"கசடற"

அறிவியல் தொடர்பான எனக்குத் தெரிந்த தகவல்களை, ஒரு மருத்துவன் எனும் பார்வையில் சொல்ல விழைகிறேன். முழுக்க முழுக்க இவை என் கருத்துகள் மட்டுமே! முருகனருள் முன்னிற்கும்!

Monday, September 18, 2006

"பாலியல் கல்வி -- பெற்றோருக்கு" -- 9

"பாலியல் கல்வி -- பெற்றோருக்கு" -- 9

"என்ன கொடுமை இது சரவணன்!"

இதுவரை 3 வயது முதல் 12 - 14 வயதுப் பிள்ளைகளைப் பற்றிய, பாலியலைப் பற்றிய, பெற்றோரின் கருத்து, செயல், ஆக்கம் எவ்வண்ணம் இருக்க வேண்டும் எனப் பார்த்தோம்.

இனி அடுத்தது, ஒரு முக்கியமான பருவம்!
ஆம்! பருவம் அடையும் பருவம்!

இதுவரை நீங்கள் சந்தித்த, பழகிய, புரிந்த, பிள்ளைகள் வேறு!
இனி நீங்கள் பார்க்கப் போகும் பிள்ளைகள் வேறு!

அந்த நிலைக்குப் போகும் முன்.......

இது வரை நாம் சந்தித்த இந்த 12- 14 வரையிலான குழந்தைகள் சந்திக்கும், சந்திக்கக் கூடிய ஒரு நிகழ்வைச் சொல்லாமல், அடுத்த பருவத்திற்குச் செல்ல என் மனம் துணியவில்லை!

இந்த வயதில், பெற்றோர்கள் இருவரும் கொஞ்சம் தனித்தனியே விலகி, குழந்தைகளோடு கூட, ஒருவரை ஒருவரும், மற்றவரையும் எடை போட வேண்டிய ஒரு அவலத்தைப் பற்றி, கொடுமையைப் பற்றி இந்தப் பதிவில் சொல்லப் போகிறேன்.

இதை இங்கு சொல்லாமல் நான் மேலே செல்ல முடியாது!

பீடிகை எல்லாம் பலமாய் இருக்கிறதே என அஞ்ச வேண்டாம்!

இது ஒரு விவாதத்திற்குரிய பதிவு.
சர்ச்சைக்கு அல்ல!

இதைக் கண்டு சிலர் துணுக்குறக் கூடும்;

முகம் சுளிக்கக் கூடும், இது தேவையா என!

மனம் நோகக் கூடும், இது போலும் நிகழ்கிறதா என!

..................... திருந்தக் கூடும் சிலர்!

அவர்களுக்காக இது!

நேரடியாக நிகழ்வுக்கு வருகிறேன்!

ஒரு நான்கு "உண்மை" நிகழ்வுகளை உங்கள் முன் வைக்கப் போகிறேன்!

அதற்கு முன், ஒரு வேண்டுகோள்!

தயவு செய்து, தயவு செய்து, இதைக் கொச்சைப் படுத்தி யாரும் பின்னூட்டம் இட வேண்டாம்!

அப்படி வருமாயின், நிச்சயம் அது உங்கள் பார்வைக்கு வராது எனினும், என்னை அது வருத்தும் என்பதால்!

1. கண்ணிலிருந்து தாரை தாரையாய் நீர் வழிய, அந்தத் தாய் என்னிடம் வந்தார் ஒரு நாள்!

"டாக்டர்! எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை! அப்படியே செத்துப் போயிடலாமான்னு இருக்கு!"

அவரை ஆசுவாசப்படுத்தி, உட்கார வைத்த பின் என்னவெனக் கேட்டேன்.

"என்னன்னு சொல்றதுங்க!
இந்தப் படுபாவி எம் பொண்ணை அதட்டி, உருட்டீ, மிரட்டி, அவளை பலாத்காரம் பண்ணிப்புட்டான்!"

"யார்? என்ன பண்ணினான்னு கொஞ்சம் விவரமா சொன்னீங்கன்னா தேவலை!" என்றேன் நான்.

"வேற யாரு! எம் புருசந்தான்!
ராத்திரில குடிச்சுட்டு வரும் நெதம்!
சரி, நம்ம தலைவிதி அம்புட்டுத்தான்னு, மனசைத் தேத்திக்கிட்டு, அவனுக்கு சோத்தைப் போட்டு, நான் தூங்கிட்டேன் சாமி!
திடீர்னெ முளிச்சுப் பாத்தா, இவன் என் மூத்த பொண்ணு மேல மேஞ்சுக்கிட்டு இருக்கான்!
இதுவோ, வெலவெலத்துக் கிடக்கு!
என்ன பண்றதுன்னு தெரியாம, கைக்கு அகப்பட்ட ஒரு வெளக்குமாத்த எடுத்து அவனை நாலு சாத்து சாத்தி வெளிய தள்ளி கதவைச் சாத்திட்டு, ஏண்டி, மவளே, என் சக்காளத்தின்னு அவளையும் நாலு சாத்தினேன்!

அது கதறிக்கிட்டே, எனக்கு ஒண்ணும் தெரியாதும்மா!
என்னை இப்படித்தான் அப்பன் வாராவாரம் பல தடவை பண்ணுது!
திமிறினா அடிக்குது!
எனக்கு ஒண்ணும் புரியலம்மா.
பேசாம படுத்திருவேன்"அப்படீன்னு அவ சொன்னதும்,

எனக்கு பத்திகிட்டு வந்திருச்சி!

'ஏண்டி, எங்கிட்ட சொல்லலை?'ன் னா,
அம்மாகிட்ட எதனாச்சும் சொன்னேயின்னா, ஒங்க ரெண்டு பேரயும் போட்டுத்தள்ளிட்டு நா செயிலுக்குப் போயிருவேன்னு மெரட்டிச்சும்மா! அதுக்காவத்தான் ஒங்கிட்ட சொல்லலை" அப்பிடீன்னு சொல்லுது!
இத்தக் கொஞ்சம் டெஸ்டு பண்ணுங்க டாக்டர்! எதுனாச்சும் ஆயிருச்சான்னு" என அந்த மாதரசி கலங்கியது, எனக்கு வலித்தது.

2. " இவளை நான் சின்னப் பொண்ணுன்னு நெனச்சேன், டாக்டர்!
இவ என்ன காரியம் பண்ணிண்டு வந்து நிக்காறா தெரியுமா" என வந்தவுடனே ஆரம்பித்தார் அந்தத் தாய்!

கூடவே மலங்க மலங்கப் பார்த்தபடி ஒரு 13 வயதுப் பெண்!!

என்னம்மா, என்னன்னு சொல்லுங்க என்றேன்.

அதற்கு அவர், " படு பாவி! படுபாவி, ஊமை மாரி இருந்துண்டு, என்ன அழுத்தம் பாருங்கோ, டாக்டர்!
லீவுக்கு என் நாத்தனார் அவா குடும்பத்தோட ஒரு 10 நாள் இங்க வந்திருந்தா!
அங்க இங்க அவாளைக் கூட்டிண்டு போறதுக்கே நேரம் சரியா இருந்தது. நாத்தனாரைக் கூட்டிண்டு நான் ரங்கனாதன் தெருவுக்கு ஷாப்பிங் போனேன்.
ஆம்பளைங்க ரெண்டு பேரும் ஏதோ கச்சேரிக்கு போறோம்னு கிளம்பிப் போயிட்டா!
ஸ்ரீதர் [ நாத்தனார் பையன்] சைக்கிளை எடுத்துண்டு எங்கியோ சுத்தப் போயிருந்தான்.
எம்பொண்ணுகிட்ட, "ஆத்தை பத்திரம பாத்துக்கோடி, நாங்க சீக்கிரமா வந்துர்றோம்"னு சொல்லிட்டு கெளம்பிப் போயிட்டோம்!
ஷாப்பிங்லாம் முடிச்சுட்டு திரும்பி வந்தா,
.....இந்தக் கடங்காரியும், அந்தக் கட்டைல போறவனும், "ஒண்ணுமில்லாம" ! அவ பெட்ல படுத்துண்டுருக்கா!
நாங்க வந்ததக் கூடக் கவனிக்காம!
அவன் இவளை தடவிண்டு இருக்கான்.
இவளும் சும்மா இருந்துண்டு இருக்கா!
எனக்கு வந்த ஆத்திரத்துல, ரெண்டு பேரையும் நாலு சாத்து சாத்தினேன்.
மறுநாளே அவாள்ளாம் கிளம்பிப் போயிட்டா!
நா நேரா உங்க கிட்ட தான் ஓடி வர்றேன்!
எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல!
இந்தக் காலத்துல எல்லாரும் சீக்கிறமே வளந்துர்றா!"என்றவரிடம்,

"அப்படியில்லை மாமி, எல்லாக் காலத்திலும், எல்லாப் பெத்தவங்களும் சொல்ற வார்த்தை தான் இது. மேற்கொண்டு என்ன பண்ணலாம்னு பார்க்கலாம், சரியா! " என்றேன்.

