"கசடற"

அறிவியல் தொடர்பான எனக்குத் தெரிந்த தகவல்களை, ஒரு மருத்துவன் எனும் பார்வையில் சொல்ல விழைகிறேன். முழுக்க முழுக்க இவை என் கருத்துகள் மட்டுமே! முருகனருள் முன்னிற்கும்!

Monday, February 26, 2007

"லப்-டப்" 14 --"ஆ! நெஞ்சு வலிக்குதே"[3] "உயிரின் உயிருக்கு ஓம் நம:"

"லப்-டப்" 14 -- "ஆ! நெஞ்சு வலிக்குதே"[3]

"உயிரின் உயிருக்கு ஓம் நம:"

மையோகார்டியல் இன்ஃபார்க்ஷன் [Myocardial Infarction, MI] என்றால் என்ன?

அப்படி என்றால் என்ன?
எப்படி நிகழ்கிறது?
எதனால் வருகிறது?

இதன் அறிகுறிகள் என்னென்ன?
எப்படி இதைத் தவிர்க்க முடியும்?
என்ன சிகிச்சை இதற்கு?
சிகிச்சைக்குப் பின் என்ன செய்ய வேண்டும்?இதயத் தாக்குதலின் அறிகுறிகள் [symptoms] என்னென்ன?

1. 'ஆஞ்ஜைனா'[angina] எனும் நெஞ்சுவலி:
ஒரு விதமான இனம் புரியாத வலி அல்லது வேதனை, மார்பின் நடுப்பகுதியில் இருந்து கிளம்பி,

நெஞ்சழுத்தம்[pressure]
பாரம்[heaviness],
இறுக்கம்[tightness],
வலி[aching],
எரிச்சல்[burning],
மரமரப்பு [numbness] அல்லது
பிசைதல்[squeezing] போன்ற உணர்வு
ஒரு சில நிமிடங்களுக்கு இருந்து, பின்னர் மறையும் அல்லது மீண்டும் வரும்.

அஜீரணம்[indigestion] அல்லது நெஞ்செரிச்சல்[heartburn] என தவறாகக் கருதி அசட்டையாக இருந்து விடுவார்கள் பல நேரம்!

2. இந்த வலி உடலின் பல பாகங்களிலும் உணரப்படும். குறிப்பாக, கைகள், இடது தோள்பட்டை, முதுகு, கழுத்து, தாடை, அல்லது வயிறு போன்ற பாகங்கள் இந்த வலியால்
ணரப்பட்டு ஒரு அஸௌகரியத்தைக் கொடுக்கும்.

3. மூச்சுத் திணறல்[difficulty breathing], மேல்மூச்சு வாங்குதல்[shortness of breath]

4. உடல் வியர்த்துக் கொட்டும், சற்று குளிரும்!

5. வயிறு உப்புசம் [fullness], அஜீரண ஏப்பம்[indigestion], தொண்டை அடைப்பு போன்ற உணர்வு[choking sensation]


6. வாந்தி வருவது போன்ற உணர்வு[nausea], வாந்தி.

7. தலை சுற்றல்[light headedness] கிறு கிறுவென வருதல்[giddiness or dizziness]

8. உடம்பு தளர்ச்சி[weakness], ஒரு பரபரப்பு[anxiety], இதயத் துடிப்பு அதிகமாதல் [அ] சீரில்லாமல் துடித்தல்[rapid or irregular heartbeats]

9. தூக்கம் வருதல் போன்ற ஒரு உணர்வு.


இது எல்லாமே ஒருவருக்கு நிகழும் எனச் சொல்ல முடியாது.
தாக்குதலின் வீரியத்தைப் பொறுத்து இதில் ஒரு சிலவோ, அல்லது எல்லாமுமோ எற்படலாம்.

இவை எதுவுமே நிகழாமல் கூட இந்த தாக்குதல் நிகழும். பெரும்பாலும், நீரிழிவு நோய் உள்ளவர்க்கே இது நிகழும் வாய்ப்பு அதிகம்.

இப்படி நிகழ்வதற்கு, அமைதியான இதயத் தாக்குதல்[Silent MI] எனப் பெயர்.

அப்படியே நிகழ்ந்து, இது சரியாகவும் போயிருக்க, வழக்கமாக மருத்துவரைச் சந்திக்கும் போது, அவரால் கண்டுபிடிக்கப்படும் ஒரு ஈ.ஸி.ஜி.[E.C.G] மூலம்.

"உங்களுக்கு சமீபத்துல ஒரு அட்டாக் நிகழ்ந்திருக்கிறது" என அவர் சொல்ல நோயாளிக்கே ஆச்சரியமாகக் [அதிர்ச்சியாகவும்!] கூட இருக்கும் வாய்ப்பு இருக்கிறது.

முதல் முறையாக இதில் ஏதேனும் அறிகுறிகள் தெரிந்தால், முன் சொன்னது போல ஏதோ ஆஜீரணக் கோளாறு என அலட்சியமாக இருந்து விடாதீர்கள்.

சற்று படுத்து எழுந்தால் சரியாகிவிடும் என நீங்களே முடிவு செய்து விடாதீர்கள்!

உடனே ஒரு அருகில் உள்ள மருத்துவரை [அவர் உங்கள் குடும்ப மருத்துவராக இல்லாவிடினும்!] போய்ப் பாருங்கள்!
இது மிகவும் முக்கியம்.


அவர் உங்களைப் பரிசோதித்து, தேவையான சோதனைகளைச் செய்து முறையான மருத்துவ சிகிச்சையைச் செய்வார், அல்லது, அவசர உதவி செய்து உங்களை ஒரு தேர்ந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பார்.

