமாவதும், அதிகமாகையில்,[Thrombocytosis]]சீக்கிரம் உறையாமல் போவதும் நிகழ்கிறது.
150,00 முதல் 400,000 ப்ளெட்லெட்டுகள் ரத்தத்தில் இருக்கும்.

இந்த எல்லா செல்களும் எலும்பு மஜ்ஜையில்[Bone Marrow] இருந்து பிறக்கின்றன. இந்த மஜ்ஜையில் இருந்து உற்பத்தியாகும் ஸ்டெம் செல்கள் [Stem Cells] என இப்போது ஊடகங்களில் அதிகம் அடிபடும் தனித்தன்மை செல்கள்,[Specialized Cells] பலவிதமான ரத்த செல்களாக மாறும் தன்மை உள்ளவை. மேலும், இவை தன்னைத்தானே புதிப்பித்து, இரட்டிப்பாக்கிக் கொள்ளும் [reproduce itself] தன்மையும் உள்ளவை. இவை பற்றி பிறகு பார்ப்போம்!

சத்துப் பொருள்கள்:[Nutrients]

எலெக்ட்ரோலைட்டுகள்,[Electrolytes] கார்போஹைட்ரேட்டுகள்,[Carbohydrates] வைட்டமின்கள் [Vitamins] [நாம் உண்ணும் உணவிலிருந்து கிடைப்பவை]எல்லாம் ப்ளாஸ்மாவில் கலந்து திசுக்களை அடைகின்றன ரத்தத்தின் மூலம்!
****************************************

இதுவரை, இதயம், நுரையீரல், ரத்தக் குழாய்கள், ரத்தம் என இதயம் சம்பந்தமான அனைத்தையும் பற்றி அறிந்தோம்![??:)]

இவற்றால், இவற்றில், ஏற்படக்கூடிய சில [எல்லாம் அல்ல!] நோய்களைப் பற்றி இனி பார்க்கலாம்!

***************************************

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!
எனக்கு தேன்கூடு போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றுத் தந்த, அதில் மகிழ்ந்து பாராட்டிய அனைவருக்கும் எனது நன்றி!

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$