3. " இவளுக்கு என்னமோ பேய் புடிச்சிடுத்தோ, இல்லை புத்தி கித்திதான் சுவாதீனம் இல்லாம போய்விட்டதான்னு தெரியலை டாக்டர்" என்றவாறு, ஒரு தாய்!
என்னவென விசாரித்தேன்.
" இத்தன நாளா கல கலன்னுதான் சிரிச்சிண்டுதான் இருக்கும் இது!
இப்ப ஒரு ஆறு மாசமா, எத்தையோ பறி கொடுத்தவா கணக்கா இருக்கா!! கொஞ்சம் டெஸ்ட் பண்ணுங்க டாக்ட!" என்றார்".
நீங்க கொஞ்ச நேரம் வெளில இருங்க" என்று அவரை அனுப்பிவிட்டு, அப்பெண்ணிடம்[ [12 வயது] விசாரித்தேன்.

முதலில் 'அதெல்லாம் ஒண்ணுமில்லை' யென மறுத்தாலும், கடைசியில் சொல்லியது அந்தக் குழந்தை.
அவர்களின் நெருங்கிய குடும்ப நண்பர் ஒருவர்,
பல வகையிலும் அக்குடும்பத்திற்கு வேண்டியதை எல்லாம் செய்யும் ஒருவர்,
சின்ன வயது முதலே குடும்பத்தில் ஒருவர் போல பழகிய ஒருவர்,
சில மாதங்களாய் இவளை இழுத்துத் அணைப்பது, கண்ட இடங்களிலும் தொடுவது என்று படிப்படியாக அவரது, இவளது பிறப்பு உறுப்புகளை, தொடுவது, சுவைப்பது வரை போயிருக்கிறான் அந்த காமுகன்.

ஒவ்வொரு தடவையும், வேண்டியதெல்லாம் வாங்கிக் கொடுத்து, சரிக்கட்டி, இதுல ஒண்ணும் தப்பில்லை என அவளை நம்ப வைத்திருக்கிறான்.

சொல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் அச்சிறுமி தத்தளித்து, வேண்டா வெறுப்பாய் அவையெல்லாம் செய்ததில்,
படிப்பில் நாட்டம் போனது,
பெற்றவரிடம் சொல்ல அச்சப் பட்டுக்கொண்டு, தனக்குள் தானே மருகி, கடைசியில் மனோநிலை பாதிக்கும் அளவிற்குப் போய் விட்டது.

4. கிட்டத்தட்ட இதே கதை ஒரு ஆண்பையனிடம் நடந்து, அவனை புணர்ச்சி செய்து, அவன் படிப்பு, விளையாடும் திறன் உற்சாகம், எல்லாவற்றையும் தொலைத்த கதையும் உண்டு.
விவரிக்க மனம் வரவில்லை.... பதிவின் நாகரீகம் நோக்கம் கருதி.

5. இன்னொரு பையனுக்கு மன நிலை குன்றிய காரணம், அவன் தன் தாயை, அப்பா அல்லாத வேறொருவருடன், தனியே படுக்கையறையில் அவர்களுக்குத் தெரியாமல் பார்த்ததனால் வந்தது!

இதெல்லாம் என்ன?

இதற்கு என்ன பெயர்?

ஆங்கிலத்தில் இது போன்ற நிகழ்வினை INCEST என்பார்கள்.

தமிழில், "உறவுமுறைப் பாலியல் கொடுமை" என்னலாம்.

பெரும்பாலும் பருவமடையா, பருவத்திற்கு சமீபமான குழந்தைகளே, அதிக விழுக்காடு இதற்கு ஆளாகின்றனராம்.

தெரிந்தவர், பழகியவர், உறவுக்காரர், பெற்றவர் என ஒரு நெருங்கிய வட்டத்துக்குள் இருக்கும் ஒரு சில பெரியவர்களால் இந்த வயதுக் குழந்தைகளுக்கு நிகழ்வதே இதுகாறும் நான் மேற்கோள் காட்டிச் சொன்னது எல்லாம்!

கொஞ்சம் விழிப்புணர்ச்சி வேண்டும் பெற்றோருக்கு!

குழந்தை வளர்ப்போடு நின்று விடாமல், அதன் நலனையும் காக்க வேண்டிய பொறுப்பு நமக்கெல்லாம் இருக்கிறது என்பதை மறந்து விட வேண்டாம்.

அதற்காக, யாரையும் சந்தேகப் பட வேண்டாம்!

இதுவரை முந்தைய பதிவுகளில் சொன்ன வண்ணம் நீங்கள் நடந்திருந்தால், இந்நிலை வராது, அனேகமாய்!

தான் யார், தன் மதிப்பு என்ன; தன் தனித்துவம் என்ன, எப்போதும் என் பெற்றோரை அணுகலாம் என்பவைகள் இதுவரை விதைக்கப் பட்டிருந்தால், 90% இதைத் தவிர்க்க முடியும்.

மீதி அந்த 10% ஆட்கள் என்ன செய்யணும்?

தவறு செய்தவரை மன்னிக்க முற்படாதீர்கள்;
அது கணவனே, மனைவியே, உறவினர், தெரிந்தவர், வேண்டியவரே ஆனாலும் சரி!

உரிய நடவடிக்கை எடுக்த் தயங்காதீர்கள்!

'கூறாமல் சந்நியாசம்" கொள்ள வேண்டாம்.

"கூரை மீதேறிக் கூவி, " இவர்களின் பலவீனத்தை வெளிப்படுத்த வேண்டும், உங்கள் பிள்ளைகள் நலன் கருதி.

குற்றமிழைத்த உங்கள் துணையை எப்படி எதிர் கொள்ளப் போகிறீர்கள் என்பது இப்பதிவின் நோக்கமல்ல என்பதால், இங்கு அதனைச் சொல்லாமல் தவிர்க்கிறேன்.

அது போலவே அவர்களுக்கு நான் என்ன மாதிரியான பதில் சொன்னேன் என்பதனையும் தவிர்க்கிறேன்.

இந்த மாதிரியான கயவர்களைக் கண்டு கொள்ள வேண்டும்!

பெற்றவர்கள்.குழந்தைகளுக்கு [இதுவரை சொலாதிருந்தால்],
அவசியமின்றி யாரும் எவரும் தன்னை ஏதும் செய்ய இணங்கக் கூடாது என்பதை இவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்;

தங்களிடம் எப்போதும், எதையும் சொல்லலாம், காலம் தாழ்த்தாமல், என்பதை அவர்கள் மனதில் பதியச் செய்ய வேண்டும்.

"கூடாது, எனக்கு சம்மதமில்லை. மீறிச் செய்தால், நான் புகார் செய்வேன்" {NO! I am not for it! I will complain!] என்று சொல்ல, கற்றுக் கொடுத்தல் மிகவும் அவசியம்.

