"கசடற"

அறிவியல் தொடர்பான எனக்குத் தெரிந்த தகவல்களை, ஒரு மருத்துவன் எனும் பார்வையில் சொல்ல விழைகிறேன். முழுக்க முழுக்க இவை என் கருத்துகள் மட்டுமே! முருகனருள் முன்னிற்கும்!

Friday, March 28, 2008

"எய்ட்ஸுக்கே உதவியா!!" - [3]

"எய்ட்ஸுக்கே உதவியா!!" - [3]


"அப்போ, இந்த [AIDS} எப்படித்தான் ஒருத்தருக்கு வருதுன்னு சொல்லலாமில்ல?" பக்கோடாவை மென்றுகொண்டே கேட்டான் சுகுமார்.

"அப்படிக்கேளு!

முறைப்படி பாதுகாப்பில்லாத உடலுறவின் மூலமே இது பெரிதும் பரவுகிறது.
அடுத்து, ஒரே ஊசியை பலர் உபயோகிப்பதின் மூலம்[இதில் எவருக்காவது முன்னமேயே இந்த நோய் இருந்தால் மட்டுமே],
அல்லது நோய்க்கிருமி உள்ள ரத்தப் பரிமாற்றத்தால்[HIV infected blood transfusion] இது நிகழலாம்.
இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஒரு தாய் கருவிலிருக்கும் தன் குழந்தைக்கோ, அல்லது தாய்ப்பால் மூலமாகவோ இந்த நோயைக் கொடுக்க முடியும். மற்றபடி, சாதாரணமாக அடுத்தவருடன் பழகுவதின் மூலம் இந்த நோய் பரவ வாய்ப்பில்லை!

"அப்போ,...... முத்தம் கொடுத்தா எய்ட்ஸ் வராதா?"

ஒரு எய்ட்ஸ் நோயாளி உன்னைக் கன்னத்தில் முத்தமிடுவதால் உனக்கு எய்ட்ஸ் வராது.... உன் கன்னத்தில் ஏதும் வெளிக்காயங்கள் இல்லாத பட்சத்தில்! அவருடன் கை குலுக்குவதாலோ, உன்னைக் கட்டிப் பிடிப்பதாலோ இது வரவே வராது! தாராளமா இதெல்லாம் நீ அவரோட செய்யலாம்!

"வாய்க்கும் வாய்க்குமான முத்தம்... அதுவும் ஆழ்ந்த முத்தம்[deep kiss] ... இந்த, நாக்கெல்லாம் ஒட்டிகிட்டு செய்வாங்களே அதுமாரி கொடுத்தா..??"

ரொம்பத்தான் விவரமா கேக்கறே!
பொதுவாக இதன் மூலமும் பரவாது என்றாலும், இது போன்ற முத்தங்களில், உதடுகளோ, அல்லது வாயின் உட்பகுதியோ சற்று காயப்படும் வாய்ப்புகள் இருப்பதால், கிருமிகள் கலக்கும் வாய்ப்பு இருப்பதால், இதைத் தவிர்ப்பது நலம்..... அவரோடு மட்டும்!!

"கேக்கறேனேன்னு தப்பா நினைச்சுக்காகாதே! இந்த வாய் வழி உறவு[oral sex] பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா? இதன் மூலம் இந்த நோய் வர வாய்ப்பிருக்கிறதா?" என்று தயங்கியபடியே கேட்டான் சுகுமார்!

கண்டிப்பாக! இவ்ளோ கேட்டுட்டே! இதைக் கேக்கலைன்னா எப்படி! சொல்றேன் கேளு!
எப்படி வருதுன்னு தெரியலைன்னாலும், வாய் வழி உறவு மூலமா, ஹெச்.ஐ.வி. நோய் பரவ முடியும்னு ஆதாரபூர்வமா சொல்லலாம். வாய்க்குள் இருக்கும் மெல்லிய ஜவ்வுத் தோல் வழியே ஹெச்.ஐ.வி. கிருமிகள் ரத்தத்தில் பரவும் அபாயம் இருக்கிறது. இதையும் மீறி இதைச் செய்துதான் ஆகணும்னா, தடுப்பு முறைகளைக் கையாளுவது நலம். காண்டம், ஆணுறை போன்றவற்றை உபயோகித்து இதைச் செய்யலாம். தவிர்ப்பது மிகவும் நல்லது!

"அப்போ, நேர்வழி உறவு.. அதாவது, வழக்கமான முறையில் உடலுறவு கொள்வதால் என்ன ஆகும்?"