உங்களுக்கு இது முன்னரே ஒரு [அ] ஒருசில முறைகள் நடந்து அதற்கான சிகிச்சை அளித்திருந்து, அடுத்த முறை வலி வரும் போது சாப்பிட என நைட்ரோக்ளிசரின்[Nitroglycerine] மாத்திரையோ [அ] ஸ்ப்ரேயோ[spray] உங்களிடம் இருப்பின், உடனே அதை உபயோகிக்க வேண்டும்.


அருகில் ஒரு நிழலான இடத்தில் அப்படியே அமருங்கள்.

பிறகு அவசர உதவுக்கான எண்ணிற்கு தொலைபேசி, அவர்களை வரவழைக்க வேண்டும்.

'இது சரியாயிரும்; எனக்கு ஒண்ணுமில்லை' எனச் சொல்லி வாளாவிருக்க வேண்டாம்.

ஏனெனில், இதயத் தாக்குதல் நிகழ்ந்த அடுத்த ஒரு மணி நேரம் மிகவும் முக்கியமானது!


பெரும்பாலான தாக்குதல்கள் இந்த ஒரு மணி நேரத்திற்குள் கவனிக்கப்பட்டால், சரியாகும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.

ஒரு அட்டாக் நடந்ததும்,இதயத்தின் திசுக்கள் பாதிப்பு நடந்த இடத்தைச் சுற்றி, செயலிழக்கத் துவங்குகிறது, ஆக்ஸிஜன் கிடைக்காததால்.

நேரமாக, நேரமாக, இந்த இடஅளவு பெரிதாகும் அபாயம் இருக்கிறது.

எனவேதான், உடனே மருத்துவ உதவிக்கு போக வேண்டியதன் முக்கியத்துவம் மேலும் அதிகமாகிறது.


எப்படி இதைத் தவிர்க்க முடியும்?
எதனால் தாமதமாகிறது, சிகிச்சைக்குச் செல்ல?


'எனக்கு என்ன வயசாயிருச்சு இப்ப? 28 வயசுதானே ஆகுது. எனக்கு இதெல்லாம் வராது'

'இந்த அறிகுறி , வலி என்னன்னு தெரியலை, வெறும் அஜீரணமாயிருக்கும். கத்திரிக்காய் கறில கொஞ்சம் எண்ணை அதிகம் இன்னிக்கு!'

'இது ஒண்ணும் அப்பிடி வலி ஜாஸ்தியா தெரியலை! ஒரு மோர் கரைச்சுக் கொடு! சரியாயிரும்!'

'லக்ஷ்மி, ஏதோ லேசா முணுக் முணுக்குன்னு மார் வலிக்குது, என்னவாயிருக்கும்?' 'கத்தாதீங்க, கத்திப் பேசாதீங்கன்னு எத்தினி வாட்டி சொன்னாலும் ஒங்களுக்கு புத்தி வராது. கொஞ்சம் தண்ணி குடிங்க. சரியாப் போயிடும்! காலைல போய் டாக்டரைப் பார்க்கலாம்'

' காலைலேர்ந்தே வயித்தை என்னமோ பண்ணிகிட்டு இருக்கு. இந்த அஜீரண சனியன் என்னிக்குத்தான் என்னை விட்டுப் போகுமோ தெரியலை.'

'என்ன இந்த மூட்டு வலி இன்னிக்கு கொஞ்சம் ஜாஸ்தியாவே படுத்துதே. லக்ஷ்மி, அந்த மூட்டுவலி மாத்திரையக் கொண்டா!'

'இன்னிக்கு என்னமோ நெஞ்சு வலி ஜாஸ்தியா இருக்கு. சரியாப் போயிடும்னு நினைக்கிறேன். கமலாதான் என்ன பண்ணுவா பாவம்! அவ ஒருத்தி சம்பளத்துலதான் எங்க எல்லாரையும் பார்த்துக்கறா. இப்ப இதை வேற சொன்னா டாக்டர் செலவுதான் எக்ஸ்ட்ராவாகும். இந்த பணம் இருந்தா நாளைக்கு ராஜு ஸ்கூல் ஃபீஸ் கட்ட ஒதவும். கொஞ்சம் படுத்தா சரியாயிடும்'

இப்படிப் பல்வேறு காரணங்களால் இந்த நெஞ்சுவலி புறக்கணிக்கப்படும் அபாயம் நிகழலாம்!

ஆனால், இவையே உங்கள் உயிருக்கு எமனாகக் கூடிய சாத்தியம் உண்டு!


தாமதம் செய்யாதீர்கள் என்ற எச்சரிக்கையுடன் இப்பதிவை முடித்து கடைசி இரு கேள்விகளுக்கான விடையை அடுத்த பதிவில் பார்க்கலாம்!

[இங்கு சொல்லியிருப்பதெல்லாம் உங்கள் தகவலுக்காகவே!
உங்கள் மருத்துவரே இதை முறையாக பரிசோதித்து சிகிச்சை அளிக்க முடியும்.]

Thursday, February 22, 2007

"லப்-டப்" -- 13 "ஆ! நெஞ்சு வலிக்குதே!"[2]"நடந்தது என்ன?"


"லப்-டப்" -- 13 "ஆ! நெஞ்சு வலிக்குதே!"[2] "நடந்தது என்ன?"


இந்தத் தொடரை நான் ஆரம்பிப்பதற்கு, பொன்ஸின் இந்தப் பதிவுதான் தூண்டுகோலாய் இருந்தது!

அவர் சொன்னதைத் தொடர்ந்து ,சற்று விவரமாக இந்த 'ஹார்ட் அட்டாக்' பற்றி எழுதலாம் என ஆரம்பித்தது இன்று ஒரு டஜன் பதிவுகளைத் தாண்டி போய்க்கொண்டிருக்கிறது.