செய்வீர்களா?

--------------------------------------------------------

அடுத்த வாரம் முழுதும் நான் டொரோன்டோவில் இருப்பேன். [23 - 30]

இது ஒரு சிந்திக்கத் தூண்டும் பதிவு என்பதால், நிறைய விவாதங்கள் வரும் என எதிர் பார்க்கிறேன்.

படித்துவிட்டு, ஒன்றும் சொல்லாமல் சென்ற எல்லாரும்,

இதுவரை பின்னூட்டமிட்ட அனைவரும் வந்து சிறப்பிக்குமாறு தாழ்மையுடன் வேண்டிக் கொண்டு,

கூடியவரை தூய தமிழில் எழுதிய இந்தப் பதிவினை, திரு. இராம. கி. ஐயா அவர்கள் முழுக் குணம் அடைய வேண்டி அவருக்கு சமர்ப்பிக்கிறேன்.

நன்றி!

Thursday, September 14, 2006

"பாலியல் கல்வி -- பெற்றோருக்கு" -- 8

"பாலியல் கல்வி -- பெற்றோருக்கு" -- 8


இந்த 12- 14 வயசு பிள்ளைங்களுக்கு என்னெல்லாம் தெரியும், தெரிஞ்சுக்க ஆசைன்னு இதுவரை பார்த்தோம்.

மேலும் சில அதிகத் தகவல்களை நம்ம மங்கையம்மா பின்னூட்டத்தில் சொல்லியிருக்கிறார்கள்.
அதையும் பார்க்கவும்.

பாலியலைப் பத்தி தனக்கு எல்லாம் தெரிஞ்ச மாதிரியும், கேள்வி கேக்கறது கேவலம்னும் ஒரு நினைப்பு இருக்கும் இவங்க மனசுல.

அதனால கேக்கவே மாட்டாங்களான்னு கேக்காதீங்க!!

கேட்பாங்க!

உங்க கிட்ட இல்லை!

அவங்க நண்பர்கள்கிட்ட!

இப்ப நாமளே ஊக்குவிக்கறோமே, அந்த இணையதளத்துகிட்ட!

பெரும்பாலும் தவறான, அல்லது வயதுக்கு மீறிய தகவல்களே இதனால் கிடைக்கும்.

இதுல பெற்றோரின் பங்கு என்ன?

எப்படி அவர்களுக்கு இதைப் புரியவைப்பது?

இது ஒரு பெரிய சாலேஞ்சுன்னுதான்[Challenge]] சொல்லணும்.

போன பதிவில் என்னிடம் வந்த அந்த தாய்க்கு நான் சொன்ன பதில் இதுதான்.[அந்தப் பையனை வெளியில் உட்காரச் சொல்லிவிட்டு!],

[இதைப் பற்றி யாராவது கேட்பார்கள் என எதிர்பார்த்தேன்!:(]

"நீங்க சொல்றீங்கன்னு நான் இப்ப அவன்கிட்ட எதுவும் கேட்க மாட்டேன். இங்கே அவனைக் கூப்பிட்டுக்கொண்டு நீங்க வந்ததே தப்பு! எவ்வளவு பெரிய தாழ்வு மனப்பன்மையை அவனிடம் உண்டுபண்ணி இருக்கீங்கன்னு ஒங்களுக்கு தெரியலை! இப்ப அவனைக் கூட்டிக்கிட்டு வீட்டுக்கு போங்க! நாளைக்கு நீங்க மட்டும் அவன் ஸ்கூலுக்கு போனதுக்கு அப்புறம் வாங்க! நான் உங்ககிட்ட சிலது சொல்லணும்."

மறுநாள் அந்த தாய் வந்தார்.

"அடுத்தவங்க பார்வையில இது தப்புதான். கண்டிக்கப்பட வேண்டியதுதான். ஆனா, கொஞ்சம் அவன் நிலைமையில் இருந்து இதைக் கொஞ்சம் யோசியுங்கள். அவன்கிட்ட சில பருவ மாற்றங்கள் நடந்துக்கிட்டு இருக்கு. அதை அவனால புரிஞ்சுக்கவும் முடியல. இல்லேன்னு தள்ளவும் முடியலை. அவன் உடம்புல சில ஹார்மோன்கள் இப்ப சுரக்க ஆரம்பிக்குது. அதுதான் இவனை அப்படியெல்லாம் செய்யத் தூண்டுது. இதோ, இந்த பாம்ஃப்லெட்டை[pamphlet] எடுத்துகிட்டு போங்க. மொதல்ல, நீங்களும், மோகனும்[அவர் கணவர்] படியுங்க. அப்பறமா, ராஜுவை கூப்பிட்டு, அவ்ன்கிட்ட இதப்பத்தி பேசுங்க.

ஆம்பளைக்கு இந்த இந்த உறுப்புகள், பொம்பளைங்களுக்கு இதுன்னு தெளிவா சொல்லுங்க. இதுவரைக்கும் நீங்க சொல்லாததே, அவனோட இதைப் பத்தி பேசாததுதான் இதுக்கெல்லாம் காரணம்.

தன்மையா வளர்த்தேன்னு சொன்னா மட்டும் போறாது. சொல்ல வேண்டியதை சொல்லவும் வேணும். உங்களை விட்டா வேற யாரு இருக்கா அவனுக்கு? வேற யார்கிட்ட போயி அவன் இதை கேக்க முடியும்? ஒருவேளை அப்படிக் கேட்டிருந்தான்னா, அது அவன் ஃப்ரெண்ட்ஸுங்க கிட்டதான் இருக்க முடியும். அவங்களுக்கும் இது தெரியாது. "போடா! போய் பக்கத்து வீட்டு மாமி குளிக்கும்போது பாரு; அப்ப தெரியும் ஒனக்கு!"ன்னு சொல்லியிருப்பாங்க! அந்த சின்னப்பசங்க அப்படி சொன்னதிலியும் தப்பு இல்லை! அதான், அடுத்த வீட்டு மாமி குளிக்கும் போது பார்த்திருக்கான்"

என்று சொன்னவுடன்,

அந்த அம்மா, நிஜமாவே கண்கலங்கி, "இதெல்லாம் சொல்லணும்னு எங்களுக்கு தெரியவே இல்லை டாக்டர்!" என்று கண் கலங்கினார்.

ஸோ,[So] இப்ப நீங்க தெரிஞ்சுக்க வேண்டியது என்ன?

சிறில் துடிக்கிறது எனக்குப் புரியுது!
வாய்யா! விஷயத்துக்கு வாய்யா! எனத் திட்டுவது கேட்கிறது!
எனவே, அதிக பீடிகை இல்லாமல், செய்திக்கு வரலாம்!

பருவகாலத்தில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை, நன்கு அறிந்த நீங்கள் சொல்லாமல் வேறு யார் சொல்வது?

"இன்னும் கொஞ்ச நாள்ல நீ பெரிய மனுஷி ஆகப் போறே! அப்படீன்னா, இதுவரைக்கும் சின்னப் புள்ளையா இருந்த நீ, சில மாற்றங்களை பார்ப்பே, உன் உடம்பில! உன் மார்பு என்னுது மாதிரி பெருசாகப் போவுது. தீட்டுன்னு நான் ஒரு 3 நாளு சொல்லுவேனே, அது உனக்கும் வரப் போகுது. இதுவரைக்கும் முளைக்காத இடத்துல எல்லாம் முடி வளரும்.
திடீர்னு ஒரு நாளைக்கு ஒனக்கு கீழேர்ந்து ரத்தப்போக்கு வரலாம். அப்ப நீ உடனே செய்ய வேண்டியது, என்கிட்டயோ, இல்லாட்டி, டீச்சர்கிட்டயோ போய், சொல்லணும். இது ரொம்ப முக்கியம்.

இதே ஒரு ஆண் பையனிடம்,.....

