"லப்-டப்" -- 20 "நெஞ்சு பொறுக்குதில்லையே!"
"லப்-டப்" -- 20 "நெஞ்சு பொறுக்குதில்லையே!"
1. ஹைப்பர்ட்ரோஃபிக் கார்டியோமையோபதி [Hypertrophic Cardiomyopathy]:
இதயம் என்பது முழுக்க, முழுக்க சதையால் ஆன ஒரு உறுப்பு என முதலில் சொல்லியிருந்தேன்.
மற்ற தசை உறுப்புகள் போலவே, இதுவும் தடிமனாக[thickening] முடியும்!
நிமிடத்திற்கு 72 முறை சுருங்கி விரியும் தன்மை கொண்ட இதயம், தடிமனானால் இந்த வேலை தடைப்படுகிறது.
பொதுவாக வலது, இடது பகங்களைப் பிரிக்கும் தடுப்புச்சுவரே[[septum] அதிகமாக தடிமனாகும் வாய்ப்பு உள்ளது.
இப்படி ஆகும் போது, இடது வெண்ட்ரிக்கிளில் இருந்து அயோர்ட்டாவுக்கு அனுப்பப்படும் ரத்தத்தின் அளவு குறைய நேருகிறது.
இதற்கு, "வெளிச்செல்லும் ரத்த ஓட்டத் தடை"[Outflow tract obstruction] எனப் பெயர்.
பல்வேறு மாற்றங்கள் இதயத்துக்குள் இதனால் நிகழ்கிறது.
1. இதயத்தின் கொள்ளளவு குறைகிறது.
2. ஆனால், இதயத்திற்கு வரும் ரத்தத்தின் அளவு அப்படியே இருப்பதால், அதிக அளவில் ரத்தம் உள்ளே செல்ல முயல்கிறது.
3. இதனால், உட்செல்ல முடியாத ரத்தம் பின்தங்குகிறது.
4. இடது வெண்ட்ரிக்கிள் அயோர்ட்டாவிற்கு வழக்கத்தை விடக் குறைவாக ரத்தத்தைச் செலுத்துகிறது.
5. இதனால் அதிகப்படியான ரத்தம் இ.வெண்ட்ரிக்கிளில் தங்கி, இதன் அளவு பெரிதாகிறது.
6. அதிகப்படியான ரத்தம் இ.வெண்ட்ரிக்கிளில் தங்குவதால், இதன் சுருங்கி விரியும் தன்மை தடைப்படுகிறது.
500 பேருக்கு ஒருவர் என்ற கணக்கில் இது நிகழ்வதாக, புள்ளிவிவரம் சொல்லுகிறது!
பரம்பரையாகவோ, அல்லது அதிக ரத்த அழுத்தத்தின் காரணமாகவோ, அல்லது, காரணம் ஏதுமின்றியோ, இது வரலாம்.
இதன் அறிகுறிகள்:
நெஞ்சுவலி,
மார்புப் பகுதியில் ஒரு அழுத்தம்,
மூச்சு வாங்குதல்,
திடீரென மயக்கம் வருதல்,
மார் படபடப்பு,
திடீர் மரணம்
இதன் அறிகுறிகள் ஏதேனும் தோன்றியவுடனேயே உங்கள் மருத்துவரைப் போய்ப் பார்ப்பது மிகவும் முக்கியம்.
ஒரு எளிய எக்கோகார்டியோகிராம்[echocardiogram] மூலம் இதனைக் கண்டுபிடித்து சிகிச்சையை உடனே தொடங்க முடியும்.
தள்ளிப் போடாதீர்கள்.
Excercise Stress Test எனப்படும் ட்ரெட்மில்[treadmill] சோதனை, மார்பு எக்ஸ்-ரே[Chest X-ray], ECG, கார்டியாக் கதீடெரைஸெஷன்[Cardiac Catheterization] போன்ற சில சோதனைகளும் செய்யப்படலாம்,... இதயத்தின் வேலைத்திறனைக் கண்டறிய.
நோயின் தீவிரத்தைப் பொறுத்து,மருந்து, மாத்திரைகள் மட்டுமோ அல்லது அறுவைச் சிகிச்சையோ செய்யும் நிலை வரும்.