இதற்கு பொன்ஸுக்குதான் நன்றி சொல்ல வேண்டும்!
சென்ற பதிவில் ஒரு நிகழ்சியைப் பார்த்து, சில கேள்விகளையும் பார்த்தோம்!

சரி! இனி மேலே பார்க்கலாம்!

மையோகார்டியல் இன்ஃபார்க்ஷன் [Myocardial Infarction] என்றால் என்ன?
அப்படி என்றால் என்ன?
எப்படி நிகழ்கிறது?
எதனால் வருகிறது?
எப்படி இதைத் தவிர்க்க முடியும்?
இதன் அறிகுறிகள் என்னென்ன?
என்ன சிகிச்சை இதற்கு?
சிகிச்சைக்குப் பின் என்ன செய்ய வேண்டும்?

'மையோ' என்றால் சதை [muscle]; 'கார்டியல்' [cardial]என்றால் இதயத்தைக் குறிக்கும்; 'இன்ஃபார்க்ஷன்'[Infaction] என்பது ரத்த ஓட்டம் இல்லாமல் இறந்த திசு எனப் பொருள்.

எல்லா திசுக்களைப் போலவே, இதயமும் திசுக்களால் மட்டுமே ஆன ஒரு உறுப்பு.

அதற்கும் மற்ற உறுப்புகளைப் போலவே, தொடர்ந்த ரத்த ஓட்டம் மூலம் சத்துப் பொருள்களும், ஆக்ஸிஜனும் தேவை!

முன்பே சொல்லியிருப்பது போல், கரோனரி நாளங்கள்[Caronary arteries] மூலமே இது நிகழ்கிறது.

இதில் எதேனும் அடைப்பு[block], தடை[obstruction], குறுகல்[narrowing], இறுகல்[hardening], ரத்தக்கட்டி[bloodclot] எவையேனும் நிகழும் போது அதற்கு கரோனரி நாள நோய்[Caronary Artery Disease] எனப் பெயர்.
மேற்சொன்ன எல்லாமும் ரத்தஓட்டத்தை தடைப்படுத்தி, இதயத்திசுக்களின் சில பாகங்களை மரிக்கச் செய்கிறது.
இப்போது அந்தப் பகுதி, மற்ற திசுக்களோடு இழைந்து இயங்க முடியாமல் போகிறது.

ஒரு வலி மூலம் இது உணரப்படுகிறது.
இதற்கு ஆஞ்சைனா[angina]] எனப் பெயர்.

ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட கரோனரி நாளங்களில் இது போல 'அடைப்பு'[block] ஏற்படுகையில் 'ஹார்ட் அட்டாக்'[heart attack] [அ] மாரடைப்பு நிகழ்கிறது!

"எப்படி நிகழ்கிறது?"

கொழுப்புச்சத்து ரத்த நாளங்களின் உள்ளே அதிகமாகும் போது, நாளங்களின் உட்சுவற்றில் சிறிய காயம்[injury] ஏற்படுகிறது

இதை ஆற்றுவதற்கென நாளச்சுவர்கள்[vessel walls] ஒருவிதமான ரசாயனப் பொருட்களை[chemicals] சுரக்கின்றன

இதனால், சீரான ரத்த ஓட்டம் தடைப்பட்டு, சற்று தேக்கம்[slowing] ஏற்படுகிறது

இப்போது, ரத்தத்தில் மிதக்கும் புரதம், கால்சியம், மற்றும் இன்னும் சில கழிவுப் பொருட்கள் [போன பதிவுகளில் படிக்கவும் இவையெல்லாம் என்னென்னவென!] இந்த நாளச்சுவர்களில் ஒட்டிக் கொள்கின்றன

இவையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்ந்து, உருண்டு, திரண்டு [!!] ஒரு துகள்[Plaque] என ஆகிறது.

நாளாக, நாளாக, இந்த துகள்கள் பல்வேறு அளவுகளில் உருவாகி ரத்தநாளங்களுக்குள் சும்மா அலம்பலா இங்குமங்குமாய் ஓடிக்கொண்டிருக்கின்றன.
உள்ளே சாதுவாகவும்[soft], வெளியே திடமாகவும்[hard] இருக்கும் இந்தத் துகள்கள்[plaques] எப்போதாவது உடையும் போது, இந்த மென்பொருள்[soft fatty inside]] வெளியே வர, உடனே ப்ளேட்லெட்டுகள்[platelets] இதனை அடைக்க வர, ரத்தக்கட்டி[clot] உருவாகுகிறது!!

இப்படி உருவான ரத்தக்கட்டி, ஏதேனும் ஒரு சிறிய ரத்தக்குழாயில் சென்று அடைத்துக் கொள்ளும் போது, அந்தக் குழாயில், நாளத்தில், அடைப்பு ஏற்பட்டு, அடைப்புக்குக் கீழே [below the block]செல்லும் நாளத்தில், ரத்தம் செல்வது தடைப்படுகிறது.
பிரணவாயு கிடைக்காமல் வெகு விரைவில், இந்தப் பகுதி உணர்விழக்கிறது[starved].
இதற்கு 'உடனடி கரோனரி சிண்ட்ரோம்'[Acute Caronary Syndrome] எனப் பெயர்.

இது மூன்று வித விளைவுகளை நிகழ்த்தலாம்.

1.இது உடனடியாக ரத்த ஓட்டத்தின் வேகத்தின் மூலமாகவே அகற்றப் படுகையில், இது தானாகவே சரி செய்யப்பட்டு சகஜ நிலை மீண்டும் திரும்புகிறது.