"இந்த வயசுல உனக்கு விதவிதமா ஆசை வரும். தப்பில்லை. அது சகஜம்தான். எல்லாருக்கும் இந்த வயசுல வர்றதுதான். ஆனா, நீ அதுக்காக, முறை தவறி நடந்துக்கக் கூடாது. உன் ஆசை உனக்கு எவ்வளவு முக்கியமோ, அது மாதிரி அடுத்தவங்களொட ப்ரைவசியும்[Privacy] அவங்களுக்கு முக்கியம்! உனக்கு எதுனாச்சும் சந்தேகம்னா எங்களை நீ தாராளமாக் கேக்கலாம். தப்பாவே நினைச்சுக்க மாட்டோம்.
இதுக்காக, நீ கண்ட கண்ட புஸ்தகமோ, இல்லை, வேற எதையோ தேட வேண்டாம். ராத்திரியில, உனக்கு உன்னோட விந்து வெளியாகும். அல்லது நீயே வெளியாக்கணும்னு உனக்கு ஒரு பரபரப்பு வரலாம். அதுல ஒண்ணும் தப்பே இல்லை. இது இந்த வயசுல எல்லாருக்கும் நடக்கறதுதான். அதிகமா பண்ணாதே. கண்ட்ரோல்[Control] பண்ணக் கத்துக்கோ!"

எதுவானாலும் அம்மா அப்பாகிட்ட பேசலாம்னு ஒரு தைரியத்தை பசங்க மனசுல வளர்க்கறது ரொம்ப முக்கியம் இந்த வயசுல.

இப்ப விட்டீங்கன்னா, அப்புறம், நீங்க அவங்களை எப்பவுமே பிடிக்க முடியாது!

'சேகர் மாதிரி நான் வளரலியே?',' லதா ஏன் இன்னும் என்னை மாதிரி ஆகல?, அவளுக்கும் என் வயசுதானே?', இது போன்ற கேள்விகள் எழும்.

ஒவ்வொருவர் வளர்ச்சியும் தனித்தனியானது, ஒருவர் போல் இன்னொருவர் வளர்ச்சி இருக்காது என்பதும் புரியவைக்க வேண்டும் நீங்கள்.

"இன்னும் கொஞ்ச நாள்ல, நீ பெரிய மனுஷி ஆகப் போறே! உன்னாலேயும் ஒரு குழந்தை பெத்துக்க முடியும் அப்போ. ஆனா, உனக்கு இன்னும் அதுக்கான முழு வளர்ச்சியோ, பக்குவமோ, பொருளாதார வசதியோ, வரவில்லை, இப்ப வராது, இது ஒரு வழக்கமான மாற்றம்தான், இதைப் பெருசு படுத்த வேண்டாம் என்பதை அவர்கள் மனதில் ஆழமாகப் பதிய வைப்பது உங்கள் தலையாய பொறுப்பு!"


உணர்வு வேறு, பாலியல் உணர்வு வேறு, இரண்டும் தனித்தனியானது என்பதுதான் இவர்களுக்கு நீங்கள் இப்போது சொல்லி, புரிய வைக்க வேண்டிய ஒன்று!

[விளக்கம் வேண்டுமெனில், பின்னூட்டத்தில் கேட்கவும். விவரமாகச் சொல்கிறேன்.]

கர்ப்பத்தடை சாதனங்களைப் பற்றி அவர்களுக்கு தெரியப் படுத்த வேண்டிய நேரமும் இதுவே!

.
மொத்தத்தில், இந்த நேரத்தில்தான் நாம் அவர்களுக்கு "ஒரு நண்பன்", நம்மிடம் வெளிப்படையாகப் பேசலாம் என்ற ஒரு உணர்வை அவர்களிடம் நாம் வளர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.

திருமதி. மங்கை
சொன்ன இந்தக் கருத்து பதிவுக்கு வலு சேர்ப்பதால், அவர்கள் அனுமதியுடன் இதனையும் சேர்க்கிறேன்! நன்றி.

"உங்க அனுமதியுடன் இரண்டொரு வார்த்தை சேர்துக்கலாமா?.

.உடம்புல ஏற்படுகிற மாற்றங்கள போல உடம்பின் உள்ளிலும் ஏற்பட்ற மாற்றங்கள் பத்தி பெறோர்கள் தெரிஞ்சிட்டாங்கன்னா, குழந்தைகளின் இந்த வயசில அவங்க நினைவில கொள்ளவேண்டிய முக்கியமான ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட சில உணவு வகைகளை குடுப்பது மட்டும் இல்லாம, சில மாற்ற வேண்டிய பழக்க வழக்கங்களையும் மாற்ற அவங்க முற்படுவாங்க.
பிறப்பு உறுப்புகளின் வளர்ச்சிக்கு சத்தான உணவுகளை உட்கொள்ளுவது, பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பற்றிய விளிப்புணர்வையும் சேர்ந்து குடுத்தா, நம்ம நோக்கம் முழுசா முடிவடையும்னு நினைக்கிறேன்..
இந்த விஷயங்கள் நாங்க நேரடியா குழந்தைகளிடம் சொன்னாலும், பெற்றோர்களுக்கும் இந்த விழிப்புணர்வு இருந்தா,குழந்தைகளின் ஆரோக்கியம் எல்லாவிதத்திலேயும் பாதுகாக்கப்படும்."

-----------------------------------------------------

ரொம்ப பயமுறுத்திட்டேனா!

இதுக்கே இப்படீன்னா, அடுத்த பதிவை என்னன்னு சொல்லுவீங்க!

ஆம்! அடுத்த பதிவு..... ஒரு பயமூட்டும் பதிவு!!!

Tuesday, September 12, 2006

“பாலியல் கல்வி – பெற்றோருக்கு” – 7

“பாலியல் கல்வி – பெற்றோருக்கு” – 7


"பருவமே..... புதிய பாடல் பாடு!"


“வர வர உன் போக்கே சரியில்லை! வீட்டில யாரோடையும் பேச மாட்டேங்கற! ஸ்கூல் விட்டு வந்ததும் போட்ட டிஃபனை சாப்பிட்டுட்டு, ஒரு புக்கை எடுத்துகிட்டு மொட்டை மாடிக்கு போயிடற!ஏதனாச்சும் கேட்டா, பட்டுன்னு கதவை சாத்திட்டு, என்னை கொஞ்சம் படிக்க விடறியான்னு எரிஞ்சு விழற!
எப்பப்பாரு, அந்த ஃபோன்ல மணிக்கணக்கா ஃப்ரெண்ட்ஸுங்களோட அரட்டை அடிக்க மட்டும் நல்லா தெரியுது! என்னமோ போ! இதெல்லாம் நல்லத்துக்கில்லை, சொல்லிட்டேன். வந்தோமா, கூடமாட அம்மாவுக்கு ஏதாவது ஒத்தாசை பண்னினோமா, நாலு பேரோட கலகலப்பா பேசினோமான்னு இல்லாம இது என்னடிம்மா அதிசயமா இருக்கு”

இதுவே ஆண்பையனாக இருந்தால் அப்பா இப்படி பேசுவார்!

“நானும் கெவனிச்சுகிட்டுதான் இருக்கேன்! நீ பாட்டுக்கு வர்றதும், அந்த உதவாக்கரை மூஞ்சியை சோப்பு போட்டு, போட்டு அப்படி கழுவறதும், வாரு, வாருன்னு அந்த தலையை எப்ப பாரு ஒரு சீப்பை வெச்சு வாரிக்கிட்டே இருக்கறதும், பெரிய தொரைன்னு நெனப்பு மனசுல!
இன்னும் மீசை கூட முளைக்கலை! அதுக்குள்ளே எல்லாரையும் எதுத்துப் பேசறது, இல்லேனா, ஃப்ரெண்ட்ஸுங்களோட தெருக்கோடில நின்னுகிட்டு அரட்டை அடிக்கறது, இதே வழக்கமாப் போச்சு ஒனக்கு!
என்ன நெனைச்சுக்கிட்டு இருக்கே நீன்னு தெரியலை.ஒழுங்கா படிச்சு முன்னுக்கு வர்ற வழியைப் பாக்காம, கண்ட கண்ட காலிப் பசங்களோட சகவாசம்!செருப்பு பிஞ்சிரும், சொல்லிட்டேன்!”