தடுப்புச் சுவரின் தடிமனை நீக்கும் அறுவை சிகிச்சை[Septal Myomectomy], அல்லது இந்தச் சுவருக்கு ரத்தமளிக்கும் நாளத்தை செயலிழக்கச் செய்யும் அறுவை சிகிச்சை[Ethanol Ablation] போன்றவை தேவைப்படலாம்.
இது தவிர, இதயத்தின் வேலைத்திறனை அதிகரிக்கச் செய்யும் ஒரு கருவியை பொருத்துவதும்[Implantable Cardioverter Defibrillator] நிகழலாம்.
கூடவே, மற்ற சிகிச்சை முறைகளில் சொல்லியபடியே, வாழ்வுமுறை மாற்றங்களும்[Life stule changes] அவசியம்.
உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, போன்றவற்றை உங்கள் மருத்துவர் உங்களுக்குச் சொல்லுவார்.
2. "பெரிகார்டைடிஸ்" [Pericarditis]எனும் இதயதைச் சுற்றி படர்ந்திருக்கும் ஒரு ஜவ்வுத் தோலில்[Fibrous membrane] ஏற்படும் நோய்.
இந்தத் தோல் வெளி, நடு உள்[Outer, middle, inner] என மூன்று படிமங்களில் ஆனது.இவற்றுக்கு இடையே உராய்வைத்[Friction] தடுப்பதற்காக ஒரு திரவம் சுரக்கிறது.
உடலின் மற்றப் பாகங்களில் ஏற்படும் நோய்களின்[Infections] காரணமாக இதுவும் பாதிக்கப்படலாம்.
உடனடியாகவோ, [அ] கொஞ்சம் கொஞ்சமாகவோ இது வரக்கூடும்.
நெஞ்சுவலி, ஜுரம், இதயத்தின் அளவு பெரிதாதல்[Hypertrophy] போன்றவை இதன் அறிகுறிகள்.
ஈ.சி.ஜி., எக்ஸ்-ரே மூலம் இது கண்டுபிடிக்கப்படும்.
மருந்து மாத்திரைகள் மூலம் இதை குணப்படுத்த முடியும்.
அபூர்வமாக, இந்தத் தோலையே அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டிய நிலையும் ஏற்படலாம்.
3. "இதய வால்வுகளைத் தாக்கும் நோய்"[Valvulitis, Valve disease]:
மைட்ரல், ட்ரைகஸ்பிட், அயோர்டிக், பல்மோனிக் என 4 வால்வுகள் இதயத்திற்குள் இருப்பதாக முன்னொரு பதிவில் சொல்லியிருந்தது நினைவிருக்கலாம்!{??}
ஒரு குறிப்பிட்ட வழியாக ரத்தத்தை அனுப்பும் பணியை இவைகள் செய்கின்றன.
இவை சரியாக வேலை செய்யாத போது ரத்த ஓட்டம் சீர்குலைகிறது.
வால்வுகள் குறுகிப் போவதாலோ[narrowing], [அ] சரியாக மூடித் திறக்காததாலோ[incomplete closing] இந்த நிலை வருகிறது.
பிறப்பிலேயே சில குறைபாடுகளால் இது பெரும்பாலும் நிகழ்கிறது.
சிறுவயதில் குழந்தைகளுக்கு வரும் ருமாட்டிக் காய்ச்சல்[Rheumatic Fever] இன்னுமொரு காரணம்.
இவை தவிர வேறு பல காரணங்களும் உண்டு.
அவை பெரும்பாலும் முக்கியமானவை அல்ல என்பதால் தவிர்க்கிறேன்.
அறுவை சிகிச்சை மூலமே பெரும்பாலும் இதை சரி செய்ய முடியும்.
படபடப்பு, அதிகம் வேலை செய்ய முடியாமை, சுத்த, அசுத்த ரத்தங்கள் கலந்து போகும் அபாயம் இருப்பதால் வரும் உடல் நீலமாதல் போன்றவை இதன் அறிகுறிகள்.
அநேகமாக இதயத்தைப் பற்றிய எல்லாவற்றையும் தொட்டிருக்கிறேன் என நினைக்கிறேன்.
இன்னும் சொல்ல வேண்டிய இரு பதிவுகள்:
1. ரத்தம் ஏன், எப்படி, எதனால் உறைகிறது?
2. குழந்தைகளுக்கு வரும் இதய நோய்கள்.
இவை பற்றி, அடுத்து வரும் பதிவுகளில் பார்ப்போம்.