"எய்ட்ஸுக்கே உதவியா!" -- [4]
"எய்ட்ஸுக்கே உதவியா!" -- [4]
'அண்ணி' உள்ளே போகும்வரை காத்திருந்த சுகுமார், குரலைச் சற்றுத் தாழ்த்தியபடியே,
"இந்த....ஆசனவழியில் சிலர் உறவு கொள்வதாகப்[anal sex] படித்திருக்கிறேன். இதன் மூலமும் இந்த நோய் பரவுமா?" என்றான்!'நல்ல கேள்விடா! மற்ற எல்லா வழிகளையும் விட எளிதில் ஜவ்வுத்தோல் கிழிந்துபோகக்கூடிய அபாயம் இந்த இடத்தில் அதிகமாக இருப்பதால், இதன் மூலம் இந்த நோய் பரவும் வாய்ப்பும் மிகவுமே அதிகமாகிறது. செலுத்துபவரை விட, வா[தா]ங்கிக் கொள்பவர்க்கே இது அதிகமாகப் பரவும் என இதுவரையில் கிடைத்திருக்கிற கணக்கைக் கொண்டு சொல்லலாம்.
இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னன்னா,
இந்த முறையில், ஆண், பெண் இரு பாலருமே ஓரினமாகவோ, அல்லது மாற்றினத்தோடோ ஈடுபடுகிறார்கள்.
இருவரில் யாராவது ஒருவருக்காவது இந்த நோய்க் கிருமிகள் உடலில் இருக்க வேண்டும், இது பரவ.
இந்த முறை, அந்த முறை என்றில்லாமல், எந்த முறையில் செய்யப்படுகிறது என்பதை விட, இந்த நோய் ஏற்கெனவே இருப்பவரால் மட்டுமே இது அடுத்தவருக்குக் கொடுக்கப்பட முடியும் என்பதை முக்கியமாக மனதில் கொள்ள வேண்டும். '
" சரி! இப்போ ஒரு முக்கியமான கேள்வி கேட்கப்போறேன்! இந்த ஓரினச் சேர்க்கையாளர்கள்... அதாம்ப்பா, 'ஹோமோ'ன்னு[] சொல்றோமே, அவங்கதான்.... இவங்களாலதான் இந்த நோய் அதிகமா பரவுதுன்னு சொல்றாங்களே, அதைப் பத்தி உங்க மருத்துவத்துறை என்ன சொல்லுது? என்றான் சுகுமார்.
"இதைப் பத்தி சொல்லியே ஆகணும்! மிக மிகத் தவறான கருத்து இது!
ஓரினச் சேர்க்கையாளர்கள் தான் இந்த நோய் பரவ வெகுவான காரணம் என்ற தவறான ஒரு குற்றச்சாட்டு பொதுவாக இருந்து வருகிறது.
இது துளிக்கூட உண்மையல்ல!
இவர்களில் பலர், தவறான உடலுறவு, போதை மருந்துக்கு அடிமையாதல், ஒன்றுக்கும் மேற்பட்டவரோடு உறவு கொள்ளுதல் போன்ற செயல்களின் மூலம், இந்த நோயால் ஏற்கெனவே பாதிக்கப்பட்ட யாரவது ஒருவரிடமிருந்து, ஹெச்.ஐ.வி. கிருமியைப் பெற அதிக வாய்ப்பிருக்கிறது என்பது தான் உண்மை.
ஆனால், இதையே இருபாலர் உறவு கொள்வோருக்கும் கூடச் சொல்ல முடியும்! அவர்களுக்கும் இந்தக் குற்றசாட்டு பொருந்தும்.... அவர்களும் இது போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமையானால், நிச்சயம் இந்த நோயால் தாக்கப்படக் கூடும்!
எது எப்படி இருப்பினும், பாதுகாப்பான உடலுறவின் மூலம், பெற வேண்டிய இன்பத்தைப் பெறலாம்;
பெற வேண்டாத நோய்களைத் தவிர்க்கலாம்.
இதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்!
ஆணுறை, காண்டம் போன்றவை சீக்கிரமே கிழிந்து போகும் சாத்தியக்கூறுகள் இந்த ஆசனவழி உறவில் மிக அதிகம். இதையும் கவனத்தில் கொள்ளவும்.
பொதுவாக, இந்த ஆசனவழி உறவு, உடலுறவு கொள்ள ஏற்றதொரு வழி அல்ல! ஆபத்துகள் அதிகம்! கவனம்! கவனம்!!' என்றேன்.
"சரிடா! வா கொஞ்சம் காலாற நடந்துகிட்டே பேசலாம்" என்று கிளம்பினான் சுகுமார்.
' ஏண்டா? என்ன சமாசாரம்?" என்று சிரித்தேன்!'
" சில விஷயம் இருக்கு! தனியாக் கேக்கணும்! அதான்!" என வெள்ளையாகச் சிரித்தான் சுகுமார்!
"நாங்க ஒரு 'வாக்' போயிட்டு இதோ வந்திடறோம்' எனக் குரல் கொடுத்துவிட்டு வாசல் பக்கம் நடந்தேன்!