ஏன்ன! பழகின, எங்கேயோ கேட்ட டயலாக் மாதிரி இருக்குல்ல!

அனேகமாக நாம் ஒவ்வொருவரும், கேட்ட அல்லது சொல்லிய வசனங்கள்தான் இவை!

மனிதர்களுக்கு கிடைத்திருக்கிற பெரிய வரம் – மறதி!

வெகு வசதியாக, நாம் கடந்து வந்த பாதையை மறந்துவிட்டு, ஏதோ இப்போதுதான் முதன்முதலாய்ப் பார்ப்பது போல எல்லா பெற்றோரும், தன் பிள்ளைகளிடம் மட்டுமே இது நிகழ்வது போல கரித்துக் கொட்டும் வழக்கமான பல்லவிதான் இது!

பருவம் அடைவதற்கு முன்னர், உடலில் ஹார்மோன்களின் மாற்றத்தால், நம் பிள்ளைகளிடம் ஏற்படுகின்ற இந்த நிகழ்வுகளை நாம் பெரும்பாலும் புரிந்து கொள்ளத் தவறுகிறோம் என்பதே உண்மை.

அப்படி என்னதான் ஆகிறது இந்த 12 முதல் 14 வயதுக்குள்?

பலவிதமான மாற்றங்கள் இந்த காலத்தில் ஏற்பட்டாலும், பாலியல் சம்பந்தமானவைகளைப் பற்றி மட்டுமே இங்கு பார்க்கலாம்.

திடீரென வளர்ச்சி அதிகமாகிறது.
முகத்தில் எண்ணைப்பசை அதிகமாகி, பருக்கள் தோன்ற ஆரம்பிக்கிறது.
மறைவிடங்களில் [அக்குள், பிறப்பு உறுப்பு பகுதிகள்] பெண்களுக்கும், இவை தவிர, முகம், மார்பு ஆகிய இடங்களிலும், முடி அரும்ப ஆரம்பிக்கிறது.
குரல் மாறி, சற்று கரகரப்பாகிறது.
பெண்களுக்கு மார்பகங்களும், ஆண்களுக்கு பிறப்பு உறுப்பும் பெரிதாகத் தொடங்கும்.

இதையெல்லாம் நீங்களே கவனித்தால்தான் உண்டு. உங்களிடம் வந்து அவர்கள் சொல்ல மாட்டார்கள் இப்போது!

தானே உணரும் இந்த மாற்றங்களினால், சற்று குழம்பிப் போய், வீட்டில் கேட்பதற்கு வெட்கப்பட்டு, நண்பர்களை நாடுவார்காள், இதைப் பற்றி இன்னும் அதிகம் தெரிந்து கொள்ள!

இதனால என்னா நடக்கும் வீட்டில!

பெற்றோரிடமிருந்து சற்று விலக ஆரம்பித்து, சுதந்திரமாக இருக்க, தன் தேவைகளை தானே செய்து கொள்ள தொடங்குவார்கள்.

தனக்கு பொறுப்பு வந்த மாதிரி காட்டிக் கொள்ள, தன்னையும் பெரியவங்க கூட்டத்துல சேத்துக்க ஆசைப்படுவாங்க!

முந்திரிக்கொட்டை மாதிரி, எல்லா விஷயத்திலியும், தன் கருத்தை சொல்றதுக்கு ஆசைப்பட்டு, சமயத்துல திட்டு வாங்கறதும் சகஜமா நடக்கும்!

“போயி ஒன் வேலையைப் பாரு! வந்துட்டான் பெரிய மனுஷனாட்டம். வயசுக்கு தகுந்த பேச்சா பேசற நீ” போன்ற திட்டெல்லம் சர்வ சாதாரணமா விழும் இப்போ!

பக்கத்து வீட்டு இளம் தம்பதிகள், எதுத்த வீட்டு அக்கா, கோடிவீட்டு ஃப்ரெண்டு, நேத்து வரைக்கும் ஒண்ணா ஓடிப்பிடிச்சு விளையாடின, கல்பனா, இவங்க எல்லாரும் இப்போ ஒரு புதுவிதமாத் தெரிய ஆரம்பிப்பாங்க!

அவங்க எப்பவும் போலவே இவன்கிட்ட காட்டற அன்பும், ஆசையும் இப்போ இவனுக்கு அல்லது இவளுக்கு புதுமாதிரியா அர்த்தமாகும்.

“இவனைக் கொஞ்சம் என்னான்னு கேளுங்க டாக்டர்! பக்கத்து வீட்டு அம்மா குளிக்கும் போது, இவன் எட்டிப் பாத்தான்னு வந்து புகார் பண்றங்க! எனக்கு ஒரே அவமானமாக இருக்கு. இவன் இது மாதிரியெல்லாம் பண்றவன் இல்லே. நாங்க ரொம்ப தன்மையாத்தான் வளத்தோம் இவனை” என்று என்னிடம் வந்தவர்கள் உண்டு!

‘றாஜு என்னையே ஏன் பாத்துக்கிட்டு இருக்கான்?’
‘ஸுஜாகிட்ட எப்படியாவது இன்னிக்கு பேசிறணும்!’

இது போன்ற ஆசைகள் காரணமில்லாமல் வரத் துவங்கும்.

இன்னும் கொஞ்சம் முக்கியமானதும் இருக்கு!

தான் யாரு, தன்னோட தனித்துவம்லாம்[speciality] என்ன எப்படி அதை வளக்கறது போன்ற விஷயங்களைப் பத்தி ரொம்பவே ஆராய்ச்சி பண்ண ஆரம்பிப்பாங்க.

பாலியல்[sex] ஜோக்குல்லாம் இப்ப நல்லாவே புரிய ஆரம்பிச்சு, அதை நண்பர்களோட பகிர்ந்துக்க தொடங்குவாங்க.

இது மாதிரி ஜோக்கோ, இல்லை படமோ பாக்கும் போது, தங்களோட பிறப்பு உறுப்பிலும் [இதோட பேரு அவங்களுக்கு நல்லாவே தெரியும் இப்ப,.... நான் தான் இங்கு சொல்லவில்லை!] உடம்பிலும் சில விரைப்புகள் ஏற்படறதை உணருவாங்க.

‘சுய இன்பம்’ அப்படீன்னா என்ன என்பது யாரும் சொல்லிக் கொடுக்காமலே தெரியவரும்.

சில சமயம் ராத்திரியில படுக்கை ஈரமாகும். எதனாலன்னு சீக்கிரமே புரியும்.

அந்த உணர்வு கொடுக்கற ஆனந்தத்தை மறுபடியும் அனுபவிக்க கை பரபரக்கும்.

உடனே ஒரு குற்ற உணர்வும், செய்யறது தப்போன்னு ஒரு தாழ்வு மனப்பான்மையும் வரும்.

இதைத் தவிர்க்க, தனிமையை நாடுவாங்க .

சும்மா இல்லாம நம்மளை விட இன்னும் நல்லா தெரிஞ்ச மாதிரி காட்டி பீலா விடற நண்பன் சொல்றதெல்லாம் உண்மையோன்னு மனசு கிடந்து தவிக்கும்.

“டேய், ஒவ்வொரு தடவையும் விந்து வெளியேறும் போது ஒன் ஒடம்புலேர்ந்து 60 சொட்டு ரத்தம் வீணாப் போகுது, தெரியுமாடா?”
“மெதுவா அப்பப்ப கையால கொஞ்சம் பிசைஞ்சு விட்டுக்கிட்டு இருந்தீன்னா, ஒன் மார்பு பெருசா, நல்லா வளரும்னு ஒரு புக்குல படிச்சேன்டீ!”

இது போன்ற இலவச ஆலோசனைகள் ஆயிரம் கிடைக்கும்.