இதற்கு அன்ஸ்டேபிள் ஆஞ்சைனா[Unstable Angina] எனப் பெயர்.
2.அகற்றப்படாமலும், உடையாமலும், அடைப்பு அங்கேயே [பெரிய அளவில்] நிற்கையில், மாரடைப்பு[Heart attack] என்பது நிகழ்கிறது.
3.இதன் மூலம் இந்த ரத்தக்குழாய் அடைப்பு தாங்காமல் உடைபட்டு, இதய நிறுத்தம் [Cardiac arrest] நிகழும்.


"எதனால் வருகிறது?
எப்படி இதைத் தவிர்க்க முடியும்?
இதன் அறிகுறிகள் என்னென்ன?
என்ன சிகிச்சை இதற்கு?
சிகிச்சைக்குப் பின் என்ன செய்ய வேண்டும்?"

அடுத்த பதிவில் பார்க்கலாம்!
[இந்தப் பதிவில் சொல்லியிருப்பது எல்லாம் உங்gaள் தகவலுக்காகவே!
உங்கள் மருத்துவரை ஆலோசிப்பதே நல்லது!]

Labels:

Tuesday, February 20, 2007

"லப்-டப்" -- 12 " ஆ! நெஞ்சு வலிக்குதே!....."

"ஆ! நெஞ்சு வலிக்குதே!"


"உன்கிட்ட எத்தனை தடவை சொல்லி இருக்கேன்! எனக்கும் அவளுக்கும் ஒரு தப்பான உறவும் இல்லை! நானும் அவளும் நல்ல ஃப்ரெண்ட்ஸ்! அதுவும் ஆஃபீஸ்ல மட்டும் தான்! அவ வீட்டு விஷயம்லாமும் என்கிட்ட சொல்லுவா! அதெல்லாம் நான் உன்கிட்ட அன்னன்னிக்கே சொல்லியும் இருக்கேன். நீதான் என்னென்னவோ கற்பனை பண்ணிகிட்டு தெனம் என்னைப் புடுங்கறே! ஒரே நரகமா இருக்கு!"

"இருக்காதா பின்னே! அவ பேசினா இனிக்கும்... சொர்க்கமா இருக்கும். நான் பேசினா நரகமாத்தான் இருக்கும். ஒங்கள சொல்லி குத்தமில்லை! எனக்கு வாய்ச்சது அவ்வளவுதான்!. போங்க! போய் அந்த மேனாமினுக்கி கிட்டயே விளுந்து கிடங்க. நான் போறேன் எங்கம்மா வீட்டுக்கு!"

"போய்த்தொலை! நீ ஒழிஞ்சாத்தான் எனக்கு நிம்மதி!"

கடற்கரை மணலில் கால் போன போக்கில் நடந்து கொண்டே சென்ற மோஹனுக்கு சற்று முன் நடந்த சம்பவம் மனதில் அப்படியே ஆடிக் கொண்டிருந்தது!

"சே! சற்றுகூட நம்பிக்கை இல்லாத மனைவி! என்ன வாழ்க்கை இது! எதுக்கெடுத்தாலும் சந்தேகம்! நெனச்சுப் பார்க்கவே நெஞ்சு துடிக்குது....... "

திடீரென நெஞ்சு நிஜமாகவே வலிப்பது போல் தோன்றியது அவனுக்கு.

முணுக் முணுகென்று இடது பக்கம் மார்பில் ஒரு வலி!

உடல் வியர்க்க ஆரம்பித்தது.

இடது கையில் தோள்பட்டையில் இருந்து கிளம்பி 'ஜிவ்'வென்று ஒரு மின்னல் போல வலி கை முழுதும் பரவியது.

நாக்கு உலர்ந்தது போல ஒரு உணர்வு!

சற்று உட்கார்ந்தால் தேவலை எனத் தோன்றியது.

அப்படியே ஒரு படகின் பக்கம் போய் உட்கார்ந்தான்.

செல்ஃபோன் சிணுங்கியது!

நண்பன் குமார்தான்!

"என்னடா! எப்படி இருக்கே!" என்றான் குமார்.

"குமார், கொஞ்சம் உடனே மெரீனா பீச்சுக்கு வர்றியா? சீக்கிரம் வாயேன்!நெஞ்சு வலிக்கற மாதிரி இருக்கு. டாக்டர்கிட்ட போகலாம்னு நினைக்கறேன். நீயும் வந்தியானா கொஞ்சம் ஹெல்ப்ஃபுல்லா இருக்கும்." .............சொல்லி முடிக்குமுன் குமார் கத்தினான்..."நீ அங்கியே இரு, அஞ்சு நிமிஷத்துல வரேன்."

அடுத்த அரை மணி நேரத்தில் மோஹன் ஒரு தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டான்.

அவன் மனைவிக்கும் தகவல் பறந்தது.

அலறி அடித்துக் கொண்டு அவளும் ஓடிவந்தாள்.

ஸ்கேன், ஈ.சி.ஜி. [scan, E.C.G] எல்லாம் எடுக்கப்பட்டு உடனடியாக கார்டியாக் கதீடரைசேஷன்னுக்கு [Cardiac catheterization] அழைத்துச் செல்லப்பட்டான்.

இதயத்தில் ஒரு நாளத்தில் அடைப்பு இருப்பதாகவும், உடனடியாக அறுவைச் சிகிச்சை மூலம் அதனை அகற்றாவிட்டால் உயிருக்கே ஆபத்து என்றும் மருத்துவர் சொல்ல, அதன்படியே நடந்து, இப்போது ரீ-ஹேப்பில் இருக்கிறான் மோஹன்.

சரியான நேரத்தில் கொண்டுவரப்பட்டதால்தான் மோஹனின் உயிரைக் காப்பாற்ற முடிந்தது என குமாரைப் புகழ்ந்தார் டாக்டர்.