என்ன ஆகும்? நிச்சயமா இந்த நோய் வரும்... அதாவது.....இப்படி உறவு கொள்ளும் இருவரில் எவர் ஒருவருக்காவது இந்த நோய் இருந்தால்! சொல்லப்போனால், இந்த நோய் வருவதற்கு இதுதான் முதன்மையான காரணம் எனச் சொல்லலாம். பாதுகாப்பில்லாத உறவு இவர்களோடு கொண்டால், இந்தக் கிருமிகள் அடுத்தவருக்கு வந்தே தீரும்! ஆணுறை, காண்டம் இல்லாமல் இவர்கள், அல்லது, இவர்களுடன் உறவு கொள்ளவே கூடாது.

"இந்தக் கிருமி, கிருமின்னு சொல்லியே பயமுறுத்திறியே, படவா! இது எவ்ளோ நேரம் உயிரோட இருக்கும்னு சொல்லுடா!" என்றான் சுகுமார்!
இவ்ளோ நேரம் இதைக் கேக்கலியேன்னு நினைச்சேன்! கேட்டுட்டே! இதுவரைக்கும் சொன்ன எது மூலமா வெளியே வந்தாலும், இந்த நுண்கிருமி [வைரஸ்] ஒரு 20 நிமிஷத்துக்குத்தான் உயிரோட இருக்கும்! அதுக்குள்ள இது அடுத்தவரோட ரத்தத்துல கலக்கலைன்னா, செத்திரும்! உன்னோட கையில ஒரு கீறலும் இல்லைன்னா உள்ளங்கையில இதை 20 நிமிஷம் வைச்சுக்கிட்டு இருந்தேன்னாக்கூட ஒண்ணும் ஆகாது! கிருமி செத்துப் போயிரும்! புரிஞ்சுதா!" என்றேன் நான்!

"சும்மா பயமுறுத்தாம, விஷயத்தை மட்டும் சொல்லுங்க!" என்று சொல்லியபடியே, கரண்டியுடன் வெளிவந்து ஒரு முறை முறைத்தார் என் மனைவி!

"சரி, சரி! நீ போய் சமையலைக் கவனி!" எனச் சமாளித்தேன்!


[தொடரும்]

Labels: ,

8 Comments:

At 6:17 PM, Blogger கோவி.கண்ணன் said...

ஒழுக்க சீலர்களுக்கு எய்ட்ஸ் பற்றிய அச்சம் தேவையா ? (இரத்த தானம் பெறுவதைத் தவிர்த்து)
:)

 
At 7:09 PM, Blogger VSK said...

தேவையே இல்லைதான் கோவியாரே!:))

ரத்ததானம் மட்டுமல்ல, தன் உடலில் ஏதேனும் காயம் இருந்து, அதன் மீது இந்த நோய் உள்ளவரின் ரத்தம் கலந்த எந்த வகை நீரும் கலக்காமல் பார்த்துக் கொண்டால்!

 
At 7:50 PM, Blogger வடுவூர் குமார் said...

சரியான கிருமியாகத்தான் இருக்கும் போல் இருக்கு.
இதை அழிக்கும் எதிர்ப்பு மருந்து கண்டுபிடிக்க ஏன் இவ்வளவு வருடங்கள் ஆகிறது?

 
At 8:16 PM, Blogger இலவசக்கொத்தனார் said...

கரண்டியுடன் வந்த பின்பு கூடப் பேசும் தைரியம் வர என்ன செய்ய வேண்டும் எனக் கேட்க வந்தேன். ஆனால் பதிவு ஹைஜாக் ஆகலாம் என்பதால், வழக்கம் போல் உள்ளேன் ஐயா எனச் சொல்லிக் கொண்டு ஓரமாய் அமர்ந்து கொள்கிறேன்.

 
At 9:23 AM, Blogger VSK said...

இந்த நுண்கிருமி சென்று அழிக்கும் இடம் அப்பிடியாப்பட்ட இடம் திரு. குமார்!

அதான்!
:))

 
At 9:23 AM, Blogger VSK said...

இந்த பதிவுல உங்க கண்ணுல பட்ட ஒரே விஷயம் அதானா கொத்ஸ்!:)))

 
At 9:49 AM, Blogger Unknown said...

காண்டம்களில் உள்ள கண்ணுக்குத் தெரியாத மைக்ரோ ஓட்டைகள் இந்த எயிட்ஸ் கிருமியை விட பல மடங்கு பெரியது என்றும் அதனால் காண்டம் அணிந்தாலும் அந்நோய் (வாய்ப்புகள் குறைவென்றாலும்) வரலாம் என்கின்றார்களே?

ஒழுக்கமான உறவை(sex)த் தவிர மற்றெல்லா வகை உறவுகளிலும் இந்நோய்க்கான சாத்தியக்கூறுகள் உண்டு என்பதை ஏற்கலாமா?

 
At 8:05 PM, Blogger VSK said...

ஒழுக்கமான உறவு உயர்ந்ததே!

மற்றபடி, நீங்கள் சொல்லியதைப் பற்றி இனி வரும் பதிவுகளில் பார்க்கலாம், திரு. சுல்தான்!

 

Post a Comment

<< Home