நம்ம கிட்டயும் பேச மாட்டாங்க!

நாமளும் இதெல்லாம் பருவ மாற்றங்கள்தான்னு புரிஞ்சுக்காம குடும்ப மானம், அது இதுன்னு போட்டு அடிச்சிப்போம்.

இந்த வயதுக் குழந்தைகளின் பெற்றோர் செய்ய வேண்டியது , தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

அடுத்த பதிவில் பார்ப்போம்!

Wednesday, September 06, 2006

“பாலியல் கல்வி – பெற்றோருக்கு” – 6

பாலியல் கல்வி – பெற்றோருக்கு” – 6


“நீயா இப்படி பண்ணினே?”


‘ராஜுவோட டீச்சர் உங்க கிட்ட இதக் குடுக்கச் சொன்னாங்களாம்!’
ஒரு பேப்பரை நீட்டுகிறார் உங்கள் மனைவி அலுவலில் இருந்து வந்த உங்களுக்கு,... ஒரு காஃபியும் போட்டு எடுத்துக்கொண்டு.

‘என்னவாம்?’ என்று அலுத்துக் கொண்டே பிரிக்கிறீர்கள்.
முகம் சிவக்கிறது!
உதடு துடிக்க நாக்கை மடித்து, ‘எங்கே அந்த ராஸ்கல்?’ எனக் கோபமாகக் கூவுகிறீர்கள்!


அப்ப்டி என்னதான் அந்த லெட்டரில்?

“உங்கள் மகன் இன்று வகுப்பறையில், இன்னும் சில மாணவர்களுடன் சேர்ந்து பெண்கள் “படம்” போட்ட ஒரு புத்தகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். இது பற்றிப் பேச நாளைக் காலை 9 மணி அளவில் பள்ளிக்கு வந்து என்னை சந்திக்கவும்!”

உங்கள் மனதில் இப்போது ஓடும் எண்ணங்கள் !!

அவமானம்: நம்ம பையன் இப்படி தலை குனிய வெச்சுட்டானே! நாளைக்கு எப்படி நான் போய் டீச்சரைப் பார்ப்பது?
கோபம்: தொலைச்சுடறேன் அவனை. கட்டி வெச்சு நாலு சாத்து சாத்தினாத்தான் வழிக்கு வருவான்.
ஆத்திரம்: எல்லாம் உன்னால வர்றது தான்! நீதான் அவனை செல்லம் குடுத்து குட்டிச்சுவர் ஆக்கிட்டே!
வருத்தம்: என்னவெல்லாம் கதை சொல்லி, எப்படி எல்லாம் கனவு கண்டேன். இப்படி பண்ணிட்டானே ஸ்கூலுக்கு போக ஆரம்பிச்சதும்!

இந்த மனநிலையோடா ராஜுவை எதிர் கொள்ளப் போறீங்க?
நிச்சயமா டிஸாஸ்டர்[Disaster] தான்!


நீங்க கத்த, அம்மா, தடுக்க, அவன் அழ இதைப் பார்த்து சின்னக் குழந்த வீல் வீல்னு கத்த, அந்த இடமே ரணகளமாகப் போவுது, இன்னும் கொஞ்ச நேரத்துல.!!

நீங்கள் என்ன செய்யலாம்?

இப்போ உங்களுக்கு உடனடித் தேவை, இதுலேர்ந்து விடுபட்டு, தனியா ஒரு அரை மணி என்ன ஆச்சு, என்ன பண்ணனும், எப்படி பண்ணலாம், ஏன் பண்ணினான் என்பதை பற்றி சிந்திக்க.

“ சரி, இன்னிக்கு ராத்திரி சாப்பாட்டுக்கு அப்புறம் இதைப் பத்தி பேசலாம்” – இப்படிச் சொல்ல வேண்டும்.


முடியுமா உங்களால்?

உங்களுக்குள் எழும் அத்தனை உணர்வுகளும் சாதாரணமாக எல்லா பெற்றோருக்கும் வருவதுதான்.
என்னென்ன உணர்வுகள் வந்தது என்பது புரிந்தவுடன்,.... இனி ஒரு நொடி ‘ராஜுவுக்கு எப்படி இந்த ஆர்வம் வந்திருக்கக் கூடும்’ என யோசியுங்கள்.

அவனைக்கேட்டால் என்னவென்று தீர்ந்து விடப் போகிறது!ஆனால், அதற்கு முன் உங்களை நீங்கள் தயார் செய்து கொள்ள வேண்டும்.


“இதைப் பார்த்ததும், என்னதான் இருக்கு இதுக்குள்ளே என தெரிஞ்சுக்கற ஆர்வம்..?”[Curiosity]
“ஒருவேளை அவன் நண்பர்களின் நடுவில் தன்னை ஒரு நல்ல பையன் மாதிரி காட்டிக் கொண்டு போகவேண்டாமே என்ற தூண்டுதல்..?”[PeerPressure]
“வேணாம்னு சொல்றதை செய்யணும்கிற துடுக்குத்தனம்..?” [diffidence]


இந்தவயதில், மேற்சொன்ன எதோ ஒரு காரணத்தால், குழந்தைகள் இது போன்ற புத்தகங்களைப் பார்க்க, படிக்க ஆசைப்படுவது இயல்பு!

கொஞ்சம் நிதானமா யோசிச்சீங்கனா, நீங்க பண்ணாத ஒண்ணு இல்லை இதுன்னு புரியும்.

இருந்தாலும் இப்ப, நீங்க ஒரு கௌரவமான ‘தந்தை’ ஆயிற்றே!

நான் கூட செய்யலாம்; என் பையன் செய்யலாமா? என்கிறமனோபாவம்தான் பெற்றோர்களுக்கு வருகிறது.

கோவத்துல போட்டு, அவனை அடிச்சி, திட்டி, வேற தண்டனை எல்லாம் கொடுத்து, என் பையனை நான் கண்டிச்சு வளக்கிறவன்’னு நீங்க பெருமைப் பட்டுக்கலாம்.

ஆனா, இது மூலமா, நீங்க செய்தியைக் கேட்டு அனுபவிச்ச உணர்வுகளை அப்படியே அவனுக்குள்ளெ அனுப்பற பெரிய தவறைச் செய்றீங்கன்னு நினைவு வெச்சுக்கணும்.

அப்பத்தான், ‘சரி, இனிமே வீட்டில கேக்கக் கூடாது இதைப் பத்தி’ அப்படீன்னு பையன் ஒரு தெளிவாயிடறான்!

மனித உடல் அமைப்பைப் பற்றிய ஆர்வம் அதிகம் வளரும் நேரம் இது!

"எனக்குஇருக்கற மாதிரி ஏன் அவங்களுக்கு மார்ல இல்லை?"
"எனக்குஏன் இன்னும் மீசை வளரலை?"


இதுபோல பல கேள்விகள் மனதில்!

எனவே, ராஜு அப்படி ஒரு புத்தகத்தை பார்த்ததை தப்பா நினைக்காதீங்க!

இதுக்குன்னே சில நல்ல கல்விப் புத்தகங்கள் கிடைக்கின்றன.
அவற்றில் ஏதாவது ஒன்றை வாங்கி ராஜுவுடன் பேச வேண்டிய நேரம் இது!


பல்வேறு வளர்ச்சிக் காலங்களில், மனித உடல் எப்படி எல்லாம் மாறுபடுகிறது, வளர்கிறது என்பதைப் பற்றி விளக்கணும் இப்ப!
ஆணுக்கும், பெண்ணுக்கும் உள்ள உடல் ரீதியான வேறுபாடுகள், அவை செயல்படும் விதம், பருவ மாற்றம் என்றால் என்ன இதெல்லாம் தெரிய வைக்கணும்.


அப்போதுதான், இன்னும் சில ஆண்டுகளில் தன்னிடமோ. அல்லது தன் வயதொத்த சிறுமியரிடமோ ஏற்படும் மாறுதல்களை அவனால் புரிந்து கொள்ளமுடியும்.