"எனக்குத் தாலி பாக்கியம் கொடுத்தீங்க குமார்! உங்களை மறக்கவே மாட்டேன்!" என மோஹனின் மனைவி ராதா நன்றி சொன்னாள்.

கொஞ்ச நாளைக்கு அவருக்கு அதிர்ச்சி தரும் வகையில் எதுவும் பேச வேண்டாம். முழு ஓய்வு வேணும் அவருக்கு என மருத்துவர் அறிவுறுத்தினார்.

அப்படி ஒன்றும் வயதாகவில்லை மோஹனுக்கு.

34 தான் ஆகிறது!

மோஹனுக்கு அப்படி என்னதான் நிகழ்ந்தது?

டாக்டர் சொன்னார் அவனுக்கு வந்தது மையோகார்டியல் இன்ஃபார்க்ஷன் [Myocardial infarction] என்று.

அப்படி என்றால் என்ன?

எப்படி நிகழ்கிறது?

எதனால் வருகிறது?

எப்படி இதைத் தவிர்க்க முடியும்?

இதன் அறிகுறிகள் என்னென்ன?

என்ன சிகிச்சை இதற்கு?

சிகிச்சைக்குப் பின் என்ன செய்ய வேண்டும்?

அடுத்த சில பதிவுகளில் பார்க்கலாம்!

Tuesday, February 13, 2007

;">"லப்-டப்" -- 11 "ஓடிய கால்களை ஓடவிடாமல் ......!!"


"லப்-டப்" -- 11 "ஓடிய கால்களை ஓடவிடாமல் ......!!"ரத்தநாளங்களைப் பற்றிச் சொல்லி வரும்போது கால்களைப் பாதிக்கும் நோயைப் பற்றிப் பார்த்தோம்.


இன்னொரு வழி மூலமாகவும் கால்,கை செயலிழக்கக் கூடும்.
அதுதான் மூளையில் ஓடும் ரத்த நாளங்களால் ஏற்படும் 'பக்கவாதம்' என அழைக்கப்படும் மூளைத்தாக்குதல்[Cerebral Stroke] .

இதயத்திற்கு மேல்பகுதிக்கு, குறிப்பாக மூளைக்கு, ரத்தத்தை அனுப்பும் வேலையை கரோடிட்[Carotid vessels] என்னும் நாளம் செய்கிறது.
இது கழுத்தின் இரு பக்கங்கள் மூலமாக வலது, இடது கரோடிட் ஆர்ட்டெரி, வெயின்[Carotid Artery&vein] என சுத்த மற்றும் அசுத்த ரத்தத்தை எடுத்துச் செல்கின்றன.


இவற்றிலும் ஏற்கெனவே சொன்னது போல கொழுப்பு, கொழுப்புச்சத்து, மற்றும் இன்னும் சில கழிவுப்பொருட்களின் தேக்கத்தால் துகளோ[plaque], அல்லது அடைப்போ[clot], நிகழும் வாய்ப்புகள் உண்டு.இதன் மூலம் மூளைக்குத் தேவையான ரத்தம் தடைப்படும் போது, எந்த குழாய் அடைபட்டதோ, அது ரத்தம் கொடுக்கும் இடங்களால் கட்டுப்படுத்தப்படும் உடலின் பாகங்கள் பாதிக்கப் படுகின்றன.

இதனையே பொதுவாக ஸ்ட்ரோக்[Stroke] எனச் சொல்லுகிறோம்.


இது நான்கு விதங்களால் நிகழக்கூடும்.

1.ரத்தக்குழாய் குறுகலாக ஆதல்.[Narrowing]


2.இந்த அடைப்பில் இருந்து ஒரு சிறு பகுதி பிய்த்துக் கொண்டு ரத்தத்தில் தவழ்ந்து சென்று, இன்னொரு சிறிய குழாயை அடைந்து அதை அடைத்துக் கொள்ளுதல்,[Plaque dislodgement]

3.ரத்தக்கட்டி[clot] உண்டாகி ஏதேனும் ஒரு குழாயை அடைத்துக் கொள்ளுதல்.
[இம்மூன்றும் ரத்தம் மூளையின் சில பகுதிகளுக்குச் செல்வது தடுக்கப்படுகிறது. இவ்வாறு நிகழும் போது, ரத்தம் கொண்டுவரும் பிராணவாயு[O2], குளூக்கோஸ்[சர்க்கரைச் சத்து][Glucose] மூளையில் இருக்கும் செல்களுக்கு போய்ச்சேராமல் இப்பகுதிகள் வெளிறிப் போகின்றன.[Ischemia] இவ்வாறான பாதிப்பு 3 முதல் 6 மணி நேரத்துக்கு மேல் நிகழும்போது, இதனால் ஏற்படும் விளைவுகளும் நிரந்தரமாகிப் போகின்றன.

4. அழுத்தம் அதிகமாகியோ, அல்லது வேறு சில காரணங்களாலோ,ரத்தக்குழாய் உடைந்து போகும் போது, மூளைத்திசுக்களில் ரத்தக்கசிவு ஏற்பட்டு, மூளையின் செல்கள் தாக்கப்படுவது இன்னொரு வகை. இதனை Hemorrhagic Stroke எனச் சொல்லுவார்கள்.

இந்த ஸ்ட்ரோக் நிகழ என்ன காரணங்கள்?

