"லப்-டப்" [4] "இவருக்கே பாட்டா!"
"லப்-டப்" [4] "இதயத்திற்கே ரத்தமா"
"கரோனரி நாளங்கள்" [Caronary Arteries]
உடலின் பல பாகங்களைப் போலவே, இதயமும் திசுக்களால் ஆன ஒன்றே! அதற்கும் பிராணவாயுவும்,[Oxygen] மற்ற சத்துப் பொருள்களும் [Nutrients] வேண்டும்!
அட! இது என்னய்யா புதுக்கதை! "இவருக்கே பாட்டா" என்று நம் பாடகர் எஸ்.பி.பி.யைப் பார்த்து 'காதலன்' படத்தில் ஒரு வசனம் வருமே, அதைப் போல, ரத்தத்தையே அனுப்பும் இதயத்திற்கு இதெல்லாம் தேவையா என ஒரு கேள்வி எழலாம்!
ஆனால், "ஆறு முழுதும் நீர் ஓடினாலும், நாய் நக்கித்தான் குடிக்கணும்" என்பதைப் போல, இதயம் முழுதும் ரத்தம் நிரம்பிக் கிடந்தாலும், அதற்குத் தேவையான சத்துக்களை, அதுவும் சில ரத்தக் குழாய்கள் அனுப்பும் ரத்தத்தின் மூலமே பெற்றுக் கொள்ள முடியும்!
அவற்றைச் செய்வது "கரோனரி நாளங்கள்" [Caronary Arteries] என அழைக்கப்படும் ரத்தக் குழாய்கள்!
மஹாதமனி[Aorta]யிலிருந்து பிரியும் இரு கரோனரி நாளங்கள் இதயத்திற்கு ரத்தத்தின் மூலம், பிராணவாயுவையும், மற்ற சத்துப் பொருள்களையும் அளிக்கின்றன.
1. வலது கரோனரி நாளம் [Right Caronary Artery, RCA] வலது ஆரிக்கிளுக்கும், வலது வெண்ட்ரிக்கிளுக்கும் ரத்தத்தைக் கொடுக்கிறது. இது இன்னொரு பிரிவாகப் பிரிந்து இடது வெண்ட்ரிக்கிளின் கீழ்ப்பகுதிக்கும், இதயத்திற்குப் பாதுகாப்பாக மூடியிருக்கும் 'ஸெப்டம்" [Septum] என அழைக்கப்படும் ஜவ்வு சதைக்கும் ரத்தத்தை Posterior Descending Artery[PDA] மூலம் அனுப்புகிறது.
2. இன்னொரு பிரிவான இடது கரோனரி நாளம் [Left Main Caronary Artery] இரு பிரிவுகளாகப் பிரிகிறது.
[அ] இடது ஆரிக்கிளுக்கும், இடது வெண்டிக்கிளின் பக்கங்களுக்கும், பின் பகுதிக்கும் சர்க்கம்ஃப்ளெக்ஸ்[Circumflex artery] நாளமும்,
[ஆ] இடது வெண்ட்ரிக்கிளின் முன் பகுதிக்கும், கீழ்ப் பகுதிக்கும், 'ஸெப்டத்தின்' [Septum] முன் பகுதிக்கும் Left Descending Artery [LDA], எனும் நாளமும்
ரத்தத்தைக் கொடுக்கிறது.
இவை அனைத்தும், மேலும் பல சிறு சிறு நாளங்களாகப் பிரிந்து கிடக்கின்றன.... சும்மா!
ஆம்! இவை எல்லாம் சாதாரணமாக இதயம் இயங்கும் போது, முழுதுமாக மூடிக் கிடக்கும்!
இதயத்திற்குத் தேவையான ரத்தம் சரியான முறையில், பிராணவாயுவை அனுப்ப இயலாத நிலையில், இவைகளில் சில திறந்து, தேவையான ரத்தத்தை இதயத்திற்கு அனுப்பும் வேலையை மேற்கொள்ளும்.
அதாவது, இதயத்தின் முக்கிய நாளங்களில் ஏதேனும் அடைப்பு [block] ஏற்படும்போது, இந்த துணை நாளங்கள்[collaterals] திறந்து, அடைப்பைத் தாண்டி [bypass] இதயத்திற்குத் தேவையான ரத்தத்தைத் தடையின்றி அனுப்பும் வேலையை மேற்கொள்ளுகின்றன.
இதயம் பழுதுபடாமல் ஒழுங்காக இயங்க இந்த ஏற்பாடு உதவுகிறது!
அவ்வளவுதாங்க! இன்னும் ஒரே ஒரு பதிவு, ரத்தம் என்றால் என்ன என்பதைப் பார்த்தபின்,
இவற்றில் ஏற்படக்கூடிய கோளாறுகளைப் பார்க்கலாம்!
படங்கள் பதிவதில் சில காப்பிரைட்[copyright] ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறேன்!
அவை வந்ததும், பதிகிறேன்!