இதை நீங்க செய்யாலேன்னா, வேற யாரு?


அதை விட்டு, இது மாதிரி பேச்சு வந்தாலே, கோவமா பார்க்கிறது, ஏதோ வேண்டத்தகாத ஒண்ணைப் பத்தி பேசற மாதிரி முகத்தை வெச்சுக்கிறது, இதெல்லாம் அவனுக்குத் தாழ்வு மனப்பான்மையையோ , இல்லை, எதிர்ப்பு உணர்வையோதான் வளர்க்கும்.

அதுக்காக எதையும் போட்டுத் திணிக்க வேண்டாம்.


அப்புறம் நம்ம சிபியார் சொன்ன மாதிரி, அப்ளிகேஷன்ல போடறதுக்காக, ‘ஸெக்ஸுன்னா’ என்னம்மான்னு கேட்ட பையன்டபோய், விலாவாரியா சொல்லி சூடுபட்ட அம்மா கதை ஆயிடும்!
[முழுக்கதை வேண்டுவோர், போன பதிவின் பின்னூட்டம் பார்க்க!!:)]


இந்த வயதுக் குழந்தைகள் கேட்கக்கூடிய கேள்விகளும் அதற்கான பதில்களும்!

"எனக்கு எத்தனை வயசு ஆகணும், நான் குழந்தை பெத்துக்க?"

"தீட்டு அல்லது மாதவிடாய் உனக்கு வர ஆரம்பிச்சதும் நீ குழந்தை பெத்துக்க ரெடி ஆகறே! சாதாரணமா, ஒரு 11 வயசுக்கு மேல இது வரும்.ஆனா, பெத்துக்க முடியுமே அப்படீங்கறதுக்காக நீ அம்மா ஆயிடக் கூடாது. ஏன்னா, அதுல இன்னும் நிறைய பொறுப்பெல்லாம் இருக்கு."

"அப்போ பசங்களுக்கு? அவங்க எப்போ அப்பா ஆக முடியும்?"


"பொண்ணுங்களுக்கு மாதவிடாய் மாதிரி ஆண்களுக்கு விந்துன்னு ஒண்ணு 13/14 வயசுல சுரக்கும். அப்போ அவங்க அப்பா ஆக முடியும். அவங்களுக்கும் உனக்கு சொன்னதெ தான். படிச்சு முடிச்சு, ஒரு வேலை பார்த்து, ஒரு குடும்பத்தை தானே காப்பாத்த முடியும்ஙற நேரம் வரைக்கும் இதை தள்ளிப் போடணும் , சரியா?"


"என் மாரு எப்போ வளரும் இன்னும் நல்லா..உன்னை மாதிரி? "


"அதுக்கு இன்னும் கொஞ்சம் நாளு போகணும். ஓவ்வொருத்தருக்கு ஒவ்வொரு நேரத்துல வளரும். பருவம் வந்ததுக்கு அப்புறம்தான் இது பெருசா வளர ஆரம்பிக்கும். இப்ப நீ சின்னப் பொண்னுதான். இன்னும் கொஞ்சம் வருஷம் போவட்டும்"

[இது போன்றே பதில் ஆண்பிள்ளைகளின் கேள்விக்கும் மாற்றிச் சொல்லலாம்]

“பக்கத்து வீட்டு அக்காவுக்கு இன்னும் கல்யாணமே ஆகலியே! எப்படி அவங்களுக்கு குழந்தை பொறக்கப் போவுதுன்னு சொல்றாங்க?”

"கல்யாணம் ஆனாலும், ஆவாட்டியும், ஒரு ஆணும், ஒரு பெண்ணும் உடல் ரீதியா ஒண்ணா சேர்ந்துபடுத்தாங்கன்னா, குழந்தை பொறக்க வாய்ப்பு இருக்கு. ஆனா, நான் வந்து கல்யாணம் கட்டிக்கிட்டதுக்கு அப்புறம்தான் குழந்தை பெத்துக்கிட்டேன். அதான் நல்லது! ஆனா, மத்தவங்க வேற விதமா நினைக்கலாம் இல்லியா?"

"சில வார்த்தையெல்லாம் [சொல்லிக்காட்டி] கெட்ட வார்த்தைன்னு சொல்றாங்களே! ஏம்மா?"


"மனுஷங்க உறவை பழிக்கிற மாதிரி சொல்றது கெட்ட வார்த்தை தானே! அதனால இதெல்லாம் சொல்லாம இருக்கறது நல்லது! கோபத்துலதான் சாதாரணமா வரும்! ஆனா, அப்பக்கூட சொல்ல வேணாமே! என்ன?!"


திரும்பத் திரும்ப சொல்கிறேன் என கோவியார் அலுத்துக்கலாம்! ஆனாலும் சொல்லிவிடுகிறேன்.


இந்தகேள்விகளை எல்லாம் நீங்கள் ஒதுக்கினாலும், குழந்தைகள் எப்படியும் தெரிந்து கொள்ளவே முயற்சிக்கும்!
சொல்லிப்புட்டேன்!
சொல்லிப்புட்டேன்!
பார்த்து நடந்துக்கோங்க!


அடுத்து, "பருவம் வருவதற்கு சற்று முன்னால் என்ன தெரியணும்?" என்பது பற்றிப் பார்க்கலாம்!!

Monday, September 04, 2006

"பாலியல் கல்வி -- பெற்றோருக்கு" [5]

"பாலியல் கல்வி -- பெற்றோருக்கு" [5]

இதுவரை வீட்டில் பொத்திப் பொத்தி வளர்த்த உங்கள் அருமை மகன்/ள் ஒரு சில மணி நேரம் உங்களை விட்டுப் பிரிந்து போக வேண்டிய அந்த நேரம் வந்து விட்டது!

ஆம்! பள்ளிக்கு அனுப்ப வேண்டும்!

இதுவரை ஏதோ கேட்டதற்கு பதில் சொல்லி, அல்லது, தன் கருத்துகளைப் புகட்டி, பாங்குற வளர்த்த காலம் இதோடு முடிவடைகிறது!

இனி, வெளியுலக நன்மை, தீமைகளை எதிர் கொள்ளப் போகும் நேரம் அவர்களுக்கு!

இப்போதுதான் கொஞ்சம் தீவிரமாகவே, நீங்கள் பாலியல் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய தருணம்!

சரி, பாலியல், பாலியல் என்கிறீர்களே, பாலியல் கல்வி என்றால் என்ன நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தகவல்களைத் தெரிந்து கொண்டு,[Information] பாலியல் பற்றியதான ஒரு வரைமுறைகளையும்,[attitudes] நம்பிக்கைகளையும்,[beliefs] பாலியல் அறிமுகத்தையும்[Sexual identity], உறவுகளின் மேம்பாட்டையும்,[relationships] நெருக்கத்தையும்[intimacy] "நீங்கள்" தெரிந்து கொள்ள வேண்டிய நேரம்!

என்னடா இவன்! இதெல்லாம் எனக்குத் தெரியமலா பிள்ளைகளைப் பெற்றிருக்கிறேன் எனக் கோவியார் [ஏன்? நீங்களும்தான்!] கேட்பது காதில் விழுகிறது!

நீங்கள் அறிந்து பழகியது வேறு!
இப்போது நீங்கள் எதிர் கொள்ளப் போவது வேறு!

பட்டும் படாமலோ, அல்லது முயலாமலோ, நம் பெரியவர்கள் செய்யாததை, செய்ய வேண்டாம் என விட்டதை, செய்யத் தவறியதை, நாம் செய்ய வேண்டிய நேரம்!

மாறிக் கொண்டே இருக்கும் உலக நியதியின் கட்டாயம்!