1. பரம்பரை வரலாறு.[Family History]: குடும்பத்தில் இது போல முன்னர் எவருக்கேனும் நிகழ்ந்திருந்தால், மற்றவர்க்கும் நிகழ வாய்ப்புகள் அதிகம்.
2. வயது.: 75 வயதுக்கு முன், பெண்களை விட ஆண்களுக்கும், 75-க்குப் பின், பெண்களுக்கும் வாய்ப்பு அதிகம்.
3. அதிகமாக புகை பிடித்தல்.
4. ரத்த அழுத்த நோய்[Hypertension]
5. கட்டுப்படுத்தாத நீரிழிவு நோய்[Uncontrolled Diabetes]
6. உடல் பரும்ன் அதிகமாதல்[Obesity]
7. அளவு மீறி மது அருந்துதல்
8. கெட்ட கொழுப்ப்புச்சத்து என அழைக்கப்படும் ஹை-லோ லைப்போ புரோட்டின்[High-Low Proteins] எனப்படும் கொழுப்புச்சத்து.

இப்போது இதன் அறிகுறிகளைப் [signs&symptoms] பார்ப்போம்.

1. உடலின் ஒரு பகுதி, குறிப்பாக ஒரு பக்க கை, கால் மரத்துப் போதல், அல்லது உணர்விழத்தல்.
2. திடீரென ஒன்று [அ] இரு கண்களிலும் பார்வை மங்கிப் போதல், [அ] அற்றுப்போதல்.
3. வாய் பேச முடியாமல் போதல், [அ] குழறுதல்.
4. பிறர் சொல்வது புரியாமல் போதல் [அ] தன் கருத்தை சரியான முறையில் வெளிப்படுத்த முடியாமல் போதல்.
[இதை இங்கே ரொம்ப பேர் பண்றாங்களென்னு ஒரு பி.ஊ. போட கொத்தனார் கை பரபரப்பது எனக்குத் தெரிகிறது!:))]
5.மூளை நினைப்பதை உடனே செய்யமுடியாமல் ஒரு குழப்பநிலை தோன்றுதல்[confusion]
6. விழுங்குவதில் சிரமம்.
7. மயங்கி விழுதல்.
8. நினைவு திரும்பாமல் போதல்.
9. மரணம்.

இறுதியில் கூறிய [7,8&9] மூன்றும் மிகப் பெரிய அளவிலான ஸ்ட்ரோக் [அ] தாக்குதல் நிகழும்போது மட்டுமே நடக்கக்கூடியவை.
இதன் அறிகுறிகள் தோன்றிய உடனேயே[1,2&3] ஒரு மருத்துவரிடம் சென்று, தேவையான பரிசோதனைகளைச் செய்து, சிகிச்சையை மேற்கொண்டால், ஒரு 50% அளவில் இதனைத் தடுக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த ஆரம்ப நிலையை தாற்காலிகத் தாக்குதல்[Transient Ischemic Attack] எனச் சொல்லுவார்கள்.

இதை உடனே கவனிக்காவிட்டால் ஒரு பெரிய தாக்குதலில் [Cerebral attack] போய் முடியும் அபாயம் இருக்கிறது.

ஏதோ சாதாரண மயக்கம், தலைசுற்றல், வாந்திதானே என நீங்களாகவே ஒரு மாத்திரையைச் சாப்பிட்டு, ஓய்வு எடுத்தால் சரியாகிவிடும் என அசட்டையாக இருந்துவிடாதீர்கள். முறையான சோதனைகளுக்குப் பிறகு உங்கள் மருத்துவர் அதைச் சொல்லட்டும்.

இப்பதிவில் வேறு எதை மறந்தாலும், இதனை மட்டும் மறந்து விடாதீர்கள் என வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

இது ஒரு தவிர்க்கப்படக்கூடிய நோயே அன்றி, ஏதோ தீராத வியாதி அல்ல!

அறிகுறிகள் தென்பட்டதுமே சிகிச்சை அளித்தால், பெரும்பாலும் ஆரம்பநிலையிலேயே இதனைக் கட்டுப்படுத்த முடியும்.

இதைக் கண்டுபிடிக்கும் சோதனைகள், சென்ற பதிவில், PAD க்கு சொன்னது போல அல்ட்ராசவுண்ட்[Ultrasound], கரோடிட் ஆஞ்சியோக்ராஃபி[Carotid Angiography], CT ஸ்கேன்[CT Scan] போன்ற எளிதான சிலவே!

பாதிக்கப்பட்ட, பாதிக்கப்படப்போகும் மூளையின் பகுதிகளை இதன் மூலம் கண்டுபிடிக்க முடியும்.

இதற்கான சிகிச்சைமுறை வெறும் மருத்துவர் செய்வது மட்டும் அல்ல.


[Carotid Stent]

உடனடிக் காரணத்தை அடைப்பை நீக்கும் அறுவைச்சிகிச்சை[Carotid Stenting ] மூலமாகவும் ரத்தக்கசிவை சில மாத்திரைகள், தேவைப்பட்டால் அறுவைச்சிகிச்சை [Aneurysm Repair] மூலமாகவும் மருத்துவர் செய்தாலும், முக்கியமாகச் செய்ய வேண்டியவர் நீங்கள்தான்!

1. புகையிலை, புகைபிடித்தல் இவற்றை அறவே விடணும்
2. ரத்த அழுத்தம், நீரிழிவு இவற்ரை அளவோடு வைக்க வேண்டும்.
3. முறையான மருத்துவப்பரிசோதனை ஒழுங்காக செய்து கொள்ளணும்.
4. கொழுப்புச்சத்தை கட்டுப்பட்டுத்தணும்.
5. உணவில் மிகவும் கட்டுப்பாடுடன் இருக்கணும். உப்ப்பைக் குறைத்து, கொழுப்புச்சத்து உள்ள பொருட்களை அளவோடு பயன்படுத்தி, கொலெஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தணும்.
6. உடல் பருமனை வயது, உயரத்திற்குத் தக்க அளவில் வைக்கணும்.
7. தினசரி உடற்பயிற்சி, மருத்துவரின் ஆலோசனையுடன் செய்ய வேண்டும்.
8. மது அருந்துவதை நிறுத்தினால் நல்லது. முடியாவிட்டால்[!!] மிகுந்த கட்டுப்பாட்டுடன் இருக்கவாவது கத்துகோங்க.
9. மருத்துவர் எழுதிக் கொடுத்த மருந்து மாத்திரைகளை தவறாமல் சாப்பிடணும். [இதில் சில மருந்துகள் நீங்கள் ஆயுட்காலம் முழுதும் சாப்பிடும் படியாக இருக்கும்! அப்படிச் சாப்பிடும் போது, அதற்காக சில ரத்தப்பரிசோதனைகள் செய்யும் படியாகவும் இருக்கும். அதையும் தவறாமல் செய்து கொள்ளணும்.]
10. தடாலடியாக, உடலை வருத்தி அதிக வேலை செய்து ஆயாசப்பட வேண்டாம்.
11. கோபத்தைக் குறையுங்கள்.

இப்பதிவின் முக்கியத்துவம் உணர்ந்து ஒரு சிலராவது தங்கள் வாழ்க்கைமுறையை மாற்றி அமைத்துக் கொண்டால் பெரிதும் மகிழ்வேன்!

நன்றி. வணக்கம்.
அடுத்த வாரம் மீண்டும் சந்திக்கலாம்.

[நண்பர் கல்யாண் அவர்களின் அகால மரணத்தினால், இப்பதிவு வருவதில் ஓரிரு நாட்கள் தாமதமானதற்கு மன்னிக்க வேண்டுகிறேன்.
அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல முருகப்பெருமானை வேண்டுகிறேன்.
அவரது குடும்பத்தினர்க்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.]

Sunday, February 04, 2007

"லப்-டப்" -- 10 "நடை தளர்ந்தது நாளமல்லவா"

"லப்-டப்" -- 10 "நடை தளர்ந்தது நாளமல்லவா!"

ரத்தம் பற்றிய சில தகவல்களை இதுவரை பார்த்தோம். விரைவில் இதயத்தை நோக்கி நம் பயணம் சென்றடைய வேண்டும் என்பதால், இந்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்த நாளங்களைத் தாக்கும் சில நோய்களை [Vascular diseases] இன்று பார்க்கலாம்!


1. புற நாள நோய் [Peripheral vascular Disease,[aka] Peripheral Arterial & Venous Diseases [aka] PAD & PVD]

சுத்த ரத்தத்தையும், அசுத்த ரத்தத்தையும் எடுத்துச் செல்லும் பணியை இந்த நாளங்கள் செய்கின்றன.

இதற்கு இதன் உட்பகுதி ஒரே சீராக, வழுவழுப்பாக [smooth] இருக்க வேண்டும்.
அப்போதுதான் ரத்தம் தங்கு தடையின்றி ஓடும்.

அதிகப்படியான கொழுப்பு [fat], கொழுப்புச் சத்து [cholestrol], இன்னும் சில பொருள்கள் [Inflammatory cells, proteins, and calcium] ரத்தத்தில் மிதந்து செல்லுகையில், நாளங்களின் உட்பகுதி இவற்றால் பாதிக்கப்பட்டு,குறுகலாகிறது.
சில சமயங்களில் அங்கங்கே அடைப்பும் ஏற்படுகிறது.

இவ்வாறு நிகழும் போது, இந்த நாளங்களால் பயன்பெறும் உடல் பாகங்கள் சரியான சத்தை [O2& nutrients] பெறமுடியாமலோ, [அ] கழிவுப்பொருட்களை உடனடியாக அகற்ற முடியாமலோ வலு இழக்கின்றன; நசித்துப் போகின்றன.

இவ்வாறு நிகழ்வதற்கு 'PAD/PVD' எனப் பெயர்.

இதனால், இதயத் தாக்குதல்[Heart attack]. சிறு அளவிலான [அ] பெருமளவிலான மூளைத் தாக்குதல்[Transient Ischemic Attack or Stroke], நடைவலி [Claudication], தோலின் நிறம் மாறுதல் [Skin color changes], புண்கள் [sores & ulcers], போன்றவைகள் ஏற்பட்டு, காலையே இழக்கும் அபாயம் ஏற்படலாம்.

அதிகமாகப் புகை பிடித்தல் [smoking], நீரிழிவு நோய் [Diabetes], முதிர்ந்த வயது[Advanced age], இனம்[Race], பரம்பரை வரலாறு[Family history], மிகுதியான ரத்த அழுத்தம்[High Blood Pressure] போன்றவை இந்த 'PAD/PVD'க்கு முக்கிய காரணங்கள் எனச் சொல்லலாம்.

இதன் அறிகுறிகள்:


கால்,கால்விரல்களில் ஒரு எரிச்சல், வலி
கால் மற்ற உடற்பாகங்களை விட சில்லிட்டுப் போதல்
முதலில் சிவப்பாகி, பின்னர் கருத்துப் போதல்
நோய்கள் விரைவாகத் தாக்கும் அபாயம்
காயங்கள் சீக்கிரம் ஆறாமல் போதல்

இவற்றில் ஏதேனும் தோன்றும் போது, உடனே உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசிப்பது மிகவும் முக்கியம்!

ஒரு சில பரிசோதனைகள் மூலம் [Arterial Dopplers, Pulse Volume Recording, Vascular ultrasound,CT scan, MRI] இதனை விரைவில் கண்டுபிடித்து, சிகிச்சை தொடங்க முடியும்.
முழுதுமாகக் குணப்படுத்த முடியாவிடினும், கட்டுப்படுத்த முடியும், எவ்வளவுக்கெவ்வளவு விரைவாகச் சிகிச்சையை ஆரம்பிக்கிறோம் என்பதைப் பொருத்து.