சம்மதத்துடன்[Informed Choices] செய்து கொள்ள வேண்டிய சில முடிவுகளை அவர்கள் தெரிந்து கொள்ள , தனது நம்பிக்கையையும்,[Self confidence] சுய மரியாதையையும்[Self-respet] காப்பற்றிக் கொள்ள வேண்டியதின் அவசியத்தையும்,

இதன் மூலமே அவர்கள் தவறான தூண்டுதல்களை[abuse] , துஷ்பிரயோகம் செய்தலைத் தவிர்த்தலை,[exploitation] விரும்பத்தகாத உறவுகளை[Unintended practices] ஒடுக்க, நாம் சொல்லிக் கொடுக்க வேண்டிய நேரம்.

தருணமிதைத் தவற விடுவாயோ?

5 முதல் 7 வயது வரைக் குழந்தைகள் தனது பாலியல்[] பற்றி தெரிந்து கொண்டு இருப்பார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

சிறுவர்கள் தன் வயதொத்த சிறுவர்களுடனும்,...
சிறுமியரும் அதே போலவும்,...
நட்பு பழக முற்படுவார்கள்.

"சீ போ! நீ பொம்பளை! எங்கிட்ட வராதே!
" போடா! உங்கூட யார் வந்தா? வெக்கமில்லை ஒனக்கு!"
என்ற வசனங்களை இப்போது அதிகம் பார்க்கலாம்.

குழந்தைகள் எப்படி வருகின்றன என்ற முந்தையக் கேள்வி இப்போது அதிகம் வலுப் பெற்று, சற்றுத் தீவிரமாகவே கேட்கப்படும்!!

இப்போது அதை எப்படிக் கையாள்வது எனப் பார்ப்போம்!

" நான் எப்படிம்மா ஒன் வயத்துக்குள்ளே வந்தேன்"

" எப்படி வந்திருப்பேன்னு நீ நினைக்கிறே?"

இப்படிக் கேட்பதின் மூலம், அது என்ன நினைக்கிறது என்று அறிந்து கொள்ள ஒரு உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது.

அப்படிக் கேட்காமல், அதி புத்திசாலித்தனமாக ஏதோ சொல்லப் போய் ஏடாகூடமாக வாய்ப்பிருக்கிறது!

மேலும், என்ன, எவ்வளவு சொல்லலாம் என்று உங்களை நிதானித்துக் கொள்ள ஒரு வாய்ப்பும் கிடைக்கிறது!

அதற்கு எவ்வளவு தெரியும் இதுவரை என அறியவும் முடியும்!

ஒரு கோழிமுட்டையை எடுத்துக் காட்டி,
"இதுலேர்ந்துதான் ஒரு கோழி வருதுன்னு தெரியுமில்லை உனக்கு! அது மாதிரி நீ என் வயத்துக்குள்ளே ஒரு சின்ன முட்டையா இருந்தே! அப்படியே பெருசாகி அப்புறம் நீ பொறந்தே!"
எனச் சொன்னால் அதுவே அக்குழந்தைக்கு சமாதானமாகிவிடும்!

தனக்குத் தெரிந்த ஒன்றைக் காட்டியே அம்மா சொன்னாள் என்று தன் புத்திசாலித்தனத்தை மெச்சியபடி, 'பெருந்தன்மையாய்' உங்களை 'மன்னித்து' விட்டுவிடும்!

'தன்னால் எதுவும் செய்ய முடியும்' என்ற உணர்வை சொல்லிக் கொடுப்பதே இவ்வயதுக் குழந்தைகளுக்கு நாம் செய்யும் பேருதவியாகும்!

இப்படிச் சொல்கிறேன் எனத் திகைக்க வேண்டாம்.

தன் அளவு தெரிந்த எந்தக் குழந்தையும் அதைத் தாண்டிச் செல்லாது.
இதுதான் உண்மை!

அளவு[Limitations] தெரியாத குழந்தைகள் தான் ஆழம் தெரியாமல் காலை விடுகின்றன.

ஆண் என்றால் இது, பெண் என்றால் இத்தனை என அளவுகோள்களை நிர்ணயிக்காமல், உனக்கென்று ஒரு தனித்துவம் இருக்கிறது; அதை வளர்க்க, செயல்படுத்த, நான் உறுதுணையாய் இருப்பேன் என்னும் உணர்வை இவ்வயதில் விளைப்பது அவர்களது தன்னம்பிக்கையையும், உங்கள் மேல் உள்ள பாசத்தையும், மதிப்பையும் மேம்படுத்தும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

இந்த வயதில்தான் தனது பிறப்பு உறுப்புகளைப் பற்றிய கவனம் தெரிய வருகிறது.

சாதாரணமாகக் கேட்கப்படும் கேள்விகள்!!

[இது போல 'நான்' கேட்கவில்லையே என மறுக்காதீர்கள்! காலம் மாறிவிட்டது! இதற்குள், உங்கள் குழந்தை, நீங்கள் அதன் வயதில் இருந்த போது பார்த்திராத பல காட்சிகளை டெலிவிஷன் மூலமோ, அல்லது இன்ன பிற வகையிலோ அறிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளவும்!!]

"எனக்கு ஏன் ராஜுக்கு இருக்கற மாதிரி ஒண்ணுக்கு போற இடம் இல்லை?"

"நான் எங்கேர்ந்து வந்தேன்னு நீ காட்டுறியா?"

"ராஜு ஏன் நின்னுகிட்டே ஒண்ணுக்கு போறான்? நான் ஏன் ஒக்காந்துகிட்டு போவணும்?"

"என்னாலேயும் கொழந்தை பெத்துக்க முடியுமா?"[ஆண் குழந்தை கேட்பது]


இதற்கு நம் பதில் என்னவாக இருக்கலாம்?

1. உனக்கு எப்பவுமே அது இல்லை. ஏன்னா நீ ஒரு பொண்ணு. பொண் குழந்தைகளுக்கு ஆம்பளைப் பசங்க மாதிரி நீட்டா கிடையாது. சரியா? அதான் ஒன்னோட ஸ்பெஷாலிடி![Speciality]

"2. நீ என்னோட ரெண்டு காலுக்கும் நடுவுல இருக்கற ஒரு இடத்து வழியா வந்தே! அதை உனக்கு நான் காட்ட முடியாது! ஏன்னா, அது என்னோட தனிப்பட்ட, மறைக்கப்பட்ட[private] இடம்! இப்ப நான் உனக்கு ஒரு புக்[Book] காட்டறேன், அதுல இது மாதிரி இருக்கும், அப்போ உனக்குப் புரியும், சரியா?

"3. ஆம்பளைக்கும், பொம்பளைக்கும் இயற்கையிலேயே தனித்தனியா இடம் இருக்கு ஒண்ணுக்கு.-- அது பேர் சிறுநீர்-- போறதுக்கு. இப்ப இந்த ஹோஸ் பைப் வழியா தண்ணி எப்படி சொய்ய்ங்ன்னு விழுது! அது மாதிரி ஆம்பளைங்களுக்கு இருக்கு. அதனால், அவங்களால நின்னுக்கிட்டு போக முடியுது. உன்னால முடியாது. ஏன்னா உனக்கு அப்படி இல்லை.

"4. பொம்பளைங்கதான் குழந்தை பெத்துக்க முடியும். ஏன்னா, அவங்களுக்குத்தான் யுடிரஸ்,[Uterus] கர்ப்பப்பைன்னு ஒண்ணு இருக்கு. ஆம்பளைங்களுக்குக் கிடையாது. ஆனா, உன் அப்பாதான் குழந்தை வர்றதுக்கு எனக்கு ஹெல்ப் பண்ணினாரு! நீயும் பெரியவனான உடனே,.. வேணுமின்னா அப்பாவாகலாம்!"

இதெல்லாம் ஒரு சில உதாரணங்களே!
நீங்கள் இதை எப்படி வேண்டுமானாலும், உங்கள் கருத்திற்கேற்ப மாற்றி வடிவமைத்துச் சொல்லலாம்.

....இன்னும் இந்த முக்கியமான வயதைப் பற்றிச் சொல்ல வேண்டியிருப்பதால்......

இன்னும் வரும்!