புகை பிடித்தலை விட்டு, சரியான உணவு முறைகளைக் கையாண்டு, உடல்பயிற்சிகள் மூலம் உடலைச் சீராக வைத்து, இதனைத் தடுக்க முடியும்.


2. நாளப் புடைப்பு [Aneurysm]
ரத்த நாளத்தின் உட்பகுதி ஏதேனும் ஓரிடத்தில் வலுவிழந்து, சிறிதாக புடைத்துக் கொள்ளும். எங்கு வேண்டுமானாலும் இது நிகழுமென்றாலும், அயோர்ட்டாவிலேயே[] இது பெரும்பாலும் நிகழ்கிறது.
இந்தப் புடைப்பில்[bulging] முட்டி மோதி ஓடும் ரத்தம் ஒரு சிறிய சுழலில் மாட்டிக் கொள்வது போல் ஆகி, துகள்கள்[plaques], கட்டிகள்[clots] ரத்தத்தில் உருவாகி அங்கிருந்து கிளம்பி வேறு சில சிறிய நாளத்தில் போய் அடைத்துக் கொள்ளும் போது விபரீத நிகழ்வுகள் ஏற்படலாம்.

சில நேரங்களில் இந்த புடைப்பு அதிகமாகி, ரத்த நாளம் வெடித்து, உயிருக்கே ஆபத்து ஏற்படும் நிலை இருக்கிறது.

'CT ஸ்கேன்', 'MRI', Ultrasound, டாப்ளர்[doppler] மூலம் இதனைக் கண்டுபிடித்து, தேவையான சிகிச்சையை உங்கள் மருத்துவர் கூறுவார்.

3. சிறுநீரக நாள நோய் [Renal Artery Disease]
வாலிப வயதில் தாக்கும் நோய் இது. இதன் விளைவு நம் உடலின் முக்கிய பாகமான சிறுநீரகத்தைப் பாதிக்கும் என்பதால் இது உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

4. 'ரேனால்ட்'ஸ் நோய் [Reynauld's Phenomenon/disease]
கை, கால் விரல்களில் இருக்கும் சிறு நாளங்களைத் 'துடிக்கச்'[spasms] செய்யும் நோய் இது! அதிகக் குளிர்[Extreme cold], ஆர்வம்[Excitement] இவற்றால் இது உண்டாகிறது.
ல்யூபஸ்[Lupus] முடக்கு நோய்[Rheumatoid Arthritis] ஸ்க்ளீரோடெர்மா[Scleroderma] என்னும் தோல் சுருக்க நோய் இவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது நிகழும்.

5. பர்ஜெர்'ஸ் நோய்[Burger's disease]
மேலே சொன்ன நோயே சற்று பருமனான நாளங்களைத் தாக்குகையில் இந்த நோய் ஏற்படுகிறது. குளிரும், புகை பிடித்தலும் இதற்கான முக்கியக் காரணங்களாக அமைகின்றன.
பாதிக்கப்பட்ட உறுப்பையே இழக்கும் அபாயம் இதில் அதிகம்.

6. நரம்புச் சிலந்தி எனப் பொதுவாக[தவறாக!] அழைக்கப்படும் வெரிகோஸ் வெயின்கள் [varicose veins]
ஒரு இடத்தில் மட்டும் புடைப்பு[bulging] இல்லாமல், மொத்த நாளமும் வீங்கும் நிலை இது. பொதுவாக அசுத்த ரத்த நாளங்களையே, அதுவும் கால் நாளங்களையே இது பாதிக்கும்.
ஆண்களை விட பெண்களே இதனால் அதிகம் பாதிக்கப் படுகின்றனர். இதுவும் பரம்பரையாக குடும்பங்களில் வரும்.
ரத்த ஓட்டம் தடைப்பட்டு, கட்டிகள்[clots] உருவாகும் ஆபத்து இதில் அதிகம்.
தகுந்த சிகிச்சை முறைகளால் இதனைக் கட்டுப்படுத்த முடியும்.


இவை தவிர, Venous blood clots, Deep Vein Thrombosis, Pulmonary Embolism, Chronic Venous Insufficiency, clotting disorders,யானைக்கால் எனும் Lymphedema என இன்னும் சில நாள சம்பந்தமான நோய்கள் இருக்கின்றன.
பதிவின் நீளம் கருதி அதிகம் சொல்லாமல் விடுக்கிறேன்.
குறிப்பாக எதைப் பற்றியேனும் தெரிந்து கொள்ள வேண்டுமெனில், பின்னூட்டத்தில் கேட்கவும்.
எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன்.


முக்கியமான சில செய்திகள்:
இதன் அறிகுறிகள் தெரிந்தவுடனேயே, மருத்துவரைப் பார்ப்பதை, மறந்து விடாதீர்கள்!
புகை பிடிப்பவர்கள் அதனை விட்டு விடுங்கள் [அ] புகை பிடிப்பதைக் குறையுங்கள்.

உணவுக் கட்டுப்பாட்டின் மூலம், கொழுப்புச் சத்தை அளவோடு வைக்க வேண்டும். [இது பற்றி அடுத்த பதிவில் விரிவாக வரும்!]
தகுந்த உடற்பயிற்சிகள்,[regular walking is a must!] செய்ய வேண்டும்.

இதய நோய்களை நோக்கி இனி பயணிக்கலாம்!


[இது ஒரு சிறிய விளக்கம் மட்டுமே!
This is for informational purposes only!]